பாடம் : 4 (எதிரிகளின்) கோட்டைகளை கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வரும் போதும் எதிரிகளை (களத்தில்) சந்திக்கும் போதும் தொழவேண்டும். அவ்ஸாயீ (ரஹ்), மக்ஹூல் (ரஹ்) ஆகியோர் கூறுகின்றார்கள்: வெற்றி நெருங்கிய நிலையில் அவர்களுக்குத் தொழ இயலாவிட்டால் ஒவ்வொருவரும் தனித் தனியாகச் சைகை மூலம் தொழவேண்டும். சைகை மூலமும் தொழ முடியாவிட்டால் போர் முடிவுக்கு வரும் வரை அல்லது அச்சமற்ற நிலையை அடையும் வரை அவர்கள் தொழுகையைப் பிற்படுத்துவார்கள்; பின்னர் இரண்டு ரக்அத்கள் தொழுது கொள்வார்கள். (இரண்டு ரக்அத்கள் தொழக்கூட) அவர்களுக்கு இயலாவிட்டால் ஒரு ருகூஉம் இரண்டு சஜ்தாக்களும் செய்வார்கள்; தக்பீர் கூறுவது மட்டும் போதுமாகாது.* அச்சமற்ற நிலை உருவாகும் வரை தொழுகையை அவர்கள் பிற்படுத்துவார்கள். அனஸ் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: (ஹிஜ்ரி 20ஆமாண்டு உமர் (ரலி) அவர்களது ஆட்சி காலத்தில் ஈரானிலுள்ள) துஸ்தர் எனும் கோட்டையை ஃபஜ்ர் பளிச்சிடும் நேரத்தில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து கொண்டிருந்தோம். போர்த்தீ கடுமையாக மூண்டது. மக்களால் தொழமுடியவில்லை. எனவே நாங்கள் (ஃபஜ்ர் தொழுகையை) சூரியன் உயர்ந்த பிறகே தொழுதோம். அத்தொழுகையை நாங்கள் அபூமூசா (ரலி) அவர்களுடன் தொழுதோம். (அந்தப் போரில்) எங்களுக்கே வெற்றி கிடைத்தது. அந்தத் தொழுகைக்குப் பகரமாக இவ்வுலகமும் அதிலுள்ளவை (எனக்கு வழங்கபட்டாலும் அது) எனக்கு மகிழ்ச்சியளிக்காது.
945. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.
அகழ்ப்போரின்போது குரைஷீ இறைமறுப்பாளர்களை ஏசிக் கொண்டே உமர்(ரலி) வந்து ‘இறைத்தூதர் அவர்களே! சூரியன் மறையத் துவங்கும் வரை நான் அஸர் தொழவில்லை’ என்றனர். அதற்கு நபி(ஸல்) அவர்கள் ‘அல்லாஹ்வின் மீது அணையாக நானும் இது வரை அஸர் தொழ வில்லை’ என்று கூறிவிட்டு, புத்ஹான் என்னுமிடத்திற்குச் சென்று உளூச் செய்துவிட்டு, சூரியன் மறைந்த பிறகு அஸரையும் அதன் பின்னர் மஃரிபையும் தொழுதனர்.
Book : 12