இஸ்லாமியக் கொள்கையை ஏற்று வாழக்கூடிய அதிகமானவர்களின் நிலை இஸ்லாத்தின் கடமைகளைப் பின்பற்றுவதில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கிறது. அதிலும் குறிப்பாக மற்ற கடமைகளை விட தொழுகையில் மிக அலட்சியமாக இருப்பதை நாம் பார்த்து வருகிறோம்
நம்மைப் படைத்த இறைவன் தொழுகையை நிலைநாட்டுங்கள் என்று குர்ஆனின் பல்வேறு இடங்களில் வலியுறுத்துவதன் மூலம் தொழுகை எனும் கடமை எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை நம்மால் விளங்க முடிகிறது. இவ்வளவு இடங்களில் வலியுறுத்திச் சொல்லப்பட்டாலும் நாம் தொழுகையை நிலைநாட்டுவதில்லை.
தொழுகைக்கான பலன் இந்த உலகத்திலும் இருக்கிறது, மறுமையிலும் இருக்கிறது. பலரும் இதை முழுமையாக விளங்காமல் அலட்சியமாகக் கருதிவிட்டுச் செல்கிறார்கள்.
தொழுவதால் உலகத்தில் கிடைக்கும் பலன்
இஸ்லாத்தின் கடமைகளில் முதல் இடத்தை வகிக்கக்கூடிய தொழுகை என்பது இந்த உலகத்திலேயே நமக்கு பலனை பெற்றுத் தருகிறது.
(நபியே!) உமக்கு அறிவிக்கப்பட்ட இவ்வேதத்தை எடுத்துரைப்பீராக! தொழுகையை நிலைநிறுத்துவீராக! தொழுகை, மானக்கேடானவற்றையும், தீமைகளையும் தடுக்கின்றது. அல்லாஹ்வை நினைவுகூர்வது மிகப் பெரியதாகும். நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் அறிகிறான்.
(அல்குர்ஆன் 29:45)
மேற்குறிப்பிடப்பட்ட இறை வசனத்தில் இறைவன் சொல்லும் வாசகத்தை நன்றாகக் கவனித்துப் பாருங்கள்.
பொதுவாக மனிதன் படித்தவனோ பாமரனோ யாராயினும் அவர் ஒரு கண்ணியமான மனிதராக வாழவேண்டும் என்று நினைப்போம். இன்னும் ஒழுக்கமுள்ளவராக வாழ்வதே அடிப்படையானது. அப்போது தான் இந்த உலக வாழ்க்கையில் ஏனைய மக்கள் மதிக்கும் வண்ணம் வாழ முடியும்.
உலக வாழ்க்கையை சற்று உற்று நோக்கிப் பார்க்கையில் தற்போது தவறுகள் அதிகரித்துள்ளதை உணர முடியும்.
இஸ்லாமிய இளைஞர்களும், இளம்பெண்களும் இன்று அருவருக்கத்தக்க காரியங்களைச் செய்வதன் மூலம் சமுதாயத்தில் அவர்களின் கண்ணியம் காலில் போட்டு மிதிக்கப்படுகின்றது.
ஏனெனில் இளம் வயதில் இருக்கும் இஸ்லாமியர்கள் தங்களுடைய வாழ்கையில் தொழுகை என்ற கடமையை கடைப்பிடிக்காததின் காரணமாகவே இந்நிலையில் உள்ளார்கள்.
இதுவே அந்த இளம் வயதில் உள்ளவர்கள் தொழுகை என்னும் கடமையே நிறைவேற்றினால் இந்நிலை ஏற்படுமா? ஒருபோதும் ஏற்படாது. ஏனென்றால், ஒவ்வொரு நாளும் ஐவேளை அல்லாஹ்வை நினைவுகூரும் போது இறையச்ச நினைவு அவர்களைப் பாவத்திலிருந்து காக்கும் கேடயமாக மாறும்.
தொழுவதால் மறுமையில் கிடைக்கும் பயன்:
தொழுகையினால் இவ்வுலகில் கிடைக்கும் பலன்கள் ஒருபுறமிருக்க மறுமையில் கிடைக்கும் பலன்களை நம்மால் கற்பனை கூட செய்து பார்க்க முடியாத அளவு நன்மைகளை இறைவன் நமக்காக வைத்திருக்கின்றான். அதை இக்கட்டுரையில் சுருக்க இயலாது. எனவே, உதாரணமாக சில விஷயங்களை மட்டும் உங்களுக்கு முன் வைக்கின்றோம்.
