நவீன ஸலஃபிக் கொள்கையைச் சாடும் இமாம் இப்னு ஹஸ்ம்

இஸ்லாத்தின் மூல ஆதாரம் இறைச் செய்தி மட்டுமே! இறைச் செய்தி நமக்கு இரண்டு விதத்தில் கிடைக்கப் பெற்றுள்ளது. ஒன்று திருக்குர்ஆன். மற்றொன்று அதற்கு விளக்கமாக அமைந்த இறைத்தூதர் நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கை.
மாற்றுக் கருத்தின்றி பின்பற்றப்படுவதற்குத் தகுதியான செய்திகள் இவை மட்டுமே!
இதுவல்லாமல் எந்த மனிதக் கருத்தும் மார்க்க ஆதாரமாகவோ, மாற்றுக் கருத்திற்கு அப்பாற்பட்டதாகவோ ஆகாது.
உங்கள் இறைவனிடமிருந்து எது உங்களுக்கு அருளப்பட்டதோ அதையே பின்பற்றுங்கள்! அவனையன்றி பொறுப்பாளர்களைப் பின்பற்றாதீர்கள்! குறைவாகவே படிப்பினை பெறுகிறீர்கள்.
அல்குர்ஆன் 7:3
மனிதர்களுக்காக அருளப்பட்டதை நீர் அவர்களுக்குத் தெளிவுபடுத்துவதற்காகவும், அவர்கள் சிந்திப்பதற்காகவும் உமக்கு இவ்வேதத்தை அருளினோம்.
அல்குர்ஆன் 16:44
(நபியே!) அவர்கள் கருத்து வேறுபாடு கொண்டதை, நீர் அவர்களுக்குத் தெளிவுபடுத்துவதற்கும், இறைநம்பிக்கை கொள்ளும் சமுதாயத்திற்கு நேர்வழியாகவும், அருளாகவும் இவ்வேதத்தை உமக்கு அருளியுள்ளோம்.
அல்குர்ஆன்16:64
மேற்கூறப்பட்ட இஸ்லாத்தின் அடிப்படையை இந்த வசனங்கள் நமக்குத் தெளிவுற எடுத்துரைக்கின்றன.
மேலும் இறைச்செய்தி அல்லாமல் நபி (ஸல்) அவர்களின் சொந்தக் கருத்தும் மாற்றுக்கருத்திற்கு உட்பட்டதே என்பதையும், இறைச்செய்தி மட்டுமே மாற்றுக்கருத்திற்கு அப்பாற்பட்டது என்பதையும் பின்வரும் செய்தி தெளிவுப்படுத்துகிறது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
“நான் ஒரு மனிதனே; உங்கள் மார்க்க விஷயத்தில் நான் உங்களுக்கு ஏதேனும் கட்டளையிட்டால் அதை நீங்கள் கடைப்பிடியுங்கள். (உலக விவகாரத்தில்) சொந்தக் கருத்தாக உங்களுக்கு நான் ஏதேனும் கட்டளையிட்டால் நானும் ஒரு மனிதனே’’
அறிவிப்பவர்: ராஃபிஉ பின் கதீஜ்(ரலி)
நூல்: முஸ்லிம் 4712
இறைச்செய்தியுடன் நேரடித் தொடர்பில் இருந்த நபி (ஸல்) அவர்களே தமது சொந்தக் கருத்தாகக் கூறுபவை மாற்றுக்கருத்திற்கு அப்பாற்பட்டதல்ல எனும் அடிப்படை இங்கு நமக்கு விளங்குகிறது.
மேற்படி இஸ்லாத்தின் அடிப்படைக்கு மாற்றமாக ஸலஃபிக் கொள்கை எனும் பெயரில் பிரச்சாரம் செய்யும் சிலர் நபித்தோழர்கள் உட்பட பல மனிதர்களின் கருத்துக்களை மார்க்க ஆதாரமாகக் கருதுகின்றனர்.
அதற்கு அவர்கள் கூறும் காரணம் நபித்தோழர்கள் வஹி அருளப்பட்ட காலத்தில் வாழ்ந்தவர்கள் என்பது தான்.
நபி (ஸல்) அவர்களின் சொல், செயல், அங்கீகாரம் உட்பட அவர்களின் வாழ்க்கையை நமக்கு நபித்தோழர்களே எடுத்துக் கூறியுள்ளார்கள் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.
அதே நபித்தோழர்கள், நபிகளாரைப் பற்றி குறிப்பிடாமல் தங்களின் சொந்தக் கருத்தாகக் கூறுபவையும் மார்க்க ஆதாரம் என்பது மேற்படி இஸ்லாத்தின் அடிப்படைக்கு முராணனதில்லையா? அவர்களும் மனிதர்கள் தானே! அவர்களிடமும் தவறுகள் வரத்தானே செய்யும்? தவறான முடிவுகளையும் அவர்கள் கண்டுள்ளார்களே என்று தவ்ஹீத் ஜமாஅத் குறிப்பிடும் போது, நபித்தோழர்களை இவர்கள் இழிவுப்படுத்துகிறார்கள் என்று ஒரு வீண் பழியை சுமத்துவார்கள்.
இதே கேள்விகளை நாம் மட்டும் கேட்கவில்லை. முன்சென்ற இமாம்களும் கேட்டுள்ளார்கள்.
இமாம் இப்னு ஹஸ்ம் அவர்கள் தனது இஹ்காம் எனும் நூலில் நபித்தோழர்களைப் பின்பற்றுவது குறித்துப் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.

