சூனியத்திற்கு அற்புதங்கள் ஆதாரமாகுமா?

இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கை ஏகத்துவமாகும். அல்லாஹ்விற்கு எந்த வகையிலும் அணுவளவு கூட இணை கற்பிக்காதவரே வெற்றி பெற முடியும்.
ஆனால், இஸ்லாத்தின் அடிப்படை கலிமாவிற்கு எதிரான இணைவைப்பு நம்பிக்கையை இஸ்லாத்தின் பெயராலே இன்று இஸ்லாமிய சமுதாயம் கொண்டிருக்கிறது.
அதிலும் தர்கா வழிபாடும் தாயத்தும் இணைவைப்பு என்று ஏற்றுக் கொண்டவர்கள் கூட சூனியம் விஷயத்தில் சூனியம் ஆகியிருப்பதே வேதனைக்குரிய விஷயம்.
தர்கா வழிபாடு எப்படி இணைவைப்போ அதே அடிப்படைதான் சற்றும் குறையாமல் சூனிய நம்பிக்கையிலும் இருக்கிறது.
அவர்கள் எப்படி மரணித்த உடலுக்கு இல்லாத ஆற்றலாக, அடங்கியிருப்பவர் செவியேற்பார் என்றும், எந்த மொழியினால் அழைத்தாலும் எங்கிருந்து அழைத்தாலும் செவியேற்பார் என்றும் நம்பி இறைவனின் ஆற்றலை அதற்கு வழங்குகிறார்களோ அதுபோலத்தான் சூனிய நம்பிக்கையும் உள்ளது.
சூனியக்காரன் என்று தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட ஒரு மனிதன், தான் இருக்கின்ற இடத்தில் இருந்தபடியே இன்னொரு மனிதனின் மீது சில மந்திரச் சொற்களால் எவ்வித தொடர்புமின்றி பாதிப்பை ஏற்படுத்துவான் என்று நம்புவதே சூனியமாகும்.
இத்தகைய ஆற்றல் எந்தப் படைப்பினத்திற்கும் கிடையாது என்று நம்புவதே ஏகத்துவ நம்பிக்கையாகும்.
ஏனெனில், அல்லாஹ் மட்டும்தான் மனிதர்களுக்கு எவ்வித புறச் சாதனமுமின்றி நன்மையை நாடவும் தீமையை நாடவும் ஆற்றல் படைத்தவன். அவன் ஒரு காரியத்தைச் செய்ய தனது அர்ஷிலிருந்து இறங்கி வரவேண்டும் என்றோ புறச் சாதனங்களை எடுத்துக்கொள்ள வேண்டும் என்றோ அவசியம் இல்லை. ஒரு கட்டளை போதும் அவன் நாடிய காரியம் நிறைவேறிவிடும்.
(அல்லாஹ்வே) வானங்கள் மற்றும் பூமியை முன்மாதிரியின்றிப் படைத்தவன். அவன் ஒரு விஷயத்தைத் தீர்மானித்தால் அதற்கு ‘ஆகு’ என்றுதான் கூறுவான். உடனே அது ‘ஆகி’விடும்.
அல்குர்ஆன் 2:117
“என் இறைவனே! எந்த மனிதனும் என்னைத் தீண்டாத நிலையில் எனக்கு எப்படி மகன் உண்டாக முடியும்?” என்று (மர்யம்) கேட்டார். “அவ்வாறுதான்! அல்லாஹ் நாடியதைப் படைக்கிறான். அவன் ஒரு விஷயத்தைத் தீர்மானிக்கும்போது அதற்கு “ஆகு” என்றுதான் கூறுவான். உடனே அது ஆகிவிடும்” என்று அவன் கூறினான்.
அல்குர்ஆன் 3:47
அல்லாஹ்விடம் ஈஸாவுக்கு உதாரணம் ஆதமைப் போன்றது. அவரை மண்ணால் படைத்து, பின்னர் அவரிடம் ‘ஆகு!’ என்று கூறினான். உடனே அவர் (மனிதப் படைப்பாக) ஆகிவிட்டார்.
அல்குர்ஆன் 3:59
அவன் வானங்களையும், பூமியையும் நியாயமான காரணத்துடனே படைத்துள்ளான். அவன் “ஆகு!” என்று சொல்லும் நாளில் அது ஆகி விடும்.
அல்குர்ஆன் 6:73
ஒரு பொருளை நாம் (படைக்க) நாடினால் அதற்கு நமது கட்டளையானது, ‘ஆகிவிடு!’ என்று நாம் கூறுவதுதான். உடனே அது ஆகிவிடும்.
அல்குர்ஆன் 16:40
பிள்ளையை ஏற்படுத்திக் கொள்வது அல்லாஹ்வுக்கு அவசியமில்லை. அவன் தூயவன். அவன் ஒரு விஷயத்தைத் தீர்மானிக்கும்போது அதற்கு ‘ஆகு’ என்றுதான் கூறுவான். உடனே அது ஆகிவிடும்.
அல்குர்ஆன் 19:35
வானங்களையும், பூமியையும் படைத்தவன் அவர்களைப் போன்றவர்களைப் படைப்பதற்கு ஆற்றலுடையவன் அல்லவா? ஆம்! அவன் மாபெரும் படைப்பாளன்; நன்கறிந்தவன்.
அவன் ஒரு பொருளை(ப் படைக்க) நாடினால், அதற்கு ‘ஆகு’ என்றே ஆணையிடுவான். உடனே அது ஆகிவிடும்.
அல்குர்ஆன் 36:81, 82
அவனே உயிர்ப்பிக்கிறான்; மரணிக்க வைக்கிறான். அவன் ஒரு விஷயத்தைத் தீர்மானிக்கும்போது அதற்கு ‘ஆகு’ என்றுதான் கூறுவான். உடனே அது ஆகிவிடும்.
அல்குர்ஆன் 40:68
திருக்குர்ஆனின் இத்தனை வசனங்களும் இன்னும் இதுவல்லாத பல வசனங்களும் அல்லாஹ்வின் ஆற்றல் குறித்துப் பேசுகிறது.அல்லாஹ்வுடைய ஆற்றலின் தன்மையை விளக்குகிறது. வானங்கள் பூமியைப் படைப்பது உட்பட அவன் தீர்மானிக்கும் அனைத்துமே ஒரு கட்டளையின் மூலமாகவே நடந்தேறிவிடும்.
புறச் சாதனங்களோ, நேரடித் தொடர்போ ஏதுமின்றி நன்மை, தீமை செய்கின்ற ஆற்றல் அல்லாஹ்வுக்கே உரியது என்பது இதிலிருந்து தெளிவாகிறது.
இத்தகைய ஆற்றலை சூனியக்காரனுக்கு வழங்குவது இஸ்லாத்தின் அடிப்படைக்கு எதிரானதில்லையா?
இறைவன் மனிதனுக்கு என்ன ஆற்றல் வழங்கியுள்ளானோ அந்த ஆற்றல் அவனுக்கு இருக்கிறது என்று நம்புவது இயற்கை. அவ்வாறின்றி, இறைவனது ஆற்றலை மனிதனோடு தொடர்புபடுத்துவது எப்படி ஏகத்துவமாயிருக்கும்?
ஒரு மனிதன் இன்னொரு மனிதனை அடித்து வீழ்த்தினான். ஆயுதத்தால் தாக்கினான். அல்லது விஷம், விஷ வாயு போன்ற சாதனங்களால் பாதிப்பை ஏற்படுத்தினான் என்று நம்பினால் அது யதார்த்தம்.
ஆனால், ஒரு மனிதன் ஒரு ஊரில் இருக்கிறான். சூனியக்காரன் என்று தன்னை அடையாளப்படுத்திக் கொண்டவன் வேறொரு ஊரில் இருக்கிறான். இவனிடம் அம்மனிதனின் தலை முடி அல்லது அவன் தொடர்பான ஏதேனும் பொருளை வழங்கினால் அவன் அதன் மூலம் மந்திரங்கள் சொல்லி பாதிப்பை, தான் இருக்கின்ற இடத்திலிருந்தே அந்த மனிதனுக்கு ஏற்படுத்துவான் என்று நம்பினால் இது மனித ஆற்றலா?
