சிறந்த நற்பண்புகளும், சுவனத்து மாளிகையும்

உலகின் மோகத்திற்கும், தாகத்திற்கும் இரையாகுபவர்கள் மனித இனத்தவர்களே! அதன் அலங்காரத்தின் மீது அலாதி ஆர்வம் கொண்டு அதை அடைந்திட படாதபாடுபடுகின்றனர். அந்தப் பேராசைகளுள் பெரும்பங்கு வகிப்பது “சொந்த வீட்டில் சொகுசாக வசிக்கவேண்டும்” என்பதே! இயற்கை வளத்தில், தமக்கான நிலத்தில், உயர் தரத்தில் இல்லம் அமைத்திட வேண்டும் என்பது பலரின் உள்ளத்தில் உலாவும் கற்பனையாக உள்ளது.

எனினும், இவ்வுலகில் கட்டப்படும் கோட்டை கொத்தளங்களும், மாட மாளிகைகளும் மண்ணாய் போகும் என்பதில் அங்குலம் அளவும் ஐயமில்லை. அதனைக் கட்டி மகிழ்ந்தவர்களும், கண்டு நெகிழ்ந்தவர்களுமே நிரந்தரமானவர்களில்லை.

என்றும் நித்தியமான, சத்தியமான சுவனத்து மாளிகையில், சொந்தத் தாரகையில் இடம் பிடித்திட, தடம் பதித்திடக் களமமைத்துத் தந்துள்ளார்கள் திருத்தூதர் முஹம்மத் நபி (ஸல்) அவர்கள்.

நியாயம் இருந்தும் தர்க்கம் தவிர்த்தவர்!

உண்மையாளாராக இருந்தும் தர்க்கம் செய்வதை யார் விட்டுவிடுகிறாரோ அவருக்கு சொர்க்கத்தின் கீழ் தளத்தில் மாளிகை கிடைக்க நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஹதீஸின் ஒரு பகுதி) 

அறிவிப்பவர்: அபூ உமாமா அல் பாஹிலி (ரலி) 

நூல்: அபூதாவூத் 4167

இருவர் மோதிக் கொள்ளும் அடிதடி சண்டையைக் கூட அடக்கிவிடலாம். ஆனால், இருவருக்கிடையில் நடக்கும் வாய்த் தகராறை ஓய்த்திடவே முடியாது. அப்படி விவேகமின்றி விவாதிப்பவர்கள் எந்த எல்லைக்கும் சென்றிடுவர்.

மனிதர்கள் மன்றத்தில் மாமியார் மருமகளுக்கும், கணவன் மனைவிக்கும், தகப்பன் பிள்ளைக்கும் ஏற்படும் பிணக்கிற்கு அநாவசிய தர்க்கமும், அவசியமற்ற முழக்கமுமே அளப்பெரும் காரணமாய் உள்ளது.

யாரேனும் சிலர், எதிர்வினா தொடுத்தாலோ, எகத்தாளமாய் பேசினாலோ சினம் கொண்ட விவாத வேங்கையாய் களம் கண்டிடுவர். அதிலும் தன் மீது நியாயம் இருந்து விட்டால் எதிர் தரப்பு உயிர் தப்புவது கொஞ்சம் சிரமம் தான்!

இத்தகையோர் இறைத்தூதரின் வாழ்வை சற்றுப் புரட்டிப் பார்க்கக் கடமைப்பட்டுள்ளனர்.

(ஒருமுறை தலைவலியினால் சிரமப்பட்ட) ஆயிஷா (ரலி), ‘என் தலை(வலி)யே!’ என்று சொல்ல, இறைத்தூதர் (ஸல்) அவர்கள், நான் உயிரோடிருக்கும் போதே உனக்கு அது (-இறப்பு-) ஏற்பட்டுவிட்டால் உனக்காக நான் (அல்லாஹ்விடம்) பாவமன்னிப்புக் கோரி உனக்காகப் பிரார்த்திப்பேன்’ என்று கூறினார்கள். ஆயிஷா (ரலி), ‘அந்தோ! அல்லாஹ்வின் மீதாணையாக! நான் (விரைவில்) இறந்து போய் விடுவதையே நீங்கள் விரும்புகிறீர்கள் என்று எண்ணுகிறேன். நான் இறந்துவிட்டால் அந்த நாளின் இறுதியிலேயே நீங்கள் உங்களுடைய (மற்ற) துணைவியரில் ஒருவருடன் மணவறை காண்பீர்கள். (என்னை மறந்து விடுவீர்கள்)’ என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள் (புன்னகைத்து விட்டு) ‘இல்லை (உனக்கு ஒன்றும் ஆகாது); நான்தான் (இப்போது) ‘என் தலை(வலி)யே!’ என்று சொல்ல வேண்டியுள்ளது. 

