உலகத்தில் வாழ்ந்து மறைந்த கோடிக்கணக்கான மனிதர்களில் இறைவனின் திருப்தியைப் பெற்ற இறைத்தூதர்களும், இறைவனால் பொருந்திக் கொள்ளப்பட்ட நல்ல மனிதர்களும் பலவிதமான நல்ல வாழ்வியல் தடயங்களை விட்டுச் சென்றுள்ளார்கள்.
அதேவேளையில் உலகில் வாழ்ந்து மறைந்த கெட்ட மனிதர்கள் மிகப் பெரிய அளவில் பாரதூரமான காரியங்களைச் செய்து, உலக மாந்தர்களுக்கு மத்தியில் வாழ்ந்து மரணித்துள்ளார்கள். அநியாயம் செய்த இந்தக் கெட்டவர்களைப் போன்று வாழ்ந்து விடக்கூடாது என்றும், இவர்கள் விட்டுச் சென்ற அடையாளங்களைப் போன்று ஒருபோதும் விட்டுச் சென்று விடக் கூடாது என்பதையும் உலகிற்கு இறைவன் தெளிவாகப் பறைசாற்றுகின்றான்.
உலக ஆதாயத்திற்காக, அரசியல் இலாபத்திற்காக, புகழுக்காக, பெருமைக்காக சில காரியங்களைச் செய்து விட்டு, அவர்கள் செய்த அற்பக் காரியங்களுக்காக, பெருமை பிடித்த அவர்களே ஊர் மெச்சும் வகையில் பாராட்டு விழா ஒன்றை நடத்தி, தாங்கள் செய்த ஆதாயத்திற்கான சாதனைகள் குறித்து வானளாவிய அளவில் புகழ்ந்து பேசிக் கொண்டிருப்பார்கள்.
ஆனால் அதற்கு நேர்மாற்றமாக, உலகில் வாழ்ந்த சில நல்ல மனிதர்கள் அழிக்கவே முடியாத பல்வேறு வாழ்வியல் அடையாளங்களையும், சிறப்பு வாய்ந்த தடயங்களையும் உலக மாந்தர்களுக்கு மத்தியில் அழியாச் சுவடுகளாய் விட்டுச் சென்றுள்ளனர்.
பொதுவாக எந்த ஒரு மனிதராக இருந்தாலும் மரணிக்கின்ற தருவாயில் சில தடயங்களை விட்டுச் செல்வார்கள். அவற்றில் நல்லதும் அடங்கும். கெட்டதும் அடங்கும். மனிதர்களுக்கு முன்மாதிரிமிக்க அடையாளங்களும் அடங்கும். மனிதர்களுக்குப் படிப்பினையூட்டும் நிகழ்வுகளும் அடங்கும்.
ஆனால், இறைவனின் நண்பரும் – இறைவனின் தூதருமான இப்ராஹீம் நபி அவர்கள் இந்த உலகத்திற்கு விட்டுச் சென்ற அடையாளங்களும் – தடயங்களும் மங்காப் புகழாய் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கின்றது. இப்ராஹீம் நபி அவர்கள் வாழ்நாள் சாதனையாளராக உலக மாந்தர்களுக்கு மத்தியில் மின்னிக் கொண்டிருக்கின்றார்கள்.
வாழ்ந்தோம், இறந்தோம் என்றில்லாமல் இப்ராஹீம் நபி அவர்கள் தன்னுடைய வாழ்க்கையை இறைவனுக்காகவே முழுமையாக அர்ப்பணித்தார். இந்த மனிதர் இவ்வாறு வாழ்ந்தார், இவ்வளவு ஆண்டுகள் சம்பாதித்தார், இவ்வளவு ஆண்டுகள் உணவு உண்டார் என்பதெல்லாம் இயல்பான சாதாரண ஒரு மனிதரின் வாழ்க்கை வரலாறு.
ஆனால், இப்ராஹீம் நபி அவர்கள் இறைவனின் திருப்தியை உயர்வான வகையில் பெற்றே தீர வேண்டும் என்கிற ஆழமான சிந்தனையில் பல்வேறு தடயங்களை இந்த உலகத்திற்கு விட்டுச் செல்கின்றார்கள். மிகச் சிறந்த சாதனைகள் புரிந்து வாழ்நாள் சாதனையாளராகவும், ஆளுமை நிறைந்த வாழ்க்கைக்குச் சொந்தக்காரராகவும் வாழ்ந்து உலகை விட்டுப் பிரிந்தவர் தான் இப்ராஹீம் நபி அவர்கள்.
இப்ராஹீம் நபி அவர்கள் வாழ்ந்து பல்லாயிரம் ஆண்டுகள் மிக வேகமாய் கடந்து சென்று விட்டது. ஆனால் உலகத்தில் இன்றைய நொடிப்பொழுது வரைக்கும் தவிர்க்க முடியாத பெயர் இப்ராஹீம் (அலை) அவர்கள்! புனிதம் நிறைந்த குறிப்பிட்ட மாதங்களில் இப்ராஹீம் (அலை) அவர்களைப் பற்றியும், அவர்களின் உன்னதமான சிறப்புகள் குறித்தும் பேசாத பள்ளிவாசல் உலகில் ஒன்று கூட இல்லை என்று சொல்கின்ற அளவிற்கு ஓங்கி உயரந்து நிற்கின்றார் இப்ராஹீம் நபி அவர்கள்!
