இவ்வுலகில் நாம் செய்த பாவங்களுக்கு படைத்தவனிடம் எவ்வாறு பாவமன்னிப்பு பெறுவது, அதற்காக நாம் செய்ய வேண்டிய பரிகாரங்கள் என்ன என்பதை இத்தொடரில் பார்த்து வருகின்றோம்.
இதில் ஆரம்பமாக, இஸ்லாத்தின் அடிப்படைக் கடமைகள் எனக் கூறப்படும் ஐந்து தூண்களால் எவ்வாறு பாவமன்னிப்பு கிடைக்கிறது என்பதைப் பார்த்து வருகின்றோம்.
“லாயிலாஹ இல்லல்லாஹ்” என்ற ஓரிறைக் கொள்கையை, மேலும் இதன் மற்றொரு தாரக மந்திரமான “முஹம்மதுர் ரசூலுல்லாஹ்” என்ற இஸ்லாத்தின் முதன்மைக் கடமையை நம்பிக்கை கொண்டு, அதை நம் வாழ்வில் நடைமுறைப் படுத்தினால் எவ்வாறு நமது பாவங்கள் மன்னிக்கப்படுகிறது என்பதைப் பார்த்தோம். இப்போது இஸ்லாமியக் கடமைகளில் இதற்கு அடுத்ததாகக் கூறப்பட்ட தொழுகை தொடர்பான செய்திகளையும் அதைக் கடைப்பிடிப்பதால் கிடைக்கும் பாவமன்னிப்பையும் இவ்விதழில் பார்க்கவுள்ளோம்.
தொழுகை
தொழுகை என்பது இஸ்லாத்தின் கடமைகளில் மிக முக்கியக் கடமையாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் .
வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்றும் முஹம்மது அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்றும் உறுதியாக நம்புதல், தொழுகையை நிலைநிறுத்துதல், ஸக்காத்தை வழங்குதல், ரமளான் மாதத்தில் நோன்பு நோற்றல், ஹஜ் செய்தல் ஆகிய ஐந்து காரியங்களின் மீது இஸ்லாம் நிறுவப்பட்டுள்ளது.
நூல்: புகாரி (8)
மிக முக்கியக் கடமைகளில் தொழுகையும் ஒன்றாகும் என்பதை இந்த ஹதீஸ் தெரிவிக்கிறது. அல்லாஹ்வும், அல்குர்ஆனில் தொழுகை இறை நம்பிக்கை கொண்டவர்களுக்கு நேரம் குறிப்பிடப்பட்ட கடமை என்பதை கூறுகிறான்.
தொழுகை, இறைநம்பிக்கையாளர்கள்மீது நேரம் குறிக்கப்பட்டக் கடமையாகும்.
அல்குர்ஆன் (4:103)
இது மட்டுமின்றி அல்லாஹ், அல்குர்ஆனில் கிட்டத்தட்ட நூறு இடங்களுக்கு நெருக்கமாக தொழுகையைப் பேணுமாறு வலியுறுத்திக் கூறுகிறான். இதிலிருந்தே தொழுகை எந்த அளவிற்கு முக்கியத்துவமான கடமை என்பதை நாம் அறியலாம். மேலும் தொழுகை நமக்குக் கடமை என்பதுடன், அந்தத் தொழுகையை நாம் பேணி நடப்பதால் நமக்குப் பலவிதமான நன்மைகளும் கிடைக்கப் பெறுகிறது என பல இறை வசனங்களும், நபியின் பொன்மொழிகளும் விவரிக்கின்றன. அவற்றில் முத்தாய்ப்பாகச் சொல்வதென்றால் தொழுகையை சரிவர நிறைவேற்றுவதால் படைத்தவனிடமிருந்து நமக்குப் பல வகையில் பாவமன்னிப்பும் கிடைக்கிறது.
