இப்ராஹீம் (அலை) அவர்களின் துஆ
“என் இறைவனே! (மக்கா எனும்) இவ்வூரைப் பாதுகாப்பளிப்பதாக ஆக்குவாயாக! என்னையும் என் வழித்தோன்றல்களையும் சிலைகளை வணங்குவதை விட்டும் தூரமாக்குவாயாக!” என இப்ராஹீம் கூறியதை நினைவூட்டுவீராக!என் இறைவனே! இவை மக்களில் அதிகமானவர்களை வழிகெடுத்து விட்டன. எனவே, யார் என்னைப் பின்பற்றுகிறாரோ அவரே என்னைச் சார்ந்தவர். யாரேனும் எனக்கு மாறு செய்தால், அப்போது நீயே மன்னிப்புமிக்கவன்; நிகரிலா அன்பாளன்
அல்குர்ஆன் 14:35,36
இது, ஏகத்துவ இமாம் இப்ராஹீம் (அலை) அவர்கள் செய்த பிரார்த்தனையாகும். இப்ராஹீம் (அலை) அவர்கள் தனது வாழ்நாளில் நீண்ட காலம் சிலை வணக்கத்தை எதிர்த்து, இறைவன் அல்லாதவர்களை – அல்லாதவற்றை வணங்குகின்ற பல தெய்வ வணக்கத்தை எதிர்த்து, இணைவைப்பை எதிர்த்து இறுதி மூச்சு வரை போராடியவர்கள்.
இணைவைப்புக்கு எதிரான போராட்டத்தில் அவர்களுக்கு எரிமலையாய் எரிகின்ற தீக்குண்டத்தை இணைவைப்பாளர்கள் பரிசாக அளிக்கின்றார்கள். கண் முன்னால் கனன்று எரியும் தீக்குண்டத்தைக் கண்டும் தனது ஓரிறைக் கொள்கையிலிருந்து எள்முனையளவு கூட இப்ராஹீம் (அலை) அவர்கள் பின்வாங்கவில்லை. இறுதியில் தீக்குண்டத்தில் தூக்கி வீசியெறியப்படுகின்றார்கள். ஆனால், அவர்களைச் சுற்றிலும் பற்றியெரிந்து கொண்டிருந்த ஆர்ப்பரிக்கும் அனல் நெருப்பின் ஒரு சொட்டு கூட, அவர்களைச் சுட்டெரிப்பது பக்கமிருக்கட்டும்… அவர்களது பட்டு மேனியை தொட்டுக் கூடப் பார்க்கவில்லை என்பது எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அற்புதமாகும். மாண்டு போவார் என்று எதிர்பார்த்திருந்த மக்களுக்கு அவர் மீண்டு வந்தது பெருத்த ஏமாற்றமாக ஆனது.
வேதனை என்னவெனில், இந்த மாபெரும் அற்புதத்திற்குப் பிறகும் அவர்களில் ஒருவர் கூட இறைநம்பிக்கை கொள்ளவில்லை என்பதுதான். அந்த அளவுக்கு சிலை வெறி அவர்களது தலைக்கேறியிருக்கின்றது. இதுபோன்ற பின்னணியும் பிரச்சனையும் இம்மாதிரியான ஒரு துஆவை அவர்கள் கேட்கக் காரணமாக அமைந்திருக்கலாம்.
உண்மையில் சிலை வெறி என்பது அந்த அளவுக்கு விபரீதமானது. இதை நாம் மூஸா (அலை) அவர்களின் வாழ்க்கையிலும் காண முடிகின்றது. அந்த வரலாற்றைத் திருக்குர்ஆன் பின்வருமாறு அழகாக எடுத்துக் கூறுகின்றது.
இஸ்ராயீலின் வழித்தோன்றல்களைக் கடலைக் கடந்து செல்ல வைத்தோம். அவர்கள், தமது சிலைகளை வணங்கிக் கொண்டிருந்த ஒரு கூட்டத்திடம் வந்தபோது, “மூஸாவே! இவர்களுக்குக் கடவுள்கள் இருப்பதைப் போல எங்களுக்கும் கடவுளை ஏற்படுத்துவீராக!” என்று கேட்டனர். “நீங்கள் அறிவில்லாத கூட்டமாகவே இருக்கிறீர்கள். அவர்கள் எதில் இருக்கிறார்களோ அது அழிக்கப்படக் கூடியது. அவர்கள் செய்து கொண்டிருந்தவையும் வீணானவையே” என்று அவர் கூறினார். (அல்குர்ஆன் 7:138, 139)
கடல் பிளந்து அதில் கடந்து சென்றது மாபெரும் இறை அற்புதமாகும். அப்படியொரு பிரம்மாண்டமான அற்புதத்தைச் சந்தித்த இஸ்ரவேலர்களான மூஸா (அலை) அவர்களின் சமுதாயம், அந்த அற்புதத்தின் பசுமையான நினைவு அவர்களின் நெஞ்சத் தாமரைகளிலிருந்து மறைந்திருக்கவில்லை. அவர்கள் அதை மறந்திருக்கவுமில்லை. செல்லும் வழியில் சிலை வணங்கும் கூட்டத்தைத் தான் கண்டார்கள். குழந்தைகள் பொம்மைக் கடையைக் கண்டதும் பொம்மை வாங்கிக் கேட்பது போல் கடவுளை வாங்கிக் கேட்கின்றார்கள். அதற்கு மூஸா (அலை) கோபத்தில் கொந்தளித்து ‘நீங்கள் அறிவில்லாத கூட்டம்’ என்று அவர்களை கடிந்துரைக்கின்றார்கள் என்பதை மேற்கண்ட வசனங்கள் நமக்குத் தெரிவிக்கின்றன.
