தற்கொலை – எச்சரிக்கையும்! தண்டனையும்!

எந்தவொரு சூழலிலும் மரணத்தைக் கேட்டுப் பிரார்த்தனை செய்யக் கூடாது என்பது இஸ்லாமிய மார்க்கத்தில் கூறப்பட்டுள்ள முக்கிய அறிவுரையாகும். இத்தகைய மார்க்கத்தில், மரணத்தைத் தேடிக் கொள்ளும் தற்கொலைக்கு ஒருபோதும் அனுமதி இருக்காது என்பதை எவரும் எளிதில் புரிந்து கொள்ளலாம். இதோ, குர்ஆனில் இறைவன் எச்சரிப்பதைப் பாருங்கள்.
உங்கள் கைகளை அழிவின் பக்கம் கொண்டு செல்லாதீர்கள்!
(அல்குர்ஆன் 2:195)
உங்களையே நீங்கள் மாய்த்துக் கொள்ளாதீர்கள்! உங்கள்மீது அல்லாஹ் நிகரிலா அன்பாளனாக இருக்கிறான். (அல்குர்ஆன் 4:29)
அழிவு தரும் காரியங்களில் ஈடுபடாதீர்கள் என்றும் உங்களை நீங்களே மாய்த்துக் கொள்ளாதீர்கள் என்றும் குர்ஆனில் அறிவுரை கூறப்படுகிறது. மேற்காணும் வசனங்கள், தற்கொலை கூடாது என்பதை உரைக்கின்றன. குர்ஆன் மட்டுமின்றி நபிமொழிகளும் தற்கொலை குறித்து எச்சரித்துள்ளன.

தற்கொலை ஒரு பெரும் பாவம்

நபி(ஸல்) அவர்களிடம் பெரும் பாவங்கள் பற்றிக் கேட்கப்பட்டது. நபி (ஸல்) அவர்கள், ‘அல்லாஹ்வுக்கு இணை வைப்பது, பெற்றோருக்குத் துன்பம் கொடுப்பது, தற்கொலை செய்து கொள்வது, பொய்சாட்சி சொல்வது ஆகியன (பெரும் பாவங்களாகும்)’ என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி), நூல்: புகாரி 2653
பாவமான காரியங்களை விட்டொழிக்குமாறு இஸ்லாம் ஆணையிட்டுள்ளது. அவற்றுள், பாதிப்பைக் கருத்தில் கொண்டு சிலவற்றைப் பெரும் பாவங்கள் என்று அறிவித்துள்ளது. அத்தகைய பெரும் பாவங்களுள் தற்கொலையும் ஒன்று.
எந்தவொரு பிரச்சனைக்கும் தற்கொலை செய்து கொள்வது தகுந்த தீர்வாகாது. தற்கொலை என்பது ஒரு கோழைத்தனம். தன்னம்பிக்கை இல்லாதவர்களின் செயல். இதுபோன்ற செயலை மக்கள் ஒருபோதும் ஆதரிக்கக் கூடாது; அறவே வெறுக்க வேண்டும்.

தற்கொலை செய்தவருக்கு ஜனாஸா தொழுகை உண்டா?

தற்கொலை செய்வதை மக்கள் அஞ்சும் வகையிலும், அவர்களை அதை விட்டுத் தடுக்கும் வகையிலும் தற்கொலை செய்தவர்களின் விஷயத்தை இஸ்லாம் கண்டிப்புடன் அணுகுகின்றது. எவரேனும் தற்கொலை செய்து கொண்டால் அவருக்காக இறுதிச் சடங்கு தொழுகையை (ஜனாஸா தொழுகை) நடத்தக் கூடாது என்று கட்டளை பிறப்பித்துள்ளது.
அகலமான அம்பால் தற்கொலை செய்து கொண்ட ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் கொண்டுவரப்பட்டபோது, அவருக்காக நபி (ஸல்) அவர்கள் தொழ வைக்கவில்லை.
அறிவிப்பவர்: ஜாபிர் பின் சமுரா (ரலி)
நூல்: முஸ்லிம் 1779
இந்த நபிமொழி மூலம், தற்கொலை செய்து கொண்டவருக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுகை நடத்தவில்லை என்பதை அறிய முடிகிறது.