பாவத்திலிருந்து பரிசுத்தப்படுத்தும் தொழுகை
தொழுகை, மறுமை நாளில் ஒரு மனிதரை சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்லும் மாபெரும் பொக்கிஷமாகும். ஒருவர் தம் வாழ்வில் இறைவனுக்கு இணைவைக்காத நிலையில் தொழுகை என்ற வணக்கத்தில் எந்த குறையும் இல்லாமல் சரியாக நிறைவேற்றினால் அவருடைய பெரும்பாலான பாவங்களிலிருந்து அவர் பரிசுத்தம் பெற்றுவிடுவார் என்னுமளவிற்கு தொழுகையில் நாம் செய்யும் ஒவ்வொரு செயலின் மூலமும் நமக்குப் பாவமன்னிப்பு கிடைக்கிறது.
தண்ணீர் அசுத்தத்தைத் தூய்மைப்படுத்துவது போல் தொழுகை நம்மைப் பாவங்களிலிருந்து முற்றிலுமாகத் தூய்மைப்படுத்துகிறது. நாம் செய்த பாவங்களுக்குத் தொழுகையின் மூலம் எப்படியெல்லாம் பரிகாரத்தை அடையலாம் என்பதற்கான செய்திகள் இதோ…
பாங்கும், பாவமன்னிப்பும்
பாங்கு என்பது மக்கள் அனைவரையும் தொழுகையை நிறைவேற்ற பள்ளிவாசலுக்கு அழைப்பதற்காக அல்லாஹு அக்பர் என்று துவங்கும் அழைப்பாகும். இந்த பாங்கின் வாசகத்தைக் கூட்டுத் தொழுகைக்கு மட்டுமின்றி நாம் தனியாகத் தொழும்போதும் கூறுவதற்கு மார்க்கம் வழிகாட்டுகிறது. இவ்வாறு நாம் பாங்கு சொல்லித் தொழுவதால் நமது பாவங்களும் மன்னிக்கப்படுகின்றது.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மலை உச்சியின் மீது உள்ள பாறையிலே தொழுகைக்காக பாங்கு சொல்லி தொழுகையை நிறைவேற்றும் ஆட்டு இடையனைப் பார்த்து அல்லாஹ் ஆச்சரியப்பட்டான். “இதோ என்னுடைய இந்த அடியானைப் பாருங்கள். என்னைப் பயந்தவனாக பாங்கு சொல்லி தொழுகையை நிலைநாட்டுகிறான். நிச்சயமாக நான் என்னுடைய அடியானை மன்னித்து அவனை சொர்க்கத்தில் நுழையச் செய்து விட்டேன்” என்று அல்லாஹ் கூறுகிறான்
நூல்: அபூதாவூத் (1017)
ஒரு மனிதர், தொழுகைக்குரிய நேரம் வந்தவுடன், பாங்கு சொல்லித் தமது தொழுகையை நிறைவேற்றுவது இறை திருப்தியையும், இறை மன்னிப்பையும் பெற்றுத்தரும் என்ற சிறப்பை இந்த நபிமொழி மூலமாக நாம் அறிந்துகொள்ளலாம். எனவே, நாம் தொழுகை நேரம் வந்தவுடன், இறைவனை அஞ்சியவர்களாக, அதான் எனும் பாங்கைக் கூறித் தொழுகையை நிறைவேற்றுவோமாக!
உளூவும், இரண்டு ரக்அத்களும்
உளூ என்பது தொழுகைக்காக நாம், நமது உடல் பாகங்களில் சில பகுதிகளைத் தண்ணீரால் கழுவி தூய்மைப்படுத்துவதாகும். இந்த உளூ எனும் தூய்மை தொழுகையின் ஓர் அங்கமாகும். ஏனெனில், உளூ செய்தால்தான் நமது தொழுகை ஏற்றுக்கொள்ளப்படும். உளூ இல்லையென்றால் எந்தத் தொழுகையும் ஏற்றுக்கொள்ளப்படாது.
“உளூ செய்யாமல் எந்தத் தொழுகையும் ஏற்கப்படாது” (நூல்: முஸ்லிம் 381)
எனவே, நாம் தொழும்போதெல்லாம் உளூ செய்ய வேண்டும். இவ்வாறு உளூ செய்வதால் நமது உடல் தூய்மையாக இருப்பதுடன், நாம் செய்த பாவங்களும் அந்த உளூவுடன் நீங்கி விடுகிறது என நபியவர்கள் கூறினார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒருவர் முறையாக அங்கத் தூய்மை செய்யும்போது (அவர் செய்திருந்த) அவருடைய (சிறு) பாவங்கள் அவரது உடலிலிருந்து வெளியேறிவிடுகின்றன. முடிவில், அவருடைய நகக்கண்களுக்குக் கீழேயிருந்தும் (அவருடைய பாவங்கள்) வெளியேறிவிடுகின்றன.