இத்தனை சிறப்பிற்குக் காரணம், இப்ராஹீம் நபி அவர்கள் வாழ்ந்து மறைந்து பல்லாண்டுகள் ஆனாலும் அவர் வாழ்ந்த தாக்கங்களும், விட்டுச் சென்ற தடயங்களும், அவர்கள் விட்டுச் சென்ற சுவடுகளும் ஏராளம்! ஏராளம்!
நபிமார்கள் குறித்து தன்னுடைய திருக்குர்ஆனில் இறைவன் கூறும்போது;
பின்வருவோரிடம் அவருக்கு (நற்பெயரை) நிலைக்கச் செய்தோம்.
அல்குர்ஆன் 37:78
பின்வருவோரிடம் அவருக்கு (நற்பெயரை) நிலைக்கச் செய்தோம்.
அல்குர்ஆன் 37:108
பின்வருவோரிடம் அவ்விருவருக்கும் (நற்பெயரை) நிலைக்கச் செய்தோம்.
அல்குர்ஆன் 37:119
பின்னோர்களில் இவர்களின் பெயர்களை நாம் நிலைக்கச் செய்தோம் என்கிற வார்த்தைப் பிரயோகத்தை அனைத்து நபிமார்களின் வரலாற்றுத் தகவல்களைப் பேசும் போதும் இறைவன் தெளிவாக எடுத்துரைக்கின்றான். பின்னோர்கள் பேசுவார்கள் என்றால், தலைமுறை கடந்து வாழும் சமுதாய மக்கள் உலகம் அழிகின்ற நாள் வரை பேசுவார்கள் என்பதை இறைவன் பறைசாற்றுகின்றான்.
அதிலும் குறிப்பாக, பல்லாண்டு காலத்திற்கு முன்பு வாழ்ந்த இப்ராஹீம் நபி குறித்து உலகம் அழிகின்ற நாள் வரை இறைவன் அவரது புகழை ஓங்கி ஒலிக்கச் செய்து கொண்டிருக்கின்றான்.
என் இறைவனே! எனக்கு ஞானத்தை வழங்குவாயாக! நல்லவர்களுடன் என்னைச் சேர்த்து வைப்பாயாக!
பின்வருவோரிடம் எனக்கு நற்பெயரை ஏற்படுத்துவாயாக!
இன்பம் நிறைந்த சொர்க்கத்திற்கு உரிமை கொள்வோரில் ஒருவனாக என்னை ஆக்கி வைப்பாயாக!
அல்குர்ஆன் 26:83-85
இப்ராஹீம் நபி அவர்கள் இறைவனிடத்தில் உளமாரக் கேட்ட பிரார்த்தனையை இறைவன் அங்கீகரித்து, அவரது புகழையும், செம்மையான வாழ்க்கையையும் உலகம் அழிகின்ற நாள் வரை வாழ இருக்கும் மக்களிடத்தில் மிகப்பெரும் சிறப்பிற்குரிய சாதனையாக இறைவன் பாதுகாத்து வைத்திருக்கின்றான்.
உலகம் அழிகின்ற நாள் வரை பின்வருவோரிடத்தில் மிகச்சிறந்த நற்பெயரை இறைவன் நிலைக்கச் செய்து விட்டதாக முன்னறிவிப்பு செய்கின்றான்.
அவர்களுக்கு நமது அருளை வழங்கினோம். (பின்வருவோரிடம்) அவர்களுக்கு உயர்ந்த நற்பெயரையும் ஏற்படுத்தினோம்.
அல்குர்ஆன் 19:50
இப்ராஹீம் நபி அவர்களுக்கு உயர்ந்த நற்பெயரை ஏற்படுத்தி விட்டதாக இறைவன் புகழாரம் சூட்டுகின்றான்.
இப்ராஹீம் நபி அவர்கள் தன்னுடைய சிறப்பிற்குறிய வாழ்க்கையின் மூலமாக உலகத்திற்குப் பறைசாற்றிய மகத்தான அடுக்கடுக்கான சாதனைகள் என்னென்ன? புகழுக்குரிய சாதனைகள் என்னென்ன? என்பது குறித்து விரிவாக அலசுவோம்.
அனைத்து சமூக மக்களாலும் உரிமை கொண்டாடப்பட்ட சாதனையாளர்
ஒவ்வொரு சமுதாயத்திற்கும் இறைவனின் புறத்திலிருந்து அனுப்பப்பட்ட தூதர்கள், இறைவனின் ஓரிறைக் கொள்கையை எடுத்துரைக்கும் போது, தன்னுடைய சமுதாய மக்களில் சிலரால் ஏற்கப்பட்டும், பலரால் மறுக்கப்பட்டும் வாழ்ந்திருக்கின்றார்கள்.
