ஒரு வேளை தொழுகையில் கிடைக்கும் பல நன்மைகள்

ஏக இறைவனை நம்பிக்கை கொண்ட பிறகு அடுத்தபடியாக செய்ய கூடிய அமல்களில் சிறந்த அமல் தொழுகையாகும். அல்லாஹ்வை நம்பிக்கை கொண்ட பிறகு ஏன் முதலில் தொழுகையை நிலைநாட்ட வேண்டும் என்று அல்லாஹ் கூறுகின்றான். பெற்றோர்களை பேணுதல், ரமலான் மாதத்தில் நோன்பு வைத்தல், ஹஜ் செய்தல், ஜகாத் கொடுத்துதல் இது போன்ற பல சிறந்த அமல்கள் இருந்தாலும் அல்லாஹ் தொழுகைக்கு தான் முன்னுரிமை வழங்கிறான்.
முக்கியத்துவம் வாய்ந்த இந்தொழுகைக்கு மட்டும் பல நன்மைகளை வழங்குகிறான். தொழுகைக்காக உளூ செய்தால், தொழுவதற்கு பள்ளிக்கு நடந்து வந்தால், பாங்கு கூறினால். பாங்கு பதில் கூறினால், பாங்கு முடிந்த உடவுன் துஆ ஒதினால் என்று எல்லாவற்றிக்கும் நன்மை, நன்மை என்று வாரி வழங்குகின்றான்.

ஈமானுக்கு பிறகு முதலில் தொழுகை

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முஆத் (ரலி) அவர்களை யமன் நாட்டுக்கு அனுப்பிவைத்த போது சொன்னார்கள்: நீங்கள் வேதக்காரர்களில் ஒரு சமுதாயத்தாரிடம் செல்கிறீர்கள். ஆகவே, அவர்களுக்கு நீங்கள் விடுக்கும் முதலாவது அழைப்பு, (ஏக இறைவனான) அல்லாஹ் ஒருவனையே வழிபடுங்கள் என்பதாகவே இருக்க வேண்டும். அவர்கள் அல்லாஹ்வை (ஏகன் என்று) ஏற்றுக் கொண்டால், அல்லாஹ் அவர்கள் மீது (நாளொன்றுக்கு) இரவிலும் பகலிலும் ஐந்து தொழுகைகளைக் கடமையாக்கியுள்ளான் என்று அவர்களுக்குத் தெரிவியுங்கள். தொழுகையை அவர்கள் நிறைவேற்றினால், அவர்களில் செல்வர்களாயிருப்பவர்களிடமிருந்து வசூலிக்கப்பெற்று அவர்களில் ஏழைகளாயிருப்பவர்களிடையே விநியோகிக்கப்பட வேண்டிய ஸகாத்தை அல்லாஹ் அவர்கள் மீது கடமையாக்கியுள்ளான் என்று அவர்களுக்குத் தெரிவியுங்கள். இதற்கு அவர்கள் கட்டுப்பட்டால் அவர்களிடமிருந்து ஸகாத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள். ஆனால், மக்களின் செல்வங்களிலிருந்து உயர்ந்தவற்றைத் தவிர்த்துவிடுங்கள். (அவற்றை ஸகாத்தாகப் பெறாதீர்கள்).
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி), முஸ்லிம் 31

வெற்றிக்கு வழிகாட்டும் தொழுகை

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (தொழுகையை) நிலைநாட்டுங்கள்! நீங்கள் வெற்றி பெறுவீர்கள்! உங்களுடைய நல்லறங்களில் மிகவும் சிறந்தது தொழுகை தான். முஃமினைத் தவிர வேறு யாரும் உலூவில் பேணுதலாக இருக்க மாட்டார்கள்.
அறிவிப்பவர்: ஸவ்பான் (ரலி) நூல்: அஹ்மத் 22467

தொழுகை விட்டவன் நரகை சந்திப்பான்

தொழுகையை விட்டுவிட்டால் அவன் காஃபிராக மாறிவிட்டான் என்றும், அவன் திருந்தி, நம்பிக்கை கொள்ள வேண்டும் என்றும் அல்லாஹ் கூறுகின்றான்.
அவர்களுக்குப் பின்னர் வழித் தோன்றல்கள் வந்தனர். அவர்கள் தொழுகையைப் பாழாக்கினர். மனோ இச்சைகளைப் பின்பற்றினர். அவர்கள் பின்னர் இழப்பைச் சந்திப்பார்கள். திருந்தி நம்பிக்கை கொண்டு நல்லறம் செய்தவரைத் தவிர. அவர்கள் சொர்க்கத்தில் நுழைவார்கள். சிறிதளவும் அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்.
அல்குர்ஆன் : 19: 59,60

உளு செய்தால்

கடமையான உபரியான எந்த தொழுகைக்கும் உளூ எனும் அங்குத் தூய்மை அவசியமாகும். அந்த தூய்மைக்கும் அல்லாஹ் நன்மைகளை வழங்குகின்றான்.
சிரமமான சூழ்நிலைகளில் அங்கத் தூய்மையை முழுமையாகச் செய்தால் முந்தைய சிறு பாவங்கள் மன்னிக்கப்படும். அல்லாஹ் தவறுகளை மன்னித்து, தகுதிகளை உயர்த்துவான். உளூ செய்யும் போது முகத்தைக் கழுவினால் கண்கள் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும், கைகளை கழுவினால் கைகளால் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும், கால்களை கழுவினால் கால்களால் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும், உளூ செய்ததன் அடையாளமாக(ப் பிரதான) உறுப்புகள் பிரகாசிப்பவர்களாய் மறுமையில் எழுப்படுவார். இதுப் போன்ற பல நன்மைகளை இஸ்லாம் கூறுகிறது..

உஸ்மான் (ரலி) அவர்களின் முன்னாள் அடிமை ஹும்ரான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்களிடம் அங்கத் தூய்மை செய்வதற்கான தண்ணீர் கொண்டுவந்தேன். அவர்கள் அங்கத் தூய்மை செய்தார்கள். பிறகு அவர்கள் கூறினார்கள்: சிலர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து ஹதீஸ்களை அறிவிக்கின்றனர். ஆனால், அவற்றின் நிலை என்ன என்று எனக்குத் தெரியாது. ஆயினும், (ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (இதோ) இப்போது நான் செய்த அங்கத் தூய்மை போன்று அங்கத் தூய்மை செய்ததை நான் பார்த்தேன். பிறகு “யார் இவ்வாறு அங்கத் தூய்மை செய்கின்றாரோ, அவரது முந்தைய (சிறு) பாவங்கள் மன்னிக்கப்பட்டுவிடும். பிறகு அவர் தொழும் தொழுகையும் பள்ளிவாசலை நோக்கி அவர் நடப்பதும் அவருக்குக் கூடுதலா(ன வணக்கமா)க மாறிவிடும்” என்று கூறினார்கள்.
நூல் : முஸ்லிம் 388

