பாடம் : 4 இஹ்ராம் கட்டியவர் வேட்டையாடும் போது இஹ்ராம் கட்டாதவர் உதவக் கூடாது.
1823. அபூ கதாதா(ரலி) அறிவித்தார்.
நாங்கள் மதீனாவுக்கு மூன்று (கல்) தொலைவிலுள்ள காஹா எனும் இடத்தில் நபி(ஸல்) அவர்களுடன் இருந்தோம். எங்களில் இஹ்ராம் அணிந்தவர்களும் இஹ்ராம் அணியாதவர்களும் இருந்தனர். என் தோழர்கள் எதையோ பார்க்கலானார்கள். நான் கூர்ந்து பார்த்தபோது ஒரு காட்டுக் கழுதை தென்பட்டது. (என் குதிரையில் ஏறியதும்) என்னுடைய சாட்டை கீழே விழுந்தது. (அதை எடுத்துத் தருமாறு என் தோழர்களிடம் நான் கேட்டபோது) என் தோழர்கள் ‘நாங்கள் இஹ்ராம் அணிந்திருப்பதால் இந்த விஷயத்தில் உமக்கு எந்த உதவியும் செய்ய மாட்டோம்!’ என்று கூறிவிட்டனர். எனவே, நானே (இறங்கி) அதை எடுத்தேன். பின்னர், ஒரு பாறாங் கல்லின் பின்னாலிருந்து (மறைந்து) கழுதையின் அருகே சென்று அதன் கால்களை வெட்டி (அதை வேட்டையாடி)னேன். என் தோழர்களிடம் அதைக் கொண்டு வந்தேன். சிலர் ‘உண்ணுங்கள்!’ என்றனர். மற்றும் சிலர் ‘உண்ணாதீர்கள்!’ என்றனர். எங்களுக்கு முன்னே சென்று கொண்டிருந்த நபி(ஸல்) அவர்களிடம் நான் சென்று இது பற்றிக் கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘அதை உண்ணுங்கள்! அது அனுமதிக்கப்பட்டதுதான்!’ என்று பதிலளித்தார்கள்.
Book : 28