ஆனால், அல்லாஹ்வின் நண்பராகவும், தூதராகவும் திகழ்ந்த இப்ராஹீம் நபியை யூதர்களும், கிறிஸ்தவர்களும் போட்டி போட்டவர்களாக எங்களைச் சார்ந்தவர் தான் இப்ராஹீம், எங்கள் சமூகத்தைச் சார்ந்தவர் தான் இப்ராஹீம். இப்ராஹீம் நபியை உச்சத்தில் வைத்து கொண்டாடினார்கள்.
“வேதமுடையோரே! இப்ராஹீமைப் பற்றி ஏன் தர்க்கம் செய்கிறீர்கள்? அவருக்குப் பிறகே தவ்ராத்தும், இன்ஜீலும் அருளப்பட்டன. சிந்திக்க மாட்டீர்களா?”
அல்குர்ஆன் 3:65
கவனத்தில் கொள்ளுங்கள். நீங்கள்தான் உங்களுக்குத் தெரிந்த விஷயத்தில் (இதுவரை) தர்க்கம் செய்தீர்கள். உங்களுக்கு எந்த அறிவும் இல்லாத விஷயத்தில் ஏன் தர்க்கம் செய்கிறீர்கள்? அல்லாஹ்வே அறிவான்; நீங்கள் அறிய மாட்டீர்கள்.
அல்குர்ஆன் 3:66
இப்ராஹீம் யூதராகவோ, கிறித்தவராகவோ இருக்கவில்லை. மாறாக, சத்திய நெறியில் நின்ற முஸ்லிமாகவே இருந்தார். அவர் இணைவைப்போரில் இருக்கவில்லை.
அல்குர்ஆன் 3:67
வேதம் வழங்கப்பட்ட யூதர்களும் – கிறிஸ்தவர்களும் இப்ராஹீம் எங்களைச் சார்ந்தவர் என்று தர்க்கித்துக் கொள்கின்றனர். உங்களுக்கு எந்த அறிவும் இல்லாத விஷயத்தில் நீங்கள் தர்க்கம் செய்கின்றீர்கள். இப்ராஹீம் நபிக்குப் பிறகு தான் தவ்ராத்தும், இன்ஜீலும் அருளப்பட்டது என்று இறைவன் தெளிவான சான்றுகளுடன் எடுத்துரைத்து விட்டு, இப்ராஹீம் உங்களைச் சார்ந்தவர் அல்லர் என்று கூறி எச்சரிக்கை செய்கின்றான்.
மேலும், சத்தியத் தூதர் இப்ராஹீம் நபி அவர்கள் உண்மையான ஏகத்துவவாதிகளின் கூட்டத்தைச் சார்ந்தவராவார். இப்ராஹீம் நபி அவர்கள் யூதராகவும் இல்லை, கிறிஸ்தவராகவும் இல்லை. உண்மை வழியில் நின்ற பரிசுத்த முஸ்லிமாக இருந்தார் என்று கூறி இறைவன் புகழாரம் சூட்டுகின்றான்.
இறைவனுக்கு இணைவைக்காத பரிசுத்த சாதனையாளர்
இப்ராஹீம் நபி அவர்கள் தன்னுடைய வாழ்க்கையை மிகப் பரிசுத்தமான வாழ்க்கையாகவும், இறைவனுக்கு இணை வைக்காத மிகச் சிறந்த மாண்பாளராகவும் வாழ்ந்து வாழ்நாள் சாதனை படைத்துள்ளார்.
இப்ராஹீம் நபி அவர்கள் இறைவனுக்கு இணைவைக்காமல் வாழ்ந்த பரிசுத்தமான வாழ்க்கை குறித்து திருக்குர்ஆனின் வழிநெடுகிலும் சுமார் முப்பதுக்கும் மேற்பட்ட இடங்களில் இறைவன் புகழ்ந்து பேசுகின்றான்.
“அல்லாஹ் உண்மையைக் கூறியுள்ளான். எனவே, சத்திய நெறியில் நின்ற இப்ராஹீமின் மார்க்கத்தைப் பின்பற்றுங்கள். அவர் இணை வைப்போரில் (ஒருவராக) இருக்கவில்லை” என்று கூறுவீராக!
அல்குர்ஆன் 3:95
“எனது இறைவன் என்னை நேரான வழியில் செலுத்தியுள்ளான். (அது) நிலையான மார்க்கம். சத்திய நெறியில் நின்ற இப்ராஹீமின் மார்க்கம். அவர் இணைவைப்பவர்களில் இருக்கவில்லை” என்று கூறுவீராக!
அல்குர்ஆன் 6:161
“(நபியே!) சத்திய நெறியில் நின்ற இப்ராஹீமின் மார்க்கத்தைப் பின்பற்றுவீராக!” என்று உமக்கு அறிவித்தோம். அவர் இணைவைப்போரில் ஒருவராக இருக்கவில்லை.