நூல்: புகாரி 5666

பொதுவாக கணவன் மனைவிக்கிடையில் ஏச்சும், வீச்சும் வரவில்லையானால் தான் ஆச்சர்யம். அதுவே நியதியும் கூட. எனினும் அண்ணல் நாயகம் (ஸல்) அவர்கள் பன்னிரெண்டு துணைவியர்களோடு வளமுடன் வாழ்ந்துள்ளார்கள் என்பது நம்மை வியக்கவும், லயிக்கவும் வைக்கின்றது. அந்த வாழ்வியல் ரகசியத்தை மேற்படி குறிப்பிடப்பட்டுள்ள தரவு நமக்குத் தெரியப்படுத்துகின்றது.

காட்டுமிராண்டி கணவன்மார்களுக்கு மத்தியில் கண்மணி நாயகம் தனித்து விளங்கியுள்ளார்கள். “நீ மரணித்து விட்டால், உனக்காக நான் பிரார்த்தனையையும், பாவமன்னிப்பையும் கோருவேன்” என அண்ணலார் கூறியதை புரிந்து கொள்ளாத ஆயிஷா நாயகி “நீங்கள் என் மரணத்தை விரும்புகின்றீர்களா?” என விவாதிப்பதற்கு வினா தொடுத்த வேளையில் நகைச்சுவை பேசி நகர்ந்துவிட்டார்கள் நபிகளார்.

இது போன்று, மண பந்தத்தில் பண்போடும், பரஸ்பரத்தோடும் விட்டுக் கொடுத்துப் போகையில் தான் வாழ்வு வெற்றி வாகை சூடும். அனைத்திற்கும் அனர்த்தமாக விவாதிக்கும் பொழுது, அந்த இணக்கம் பிணக்காகிவிடும்.

அப்துல்லாஹ் இப்னு ஸுபைர் (ரலி) அறிவித்தார்.

பனூ தமீம் குலத்தாரில் ஒரு பயணக் குழுவினர் நபி(ஸல்) அவர்களிடம் வந்தனர். (தமக்கு ஒரு தலைவரை நியமிக்கும்படி கோரினர்.) அபூபக்ர்(ரலி), ‘(இறைத்தூதர் அவர்களே!) கஅகாஉ இப்னு மஅபத் இப்னி ஸுராரா அவர்களை இவர்களுக்குத் தலைவராக்குங்கள்” என்று கூறினார்கள். உமர்(ரலி), ‘இல்லை; அக்ரஉ இப்னு ஹாபிஸ் அவர்களைத் தலைவராக்குங்கள்” என்று கூறினார்கள். அபூபக்ர்(ரலி) (உமர் அவர்களிடம்), ‘நீங்கள் எனக்கு மாறுசெய்யவே விரும்புகிறீர்கள்” என்று சொல்ல, உமர் (ரலி), ‘உங்களுக்கு மாறுசெய்வது என் நோக்கமல்ல” என்று பதிலளித்தார்கள். இருவரும் இப்படி மாறி மாறிப் பேசிச் சச்சரவிட்டுக்கொண்டார்கள். இறுதியில், இருவரின் குரல்களும் உயர்ந்தன. இது தொடர்பாகவே, ‘இறைநம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் முன்னர் (கருத்துக் கூற) முந்தாதீர்கள். அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! அல்லாஹ் செவியேற்பவன்; நன்கறிந்தவன்” எனும் (திருக்குர்ஆன் 49:1) வசனம் அருளப்பட்டது.

நூல்: புகாரி 4367

இச்சம்பவம் நமக்கு எதை உணர்த்துகிறது? சாதாரணமாகத் தோன்றிய கருத்து மோதலில் அண்ணலாரின் சமாதானக் குரலைச் சாய்த்துவிடும் வகையில் அவ்விருவரின் தர்க்கப் பேச்சு மிகைத்துவிடுகின்றது. இதுவே உறவுகளுக்கிடையில் பிரிவுகளை உண்டாக்கும் உலோகக் கருவியாக இருக்கின்றது.

