உயிர்ப்பித்த உன்னத ரமலான் உயிர் பிரியும் வரை தொடரட்டும் அமல்கள்

மழைக் காலத்தில் பெருக்கெடுக்கும் வெள்ளம், மழை நின்ற பின்னர்  நீர் வடிந்ததும் நின்று விடுவது போல் பள்ளிவாசலில் பெருக்கெடுத்த மக்கள்  கூட்டம் ரமலான் முடிந்ததும் பெருநாளுடன் நின்று விடுகின்றது. உண்மை நிலை என்னவெனில் பெருநாள் ஃபஜ்ரிலேயே பல  பள்ளிகள் வெறிச்சோட ஆரம்பித்து விடுகின்றன. நமது நிலை அதுபோன்று ஆகிவிடக்கூடாது.

ரமலான் மாதம் நமக்கு அதிகமான பாடங்களை படித்துத் தந்து நம்மை உயிர்ப்பித்திருக்கின்றது. அந்தப் பாடத்தை நாம் உயிர் பிரியும் வரை கடைப்பிடிக்க வேண்டும். ரமலான் மாதம் தந்த பயிற்சிகளில் முக்கியமானவை இதோ:

ஸஹர் நேர விழிப்பு

அதுவரைக்கும் ஃபஜ்ர் நேரமே நமக்குப் பறி போயிருந்த நிலையில் ரமலான் மாதம் நம்மை ஸஹர் நேரத்தில் எழ வைத்தது. அந்த ஸஹர் நேர விழிப்பை வாழ்நாள் முழுவதும் கடைப்பிடிக்க வேண்டும். ஸஹர் நேரம் என்பது பரக்கத்தான, இறையருள் நிறையப் பெற்ற ஒரு புனித நேரமாகும்.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நம்முடைய இறைவன் ஒவ்வொரு இரவும் கீழ்வானத்திற்கு இறங்கி இரவில் மூன்றில் ஒரு பகுதி இருக்கும்போது, ‘என்னிடம் யாரேனும் பிரார்த்தித்தால் அதை நான் அங்கீகரிக்கிறேன். யாரேனும் என்னிடம் கேட்டால் அவருக்குக் கொடுக்கிறேன். யாரேனும் என்னிடம் பாவமன்னிப்புக் கோரினால் அவரை நான் மன்னிக்கிறேன்’ என்று கூறுவான்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 1145

இப்படிப்பட்ட நேரத்தில் நாம் தஹஜ்ஜத் தொழுகையை ஒவ்வொரு நாளும் தொழுவோமாக!

அவர்களின் விலாப்புறங்கள் படுக்கைகளை விட்டு விலகிவிடும். அவர்கள் அச்சத்துடனும், ஆவலுடனும் தமது இறைவனைப் பிரார்த்திப்பார்கள். அவர்களுக்கு நாம் வழங்கியவற்றிலிருந்து செலவும் செய்வார்கள் 

அல்குர்ஆன் 32:16 

இந்த வசனம் இரவில் எழுந்து நின்று தொழுவதை சிறப்பித்துக் கூறுகின்றது. அந்தப் பக்குவத்தையும், பயிற்சியையும் ரமலான் மாத ஸஹர் நேரங்கள் நமக்கு அளித்திருக்கின்றன. அந்த அடிப்படையில், நாம் பிந்திய இரவுகளில் குறைந்த பட்சம் வித்ரு தொழுகையை அந்த நேரத்தில் தொழுவதற்கு நம்மை நாமே பக்குவப்படுத்திக் கொள்வோமாக!

அவர்கள் இரவில் சிறிது நேரமே உறங்குவோராக இருந்தனர். அவர்கள் ஸஹர் நேரங்களில் பாவ மன்னிப்புத் தேடுவார்கள்

அல்குர்ஆன் 51:17,18

(அவர்கள்) பொறுமையாளர்கள், உண்மையாளர்கள், கட்டுப்பட்டு நடப்பவர்கள், (இறைவழியில்) செலவு செய்பவர்கள், ஸஹர் நேரங்களில் பாவ மன்னிப்புத் தேடுபவர்கள். 