அல்குர்ஆன் 16:123
இப்ராஹீம் நபி அவர்கள் இறைவனுக்கு இணைவைத்தவராக இருக்கவில்லை என்பது குறித்து அல்லாஹ் பேசும்போது “ஹனீஃபன்” என்கிற பதத்தைப் பயன்படுத்துகின்றான். ஹனீஃப் என்கிற வார்த்தைக்கு பரிசுத்தமான முஸ்லிம் என்பது அதனுடைய பொருளாகும்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு இறைவன் பாடம் நடத்தும் போது, சத்திய நெறியில் நின்று, இறைவனுக்கு இணைவைக்காமல் பரிசுத்தமான வாழ்க்கையை வாழ்ந்த இப்ராஹீம் நபியின் மார்க்கத்தைப் பின்பற்றுங்கள் என்று அல்லாஹ் எடுத்துரைக்கின்றான்.
இப்ராஹீம் நபியின் மார்க்கம் என்பது இணைவைப்பு கலந்து விடாத பரிசுத்தமான மார்க்கம். முஸ்லிம் என்று பெயரளவில் சொல்லிக் கொண்டு இணைவைப்புக் காரியங்களில் அப்பட்டமாக ஈடுபடுபவர் இப்ராஹீம் நபியின் மார்க்கத்தை விட்டு அப்புறப்படுத்தப்பட்டு நஷ்டமடைந்தவராகவும், கைசேதமடைந்தவராகவும் மாறி விடுகின்றார்.
சாதனையாளர் இப்ராஹீம் நபியின் விஷயத்தில் தகுதி படைத்தவர்கள்
இப்ராஹீம் நபியை உரிமை கொண்டாடுவதற்கு அதிகம் தகுதி படைத்தவர்கள் யார்? என்பது குறித்து அல்லாஹ் தன்னுடைய திருக்குர்ஆனில் மிகத் தெளிவாக எடுத்துரைக்கின்றான்.
இப்ராஹீமின் விஷயத்தில் மக்களிலேயே மிகத் தகுதி படைத்தவர்கள், அவரைப் பின்பற்றியோரும், இந்த நபியும், இறைநம்பிக்கை கொண்டோருமே ஆவர். அல்லாஹ் இறைநம்பிக்கையாளர்களின் பாதுகாவலன்.
அல்குர்ஆன் 3:68
இப்ராஹீம் நபி விஷயத்தில் உரிமை கொண்டாடுவதற்கு அதிகம் தகுதி படைத்தவர்கள் இப்ராஹீம் நபியை பின்பற்றியவர்களும், முஹம்மத் நபியும், இப்ராஹீம் நபி மார்க்கத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற இறைநம்பிக்கையாளர்களும் தான் என்று அல்லாஹ் பறைசாற்றுகின்றான்.
இப்ராஹீம் நபி மார்க்கத்தில் வாழ்ந்து, அவர்களை அப்படியே பின்பற்றி நடப்பவர்களுக்கு மட்டும் தான் இப்ராஹீம் நபி விஷயத்தில் உரிமை கொண்டாடுவதற்கு அதிகமான தகுதியும் – அந்தஸ்த்தும் இருக்கின்றது என்பதை உணர்ந்தவர்களாக இஸ்லாமியர்கள் நம்முடைய வாழ்க்கையை அமைப்பதற்குக் கடமைப்பட்டுள்ளோம்.
விருந்தோம்பலில் சிறந்து விளங்கிய சாதனையாளர்
இப்ராஹீம் நபி அவர்கள், இறைவன் மிகவும் விரும்புகின்ற விருந்தோம்பல் என்கிற மிகச் சிறந்த செயல்பாட்டினை தன்னுடைய வாழ்க்கையில் மிகவும் வீரியமாகவும், நேர்த்தியாகவும் செயல்படுத்தி இருக்கின்றார்கள்.
தன்னுடைய வீட்டிற்கு வருபவர்களுக்கு அழகிய முறையில் விருந்து உபசரிப்பு செய்து மிகச் சிறந்த மனிதராக வாழ்ந்து காட்டியிருக்கின்றார்கள்.
(நபியே!) இப்ராஹீமுடைய கண்ணியத்திற்குரிய விருந்தாளிகளின் செய்தி உம்மிடம் வந்ததா? அவர்கள் அவரிடம் வந்தபோது “ஸலாம்” என்றனர். அதற்கவர், “ஸலாம், அறிமுகமில்லாத கூட்டமாக இருக்கிறீர்களே!” என்று கூறினார். அவர், தமது குடும்பத்தாரிடம் திரும்பிச் சென்று கொழுத்த காளைக் கன்றை (பொறித்துக்) கொண்டு வந்தார். அதை அவர்களுக்கு அருகில் வைத்தார். “நீங்கள் சாப்பிட மாட்டீர்களா?” என்று கேட்டார்.