வெளியூர் என்று அவ்வளவு வேண்டாம். கைக்கு எட்டும் தூரத்தில் சூனியகாரணாக இருக்கும் மனிதனுக்கு முன்னால் ஒருவன் நிற்கிறான். இவன் அவனை நேரடியாகவோ ஆயுதங்களாலோ விஷத்தினாலோ அன்றி, கைகளைக் கட்டி நின்று கொண்டு பார்த்து அல்லது மந்திரத்தால் பாதிப்பை ஏற்படுத்த முடியுமா?
இத்தகைய ஆற்றல் மனிதனுக்கு இறைவன் வழங்கவில்லை. அது இறைவனின் ஆற்றலாகும். மனிதனுக்கு இறைவன் வழங்காத ஆற்றலை அவனுக்கு இருக்கிறது என்று நாம் நம்பினால் அது தெளிவான இணைகற்பித்தலேயாகும்.
அவன் இரவைப் பகலில் நுழைக்கிறான்; பகலை இரவில் நுழைக்கிறான். சூரியனையும், சந்திரனையும் வசப்படுத்தியுள்ளான். ஒவ்வொன்றும் குறிப்பிட்ட தவணை வரை ஓடுகின்றன. அவனே உங்கள் இறைவனான அல்லாஹ். அவனுக்கே அதிகாரம் உரியது. அவனையன்றி யாரை நீங்கள் பிரார்த்திக்கிறீர்களோ அவர்கள் சிறிதளவு கூட அதிகாரம் பெற மாட்டார்கள்.
அல்குர்ஆன் 35:13
இந்த வசனத்தில், அவர்கள் அல்லாஹ்வையன்றி யாரை வணங்குகிறார்களோ அவர்களுக்கு அணுவளவு கூட இறையாற்றல் கிடையாது என்று இறைவன் கூறுகிறான்.
ஒரு படைப்பினத்தைக் கடவுள் என்று சொன்னால் தான் இணைவைப்பு என்றில்லை. அல்லாஹ்வை நம்புவது போல அணுவளவு நம்பிக்கையை அதன் மீது வைத்தாலும் அதுவும் இணைவைப்பே!
இதை நமது பயத்தை வைத்தும் எளிமையாகப் புரிந்துக் கொள்ளலாம்.
நாம் ஒன்றைப் பார்த்துப் பயம் கொள்கின்றோம் என்றால் நாம் எதற்காகப் பயப்படுகிறோமோ அந்த ஆற்றல் அதில் இருக்க வேண்டும்.
உதாரணமாக, சிங்கம் ஒன்று துரத்துகிறது. அப்போது பயப்படுகிறோம் எனில் அது யதார்த்தம். ஏனெனில் நம்மைத் தாக்க சிங்கத்திற்கு ஆற்றல் இருக்கிறது.
ஒருவன் ஒரு அரிவாளை எடுத்துக் கொண்டு துரத்துகிறான் அல்லது நம்மை விட பலமுடையவன் அடிக்கத் துரத்துகிறான். அப்போது பயப்படுகிறோம் எனில் அதுவும் யதார்த்தம். ஏனெனில் அவ்வாறு செய்ய அவனுக்கு ஆற்றல் இருக்கிறது.
இவ்வாறான இயற்கையான, யதார்த்தமான பயத்திற்கு மாற்றமாக கற்பனை பயம் கொள்கிறோம் எனில் அது இணைவைத்தலில் நம்மை இணைத்துவிடும்.
உதாரணமாக, பேய் பயம். பேய் என்பது ஒன்று இல்லை. பேய் இருக்கிறது என்று நம்புகிறோம் எனில் மரணத்திற்குப் பிறகும் நம்மைத் தாக்கும் வகையில் சில ஆன்மாக்கள் வாழ்ந்து கொண்டு வலம் வருகிறது என்று நம்புகிறோம். இது இணைவைத்தலான பயமாகும்.
ஒரு சிலையிடத்தில் செல்கிறீர்கள். அந்த சிலையிடத்தில் கத்திப் பேசாதீர்கள். கண்ணைக் குத்தி விடும் என்கிறார்கள். அப்போது அதற்குப் பயப்படுகிறீர்கள் எனில் இது இணைவைத்தலைப் பெற்றுத் தரும் பயமாகும்.
“ஹூதே! நீர் எந்த ஒரு தெளிவான சான்றையும் எங்களிடம் கொண்டு வரவில்லை. உமது சொல்லுக்காக எங்கள் கடவுள்களை நாங்கள் விடப் போவதில்லை. நாங்கள் உம்மை நம்பக்கூடியவர்களாக இல்லை” என அவர்கள் கூறினர்.
“எங்கள் கடவுள்களில் சிலர் உமக்குத் தீங்கை ஏற்படுத்தி விட்டார்கள் என்றே சொல்கிறோம்” (என்றும் கூறினர்.) “நான் அல்லாஹ்வைச் சாட்சியாக்குகிறேன். அவனை விட்டுவிட்டு, நீங்கள் (அவனுக்கு) எதனை இணையாக்குகின்றீர்களோ அதனைவிட்டும் நான் விலகிக் கொண்டேன் என்பதற்கு நீங்களும் சாட்சியாக இருங்கள்! நீங்கள் அனைவரும் எனக்கு சூழ்ச்சி செய்யுங்கள். (அதன்) பின்னர் எனக்கு அவகாசம் அளிக்காதீர்கள்” என்று அவர் கூறினார்.
அல்ஆன் 11: 53 – 55
இந்த வசனத்தில் இந்த வகை பயம் குறித்து தெளிவாகத் தெரிந்து கொள்ளலாம். சிலைகள் கேடு செய்யும் என்று ஹுது (அலை) அவர்களை அம்மக்கள் மிரட்டுகிறார்கள். அதற்கு எந்த அச்சமும் இல்லாமல் நீங்கள் எனக்கு என்ன சூழ்ச்சி வேண்டுமானாலும் செய்யுங்கள், கால அவகாசம் கூட வழங்காதீர்கள் என்று ஹுது(அலை) அவர்கள் கூறினார்களே இதுதான் ஏகத்துவம்.
சிலைக்கு இல்லாத ஆற்றல் குறித்து அவர்கள் மிரட்டியவுடன் அஞ்சாமல் அந்தச் சிலைகள் வெறும் மரம், கல் என்று பயமற்று இருக்கிறார்கள்.
பயப்படுவதற்கு எந்த நியாயமும் இல்லாமல், நாம் எதற்கு பயப்படுகிறோமோ அதற்கு அந்த ஆற்றல் இல்லாதபோதும் நாம் அஞ்சினோம் என்றால் அது இணைவைத்தலே!
பயம் ஏற்பட்டால் மட்டுமல்ல! படைப்பினத்திற்கு இறைவன் வழங்கிய யதார்த்த ஆற்றலைத் தாண்டி வேறொரு ஆற்றல் இருக்கிறது என்று நம்பினாலும் அது இணைவைத்தலே!
உதாரணமாக, ஒரு கயிறு இருக்கிறது. அந்த கயிறின் தன்மை என்பது ஒன்றைக் கட்டுவதற்கு பயன்படுவதாகும்.
அத்தகைய கயிறு எனக்கு நோய் நிவாரணம் தரும் என்று நம்பி அதை கட்டிக் கொண்டால் அது கயிறுக்கான தன்மை இல்லை. அதன் யதார்த்த தன்மையை தாண்டிய ஒரு சக்தியை அதற்கு நாம் கற்பனை செய்கிறோம். இது இணைவைத்தலில் கொண்டு போய் சேர்க்கும்.
அதே போலத்தான் சூனியக்காரன் என்பவன் நம்மைப் போன்ற மனிதனாகத்தான் இருக்கிறான் எனும் போது மனிதனுக்கிருக்கும் ஆற்றலுக்காக பயந்தால் குற்றமில்லை. மனித ஆற்றலுக்கு அப்பாற்பட்ட ஆற்றல் இருக்கிறது, மறைவான ஞானம் அவனுக்குண்டு, அவன் விரும்பிய பாதிப்புகளை ஏற்படுத்த சக்தி பெற்றவன் என்று கற்பனை செய்து பயந்தால், நம்பினால் அது இணைகற்பித்தலாகும்.
இவ்வாறு மார்க்கத்தின் அடிப்படைகளைத் தகர்க்கும் வகையில் அமைந்த சூனியம் குறித்து, அதற்கு எந்த ஆற்றலுமில்லை என்று நாம் கூறுகிற போது, சூனியத்தைச் சரிகாண நினைக்கும் தவ்ஹீத்வாதிகள்(!) மார்க்கம் கூறும் அற்புதங்கள் பற்றிய செய்திகளை ஆதாரங்களாக முன்வைக்கின்றனர்.