இந்த நபிமொழியைக் கருத்தில் கொண்டு, தற்கொலை செய்து கொண்டவருக்கு ஹாஃபிழ்கள், ஆலிம்கள், அதிகாரிகள், ஆட்சியாளர்கள், பிரமுகர்கள் போன்றோர் ஜனாஸா தொழுகை நடத்தக் கூடாது என்றும் அவருக்காக சாதாரண மக்களுள் எவரேனும் ஜனாஸா தொழுகை நடத்தலாம் என்றும் சிலர் கூறுகிறார்கள்.
ஆனால், மேலுள்ள நபிமொழியில் இருப்பது போன்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு செயலை வெறுத்து செய்யாமல் இருந்தால் அச்செயலை எவரும் செய்யக் கூடாது. இதன்படி, தற்கொலை செய்து கொண்டவருக்கு எவரும் தொழுகை நடத்தக் கூடாது என்பதே சரியானதாகும்.
ஒருவேளை, தற்கொலை செய்து கொண்டவருக்கு தொழுகை நடத்தாமல் இருப்பது நபிகள் நாயகத்திற்கு மட்டுமே உரித்தான சிறப்பு சட்டம் என்றோ, அதை மற்றவர்கள் செய்யலாம் என்றோ கூறுவதாக இருப்பின் உரிய ஆதாரம் இருக்க வேண்டும்.
கடனாளியாக இறந்தவருக்காக தொழுகை நடத்துவதை வெறுத்து, தொழுகை நடத்த மறுத்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், தமக்குப் பதிலாக மற்றவர்கள் தொழுகை நடத்துமாறு அனுமதி அளித்துள்ளார்கள். இப்படியான அனுமதி தற்கொலை செய்து கொண்டவர் விஷயத்தில் காண முடியவில்லை. மாறாக, தற்கொலை செய்து கொண்டவருக்கு எவரும் தொழுகை நடத்தக் கூடாது என்பது தான் சட்டமாக இருந்தது என்பதைப் பின்வரும் நபிமொழி வாயிலாக விளங்கலாம்.
கைபர் போர் தினத்தன்று என் (தந்தையின்) சகோதரர் (ஆமிர்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் சேர்ந்து (யூதர்களுடன்) கடுமையாகப் போரிட்டார். அப்போது அவருடைய வாள் முனை அவரையே திருப்பித் தாக்கிவிட்டது. அதனால் அவர் இறந்துவிட்டார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய தோழர்கள் (சிலர்) இது தொடர்பாக (பல விதமாக)ப் பேசிக் கொண்டனர். அவர் (மரணம்) தொடர்பாக சந்தேகம் வெளியிட்டனர். “அவர் தமது ஆயுதத்தாலேயே இறந்துவிட்ட மனிதர்” என்றும், அவருடைய நடவடிக்கைகளில் இன்னும் சிலவற்றைக் குறித்தும் சந்தேகமாகப் பேசினர்.
கைபரிலிருந்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் திரும்பிச் சென்றபோது (அவர்களிடம்) நான், “அல்லாஹ்வின் தூதரே! தங்களுக்காகச் சில யாப்பு வகைக் கவிதையைப் பாட எனக்கு அனுமதி அளியுங்கள்” என்று கேட்டேன். எனக்கு அவர்கள் அனுமதியளித்தார்கள். அப்போது உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள், “நீ சொல்லவிருப்பதை நான் அறிவேன்” என்று கூறினார்கள். அப்போது நான் பின்வரும் யாப்பு வகைக் கவிதைகளைப் பாடினேன்:
“அல்லாஹ்வின் மீதாணை!
அல்லாஹ் இல்லாவிட்டால்
நாங்கள் நேர்வழி பெற்றிருக்கமாட்டோம்
தர்மமும் செய்திருக்கமாட்டோம்.
தொழுதிருக்கவும் மாட்டோம்“
என்று பாடினேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “நீ உண்மையுரைத்தாய்” என்று கூறினார்கள். பிறகு நான்,
“எங்கள் மீது
அமைதியைப் பொழிவாயாக.