الإحكام في أصول الأحكام لابن حزم (6/ 83)
فمن المحال أن يأمر رسول الله صلى الله عليه وسلم باتباع كل قائل من الصحابة رضي الله عنهم وفيهم من يحلل الشيء وغيره منهم يحرمه ولو كان ذلك لكان بيع الخمر حلالا اقتداء بسمرة بن جندب ولكان أكل البرد للصائم حلالا اقتداء بأبي طلحة وحراما اقتداء بغيره منهم ولكان ترك الغسل من الإكسال واجبا اقتداء بعلي وعثمان وطلحة وأبي أيوب وأبي بن كعب وحراما اقتداء بعائشة وابن عمر ولكان بيع الثمر قبل ظهور الطيب فيها حلالا اقتداء بعمر حراما اقتداء بغيره منهم وكل هذا مروي عندنا بالأسانيد الصحيحة

நபித்தோழர்களில் ஒவ்வொருவரின் சொல்லையும் பின்பற்றுமாறு நபிகளார் கட்டளையிடுவது சாத்தியமற்றதாகும். ஏனெனில் அவர்களில் சிலர் ஒன்றை ஹராமாக்கியதை இன்னும் சிலர் ஹலாலாக்கியுள்ளனர்.
இந்த (நபிமொழி) சரியானதாக இருந்தால், சமுரா பின் ஜூன்தப் (ரலி) அவர்களைப் பின்பற்றுவதன் மூலம் மதுவை விற்பனை செய்வது ஹலாலாக ஆகிவிடும். அபுதல்ஹா (ரலி) அவர்களைப் பின்பற்றுவதன் மூலம் நோன்பு நோற்பவர் பனிக்கட்டியை சாப்பிடலாம் என்பது ஹலாலானதாக ஆகிவிடும். அவர் அல்லாதவர்களைப் பின்பற்றினால் அது ஹராமானதாகும்.
அலீ (ரலி), உஸ்மான் (ரலி), தல்ஹா (ரலி), அபு அயூப் (ரலி), உபை பின் கஅப் (ரலி) போன்றவர்களைப் பின்பற்றுவதன் அடிப்படையில் உறவு கொண்டு இந்திரியம் வெளிப்படாவிட்டால் அவர் குளிக்க வேண்டிய அவசியமில்லை என்று நிலை ஏற்படும்.
இப்னு உமர் (ரலி) மற்றும் ஆயிஷா (ரலி) அவர்களை பின்பற்றுவது (குளிக்காமல் தொழுவது) ஹராம் என்ற நிலைபாட்டிற்கு வர வேண்டும்.
உமர் (ரலி) அவர்களைப் பின்பற்றுவதன் மூலம் பழங்கள் உறுதியாவதற்கு முன்னால் விற்பனை செய்வது ஹலாலாகிவிடும். அவர் அல்லாத மற்றவர்களைப் பின்பற்றினால் அது ஹராமாகிவிடும்.
இவைகள் அனைத்தும் நம்பகமான அறிவிப்பாளர் தொடர்களோடு நம்மிடத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

