28:1822 (இஹ்ராம் அணிந்த நிலையில் தவறுதலாக) வேட்டையாடியதற்குரிய பரிகாரம்

பாடம் : 3 இஹ்ராம் கட்டியவர்கள் வேட்டைப் பிராணியைக் கண்டு சிரிக்கும் போது இஹ்ராம் கட்டியவர் அதைப் புரிந்து கொண்டு வேட்டையாடுதல். 
1822. அபூ கதாதா(ரலி) அறிவித்தார். 
ஹுதைபிய்யா (ஒப்பந்தம் நடந்த) ஆண்டில் நபி(ஸல்) அவர்களுடன் நாங்கள் சென்றோம். அவர்களின் தோழர்கள் இஹ்ராம் அணிந்திருந்தனர்; நான் இஹ்ராம் அணியவில்லை. ‘கைகா’ எனும் இடத்தில் எதிரிகள் இருப்பதாக எங்களுக்கு அறிவிக்கப்பட்டது; நாங்கள் அவர்களை எதிர்கொள்ளச் சென்றோம். (வழியில்) ஒரு காட்டுக் கழுதையைக் கண்டு என் தோழர்கள் ஒருவரையொருவர் பார்த்து சிரிக்கலாயினர். நான் அதைப் பார்த்து, அதன் மீது குதிரையை ஏவி, ஈட்டியால் அதைக் குத்திப் பிடித்தேன். நான் என் தோழர்களிடம் உதவி தேடியபோது, அவர்கள் (இஹ்ராம் அணிந்திருந்ததால்) எனக்கு உதவ மறுத்துவிட்டார்கள். பிறகு, அதை நாங்கள் அனைவரும் சாப்பிட்டோம். பிறகு நான் அல்லாஹ்வின் தூதரிடம் சென்று சேர்ந்து விட்டேன். நபி(ஸல்) அவர்களைப் பிரிந்து விடுவோம் என்று அஞ்சி, என் குதிரைய விரைவாகவும் மெதுவாகவும் ஓட்டிச் சென்றேன். நள்ளிரவில் பனும்ஃபார் கூட்டத்தைச் சேர்ந்த ஒரு மனிதரைச் சந்தித்தேன். ‘நபி(ஸல்) அவர்களை எங்கேவிட்டு வந்திருக்கிறீர்?’ என்று கேட்டேன். ‘அவர்கள் ‘சுக்யா’ எனும் இடத்திற்குச் சென்று மதிய ஓய்வு கொள்ள எண்ணியிருந்த வேளையில் ‘தஃஹின்’ எனும் இடத்தில் அவர்களைவிட்டு வந்தேன்!’ என்று அவர் கூறினார். நான் நபி(ஸல்) அவர்களை அடைந்து, ‘இறைத்தூதர் அவர்களே! உங்கள் தோழர்கள் உங்களுக்கு ஸலாம் கூறி அனுப்பினார்கள்: உங்களிடமிருந்து அவர்களை எதிரிகள் பிரித்து விடுவார்களோ என்று அவர்கள் அஞ்சுகிறார்கள்: எனவே, அவர்களுக்காக எதிர்பார்த்திருங்கள்!’ என்று கூறினேன். நபி(ஸல்) அவர்கள் அவ்வாறே செய்தார்கள். மேலும், ‘இறைத்தூதர் அவர்களே! நாங்கள் காட்டுக் கழுதையை வேட்டையாடினோம்; எங்களிடம் (அதில்) மீதமும் உள்ளது!’ என்று கூறினேன். அப்போது நபி(ஸல்) அவர்கள் இஹ்ராம் அணிந்திருந்த தம் தோழர்களிடம் ‘உண்ணுங்கள்!’ என்று கூறினார்கள். 
Book : 28