(போர் முனையில் எதிரிகளை)
நாங்கள் சந்திக்கும்போது
எங்கள் பாதங்களை
உறுதிப்படுத்துவாயாக.
இணைவைப்பாளர்கள்
எங்கள்மீது வரம்புமீறிவிட்டார்கள்”
என்று பாடினேன். நான் பாடி முடித்ததும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இதை யாத்தவர் யார்?” என்று கேட்டார்கள். நான் “என் (தந்தையின்) சகோதரர் (ஆமிர்)” என்றேன். “அவருக்கு அல்லாஹ் அருள்புரிவானாக” என்று நபியவர்கள் பிரார்த்தித்தார்கள்.
அப்போது நான், “அல்லாஹ்வின் தூதரே! சிலர், என் சகோதரருக்கு (இறுதித் தொழுகை) தொழுவதற்கு அஞ்சுகின்றனர். அவர் தமது ஆயுதத்தாலேயே தற்கொலை செய்துகொண்ட ஒரு மனிதர் என்று கூறுகின்றனர்” என்றேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “அவர் துன்பங்களைத் தாங்கி, (இறை வழியில்) அறப்போரும் புரிந்து இறந்தார்” என்று கூறினார்கள்.
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: பிறகு நான் சலமா பின் அல்அக்வஉ (ரலி) அவர்களின் புதல்வர் ஒருவரிடம் (இந்த ஹதீஸைப் பற்றிக்) கேட்டேன். அவரும் தம் தந்தையாரிடமிருந்து இதைப் போன்றே எனக்கு அறிவித்தார்.
ஆயினும், “மக்களில் சிலர் ஆமிருக்காக (இறுதித் தொழுகை) தொழுவதற்கு அஞ்சுகின்றனர்” என்று நான் கூறியபோது “அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “அவர்கள் பொய்யுரைத்து விட்டனர். அவர் துன்பங்களைத் தாங்கி (இறைவழியில்) அறப்போரும் புரிந்து இறந்தார். அவருக்கு (நற்செயல் புரிந்த நன்மை, அறப்போர் புரிந்த நன்மை ஆகிய) இரண்டு நன்மைகள் உண்டு” என்று கூறியபடி, தம் இரு விரல்களை இணைத்துக் காட்டினார்கள்” என்று அவர் கூறினார்.
அறிவிப்பவர்: சலமா பின் அல்அக்வஉ (ரலி)
நூல்: முஸ்லிம் 3687, 3686, 3695
போரில் ஆயுதத்தைக் கையாளும் போது காயமுற்று இறந்துபோன ஆமிர் (ரலி) அவர்களுக்கு ஜனாஸா தொழுகை நடத்த எவரும் முன்வரவில்லை. அவர் தற்கொலை செய்து கொண்டார் என்று மக்கள் தவறுதலாக எண்ணியதும், தற்கொலை செய்து கொண்டவருக்கு ஜனாஸா தொழுகை நடத்தக் கூடாது எனும் சட்டம் இருந்ததாலும் தான் எவரும் முன்வரவில்லை.
இதைக் கேள்வியுற்ற நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், ஆமிர் (ரலி) தற்கொலை செய்து கொள்ளவில்லை என்பதையும் அவருக்காக ஜனாஸா தொழுகை நடத்தலாம் என்பதையும் தெளிவுபடுத்தினார்கள்.
தற்கொலை செய்யும் நோக்கம் இல்லாத நிலையில் ஒருவர் ஏதேனும் கருவியைப் பயன்படுத்தும் போது அக்கருவியால் பாதிக்கப்பட்டு இறந்தார் எனில், அவரைத் தற்கொலை செய்து கொண்டவராகக் கருதக் கூடாது என்பதற்கும் மேலுள்ள நபிமொழி சான்றாகத் திகழ்கிறது.