இஸ்லாத்தின் பெயரால் இணைவைப்பை நியாயப்படுத்த நினைக்கும் ஒவ்வொரு கூட்டத்தாரும் இந்த வழிமுறையையே கையாள்வர்.
அவ்லியாக்களுக்கு ஆற்றல் உள்ளது. அவர்கள் அற்புதம் செய்வார்கள் என்று கூறுபவர்களிடம் என்ன ஆதாரம் என்று கேட்டால் மூஸா நபி செய்தார், ஈஸா நபி செய்தார் என்று கூறுவார்கள்.
நபிமார்கள் வாழ்வில் அற்புதம் நடந்ததற்கு ஆதாரம் உள்ளது. இவர்கள் கூறும் அவ்லியாவும் அற்புதம் செய்தார் என்பதற்கு என்ன ஆதாரம் என்று கேட்டால் அதற்கு எந்தப் பதிலும் இருக்காது.
இதுபோன்று கேள்விகள் கேட்டு ஏகத்துவம் பேசியவர்கள் தான் இன்று சூனியம் விஷயத்தில் அந்தக் கேள்வியைக் கேட்க மறுக்கின்றனர்.

அற்புதங்களை ஆதாரமாக்கும் வினோதம்

நபிமார்கள் எப்படி அல்லாஹ்வின் அனுமதியுடன் அற்புதங்களைச் செய்தார்களோ அதுபோல சூனியக்காரனும் அல்லாஹ்வின் அனுமதியுடன் அல்லது நாட்டத்துடன் செய்கிறான் என்று நம்பினால் அது இணை வைத்தலில்லை தானே? என்று கேட்கிறார்கள்.
இவர்கள் இவ்வாறு கேட்டதும் இதை மேலோட்டமாகப் பார்ப்பவர்களுக்கு சரிதானே என்று தோன்றும்.
ஆனால் இஸ்லாத்தையும் அற்புதங்கள் தொடர்பான அடிப்படையையும் சரியாகப் புரிந்து கொள்ளாததின் விளைவாகவே இந்த வாதம் முன்வைக்கப்படுகிறது.
நபிமார்கள் இறைவன் புறத்திலிருந்து தூதர்களாக நியமிக்கப்பட்டவுடன் மக்களிடத்தில் பிரச்சாரத்தைத் துவக்கினார்கள்.
ஆனால், மற்ற மனிதர்களிடமிருந்து எந்த வகையிலும் வேறுபடாமல் சாதாரண மனிதர்களாகவே இருந்த நபிமார்களை, இவர்கள் நபி தான் என ஏற்றுக் கொள்வதற்கு சான்றுகள் மக்களுக்கு தேவைப்பட்டது.
அத்தகைய நியாயமான தேவையை நிவர்த்தி செய்ய, ஒரு மனிதனால் செய்ய முடியாத சில அற்புதங்களை இறைவன் நிகழ்த்திக் காட்டினான்.
அந்த அற்புதங்களை நாமும் நம்புகிறோம். அனைத்து முஸ்லிம்களும் நம்புகிறார்கள்.
(நபியே!) உமக்கு முன்னரும் தூதர்களை அனுப்பினோம். அவர்களுக்கு மனைவியரையும், பிள்ளைகளையும் ஏற்படுத்தினோம். அல்லாஹ்வின் ஆணையின்றி எந்தத் தூதராலும் அற்புதத்தைக் கொண்டுவர முடியாது. ஒவ்வொரு தவணைக்கும் ஒரு நிர்ணயம் உள்ளது.
அல்குர்ஆன் 13: 38
உமக்கு முன்னரும் தூதர்களை அனுப்பியுள்ளோம். அவர்களில் ஒருசிலரின் வரலாற்றை உமக்கு அறிவித்துள்ளோம். ஒருசிலரின் வரலாற்றை உமக்கு நாம் அறிவிக்கவில்லை. எந்தத் தூதராலும் அல்லாஹ்வின் ஆணையின்றி அற்புதத்தைக் கொண்டு வர முடியாது. அல்லாஹ்வின் ஆணை வரும்போது நீதியுடன் தீர்ப்பளிக்கப்படும். அங்கே பொய்யர்கள் நஷ்டமடைவார்கள்.
அல்குர்ஆன் 40:78
மேற்படி வசனங்களில் அற்புதங்கள் பற்றிய ஒரு அடிப்படையை அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான்.
அதாவது, அற்புதங்கள் என்பது நபிமார்கள் தங்கள் விருப்ப்படி செய்கின்ற காரியம் அல்ல. தாங்கள் நினைத்த நேரத்திலெல்லாம் அல்லது மக்கள் கேட்கும் நேரத்திலெல்லாம் அவர்களால் அற்புதங்களைச் செய்துவிட முடியாது. அல்லாஹ்வின் அனுமதி வேண்டும். அற்புதங்களை நிகழ்த்துவது அல்லாஹ்வின் அதிகாரத்தில் உள்ள விஷயமாகும்.
இதை இன்னும் தெளிவாகப் பின்வரும் வசனங்களிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.
“நீர் எங்களுக்காக ஒரு நீரூற்றைப் பூமியிலிருந்து பீறிட்டு ஓடச் செய்யாதவரை உம்மை நம்பவே மாட்டோம்” என்று அவர்கள் கூறுகின்றனர்.
“அல்லது உமக்குப் பேரீச்சை மற்றும் திராட்சைத் தோட்டம் இருந்து, அவற்றுக்கிடையே ஆறுகள் பாய்ந்தோடுமாறு நீர் செய்ய வேண்டும்”
“அல்லது நீர் நம்புவது போல், எங்கள்மீது வானத்தைத் துண்டு துண்டாக விழச் செய்ய வேண்டும். அல்லது நீர் (எங்கள்) முன்னிலையில் அல்லாஹ்வையும் வானவர்களையும் கொண்டு வர வேண்டும்”
“அல்லது தங்கத்தினாலான வீடு உமக்கு இருக்க வேண்டும்; அல்லது நீர் வானில் ஏறிச் செல்ல வேண்டும். நாங்கள் படிக்கும் வகையில் ஒரு புத்தகத்தை எங்களிடம் கொண்டுவராத வரை நீர் ஏறிச் சென்றதை நாங்கள் நம்பவே மாட்டோம்” (என்றும் கூறுகின்றனர்). (நபியே!) “என் இறைவன் தூயவன். நான் தூதராக இருக்கும் மனிதனைத் தவிர வேறில்லை” என்று கூறுவீராக!
அல்குர்ஆன் 17:90-93
நபி (ஸல்) அவர்களை நபியென்று ஒப்புக் கொள்வதற்கு சில அற்புதங்களை செய்யக் கூறி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர். ஆனால் நபி (ஸல்) அவர்கள் செய்யவில்லை. அவர்களின் கோரிக்கைக்குப் பதிலாக ‘நான் ஒரு மனிதன் தான்’ என்பதைக் கூறுவதன் மூலம் அது என்னால் முடியாத காரியம் என்பதை தெளிவுபடுத்துகிறார்கள்.
அப்படியென்றால், இங்கு அற்புதங்களை நிகழ்த்திக் காட்டுவது நபிமார்கள் அல்ல. அல்லாஹ்தான் அற்புதங்களை நிகழ்த்துகிறான். அற்புதங்கள் செய்ய அவர்களுக்கு எந்த ஆற்றலும் இல்லை என்று தெளிவாகிறது.
மேற்படி அனைத்து வசனங்களும் நமக்கு சொல்லித் தருவதன் சுருக்கம் இதுதான். அதாவது, அற்புதங்கள் எனும் பெயரில் அல்லாஹ் தனது அதிகாரத்தை நபிமார்களுக்கு வழங்கிவிடுவதில்லை. அவ்வாறு இறைவன் அந்த ஆற்றலை நபிமார்களுக்கு வழங்கியிருந்தால் அவர்கள் நினைத்த நேரத்தில் நினைத்ததைச் செய்ய முடிந்திருக்கும். அவ்வாறு அவர்களால் செய்ய முடியவில்லை என்பதிலிருந்தே மனித ஆற்றலுக்கு அப்பாற்பட்ட அற்புதங்கள் அனைத்தும் நபிமார்களின் வாழ்வில் நடந்திருந்தாலும் அது அல்லாஹ்வால் நிகழ்த்தப்பட்டது தானே தவிர அவனது ஆற்றலை நபிமார்களுக்கு வழங்கி அவர்களால் நிகழ்த்தப்பட்டது அல்ல.