(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(உங்கள்) தவறுகளை அல்லாஹ் மன்னித்து, தகுதிகளை உயர்த்தும் செயல்கள் சிலவற்றை உங்களுக்கு நான் சொல்லட்டுமா?” என்று கேட்டார்கள். மக்கள், “ஆம்; (சொல்லுங்கள்) அல்லாஹ்வின் தூதரே!” என்று கூறினர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(அவை:) சிரமமான சூழ்நிலைகளிலும் அங்கத் தூய்மையை முழுமையாகச் செய்வதும், பள்ளிவாசல்களை நோக்கி அதிகமான காலடிகளை எடுத்துவைத்துச் செல்வதும், ஒரு தொழுகைக்குப் பின் அடுத்தத் தொழுகையை எதிர்பார்த்துக் காத்திருப்பதும் ஆகும். இவைதாம் கட்டுப்பாடுகளாகும்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலிலி), நூல் : முஸ்லிம் 421

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு “முஸ்லிமான’ அல்லது “முஃமினான’ (இறைநம்பிக்கை கொண்ட) அடியார் உளூ செய்யும் போது முகத்தைக் கழுவினால், கண்களால் பார்த்துச் செய்த பாவங்கள் அனைத்தும் (முகத்தைக் கழுவிய) “நீருடன்’ அல்லது “நீரின் கடைசித் துளியுடன்’ முகத்திலிருந்து வெளியேறுகின்றன. அவர் கைகளைக் கழுவும் போது கைகளால் பற்றிச் செய்திருந்த பாவங்கள் அனைத்தும் (கைகளைக் கழுவிய) “தண்ணீருடன்’ அல்லது “தண்ணீரின் கடைசித் துளியுடன்’ வெளியேறுகின்றன. அவர் கால்களைக் கழுவும் போது, கால்களால் நடந்து செய்த பாவங்கள் அனைத்தும் (கால்களைக் கழுவிய) “நீரோடு’ அல்லது “நீரின் கடைசித் துளியோடு’ வெளியேறுகின்றன. இறுதியில், அவர் பாவங்களிலிருந்து தூய்மை அடைந்தவராக (அந்த இடத்திலிருந்து) செல்கிறார்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: முஸ்லிம் 412

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒருவர் முறையாக உளூ செய்யும் போது (அவர் செய்திருந்த) அவருடைய (சிறு) பாவங்கள் அவரது உடலிருந்து வெளியேறிவிடுகின்றன. முடிவில், அவருடைய நகக்கண்களுக்குக் கீழேயிருந்தும் (அவருடைய பாவங்கள்) வெளியேறிவிடுகின்றன.
அறிவிப்பவர் : உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) நூல்: முஸ்லிம் 413

மறுமையில் ஒளிவீசும் உறுப்புகள்

அபூஹுரைரா (ரலி) அவர்கள் உளூ செய்வதை நான் பார்த்தேன். அப்போது அவர்கள் தமது முகத்தையும் கைகளையும் கழுவிக் கொண்டே தோள்பட்டை வரை சென்றார்கள். பிறகு கால்களைக் கழுவிக்கொண்டே கணுக்கால் வரை சென்றார்கள். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “மறுமை நாளில் என் சமுதாயத்தார் உளூ செய்ததன் அடையாளமாக உறுப்புகள் பிரகாசிப்பவர்களாய் வருவார்கள். ஆகவே, உங்களில் எவருக்கு (உளூவில் தம் பிரதான உறுப்புக்களை நீட்டிக் கழுவி) தமது ஒளியை நீட்டிக்கொள்ள முடியுமோ அவர் அதைச் செய்து கொள்ளட்டும்” என்று கூறியதை நான் கேட்டுள்ளேன் என்றார்கள்.
அறிவிப்பவர்: நுஐம் பின் அப்தில்லாஹ், நூல்: முஸ்லிம் 415,

கவ்ஸர் தடாகத்தில் நீரறுந்தும் பாக்கியம்

தொழுகையாளிகளுக்குக் கிடைக்கும் மிகப்பெரும் பாக்கியங்களில் ஒன்று தான் மறுமையில் கவ்ஸர் தடாகத்தில் நீரறுந்தும் பாக்கியம். தொழுகையாளிகளைத் தவிர மற்றவர்கள் இதனை அடைந்து கொள்ள முடியாது.

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: “(மறுமையில் எனக்கு வழங்கப்படவிருக்கும் “அல்கவ்ஸர்’ எனும்) எனது நீர்த் தடாக(த்தின் இரு கரைகளுக்கிடையேயான தூர)மானது, (தென் அரபகத்திலுள்ள) “அதன்’ நகரத்திலிருந்து (வட அரபகத்திலுள்ள) “அய்லா’ நகரத்தைவிட அதிகத் தொலைவுடையதாகும். அ(தன் நீரான)து, பனிக்கட்டியைவிட மிகவும் வெண்மையானது; பால் கலந்த தேனைவிட மதுரமானது. அதன் பாத்திரங்கள் விண்மீன்களின் எண்ணிக்கையை விட அதிகமானவை. ஒருவர் தமது நீர்த் தொட்டியை விட்டும் (பிற) மக்களின் ஒட்டகங்களைத் தடுப்பதைப் போன்று, நான் அந்தத் தடாகத்தை விட்டும் மக்கள் சிலரைத் தடுப்பேன்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். மக்கள், “அல்லாஹ்வின் தூதரே! அன்றைய தினம் (உங்கள் சமூகத்தாராகிய) எங்களை நீங்கள் அடையாளம் கண்டுகொள்வீர்களா?” என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், “ஆம்; வேறெந்தச் சமுதாயத்தாருக்கும் இல்லாத ஓர் அடையாளம் உங்களுக்கு இருக்கும். உளூ செய்ததன் அடையாளமாக(ப் பிரதான) உறுப்புகள் பிரகாசிப்பவர்களாய் என்னிடம் நீங்கள் வருவீர்கள். (அதை வைத்து உங்களை நான் அடையாளம் கண்டுகொள்வேன்)” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம் 416

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ஒரு முஸ்லிம் அழகிய முறையில் உளூ செய்து, அகத்தையும் முகத்தையும் ஒருமுகப்படுத்தி (பணிந்து, உள்ளச்சத்துடன்) தொழுதால் அவருக்குச் சொர்க்கம் கட்டாயமாகாமல் இருப்பதில்லை”.
அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர் (ரலி), நூல்: முஸ்லிம் 397

வீட்டிலே உளூ செய்து வந்தால்….

