21:1201 தொழுகையில் செய்யும் பிற செயல்கள்

பாடம் : 3 தொழுகையில் (இமாமுக்கு ஏற்படும் தவறுகளை உணர்த்த) சுப்ஹானல்லாஹ், அல்ஹம்து லில்லாஹ்) என்று ஆண்கள் கூறலாம். 
1201. ஸஹ்ல்(ரலி) அறிவித்தார். 
அம்ர் இப்னு அவ்ஃப் கூட்டத்தினரிடையே சமரசம் செய்து வைப்பதற்காக நபி(ஸல்) அவர்கள் புறப்பட்டார்கள். தொழுகை நேரம் வந்ததும் பிலால்(ரலி) அபூ பக்ர்(ரலி) அவர்களிடம் வந்து ‘நபி(ஸல்) அவர்கள் (தங்கள் பணியின் நிமித்தமாக நேரத்தோடு வந்து சேர்வதிலிருந்து) தடுக்கப்பட்டிருக்கிறார்கள். எனவே, நீங்கள் மக்களுக்குத் தொழுகை நடத்துகிறீர்களா?’ என்று கேட்டார். ‘நீர் விரும்பினால் செய்கிறேன்’ என அபூ பக்ர்(ரலி) கூறினார். பிலால்(ரலி) தொழுகைக்கு இகாமத் கூறியதும் அபூ பக்ர்(ரலி) முன்னே சென்று தொழுகை நடத்த ஆரம்பித்தார். சற்று நேரத்தில் நபி(ஸல்) அவர்கள் வரிசைகளைப் பிளந்து கொண்டு நடந்து வந்து முதல் வரிசையில் நின்றார்கள். உடனே மக்கள் கைதட்டலானார்கள். அபூ பக்ர்(ரலி) தொழுகையில் திரும்பிப் பார்க்காதவராக இருந்தார். மக்கள் கைதட்டலை அதிகரித்தபோது அபூ பக்ர்(ரலி) திரும்பிப் பார்த்தார். அப்போது நபி(ஸல்) அவர்கள் வரிசையில் நிற்பதைக் கண்டார். ‘அங்கேயே நிற்பீராக’ என்று நபி(ஸல்) அவர்கள் சைகை மூலம் தெரிவித்தார்கள். அபூ பக்ர்(ரலி) தம் கைகளை உயர்த்தி அல்லாஹ்வைப் புகழ்ந்து (திரும்பாமல்) பின்புறமாகவே நடந்து பின்னால் நின்றார்கள். உடனே நபி(ஸல்) அவர்கள் முன்னே சென்று தொழுகை நடத்தினார்கள். 
Book : 21