முஸ்லிம் ஒருவர் இறந்து விட்டால் அவரது உடலைக் குளிப்பாட்டி கஃபனிட்டு ஜனாஸா தொழுகை நடத்தி மையவாடியில் அடக்கம் செய்வது நபிவழியாகும். இவற்றுள், தற்கொலை செய்து கொண்டவருக்கு ஜனாஸா தொழுகை நடத்துவதற்குத் தான் நபிமொழியில் தடை வந்துள்ளதே தவிர, ஏனைய காரியங்களைச் செய்வதற்கு எந்தத் தடையும் இல்லை. சுருங்கக் கூறின், அவருக்கு ஜனாஸா தொழுகை தவிர்த்து மற்ற காரியங்களைச் செய்வது முஸ்லிம் சமூகத்திற்குரிய கடமையாகும்.

தற்கொலை மன்னிக்கப்படாத குற்றமா?

அல்லாஹ் எத்தகைய பாவங்களை மன்னிப்பான்? எத்தகைய பாவங்களை மன்னிக்க மாட்டான் என்பது குறித்து மார்க்கத்தில் தெளிவாக கூறப்பட்டுள்ளது.
தனக்கு இணை வைக்கப்படுவதை அல்லாஹ் மன்னிக்கவே மாட்டான். இதைத் தவிர வேறு எதையும், தான் நாடியோருக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கு இணைவைப்பவன் மிகப் பெரிய பாவத்தை இட்டுக்கட்டி விட்டான்.
(அல்குர்ஆன் 4:48)
‘உங்கள் சமுதாயத்தாரில் அல்லாஹ்வுக்கு எதனையும் இணையாகக் கருதாமல் இறந்து விடுபவர், சொர்க்கத்தில் நுழைவார்;.. அல்லது நரகம் புக மாட்டார்’… என்று ஜிப்ரீல் (அலை) அவர்கள் என்னிடம் கூறினார்கள்’ என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள். நான், ‘அவன் விபச்சாரம் புரிந்தாலும், திருடினாலுமா?’ என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘ஆம்; அவன் விபசாரம் புரிந்தாலும் திருடினாலும் சரியே!’ என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: அபூ தர்(ரலி),
நூல்: புகாரி 3222, 7487
நபி (ஸல்) அவர்கள் வெள்ளை ஆடை அணிந்தபடி உறங்கிக் கொண்டிருந்தபோது நான் அவர்களிடம் சென்றேன். பிறகு அவர்கள் விழித்துக்கொண்டபோது (மீண்டும்) அவர்களிடம் சென்றேன். அப்போது, ‘லா இலாஹ இல்லல்லாஹ்’ (வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் இல்லை) என்று சொல்லி, பிறகு அதே நம்பிக்கையில் இறந்துவிடும் மனிதர் எவராயினும், அவர் சொர்க்கம் புகுந்தே தீருவார்’ என்று நபி(ஸல்) அவர்கள் சொன்னார்கள். நான், ‘அவர் விபச்சாரம் புரிந்தாலும் திருடினாலுமா?’ என்று கேட்டேன். நபி(ஸல்) அவர்கள், ‘அவர் விபச்சாரம் புரிந்தாலும் திருடினாலும் சரி (சொர்க்கம் புகுந்தே தீருவார்)’ என்றார்கள். நான் (மீண்டும்) ‘அவர் விபச்சாரம் புரிந்தாலும் திருடினாலுமா?’ என்று கேட்டேன். நபி(ஸல்) அவர்கள், ‘அவர் விபச்சாரம் புரிந்தாலும் திருடினாலும் சரி (சொர்க்கம் புகுந்தே தீருவார்)’ என்றார்கள். நான் (மூன்றாவது முறையாக) ‘அவர் விபச்சாரம் புரிந்தாலும் திருடினாலுமா?’ என்று கேட்டேன். நபி(ஸல்) அவர்கள், ‘அவர் விபச்சாரம் புரிந்தாலும் திருடினாலும் சரி (சொர்க்கம் புகுந்தே தீருவார்). அபூ தர்ரின் மூக்கு மண்ணைக் கவ்வட்டும்! (அதாவது நீர் இதை விரும்பாவிட்டாலும் சரியே)’ என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ தர்(ரலி)
நூல்: புகாரி 5827, 6443, 6444
இறைமறுப்பு, இணைவைப்பு மட்டுமே இறைவனால் மன்னிக்கப்படாத பெரும் பாவங்களாகும். மற்ற பெரும் பாவங்களைப் பொறுத்தவரைக்கும் அல்லாஹ் நாடினால் அவற்றை மன்னித்து விடுவான்.