நூல்: முஸ்லிம் (413)
உஸ்மான் (ரலி) அவர்களுடைய முன்னாள் அடிமையான ஹும்ரான் பின் அபான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “யார் நான் செய்த இந்த அங்கத் தூய்மையைப் போன்று அங்கத் தூய்மை செய்து, பின்னர் வேறு எந்த (கெட்ட) எண்ணங்களுக்கும் இடம் தாராமல் இரண்டு ரக்அத்கள் நின்று தொழுகிறாரோ அவர் முன்பு செய்த (சிறிய) பாவங்கள் அவருக்கு மன்னிக்கப்படும்” என்று கூறினார்கள் என்றார்கள்.
நூல்: முஸ்லிம் (383)
உளூ செய்வதாலும், அதற்கு பிறகு இரண்டு ரக்அத்கள் தொழுவதாலும் நமது பாவங்கள் மன்னிக்கப்படுகிறது என இந்தச் செய்திகளில் கூறப்பட்டுள்ளது. மற்றொரு செய்தியில் உளூ செய்வதால் எப்படி பாவம் மன்னிக்கப்படும், எந்தளவிற்குப் பாவம் மன்னிக்கப்படும் என இன்னும் விபரமாக இதைப் பற்றி நபியவர்கள் கூறுகிறார்கள்.
அம்ர் பின் அபசா அஸ்ஸுலமீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான், “அல்லாஹ்வின் தூதரே! அங்கத் தூய்மை (உளூ) செய்வது பற்றி எனக்குச் சொல்லுங்கள்!” என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “உங்களில் ஒருவர் அங்கத் தூய்மை செய்வதற்குத் தண்ணீரை நெருங்கி வாய் கொப்புளித்து (மூக்கிற்கு நீர் செலுத்தி) மூக்குச் சிந்தினால் அவரது முகம், வாய், மூக்கு ஆகியவற்றால் ஏற்பட்ட பாவங்கள் அனைத்தும் (தண்ணீரோடு சேர்ந்து கீழே) விழுந்துவிடுகின்றன.
பிறகு அவர் அல்லாஹ் உத்தரவிட்டதைப் போன்று தமது முகத்தைக் கழுவினால் அவரது முகத்தால் ஏற்பட்ட பாவங்கள் அனைத்தும் அவரது தாடி ஓரங்களிலிருந்து தண்ணீரோடு சேர்ந்து விழுந்துவிடுகின்றன.
பிறகு அவர் மூட்டுவரை இரு கைகளைக் கழுவும்போது அவருடைய கைகளின் பாவங்கள் அனைத்தும் அவரது விரல் நுனிகளிலிருந்து தண்ணீரோடு சேர்ந்து விழுந்துவிடுகின்றன.
பிறகு அவர் ஈரக் கையால் தலையைத் தடவி (மஸ்ஹு செய்தி)டும் போது அவரது தலையின் பாவங்கள் அனைத்தும் தலைமுடியின் ஓரங்களிலிருந்து தண்ணீரோடு சேர்ந்து விழுந்துவிடுகின்றன.
பிறகு அவர் தம் பாதங்களைக் கணுக்கால்கள் வரை கழுவும்போது அவரது கால்களால் ஏற்பட்ட பாவங்கள் அனைத்தும் அவரது விரல் நுனிகளிலிருந்து தண்ணீரோடு சேர்ந்து விழுந்துவிடுகின்றன. (அதற்குப் பிறகு) அவர் எழுந்து தொழும்போது அல்லாஹ்வை அவனது தகுதிக்கேற்றதைக் கூறிப் புகழ்ந்து பெருமைப்படுத்தித் தமது உள்ளத்தில் இறைவனுக்கு மட்டுமே இடமளித்தால் அவர் திரும்பிச் செல்கையில் அன்று பிறந்த பாலகனைப் போன்று பாவங்கள் நீங்கி (பரிசுத்தமாகத்) திரும்புகிறார்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல்: முஸ்லிம் (1512)
இந்தச் செய்திகளிலிருந்து நம்முடைய பாவம் எந்த அளவிற்கு மன்னிக்கப்படுகிறது என்பதை நாம் அறிந்து கொள்ளலாம். உளூ செய்வதன் மூலமும், அதற்குப் பிறகு தூய எண்ணத்துடன் தொழுவதன் மூலமும் நம்முடைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. இன்னும் பாவமே செய்யாத பச்சிளம் குழந்தையைப் போன்று நாம் மாறிவிடுவோம்.