நம் மீது நீதம் இருந்தாலும், மௌனம் காக்கும் பொழுதும், பேச்சில் வியனம் காட்டும் பொழுதும் எதிர் தரப்புக்கு அதுவே தக்க பதிலாக அமையும். அந்தப் பணிவும், கனிவும் இருவருக்கிடையில் இணக்கத்தை ஏற்படுத்தும்.

விளையாட்டிலும் வாய்மை காத்தவர்!

விளையாட்டாகக் கூட யார் பொய்யைக் கைவிட்டுவிட்டாரோ அவருக்கு சுவனத்தின் நடுத்தளத்தில் மாளிகை கிடைக்க நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஹதீஸின் ஒரு பகுதி)

 நூல்: அபூதாவூத் 4167

நகைத்துப் பேசுவதையும், விளையாடி மகிழ்வதையும் வரவேற்கிறது இஸ்லாம். அதே சமயம் பொய்யையும் புரட்டையும் வேரோடு வீசியெறியச் சொல்கிறது. பெரும் பாவங்களின் பட்டியலில் அங்கம் வகித்துள்ள இந்தப் பொய்மை விளையாட்டிற்குக் கூட உரைக்க உகந்ததல்ல.

சில நபித்தோழர்கள், அல்லாஹ்வின் தூதரே! “எங்களோடு நீங்கள் நகைத்துப் பேசுகின்றீர்களே” என்று கேட்கையில்; நபி(ஸல்) அவர்கள் “(ஆம்) என்றாலும் நான் உண்மையை தவிர வேறெதையும் உரைப்பதில்லை” என்று பதிலளித்தார்கள். 

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) 

நூல்: அஹ்மத் 8462

பல பொறுப்புகளை தலையில் சுமந்திருந்தவர்கள் நபிகளார். இருப்பினும் தம் தோழர்கள் மத்தியில் நகைத்துப் பேசியுள்ளார்கள். பல தருணங்களில் கடைவாய் பற்கள் தெரியும் வகையிலும் சிரித்துள்ளார்கள். எனினும் அந்த நகைப்பும், சிரிப்பும் வாய்மையையே வார்த்தது. பொய்யாமையையே வாரியிரைத்தது.

“பிராங்க்” என்ற பெயரில் பொய் கூறி, ஏமாற்றி, பிறரைத் திடுக்கிடச் செய்வதும், “முட்டாள் தினம்” என்ற பெயரில் முட்டாள்தனமாகக் கொண்டாடப்படும் கொண்டாட்டங்களும் இன்றைய இளம் வர்க்கத்திற்கு மத்தியில் வாடிக்கையாகிவிட்டது. இது போன்றவைகளை இஸ்லாம் வன்மையாகக் கண்டிக்கின்றது.

“ஐந்தில் வளையாதது ஐம்பதிலும் வளையாது” என்பார்கள். பாலகப் பருவத்திலிருந்து நமக்கு எது பழக்கமாக்கப்பட்டுள்ளதோ பல் விழும் வரை அதுவே நமது வழக்கமாக மாறிவிடும். விளையாட்டிற்காக நாம் சொல்லும் பொய்கள் அதுவே நமது தொடர் செயலாக ஒட்டிக்கொள்ளும்.

உண்மையை மட்டுமே மொழிவேன் என ஒருவர் ஊர்ஜிதத்தோடு உறுதிமொழிந்தால், மற்ற எல்லா தீமைகளிலிருந்தும் விடுதலையாகிவிடுவார். “தவறை மறைக்கத்தானே பொய் கூற வேண்டும், ஆகவே நான் எந்த பாவத்தையும் செய்ய மாட்டேன்” என்று முடிவெடுக்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைக்கலாம். இப்படி, வாய்மை என்பது எல்லா வழிகளிலும் நன்மை சேர்க்கின்றது.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்,

உண்மை, நிச்சயமாக நன்மைக்கு வழி காட்டும், நன்மையானது நிச்சயம் சொர்க்கத்திற்கு வழிகாட்டும். ஒருவர் உண்மை பேசிக்கொண்டே இருப்பார். இறுதியில் அவர் ‘வாய்மையாளர்’ (சித்தீக்) ஆகிவிடுவார். (இதைப் போன்றே) பொய் நிச்சயமாகத் தீமைக்கு வழிவகுக்கும்; தீமை நரகத்திற்கு வழிவகுக்கும். ஒருவர் பொய் பேசிக் கொண்டேயிருப்பார். இறுதியில் அவர் அல்லாஹ்விடம் ‘பெரும் பொய்யர்’ எனப் பதிவு செய்யப்பட்டுவிடுவார்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னுமஸ்ஊத்(ரலி)நூல்:

புகாரி 6094

பண்பாளன் என பதக்கம் பெற்றவர்!