அல்குர்ஆன் 3:17

இந்த வசனங்கள் ஸஹர் நேரத்தில் பாவமனிப்புத் தேடுவதை சிறப்பித்துக் கூறுகின்றன.  அதை நல்லடியார்களின் சிறந்த பண்புகளாகவும் குறிப்பிடுகின்றன. மேற்கண்ட இந்த வசனங்களின் அடிப்படையில் ரமலான் படித்துத் தந்த ஸஹர் விழிப்பை பாடமாகக் கொண்டு  நாம் இனி வரும் நாட்களில் ஸஹர் நேரங்களில் பாவமன்னிப்புத் தேடுவோமாக! இரவுத் தொழுகையை பேணித் தொழுவோமாக! பாவமன்னிப்புத் தேடலுக்கு நபி (ஸல்) பல்வேறு வார்த்தைகளைப் பயன்படுத்தியுள்ளார்கள். அவ்வாறு பயன்படுத்திய வார்த்தைகளில்

سُبْحَانَكَ وَبِحَمْدِكَ   أَسْتَغْفِرُكَ وَأَتُوبُ إِلَيْكَ

சுப்ஹானக வபி ஹம்திக அஸ்தஃக்ஃபிருக வ அதூபு இலைக்க (இறைவா! உன்னைப் போற்றிப் புகழ்ந்து துதிக்கிறேன். உன்னிடத்தில் பாவமன்னிப்புக்கோரி உன்னிடமே மீளுகிறேன்)   என்ற வார்த்தையாகும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறப்பதற்கு முன்னால் ‘சுப்ஹானக வபி ஹம்திக அஸ்தஃக்ஃபிருக வ அதூபு இலைக்க (இறைவா! உன்னைப் போற்றிப் புகழ்ந்து துதிக்கிறேன். உன்னிடத்தில் பாவமன்னிப்புக்கோரி உன்னிடமே மீளுகிறேன்)’ என்று அதிகமாகக் கூறி வந்தார்கள். (ஒருநாள்) நான், “அல்லாஹ்வின் தூதரே! இந்த வார்த்தைகள் என்ன? இவற்றைத் தாங்கள் புதிதாகக் கூறத் துவங்கியுள்ளீர்களே (என்ன காரணம்)?” என்று கேட்டேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வின் உதவியும் வெற்றியும் வரும்போது… (என்று தொடங்கும் 110ஆவது) அத்தியாயத்தில் என் சமுதாயத்தார் விஷயத்தில் எனக்கோர் அடையாளம் கூறப்பட்டுள்ளது. அதை நான் காண்பதால் இவற்றைக் கூறிவருகிறேன்” என்று சொன்னார்கள்.

 அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி)

நூல்: முஸ்லிம் 835 

இந்த இஸ்திக்ஃபாரை  ஒவ்வொரு நாளும் எந்த நேரத்திலும் செய்யலாம் என்றாலும்  புனிதமான ஸஹர் நேரத்தில் செய்வது மேற்கண்ட வசனங்கள், ஹதீஸ் அடிப்படையில் சிறப்பாகும். அல்லாஹ் திருக்குர்ஆனில்.

(நபியே!) தெளிவான, பெரும் வெற்றியை உமக்கு வழங்கியுள்ளோம்

அல்லாஹ் உமது முந்திய, பிந்திய பாவங்களை மன்னிப்பதற்காகவும், அவன் தனது அருட்கொடையை உமக்கு முழுமைப்படுத்துவதற்காகவும், நேரான பாதையை உமக்குக் காட்டுவதற்காகவும், வலிமைமிக்க உதவியை உமக்கு வழங்குவதற்காகவும் (இவ்வாறு வெற்றியளித்தான்.)

அல்குர்ஆன்  48:1-3

இந்த வசனங்களில்  நபி (ஸல்) அவர்களுக்கு முன் பின் பாவங்களை மன்னித்து விட்டதாக அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறுகின்றான். அப்படிப்பட்ட தூதர் (ஸல்) அவர்கள் கூறுவதைப் பாருங்கள்.

எனது உள்ளத்தின் மீதும் திரையிடப்படுகிறது. நான் ஒவ்வொரு நாளும் நூறு முறை அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோருகிறேன் என்று கூறுகின்றார்கள்.

அறிவிப்பவர்: அஃகர்ரு பின் யசார் அல்முஸனீ(ரலி)

நூல்: முஸ்லிம் எண்: 5234

ஆனால் நமது நிலை என்ன? அன்றாடம் பாவங்களில் உழல்கின்ற நாம் 100 தடவைகள் பாவமன்னிப்புக் கோருவதைத் தவற விடக்கூடாது.

எனவே, ரமலான் அளித்த வாழ்நாள் பரிசாக, பாடமாக அனுதினமும் பாவமன்னிப்புக் கோருவோம். அது போன்று ரமலானில் நம்மை அன்றாடம் உயிர்ப்பித்த ஜமாஅத் தொழுகை, தர்மம் அளித்தல், புற செயல்பாடுகள், பொய் பேசாமை, புறம் பேசாமை போன்ற அக நற்பண்புகளையும் உயிர் பிரியும் வரை கடைப்பிடிப்போமாக!