பள்ளிவாசல்களில் அமர்ந்து உலக விஷயங்களை பேசக்கூடாது என்பதை வலியுறுத்தும் விதமாக பள்ளியில் பேசினால் நாற்பது ஆண்டு கால நன்மைகள் அல்லது தொழுகைகள் அழிந்து விடும் என நபிகள் நாயகம் கூறினார்கள் என்பதாக ஒரு செய்தியை பல பள்ளிவாசல்களில் எழுதி வைத்திருக்கின்றார்கள். அதிகமான மக்களும் இதை நபிகள் நாயகம் கூறினார்கள் என்பதாகவே இன்றளவும் நம்பியுள்ளனர். உண்மையில் இவ்வாறு ஹதீஸ் உள்ளதா? இதன் தரம் என்ன? என்பதை அறிந்து கொள்வோம்.
الحديث في المسجد يأكل الحسنات كما تأكل البهائم الحشيش
கால்நடைகள் புற்பூண்டுகளை திண்பதை போன்று பள்ளிவாசல்களில் பேசுவது நன்மைகளை தின்றுவிடும்.
الحديث في المسجد يأكل الحسنات كما تأكل النار الحطب.
நெருப்பு விறகை எரித்துவிடுவதை போன்று பள்ளியில் பேசுவது நன்மைகளை (எரித்து) உண்டு விடும்.
இமாம் கஸ்ஸாலி அவர்கள் இந்த செய்தியை நபிகள் நாயகம் கூறியது போல தனது இஹ்யாவு உலூமீத்தீன் என்ற நூலில் கூறியுள்ளார்கள். (பாகம் 1 பக்கம் 152)
இதன் மூலமாக மக்களுக்கு மத்தியில் இது ஒரு நபிமொழியாக பரவியுள்ளது என்பதை உணர முடிகிறது.
ஆனால் இதை நபிகள் நாயகம் கூறினார்கள் என்பதற்கு எந்த அடிப்படையும் அறவே கிடையாது. இது அறிவிப்பாளர் தொடர் இல்லாத அடிப்படை ஆதாரமற்ற செய்தியாகும். பல அறிஞர்கள் இது அடிப்படையில்லாத செய்தி என்பதை தெளிவுபடுத்தியுள்ளார்கள்.
تخريج أحاديث الإحياء – (1 / 107(
حديث ” الحديث في المسجد يأكل الحسنات كما تأكل البهيمة الحشيش ” لم أقف له على أصل
ஹாபிழ் இராக்கி எனும் அறிஞர் இஹ்யாவை ஆய்வு செய்து இந்த செய்தியை குறிப்பிடும் போது இந்த செய்திக்கு எந்த அடிப்படையையும் நான் அறியவில்லை என்று குறிப்பிடுகிறார். (தக்ரீஜூ அஹாதீஸூல் இஹ்யா பாகம்1 பக்கம் 107)
தாஜூத்தீன் அஸ்ஸூப்கி எனும் அறிஞர் இது அறிவிப்பாளர் தொடர் எதுவுமில்லாத ஆதாரமற்ற செய்தி என்று குறிப்பிட்டுள்ளார்.
தப்காதுஷ் ஷாபிஇய்யா பாகம் 6 பக்கம் 294
இமாம் அல்பானீ அவர்களும் ஸில்ஸிலதுல் அஹாதீஸூல் லயீஃபா எனும் நூலில் பாகம் 1 பக்கம் 136 இதை நபிகள் நாயகம் கூறினார்கள் என்பதற்கு எந்த அடிப்படை சான்றும் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
முல்லா அலீ காரி அவர்கள் நபிகளாரின் பெயரால் இட்டுக்கட்டப்பட்ட செய்திகளை அடையாளம் காட்டும் தமது அல் மஸ்னூ எனும் நூலில் பக்92ல் இந்த செய்திக்கும் நபிகள் நாயகத்துக்கும் சம்பந்தமில்லை என்பதை தெளிவுபடுத்தியுள்ளார்.
