28:1821 (இஹ்ராம் அணிந்த நிலையில் தவறுதலாக) வேட்டையாடியதற்குரிய பரிகாரம்

பாடம் : 1 இறைநம்பிக்கையாளர்களே! நீங்கள் இஹ்ராமுடைய நிலையில் வேட்டை(யாடி)ப் பிராணிகளைக் கொல்லாதீர்கள்! மேலும், உங்களில் யாரேனும் வேண்டுமென்றே வேட்டை(யாடி)ப் பிராணியைக் கொன்று விட்டால், அதற்குப் பரிகாரமாக அவர், தான் கொன்ற பிராணிக்குச் சமமான ஒரு பிராணியை கால்நடைகளிலிருந்து பலி கொடுக்க வேண்டும்; உங்களில் நீதிமான்கள் இருவர் அதனைத் தீர்மானிக்க வேண்டும்; அந்த பலிப்பிராணி கஅபாவில் கொண்டு சேர்க்கப்பட வேண்டும்; அல்லது (அச்செயலுக்கு) குற்றப் பரிகாரமாக ஏழை எளியவர்களுக்கு உணவளிக்க வேண்டும். அல்லது அதற்குச் சமமாக அவர் நோன்பு நோற்க வேண்டும்! (இவ்வாறு விதிக்கப்பட்டிருப்பது) தான் செய்த (தவறான) செயலின் விளைவை அவர் சுவைப்பதற்காகவே! முன்பு செய்தவற்றையெல்லாம் அல்லாஹ் மன்னித்துவிட்டான்; எனவே, யாரேனும் மீண்டும் அச்செயலைப் புரிந்தால் அல்லாஹ் அவரைப் பழி வாங்குவான். மேலும், அல்லாஹ் யாவரையும் மிகைத்தவனகாவும் பழிவாங்கும் ஆற்றல் உடையவனாகவும் இருக்கின்றான்! உங்களுக்கும் (இதர) பயணிகளுக்கும் பலன் கிடைக்கும் பொருட்டு (நீங்கள் இஹ்ராம் அணிந்திருந்தாலும்) கடலில் வேட்டையாடுவதும், அதைப் புசிப்பதும் உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது; ஆனால், நீங்கள் எதுவரை இஹ்ராம் கட்டியிருக்கிறீர்களோ அது வரையிலும் தரையில் வேட்டையாடுவது உங்களுக்குத் தடை செய்யப்பட்டுள்ளது. எனவே, நீங்கள் யாரிடம் (மறுமையில்) ஒன்று சேர்க்கப்படுவீர்களோ அந்த அல்லாஹ்வுக்கே அஞ்சி நடந்துகொள்ளுங்கள்! எனும் (5:95, 96ஆகிய) இறைவசனங்கள். பாடம் : 2 இஹ்ராம் கட்டாதவர் வேட்டையாடி, இஹ்ராம் கட்டியவருக்கு வேட்டைப்பிராணியை அன்பளிப்பாக வழங்கினால் அவர் அதை உண்ணலாம். இஹ்ராம் கட்டியவர் ஒட்டகம், ஆடு, மாடு, கோழி, குதிரை ஆகியவற்றை அறுப்பதில் தவறு இல்லை! அது வேட்டையில் அடங்காது! என்று இப்னு அப்பாஸ் (ரலி), அனஸ் (ரலி) ஆகியோர் கருதுகிறார்கள். 
1821. அபூ கதாதா(ரலி) அறிவித்தார். 
நான் ஹுதைபிய்யா ஆண்டில் (மக்காவுக்குப்) புறப்பட்டேன். என்னுடைய தோழர்கள் இஹ்ராம் அணிந்தனர்; நான் இஹ்ராம் அணியவில்லை. எதிரிகள் நபி(ஸல்) அவர்களின் மீது படையெடுத்து வரவிருக்கிறார்கள் என்ற செய்தி நபி(ஸல்) அவர்களுக்குக் கிடைத்தது. நபி(ஸல்) அவர்கள் அந்தப் படையை எதிர்கொள்ள முன்னே புறப்பட்டார்கள். நான் மற்ற நபித்தோழர்களுடன் சென்று கொண்டிருந்தபோது, அவர்கள் ஒருவரையொருவர் பார்த்துச் சிரிக்கலாயினர். 
‘அப்போது நான் என் முன்னே ஒரு காட்டுக் கழுதையைக் கண்டு, அதைத் தாக்கி ஈட்டியால் குத்திப் பிடித்தேன். என் தோழர்களிடம் உதவி வேண்டினேன். (இஹ்ராம் அணிந்திருந்ததால்) அவர்கள் எனக்கு உதவ மறுத்துவிட்டனர். பிறகு அதன் மாமிசத்தை நாங்கள் சாப்பிட்டோம். நாங்கள் நபி(ஸல்) அவர்களைப் பிரிந்து விடுவோமோ என்று அஞ்சினோம். நபி(ஸல்) அவர்களைத் தேடி என் குதிரையைச் சிறிது நேரம் விரைவாகவும் சிறிது நேரம் மெதுவாகவும் ஓட்டிச் சென்றேன். நள்ளிரவில் நான் பனூம்ஃபார் கூட்டத்தைச் சேர்ந்த ஒருவரைச் சந்தித்து, ‘நபி(ஸல்) அவர்களை எங்கேவிட்டு வந்தீர்?’ என்று கேட்டேன். அதற்கவர் ‘அவர்கள் ‘சுக்யா’ எனும் இடத்திற்குச் சென்று மதிய ஓய்வு கொள்ள எண்ணிருந்த வேளையில், ‘தஃஹின்’ எனும் இடத்தில் அவர்களைவிட்டு வந்தேன்!’ என்றார். (நான் நபி(ஸல்) அவர்களைச் சந்தித்து), ‘இறைத்தூதர் அவர்களே! உங்கள் தோழர்கள் உங்களின் மீது ஸலாம் (இறை சாந்தி) மற்றும் இறைகருணை பொழிந்திடப் பிரார்த்திக்கிறார்கள்! உங்களைப் பிரிந்து விடுவோமோ என்று அவர்கள் அஞ்சுகிறார்கள்! எனவே (அவர்கள் வரும்வரை) அவர்களுக்காக நீங்கள் காத்திருங்கள்! இறைத்தூதர் அவர்களே! நான் காட்டுக் கழுதையை வேட்டையாடினேன். அதில் சிறிதளவு என்னிடம் மீதம் உள்ளது!’ என்று கூறினேன். நபி(ஸல்) அவர்கள் மக்களிடம் ‘உண்ணுங்கள்!’ என்றார்கள். (அப்போது) மக்கள் அனைவரும் இஹ்ராம் அணிந்திருந்தார்கள். 
Book : 28