கொஞ்ச காலம் கழித்து சாமிரி உருவாக்கிய காளை மாட்டையும் வணங்கத் தயங்கவில்லை.
மூஸா சென்ற பிறகு அவரது சமுதாயத்தினர் தமது ஆபரணங்களாலான (வெறும்) உடலைக் கொண்ட காளைக் கன்றை (கடவுளாக) எடுத்துக் கொண்டனர். அதற்கு சப்தமும் இருந்தது. அது அவர்களிடம் பேசாது, அவர்களுக்கு வழியையும் காட்டாது என்பதை அவர்கள் சிந்திக்க வேண்டாமா? அவர்கள் அதை(க் கடவுளாக) எடுத்துக் கொண்டு, அநியாயக்காரர்களாகி விட்டனர். (அல்குர்ஆன் 7:148)
இவை அத்தனையும் சிலை வணக்கம் அவர்களை எந்த அளவுக்கு ஆட்டுவித்திருக்கின்றது என்பதை நமக்கு எடுத்துக் கூறுகின்றன.
இப்போது இப்ராஹீம் (அலை) அவர்களின் துஆ எவ்வளவு வலிமையானது என்பதை நாம் புரிந்து கொள்ள முடிகின்றது. அதனால் இப்ராஹீம் (அலை) அவர்கள் சிலை வணக்கத்திற்கு எதிராகக் கேட்ட துஆவை என்றென்றும் கேட்போமாக! சிலை வணக்கம் என்று வருகின்றபோது அதன் சாயலில் அமைந்திருக்கும் அத்தனை இணைவைப்பு வணக்கங்களையும் அது எடுத்துக் கொள்ளும்.
“நாம் இஸ்லாத்தை ஏற்ற புதிதில் நபி(ஸல்) அவர்களுடன் ஹுனைன் போருக்காகப் போய்க் கொண்டிருந்தோம். (இவர்கள் மக்கா வெற்றியின் போது இஸ்லாத்தில் இணைந்தவர்கள்.) நாம் ஒரு மரத்தைக் கடந்து சென்றோம். காஃபிர்கள் ஒரு இலந்தை மரத்தைப் புனிதமாகக் கருதி வந்தனர். அதற்குத் “தாது அன்வாத்” என்பது பெயராகும். இந்த மரத்திற்குக் கீழே இஃதிகாஃப் இருந்தனர்.
போருக்குப் போகும் போது இந்த மரத்தில் வாளைத் தொங்க விட்டு எடுத்துச் செல்வர். (அப்படிச் செய்தால் போரில் வெற்றி பெறலாமென்பது அவர்களது நம்பிக்கையாகும்.) எனவே நாம் நபி (ஸல்) அவர்களிடம், “அவர்களுக்கு “தாது அன்வாத்” என்ற மரம் இருப்பது போல், எமக்கும் ஒரு “தாது அன்வாத்” என்ற மரத்தை ஏற்படுத்துங்கள்!” என நபி (ஸல்) அவர்களிடம் கேட்டோம்.
இதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹு அக்பர்! (அல்லாஹ்வே மிகப் பெரியவன்!)’’ எனக் கூறிப் பின்னர், “பனூ இஸ்ராயீலர்கள் மூஸா நபியிடம் கேட்டது போல் நீங்களும் என்னிடம் கேட்டுள்ளீர்கள்.
‘‘அவர்கள், தமது சிலைகளை வணங்கிக் கொண்டிருந்த ஒரு கூட்டத்திடம் வந்தபோது, “மூஸாவே! இவர்களுக்குக் கடவுள்கள் இருப்பதைப் போல எங்களுக்கும் கடவுளை ஏற்படுத்துவீராக!” என்று கேட்டனர்’’ (அல்குர்ஆன்: 7:138) என்ற குர்ஆன் வசனத்தை ஓதிக் காட்டிய பின்னர், ‘‘உங்களுக்கு முன்பிருந்தவர்களது வழிமுறைகளை நீங்கள் பின்பற்றுவீர்கள்!” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபுவாகித் அல்லைஸி (ரலி)
நூல்: திர்மிதீ 2180
இந்த ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள் ஆயுதங்களை மரத்தில் தொங்க விடும் செயலையே சிலை வணக்கத்தின் பட்டியலில் சேர்க்கின்றார்கள் என்றால் இன்றைய தர்காக்கள், அதில் நடக்கும் கந்தூரிகள் அத்தனையும் சிலை வணக்கத்தில் தான் போய்ச் சேரும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. அதனால் நாளைய நமது தலைமுறையினர் சிலை மற்றும் தர்ஹா வழிபாடு போன்ற இணைவைப்புக் கலாச்சாரத்தில் சிக்கி விடாமல் இருப்பதற்காக இப்ராஹீம் (அலை) செய்த துஆவையும், அவர்கள் செய்த இன்னபிற துஆக்களையும் தொடர்ந்து செய்வோமாக!