கசக்கும் பெற்றோர்கள் கருகும் மலர்கள்

கசக்கும் பெற்றோர்கள் கருகும் மலர்கள்

சென்னை செயிண்ட் மேரீ ஆங்கிலோ இண்டியன் உயர்நிலைப் பள்ளியில் ஒரு பதினைந்து வயது மாணவன் தனது ஆசிரியையைக் கொலை செய்த கோரச் சம்பவம் நாட்டின் அனைத்து மக்களையும் அதிர்ச்சியிலும், அச்சத்திலும் ஆழ்த்தியிருக்கின்றது.

ஒவ்வொருவரும் தங்களது பிள்ளைகளின் எதிர்காலம் பற்றி ஒரு விதமான கவலை கொள்ள ஆரம்பித்து விட்டனர். ஒரு பக்கம் மாணவ மாணவியர்களின் மனநிலையையும், மறுபக்கம் பெற்றோர்களின் மனநிலையையும் இது பகிரங்கமாகப் படம்பிடித்துக் காட்டுகின்றது.

மாணவ மாணவியர்களின் மனநிலை இந்த சம்பவத்தின் பின்னணியில் விரிவாகப் பார்க்கப்பட வேண்டிய ஒன்று. எனவே இங்கு பெற்றோர்களின் மனநிலையைக் கொஞ்சம் சற்று உற்றுப் பார்ப்போம்.

பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளிடம், வளர்கின்ற இளம் மலர்களிடம் அதிகமான மதிப்பெண்கள் பெற வேண்டும், மாநிலத்தில் முதல் இடம் அல்லது இரண்டாவது அல்லது மூன்றாது இடம் வேண்டும் என்று எதிர்பார்க்கின்றார்கள். மாநில அளவில் இல்லையென்றால் மாவட்ட அளவிலாவது முதலிடத்தை அடைய வேண்டும் என்று பிள்ளைகளின் மனோபாவத்தைக் கொஞ்சம் கூட உணராமல் பிள்ளைகளைக் கசக்குகின்றார்கள்.

நாம் படிக்கும் காலத்தில் இல்லாத, மலை போல் குவிந்து கிடக்கும் பாடப் பிரிவுகள்! குழந்தைகளின் குறுக்குகளை ஒடித்து, கூன் விழச் செய்யும் பாரம் நிறைந்த பாடப் புத்தகப்பைகள்! காலையில் எழுந்ததுமே அரைகுறை உணவு, அரை வயிறு சாப்பாட்டுடன் பள்ளிக்கு அலறி ஓடும் அநியாயம்! மாலையில் வந்ததும் ஓய்வுக்கு, விளையாட்டுக்கு வழியில்லாமல் டியூசன்கள்! இரவில் பதினோரு மணியைத் தாண்டிய படுக்கை என்று படாதபாடு படுகின்ற பரிதாப நிலை, பாவநிலை!

இவையெல்லாம் நம்முடைய காலத்தில் இல்லை என்று கொஞ்சம் கூட எண்ணிப் பார்க்காத, இதயத்திற்குப் பதிலாக இரும்பைப் பெற்ற பெற்றோர்களின் எக்கச்சக்க கசக்கலால், கசப்பால் கல்வி கற்க வேண்டிய மலர்கள் கசங்கிப் போய், கசந்து போய், உள்ளம் கருகிய அவர்களில் சிலர் உத்தரக் கட்டைகளில் கயிற்றை மாட்டித் தங்கள் உயிரை விட்டு சவக் கட்டைகளாக மாறுகின்றார்கள்.

மின்சார ரயில்கள் முன் பாய்ந்து, சிதறு தேங்காய்களாய் சில்லுகளாகிவிடுகின்றனர். பூச்சி மருந்து தின்று பூலோகத்தை விட்டு விடைபெற்று விடுகின்றனர்.

இவை கற்பனைகள் அல்ல. இதோ சில உண்மை நிகழ்வுகள் நிதர்சனங்கள்.