இது எவ்வளவு பெரிய பாக்கியம்? இந்தப் பாவமன்னிப்பு பாக்கியத்தை தொழுகையாளிகளுக்கே இறைவன் தருகிறான். எனவே, நாம் உளூச் செய்யும்போது நம்முடைய உடல்களில் அசுத்தங்கள் இருந்தால் எப்படி அதை நாம் தூய்மை செய்வோமோ அதேபோன்று நம்முடைய உடல்களில் பாவங்கள் இருப்பதை நினைவுப்படுத்தி உளூச் செய்கின்றபோது சரியான முறைகளில் உளூ செய்ய வேண்டும். உளூவிற்குப் பிறகு தொழும்போதும் எந்த ஒரு எண்ணத்திற்கும் இடமளிக்காமல் இறையச்சத்தோடு நன்மையை எதிர்பார்த்து நாம் தொழ வேண்டும். இவ்வாறு நாம் செய்கின்றபோது நமது பாவங்கள் மன்னிக்கப்படும்.
ஆனால், இன்று அதிகமானவர்கள் இந்தத் தொழுகை எனும் அழகான பாவ மன்னிப்பு பாக்கியத்தை பயன்படுத்தாமல் இருக்கிறார்கள். இவர்களுக்கு இதுபோன்ற செய்திகளை நாம் எடுத்துரைக்க வேண்டும், இதன் மூலம் நமது பாவங்களை நாம் பரிசுத்தப்படுத்துவதுபோல், மற்றவர்களையும் பாவத்திலிருந்து பரிசுத்தமடையச் செய்யும் பாக்கியமும் நமக்கு கிடைத்துவிடும்.
சிரமமான சூழ்நிலையிலும் முழுமையாக உளூ செய்தல்
உளூ செய்வதை மார்க்கம் வலியுறுத்துவதைப் போன்று சிரமமான சூழலில் உளூ செய்ய இயலாதவர்களுக்கென சில சலுகையையும் மார்க்கம் வழிகாட்டுகிறது. இருப்பினும் இதுபோன்ற இக்கட்டான நேரத்திலும் சிரமம் பாராமல் முழுமையாக உளூ செய்வதும் நமது பாவத்திற்கு மன்னிப்பைப் பெற்றுத் தருகின்றது.
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(உங்கள்) தவறுகளை அல்லாஹ் மன்னித்து, தகுதிகளை உயர்த்தும் செயல்கள் சிலவற்றை உங்களுக்கு நான் சொல்லட்டுமா?” என்று கேட்டார்கள். மக்கள், ஆம்; (சொல்லுங்கள்) அல்லாஹ்வின் தூதரே! என்று கூறினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(அவை) சிரமமான சூழ்நிலைகளிலும் அங்கத் தூய்மையை முழுமையாகச் செய்வது ஆகும்” என்றார்கள்.
நூல்: முஸ்லிம் (421)
சிலர் சிரமமான சூழ்நிலைகளில் இறைவன் கொடுத்த சலுகையைப் பயன்படுத்தி தயம்மம் செய்வார்கள். இன்னும் சிலரோ குர்ஆனில் இறைவன் கற்றுத் தரும் உளூ முறையைக் கடைபிடிப்பார்கள். இவ்வாறு செய்வதே தொழுகை நிறைவேறுவதற்குப் போதுமானதாக இருந்தாலும் சிரமமான சூழ்நிலையிலும் நபியவர்கள் கற்றுத் தந்தது போன்று முழுமையாக அங்கத் தூய்மை செய்தால் அதன் மூலமும் நம்முடைய பாவங்கள் மன்னிக்கப்படும் பாக்கியம் நமக்கு கிடைக்கின்றது என்பதையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். இது உளூவினால் கிடைக்கும் பாவமன்னிப்பாகும்.
