வஹ்யு அல்லாத செய்திகள் வழிகேடே!

அழகிய முன்மாதிரி இப்ராஹீம் (அலை) என்ற பத்து மாத கால செயல்திட்டத்தில் “இறைச் செய்தியை இறுகப் பிடித்த இப்ராஹீம் நபி” என்ற தலைப்பின் கீழ் ஜனவரி, பிப்ரவரி ஆகிய இரு மாதங்களும் நவீன ஸலஃபுகள் மற்றும் மத்ஹபுவாதிகளின் மார்க்கத்திற்கு முரணான கொள்கைகளை மக்களிடம் அம்பலப்படுத்தும் பணியை தவ்ஹீத் ஜமாஅத் கையில் எடுத்துள்ளது.
(நபியே!) உமது இறைவனிடமிருந்து உமக்கு அறிவிக்கப்படுவதையே பின்பற்றுவீராக! நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் நன்கறிந்தவனாக இருக்கிறான்.
அல்குர் ஆன் 33:2
இது 33வது அத்தியாயமான அல்அஹ்ஸாபில் இடம்பெறும் 2வது வசனமாகும். மறைந்த தற்கால அறிஞர் ஸாலிஹ் அல் உஸைமீன் அவர்கள் இந்த அத்தியாயத்திற்கான விளக்கவுரையில் இந்த வசனத்திற்கு ஒரு விரிவான விளக்கத்தை அளிக்கின்றார்கள். இந்த வசனத்தின் கீழ் பெறப்படும் பயன்பாடுகளைப் பட்டியலிடுகின்ற போது வஹ்யை பின்பற்றுவதன் அவசியத்தைப் பற்றிப் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்கள்

الْفَائِدَةُ السَّادِسَةُ: وجوبُ تَقديم الوحي على الرأي في قوله عَزَّ وَجَلَّ: {وَاتَّبِعْ مَا يُوحَى إِلَيْكَ} فإن هذا الخِطابَ مُوجَّهٌ إلى رسول اللَّه -صلى اللَّه عليه وسلم- وإلى أمَّتِه بالأَوْلى، فيُفيدُ وجوبَ تَقديم الوحي على الرأي.
وتقديمُ الرأي على الوَحي لَهُ أقسام: منها ما يَصِل إلى الكُفْر، ومنها ما هو دون ذلك، فالذين يُقدِّمون الرأيَ على الوَحْي مع عِلْمهم بالوَحي مُعتَقِدين أن غير الوحي مُساوٍ له أو أَكمَلُ منه، أو أنَّه يَجوز الحُكْم بالرَّأْي المُخالِف للوَحي مع العِلْم به، هؤلاء يُعتَبرون كُفَّارًا.