மேலும் மேற்படி வசனங்களில், எந்தத் தூதராலும் அல்லாஹ்வின் ஆணையின்றி அற்புதத்தைக் கொண்டு வர முடியாது என்று இடம்பெற்றுள்ளது.
நபிமார்கள் அல்லாஹ்வின் ஆணையுடன் அற்புதங்களைக் கொண்டு வர முடியும் என்று இடம்பெற்றிருப்பதால் நபி (ஸல்) அவர்கள், தாம் நினைத்த நேரத்திலோ, அல்லது தூதுத்துவத்தை நிரூபிப்பதற்காக மக்கள் கட்டாயப்படுத்திய சமயத்திலோ அற்புதத்தை அவர்களால் செய்துவிட முடியவில்லை என்பதை மேற்படி 17:90-93 வசனங்களிலிருந்து அறிந்து கொள்ளலாம். இதிலிருந்தே நபிமார்களுக்கும் அற்புதங்களுக்கும் எந்தச் சம்பந்தமுமில்லை என்பதை அறிந்து கொள்ளலாம்.
ஆனால் சூனியத்தை அல்லது சூனியக்காரனை இவ்வாறு தான் நம்புகிறார்களா?
சூனியக்காரன் எனும் மனிதன் இன்னொரு மனிதனுக்குப் பாதிப்பை ஏற்படுத்துவதாகக் கூறும்போது, என்ன பாதிப்பு ஏற்பட வேண்டும் என்பதைத் தன்னிடம் வரும் மக்களின் விருப்பப்படியோ அல்லது தனது விருப்பப்படியோ முடிவு செய்கிறான். அதுவும் அந்தப் பாதிப்பைத் தான் விரும்பும் நேரத்தில் ஏற்படுத்த முடியும் என்றும் நம்புகிறான். உதாரணமாக, என்னுடைய சூனியத்தைக் கொண்டு இன்னும் இரண்டு நாட்களில் எதிரியின் கை, கால்களை முடக்கி விடுகிறேன் என்று சொல்கிறான். அவனிடம் வரும் அப்பாவி மக்களும் அதை உண்மை என்று நம்புகிறார்கள்.
இதுவும் அற்புதமும் ஒன்றா? நபிமார்கள் விஷயத்தில் அல்லாஹ் தான் விரும்பிய அற்புதத்தை தான் விரும்பிய நேரத்தில் நிகழ்த்திக் காட்டுவான் என்று நம்புவதும், சூனியக்காரன் விரும்பிய பாதிப்பை சூனியக்காரன் விரும்பிய நேரத்தில் அல்லாஹ் ஏற்படுத்துவான் என்று நம்புவதும் ஒன்றா?
இங்கு நபிமார்களின் விருப்பத்திற்கேற்ப அற்புதங்களை நிகழ்த்தாத இறைவன் சூனியக்காரனின் விருப்பத்திற்கேற்ப செயல்படுவான் என்று நம்புகிறார்கள். இந்த இடத்தில் சூனியக்காரனை உயர்வாகவும், அவன் விரும்பியதை, விரும்பிய நேரத்தில் செய்து கொடுக்கும் அல்லாஹ்வைக் கீழாகவும் ஆக்குவதுபோல் இல்லையா?
நபிமார்களை விட சூனியக்காரனுக்கு அல்லாஹ்விடம் செல்வாக்கு அதிகம் என்ற மோசமான நம்பிக்கை ஒருபுறம்! அல்லாஹ்வையே சூனியக்காரன் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறான் என்ற மிக ஆபத்தான நம்பிக்கை மறுபுறம்! சூனியத்தை நம்புபவர்கள் எவ்வளவு பெரிய வழிகேட்டில் இருக்கிறார்கள் என்பதற்கு இது சான்றாக உள்ளது.
எனவே, அற்புதங்களுக்கும், இவர்கள் நம்புகிற சூனியத்திற்கும் முடிச்சுப் போடுவது முழங்காலுக்கும் மொட்டைத் தலைக்கும் முடிச்சிடுவது போல எவ்வித தொடர்புமில்லாதது என்பதை இதிலிருந்து புரிந்து கொள்ளலாம்.
சரி! எந்தத் தூதராலும் அல்லாஹ்வின் ஆணையின்றி அற்புதத்தைக் கொண்டு வர முடியாது என்பதை எவ்வாறு புரிவது என்பதையும் அறிந்து கொள்ள வேண்டும்.

இல்லா பிஇத்னில்லாஹ் என்பதன் பொருள் என்ன?

எந்தத் தூதராலும் அல்லாஹ்வின் ஆணையின்றி அற்புதத்தைக் கொண்டு வர முடியாது என்ற கருத்திலமைந்த வசனங்களில் அல்லாஹ்வின் ஆணையின்றி என்பதற்கு அரபு மூலத்தில் ‘இல்லா பிஇத்னில்லாஹ்’ என்ற அரபு வாசகம் இடம்பெற்றிருக்கும்.
இதற்கு அல்லாஹ்வின் அனுமதி, நாட்டம் என்று தமிழ் மொழிபெயர்ப்புகளில் பயன்படுத்தியிருந்தாலும் ஆணை, கட்டளை என்ற தமிழ் வார்த்தையே இதற்கு மிகப் பொருத்தமானது என்பதை மூஸா நபியின் வரலாற்றில் நடந்த சில அற்புதங்களை அறிந்து கொண்டால் இன்னும் தெளிவாக விளங்கலாம்.
“மூஸாவே! உமது வலது கையில் இருப்பது என்ன?” (என இறைவன் கேட்டான்.) “இது என் கைத்தடி! இதன்மீது நான் ஊன்றி நிற்பேன். இதைக் கொண்டு எனது ஆடுகளுக்கு இலை பறிப்பேன்; இதனால் எனக்கு வேறுசில பயன்களும் இருக்கின்றன”என்று அவர் கூறினார்.
(அதற்கு இறைவன்) “மூஸாவே! அதை(க் கீழே) போடுவீராக!” என்று கூறினான்.
அவர் அதைப் போட்டார். உடனே அது ஓடக்கூடிய பாம்பானது. “அதைப் பிடிப்பீராக! பயப்படாதீர்! அதன் முந்தைய நிலைக்கே அதைத் திரும்பக் கொண்டு வருவோம். உமது கையை அக்குள் பகுதியில் சேர்த்து வைப்பீராக! அது மாசற்ற வெண்மையாக வெளிப்படும். அது மற்றொரு சான்றாக உள்ளது. நமது மாபெரும் சான்றுகளில் சிலவற்றை உமக்குக் காட்ட வேண்டும் என்பதே இதற்குக் காரணம். ஃபிர்அவ்னிடம் செல்வீராக! அவன் வரம்பு மீறி விட்டான்” என்று (இறைவன்) கூறினான்.
அல்குர்ஆன் 17:17-23
மூஸா (அலை) அவர்கள் அல்லாஹ்விடம் பேசச் செல்கிறார்கள். அப்போது தன்னுடன் ஒரு கைத்தடியை எடுத்துச் செல்கிறார்கள். அந்தக் கைத்தடி குறித்து இறைவன் வினவுகிறான். அதன் தேவைகளைப் பற்றி மூஸா (அலை) அவர்கள் சொல்கிறார்கள். அல்லாஹ் கீழே போடச் சொல்கிறான். அது சீறும் பாம்பாக மாறுகிறது. அதை எடுத்தால் மீண்டும் கைத்தடியாகவே மாறுகிறது.
மூஸா (அலை) அவர்களுக்கு அது பாம்பாக மாறும் எனத் தெரியவில்லை. அதனால் தான் பாம்பாக மாறியதும் மூஸா (அலை) பயந்தார் என்றும் குர்ஆன் பேசுகிறது.
மூஸா (அலை) தனது கைத்தடியின் மூலம் என்னென்ன தேவைகள் நிறைவேறுமோ அதை மாத்திரம் செய்து கொண்டிருந்தார்கள். ஆனால் அந்த கைத்தடியின் மூலமாக அல்லாஹ் ஒரு அற்புதத்தை நிகழ்த்துகிறான்.
இதனால் மூஸா (அலை) அவர்களுக்கு, தான் நினைக்கும் போதெல்லாம் தன்னுடனே இருக்கும் தன் கைத்தடியைப் பாம்பாக மாற்ற இயலுமா? முடியாது. அல்லாஹ் எப்போது போடுமாறு கட்டளையிடுகிறானோ அப்போது போட்டால் மாத்திரம் தான் அது பாம்பாக மாறும்.