பள்ளிக்கு நடந்து செல்லுதல்
கடமையான தொழுகையை ஏனைய இடங்களில் நிறைவேற்றுவதைவிட இறை இல்லத்தில் நிறைவேற்றவே மார்க்கம் வழிகாட்டுகிறது, வலியுறுத்துகிறது. இவ்வாறு இறை இல்லத்தைத் தேடி இறைவனை நாடி வருபவர்கள் வாகன வசதிகள் இருந்தபோதிலும் பள்ளிவாசலுக்கு நடந்து வருபவர்களாக இருக்கும் பட்சத்தில் இறைவன் அவர்களுக்குக் கொடுக்கும் மதிப்பு, அதுவே பாவமன்னிப்பு எனும் சிறப்பு. இதுதொடர்பாக நபிகளார் கூறும் செய்தி இதோ:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் தமது வீட்டிலேயே அங்கத் தூய்மை (உளூ) செய்துவிட்டு இறைக்கட்டளை(களான தொழுகை)களில் ஒன்றை நிறைவேற்றுவதற்காக இறையில்லங்களில் ஒன்றை நோக்கி நடந்து செல்கிறாரோ, (அவர் எடுத்துவைக்கும்) இரு காலடிகளில் ஒன்று அவருடைய தவறுகளில் ஒன்றை அழித்துவிடுகிறது; மற்றொன்று அவருடைய தகுதியை உயர்த்தி விடுகிறது.
நூல்: முஸ்லிம் (1184)
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(உங்கள்) தவறுகளை அல்லாஹ் மன்னித்து, தகுதிகளை உயர்த்தும் செயல்கள் சிலவற்றை உங்களுக்கு நான் சொல்லட்டுமா?” என்று கேட்டார்கள். மக்கள், “ஆம்; (சொல்லுங்கள்) அல்லாஹ்வின் தூதரே!” என்று கூறினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(அவை) பள்ளிவாசல்களை நோக்கி அதிகமான காலடிகளை எடுத்துவைத்துச் செல்வது ஆகும்” என்றார்கள்.
நூல்: முஸ்லிம் (421)
வீட்டிலேயே நாம் உளூச் செய்துவிட்டு பள்ளிக்குச் செல்வதால், நாம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு எட்டுக்கும் நமது பாவங்கள் மன்னிக்கப்பட்டு, இறைவனிடம் நமக்கான தகுதிகள் உயர்த்தப்படும்.
இன்று பல பேர் பள்ளிவாசல் தொலைவாக இருப்பதினால் தங்களின் வீடுகளிலேயே தொழுவதைப் பார்க்கிறோம். இன்னும் சிலர் பள்ளிவாசலுக்குத் தொழ வந்தாலும் அவர்கள் பள்ளிக்கு வந்துதான் உளூ செய்கிறார்கள். பள்ளியில் உளூ செய்ய மார்க்கத்தில் அனுமதி இருந்தாலும், பாவம் மன்னிக்கப்படும் அளப்பரிய பாக்கியம் இதனால் நமக்குக் கிடைக்குமா? அந்த நன்மை நமக்குக் கிடைக்க வேண்டும் என்றால் வீட்டிலேயே உளூ செய்துவிட்டுப் பள்ளிக்கு வரவேண்டும்.
அதேபோன்று இன்று பலபேர் பள்ளிக்கு அருகில் வீடு இருந்தாலும்கூட வாகனத்தில்தான் வருகின்றோம். பள்ளிவாசலுக்குத் தொழுகைக்காக ஒருவர் எப்படி வந்தாலும் நன்மை உண்டு. வாகனத்தில் வருவதற்கும், நடந்து வருவதற்கும் நன்மை உண்டு. இருந்தாலும் ஒவ்வொரு எட்டிற்கும் உள்ள அந்த நன்மைகள் வாகனத்தில் வருபவர்களுக்குக் கிடைக்குமா? என்பதை கவனத்தில் கொள்ளக் கடமைப்பட்டுள்ளோம். எப்படியும் நாம் பள்ளிக்கு வரப் போகிறோம் எனும்போது வீட்டிலேயே உளூ செய்துவிட்டு வருவதால் நமக்கு எந்த நஷ்டமும் இல்லை. மாறாக பன்மடங்கு நன்மைதான் கிடைக்கப்போகிறது. எனவே நாம் தொழுகைக்காகப் பள்ளிக்கு வருகின்றபோது தங்கள் வீடுகளிலேயே உளூ செய்துவிட்டு வருவோமாக!
