பாடம் : 2 கிரகணத்தின் போது தானதர்மம் செய்தல்.
1044. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் காலத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்டது. மக்களுக்கு நபி(ஸல்) அவர்கள் தொழுகை நடத்தினார்கள். (அத்தொழுகையில்) நீண்ட நேரம் நின்றார்கள். (ருவிலிருந்து) எழுந்து நீண்ட நேரம் நின்றார்கள். இது முதல் நிலையை விடக் குறைந்ததாக இருந்தது. பின்னர் மற்றொரு ருகூவுச் செய்தார்கள். இது முதல் ருகூவை விடக் குறைந்ததாக இருந்தது. பின்னர் நீண்ட நேரம் ஸஜ்தாச் செய்தார்கள். பின்னர் முதல் ரக்அத்தில் செய்தது போன்றே இரண்டாம் ரக்அத்திலும் செய்தார்கள். கிரகணம் விலகியதும் தொழுகையை முடித்தார்கள். மக்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். (அவ்வுரையில்) அல்லாஹ்வைப் புகழ்ந்து போற்றிவிட்டு, ‘சூரியனும் சந்திரனும் அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் உள்ளவையாகும். எவருடைய மரணத்திற்கோ எவருடைய வாழ்வுக்கோ அவற்றுக்குக் கிரகணம் பிடிப்பதில்லை. கிரகணத்தை நீங்கள் கானும்போது அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள். அவனைப் பெருமைப் படுத்துங்கள்; தொழுங்கள்; தர்மம் செய்யுங்கள்’ என்று குறிப்பிட்டார்கள். மேலும் தொடர்ந்து ‘முஹம்மதின் சமூதாயமே! ஓர் ஆணோ, பெண்ணோ விபச்சாரம் செய்யும்போது அல்லாஹ் கடுமையாக ரோசம் கொள்கிறான். முஹம்மதின் சமுதாயமே! நான் அறிவதை நீங்கள் அறிந்தால் குறைவாகச் சிரித்து அதிகமாக அழுவீர்கள்’ என்றும் குறிப்பிட்டார்கள்.
Book : 16