அதே போல அவர்களது கையை விலாப்புறத்தில் விட்டு எடுக்கச் சொல்கிறான். அது வெண்மையாக மிளிர்கிறது.
இதனால் மூஸா (அலை) அவர்கள் தனது கையை விலாபுறத்தில் விட்டு எடுக்கும் போதெல்லாம் கை வெண்மையாகுமா என்றால் ஆகாது. அல்லாஹ்வுடைய அடுத்த கட்டளை வரும் போது செய்தால் மட்டுமே அதை வெண்மையாக அல்லாஹ் மாற்றுவான்.
அல்லாஹ், அவ்வாறே மற்ற நேரங்களில் இந்த இரு அற்புதத்தையும் நிகழ்த்தினான். ஃபிர்அவ்னிடத்தில் அவர்கள் சென்று பிரச்சாரம் செய்த போது அல்லாஹ்வின் கட்டளை வந்தது. அல்லாஹ்வின் கட்டளைப்படி மூஸா நபியவர்கள் செயல்பட்டார்கள். அல்லாஹ் அற்புதத்தை நிகழ்த்தினான்.
ஃபிர்அவ்ன் அந்த அற்புதத்தை மறுக்கும் விதமாக அது சூனியம் என்று கூறினான். எனது சூனியக்காரர்களுடன் நீர் போட்டியிட தயாரா என்று மூஸா (அலை) அவர்களை அழைக்கிறான்.
இரு தரப்புக்குமிடையே போட்டி நடந்த நிகழ்வை அல்லாஹ் பதிவு செய்கிறான்.
“மூஸாவே! நீர் போடுகிறீரா? அல்லது நாங்கள் (முதலில்) போடவா?” என அவர்கள் கேட்டனர்.
“நீங்களே போடுங்கள்!” என்று அவர் கூறினார். அவர்கள் போட்டதும் மக்களின் கண்களை மயக்கி, அவர்களைப் பயமுறுத்தினர். அவர்கள் மாபெரும் சூனியத்தைக் கொண்டு வந்தனர்.
“உமது கைத்தடியைப் போடுவீராக!” என்று நாம் மூஸாவுக்கு அறிவித்தோம். உடனே அது (பாம்பாக மாறி) அவர்கள் பொய்யாகத் தோற்றுவித்ததை விழுங்கியது.
உண்மை உறுதியானது. அவர்கள் செய்து கொண்டிருந்தவை பொய்யாகி விட்டன.
அல்குர்ஆன் 7:115-118
மூஸா (அலை) அவர்களால் சுயமாக அற்புதம் செய்ய இயலும் என்றால் போட்டி ஆரம்பித்ததும் அவர்கள் வித்தைகளைச் செய்ததும் கைத்தடியைப் போட்டிருப்பார்கள். ஆனால் அவர்களால் சுயமாக அவ்வாறு செய்ய இயலாது என்பதால்தான் அல்லாஹ்வின் வஹீ வந்ததும் போடுகிறார்கள். அது பாம்பாக மாறுகிறது. இங்கு அற்புதத்தை நிகழ்த்தியது மூஸா (அலை) அவர்கள் அல்ல. அவர்களைப் பொறுத்தவரையில் அது ஒரு கைத்தடி! அதை இறைவன் போடச் சொல்கிறான். அவர்கள் போடுகிறார்கள். இவ்வளவுதான் அவர்களின் அதிகாரம். அதை மாற்றுவதெல்லாம் அல்லாஹ்தான்.
மேலும் மூஸா (அலை) அவர்கள் வாழ்வில் நடைபெற்ற, கடல் பிளந்த அற்புதமாக இருக்கலாம், பன்னிரெண்டு நீருற்று பாறையிலிருந்து பீறிட்டதாக இருக்கலாம். அனைத்தையும் அவர்கள் நினைத்த நேரத்தில் எல்லாம் செய்ய முடியவில்லை. அவர்கள் நினைத்த போதெல்லாம் கடலைப் பிளக்க முடியவில்லை. நீரூற்றை உருவாக்க முடியவில்லை. அல்லாஹ்வின் கட்டளை வரும்போது கைத்தடியால் மூஸா (அலை) அவர்கள் அடிப்பார்கள், அற்புதம் நிகழும். இங்கு அற்புதத்தை நிகழ்த்துவது மூஸா (அலை) அவர்கள் அல்ல. அல்லாஹ்வே!
(இந்த அற்புதங்களின் நிகழ்வுகளை பார்க்க அல்குர்ஆன் 26:61-63, 2:60)
அதே போல ஈஸா (அலை) அவர்களின் வாழ்விலும் மனித சக்திக்கு அப்பாற்பட்ட சில அற்புதங்கள் வெளிப்பட்டன. அதை ஈஸா (அலை) அவர்கள் சுயமாகச் செய்யவில்லை. அவர்களுக்கு அந்த ஆற்றலும் கிடையாது. அல்லாஹ்வின் கட்டளை வரும். அவர்கள் செயல்படுவார்கள். அல்லாஹ் அற்புதத்தை நிகழ்த்துவான். இதைப் பின்வரும் வசனம் எடுத்துரைக்கிறது.
இஸ்ராயீலின் வழித்தோன்றல்களுக்குத் தூதராகவும் (அவரை அனுப்பினான்). “நான் உங்கள் இறைவனின் சான்றுடன் உங்களிடம் வந்துள்ளேன். உங்களுக்காகக் களிமண்ணால் ஒரு பறவையின் வடிவத்தைப் போன்று உருவாக்கி அதில் ஊதுவேன். அது அல்லாஹ்வின் ஆணைப்படி பறவையாக ஆகும். அல்லாஹ்வின் ஆணைப்படி இறந்தவர்களை உயிர்ப்பிப்பேன்; பிறவிக் குருடரையும் தொழுநோயாளியையும் குணப்படுத்துவேன். நீங்கள் உண்பவற்றையும், உங்கள் வீடுகளில் சேமிப்பவற்றையும் உங்களுக்கு அறிவிப்பேன். நீங்கள் இறைநம்பிக்கையாளர்களாக இருந்தால் இதில் உங்களுக்குச் சான்று உள்ளது” (என்று ஈஸா கூறினார்.)
அல்குர்ஆனு 3: 49
இந்த வசனத்தில் உருவத்தை வடிவமைத்து ஊதுவது மட்டும்தான் ஈஸா(அலை) அவர்களின் வேலை! அதைப் பறவையாக மாற்றுவதெல்லாம் அல்லாஹ்தான் என்றும், அவ்வாறே இறந்தவர்களை உயிர்ப்பித்தல், நோயாளிகளைக் குணப்படுத்துதல் போன்ற அற்புதங்களையும் அல்லாஹ் நிகழ்த்தினான் என்றும் இந்த வசனத்திலிருந்து தெரிய வருகிறது.
எனவே, அற்புதங்களை நபிமார்களாயினும் அவர்கள் நினைத்த நேரத்தில் செய்ய முடியாது. அல்லாஹ்வே அற்புதத்தைச் செய்பவன். அந்த அதிகாரம் நபிமார்கள் உட்பட எந்த மனிதருக்கும் கிடையாது என்பதுதான் இந்த நிகழ்வுகள் உணர்த்தும் பாடமாக இருக்கிறது.
இந்த அற்புதங்களை சூனியத்திற்கு ஆதாரமாக ஆக்குபவர்கள் சூனியத்தை இவ்வாறு நம்புவதில்லை.
நபிமார்களே அற்புதங்களைத் தாமாக நினைத்த நேரங்களிலெல்லாம் செய்திட முடியாது என்றும், அந்த அதிகாரம் அல்லாஹ்விற்குரியது, அவனே அற்புதங்களை நிகழ்த்துவான் என்றும் தான் மேற்படி வசனங்கள் இஸ்லாத்தின் அடிப்படையைக் கூறுகின்றன.
ஆனால், அந்த நபிமார்களையெல்லாம் விட சூனியக்காரனை உயர்த்திப் பிடித்து இறைவன் தனது அதிகாரத்தை அந்தச் சூனியக்காரனுக்கு வழங்கியதாக நம்புகிறார்கள்.
சூனியக்காரன் என்பவன் எப்போது என்ன செய்ய நாடினாலும் அவன் சில மந்திர வார்த்தைகளைக் கூறினால் அது நடக்கும். அவன் ஒரு மனிதனின் மீது, தான் நாடிய நேரங்களிலெல்லாம் பாதிப்பை ஏற்படுத்துவான் என்று நம்புகிறார்கள்.