  1. ஒன்பதாம் வகுப்பு படிக்கும் ஒரு பசுந்தளிர் மாணவி ஜமீன் பல்லாவாரத்தில் பிப்ரவரி 9ஆம் தேதி வியாழன் காலை, கொசு மருந்தைக் குடிக்கின்றாள். காரணம் என்ன? “நல்ல மதிப்பெண்கள் பெறவில்லை; அதனால் உனது பெற்றோர்களை அழைத்து வா!’ என்று வகுப்பு ஆசிரியர் சொன்னதற்குப் பரிகாரம் தான் இந்த பாரதூரமான நடவடிக்கை.

நல்ல வேளையாக இந்தச் சிறுமி இந்தக் கொலையின் கோரப் பிடியிலிருந்து தப்பிவிட்டாள். விஷத் திரவத்தின் வேகக் குறைவால் உயிர் பிழைத்தாள். இல்லையேல் பதினான்கு வயதுப் பயிர் வாடிப் போயிருக்கும்.

  1. சென்னை புறநகரின் பெரவல்லூர் உஃங காலணியைச் சேர்ந்த பதினாறு வயது மாணவன் கொளத்தூர் பள்ளிக்கூடத்தில் பத்தாம் வகுப்பு பயின்று கொண்டிருந்தான். இவன் தன்னுடைய படுக்கையறையின் கதவை வெள்ளிக்கிழமை காலை திறக்காததைக் கண்டு கலக்கமடைந்த பெற்றோர்கள் கதவைத் தட்டினர். திறக்கவில்லை. பின்னர் கதவை உடைத்தனர். அவர்களது கலக்கத்திற்கு அதிர்ச்சியளிக்கும் விளக்கம் காத்திருந்தது.

ஆம்! கூரையில் ஓடிக் கொண்டிருந்த மின்விசிறியில் மாட்டியிருந்த கயிறு அவனது குரல் வளையை நெருக்கி உயிரைப் பறித்திருந்தது. ஒரு தனியார் ஆட்டோ மொபைல் கம்பெனியில் பணிபுரிந்த அவனது தந்தை அடித்து துவைத்து அறையில் அடைத்து வைத்திருந்தார். முன்பு நடந்த பரீட்சையில் தோல்வி அடைந்த அந்தப் பாடத்தில் சரியான பதில் ஒப்புவிக்கின்ற வரை உன்னை அறையை விட்டு வெளியே விட மாட்டேன் என்று கதவைப் பூட்டியும் போட்டார். அவனது வாழ்க்கையையும் சேர்த்தே பூட்டி விட்டார். தந்தையின் கேள்விக்கு விடை சொல்லாமல் ஒரேயடியாக விடை பெற்றுவிட்டான்.

கதையை முடிக்கும் கல்லூரி மாணவர்கள்

  1. பள்ளிக் கூடப் பையன்களும் பெண் குழந்தைகளும் தங்கள் வாழ்க்கைக் கதையை, கணக்கை விரைந்து முடிக்கின்றார்கள் என்றால் கல்லூரி மாணவர்களும் இதை விட அதிகமாக முடிக்கின்றார்கள்.

நண்பன் என்ற சினிமாவில் இறுதியாண்டு பொறியியல் மாணவன் தனக்கு கொடுக்கப்பட்ட பிராஜக்ட் வேலையை முடிக்க முடியாமல் வாழ்க்கை பிராஜக்ட்டை முடித்து விடுகின்றானாம். அது நிழல்ல நிஜம் தான் என்று கூறி “ஹிந்து’ பத்திரிக்கை, “வாழ்க்கையைத் தொலைக்கின்ற தொழிற்கல்வி மாணவர்கள்’ பற்றிய புள்ளி விவரங்களைப் பதிய வைக்கின்றது.

இரண்டு பொறியியல் மாணவர்கள் ஓடும் மின்சார ரயில் முன்பு பாய்ந்து தங்களை மாய்த்துள்ளார்கள். இது தொடர்பாக அவர்களது பெற்றோர்கள் இரயில்வே போலீசாரிடம் புகார் செய்கின்றனர். ஆசிரியர்களின் குடைச்சல் இந்தத் தற்கொலைக்கு காரணம் என்று அவர்கள் இந்தப் புகாரில் தெரிவிக்கின்றனர்.