இவ்வாறு பல அறிஞர்கள் இது இட்டுக்கட்டப்பட்ட செய்தி என்பதை மக்களுக்கு அவ்வப்போது தெளிவுபடுத்தியுள்ளார்கள்.
எனவே இது நபிகளாரின் பெயரால் இட்டுக்கட்டப்பட்ட அடிப்படை ஆதாரமற்ற செய்தி என்பதை அறியலாம்.
மேலும் இதற்கு மாற்றமாக நபிகள் நாயகம் அவர்கள் பள்ளிவாசல்களில் இதர பேச்சுக்களை பேச அனுமதித்திருக்கிறார்கள் என்பதற்கு ஆதாரப்பூர்வமான நபிமொழிகள் இருக்கிறது.
நான் ஜாபிர் பின் சமுரா (ரலி) அவர்களிடம், “நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் அவையில் அமர்ந்திருக்கிறீர்களா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள் “ஆம், அதிகமாக (அமர்ந்திருக்கிறேன்). அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சூரியன் உதயமாகாத வரை (சுப்ஹுத் தொழுத இடத்திலிருந்து) எழமாட்டார்கள். சூரியன் உதயமான பின் (அங்கிருந்து) எழுவார்கள். அப்போது மக்கள் அறியாமைக் காலம் குறித்துப் பேசிச் சிரித்துக் கொண்டிருப்பார்கள். (இதைக் கேட்டு) அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் புன்னகைத்துக் கொண்டிருப்பார்கள்.
அறிவிப்பவர் ஸிமாக் பின் ஹர்ப்
நூல் : முஸ்லிம் 1188
எனவே பள்ளிவாசல்களில் பயனுள்ள தீமையற்ற பேச்சுக்களை பேசுவதில் தவறில்லை என்று இதன் மூலம் அறிந்து கொள்ளலாம். எனினும் வரம்பு மீறிய மற்றும் வெட்டிப் பேச்சுக்களை பேசுவதற்கு இது ஆதாரமாகாது.
அஸ்ருக்கு பின் உறங்கலாமா?
مَنْ نَامَ بَعْدَ الْعَصْرِ فَاخْتُلِسَ عَقْلُهُ فَلَا يَلُومَنَّ إِلَّا نَفْسَهُ
எவர் அஸருக்குப் பின் உறங்கி அவரது அறிவு கெட்டுவிட்டதோ அவர் தன்னையே பழித்துக் கொள்ளட்டும் என நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் ஆயிஷா ரலி
நூல் : முஸ்னது அபீயஃலா 4918, மஜ்மவுஸ் ஜவாயித் பாகம் 2 பக்கம் 229
அஸ்ருக்குப் பின் ஒருவர் உறங்கினால் அவரது அறிவு பாழாகி விடும் என இந்த செய்தி தெரிவிக்கின்றது.
இது சுன்னத் ஜமாஅத் மத்ரஸா மாணவர்களுக்கு மத்தியில் பிரபலமானதாகும். ஆசிரியர்கள் இதை சொல்லித்தான் அஸருக்குப் பின் உறங்கும் மாணவர்களை பயமுறுத்துவார்கள். இந்த செய்தியை நபிகளார் சொல்லியுள்ளார்களா?
இது நபிகளாரின் பெயரால் இட்டுக்கட்டப்பட்ட செய்தியாகும். இதை மவ்லூஆத் (இட்டுக்கட்டப்பட்டவைகள்) என்ற தனது நூலில் (பாகம் 3 பக்கம்69ல்) இமாம் இப்னுல் ஜவ்சீ அவர்கள் பதிவு செய்து விட்டு இது சரியான செய்தி அல்ல. இதில் இடம் பெறும் காலித் என்பவர் பொய்யர் ஆவார் என குறிப்பிடுகிறார்கள். இது இட்டுக்கட்டப்பட்ட செய்தி என்பதை இமாம் தஹபீ அவர்களும் தெளிவுபடுத்தியுள்ளார்கள்.