சூனியக்காரன் ஏதோ செய்வான், எப்போதாவது யதார்த்தமாக அதனால் பாதிப்பு நடக்கும் என்று நம்பவில்லை. யதார்த்தமாக நடப்பது பொதுவாக அனைவருக்கும் ஏதோ ஒரு நேரத்தில் நடக்கும். அதற்கு சூனியக்காரன் என்ற தனியொருவன் தேவையில்லை.
உதாரணமாக, ஒருவன் விமானத்தில் செல்கிறான். விமானத்தில் இருந்த அனைவரும் விபத்தில் இறந்துவிடுகின்றனர். இவன் ஒரு காயம் கூட இல்லாமல் பிழைத்துவிடுகிறான். இதை இவனது ஆற்றல் என்று சொல்வோமோ? யதார்த்தமாக ஏதோ இறைவன் அருளால் தப்பித்துள்ளான் என்று சொல்வோமா?
அவனது ஆற்றல் என்றால் அவனை ஒரு விமானத்தில் அமர வைத்து, அதை நாமே வேண்டுமென்று எத்தனை முறை வெடிக்க வைத்தாலும் அவன் தப்பிக்க வேண்டும். அப்படி யாராலும் தப்பிக்க இயலாது. அதிலிருந்தே ஏதோ இறைவன் நாட்டத்தால் ஒரு முறை தப்பித்தான் என்றே முடிவு செய்வோம்.
சூனியத்தை இவ்வாறான யதார்த்தமாக யாரும் நம்புவதில்லை. அப்படி நம்பினால் சூனியக்காரன் என்றொருவன் தனியே தேவையில்லை.
மாறாக, சூனியக்காரன் தான் நாடியதை நினைத்த நேரங்களிலெல்லாம் செய்வான் என்று நம்புகிறார்கள் எனில் இது நபிமார்களோடும் அவர்கள் மூலம் வெளிப்பட்ட அற்புதங்களோடும் இவர்களை ஒப்பிடுவதில்லை. மாறாக அந்த அற்புதத்தைத் தான் நாடும் நேரத்தில் செய்யும் இறைவனோடு ஒப்பிடுவதாகும்.
இத்தகைய இணைவைப்பிற்கு நபிமார்களுக்கு வெளிப்பட்ட அற்புதங்களை ஆதாரமாக்குவது எவ்வளவு பெரிய வினோதமானது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
சாமிரி செய்ததும், தஜ்ஜால் செய்வதும் ஆதாரமாகுமா?
ஸாமிரி என்பவன் மூஸா நபி காலத்தில் வாழ்ந்தவன். அவன் தங்கத்தால் ஒரு காளை மாட்டைச் செய்து, அதைச் சப்தமிடவும் செய்தான். இந்த விபரங்களைப் பின்வரும் வசனங்களில் அல்லாஹ் கூறுகிறான்.
பிறகு அவன், அவர்களுக்கு (வெறும்) உடலைக் கொண்ட காளைக் கன்றை வெளிப்படுத்தினான். அதற்கு மாட்டின் சப்தமும் இருந்தது. அப்போது அவர்கள், “இதுவே உங்களுக்கும் கடவுள்; மூஸாவுக்கும் கடவுள்! ஆனால் அவர் மறந்து விட்டார்” எனக் கூறினர்.
அக்கன்று, அவர்களிடம் எந்தப் பேச்சுக்கும் மறுமொழி கூறாது என்பதையும், அது, அவர்களுக்குத் தீமையோ, நன்மையோ செய்ய வலிமையற்றது என்பதையும் அவர்கள் சிந்திக்க வேண்டாமா?
“என் சமுதாயத்தினரே! இதைக் கொண்டே நீங்கள் சோதிக்கப்பட்டுள்ளீர்கள். உங்கள் இறைவன் அளவிலா அருளாளன்தான். எனவே, என்னைப் பின்பற்றுங்கள்! என்னுடைய ஆணைக்கும் கட்டுப்படுங்கள்!” என முன்னரே அவர்களிடம் ஹாரூன் கூறியிருந்தார்.
அல்குர்ஆன் 20:88-90
மூஸா நபியின் சமுதாய மக்கள் எந்த அளவு உறுதியுடன் இருக்கிறார்கள் என்பதைச் சோதிக்கும் விதமாக அல்லாஹ் இந்த அற்புதத்தை ஸாமிரி மூலம் நிகழ்த்திக் காட்டினான். ‘என் சமுதாயமே! இதன் மூலம் சோதிக்கப்பட்டுள்ளீர்கள்’ என்று ஹாரூன் நபி கூறியதிலிருந்து இதை அறிந்து கொள்ளலாம்.
நினைத்த மாத்திரத்தில், நினைத்த அற்புதத்தை ஸாமிரி செய்வான் என்று இதைப் புரிந்து கொள்ள முடியாது.
ஸாமிரி தான் செய்த காரியத்தைப் பற்றி அவன் கூறிய நேரடி வாக்குமூலத்தை இறைவன் பதிவு செய்கிறான்.
“ஸாமிரியே! உன்னுடைய விஷயம் என்ன?” என்று (மூஸா) கேட்டார்.
“அவர்கள் பார்க்காததை நான் பார்த்தேன். இத்தூதருடைய காலடியிலிருந்து ஒரு பிடி (மண்ணை) எடுத்து அதை எறிந்தேன். எனக்கு, என் உள்ளம் இவ்வாறு அலங்கரித்துக் காட்டியது”என்று அவன் கூறினான்.
“போய்விடு! இந்த வாழ்க்கையில் உனக்குரிய (தண்டனையான)து ‘தீண்டாதே!’ எனக் கூறுவதுதான். உன்னால் மாற்றப்பட முடியாத உனக்கென நிர்ணயிக்கப்பட்ட ஒருநேரம் உண்டு. நீ வணங்கிக் கொண்டிருந்த உன் கடவுளைப் பார்! நாம் அதை நெருப்பில் எரித்து, பிறகு அதை ஒரேயடியாகக் கடலில் தூவி விடுவோம்” என்று (மூஸா) கூறினார்.
அல்குர்ஆன் 20:95-97
ஸாமிரி, இதுபோலச் செய்ய ஆற்றல் எனக்கு உள்ளது என்று கூறவில்லை. அல்லது எனது ஆற்றலால் இதுமட்டுமல்ல! இன்னும் நிறைய அற்புதங்களைச் செய்வேன் என்று கூறவில்லை.
மாறாக, காளைக் கன்றைச் செய்து, மண்ணை அதில் போட எனக்குத் தோன்றியது, அவ்வளவு தான் என்று கூறினான்.
இதுபோல் செய்யும் ஆற்றல் அவனுக்கு இல்லை என்பதையும், ஏதோ காளைக் கன்றை வடிவமைத்து அவ்வாறு செய்ய அவனுக்குத் தோன்றியதைச் செய்தான் என்பதையும், அவ்வாறு செய்தால் அது சப்தமிடும் என்பதும் கூட அவனுக்குத் தெரியாது என்பதையும் மேலுள்ள வசனங்களிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.
தற்செயலாக நடந்த காரியத்தை வைத்து அல்லாஹ்வின் நாட்டத்தைக் கொண்டு சாமிரி என்பவன், தான் நினைத்த நேரத்தில் அவனால் அதைச் செய்ய முடிந்தது என்று சொல்ல முடியுமா?
இவ்வாறான செயலை எப்படி சூனியத்துடன் ஒப்பிட முடியும்?
ஒவ்வொருவரின் வாழ்விலும் தற்செயலாக இது போல நடக்கத்தான் செய்யும். அதையெல்லாம் ஆதாரமாக்க முடியுமா?
ஏற்கனவே கூறியதுபோல், ஒருவர் விமானத்திலிருந்து பிழைத்துக் கொள்கிறார். இது இவரால் எப்போதும் செய்ய முடிகின்ற காரியமல்ல! தற்செயலாக நடந்த நிகழ்வு.
அதுபோல் தற்போது நடக்கும் தற்செயலாக நடக்கும் காரியங்களையெல்லாம் பட்டியலிட்டுவிட்டு இதுதான் சூனியத்திற்கு ஆதாரம் என்று சொன்னால் எவ்வளவு நகைப்பிற்குரிய வாதமோ அப்படித்தான் இதுவும் உள்ளது.