அல்குர்ஆன் 51:24-27
இப்ராஹீம் நபி அவர்களிடத்தில் கண்ணியமான வானவர்கள், இப்ராஹீம் நபிக்கு அறியாத தோற்றத்தில் வந்த போது, உடனே தன்னுடைய குடும்பத்தாரிடத்தில் சென்று காளைக் கன்றை பொறித்து கொண்டு வந்து விருந்து உபசாரம் செய்தார்கள்.
வீட்டிற்கு வந்தவர்கள் யாராக இருந்தாலும், அது அவர்களுக்குத் தெரியாத தோற்றத்தில் வந்த வானவர்களாகவே இருந்தாலும் விருந்து உபசரித்து அவர்களை வரவேற்று கண்ணியப்படுத்துகின்ற மிகச் சிறந்த நற்குணத்தைக் கொண்டவராய் இப்ராஹீம் நபி அவர்கள் திகழ்ந்துள்ளார்கள்.
அனைத்து கட்டளைகளுக்கும் கட்டுப்பட்ட சாதனையாளர்
இப்ராஹீம் நபி அவர்கள் அறிவிலும், சிந்தனை ஆற்றலிலும் மிகச் சிறந்த மனிதராய் வாழ்ந்து வந்தார்கள். கடவுள் கொள்கை குறித்தும், உண்மையான இறைவன் யார்? என்பது குறித்தும், மனிதர்கள் இறைவனுக்குச் செய்யும் மகத்தான அநீதி குறித்தும் ஆழமாகப் பகுத்தறிந்து மிகச் சரியானதை மட்டும் கடைப்பிடித்து வாழ்ந்து வந்தார்கள்.
இவ்வாறு அனைத்து விஷயங்களிலும், தன்னுடைய வாழ்க்கையில் ஏராளமான காரியங்களிலும் இறைவன் வழங்கி இருக்கின்ற சிந்தனை அறிவின் மூலமாக வாழ்க்கையைக் கழித்த இப்ராஹீம் நபி அவர்கள், இறைவனுக்காகக் கட்டுப்படுதல், கீழ்ப்படிதல் என்று வந்து விட்டால் உடனே இறைவனின் வார்த்தைக்கு உயிரோட்டம் கொடுத்து, இறைவன் கட்டளையிட்ட காரியத்தை முழுமையாக நிறைவேற்றிக் காட்டினார்.
இறைவனுக்கு கட்டுப்பட்டு நடக்கும் விஷயத்தில் இப்ராஹீம் நபி அவர்கள் ஒருபோதும் தன்னுடைய மனோஇச்சைக்கும் – சிந்தனை அறிவிற்கும் ஒருபோதும் இடம் கொடுக்கவில்லை.
தன்னையே மூடனாக்கிக் கொண்டவனைத் தவிர (வேறு) யார் இப்ராஹீமுடைய மார்க்கத்தைப் புறக்கணிக்க முடியும்? அவரை இவ்வுலகில் தேர்ந்தெடுத்தோம். மறுமையிலும் அவர் நல்லோரில் இருப்பார்.
“கட்டுப்படுவீராக!” என அவரிடம் அவரது இறைவன் கூறியபோது, “நான் அகிலங்களின் இறைவனுக்குக் கட்டுப்பட்டேன்” என்று கூறினார்.
அல்குர்ஆன் 2:130,131
இறைவனுக்காக கட்டுப்படுவீராக! என்று இப்ராஹீம் நபியிடத்தில் இறைவன் கூறியபோது, இப்போது தான் கட்டுப்பட வேண்டுமா? கொஞ்சம் தாமதமாக கட்டுப்படலாமா? எவ்வளவு நேரம் கட்டுப்பட வேண்டும்? எப்படி கட்டுப்பட வேண்டும்? உடனே கட்டுப்படுவது சாத்தியமில்லையே! என்பன போன்ற நூற்றுக்கணக்கான எவ்வித குறுக்குக் கேள்விகளும் இன்றி, ஆட்சேபனைகள் எதுவுமின்றி உடனே கட்டுப்பட்டு இறைவனின் நேசத்தைப் பெற்று விட்டார்.
இறைவனுக்கு கட்டுப்பட்டு நடந்ததில் இப்ராஹீம் நபி போன்ற சாதனையாளர் உலக அளவில் வேறு யாருமில்லை என்று சொல்கின்ற அளவிற்கு மகத்தான சாதனையாளராக வாழ்ந்துள்ளார்கள்.
இரக்கமும் – சகிப்புத் தன்மையும் கொண்ட சாதனையாளர்
இப்ராஹீம் நபி அவர்கள் இரக்க குணத்திலும், சகிப்புத் தன்மையிலும் மிகச் சிறந்து விளங்கினார்கள். இப்ராஹீம் நபி அவர்களின் இரக்க குணமும், சகிப்புத் தன்மையும் எந்த அளவிற்கு உச்சத்தில் இருந்தது என்பது குறித்து இறைவன் திருக்குர்ஆனில் அழகிய முறையில் பாடம் நடத்துகின்றான்.
