பாடம் : 1 ஜுமுஆத் தொழுகை கட்டாயக் கடமை (ஃபர்ள்) ஆகும். ஏனெனில், அல்லாஹ் கூறுகின்றான்: ஜுமுஆ உடைய நாளில் தொழுகைக்காக நீங்கள் அழைக்கப்பட்டால், வியாபாரத்தை விட்டு விட்டு,அல்லாஹ்வைத் தியானிக்க (பள்ளிகளுக்கு) விரைந்துசெல்லுங்கள்- நீங்கள் அறிபவர்களாக இருப்பின் இதுவே உங்களுக்கு மிக மேலான நன்மையுடையதாகும். (62:9)
876. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
‘நாம் (பிறப்பால்) பிந்தியவர்கள். மறுமையில் முந்தியவர்களாவோம். எனினும் அவர்கள் நமக்கு முன்பே வேதம் கொடுக்கப்பட்டார்கள். அவர்களுக்குக் கடமையாக்கப் பட்ட இந்த நாளில் அவர்கள் முரண்பட்டனர். அல்லாஹ் நமக்கு நேர்வழி காட்டினான். மக்கள் நம்மையே பின்தொடர்கிறார்கள். (எவ்வாறெனில், நமக்கு இன்று ஜும்ஆ என்றால்) நாளைக்கு யூதர்களும் அதற்கு மறு நாள் கிறித்தவர்களும் வார வழிபாடு நடத்துகின்றனர்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Book : 11