இப்னுல் ஜவ்சீ அவர்கள் குறிப்பிட்டதை போன்று ஆயிஷா அவர்களின் அறிவிப்பில் காலித் பின் காசிம் என்பவர் இடம் பெறுகிறார். இவர் பெரும் பொய்யர் ஆவார்.
இவர் மக்தூவான செய்தியை மவ்ஸூலாகவும் முர்ஸலான செய்தியை மர்ஃபூவாக மவ்கூஃபான செய்தியை அறிவிப்பாளர் தொடர் உள்ளதை போன்று அறிவிப்பவர் என்று இப்னு ஹிப்பான் குறிப்பிடுகிறார்.
அல்மஜ்ருஹீன் பாகம் 1 பக்கம் 283
ஆயிஷா அவர்களின் மற்றொரு அறிவிப்பான முஸ்னது அபீயஃலாவில் மேற்கண்ட பொய்யரான அறிவிப்பாளர் இல்லை என்றாலும் அம்ர் பின் ஹூசைன் என்பார் இடம் பெறுகிறார்.
இவர் ஹதீஸ் துறையில் மதிப்பில்லாதவர் என்று இமாம் அபூஹாதம் மற்றும் ஹதீஸ் துறையில் மிக மோசமானவர் என்று இமாம் அபூஸூர்ஆ முற்றிலும் பலவீனமானவர் என இமாம் அஸ்தீ ஹதீஸ் துறையில் புறக்கணிக்கப்பட்டவர் என்று இமாம் இப்னு அதீ மற்றும் தாரகுத்னீ ஆகியோர் விமர்சித்துள்ளனர்.
(பார்க்க அல்லுஆஃபா வல் மத்ருகீன் பாகம் 2 பக்கம் 224)
ஆயிஷா ரலி அவர்களின் இரண்டு அறிவிப்புகளும் ஏற்றுக்கொள்ளத்தகாதவை என்பது இதன் மூலம் உறுதியாகிறது.
அனஸ் ரலி அவர்களின் அறிவிப்பு
இதே செய்தியை நபிகள் நாயகம் கூறியதாக அனஸ் ரலி அவர்கள் அறிவிக்கும் ஒரு அறிவிப்பு இப்னு அதீ என்பவருக்குரிய அல்காமில் (பாகம் 4 பக்கம் 146) எனும் நூலிலும் பிற நூல்களிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனினும் இதன் அறிவிப்பாளர் தொடரில் இப்னு லஹீஆ இடம் பெறுகிறார். இவர் பலவீனமானவர் என்று பல அறிஞர்கள் விமர்சித்துள்ளார்கள்
(பார்க்க மீஸானுல் இஃதிதால் பாகம் 2 பக்கம் 475)
தஹாவீ அவர்கள் தனது முஷ்கிலுல் ஆஸார் எனும் நூலில் நபிகள் நாயகம் கூறியதாக இப்னு ஷிஹாபின் கூற்றாக பதிவு செய்து விட்டு இது தொடர்பு அறுந்த செய்தி என்று அவரே குறிப்பிடுகிறார். ஏனெனில் இப்னு ஷிஹாப் நபித்தோழரல்ல.
எனவே இது தொடர்பாக உள்ள எந்த செய்தியும் ஆதாரப்பூர்வமான செய்தியாக இல்லை. சில இட்டுக்கட்டப்பட்டவையாகவும் மறு சில மிகவும் பலவீனமான செய்தியாகவும் உள்ளன என்பதை அறிந்து கொள்ளலாம்.
விவாகரத்து செய்வதால் அல்லாஹ்வின் அர்ஷ் நடுங்குகிறதா?