ஏனெனில் சூனியத்தை இவ்வாறான தற்செயல் என்று நம்பவில்லை. அவன் எதையும் எப்போதும், நினைத்த்தை நினைத்த நேரத்தில் செய்பவன் என்று நம்புகிறார்கள்.

தஜ்ஜால்

தற்செயலான சாமிரியின் நிலையையும், திட்டமிட்டு பாதிப்பு ஏற்படுத்த முடியும் என்று கூறும் சூனியக்காரனையும் சம்பந்தமில்லாமல் ஒப்பிட்டதைப் போல தஜ்ஜாலையும் சூனியக்காரனுடன் முடிச்சிடுவார்கள்.
தஜ்ஜால் என்பவன் இறுதிக் காலத்தில் இறைவனால் வெளிப்படுத்தப்படுவான். இவனைப் பற்றி நூஹ் நபியிலிருந்து ஒவ்வொரு நபிமார்களும் தனது சமுதாயத்திற்கு எச்சரிக்கை செய்துள்ளார்கள்.
இறைவனுக்கு மட்டுமே உரித்தான சில காரியங்கள் தஜ்ஜாலிடமிருந்து வெளிப்படும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
தஜ்ஜால் இறைவனது அனுமதியைக் கொண்டு செயல்படுவதைப் போல சூனியக்காரனும் செயல்படுவான் என்று நம்பினால் என்ன பிரச்சனை? அது எப்படி இணை வைத்தலாகும் என்று சூனியத்தை நியாயப்படுத்த நினைப்போர் கேட்கின்றனர்.
தஜ்ஜால் குறித்து நபிகள் நாயகம் எடுத்துரைத்த ஹதீஸ்களே இதை சூனியத்துடன் முடிச்சிட முடியாது என்பதை நமக்குத் தெளிவாக எடுத்துரைக்கின்றன.
தஜ்ஜால் குறித்த செய்திகளை அறிந்து கொண்டால் இது நமக்குத் தெளிவாகப் புரியும்.
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் மக்களிடையே எழுந்து நின்று, அல்லாஹ்வை அவனது தகுதிக்கேற்பப் புகழ்ந்தார்கள். பிறகு தஜ்ஜாலை நினைவு கூர்ந்து சொன்னார்கள்:
நான் அவனைக் குறித்து உங்களை எச்சரிக்கின்றேன். எந்த இறைத்தூதரும் அவனைக் குறித்து தன் சமுதாயத்தாரை எச்சரிக்காமல் இருந்ததில்லை. நூஹ் (அலை) அவர்கள் தம் சமுதாயத்தினரை அவனைக் குறித்து எச்சரித்தார்கள். ஆயினும், நான் அவனைப் பற்றி வேறெந்த இறைத்தூதரும் தன் சமுதாயத்தாருக்குச் சொல்லாத ஒரு விபரத்தை உங்களுக்குச் சொல்கிறேன். அவன் ஒற்றைக் கண்ணன் என்பதையும் அல்லாஹ் ஒற்றைக் கண்ணன் அல்லன் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்.
நூல்: புகாரி 3057
மதீனாவின் நுழைவாயில்களில் நுழைவது தஜ்ஜாலுக்குத் தடை செய்யப்பட்டிருக்கும் நிலையில் தஜ்ஜால் வருவான். மதீனா(வை அடுத்துள்ள) உவர் நிலம் ஒன்றில் அவன் தங்குவான்; அவனை நோக்கி மக்களிலேயே சிறந்த ஒரு மனிதர் புறப்படுவார்; அவர் அவனிடம், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எவனது செய்தியை எங்களுக்கு முன்னறிவிப்புச் செய்தார்களோ அந்த தஜ்ஜால் நீதான் என்று நான் உறுதி கூறுகிறேன்” என்பார்.
அப்போது தஜ்ஜால் (மக்களை நோக்கி), “நான் இவனைக் கொன்று, பிறகு உயிர்ப்பித்தால் (நான்தான் இறைவன் எனும்) இந்த விஷயத்தில் நீங்கள் சந்தேகம் கொள்வீர்களா?” என்று கேட்பான். மக்கள் “இல்லை, (சந்தேகிக்க மாட்டோம்)” என்பார்கள்.
உடனே, அவன் அவரைக் கொன்று, பின்னர் உயிர்ப்பிப்பான். அப்போது அந்த (நல்ல) மனிதர் உயிர்பெற்றதும், “அல்லாஹ்வின் மீதாணையாக! இன்றைய தினத்தைவிடத் தெளிவாக உன்னைப் பற்றி நான் (இதற்குமுன்) ஒருபோதும் அறிந்திருக்கவில்லை” என்று கூறுவார். தஜ்ஜால், “நான் இவரைக் கொல்வேன்” என்பான். ஆனால், அவர்மீது அவனுக்கு அதிகாரம் வழங்கப்படாது.
நூல்: புகாரி 1882, 6599, 1749
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாவது:
நான் உங்களிடம் தஜ்ஜாலைப் பற்றிய செய்தி ஒன்றைச் சொல்லப் போகிறேன் வேறெந்த இறைத்தூதரும் அதைத் தன் சமூகத்தாருக்குச் சொன்னதில்லை. அவன் ஒற்றைக் கண்ணன் ஆவான். அவன் தன்னுடன் சொர்க்கம் நரகம் போன்றதைக் கொண்டு வருவான். அவன் எதை சொர்க்கம் என்று கூறுகின்றானோ அது தான் நரகமாக இருக்கும். நூஹ் அவர்கள் அவனைக் குறித்து தன் சமூகத்தாரை எச்சரித்ததைப் போன்று நானும் உங்களை (அவனைக் குறித்து) எச்சரிக்கின்றேன்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நூல்: புகாரி 3338
ரிப்யீ பின் ஹிராஷ் அவர்கள் கூறியதாவது:
உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்கள் ஹுதைஃபா (ரலி) அவர்களிடம், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து நீங்கள் கேட்டதை எங்களுக்கு அறிவிக்கமாட்டீர்களா? என்று கேட்டார். ஹுதைஃபா (ரலி) அவர்கள், “தஜ்ஜால் வெளியே வரும் போது அவனுடன் தண்ணீரும் நெருப்பும் இருக்கும். மக்கள் எதை இது நெருப்பு’ என்று கருதுகின்றார்களோ அது (உண்மையில்) குளிர்ந்த நீராக இருக்கும். மக்கள் எதை இது குளிர்ந்த நீர் என்று கருதுகின்றார்களோ, அது (உண்மையில்) எரித்துக் கரித்துவிடும் நெருப்பாக இருக்கும். அவனை உங்களில் எவர் சந்திக்கின்றாரோ அவர், தான் நெருப்பாகக் கருதுவதில் விழட்டும். ஏனெனில், அது குளிர்ந்த சுவையான நீராகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டிருக்கின்றேன் என்று சொன்னார்கள்.
நூல்: புகாரி 3450
அவனது கண், (ஒரே குலையில்) துருத்திக் கொண்டிருக்கும் திராட்சையைப் போன்றிருக்கும் என்று கூறினார்கள்.
நூல்: புகாரி 3439
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தஜ்ஜாலைப் பற்றி எச்சரித்த அன்றைய தினத்தில், “தஜ்ஜாலின் இரு கண்களுக்கிடையில் ‘காஃபிர்’ (இறைமறுப்பாளன்) என்று எழுதப்பட்டிருக்கும். அவனது நடிவடிக்கையை வெறுக்கின்ற ஒவ்வொருவரும் அதை வாசிப்பார்கள்; அல்லது ஒவ்வோர் இறைநம்பிக்கையாளரும் வாசிப்பார்கள்’’ என்றும், “அறிந்து கொள்ளுங்கள்: உங்களில் எவரும் இறப்பதற்கு முன் தம் இறைவனைப் பார்க்க முடியாது” என்றும் கூறினார்கள்.
நூல்: முஸ்லிம் 5614
தஜ்ஜால் குறித்த அடிப்படையான தகவல்கள் உள்ளடங்கிய செய்திகள் இவைதான்.
1. தஜ்ஜாலைக் குறித்து ஒவ்வொரு நபிமார்களும் எச்சரிக்கை செய்துள்ளார்கள்.
2. அவன் ஒற்றைக் கண்ணன். அவனது கண் துருத்திக் கொண்டிருக்கும் திராட்சையைப் போன்றிருக்கும்.
