992. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
என்னுடைய சிறிய தாயார் மைமூனா(ரலி) அவர்களின் வீட்டில் நான் ஒரு நாள் இரவு தங்கினேன். நான் தலையணையின் பக்கவாட்டில் சாய்ந்து தூங்கினேன். நபி(ஸல்) அவர்களும் அவர்களின் மனைவியும் தூங்கினார்கள். இரவின் பாதி வரை கொஞ்சம் முன் பின்னாக இருக்கலாம். நபி(ஸல்) தூங்கினார்கள். பின்னர் விழித்து தங்களின் கையால் முகத்தைத் தடவித் தூக்கக் கலக்கத்தைப் போக்கினார்கள். பின்னர் ஆலு இம்ரான் என்ற அத்தியாயத்தின் இறுதியிலுள்ள பத்து வசனங்களை ஓதினார்கள். பின்னர் எழுந்து சென்று தொங்கவிடப் பட்டிருந்த பழைய தோல் பையிலிருந்து (தண்ணீர்) எடுத்து உளூச் செய்தார்கள். அவர்களின் உளூவை நல்ல முறையில் செய்தார்கள். பின்னர் தொழுவதற்காக எழுந்தார்கள். நானும் எழுந்து நபி(ஸல்) அவர்கள் செய்தது போன்று (உளூச்) செய்துவிட்டு நபி(ஸல்) அவர்களின் அருகில் போய் நின்றேன். அவர்கள் தங்கள் வலக்கரத்தை என் தலை மீது வைத்தார்கள். என்னுடைய காதைப் பிடித்து (அவர்களின் வலப்பக்கம்) நிறுத்தினார்கள். இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். மேலும் இரண்டு ரக்அத்கள், மீண்டும் இரண்டு ரக்அத்கள், இன்னும் இரண்டு ரக்அத்கள் மறுபடியும் இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். பின்பு வித்ருத் தொழுதார்கள். பின்னர் பாங்கு சொல்பவர் வரும் வரை சாய்ந்து படுத்தார்கள். பிறகு எழுந்து மற்றும் இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். இரண்டு ரக்அத்துகள் தொழுதுவிட்டு ஸுபுஹுத் தொழுகைக்காக (வீட்டைவிட்டு) வெளியே சென்றார்கள்.
Book :14