பாவங்கள் அழிக்கப்பட்டு, தகுதிகள் உயர்த்தப்படுதல் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் தமது வீட்டிலேயே அங்கத் தூய்மை (உளூ) செய்துவிட்டு இறைக் கட்டளை(களான தொழுகை)களில் ஒன்றை நிறைவேற்றுவதற்காக இறையில்லங்களில் ஒன்றை நோக்கி நடந்து செல்கிறாரோ, (அவர் எடுத்துவைக்கும்) இரு காலடிகளில் ஒன்று அவருடைய தவறுகளில் ஒன்றை அழித்துவிடுகிறது; மற்றொன்று அவருடைய தகுதியை உயர்த்திவிடுகிறது.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம் 1184

ஒருவர் தன்னுடைய வீட்டில் உளூச் செய்து விட்டு, பிறகு அல்லாஹ்வின் கடமைகளில் ஒரு கடமையை நிறைவேற்றுவதற்காக அல்லாஹ்வின் இல்லங்களில் ஏதேனும் ஒன்றை நோக்கிச் செல்லும் போது அவர் எடுத்து வைக்கும் எட்டுக்கள் ஒரு தீமையை அழித்து விடுகின்றது. ஓர் அந்தஸ்தை உயர்த்தி விடுகின்றது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல் : முஸ்லிம் (1059)

உளூவின் துஆ மூலம் கிடைக்கும் நன்மை

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவர் முழுமையான முறையில் உளூ செய்துவிட்டு, “அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹு வ அன்ன முஹம்மதன் அப்துல்லாஹி வரசூலுஹு (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்றும், முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும் தூதரும் ஆவார்கள் என்றும் உறுதிமொழிகிறேன்) என்று கூறினால், சொர்க்கத்தின் எட்டு வாசல்களும் அவருக்காகத் திறக்கப்படுகின்றன. அவற்றில் தாம் நாடிய வாசலில் அவர் நுழைந்து கொள்ளலாம்.
அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர் (ரலி), நூல்: முஸ்லிம் 397

பள்ளியை நோக்கி நடத்து வருதால் கிடைக்கும் நன்மை

ஒருவர் பள்ளிவாசலுக்குக் காலையிலோ மாலையிலோ சென்று வந்தால் அவர் ஒவ்வொரு முறை சென்று வரும் போதும் அவருக்காக அல்லாஹ் சொர்க்கத்தில் ஒரு மாளிகையை (அல்லது விருந்தை)த் தயார் செய்கிறான்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), முஸ்லிம் 1187

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு மனிதர் அங்கத் தூய்மை செய்து விட்டு பிறகு தொழுகை நிறைவேற்றுவதற்காக பள்ளிவாசலுக்கு வந்தால் அவன் பள்ளிவாசலை நோக்கி எடுத்து வைக்கும் ஒவ்வொரு எட்டிற்காகவும் பத்து நன்மைகளை அவனுடைய இரண்டு எழுத்தர்களும் பதிவு செய்கிறார்கள்.
அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர் (ரலி), நூல்: இப்னு ஹிப்பான் 2045

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் தன்னுடைய வீட்டில் அழகிய முறையில் உளூச் செய்து பிறகு பள்ளிக்கு (தொழுகைக்காக) வருகிறாரோ அவர் அல்லாஹ்வின் விருந்தாளியாவார். விருந்தாளியைக் கண்ணியப்படுத்துவது விருந்தளிப்பவர் மீது கடமையாகும்.
அறிவிப்பவர்: ஸல்மான் (ரலி), நூல்: அல்முஃஜமுல் கபீர் 6016

வெளியூர் சென்றவர் ஊர் திரும்பும் போது அவருடைய குடும்பத்தார்கள் சந்தோஷப்படுவதைப் போன்று ஒரு முஸ்லிமான மனிதர் தொழுவதற்காகவும், திக்ர் செய்வதற்காகவும் பள்ளிகளுக்குச் சென்றால் அவர் (அங்கிருந்து) வெளியேறும் வரை அதன் மூலம் அல்லாஹ் சந்தோஷப்படுகிறான்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: அஹ்மத் 8332

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மனிதனின் (உடலிலுள்ள) ஒவ்வொரு மூட்டிற்காகவும் ஒவ்வொரு நாளும் தர்மம் செய்வது கடமையாகும். ஒருவருக்கு அவரது வாகனத்தில் ஏறிட உதவுவது, அல்லது அவரது வாகனத்தின் மீது அவரது மூட்டை முடிச்சுகளை ஏற்றி வைப்பதும் தர்மமாகும். நல்ல சொல்லும், தொழுகைக்கு நடந்து செல்ல எடுத்து வைக்கும் ஒவ்வோர் அடியும், (வழியறியாமல் தடுமாறும் ஒருவருக்குச் சரியான) பாதையை அறிவித்துத் தருவதும் தர்மமாகும்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி 2891

உஸ்மான் (ரலி) அவர்களின் முன்னாள் அடிமை ஹும்ரான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்களிடம் அங்கத் தூய்மை செய்வதற்கான தண்ணீர் கொண்டுவந்தேன். அவர்கள் அங்கத் தூய்மை செய்தார்கள். பிறகு அவர்கள் கூறினார்கள்: சிலர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து ஹதீஸ்களை அறிவிக்கின்றனர். ஆனால், அவற்றின் நிலை என்ன என்று எனக்குத் தெரியாது. ஆயினும், (ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (இதோ) இப்போது நான் செய்த அங்கத் தூய்மை போன்று அங்கத் தூய்மை செய்ததை நான் பார்த்தேன். பிறகு “யார் இவ்வாறு அங்கத் தூய்மை செய்கின்றாரோ, அவரது முந்தைய (சிறு) பாவங்கள் மன்னிக்கப்பட்டுவிடும். பிறகு அவர் தொழும் தொழுகையும் பள்ளிவாசலை நோக்கி அவர் நடப்பதும் அவருக்குக் கூடுதலா(ன வணக்கமா)க மாறிவிடும்” என்று கூறினார்கள்.
நூல் : முஸ்லிம் 388

நீண்ட தூரத்திலிருந்து பள்ளிக்கு வரும் போது கிடைக்கும் நன்மை

யார் நீண்ட தூரத்திலிருந்து நடந்து தொழுகைக்கு வருகின்றாரோ அவருக்கு மற்ற எல்லோரையும் விட அதிகம் நன்மை உண்டு. யார் ஜமாஅத் தொழுகையை எதிர்பார்த்து இருந்து இமாமுடன் தொழுகின்றாரோ அவருக்குத் தனியாகத் தொழுது விட்டுத் தூங்கி விடுபவரை விட அதிகம் நன்மை உண்டு என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூமூஸா (ரலி), நூல் : புகாரி (651)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மக்களில் தொழுகைக்காக அதிக நன்மை பெறுகின்றவர் (யாரெனில்), (தொழுகைக்காக) வெகு தொலைவிலிருந்து நடந்துவருபவர் ஆவார். அடுத்து அதற்கடுத்த தொலை தூரத்திலிருந்து வருபவர் ஆவார். யார் இமாமுடன் ஜமாஅத்தாகத் தொழக் காத்திருக்கிறாரோ அவர், (தனியாகத்) தொழுதுவிட்டு உறங்கி விடுபவரை விட அதிக நன்மை அடைபவராவார்.
அறிவிப்பவர்: அபூமூசா (ரலி), நூல்: முஸ்லிம் 1179