இப்ராஹீம் தமது தந்தைக்காகப் பாவமன்னிப்புக் கோரியது, அவருக்குத் தாம் கொடுத்த வாக்குறுதியின் காரணமாகவே தவிர வேறில்லை. அவர் அல்லாஹ்வின் எதிரி! என்று தமக்குத் தெளிவான பின் அதிலிருந்து விலகிக் கொண்டார். இப்ராஹீம் இரக்கமுடையவர்; சகிப்புத் தன்மைமிக்கவர்.
அல்குர்ஆன் 9:114
இப்ராஹீம் நபி அவர்கள் தன்னுடைய தந்தையின் மீது உச்சபட்ச இரக்கத்தையும், அன்பையும் வெளிப்படுத்தினார்கள். மேலும், தந்தையிடத்தில் கொடுத்த வாக்குறுதியின் காரணமாக தந்தைக்காக தன்னுடைய இறைவனிடத்தில் பாவமன்னிப்பு கோருகின்றார். தம்முடைய தந்தை அல்லாஹ்வின் எதிரி என்று தெளிவாக தெரிந்த பிறகு, தந்தை மீது உச்சபட்ச இரக்கமும், பாசமும் இருந்தாலும், அவற்றை இறைவனுக்காக உடைத்து நொறுக்கி, தூக்கி வீசுகின்றார்கள்.
இப்ராஹீம் நபியின் இரக்க குணத்திற்கு மற்றுமொரு சம்பவத்தை திருக்குர்ஆனில் இறைவன் எடுத்துரைக்கின்றான். லூத் (அலை) அவர்களின் சமூகத்தார் பெரும்பாவத்தைச் செய்து, மானக்கேடான காரியங்களில் ஈடுபட்டு அந்தக் காரியங்களில் இருந்து திருந்துவதற்கும், மீள்வதற்கும் மறுத்து வந்தனர்.
அந்த சமயத்தில் அல்லாஹ், வானவர்களை அனுப்பி லூத் (அலை) அவர்களின் சமூகத்தில் கேடுகெட்ட காரியங்களில் ஈடுபடும் பெரும்பான்மையான மக்களை அழிப்பதற்குக் கட்டளையிட்டான். இந்தச் செய்தி வானவர்கள் மூலமாக இப்ராஹீம் நபி அவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.
லூத் (அலை) அவர்களின் கேடுகெட்ட கூட்டத்தாரை அழிக்கப் புறப்பட்ட வானவர்களிடம், தன்னுடைய சகோதரர் லூத் மற்றும் அவரைப் பின்பற்றியவர்கள் அங்கு தானே உள்ளனர். அத்தகைய நல்லவர்களின் மீதும் அழிவு நிகழ்ந்து விடுமோ என்று அஞ்சியவர்களாய், இப்ராஹீம் நபி அவர்கள் தன்னுடைய அளப்பரிய இரக்க குணத்தை வெளிப்படுத்தி, வானவர்களிடம் தர்க்கம் செய்தார்கள்.
“குற்றவாளிக் கூட்டத்தின்மீது களிமண் கற்களை எறிவதற்காக அனுப்பப்பட்டுள்ளோம். (அது) வரம்பு மீறியோருக்காக உமது இறைவனிடம் அடையாளமிடப்பட்டது” என்று கூறினர்.
அங்கிருந்த இறைநம்பிக்கையாளர்களை வெளியேற்றினோம்.
எனினும், அவ்வூரில் (லூத்துடைய) ஒரு வீட்டைத் தவிர முஸ்லிம்களில் எவரையும் நாம் காணவில்லை.
அல்குர்ஆன் 51:32-36
(அதற்கு இப்ராஹீம்,) “அங்கு லூத் இருக்கிறாரே!” என்று கேட்டார். “அங்கே இருப்பவர்களை நாங்கள் நன்கறிவோம். அவரையும், அவரது குடும்பத்தாரையும் காப்பாற்றுவோம். அவரது மனைவியைத் தவிர. அவள் (வேதனையில்) தங்கிவிடுவோரில் உள்ளவள்” என்று அவர்கள் கூறினர்.
நம் தூதர்கள் லூத்திடம் வந்தபோது, அவர்களைப் பற்றி அவர் கவலைக்குள்ளானார்; மன வேதனையடைந்தார். “நீர் பயப்படவோ, கவலைப்படவோ வேண்டாம். உம்மையும், உமது குடும்பத்தாரையும் காப்பாற்றுவோம், உமது மனைவியைத் தவிர. அவள் (வேதனையில்) தங்கி விடுவோரில் உள்ளவள்” என்று அவர்கள் கூறினர். (அல்குர்ஆன் 29:32-33)
லூத் (அலை) மற்றும் அவர்களை ஏற்றுக் கொண்ட நல்லவர்கள் இறைவனின் மூலமாக காப்பாற்றப்படுவார்கள் என்பதை அறிந்து கொண்ட பிறகே இப்ராஹீம் நபி அவர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டார்கள். அந்த அளவிற்கு இரக்க குணம் கொண்டிருந்தார்கள் மாமனிதர் இப்ராஹீம் நபி அவர்கள்.