தொழுகையை எதிர்பார்த்துக் காத்திருத்தல்
கடமையாக்கப்பட்ட தொழுகையை அதிலுள்ள ஒவ்வொரு செயலை நிறைவேற்றுவதால் மட்டுமின்றி அதை நிறைவேற்றக் காத்துக் கொண்டிருப்பதாலும் நமக்குப் பாவமன்னிப்பு கிடைத்துவிடுகின்றது என்பதைப் பின்வரும் ஹதீஸ் தெரிவிக்கிறது.
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(உங்கள்) தவறுகளை அல்லாஹ் மன்னித்து, தகுதிகளை உயர்த்தும் செயல்கள் சிலவற்றை உங்களுக்கு நான் சொல்லட்டுமா?” என்று கேட்டார்கள். மக்கள், “ஆம்; அல்லாஹ்வின் தூதரே!” என்று கூறினர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(அவை) சிரமமான சூழ்நிலைகளிலும் அங்கத் தூய்மையை முழுமையாகச் செய்வதும், பள்ளிவாசல்களை நோக்கி அதிகமான காலடிகளை எடுத்துவைத்துச் செல்வதும், ஒரு தொழுகைக்குப் பின் அடுத்தத் தொழுகையை எதிர்பார்த்துக் காத்திருப்பதும் ஆகும்” என்றார்கள். இவைதாம் கட்டுப்பாடுகளாகும் என்றும் கூறினார்கள்.
நூல்: முஸ்லிம் (421)
நாம் தொழாமல் தொழுகையை எதிர்பார்த்துக் காத்திருந்தாலும்கூட நம்முடைய பாவங்கள் மன்னிக்கப்படும் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள். ஆனால், இன்று நம்மில் அதிகமான மக்கள் தொழுகையை எதிர்பார்த்து இருப்பதைவிட தொழுகையை மறந்தவர்களாக இருப்பதைத்தான் பார்க்க முடிகிறது. தொழுகையில் அவ்வளவு அசட்டுத்தனமாகவும் மிகவும் கவனமற்றவர்களாகவும் இருக்கின்றோம்.
ஜமாஅத்தாக தொழும் போதுகூட சரியான நேரத்தில் வராமல் இகாமத் சொல்லும் நேரத்தில் அவசர அவசரமாகத்தான் வருகின்றோம். இன்னும் சிலர் ஜமாஅத் தொழுகை நடந்து கொண்டிருக்கும் போதும், இன்னும் சிலர் ஜமாஅத் தொழுகை முடிந்த பின்பே வந்து தொழுவதைப் பார்க்கின்றோம்.
இவ்வாறு தொழுவதால், தொழுகையை நிறைவேற்றியவர்களாக நாம் ஆகலாமே தவிர பாவம் மன்னிக்கப்படும் இந்தச் சிறப்பை பெற்று விட முடியாது. பள்ளியில் வந்து, நன்மையை எதிர்பார்த்து, எந்த ஒன்றும் செய்யாமல் வெறுமனே பள்ளியில் அமர்ந்திருந்தாலே இந்த வாய்ப்பு நமக்கு கிடைப்பதைப் பார்க்கின்றோம். இப்படியான ஒரு வாய்ப்பை நாம் தவற விடலாமா? எனவே, இதுபோன்ற தருணங்களை நாம் ஒருபோதும் வீணடித்துவிடக் கூடாது. தொழுகை எனும் இம்மாபெரும் சிறந்த வணக்கத்தை சிரமம் என நினைத்துவிடாமல் சிறப்பான முறையில் அதை நிறைவேற்றி பாவமன்னிப்பைப் பெறுவோமாக!