எவருக்கு மன்னிப்பு வழங்கப்படுமோ அவர் அந்தப் பாவங்களுக்காக நரகத்தில் தண்டனை பெறமாட்டார். எவருக்கு மன்னிப்பு வழங்கப் படவில்லையோ அவர் பாவங்களுக்காக நரகத்தில் தண்டனை பெற்ற பிறகு சொர்க்கம் சென்றுவிடுவார். இப்படியான இரண்டு வாய்ப்பு தற்கொலை செய்தவருக்கும் உண்டு என்பதற்கு மேலுள்ள வசனமும் நபிமொழிகளும் சான்றுகளாக உள்ளன.

தற்கொலைக்குரிய மறுமை தண்டனை

அல்லாஹ் நாடினால், தற்கொலை செய்தவருக்கு மறுமையில் மன்னிப்பு வழங்காமல் நரக தண்டனை வழங்குவான் என்பதற்கு கீழிருக்கும் செய்தி சான்றாக உள்ளது.
இறைத்தூதர் (ஸல்) அவர்களும் (யூத) இணைவைப்பாளர்களும் (கைபர் போரில்) சந்தித்துப் போரிட்டனர். இறைத்தூதர் (ஸல்) அவர்கள், (அன்றைய தினத்தின் போரை முடித்துக் கொண்டு) தம் படையினரிடமும், மாற்று அணியினர் அவர்கள் தம் படையினரிடமும் திரும்பியபோது, இறைத்தூதர் (ஸல்) அவர்களின் தோழர்களிடையே (‘குஸ்மான்’ என்றழைக்கப்பட்ட) ஒருவர் இருந்தார். அவர், (யூதர்களின் அணியிலிருந்து) பிரிந்து சென்ற (போரிடாத) எவரையும், (படையிலிருந்து விலகி) தனியாகப் போரிட்ட எவரையும் விட்டுவிடாமல் அவர்களைப் பின்தொடர்ந்து சென்று தம் வாளால் (வீராவேசமாக) வெட்டி வீழ்த்திக் கொண்டிருந்தார்.
அப்போது, ‘இன்றைய தினம் இன்னவர் (உத்வேகத்துடன் போரிட்டு) தேவையை நிவர்த்தித்துக் கொண்டது போன்று வேறெவரும் நம்மில் தேவை தீரப் போரிடவில்லை’ என்று (மக்களால்) பேசப்பட்டது. அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘அவர் நரகவாசிகளில் ஒருவர்’ என்று கூறினார்கள்.
அப்போது மக்களில் (அக்ஸம் இப்னு அபில் ஜவ்ன் என்ற) ஒருவர், ‘நான் (பின்தொடர்ந்து) அவருடன் செல்லப் போகிறேன்’ என்று கூறினார். (அவ்வாறே) அந்த மனிதருடன் இவரும் புறப்பட்டார். அவர் நிற்கும் போதெல்லாம் அவருடன் இவரும் நின்றார். அவர் விரைந்து சென்றால் அவருடன் இவரும் விரைந்து சென்றார்.
அந்த (குஸ்மான் என்ற) மனிதர் (அப்போரில் ஒரு கட்டத்தில்) கடுமையாகக் காயப்படுத்தப்பட்டார். அதனால் அவர் அவசரமாக இறந்து போக விரும்பி தன்னுடைய வாளை (அதன் கீழ் பகுதியை) பூமியில் வைத்து, அதன் கூரான மேல் பகுதியைத் தன் மார்புகளுக்கிடையில் வைத்து, பிறகு அந்த வாளின் மீது தன் உடலை அழுத்திக் கொண்டு தற்கொலை செய்தார்.
(பின்தொடர்ந்து சென்ற) அந்த மனிதர் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் வந்து, ‘தாங்கள் இறைத்தூதர் என்று நான் உறுதி கூறுகிறேன்’ என்றார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘என்ன அது?’ என்று கேட்டார்கள்.