அன்சாரிகளில் ஒருவருடைய வீடு மதீனாவிலேயே (பள்ளிவாசலுக்கு) வெகுதொலைவில் அமைந்திருந்தது. அவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் எல்லாத் தொழுகைகளிலும் தவறாமல் கலந்துகொள்வார். நாங்கள் அவருக்காக (வெகு தொலைவிலிருந்து சிரமப்பட்டு வருகிறாரே என்று) அனுதாபப்பட்டோம். இதையடுத்து அவரிடம் நான், “இன்னாரே! நீங்கள் கழுதையொன்றை வாங்கி (அதில் பயணம் செய்து வருவீரா)னால் நன்றாயிருக்குமே! கடும் வெப்பத்திலிருந்தும் விஷ ஜந்துக்களிலிருந்தும் உங்களைக் காத்துக் கொள்ளலாமே?” என்று கேட்டேன். அதற்கு அவர், “அறிந்து கொள்ளுங்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! எனது இல்லம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய இல்லத்துடன் (மஸ்ஜிதுந் நபவீ அருகிலேயே கயிறுகளால் இணைத்துக்) கட்டப்பட்டிருக்க வேண்டும் என நான் விரும்பவில்லை” என்று கூறினார். அவர் அவ்வாறு கூறியது எனக்கு மிகுந்த மன வேதனையளிக்கவே நான் நபி (ஸல்) அவர்களிடம் வந்து நடந்ததைத் தெரிவித்தேன். நபி (ஸல்) அவர்கள் அவரை அழைத்(து விசாரித்)தார்கள். அவர் முன்பு (என்னிடம்) கூறியதைப் போன்றே கூறினார். மேலும், தம் கால் சுவடுகளுக்கு நன்மை பதிவு செய்யப்பட வேண்டுமெனத் தாம் விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார். நபி (ஸல்) அவர்கள், “நீங்கள் எதிர்பார்த்த நன்மை உங்களுக்கு உண்டு” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : உபை பின் கஅப் (ரலி), நூல்: முஸ்லிம் 1180

அன்சாரிகளில் ஒருவர் இருந்தார். பள்ளியை விட்டு அவர் தூரமாக இருந்ததைப் போல் வேறு யாரும் தூரமாக இருக்க நான் அறிந்திருக்கவில்லை. ஆனால் அவருக்கு ஒரு தொழுகை கூட விடுபடுவது கிடையாது. “கும்மிருட்டிலும் கடும் வெப்பத்திலும் ஏறி வருவதற்காக ஒரு கழுதையை வாங்க வேண்டியது தானே?” என்று அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர், “என்னுடைய வீடு பள்ளிக்கு அருகில் இருப்பது எனக்கு மகிழ்ச்சியளிக்கவில்லை. பள்ளிக்கு வரும் போது என் வருகையும் என்னுடைய குடும்பத்தாரிடம் திரும்பிச் செல்லும் போது என்னுடைய திரும்புதலும் பதியப்பட வேண்டும் என்று நான் விரும்புகின்றேன்” என்று கூறினார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “உனக்கு இந்த நன்மைகள் அனைத்தையும் அல்லாஹ் வழங்குவானாக!” என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர் : உபை இப்னு கஅப் (ரலி), நூல் : முஸ்லிம் (1065)

(மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலைச் சுற்றி காலி மனைகள் இருந்தன. பனூசலிமா குலத்தார் பள்ளிவாசலுக்கு அருகிலேயே குடியேற விரும்பினர். இந்த விஷயம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு எட்டிய போது அவர்கள், “நீங்கள் (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலுக்கு அருகில் குடியேறப்போவதாக நான் அறிந்தேனே (அது உண்மையா)?” என்று கேட்டார்கள். அதற்கு பனூசலிமா குலத்தார் “ஆம், அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் அவ்வாறு விரும்பினோம்” என்று கூறினார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “பனூசலிமா குலத்தாரே! உங்கள் குடியிருப்புகள் அங்கேயே இருக்கட்டும்! உங்கள் காலடிகள் (அளவுக்கு நன்மைகள்) பதிவு செய்யப்படும்; உங்கள் குடியிருப்புகள் அங்கேயே இருக்கட்டும்! உங்கள் காலடிகள் (அளவுக்கு நன்மைகள்) பதிவு செய்யப்படும்” என்று (இரு முறை) கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி), நூல்: முஸ்லிம் 1182, 1068

பாங்கு கூறினால்….

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இமாம் என்பவர் (பின்பற்றி தொழுபவர்களின் தொழுகைக்கு) பொறுப்பாளியாவார். பாங்கு சொல்பவர் (முஅத்தின் தொழுகை நேரங்களில் சரியாக பாங்கு சொல்வதற்காக) நம்புவதற்குரிய ஒருவராவார். எனவே அல்லாஹ் இமாம்களை நேர்வழியில் செலுத்துவானாக! பாங்கு சொல்பவர்களுக்கு மன்னிப்பு வழங்குவானாக!
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: அஹ்மத் 9418

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மலை உச்சியின் மீதுள்ள பாறையில் தொழுகைக்காக பாங்கு சொல்லி, தொழுகையை நிறைவேற்றும் ஆட்டு இடையனைப் பார்த்து அல்லாஹ் ஆச்சரியப்படுகின்றான். “இதோ என்னுடைய இந்த அடியானைப் பாருங்கள் என்னைப் பயந்தவனாக பாங்கு சொல்லி தொழுகையை நிலைநாட்டுகிறான். நிச்சயமாக நான் என்னுடைய அடியானை மன்னித்து அவனை சொர்க்கத்தில் நுழையச் செய்து விட்டேன்” என்று அல்லாஹ் கூறுகிறான்.
அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர்(ரலி), நூல் : அபூதாவூத் 1017,

அபூ ஸஅஸஆ அப்துர் ரஹ்மான் பின் அப்தில்லாஹ் அல்அன்சாரி (ரலி) அவர்கள் கூறியதாவது: என்னிடம் அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள், “ஆட்டையும் பாலைவனத்தையும் விரும்புகின்றவராக உங்களை நான் காண்கிறேன். எனவே, நீங்கள் “ஆட்டை மேய்த்துக் கொண்டோ’ அல்லது “பாலைவனத்திலோ’ இருக்க, (தொழுகை நேரம் வந்து) நீங்கள் தொழுகைக்காக (பாங்கு சொல்லி) அழைப்புக் கொடுப்பீர்களாயின் உங்கள் குரலை உயர்த்தி அழையுங்கள். ஏனெனில், தொழுகைக்காக அழைப்பவரின் குரல் ஒலிக்கும் தொலைவு நெடுகவுள்ள ஜின்களும், மனிதர்களும் பிற பொருள்களும் அதைக் கேட்டு (தொழுகை) அ(ழைப்புக் கொடுத்த)வருக்காக மறுமை நாளில் சாட்சியம் சொல்கின்றன” என்று கூறிவிட்டு, இதை நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து செவியேற்றேன் என்று சொன்னார்கள்.
நூல்: புகாரி (609)

