வரலாறு காணாத வெள்ளம் மீட்புப் பணியில் தவ்ஹீத் ஜமாஅத்

தலைநகர் சென்னையில் மிக்ஜம் புயலின் தாக்கத்தால் கடந்த டிசம்பர் 3, 4 தேதிகளில் இரு நாட்கள், 36 மணி நேரம் இடைவிடாது மழை கொட்டித் தீர்த்தது. மழை பெய்தது என்னவோ மிதமாகத் தான். ஆனால் அது தலைநகரை தலைகீழாகப் புரட்டிப் போட்டு விட்டது.தொலைத்தொடர்பு துண்டிக்கப்பட்டது. சாலை, ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.வீடுகள், அரசு அலுவலகங்கள், கடைகள், தொழிற்சாலைகள் என்று சாதி, மத பேதம் பார்க்காமல் சமநீதியுடன் வீரியமாக வெள்ளம் புகுந்து தனது ஆட்டத்தை நடத்தி முடித்தது.
ஆட்சியாளர்கள் அதன் அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள்ளாக கடந்த 17, 18 தேதிகளில் குமரி, தென்காசி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் ஒரு தொடர் மழை அதுவும் 365 நாட்களுக்குப் பெய்ய வேண்டிய மழை 30 மணி நேரத்தில் கொட்டித் தீர்த்தது. நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களை தலைகீழாகக் கவிழ வைத்தது.
இவ்விரு மாவட்டங்களும் வெள்ளக்காடாக ஆனதற்கு ஒரே காரணம் தாமிரபரணி ஆற்றில் வந்த தாறுமாறான வெள்ளம் தான். சாதாரணமாக மக்கள் மூழ்கிக் குளிக்கும் அளவுக்குச் செல்லும் தாமிரபரணி ஆறு, திருநெல்வேலி மாவட்டத்தின் தலைநகரையே மூழ்கிக் குளிக்க வைக்கும் அளவுக்குத் தனது இரு கரைகளுக்கு மேல் ஏறிக் குதித்து துள்ளாட்டம் போட்டுப் படை நடத்தியது.
நெல்லை சந்திப்பில் சீர்மிகு நகரம் (ஷினீணீக்ஷீt சிவீtஹ்) என்ற திட்டத்தின் கீழ் கம்பீரமாக ஒய்யாரத்துடன் எழுப்பப்பட்ட புதிய பேருந்து நிலையம், ரயில் நிலையம், கரையோரம் அமைந்திருக்கும் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் என்று அங்கிங்கெனாதபடி எங்கும், எல்லாப்பகுதிகளுக்கும் நீக்கமறச் சென்று தனது ஆட்டத்தை நிறைவு செய்தது.
குறிப்பாக, தூத்துக்குடி மாவட்டத்தைத் துண்டித்து, தனித் தீவாக ஆக்கியது. சாலைகளை உடைத்துக் கொண்டு கரை ஓரங்களில் உள்ள ஊர்களில் ஊர்வலம் நடத்தியது. இதனால் போக்குவரத்து பாதிப்புக்குள்ளானது. இயல்பு வாழ்க்கை சுத்தமாக முடங்கியது.
ஏற்கனவே சென்னை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கழுத்து வரை தண்ணீரில் நடந்து சென்று உதவிகளை வழங்கிய தமிழ்நாடு தவ்ஹீது ஜமாஅத்தின் தொண்டர்கள் நெல்லை, தூத்துக்குடியிலும் களம் இறங்கினர்.
முதலில் நெல்லை மாவட்டத்தில் மேலப்பாளையம், சேவியர் காலணி, டவுண், பேட்டை, பத்தமடை ஆகிய பகுதிகளுக்கு பாதிக்கப்பட்டு தத்தளித்து தவித்து நிற்கும் மக்களுக்கு உணவு, குடிநீர், பிஸ்கட், மெழுகுவர்த்தி போன்ற பொருட்களை விநியோகம் செய்தனர். அத்தியாவசியப் பொருட்களை வழங்கினர்.
இந்நிலையில், தூத்துக்குடி அரசு மருத்துவமனையிலிருந்து உணவு கேட்டு மருத்துவர்கள், நமது ஜமாஅத் நிர்வாகிகளைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டதும் நெல்லை மாவட்டத்தில் செய்த நிவாரணப் பணி தூத்துக்குடி மாவட்டத்தை நோக்கியும் விரைந்தது. ஏற்கனவே, மேலப்பாளையம் மஸ்ஜிதுர் ரஹ்மான் அருகே அமைந்திருக்கும் தொழுகைக் கூடாரம், பாதிக்கப்பட்ட மக்களுக்காக உணவு தயாரிக்கும் முழு நேர சமையற்கூடமாக மாறியது.