அதற்கு அவர், ‘இவர் நரகவாசிகளில் ஒருவர் என்று ஒரு மனிதரைப் பற்றித் தாங்கள் சற்று முன்பு கூறினீர்களல்லவா? அதை மக்கள் பெரிதாகக் கருதினர். எனவே நான், ‘அவர் விஷயத்தில் உங்களுக்கு நான் பொறுப்பு’ என்று (மக்களிடம்) கூறிவிட்டு அவரைத் தேடி நான் புறப்பட்டேன். (அவரைக் கண்டுபிடித்து பின்தொடர்ந்து சென்றேன்.) பிறகு அவர் மிகக் கடுமையாக (எதிரிகளால்) காயப்படுத்தப்பட்டார். எனவே, அவர் அவசரமாக இறந்து போக விரும்பி, தன்னுடைய வாளின் (கீழ்) முனையை பூமியில் (நட்டு) வைத்து அதன் மேல்முனையைத் தன் மார்புகளுக்கிடையில் வைத்துத் தன்னை அந்த வாளின் மீது அழுத்திக் கொண்டு தற்கொலை செய்தார்’ என்று கூறினார்.
அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ‘மக்களின் வெளிப்பார்வைக்கு ஒருவர் சொர்க்கவாசிகளின் (நற்) செயலைச் செய்துவருவார். ஆனால், (உண்மையில்) அவர் நரகவாசிகளில் ஒருவராக இருப்பார். இன்னொரு மனிதர் மக்களின் வெளிப்பார்வைக்கு நரகவாசிகளின் (தீய) செயலைச் செய்து வருவார். ஆனால், (உண்மையில்) அவர் சொர்க்கவாசிகளில் ஒருவராக இருப்பார்’ என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி)
நூல்: புகாரி 4203, 2898
இதே செய்தி முஸ்லிம் எனும் நபிமொழி தொகுப்பு நூலில் பின்வரும் கூடுதல் வாசகத்துடன் இடம் பெற்றுள்ளது.
(நபிகள் நாயகம்), பிறகு பிலால் (ரலி) அவர்களிடம் “(துன்பங்களை எல்லா நிலைகளிலும் சகித்துக்கொண்டு அடிபணிந்து வாழ்ந்த) முஸ்லிமான மனிதர்தாம் சொர்க்கத்தில் நுழைவார். மேலும், அல்லாஹ் இந்த மார்க்கத்திற்குப் பாவியான மனிதனின் மூலமும் வலுவூட்டுகிறான்” என்று மக்களிடையே அறிவிப்புச் செய்யுமாறு கூறினார்கள். அவ்வாறே பிலால் (ரலி) அவர்கள் மக்களிடையே அறிவிப்புச் செய்தார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் 178
ஒரு முஸ்லிம் சிறந்த நல்லறங்களைச் செய்திருந்தாலும் அவர் தற்கொலை செய்து இறந்திருப்பார் எனில், அதை அல்லாஹ் மன்னிக்காத பட்சத்தில் அதற்காக அவர் நரகத்தில் தள்ளப்படுவார் என்பதை அறிய முடிகிறது. அங்கு அவருக்கு எத்தகைய தண்டனை வழங்கப்படும் என்பதைப் பின்வரும் செய்திகள் விளக்குகின்றன.
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இஸ்லாம் அல்லாத மார்க்கத்தின் மீது சத்தியம் செய்கிறவர், தாம் சொன்னதைப் போன்றே ஆகி விடுகிறார். தனக்கு உடைமையில்லாத ஒன்றில் நேர்ச்சை செய்வது(ம், அந்த நேர்ச்சையை நிறைவேற்றுவதும்) எந்த மனிதனுக்கும் தகாது. எதன் மூலம் தம்மைத்தாமே தற்கொலை செய்துகொள்ளும் ஒருவர் அதன் மூலம் மறுமை நாளில் வேதனை செய்யப்படுவார். ஓர் இறைநம்பிக்கையாளரை ஒருவர் சபிப்பது அவரைக் கொலை செய்வது போன்றதாகும். இறைநம்பிக்கையாளர் ஒருவரை இறைமறுப்பாளர் என்று அவதூறு சொல்வதும் அவரைக் கொலை செய்வது போன்றதேயாகும்.