“மறுமை நாளில் மக்களிலேயே நீண்ட கழுத்து உடையவர்களாகத் தொழுகை அறிவிப்பாளர்கள் காணப்படுவார்கள்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: முஆவியா (ரலி), நூல்: முஸ்லிம் 631

தொழுகை அறிவிப்புச் செய்வதிலும் (கூட்டுத் தொழுகையில்) முதல் அணியி(ல் நிற்பதி)லும் உள்ள(நன்மை)தனை மக்கள் அறிவார்களாயின் அ(தை அடைந்துகொள்வ) தற்குச் சீட்டுக் குலுக்கிப் போடுவதைத் தவிர வேறு வழியில்லாமல்போகுமானால் நிச்சயம் சீட்டுக் குலுக்கிப் போடுவார்கள். தொழுகைக்கு அதன் ஆரம்ப நேரத்தில் விரைந்து செல்வதில் உள்ள நன்மையை மக்கள் அறிவார்களாயின் அதற்கு முந்திக்கொள்வார்கள். இஷாத் தொழுகையிலும் சுப்ஹுத் தொழுகையிலும் உள்ள நன்மையை அவர்கள் அறிவார்களாயின் அதற்குத் (தரையில்) தவழ்ந்தாவது அவர்கள் வந்து விடுவார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுûரா (ரலி), நூல் : முஸ்லிம் 746

பாங்கிற்கு பதில் கூறுதல்

அல்லாஹ்வின் தூதர் ஸல்) அவர்கள் கூறினார்கள்: தொழுகை அறிவிப்பாளர் “அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர்’ என்று சொன்னால் நீங்களும் “அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர்’ என்று சொல்லுங்கள். பின்பு அவர், “அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹ்’ என்று சொன்னால் நீங்களும் “அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹ்’ என்று சொல்லுங்கள். பின்பு அவர், “அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ்’ என்று சொன்னால் நீங்களும் “அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ்’ என்று சொல்லுங்கள். பின்பு அவர் “ஹய்ய அலஸ் ஸலாஹ்’ என்று சொன்னால் நீங்கள் “லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ்’ (அல்லாஹ்வின் உதவியில்லாமல் (பாவங்களிலிருந்து) விலகிச்செல்லவோ (நல்லறங்கள் புரிய) ஆற்றல் பெறவோ மனிதனால் முடியாது) என்று சொல்லுங்கள். பின்பு அவர் “ஹய்ய அலல் ஃபலாஹ்’ என்று சொன்னால் நீங்கள், “லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ்’ என்று சொல்லுங்கள். பின்பு அவர் “அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர்’ என்று சொன்னால் நீங்களும் “அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர்’ என்று சொல்லுங்கள். பின்பு அவர் “லா இலாஹ இல்லல்லாஹ்’ என்று சொன்னால் நீங்களும் “லா இலாஹ இல்லல்லாஹ்’ என்று மனப்பூர்வமாகச் சொல்லுங்கள். உங்களில் இவ்வாறு கூறுபவர் சொர்க்கத்தில் நுழைந்துவிட்டார்.
அறிவிப்பவர்: உமர் பின் அல்கத்தாப் (ரலி), நூல் முஸ்லிம் 629

நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் யமன் நாட்டில் அருவிகள் கொட்டும் இடத்தில் இருந்தோம். அப்போது பிலால் (ரலி) அவர்கள் எழுந்து பாங்கு கூறினார். அவர் முடித்த போது நபி (ஸல்) அவர்கள் “யார் உள்ளத்தில் உறுதி கொண்டவராக இவர் கூறியதைப் போன்று கூறுகிறாரோ அவர் சுவர்க்கம் நுழைந்துவிட்டார்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி), நூல்: அஹ்ம்த் 8609

பாங்கின் துஆ

நபி( (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தொழுகை அறிவிப்பாளரின் அறிவிப்பை நீங்கள் செவியுற்றால் அவர் கூறுவதைப் போன்றே நீங்களும் கூறுங்கள். பின்பு என் மீது “ஸலவாத்’ சொல்லுங்கள். ஏனெனில், என் மீது யார் ஒருமுறை “ஸலவாத்’ சொல்கிறாரோ அதன் காரணத்தால் அவருக்குப் பத்து முறை அல்லாஹ் அருள்புரிகின்றான். பின்பு எனக்காக அல்லாஹ்விடம் “வஸீலா’வைக் கேளுங்கள். “வஸீலா’ என்பது சொர்க்கத்திலுள்ள (உயர்) பதவியாகும்; அல்லாஹ்வின் அடியார்களில் ஒருவருக்குத்தான் அது கிடைக்கும். அந்த ஒருவர் நானாகவே இருக்க விரும்புகிறேன். எனவே, எனக்காக அந்தப் பதவியை (அல்லாஹ்விடம்) கேட்பவருக்கு (மறுமை நாளில்) எனது பரிந்துரை அவசியம் கிடைக்கும்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி), நூல் : முஸ்லிம் 628

“அஷ்ஹது அல்லா இலாஹ இல்லல்லாஹு, வஹ்தஹு, லா ஷரீக்க லஹு, வ அன்ன முஹம்மதன் அப்துஹு வ ரசூலுஹு, ரளீத்து பில்லாஹி ரப்பன், வபி முஹம்மதின் ரசூலன், வபில் இஸ்லாமி தீனன்’ என்று சொன்னால் அவருடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டுவிடும். (பொருள்: அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு இணையேதுமில்லை. முஹம்மத் (ஸல்) அவர்கள் அவனுடைய அடியாரும் தூதருமாவார்கள் என்று நான் உறுதிமொழிகிறேன். அல்லாஹ்வை இறைவனாகவும் முஹம்மத் (ஸல்) அவர்களை (அவனுடைய) தூதராகவும் இஸ்லாத்தை மார்க்கமாகவும் நான் மனநிறைவுடன் ஏற்றுக்கொண்டேன்).
அறிவிப்பவர் : சஅத் பின் அபீவக்காஸ் (ரலி), நூல் : முஸ்லிம் 630

தொழுகையை எதிர்பார்த்து இருத்தல்

நபி (ஸல்) அவர்கள் ஓர் இரவில் இஷாத் தொழுகையைப் பாதி இரவு வரை தாமதப்படுத்தினார்கள். (பின்னர் தொழுவித்தார்கள்.) பிறகு அவர்கள் எங்களை நோக்கித் திரும்பினார்கள். அவர்களுடைய மோதிரம் மின்னுவதை இப்போதும் நான் பார்ப்பது போன்றுள்ளது. அப்போது நபி (ஸல்) அவர்கள், “மக்கள் தொழுதுவிட்டு உறங்கிவிட்டார்கள். (ஆனால், நீங்கள் இவ்வளவு நேரம் காத்திருந்து தொழுதிருக்கிறீர்கள்.) நீங்கள் ஒரு தொழுகையை எதிர்பார்த்துக் காத்திருக்கும் வரை அந்தத் தொழுகையிலேயே உள்ளீர்கள். (அதுவரை அதன் நன்மை உங்களுக்குக் கிடைத்துக் கொண்டேயிருக்கும்)” என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர் : அனஸ் (ரலி), நூல்: புகாரி 5869