தொழுகையை நிலைநிறுத்துங்கள்! ஸகாத்தையும் கொடுங்கள்! நன்மையில் உங்களுக்காக எதை நீங்கள் முற்படுத்துகிறீர்களோ அதை அல்லாஹ்விடம் பெற்றுக் கொள்வீர்கள். நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் பார்ப்பவன்.
(அல்குர்ஆன் 2:110)
இறைநம்பிக்கை கொண்டோரே! பொறுமையைக் கொண்டும், தொழுகையைக் கொண்டும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள். பொறுமையாளர்களுடன் அல்லாஹ் இருக்கிறான்.
(அல்குர்ஆன் 2:153)
இறைநம்பிக்கை கொண்டு, நற்செயல்கள் செய்து, தொழுகையை நிலைநிறுத்தி, ஸகாத்தையும் கொடுப்போருக்கு, அவர்களுடைய இறைவனிடம் அவர்களுக்குரிய கூலி இருக்கின்றது. அவர்களுக்கு எந்தப் பயமும் இல்லை. அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்.
(அல்குர்ஆன் 2:277)
இறைநம்பிக்கையாளர்கள் யாரென்றால், அல்லாஹ்வைப் பற்றிக் கூறப்பட்டால் அவர்களின் உள்ளங்கள் பயந்து நடுங்கி விடும். அவனது வசனங்கள் அவர்களிடம் எடுத்துரைக்கப்பட்டால் அது அவர்களுக்கு இறைநம்பிக்கையை அதிகப்படுத்தும். அவர்கள் தமது இறைவன்மீதே நம்பிக்கை வைப்பார்கள்.
(அல்குர்ஆன் 8:02)
அவர்கள் தொழுகையை நிலைநிறுத்துவார்கள். நாம் அவர்களுக்கு வழங்கியதிலிருந்து செலவிடுவார்கள்.
(அல்குர்ஆன் 8:03)
அவர்களே உண்மையான இறைநம்பிக்கையாளர்கள். அவர்களுக்குத் தமது இறைவனிடம் அந்தஸ்துகளும், மன்னிப்பும், கண்ணியமான உணவும் உண்டு.
(அல்குர்ஆன் 8:04)
இறைவன் இந்த வசனங்களின் மூலமாக உண்மையான முஃமின்களை குறித்துப் பேசிவிட்டு அந்த உண்மையான முஃமினுடைய பண்புகளில் ஒன்றாக தொழுகையை நிலைநாட்டுவது மிக முக்கியமான ஒன்றாக இருக்கிறது. அப்படி தொழுகையை நிலைநாட்டுவதின் மூலமாக அவனுக்கு உயர்ந்த அந்தஸ்து இருக்கிறது, இன்னும் அவனுக்கு மன்னிப்பு இருக்கிறது, என்றும் இறைவன் சொல்லிக் காட்டுகிறான்.
இங்கே மிக முக்கியமாகக் கவனிக்க வேண்டிய ஒரு விஷயம் இந்தச் சிறப்புகள் அனைத்தையும் இஸ்லாமிய சமுதாயத்தில் உள்ள மக்கள் அறிந்து வைத்திருக்கின்றார்கள்.
தொழுவதினால் கிடைக்கும் நன்மை தீமைகள் அனைத்தையும் தெரிந்து வைத்திருந்தாலும் எதன் காரணமாக நம்முடைய சமுதாயத்து மக்கள் தொழுகைக்கு ஆர்வம் கட்டுவதில்லை என்ற ஒரு கேள்வியை உள்ளத்தில் எழுப்பினோம் என்றால் அதற்குக் கிடைக்கக்கூடிய ஒரே பதில் நாம் அனைவரும் ஷைத்தானுக்குக் கட்டுப்பட்டு இருக்கின்றோம்.
இஸ்லாமியர்கள் யாரும் தங்களுடைய பள்ளிவாசல்களில் தொழக்கூடாது, இன்னும் தங்களுடைய வீடுகளிலும் தொழக்கூடாது என்று ஒரு சட்டம் இன்றைக்கு இயற்றப்பட்டால் நம்முடைய நிலை எவ்வாறு இருக்கும். மௌனம் காத்து வீட்டில் அமர்ந்து விடுவோமா? அல்லது அந்த சட்டத்தை எதிர்த்து ஆர்ப்பாட்ட போராட்டக் களங்களை சந்திப்போமா?
அந்தச் சட்டம் இயற்றப்படும் பொழுது தொழுபவனும், தொழாதவனும், மழைக்குக் கூட பள்ளிவாசல் பக்கம் ஒதுங்காதவன் கூட இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வான்.