أخبار أصبهان – (2 / 289(
عن علي ، قال : قال رسول الله صلى الله عليه وسلم : « تزوجوا ولا تطلقوا ، فإن الطلاق يهتز له العرش
திருமணம் செய்யுங்கள் ஆனால் விவாகரத்து செய்யாதீர்கள். விவாகரத்து செய்வதால் அல்லாஹ்வின் அர்ஷ் நடுங்குகிறது என நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் அலி ரலி,
நூல் : அக்பாரு உஸ்பஹான் 540, தாரீகு பக்தாத் 6654
இந்த செய்தி ஆதாரப்பூர்வமானது அல்ல. இதன் அறிவிப்பாளர் தொடரில் இடம் பெறும் ஜூவைபிர் என்பவர் மிகவும் பலவீனமானவர் ஆவார். இவரை ஹதிஸ் துறை இமாம்களான யஹ்யா பின் ஸயீத் இமாம் அஹ்மத் இப்னு மயீன் நஸாயீ தாரகுத்னீ ஆகியோர் முறையே பலவீனமானவர் இவரது ஹதீஸில் கவனம் செலுத்தப்படாது ஹதிஸ் துறையில் மதிப்பில்லாதவர் ஹதீஸ் துறையில் புறக்கணிக்கப்பட்டவர் என்று விமர்சித்துள்ளார்கள்
நூல் : அல்லுஆபாஉ வல் மத்ருகீன் பாகம் 1 பக்கம் 177
மேலும் இதன் அறிவிப்பாளர் தொடரில் இடம் பெறும் மற்றொரு அறிவிப்பாளரான அம்ர் பின் ஜூமைஃ என்பவர் பெரும் பொய்யர் ஆவார்.
யஹ்யா பின் மயீன் அவர் இவரை மிகவும் கெட்ட பொய்யன் நம்பப்பட மாட்டான் என்றும் நஸாயி மற்றும் தாரகுத்னீ ஆகியோர் ஹதீஸ் துறையில் புறக்கணிக்கப்பட்டவர் என்றும் இப்னு ஹிப்பான் நம்பகமானவர்களின் பெயரால் இட்டுக்கட்டப்பட்ட செய்தியையும் பிரபல்யமானவர்களின் பெயரால் மறுக்கப்பட வேண்டிய செய்திகளையும் அறிவிப்பவர் என்று விமர்சித்துள்ளார்கள்.
நூல் : அல்லுஆஃபாஉ வல் மத்ருகீன் பாகம் 2 பக்கம் 224
ஆகவே தான் இதை இட்டுக்கட்டப்பட்ட செய்தி என்ற பட்டியலில் அறிஞர் ஸகானீ அவர்கள் சேர்த்துள்ளார்கள்.
மேலும் கணவன் மனைவி இருவரும் இணைந்து வாழ முடியாது என்ற சூழ்நிலையில் விவாகரத்து செய்வதை இறைவன் ஆகுமாக்கி உள்ளான். இறைவன் எதை ஆகுமாக்கி உள்ளானோ அதை செய்வதால் அர்ஷ் நடுங்குகிறது என்பது ஏற்றுக் கொள்ள இயலாத ஒன்றாகும்.
விவாகரத்து செய்வதால் அல்லாஹ்வின் அர்ஷ் நடுங்குகிறது என்ற இந்த செய்தி ஆதாரப்பூர்வமான செய்தி அல்ல என்பது தெளிவாகிறது.
மனோ இச்சையுடன் போர்புரிவதே சிறந்த ஜிஹாத்?
الزهد الكبير للبيهقي – (1 / 388(
عن جابر رضي الله عنه قال : قدم على رسول الله صلى الله عليه وسلم قوم غزاة ، فقال صلى الله عليه وسلم « قدمتم خير مقدم من الجهاد الأصغر إلى الجهاد الأكبر . قالوا : وما الجهاد الأكبر ؟ قال : مجاهدة العبد هواه » . هذا إسناد ضعيف
ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (போரிலிருந்து திரும்பிய) போர்வீரர்கள் குழு வந்தனர். அப்போது நபியவர்கள் நீங்கள் சிறிய ஜிஹாதிலிருந்து பெரிய ஜிஹாதின் பக்கம் வருகை அளித்துள்ளீர்கள் என்று கூறினார்கள். அதற்கு அவர்கள் பெரிய ஜிஹாத் என்றால் எது? என்று கேட்க ஒரு அடியான் தனது மனோ இச்சையுடன் போர்புரிவதே (பெரிய ஜிஹாத்) ஆகும் என்று பதிலளித்தார்கள்.