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவர் தாம் தொழுத இடத்தில் (கூட்டுத் தொழுகையை எதிர்பார்த்து) இருக்கும் வரை அவருக்காக வானவர்கள் பிராத்தித்துக் கொண்டிருக்கிறார்கள். அவருக்கு சிறுதுடக்கு ஏற்படாதவரை (பிராத்திக்கிறார்கள்). இறைவா! இவருக்கு மன்னிப்பளிப்பாயாக! இறைவா! இவருக்கு கருணைபுரிவாயாக! என்று கூறுகின்றனர். தொழுகையானது, ஒருவரைத் தம் குடும்பத்தாரிடம் செல்லவிடாமல் தடுத்து நிறுத்தியிருக்குமானால் அவ்வாறு அவரைத் தொழுகை நிறுத்தியிருக்கும் வரை அவர் தொழுகையில் இருப்பதாகவே கருதப்படுவார்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி (659)

தொழுகையின் ஆரம்ப நோரத்தில் தொழுவதின் சிறப்பு

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தொழுகைக்கு அதன் ஆரம்ப வேளையில் விரைந்து செல்வதில் உள்ள நன்மையை மக்கள் அறிவார்களாயின் அதற்கு முந்திக் கொள்வார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி (615)

ஜமாஅத்தாக தொழுவதின் சிறப்பு

“ஒரு நகரத்திலோ கிராமத்திலோ மூன்று பேர் இருந்து அவர்களுக்கு மத்தியில் பாங்கு கூறப்பட்டு தொழுகை நிலை நாட்டப்படவில்லையாயின் அத்தகையவர்களிடம் ஷைத்தான் ஆதிக்கம் செலுத்தாமல் விட மாட்டான். எனவே நீங்கள் ஜமாஅத்தை வலுவாகப் பிடித்துக் கொள்ளுங்கள். நிச்சயமாக ஓநாய் அடித்துத் தின்னுவது தனித்த ஆட்டைத் தான்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் செவியுற்றேன்.
அறிவிப்பவர்: அபூதர்தா (ரலி), நூல்: அஹ்மத் 27554

யார் நீண்ட தூரத்திலிருந்து நடந்து தொழுகைக்கு வருகின்றாரோ அவருக்கு மற்ற எல்லோரையும் விட அதிகம் நன்மை உண்டு. யார் ஜமாஅத் தொழுகையை எதிர்பார்த்து இருந்து இமாமுடன் தொழுகின்றாரோ அவருக்குத் தனியாகத் தொழுது விட்டுத் தூங்கி விடுபவரை விட அதிகம் நன்மை உண்டு என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூமூஸா (ரலி), நூல் : புகாரி (651)

உங்களில் ஒருவர் ஜமாஅத்துடன் தொழுவது, அவரது வீட்டிலோ, கடைவீதியிலோ தனியாகத் தொழுவதை விட இருபதுக்கும் அதிகமான மடங்கு சிறந்ததாகும். ஏனெனில், அவர் உளூச் செய்து, அதை அழகுறச் செய்து, பிறகு பள்ளிவாசலுக்கு வருகின்றார். தொழுகையைத் தவிர வேறு எதுவும் அவரை (பள்ளிக்கு) எழுந்து செல்ல வைக்கவில்லை. அவர் எடுத்து வைக்கும் ஒவ்வொரு காலடிக்கும் ஒரு படித்தரம் (அந்தஸ்து) அவருக்கு உயர்த்தப்படுகின்றது. அல்லது ஒரு தவறு அவரை விட்டு நீக்கப்படுகின்றது. மேலும் உங்களில் ஒருவர் தொழக்கூடிய இடத்தில் அமர்ந்திருக்கும் வரை வானவர்கள் அவருக்காக துஆச் செய்கின்றனர். அங்கே அவரது காற்று பிரிந்து, உளூ நீங்கி விடாமல் இருக்கும் வரை, (பிறருக்கு) துன்பம் தரும் எதையும் அவர் செய்யாமல் இருக்கும் வரை. “இறைவா! இவர் மீது கருணை செய்வாயாக! இவருக்கு இரக்கம் காட்டுவாயாக!” என்று வானவர்கள் பிரார்த்திக்கின்றார்கள். உங்களில் ஒருவர் தொழுகைக்காகக் காத்திருக்கும் வரை அவர் தொழுகையிலேயே இருக்கின்றார்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல் : புகாரி (2119)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டேன்: யார் தொழுகைக்காக முழுமையான முறையில் அங்கத் தூய்மை (உளூ) செய்து, கடமையான தொழுகைக்காக நடந்துசென்று, “மக்களுடன் தொழுகிறாரோ’ அல்லது “கூட்டுத் தொழுகையில் கலந்துகொள்கிறாரோ’ அல்லது “பள்ளிவாசலில் தொழுகிறாரோ’ அவருக்கு அவருடைய பாவங்களை அல்லாஹ் மன்னித்துவிடுகின்றான்.
அறிவிப்பவர் : உஸ்மான் பின் அஃப்பான் (ரலிலி), நூல் : முஸ்லிம் 393

கூட்டுத் தொழுகையானது, தனியாகத் தொழும் இருபத்தைந்து தொழுகைகளுக்கு நிகரானதாகும்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல் : முஸ்லிம் 1149, 1147

யார் நாளை (மறுமை நாளில்) முஸ்லிமாக அல்லாஹ்வைச் சந்திக்க விரும்புகிறாரோ அவர் தொழுகை அறிவிப்புச் செய்யப்படும் இடங்களில் (பள்ளிவாசல்களில்) இந்தத் தொழுகைகளைப் பேணி வரட்டும். ஏனெனில், அல்லாஹ் உங்கள் நபி (ஸல்) அவர்களுக்கு நேரிய வழிகளைக் காட்டியுள்ளான். (கூட்டுத்) தொழுகைகள் நேரிய வழிகளில் உள்ளவையாகும். கூட்டுத் தொழுகையில் கலந்து கொள்ளாமல் தமது வீட்டிலேயே தொழுது கொள்ளும் இன்ன மனிதரைப் போன்று நீங்களும் உங்கள் வீடுகளிலேயே தொழுது வருவீர்களானால் நீங்கள் உங்கள் நபியின் வழிமுறைகளைக் கைவிட்டவர் ஆவீர்கள். உங்கள் நபியின் வழிமுறையை நீங்கள் கைவிட்டால் நிச்சயம் நீங்கள் வழிதவறிவிடுவீர்கள். யார் அங்கத் தூய்மை (உளூ) செய்து, அதைச் செம்மையாகவும் செய்து பின்னர் இப்பள்ளிவாசல்களில் ஒன்றை நோக்கி வருகிறாரோ அவர் எடுத்து வைக்கும் ஒவ்வோர் அடிக்கும் அவருக்கு அல்லாஹ் ஒரு நன்மையை எழுதுகிறான்; அவருக்கு ஒரு தகுதியை உயர்த்துகிறான்; அவருடைய பாவங்களில் ஒன்றை மன்னித்துவிடுகிறான். நான் பார்த்தவரை எங்களிடையே நயவஞ்சகம் அறியப்பட்ட நயவஞ்சகரைத் தவிர வேறெவரும் கூட்டுத் தொழுகையில் கலந்து கொள்ளாமல் இருந்ததில்லை. (எங்களில் நோயாளியான) ஒரு மனிதர் இரு மனிதருக்கிடையே தொங்கியவாறு அழைத்துவரப்பட்டு (கூட்டுத்) தொழுகையில் நிறுத்தப்பட்டதுண்டு.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி), நூல்: முஸ்லிம் (1159)