நெல்லையில் நீர் வடியத் துவங்கியதும் அடுத்தக் கட்டமாக மாநிலத் தலைவர் எம்.எஸ். சுலைமான் அவர்கள் தலைமையில் மாவட்ட, கிளை நிர்வாகிகள், ஜமாஅத்தின் தன்னலமற்ற தன்னார்வத் தொண்டர்கள் உணவுப் பொட்டலங்கள், அத்தியாவசியப் பொருட்களை எடுத்துக் கொண்டு மாற்று வழியில் தூத்துக்குடி விரைந்தனர்.
முதலில் மருத்துவமனைக்குச் சென்றதும் மகப்பேறு வார்டுக்கு நெருங்க முடியாத அளவுக்கு மார்பளவு தண்ணீர். படகோ, பரிசலோ கிடைப்பதற்கு வழியில்லை. அதனால் தலைமேல் பொட்டலங்களையும் பொருட்களையும் சுமந்து வெள்ள நீரில் ஊடாடி மகப்பேறு வார்டில் கொண்டு போய் சேர்த்தனர்.
உணவின்றி தவித்த மருத்துவர்கள், செவிலியர்கள், நோயாளிகள் என 600 பேர்களுக்கு மேல் உணவு விநியோகிக்கப்பட்டது. வெள்ளம் பெருக்கெடுத்தோடும் இவ்வேளையில் மனிதநேயப் பெருக்கோடு, பசியிலும் பட்டினியிலும் தவித்த தங்களுக்கு உணவு வழங்கி உதவி செய்த ஜமாஅத்திற்குத் தங்கள் நன்றிப் பெருக்கை காணிக்கையாக்கினர்.
இதை அடுத்து, தவ்ஹீது ஜமாஅத் குழுவினர் தூத்துக்குடி மாவட்டத்தில் துண்டிக்கப்பட்ட பல கிராமங்களுக்குச் சென்று தங்களால் இயன்ற நிவாரணப் பணிகளை செய்தனர்.
குறிப்பாக, தாமிரவருணி பொங்கி எழுந்த வேகத்தில் கோபாவேசத்தில், ஏரல் பகுதியைத் தூத்துக்குடியுடன் இணைக்கும் பாலத்தை அடித்துச் சென்று விட்டது. உடைந்து கிடந்த பாலத்தின் பாகங்களில் கயிறு கட்டி ஏறி ஏரல் மக்கள் ஈரல் குளிர உதவிப் பொருட்களைக் கொண்டு சேர்த்தனர்.
தவ்ஹீது ஜமாஅத்தினர், டிசம்பர் 2023 சென்னை வெள்ளத்தின் போதும் மாநில, மாவட்ட, கிளை நிர்வாகிகளுடன் இதே மாதிரியான களப்பணி ஆற்றினர். 2015 வெள்ளத்திலும் இதே களப்பணி. இப்போது நெல்லை, தூத்துக்குடியில் தொடரும் வெள்ள நிவாரணப் பணிகள்.
இந்தக் களப்பணியை நாளைய அரசியல், அதிகார, ஆதாயப் பலனை எதிர்பார்த்து ஆற்றவில்லை. அவர்கள் இந்த அளப்பெரும் களப்பணியை ஆற்றியதற்கும், தொடர்ந்து ஆற்றுவதற்கும் ஒரே காரணம் அல்லாஹ்வின் திருமுகத்தை நாடித் தான். இதைத் தவிர வேறு எந்த நோக்கமும் அவர்களுக்கு இல்லை.
“உங்களுக்கு நாங்கள் உணவளிப்பதெல்லாம் அல்லாஹ்வின் முகத்திற்காகத்தான். உங்களிடமிருந்து கூலியையோ, நன்றியையோ நாங்கள் எதிர்பார்க்கவில்லை. எங்கள் இறைவனிடமிருந்து (வரவிருக்கும்) சிரமுமம், கடுமையும் நிறைந்த நாளுக்காக அஞ்சுகிறோம்” (என்று இறைநம்பிக்கையாளர்கள் கூறுவார்கள்.)
அல்குர்ஆன்: 76:9-10