நூல் : இமாம் பைஹகீ அவர்களின் ஸூஹ்துல் கபீர் பாகம் 1 பக்கம் 388
சுன்னத் வல் ஜமாஅத் இமாம்கள் மக்களுக்கு மத்தியில் பரவலாக சொல்லக் கூடிய செய்திகளில் இதுவும் ஒன்று. உள்ளத்துடன் போர் புரிவது தான் மிகச் சிறந்த பெரிய ஜிஹாத் என்று இந்த செய்தியை கூறுவார்கள். தப்லீக் ஜமாஅத்தவர்கள் குறிப்பாக சூஃபியாக்கள் இதை குத்தகைக்கு எடுத்துக் கொண்டு மக்களுக்கு மத்தியில் சொல்கின்றனர். இது ஆதாரப்பூர்வமான செய்தியா?
இது பைஹகீ அவர்களின் ஸூஹ்துல் கபீர் மற்றும் தாரீகு பக்தாத் எனும் நூலிலும் 7345 ஆவது செய்தியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. எனினும் இது ஆதாரப்பூர்வமான செய்தி அல்ல. இதை பதிவு செய்த இமாம் பைஹகீ அவர்களே அதன் இறுதியில் இது பலவீனமான அறிவிப்பாளர் தொடரைக் கொண்ட செய்தி என்று விமர்சித்துள்ளார்.
இதன் அறிவிப்பாளர் வரிசையில் இடம் பெற்றிருக்கும் லைசு பின் அபீ சுலைம் ஹதீஸ் கலை அறிஞர்களால் பலவீனமானவர் என்று விமர்சிக்கப்பட்டுள்ளார்கள்.
இவரது ஹதீஸ்கள் பலவீனமானதாகும். இவர் உறுதியானவர் அல்ல என்று அபூஇஸ்ஹாக் அல்ஜவ்ஸஜானீ அவர்கள் விமர்சித்துள்ளார்கள். (நூல் அஹ்வாலுர் ரிஜால் 1 91)
இமாம் அபூஹாதம் மற்றும் அபூஸூர்ஆ ஆகியோர் இவரை பலவீனமானவர் என்று குறிப்பிட்டுள்ளார்கள்.
இமாம் இப்னு ஹஜர் அவர்கள் இது மக்களிடத்தில் நபிகள் நாயகம் ஸல் அவர்களின் சொல்லாக பிரபலம் அடைந்துள்ளது. ஆனால் இது நபிகளாரின் சொல் அல்ல. மாறாக தாபீயீ இப்றாஹீம் பின் அய்லா என்பவரது சொல்லாகும் என்று தனது தஸ்தீதுல் கவ்ஸ் எனும் நூலில் குறிப்பிட்டுள்ளதாக இஸ்மாயீல் பின் முஹம்மத் எனும் அறிஞர் குறிப்பிடுகிறார்.
நூல் : கஷ்புல் கஃபாஃ பாகம் 1 பக்கம் 424
மேலும் இமாம் இப்னு தைமிய்யா அவர்களும் இது அடிப்படை ஆதாரமற்ற செய்தி என்று தெளிவுபடுத்தியுள்ளார்கள்.
ஒரு தாபியியின் சொல்லை நபிகளாரின் சொல்லாக மக்களுக்கு மத்தியில் பரப்பியுள்ளனர். இது ஆதாரமற்ற செய்தி என்பது தெளிவாகி விட்டது.
ஜூம்ஆ ஏழைகளின் ஹஜ்?
ஜூம்ஆவை நபிகள் நாயகம் காட்டித்தராத பல அனாச்சாரங்களுடன் நிறைவேற்றி வரும் சுன்னத் ஜமாஅத்தை சார்ந்தவர்கள் ஜூம்ஆ உரையின் போது பின்வருமாறு கூறுவார்கள்.
عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الجمعة حج الفقراء وعيد المساكين
அன் அபீ ஹூரைரத ரலியல்லாஹூ அன்ஹூ அன்னஹூ கால கால ரசூலுல்லாஹி அலைஹி வஸல்லம் அல்ஜூம்அது ஹஜ்ஜூல் ஃபுகராஃ வ ஈதுல் மஸாகீன்.
இதன் பொருள் அபூஹூரைரா ரலி அவர்கள் அறிவிக்கின்றார்கள் நபிகள் நாயகம் கூறினார்கள் ஜூம்ஆ ஏழைகளின் ஹஜ்ஜாகும். மிஸ்கீன்களின் பெருநாளாகும்.
இது புகாரி? யில் இருப்பதாகவும் அரபியில் பிதற்றுவார்கள். புகாரி முஸ்லிம் போன்ற ஹதீஸ் நூற்கள் தமிழில் வராத காலத்தில் இப்படி ஒரு செய்தி புகாரியில் இருப்பதாகவே மக்களும் நம்பி வந்தனர். ஆனால் உண்மையில் இது நபிகள் நாயகத்தின் பெயரால் இட்டுக்கட்டப்பட்ட செய்தியாகும். இவர்கள் கூறுவதை போன்ற ஒரு செய்தி புகாரியிலோ ஏனைய ஹதீஸ் நூற்களிலோ அறவே கிடையாது.
ஜூம்ஆ ஏழைகளின் ஹஜ்ஜாகும் என்று ஒரு ஹதீஸ் உள்ளது. அது மிகவும் பலவீனமான செய்தியாகும்.
مسند الشهاب القضاعي – (1 / 128)
عن الضحاك ، عن ابن عباس ، قال : قال رسول الله صلى الله عليه وسلم : « الجمعة حج الفقراء »
ஜூம்ஆ ஏழைகளின் ஹஜ்ஜாகும் என்று நபிகள் நாயகம் கூறினார்கள்.
அறிவிப்பவர் அனஸ் ( ரலி), நூல் முஸ்னது ஷிஹாப் பாகம் 1 பக்கம் 128
இந்த செய்தி அக்பாரு உஸ்பஹான் போன்ற இன்னும் சில நூற்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் அனைத்து அறிவிப்புகளிலும் ஈஸா பின் இப்றாஹீம் அல் ஹாஷிமி என்பவர் இடம் பெறுகிறார். இவர் ஹதீஸ் துறையில் மறுக்கப்பட வேண்டியவர் என்று இமாம் புகாரி மற்றும் நஸாயீ ஹதீஸ் துறையில் மதிப்பில்லாதவர் என்று இப்னு மயீன் ஹதீஸ் துறையில் புறக்கணிக்கப்பட வேண்டியவர் என இமாம் ராஸி ஆகியோர் விமர்சனம் செய்துள்ளனர்.
அல்லுஆஃபாஉ வல் மத்ருகீன் பாகம் 2 பக்கம் 238
மேலும் இதே செய்தி இதில் இடம் பெறும் ளஹ்ஹாக் பின் முஸாஹிம் என்பவருடயை கூற்றாக அக்பாரு மக்கா எனும் நூலில் (பாகம் 1 பக்கம் 378ல்) இடம் பெற்றுள்ளது.
أخبار مكة للفاكهي – (1 / 378(
عَنِ الضَّحَّاكِ بْنِ مُزَاحِمٍ قَالَ: ” الْجُمُعَةُ حَجُّ الْمَسَاكِينِ
இந்த துண்டு செய்தி கூட ளஹ்ஹாக் அவர்களின் கூற்றாக உள்ளதே தவிர நபிகள் நாயகம் கூறினார்கள் என்று என்று நம்பகமானவரும் கூறவில்லை. உண்மை நிலை இவ்வாறிருக்க மக்கள் அனைவரும் திரளாக ஒன்று கூடியிருக்கும் ஜூம்ஆவுடைய தினத்தில் புகாரியில் உள்ளதாக புழுகிறார்கள் எனில் இது எத்தகைய கடைந்தெடுத்த அயோக்கியத்தனம் என்பதை சிந்தியுங்கள்.