“யார் தமது குணங்களால் அழகுபடுத்திக் கொள்கிறாரோ அவருக்கு சொர்க்கத்தின் மேல்தளத்தில் மாளிகை கிடைக்க நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன்” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஹதீஸின் ஒரு பகுதி)

நூல்: அபூதாவூத் 4167

இவ்வுலகில் சமயங்களும், சாஸ்திரங்களும் அளவிற்கதிகமாகவே ஆர்ப்பரித்துள்ளன. எங்கு திரும்பினாலும் இயக்கங்கள், முற்போக்கு கழகங்கள் என கருத்து முழக்கங்கள் கால் பதித்துள்ளன. இவ்வாறு வழிந்து கிடக்கும் வெள்ளப்பெருக்கில் சல்லடை போட்டால், இஸ்லாம் மட்டுமே மனிதனை நெறிப்படுத்தவும், சரிப்படுத்தவும் முனைப்பு காட்டுகிறது.

ஓர் உண்மை முஸ்லிமின் குறியீடு அவன் அணிந்து கொள்ளும் தொப்பியிலோ, உடுத்திக் கொள்ளும் ஜிப்பாவிலோ அன்று! அவன் பேசும் பேச்சுக்களும், பறைசாற்றும் பண்புகளுமே அவன் இஸ்லாமியன் என இனம்காட்டிட வேண்டும். பொறுமை, பெருந்தன்மை, மென்மை, மேன்மை, வாய்மை, நேர்மை, அசத்தியமின்மை என மாட்சிமை மிக்க மாண்புகளைக் கொண்டு தன்னை செதுக்கிட வேண்டும். அந்தக் குணாதிசயங்கள் பிறரை ஈர்க்கவும், திரும்பிப் பார்க்கவும் வைத்திட வேண்டும். அதுவே இஸ்லாத்தின்பால் விடுக்கும் அழைப்பாக அமைந்திட வேண்டும்.

அபூஹுரைரா(ரலி) அறிவித்துள்ளார்கள்,

நபி(ஸல்) அவர்கள் ‘நஜ்த்’ பகுதியை நோக்கி குதிரைப் படையொன்றை அனுப்பினார்கள். அந்தப் படையினர் ‘பனூ ஹனீஃபா’ குலத்தைச் சேர்ந்த ஸுமாமா இப்னு உஸால் என்றழைக்கப்படும் மனிதர் ஒருவரைக் (கைது செய்து) கொண்டு வந்தார்கள். பள்ளிவாசலின் தூண்களில் ஒன்றில் அவரைக் கட்டிப் போட்டார்கள். நபி(ஸல்) அவர்கள் அவரிடம் வந்து, “(உன் விஷயத்தில் நான் சொல்லப்போகும் முடிவைப் பற்றி) நீ என்ன கருதுகிறாய். ஸுமாமாவே!” என்று கேட்டார்கள். அவர், “நான் நல்லதே கருதுகிறேன். முஹம்மதே! நீங்கள் என்னைக் கொன்றால் இரத்தப்பழி வாங்க வேண்டிய ஒருவனையே கொல்கிறீர்கள். (என்னை மன்னித்து எனக்கு) நீங்கள் உபகாரம் செய்தால், நன்றி செய்யக் கூடிய ஒருவனுக்கே உபகாரம் செய்கிறீர்கள். நீங்கள் செல்வத்தை விரும்பினால் அதில் நீங்கள் விரும்புவதைக் கேளுங்கள்” என்று பதிலளித்தார். எனவே, அவர் (மன்னிக்கப்பட்டு) விடப்பட்டார். மறுநாள் வந்தபோது அவரிடம், ‘ஸுமாமாவே! என்ன கருதுகிறாய்?’ என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு அவர், “தங்களிடம் நான் (ஏற்கெனவே) கூறியது தான்: நீங்கள் உபகாரம் செய்தால் நன்றியுள்ளவனுக்கே உபகாரம் செய்கிறீர்கள்” என்றார். அவரை நபியவர்கள் (அன்றும்) விட்டுவிட்டார்கள். மறுநாளுக்கு அடுத்த நாள் வந்தபோது, “நீ என்ன கருதுகிறாய்? ஸுமாமாவே!” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அவர், “நான் ஏற்கெனவே தங்களிடம் சொன்னதைத்தான் கருதுகிறேன்” என்று பதிலளித்தார். நபி(ஸல்) அவர்கள், “ஸுமாமாவை அவிழ்த்துவிடுங்கள்” என்று கூறினார்கள்.