இறைவனின் பக்கம் திரும்பும் சாதனையாளர்
இப்ராஹீம் நபி அவர்கள் தன்னுடைய வாழ்க்கையின் அனைத்து தருணங்களிலும் இறைவனின் பக்கம் திரும்பக் கூடியவர்களாகவும், இறை திருப்தியை நாடியவர்களாகவும் திகழ்ந்தார்கள்.
இப்ராஹீம் நபி தன்னுடைய வாழ்வில் எத்துணை பெரிய சோதனைகள், கஷ்டங்கள், சிரமங்களை அனுபவித்தாலும் இறைவன் நிச்சயமாக நமக்கு உதவி செய்வான் என்கிற உறுதியான நம்பிக்கை கொண்டவர்களாய் தன்னுடைய வாழ்க்கையைச் செதுக்கினார்கள்.
இப்ராஹீம் சகிப்புத் தன்மை கொண்டவர்; இரக்கமுடையவர்; (அல்லாஹ்வை நோக்கித்) திரும்பக் கூடியவர்.
அல்குர்ஆன் 11:75
“எங்கள் இறைவனே! உன்மீதே நாங்கள் நம்பிக்கை வைத்துள்ளோம். நாங்கள் உன்னிடமே மீண்டு விட்டோம். உன்னிடமே மீளுதல் உள்ளது” (என்று இப்ராஹீம் கூறினார்.)
அல்குர்ஆன் 60:4
இப்ராஹீம் நபி அவர்கள் இறைவனிடத்தில் கையேந்தும் தருணங்களிலெல்லாம் இறைவா! உன்மீதே நம்பிக்கை வைத்துள்ளோம்! உன் பக்கமே மீண்டு விட்டோம்! உன்னிடமே பொறுப்பை ஒப்படைத்து விட்டோம்! என்கிற ஆழமான நம்பிக்கையின் மூலம் தன்னுடைய வாழ்க்கையை சாதனைப் பக்கங்களால் கழித்துள்ளார்கள்.
அவர்மீது லூத் நம்பிக்கை கொண்டார். (இப்ராஹீம்,) “நான் என் இறைவனை நோக்கி ஹிஜ்ரத் செய்கிறேன். அவன் மிகைத்தவன்; நுண்ணறிவாளன்” என்று கூறினார்.
அல்குர்ஆன் 29:26
ஏகத்துவக் கொள்கையை தன்னுடைய சமுதாய மக்களிடத்தில் பகிரங்கமாக எடுத்துரைத்துக் கொண்டிருந்த வேளையில், தன்னுடைய சமுதாய மக்களில் ஏற்க மறுத்தவர்களின் வெறுப்பும், கடும் வெறியும் கட்டுங்கடங்காமல் தலைவிரித்தாடியது.
அத்தகைய நெருக்கடியான தருணங்களில் கூட இப்ராஹீம் நபி அவர்கள் நான் என்னுடைய இறைவனை நோக்கி ஹிஜ்ரத் செய்கின்றேன் என்று கூறி இறைவனின் பக்கமே மீண்டார்கள்.
வாழ்க்கையின் அனைத்து தருணங்களிலும் இறைவனை நோக்கி மீண்ட மகத்தான பெரியவர் இப்ராஹீம் நபியின் வாழ்க்கையை மிக உறுதியாகப் பற்றிப் பிடிக்கக் கடமைப்பட்டுள்ளோம்.
சமுதாயம் என்று பட்டம் பெற்ற சாதனையாளர்
இப்ராஹீம் நபி அவர்கள் தன்னுடைய சமுதாய மக்களிடத்தில் ஏகத்துவத்தை எடுத்துச் சொன்னதில் தனிமனிதராகத் திகழ்ந்தாலும், இறைவனின் பார்வையில் இப்ராஹீம் தனிமனிதர் அல்லர். இவர் ஒரு சமுதாயம் என்று கூறி புகழின் உச்சத்தில் கொண்டு போய் நிறுத்துகின்றான். இறைவனின் இத்தகைய வார்த்தை இப்ராஹீம் நபியின் உச்சக்கட்ட சாதனையைப் பறைசாற்றுகின்றது.
இப்ராஹீம் ஒரு சமுதாயமாகவும், அல்லாஹ்வுக்குப் பணிபவராகவும், சத்திய நெறியில் நிற்பவராகவும் இருந்தார். அவர் இணைவைப்போரில் ஒருவராக இருக்கவில்லை.
அல்குர்ஆன் 16:120
இப்ராஹீம் நபி குறித்து அல்லாஹ் பேசும் போது, அவர் ஒரு சமுதாயமாக வாழ்ந்தார் என்று அவரின் சாதனை வாழ்க்கையை ஆழமான வார்த்தையில் விளக்குகின்றான்.