3. அவனது நெற்றியில் காஃபிர் என்று எழுதப்பட்டிருக்கும். ஒவ்வொரு மூஃமின்களும் அதை வாசிப்பார்கள்.
4. அவன் தன்னுடன் சொர்க்கம் நரகம் போன்றதைக் கொண்டு வருவான். அவன் சொர்க்கம் என்று சொல்வதுதான் நரகமாக இருக்கும்.
5. அவனிடம் ஒரு நல்லடியார் சென்று நீதான் தஜ்ஜால் எனக் கூறியதும் அவரைக் கொன்று உயிர்பிப்பான். அவர் உயிர்ப்பிக்கப்பட்டவுடன் நீதான் தஜ்ஜால் என்று உறுதியாக நம்புகிறேன் என்று சொல்வார். அவரைக் கொல்ல முயல்வான் ஆனால் அவனால் அவரைக் கொல்ல இயலாது.
தஜ்ஜால் செய்வதும் சூனிய நம்பிக்கையும் ஒன்றல்ல என்பதற்கு இந்தச் செய்திகளே ஆதாரமாக இருக்கின்றன.
தஜ்ஜால் என்பவன் ஒருவன் வருவான் என்று அனைத்து சமுதாயத்திற்கும் எச்சரிக்கை செய்யப்பட்டிருக்கிறது. காஃபிர் என்று அவனது நெற்றியில் எழுதப்பட்டதை வைத்தும் ஊனமான கண்ணை வைத்தும் மூஃமின்கள் அவனை அறிந்து கொள்வர்கள் என்றும் சொல்லப்பட்டுவிட்டது.
அவன் மூலம் என்னென்ன காரியங்கள் வெளிப்படும் என்பதையும் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் நமக்குத் தெளிவுப்படுத்திவிட்டார்கள்.
பொய் பித்தலாட்டமான ஒரு காரியத்தைச் செய்வான். தண்ணீரையும் நெருப்பையும் கொண்டு வருவான். அவன் குளிர் தண்ணீர் என்று சொல்வதுதான் கொதி நீராக இருக்கும். இப்படியான பொய் பித்தலாட்டம் மட்டுமே அவன் செய்வான்.
மேலும், அவன் தன்னை இறைவன் என்று வாதிட்டு ஒரு நல்ல மனிதரைக் கொன்று உயிர்பிப்பான்.
தஜ்ஜாலின் எந்த நோக்கத்திற்காக அந்த மனிதர் உயிர்ப்பிக்கப்பட்டாரோ அந்த நோக்கம் அந்த மனிதரிடத்திலேயே நிறைவேறாது.
அந்த நல்ல மனிதர் அவனை மறுத்து நீ தஜ்ஜால்தான் என்று கூறுவார்.
மீண்டும் அவரைக் கொல்ல முயல்வான். ஆனால் அவரை அவனால் கொல்ல முடியாது.
ஒரு மனிதனைக் கொல்வது என்பது எல்லோராலும் இயலும் காரியம்தான். ஆனால் அந்தக் காரியத்தைக் கூடச் செய்ய முடியாத பலவீனமானவனாகவே அவன் இருப்பான். அந்த நேரத்திலேயே அவன் செய்தது அவனது ஆற்றல் இல்லை என்று நிருபிக்கப்பட்டு அவன் பொய்ப்பிக்கப்படுவான்.
இதிலிருந்தே அவனுக்கு எந்த ஆற்றலும் இல்லை என்றும் மக்களைச் சோதிப்பதற்காக அல்லாஹ் ஒரு நேரத்தில் அவனை வெளிப்படுத்துகிறான் என்றும், அவனுக்கு இதில் கடுகளவும் ஆற்றல் இல்லை என்றும் தெரிகிறது.
சாமிரியின் மூலம் எப்படி அவனுக்கு எந்த ஆற்றலும் இல்லாமல் சோதனைக்காக அல்லாஹ் வெளிப்படுத்தினானோ அப்படியாகத்தான் இந்த தஜ்ஜால் தொடர்பான செய்தியும் இருக்கிறது.
ஆனால், இவர்கள் சூனியத்தை இவ்வாறு நம்புவதில்லை. சூனியக்காரன் தான் நினைத்த நேரத்தில் நினைத்த்தைச் செய்வான் என்றே நம்புகிறார்கள்.
மேலும், தஜ்ஜால் என்பவன் ஒருவன் தான். அவன் பல நபர்கள் கிடையாது.
ஆனால் சூனியக்காரன் என்று தன்னை சொல்லிக் கொள்பவன் உலகில் லட்சக்கணக்கில் இருக்கின்றான். இன்று சாதரணமான மனிதனாக இருப்பவன் கூட நாளை தன்னை சூனியக்காரன் என்று அறிமுகப்படுத்துகிறான்.
தஜ்ஜால் என்ற தனியொருவன் மூலம் ஏற்கனவே என்னென்ன காரியங்களை இறைவன் வெளிப்படுத்துவான் என்று எச்சரிக்கப்பட்டதை நம்புவதும், தான் நினைத்ததைத் தன்னால் செய்ய முடியும் என்று சொல்லும் சூனியக்காரனை நம்புவதும் சமமா?
அல்லாஹ் சோதனைக்காக வெளிப்படுத்துவதையும், யதார்த்தமாக மனித வாழ்வில் நடப்பதையும் சூனியத்திற்கு ஆதாரமாகக் காட்டுகிறார்கள். ஆனால் அவர்கள் காட்டும் ஆதாரங்களுக்கும் அவர்களின் நம்பிக்கைக்கும் எவ்விதச் சம்பந்தமுமில்லை.
இதன்பின்பும் அல்லாஹ் தனக்குள்ள ஆற்றலை சூனியக்காரனுக்கு வழங்குவான் என்று கூறுவார்கள் என்றால் அதற்கான ஆதாரத்தைச் சமர்ப்பிக்க வேண்டும். ஆனால் அவ்வாறு அல்லாஹ் வழங்க மாட்டான். அதற்கான ஆதாரமும் கிடையாது.
அல்லது தஜ்ஜால், சாமிரிக்கு வெளிப்படுத்தியதைப் போல் சூனியக்காரனுக்கும் ஏதாவது ஒரு நேரத்தில் வெளிப்படுத்துவான் என்று சொல்வார்கள் என்றால் கீழ்க்கண்ட கேள்விகளுக்கு இவர்கள் பதிலளித்தாக வேண்டும்.
எந்தக் காரியங்களை அல்லாஹ் வெளிப்படுத்துவான்? அதற்கான ஆதாரம் என்ன?
எல்லாக் காரியங்களையும் அல்லாஹ் வெளிப்படுத்துவான் என்றால் அதற்கான ஆதாரம் என்ன?
எல்லா சூனியக்காரனுக்கும் அல்லாஹ் அனுமதி அளித்துள்ளானா? அதற்கான ஆதாரம் என்ன?
அனைவருக்கும் அல்லாஹ் அனுமதி அளிக்கவில்லை; சிலருக்குத் தான் அனுமதி அளித்துள்ளான் என்றால் அந்தச் சிலர் யார்? அதற்கான ஆதாரம் என்ன?
இக்கேள்விகளுக்கு இவர்களிடம் பதில் இல்லை என்றால் சூனியக்காரனுக்கு அல்லாஹ் அனுமதி அளிக்கவில்லை என்பது உறுதி. அதே போல இந்தக் கேள்விகளுக்கு அவர்களால் ஆதாரங்களுடன் பதிலளிக்க முடியாது என்பதும் உறுதி.
எனவே, அல்லாஹ் தனது ஆற்றலைத் தனது நபிமார்கள் உட்பட எந்த மனிதருக்கும் வழங்க மாட்டான்.
‘அல்லாஹ் நாடினால் சூனியத்தின் மூலம் பாதிப்பு ஏற்படும்’ என்பதே சூனிய நம்பிக்கையாளர்களின் கடைசி ஆயுதம்.
அல்லாஹ்வின் நாட்டத்தால் சூனியத்திற்கு ஆற்றல் உண்டு என்று கூறுவோரிடம் ஒரு கேள்வியை முன்வைக்கிறோம். அல்லாஹ் நாடினால் சிலைகள் பாதிப்பை ஏற்படுத்தும், அல்லாஹ் நாடினால் கப்ரில் உள்ளவர்கள் அற்புதம் செய்வார்கள் என்று கூறுவோருக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம் உள்ளது?
இதைச் சிந்தித்தாலே இவர்களது வாதம் எவ்வளவு அபத்தமானது என்பதை அறியலாம்.