அறிவிப்பவர்: ஸாபித் இப்னு ளஹ்ஹாக் (ரலி)
நூல்: புகாரி (6047,1363), முஸ்லிம் (176, 177)
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: கழுத்தை நெரித்துத் தற்கொலை செய்து கொள்கிறவர் நரகிலும் தன்னுடைய கழுத்தை நெரித்துக் கொண்டிருப்பார். தம்மைத்தாமே (ஆயுதத்தால்) தாக்கித் தற்கொலை செய்து கொள்கிறவர் நரகிலும் தம்மை ஆயுதத்தால் தாக்கிக் கொண்டிருப்பார்.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 1365
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மலையின் மீதிருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொள்கிறவர் நரக நெருப்பில் (தள்ளப்பட்டு மேலிருந்து கீழே) என்றைக்கும் நிரந்தரமாகக் குதித்துக் கொண்டேயிருப்பர். விஷம் குடித்து தற்கொலை செய்துகொள்கிறவர் தம் விஷத்தைக் கையில் வைத்திருந்தபடி நரக நெருப்பில் என்றென்றும் நிரந்தரமாக குடித்துக் கொண்டேயிருப்பார். ஒரு கூரிய ஆயுதத்தால் தற்கொலை செய்து கொள்கிறவரின் கூராயுதத்தை அவர் தம் கையில் வைத்துக்கொண்டு நரக நெருப்பில் தம் வயிற்றில் தாமே என்றென்றும் நிரந்தரமாக அதனால் குத்திக் கொண்டேயிருப்பார்.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 5778, முஸ்லிம் 175
இவ்வுலகில் ஒருவர் எப்படித் தற்கொலை செய்து கொண்டாரோ அவ்வாறே மறுமையில் நரகத்தில் வேதனை செய்யப்படுவார்; தண்டிக்கப்படுவார் என்று நபிமொழிகள் எச்சரிக்கின்றன. இங்கு தற்கொலை செய்பவருக்கு ஒரு முறை தான் வேதனை. ஆனால் மறுமையிலோ தொடர்ந்து வேதனை செய்யப்பட்டுக் கொண்டே இருப்பார் என்பதை இந்த நபிமொழி மூலம் அறிய முடிகிறது.
மேலுள்ள நபிமொழியில் தற்கொலை செய்தவர் நரகத்தில் இருப்பதை குறிப்பதற்கு, ஹாலிதன் முஹல்லதன் ஃபீஹா அபதா என்ற சொற்களை நபிகளார் கூறியுள்ளார்கள். இந்த மூன்று சொற்களுள் ஒவ்வொரு சொல்லுக்கும், நிரந்தம் என்ற பொருள் உண்டு. ஒரு விஷயத்தில் மூன்று சொற்களும் பயன்படுத்தி இருப்பதால், தற்கொலை செய்தோர் சொர்க்கம் செல்லாமல் என்றென்றும் நரகத்தில் இருப்பார்களெனப் புரிந்து கொள்ள வேண்டும் என்று சிலர் வாதிடுகிறார்கள்.
வட்டி வாங்குவது, மாறு செய்வது, கொலை செய்வது போன்றவற்றிக்கும் கூட நிரந்தர நரகம் என்று குர்ஆன் வசனங்கள் கூறுகின்றன. அந்த வசனங்களை எப்படி மற்ற செய்திகளுடன் இணைத்துப் புரிந்து கொள்கிறோமோ அப்படித் தான் இந்த நபிமொழியையும் அணுக வேண்டும்.
இறைமறுப்பு, இணைவைப்பு ஆகிய பாவங்களுக்குத் தான் மறுமையில் மன்னிப்பே இல்லை என்பதை முன்னரே பார்த்துள்ளோம். ஆகையால், தற்கொலை செய்தவர் மற்ற பாவங்களுக்கு இருப்பதைக் காட்டிலும் நீண்ட நெடுங்காலம் நரகத்தில் இருப்பார் என்று புரிந்து கொள்வது தான் குர்ஆன் வசனங்களுக்கும் ஏனைய நபிமொழிகளுக்கும் முரணில்லாமல் புரிந்து கொள்வதற்கு ஏற்றமானதாகும். இதுபோலவே பின்வரும் நபிமொழியையும் புரிந்து கொள்ள வேண்டும்.