உலகத்தில் தொழக்கூடாது என்று ஒரு தடை ஏற்படும் பொழுது அந்தத் தடையை உடைப்பதற்கான வழிகளை தேடக்கூடிய மனிதன் ஒவ்வொரு நாளும் அதிகாலையில் அனைவருடைய உள்ளத்திலும், நீங்கள் தொழாதீர்கள், இரவு இன்னும் இருக்கிறது, நன்றாக தூங்குங்கள் தூங்குங்கள் என்று சைத்தான் ஒரு தடையை போடுகிறானே! அந்தத் தடையை உடைப்பதற்கான ஒரு வழியை ஏன் நாம் தேடுவதில்லை.
உலகத்தின் தடையை உடைப்பதற்கு முன் வந்த மனிதன் ஷைத்தானுடைய தடையை உடைப்பதற்கு முன்வரவில்லை என்றால் காரணம் நாம் முழுக்க முழுக்க அவனுக்கு கட்டுப்பட்டு இருக்கின்றோம். எப்போது அவனுடைய தடையை உடைக்க முடியும் என்றால் இறைவனுக்கு எப்போது அஞ்சி நடக்கின்றோமோ அப்போது மட்டும் தான் ஷைத்தானுடைய தடையை நம்மால் உடைத்து தொழுகையை நிலை நிறுத்த முடியும்.
இதை நாம் விளங்கி உண்மையாகவே ஷைத்தானுக்குக் கட்டுப்பட்டு வாழ்கின்றோமா? இறைவனுக்குக் கட்டுப்பட்டு வாழ்கின்றோமா? என்பதை அனைவரும் சிந்தித்துப் பார்க்கக் கடமைப்பட்டிருக்கின்றோம்.
தொழதவருக்கான தண்டனை:
சிலர் இந்தத் தொழுகையைப் பற்றிய விஷயங்களைத் தெரிந்திருக்கலாம், தெரியாமலும் இருக்கலாம். தெரிந்தவர்கள் இவ்வளவு காலம் தொழாமல் இருந்திருந்தால், இன்னும் இதைத் தெரிவிக்கப்பட்டதற்கு பிறகும் அவர்கள் தொழாமல் இருந்தால் அவருடைய மறுமை நிலை கொடுமையான சக்கர் என்ற நரகம்தான் என்பதை இறைவன் திருக்குர்ஆனில் தெளிவாக சொல்லிவிட்டான்.
அவர்கள் குற்றவாளிகளை நோக்கி, “உங்களை நரகத்தில் தள்ளியது எது?” என்று விசாரிப்பார்கள்.
அதற்கு “நாங்கள் தொழுகையாளிகளாக இருக்கவில்லை. ஏழைகளுக்கு உணவளிப்போராகவும் இருக்கவில்லை. வீணானவற்றில் மூழ்கிக் கிடந்தோருடன் மூழ்கிக் கிடந்தோம். தீர்ப்பு நாளைப் பொய்யெனக் கூறிக் கொண்டிருந்தோம். எங்களுக்கு மரணம் வரும்வரை (இவ்வாறே இருந்தோம்)” என்று பதிலளிப்பார்கள்.
(அல்குர்ஆன் 75:42-47)
மேல் நாம் குறிப்பிட்டுள்ள வசனத்தில் இறைவன் தொழாதவருடைய மறுமையின் நரகத்தின் புலம்பலை குறித்துச் சொல்லுகின்றான். யாரெல்லாம் தொழாமல் இருக்கிறார்களோ அனைவருக்கும் இந்த நிலை தான் என்று இறைவன் தெளிவாகச் சொல்லிவிட்டான்.
தொழுகையைப் பற்றிய விஷயங்கள் அனைத்தும் மக்கள் தெரிந்து அறிந்திருந்தாலும் அதில் அவர்கள் காட்டக்கூடிய அலட்சியத்தின் காரணமாக இஸ்லாமிய கடமைகளின் மிக முக்கிய கடமையான தொழுகையை விடக்கூடிய ஒரு நிலை ஏற்படுகிறது. இதன் மூலம் நாம் ஷைத்தானுக்குக் கீழ்ப்படிந்து வாழ்கின்றோம் என்ற விஷயம் தெளிவாகிறது.
எனவே தொழுகையை முறையாகப் பேணுவதன் மூலம் ஷைத்தானின் கட்டளைகளுக்குக் கட்டுப்படாமல் படைத்த இறைவனின் கட்டளைகளைப் பேணக் கூடியவர்களாக மாறி, மறுமையில் மகத்தான கூலிகளைப் பெறுவோமாக!