உடனே ஸுமாமா பள்ளிவாசலுக்கு அருகிலிருந்த பேரீச்சந் தோட்டத்திற்குச் சென்று குளித்துவிட்டு, பள்ளிவாசலுக்கு வந்து, ‘வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறெவருமில்லை’ என்று நான் உறுதி கூறுகிறேன். மேலும், ‘முஹம்மது, இறைத்தூதர் என்றும் நான் உறுதி கூறுகிறேன்’ என்று மொழிந்துவிட்டு, ‘முஹம்மதே! அல்லாஹ்வின் மீதாணையாக! (இன்றுவரை) உங்கள் முகத்தைவிட என்னிடம் வெறுப்புக்குரிய முகம் பூமியில் வேறெதுவும் இருக்கவில்லை. ஆனால், (இன்று) உங்களுடைய முகம் எல்லா முகங்களிலும் எனக்கு மிகவும் பிரியமானதாக ஆகிவிட்டது. அல்லாஹ்வின் மீதாணையாக! (இன்றுவரை) உங்கள் மார்க்கத்தைவிட என் வெறுப்புக்குரிய மார்க்கம் வேறெதுவும் இருக்கவில்லை. ஆனால், இன்று மார்க்கங்களிலேயே எனக்கு மிகவும் பிரியமானதாக உங்கள் மார்க்கம் ஆகிவிட்டது. அல்லாஹ்வின் மீதாணையாக! உங்கள் ஊரைவிட எனக்கு வெறுப்பான ஊர் வேறெதுவும் இருந்திருக்கவில்லை. ஆனால், இப்போது உங்கள் ஊரே எனக்கு மிகவும் பிரியமான ஊராகி விட்டது. உங்கள் குதிரைப்படையினர் என்னைப் பிடித்துக் கொண்டுவிட்டார்கள்” என்று சொல்லிவிட்டு, ‘மேலும் நான் இப்போது (மக்காவிற்குச் சென்று) உம்ரா செய்ய விரும்புகிறேன். நீங்கள் என்ன கருதுகிறீர்கள்?’ என்று கேட்டார். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அவருக்கு நற்செய்தி கூறி உம்ரா செய்ய அவருக்கு அனுமதியளித்தார்கள். அவர் மக்காவிற்குச் சென்றபோது (அங்கே) ஒருவர் அவரிடம், ‘நீ மதம் மாறிவிட்டாயா?’ என்று கேட்டதற்கு ஸுமாமா(ரலி), “இல்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! (நான் மதம் மாறவில்லை.) மாறாக, இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களுடன் இணைந்து இறைவனுக்குக் கீழ்ப்படியும் முஸ்லிமாக மாறிவிட்டேன். அல்லாஹ்வின் மீதாணையாக! நபி(ஸல்) அவர்கள் அனுமதி தரும்வரை (என் நாடான) யமாமாவிலிருந்து ஒரு கோதுமை தானியம் கூட (மக்காவாசிகளான) உங்களுக்கு வராது” என்று கூறினார்கள்.

நூல்: புகாரி 4372

இஸ்லாதிற்கெதிராக நேற்றைய நாள் வரை வாள் ஏந்தியவர், சில நித்தங்களை நபிகளாரோடு கடத்தியதன் விளைவால் இச்சன்மார்க்கத்தில் சங்கமித்தார்களே எப்படி? என்ன காரணம்? அண்ணலார் அணுகிய வகையும், பழகிய விதமும் தான்!