‘ஒருவருக்கு ஒரு காயம் இருந்தது. (இதைத் தாங்க முடியாமல் அவர் தற்கொலை செய்தார். உடனே அல்லாஹ், ‘என்னுடைய அடியான் அவனுடைய மரணத்தில் அவசரப்பட்டு என்னை முந்திவிட்டான்; எனவே, அவனுக்குச் சொர்க்கத்தை நான் ஹராமாக்கி விட்டேன் எனக் கூறினான்’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஜுன்துப் (ரலி),
நூல்: புகாரி 1364
இச்செய்தியில், சொர்க்கத்தை ஹராமாக்கி விட்டான் என்று இருப்பதால் தற்கொலை செய்தவர் சொர்க்கமே செல்ல மாட்டார் என்று பொருள் வைப்பது கூடாது.
பொதுவாக, சொர்க்கவாசி எனும் சொல், நேரடியாக சொர்க்கம் செல்பவர் மற்றும் நரகத்தில் வேதனை பெற்று சொர்க்கம் செல்பவர் ஆகிய இரண்டு வகையினரையும் குறிக்கும். நரகவாசி எனும் சொல், நிரந்தரமாக நரகில் இருப்பவரையும் குறிக்கும்; குறிப்பிட்ட பாவங்களுக்காக நரகில் தண்டனை பெறுபவரையும் குறிக்கும்.
ஆகவே, இந்தச் சொற்கள் எந்த விஷயத்தில் பயன்படுத்தப்படுகிறது என்பதை அறிந்து அதற்கேற்ப பொருள் கொள்ள வேண்டும். இதைக் கவனத்தில் கொண்டே முன்னர் கண்ட நபிமொழியை விளங்க வேண்டும். இதைப் பின்வரும் செய்தியைக் கொண்டு புரிந்து கொள்ளலாம்.
“அல்லாஹ்வின் பொருத்தம் நாடி ‘லாயிலாஹ இல்லல்லாஹ்’ என்று கூறுகிறவரின் மீது நரகத்தை இறைவன் ஹராமாக்கி விட்டான்” என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்கள்: இத்பான் பின் மாலிக் (ரலி)
நூல்: புகாரி 839. 840
ஏகத்துவக் கலிமாவைத் தூய மனதுடன் சொல்பவருக்கு அல்லாஹ் நரகத்தை ஹராம் ஆக்கிவிட்டான் என்று இந்த நபிமொழி கூறுகிறது. ஆகவே ஏகத்துவ கலிமாவை முன்மொழிந்து இஸ்லாத்தில் இருப்பவர் நரகம் செல்லவே மாட்டார் என்று பொருள் கொள்ள மாட்டோம். எந்தவொரு பாவத்திற்காகவும் நரகத்தில் நிரந்தரமாக இருக்க மாட்டார்; தண்டைனையைப் பெற்றுவிட்டு சொர்க்கம் சென்றுவிடுவார் என்று தான் விளங்குவோம்.
இதுபோலவே, இறைமறுப்பு, இணைவைப்பு அல்லாத காரியத்தில் சொர்க்கத்தை ஹராமாக்கி விட்டான் என்று கூறப்பட்டால் நிரந்தர நரகம் என்று பொருள் கொள்ளக் கூடாது.
தற்கொலை செய்தவர், அதற்குரிய தண்டனையை நரகத்தில் பெறாமல் சொர்க்கம் செல்வதைத் தடுத்துவிட்டான் (அதாவது, இந்தப் பாவத்திற்காக மன்னிப்பைப் பெறும் வாய்ப்பு இருந்தாலும் அந்த வாய்ப்பு மிகவும் குறைவு) அல்லது நெடுங்காலம் நரகத்தில் இருக்குமாறு ஆக்கிவிட்டான் என்று பொருள் கொள்வது, அனைத்து செய்திகளையும் ஒப்புநோக்கும் போது பொருத்தமாக இருக்கிறது.