  1. ஜனவரி 30: நானோ டெக்னாலஜி பயில்கின்ற ஹைதராபாத்தைச் சார்ந்த பதினெட்டு வயது மாணவன் இரண்டு பாடங்களில் தோல்வி அடைகின்றான். ஆசிரியர் வகுப்பை விட்டுத் துரத்தி விடுகின்றார். பையனின் தந்தை ஒரு பள்ளி ஆசிரியர். சமாதானப்படுத்தி ரயிலில் அழைத்து வருகின்றார். பயணத்தில் இருவரும் உறங்குகின்றனர். விழித்துப் பார்த்த தந்தையின் விழித்திரைக்கு அதிர்ச்சி காத்திருந்தது. பையனைக் காணவில்லை. காகிதத் துண்டு செய்தி அறிவித்தது. “இனிமேல் என்றும் என்னை நீங்கள் காண மாட்டீர்கள்” என்று பிரியாவிடை கொடுத்திருந்தான். ஆனால் ஃபேஸ்புக்கில் தோன்றி தான் உயிருடன் இருப்பதை உறுதிப்படுத்தினான். அதைப் பார்த்த பெற்றோருக்குப் போன உயிர் திரும்ப வந்த பரம திருப்தி.
  2. வார விடுமுறையான இரு நாட்கள் உழைத்து விட்டு மீதி நாட்கள் படிக்கச் சென்ற இன்னொரு மாணவன், அழுத்தம் தாங்காமல் தற்கொலை செய்து, தன்னை அழுத்திக் கொண்டு அழித்துக் கொள்கின்றான்.
  3. 2010-11 கல்வியாண்டில் ஐ.ஐ.டி.யில் பயிலும் இரு மாணவர்கள் அழுத்தம் தாங்க முடியாமல் தங்களை நிரந்தரமாகத் தொலைத்துக் கொள்கின்றார்கள்.

இவை அனைத்தும் நியூ இண்டியன் எக்ஸ்பிரஸ், இந்து நாளேடுகளில் வெளிவந்தவை. இவையெல்லாம் எதை காட்டுகின்றன?

கல்லூரிகளில் ஆசிரியர் தொல்லை, தொந்தரவு எனப் புகார்கள் பெற்றோர்களால் பதிவு செய்யப்பட்டாலும் உண்மை நிலை பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளிடம் அவர்களது தகுதிக்கும் சக்திக்கும் மேலாக, அதிகமாக எதிர்பார்ப்பது தான்.

கலையியல் படிப்பதற்குத் தகுதியில்லாத மாணவர்களைக் கூட, பொறியியல் படிப்பிற்குப் பலவந்தமாகத் தள்ளி விடுகின்றார்கள். இந்தச் சுமையை மாணவ, மாணவியர்களால் சுமக்க முடியவில்லை. இந்தப் பாரத்தை சிறு பறவைகளான அவர்களால் தாங்க முடியவில்லை. அதன் முடிவு தான் தற்கொலைகள்.

மாணவ, மாணவியருக்கென்று ஒரு பாடத்தில் விருப்பமிருக்கும். அந்த விருப்பத்திற்கு எதிராக அவர்கள் திருப்பப்படும் போது அவர்கள் தங்களையே தொலைக்கத் துவங்கி விடுகின்றனர்.

எனவே பெற்றோர்கள் பிள்ளைகளின் மனநிலையைப் புரிய வேண்டும். அவ்வாறு புரிந்து செயல்பட ஆரம்பித்தால் பிள்ளைகளின் படிப்பை மட்டுமல்ல! வாழ்க்கையையும் சேர்த்துக் காக்கலாம். பிள்ளைகள் கசங்க மாட்டார்கள்; கருகவும் மாட்டார்கள்.