நபி (ஸல்) அவர்கள் இயற்கையாகவோ, செயற்கையாகவோ கெட்ட வார்த்தை பேசுபவர்களாக இருந்ததில்லை. “உங்களில் சிறந்தவர் உங்களில் நற்குணமுடையவரே” என்று அவர்கள் கூறுவார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலி) 

நூல்: புகாரி 3559

உலகம் போற்றும் பணக்காரனை விட நல்ல குணக்காரனே சிறப்பிற்குரியவன் என பட்டம் குத்திப் பதக்கம் தருகிறது இஸ்லாம்.

இதுபோன்று மேற்படி குறிப்பிட்டுள்ள மாண்புகள் அனைத்தையும் நமது வாழ்வினுள் உரித்தாக்கிக் கொண்டால் மேலுலகத்தில் மாளிகை நமக்கு ஊர்ஜித நிலையில் உள்ளது.

சுவனத்தில் புகவேண்டும் எனும் ஏக்கமும், தாக்கமும் முஸ்லிம்கள் அனைவருக்கும் இருக்கவே செய்கிறது. நித்திய வாழ்வும், நினைத்ததைப் பெரும் வாய்ப்பும் கிட்டினால், அதனைத் தட்டுபவர்கள் இருப்பார்களா என்ன?!

எனினும் அந்த விருப்பமும், வாஞ்சையும் வார்த்தை வடிவில் இருக்கிறதே ஒழிய வாழ்க்கையில் இல்லை என்பதே நிதர்சனம். நிச்சயம் இல்லா உலகில் ஒன்றை அடைந்திட ஒருவன் காட்டும் முனைப்பும், முயற்சியும் நம்மை அயர்ந்து பார்க்க வைக்கிறது. அதுவே மறுமையில் பெரும் இன்பத்திற்கும், இறைப் பொருத்தத்திற்கும் ஒருவர் காட்டும் உழைப்பு, ஊசி துவாரத்தை விட ஒடுக்கமாக உள்ளது. புயல் காற்றுக்கும், கடல் சீற்றத்துக்கும் இரையாகும் இல்லங்களைவிட சுவனத்து மாளிகை மட்டரகமாகி விட்டதா?!! அவ்வாறில்லையெனில், பின்பு ஏன் இந்த பாகுபாடுகளும், பாரபட்சங்களும்?!!

இறைநம்பிக்கை கொண்டோருக்கு எடுத்துக் காட்டாக ஃபிர்அவ்வின் மனைவியை அல்லாஹ் எடுத்துரைக்கிறான். “என் இறைவனே! எனக்காக உன்னிடம் சொர்க்கத்தில் ஒரு வீட்டைக் கட்டுவாயாக! ஃபிர்அவ்னிடமிருந்தும், அவனது நடவடிக்கைகளிலிருந்தும் என்னைக் காப்பாற்றுவாயாக! இந்த அநியாயக்காரக் கூட்டத் தாரிடமிருந்தும் என்னைக் காப்பாற்றுவாயாக!” என அவர் இறைஞ்சியதை நினைவூட்டுவீராக!

(அல்குர்ஆன் 66:11)

ஏகாதிபத்திய ஆட்சியாளனின் மனைவி இறையிடம் முறையிடும் கோரிக்கை நம்மை மலைக்க வைக்கிறது; மல்க வைக்கிறது. அப்பெண் பார்த்திராத அரண்களா? அடுக்கு ஆலயங்களா? எனினும் சுவனத்து மாளிகைக்குப் பேராவல் கொண்டார்களே ஏன்? இவ்வண்டத்தின் தராதரத்தை மடுவிற்கு இணையாக மதித்ததன் விளைவே அந்தம்மையாரை இவ்வாறு வேண்டத் தூண்டியது. அந்தச் சிந்தனை நம் உள்ளத்தையும் சிறைபிடித்திடவேண்டும். இம்மையில் இல்லம் கட்டிட நாம் காட்டும் ஆர்வத்தை விட மறுமையின் விடுதிக்கு நாம் கொள்ளும் ஆவல் மிகுதியாய் இரவேண்டும்.

எனவே, சுவனத்து மாளிகையில் சொந்தம் கொண்டாடிட இஷ்டம்கொண்டு, அண்ணலார் உரைத்த உன்னத தன்மைகளை தன் வாழ்வினுள் வழிமொழிந்திடும் வாய்ப்பினை வல்லோன் நம்மவர்களுக்கு வார்ப்பானாக!