முதல் வரிசையில் நிற்பதின் நன்மை

தொழுகை அறிவிப்புச் செய்வதிலும் (கூட்டுத் தொழுகையில்) முதல் அணியி(ல் நிற்பதி)லும் உள்ள(நன்மை)தனை மக்கள் அறிவார்களாயின் அ(தை அடைந்துகொள்வ) தற்குச் சீட்டுக் குலுக்கிப் போடுவதைத் தவிர வேறு வழியில்லாமல்போகுமானால் நிச்சயம் சீட்டுக் குலுக்கிப் போடுவார்கள். தொழுகைக்கு அதன் ஆரம்ப நேரத்தில் விரைந்து செல்வதில் உள்ள நன்மையை மக்கள் அறிவார்களாயின் அதற்கு முந்திக்கொள்வார்கள். இஷாத் தொழுகையிலும் சுப்ஹுத் தொழுகையிலும் உள்ள நன்மையை அவர்கள் அறிவார்களாயின் அதற்குத் (தரையில்) தவழ்ந்தாவது அவர்கள் வந்து விடுவார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரா (ரலி), நூல் : முஸ்லிம் 746

நபியவர்கள் வரிசையின் ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதி வரை சென்று (தொழுகைக்காக அணிவகுத்து நிற்பவர்களின்) நெஞ்சுகளையும், தோள் புஜங்களையும் (நேராக இருக்குமாறு) சரி செய்வார்கள். மேலும் “(முன்பின்னாக) வேறுபட்டு நிற்காதீர்கள்; அப்படி (வேறுபட்டு) நின்றால், உங்கள் உள்ளங்களும் வேறுபட்டுவிடும்” என்று கூறுவார்கள். மேலும் “அல்லாஹ்வும், மலக்குமார்களும் முன்வரிசைகளில் உள்ளவர்கள் மீது ஸலாவாத்துக் கூறுகின்றனர்” என்றும் கூறுபவர்களாக இருந்தனர்.
அறிவிப்பவர் : பரா பின் ஆசிப் (ரலி), நூல்: அஹ்மத் 18539

நபி (ஸல்) அவர்கள் முதலாவது வரிசைக்கு மூன்று முறையும், இரண்டாவது வரிசைக்கு ஒரு தடவையும் ஸலவாத் (பிரார்த்தனை) சொல்லக்கூடியவர்களாக இருந்நனர்
அறிவிப்பவர் : இர்பாள் பின் ஸாரியா (ரலி), நூல்: அஹ்மத் (17196, 17202)

நபி (ஸல்) அவர்கள் தம்முடைய தோழர்களிடத்தில் (வரிசையில்) பின்தங்குவதைக் கண்டார்கள். அவர்களை நோக்கி ”முந்தி வாருங்கள்! என்னைப் பின்பற்றுங்கள். உங்களுக்கு பின்னால் உள்ளவர்கள் உங்களைப் பின்பற்றட்டும். ஒரு கூட்டம் பின்னோக்கி சென்று கொண்டேயிருந்தால் அல்லாஹ் அவர்களை மறுமையில் பிந்தச் செய்து விடுவான்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூ ஸயீதுல் குத்ரீ (ரலி), நூல் : அஹ்மத் 11310

ஒரு கூட்டத்தார் (வேண்டுமென்றே) முன் வரிசையிலிருந்து பின்தங்கிக் கொண்டேயிருந்தால் இறுதியாக அல்லாஹ் அவர்களை நரகத்தில் பின்தங்கச் செய்துவிடுவான்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: அபூதாவூத் 679

வரிசைகளை சரி செய்தல்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மலக்குமார்களின் வரிசையைக் கொண்டு தான் நீங்கள் வரிசையாக நிற்கிறீர்கள். எனவெ தொழுகை வரிசையை நேராக்குங்கள்! இடைவெளிகளை நிரப்புங்கள்! தோள் புஜங்களை நேராக்கிக் கொள்ளுங்கள்!) உங்களின் சகோதரர்களின் கைகளை (பிடித்து அருகில் நிறுத்துவதில்) இதமாக நடந்து கொள்ளுங்கள். ஷைத்தானிற்கு இடைவெளிகளை விடாதீர்கள். யார் வரிசையில் இணைந்து நிற்கிறாரோ அவரை அல்லாஹ் இணைத்துக் கொள்வான். யார் வரிசையைத் துண்டிக்கிறாரோ அவரை அல்லாஹ் துண்டித்து விடுவான்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி), நூல்: அஹ்மத் 5724

அல்ஹம்து சூராவை ஒதினால்….

தொழுகையை எனக்கும் என் அடியானுக்குமிடையே இரு பகுதிகளாகப் பிரித்துள்ளேன். என் அடியான் கேட்டது அவனுக்குக் கிடைக்கும். அடியான் “அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்’ (அனைத்துலகின் அதிபதியான அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்) என்று சொன்னால் மிக்க மேலான அல்லாஹ், “என் அடியான் என்னைப் புகழ்ந்துவிட்டான்’ என்று கூறுவான். அடியான் “அர்ரஹ்மானிர் ரஹீம்’ (அவன் அளவிலா அருளாளன்; நிகரிலா அன்புடையோன்) என்று சொன்னால் மிக்க மேலான அல்லாஹ், “என் அடியான் என்னைத் துதித்துவிட்டான்’ என்று கூறுவான். அடியான் “மாலிக்கி யவ்மித்தீன்’ (தீர்ப்பு நாளின் அதிபதி) என்று சொன்னால், அல்லாஹ், “என் அடியான் என்னைக் கண்ணியப்படுத்தி விட்டான்’ என்று கூறுவான். (நபி (ஸல்) அவர்கள் சில வேளைகளில் “என் அடியான் தன் காரியங்களை என்னிடம் ஒப்படைத்துவிட்டான்’ என்றும் கூறியுள்ளார்கள்.) மேலும், அடியான் “இய்யாக்க நஅபுது வ இய்யாக்க நஸ்தஈன்’ (உன்னையே நாங்கள் வணங்குகிறோம். உன்னிடமே நாங்கள் உதவி தேடுகிறோம்) என்று சொன்னால், அல்லாஹ், “இது எனக்கும் என் அடியானுக்கும் இடையே உள்ளது. என் அடியானுக்கு அவன் கேட்டது கிடைக்கும்’ என்று கூறுவான். அடியான் “இஹ்தினஸ் ஸிராத்தல் முஸ்தகீம். ஸிராத் தல்லதீன அன்அம்த்த அலைஹிம், ஃகைரில் மஃக்ளூபி அலைஹிம் வலள் ளால்லீன்’ (எங்களுக்கு நீ நேரான வழியைக் காட்டுவாயாக. அவ்வழி உன்னுடைய அருளைப் பெற்றவர்களின் வழி. உன்னுடைய கோபத்திற்கு ஆளானவர்கள் வழியுமல்ல; வழிதவறியோரின் வழியுமல்ல) என்று சொன்னால், அல்லாஹ் “இது என் அடியானுக்கு உரியது. என் அடியானுக்கு அவன் கேட்டது கிடைக்கும்’ என்று கூறுவான்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: முஸ்லிம் 655