உலகத்தில் வாழும் மனிதர்களுக்கு சில சமயங்களில் உச்சக்கட்ட புகழுக்குரிய வார்த்தையைச் சொன்னவுடன் மிகப்பெரிய அளவில் அகம்பாவமும், ஆணவமும் தன்னையும் மீறி, தான் அறியாத வகையில் குடிகொண்டு விடும். குணங்கள் அத்துணையும் கொஞ்சம் கொஞ்சமாய் மாற ஆரம்பிக்கும்.
ஆனால், இப்ராஹீம் நபி அவர்களை இவர் ஒரு சமுதாயம் என்று சொல்லி விட்டு, இப்ராஹீம் இறைவனுக்குப் பணிபவராகவும், சத்திய நெறியில் நிற்பவராகவும் இருந்தார் என்று கூறி இப்ராஹீம் நபியின் பணிவு நிறைந்த வாழ்க்கையை சாதனை வாழ்க்கையாகப் பேசுகின்றான்.
பரிசுத்த வாழ்க்கையை விரும்பிய சாதனையாளர்
தன்னுடைய சமுதாய மக்கள் சிலைகளை வணங்கிக் கொண்டு, ஓரிறைவனை மறுத்து வாழ்ந்து வந்தார்கள். இப்படிப்பட்ட நன்றி கெட்ட வாழ்க்கையை உன்னிப்பாகக் கவனித்த இப்ராஹீம் நபி அவர்கள் தன்னுடைய வாழ்க்கையையும், தன்னுடைய சந்ததிகளின் வாழ்க்கையையும் இறைவனுக்கு இணைவைக்கின்ற மாபாதகச் செயலில் ஈடுபடுவதில் இருந்து இறைவனிடத்தில் பாதுகாப்புத் தேடியவர்களாய் முன்மாதிரியாய் இடம் பிடித்துள்ளார்கள்.
“நீங்கள் யூதர்களாகவோ அல்லது கிறித்தவர்களாகவோ ஆகி விடுங்கள்! நேர்வழி பெறுவீர்கள்” என (வேதமுடையோர்) கூறுகின்றனர். “அவ்வாறல்ல! சத்திய நெறியில் நின்ற இப்ராஹீமின் மார்க்கத்தையே (பின்பற்றுவோம்). அவர் இணைவைப்போருள் ஒருவராக இருக்கவில்லை” என்று கூறுவீராக!
அல்குர்ஆன் 2:135
இப்ராஹீம் சத்திய வழியில் நின்றார், இப்ராஹீமின் மார்க்கத்தையே பின்பற்றுவோம், அவர் ஒருபோதும் இறைவனுக்கு இணை வைத்தவராக இருக்கவில்லை என்று கூறி இப்ராஹீம் நபியின் பரிசுத்த சாதனை வாழ்க்கையை இறைவன் பறைசாற்றுகின்றான்.
“என் இறைவனே! (மக்கா எனும்) இவ்வூரைப் பாதுகாப்பளிப்பதாக ஆக்குவாயாக! என்னையும் என் வழித்தோன்றல்களையும் சிலைகளை வணங்குவதை விட்டும் தூரமாக்குவாயாக!” என இப்ராஹீம் கூறியதை நினைவூட்டுவீராக!
அல்குர்ஆன் 14:35
இறைவனுக்கு அநீதி இழைக்க கூடிய சிலை வணக்கத்திற்கு எதிராகவும், அந்த அநியாயமான காரியங்களில் ஈடுபடுவோருக்கு எதிராகவும் ஆக்கப்பூர்வமாகவும், சிந்தனை ஆற்றலுடனும், தர்க்க ரீதியாகவும் இப்ராஹீம் நபி அவர்கள் தன்னுடைய பிரச்சாரத்தை எடுத்துரைத்தார்.
சிலைவணக்கத்திற்கு எதிராக போர்ப்பிரகடனம் செய்த இப்ராஹீம் நபி அவர்கள், இறைவா! என்னையும், என்னுடைய வழித்தோன்றல்களையும் சிலைகளை வணங்குவதை விட்டும் தூரமாக்கு என்று இறைவனிடத்தில் கையேந்தி தன்னுடைய பரிசுத்த வாழ்க்கையை நிரூபித்துக் காட்டுகின்றார்.
இப்படிப்பட்ட பிரார்த்தனைகளை நம்முடைய வாழ்க்கையில் இறைவனிடத்தில் நாம் கேட்டிருப்போமா? என்று கேள்வி எழுப்பினால், இல்லவே இல்லை என்கிற பதில் தான் அதிகப்படியான இஸ்லாமிய மக்களின் பதிலாக இருக்கும்.
ஆனால், இப்ராஹீம் நபி அவர்கள் இறைவனுக்கு இணைவைத்தல் எனும் மகத்தான அநீதியை நானும், என்னுடைய சந்ததிகளும் ஒருபோதும் செய்து விடக்கூடாது என்று அஞ்சியவர்களாக இறைவனிடத்தில் வேண்டுகின்றார்கள்.
(சாதனைகள் தொடரும்…)