“உமது இறைவனிடமிருந்து உமக்கு அறிவிக்கப்படுவதையே பின்பற்றுவீராக!” என்ற வசனத்தின் உரையாடல் நபி (ஸல்) அவர்களை நோக்கி இடப்படுகின்ற கட்டளை என்றாலும் சமுதாயத்திற்கும் அந்தக் கட்டளை முதன்மை இடத்தைப் பிடித்து விடுகின்றது. சமுதாயத்திற்கு இந்த கட்டளையின் அவசியத்தைப் பற்றிச் சொல்ல வேண்டியதே இல்லை. இந்தக் கட்டளையின் படி அறிஞர்களின் கருத்துக்கு முன்னுரிமை அளிப்பதை விட இறைச்செய்திக்கு முன்னுரிமை அளிப்பது கடமையாகும்.
இறைச்செய்திக்கு முன்னுரிமை அளிக்கும் விஷயத்தில் பல்வேறு விதமான கூறுகள் அடங்கியிருக்கின்றன. அவற்றில் சில கூறுகள் இறைமறுப்பில் கொண்டு போய் சேர்ப்பவையும் உள்ளன. சில கூறுகள் இறைமறுப்பை விட குறைந்தவையாகவும் உள்ளன.
வஹ்யு அல்லாத செய்தி (உதாரணமாக ஸஹாபாக்கள், இமாம்களின் கருத்துகள்) வஹ்யுக்கு சமமானது அல்லது அதை விட முழுமையானது என்றோ அல்லது அவர்களின் கருத்துகள் வஹ்யுக்கு முரணானது என்று தெரிந்த பின்னரும் அவற்றைக் கொண்டு தீர்ப்பளிப்பது கூடும் என்று நம்பியவர்களாக, தெரிந்தே வஹ்யு அல்லாத கருத்துகளை முற்படுத்துபவர்கள் இறைமறுப்பாளர் (காஃபிர்)என்றே கருதப்படுவார்கள்.
ஷைக் ஸாலிஹ் அல் உஸைமீன் அவர்கள் மேற்கண்ட வசனத்தின் கீழ் வஹ்யை பின்பற்றுவதின் கட்டாயத்தைப் பற்றி இவ்வாறு எடுத்துரைக்கின்றார்கள். அத்துடன் மட்டும் அவர்கள் நிறுத்தவில்லை.
ராபிளியாக்கள் எனப்படுவோர், தங்கள் இமாமான அலீ (ரலி) அவர்களிடம் தவறான கருத்தே ஏற்படாது; அவ்வாறு தவறான கருத்து ஏற்படுவதை விட்டும் அலீ (ரலி) பாதுகாக்கப்பட்டவர்கள் என்று நம்புகின்றார்கள். இப்படி நம்புபவர்கள் பயங்கரமான வழிகேடர் ஆவர். தவறிலிருந்து பாதுகாக்கப்பட்டவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தவிர வேறு யாரும் கிடையாது.
“அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குக் கோடு போட்ட பட்டு அங்கி ஒன்று அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அவர்கள் அதை எனக்குக் கொடுத்தனுப்பினார்கள். அதை நான் அணிந்து கொண்டேன். (அதைக் கண்டபோது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது முகத்தில் நான் கோபத்தைக் கண்டேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இதை நீங்கள் அணிந்து கொள்வதற்காக உங்களுக்கு நான் கொடுத்தனுப்பவில்லை. (மாறாக,) இதை முக்காடுகளாக வெட்டி (உங்கள் வீட்டுப்) பெண் களிடையே பங்கிடுவதற்காகவே உங்களுக்கு நான் கொடுத்தனுப்பினேன்” என்று கூறினார்கள்.
அறிவிப்பர்: அலீ (ரலி)
நூல்: புகாரி 2614, முஸ்லிம் 4208
இந்த ஹதீஸை மேற்கோள் காட்டி, அலீ (ரலி) அவர்கள் தவறிலிருந்து பாதுகாக்கப்பட்டவர்கள் என்ற கண்ணோட்டத்தை இது தகர்த்தெறிகின்றது என்று ஷைக் உஸைமீன் தெரிவிக்கின்றார்கள்.
கணவனை இழந்த பெண்களின் இத்தா காத்திருப்பு காலம் 4 மாதம் 10 நாட்கள். அதே சமயம், கணவனை இழந்த பெண் கர்ப்பிணியாக இருந்தால் அவருக்குப் பிரசவமாகும் வரை காத்திருப்புக் காலமாகும். ஆனால் அலீ (ரலி) அவர்கள் இந்த இரண்டில் எது அதிகப்பட்சமோ அதைத்தான் எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற கருத்தில் இருக்கிறார்கள். உதாரணத்திற்கு கணவன் இறந்து ஒரு மாதத்தில் குழந்தை பிறந்தது என்றால், ஒரு மாதத்தில் இத்தாவை முடித்துக் கொள்ளக் கூடாது. 4 மாதம் 10 நாட்கள் என்ற அதிகப்பட்ச தவணையைத்தான் எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற கருத்தில் அலீ (ரலி) இருக்கின்றார்கள்.
ஆனால் கணவனை இழந்த சுபைஆ (ரலி) அவர்கள் குழந்தை பிறந்து விட்டதால் 4 மாதம் 10 நாட்களுக்கு முன்பே மணம் முடித்துக் கொள்கின்றார்கள். (பார்க்க: புகாரி 5318)
எனவே இந்த விஷயத்தில் அலீ (ரலி) அவர்களின் கருத்து, ஆதாரப்பூர்வமான குர்ஆன், ஹதீஸுக்கு நேர் மாற்றமான கருத்தாகும் என்று கூறி ராபிளிய்யாக்கள் அலீ (ரலி) மீது கொண்டிருக்கும் தனிநபர் பக்தியை ஷைக் உஸைமீன் அவர்கள் உடைத்தெறிகின்றார்கள்.
இன்றைக்கு நவீன ஸலஃப் பேர்வழிகள், மத்ஹபுவாதிகளைப் போன்று வஹ்யு தான் தங்கள் கொள்கை என்று வாயளவில் சொல்கின்றார்கள். ஆனால் நடைமுறையில் ஸஹாபாக்களின் கருத்துகளை மார்க்கத்தின் மூன்றாவது அடித்தளமாகக் கொண்டு வந்து முன்னிறுத்தி, ஸஹாபாக்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குச் சமமாக ஆக்கி விடுகின்றார்கள். மத்ஹபுவாதிகள் தங்கள் இமாம்களை மூன்றாவது ஆதாரமாகக் கொண்டு வந்து நிறுத்துகின்றார்கள்.
குர்ஆன், ஹதீஸ் என்ற இரண்டு ஆதாரங்களைத் தாண்டி மூன்றாவதாக எதைக் கொண்டு வந்து நிறுத்தினாலும் அது தனிநபர் வழிபாடும் வழிகேடும் ஆகும் என்று அழுத்தம் திருத்தமாக இவர்களுக்கு எடுத்துச் சொல்லிக் கொள்கின்றோம்.