ஆமீன் கூறும் போது….

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஓதக்கூடியவர் (இமாம்), “ஃகைரில் மஃக்ளூபி அலைஹிம் வலள் ளால்லீன்’ என்று கூறும் போது, அவருக்குப் பின்னால் நிற்பவர் “ஆமீன்’ கூறி, அவர் கூறும் ஆமீன், வானத்திலுள்ள (வான)வர்கள் கூறும் ஆமீனுடன் ஒத்து அமைந்துவிட்டால் அவருடைய முந்தைய பாவங்கள் அவருக்காக மன்னிக்கப்பட்டுவிடுகின்றன.
அறிவிப்பவர் : அபூஹுûரா (ரலி), நூல் : முஸ்லிம் 693, புகாரி 780

ருக்வு, மற்றும் ஸஜ்தாவை நீட்டி செய்தால்…

ருகூவு செய்தல் சிறுபாவங்களை அழிக்கும் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் தொழுது கொண்டிருந்த ஒரு இளைஞரைப் பார்த்தார்கள். அவர் தனது தொழுகை(யின் நிலை)யை நீட்டி அதிலேயே நீண்ட நேரம் நின்றார். இப்னு உமர் (ரலி) அவர்கள் “இவரை யாருக்குத் தெரியும்?” என்று கேட்டார்கள். அப்போது ஒரு மனிதர் “நான் (அறிவேன்)” என்று கூறினார். அப்போது அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் “அவர் எனக்குத் தெரிந்தவராக இருந்திருந்தால் அவர் ருகூவையும், ஸுஜூதையும் நீட்டி(த் தொழுமாறு) ஏவியிருப்பேன். ஏனென்றால் “ஒரு அடியான் தொழுகின்றவனாக நிற்கும் போது அவனுடைய பாவங்கள் கொண்டு வரப்பட்டு அவனது தலையின் மீது அல்லது தோள்புஜத்தின் மீது வைக்கப்படுகிறது. அவர் ஒவ்வொரு தடவை ருகூவு செய்யும் போதும், ஸுஜூது செய்யும் போதும் அவனிடமிருந்து அந்தப் பாவங்கள் உதிர்ந்து விழுந்துவிடும்” என்ற நபியவர்கள் கூற நான் செவியேற்றுள்ளேன் எனக் கூறினார்கள்.
நூல்: இப்னு ஹிப்பான் 1734, பாகம்: 5 பக்கம்: 26

சமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ் என்று கூறும் போது….

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (தொழுகையில்) இமாம், “சமிஅல்லாஹு விமன் ஹமிதஹ்’ என்று கூறும்போது நீங்கள் “அல்லாஹும்ம ரப்பனா ல(க்)கல் ஹம்து’ (எங்கள் இறைவா! எல்லாப் புகழும் உனக்கே உரியது) என்று கூறுங்கள். எவருடைய இந்த வார்த்தை வானவர்களின் வார்த்தைக்கு (நேரத்தால்) ஒத்து அமைந்துவிடுகிறதோ அவருடைய முந்தைய பாவங்கள் அவருக்காக மன்னிக்கப்பட்டுவிடுகின்றன.
அறிவிப்பவர் : அபூஹுûரா (ரலி), நூல் : முஸ்லிம் 688

நின்று தொழுதால்…

நான் மூல வியாதி உடையவனாக இருந்ததால் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் உட்கார்ந்து தொழுவது பற்றிக் கேட்டேன். அதற்கவர்கள் “ஒருவர் நின்று தொழுவதே சிறந்ததாகும். உட்கார்ந்து தொழுபவருக்கு நின்று தொழுபவரின் நற்பலனில் பாதியே உண்டு. படுத்துத் தொழுபவருக்கு உட்கார்ந்து தொழுபவரின் நற்பலனில் பாதியே உண்டு” என்று விடையளித்தார்கள்.
அறிவிப்பவர் : இம்ரான் பின் ஹுஸைன் (ரலிலி), நூல் : புகாரி 1115

தொழுத இடத்திலே அமர்ந்து இருந்தால் வானவர்களின் பிராத்தனை

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒருவர் எந்த இடத்தில் தொழுவாரோ அந்த இடத்திலேயே அமர்ந்திருக்கும் வரை அவருக்காக வானவர்கள் பிராத்தனை செய்கிறார்கள். ஆனால் (உளூவை முறிக்கக் கூடிய)சிறு துடக்கு ஏற்படாம-ருக்க வேண்டும். அப்போது அவர்கள் “இறைவா! இவருக்கு மன்னிப்பüப்பாயாக! இறைவா! இவருக்கு கருணை புரிவாயாக!” என்று பிரார்த்திக்கிறார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ர-), நூல் : புகாரி 445

தொழுகை முடிந்த பின்…

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் ஒவ்வொரு தொழுகைக்குப் பின்பும் முப்பத்து மூன்று முறை சுப்ஹானல்லாஹ் என்றும், முப்பத்து மூன்று முறை அல்ஹம்து லில்லாஹ் என்றும், முப்பத்து மூன்று முறை அல்லாஹு அக்பர் என்றும் ஆக மொத்தம் தொன்னூற்று ஒன்பது முறை கூறி, இறுதியில் நூறாவது முறையாக “லா இலாஹ இல்லல்லாஹு, வஹ்தஹு, லா ஷரீக்க லஹு, லஹுல் முல்க்கு, வ லஹுல் ஹம்து. வஹுவ அலா குல்லி ஷையின் கதீர்’ (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு இணையானவன் எவனுமில்லை. ஆட்சியதிகாரம் அவனுக்கே உரியது. எல்லாப் புகழும் அவனுக்கே உரியது. அவன் அனைத்தின் மீதும் ஆற்றலுள்ளவன்) என்று நிறைவு செய்கிறாரோ அவருடைய (சிறு) பாவங்கள் யாவும் மன்னிக்கப்படுகின்றன. அவை கடலின் நுரையளவு இருந்தாலும் சரியே!
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல் : முஸ்லிம் 1048