تركناها خوف التطويل بها وقد بينا آنفا إخباره عليه السلام أبا بكر بأنه أخطأ وقد كان الصحابة يقولون بآرائهم في عصره صلى الله عليه وسلم فيبلغه ذلك فيصوب المصيب ويخطىء المخطىء فذلك بعد موته صلى الله عليه وسلم أفشى وأكثر

அவற்றைக் கூறினால் (பக்கங்கள் போதாதளவு) நீளமாகிவிடும் என்பதை அஞ்சி கூறாமல் விட்டுவிட்டோம். அபூபக்ர் (ரலி) தவறிழைத்துவிட்டார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறிய செய்தியைத் தற்போது தெளிவுபடுத்தினோம். இன்னும் பல நபித்தோழர்கள் தங்கள் கருத்துக்களை நபி (ஸல்) அவர்களின் காலத்திலேயே கூறினார்கள். அச்செய்தி நபியவர்களை எட்டிய போது சரியாகச் சொன்னவரை ஆமோதித்தார்கள். தவறாகக் கூறியவரை அவரது கருத்து தவறு என்றே அறிவித்தார்கள். இந்நிலை நபி(ஸல்) அவர்களது மரணத்திற்குப் பிறகு பரவியது. அதிகரித்தது.
(இதற்கு உதாரணமாக பல்வேறு செய்திகளை இமாம் அவர்கள் குறிப்பிட்டு விட்டு அதன் பின் பின்வருமாறு பதிவு செய்கிறார்.)

الإحكام في أصول الأحكام لابن حزم (6/ 86)
قال أبو محمد فكيف يجوز تقليد قوم يخطئون ويصيبون أم كيف يحل لمسلم يتقي الله تعالى أن يقول في فتيا الصاحب مثل هذا لا يقال بالرأي وكل ما ذكرناه فقد قالوه بآرائهم وأخطؤوا فيه

தவறாகவும் சரியாகவும் கருத்துச் சொல்லும் ஒரு கூட்டத்தாரை கண்மூடிப் பின்பற்றுவது எவ்வாறு கூடும்? ஒரு நபித்தோழரின் இதுபோன்ற மார்க்கத் தீர்ப்புத் தொடர்பாக, இது சுய கருத்தாகச் சொல்லப்பட்டிருக்காது (நபித்தோழர் சரியானதையே சொல்வார்) என்று கூறுவது அல்லாஹ்வை அஞ்சுகிற ஒரு முஸ்லிமிற்கு ஆகுமாகாது. ஏனெனில் நாம் முன்னர் எடுத்துக் கூறிய அனைத்தையும் நபித்தோழர்கள் தங்கள் சுய கருத்தின் அடிப்படையிலேயே கூறினார்கள். அதில் தவறுமிழைத்தார்கள்.

وأما قولهم إن الصحابة رضي الله عنهم شهدوا الوحي فهم أعلم به فإنه يلزمهم على هذا أن التابعين شهدوا الصحابة فهم أعلم بهم فيجب تقليد التابعين وهكذا قرنا فقرنا حتى يبلغ الأمن إلينا فيجب تقليدنا وهذه صفة دين النصارى في اتباعهم أساقفتهم وليست صفة ديننا والحمد لله رب العالمين وقد قلنا ونقول إن كل ما احتجوا به مما ذكرنا لو كان حقا لكان عليهم لا لهم لأنه ليس في تقليد الصحابة ما يوجب تقليد مالك وأبي حنيفة والشافعي فمن العجب العجيب أنهم يقلدون مالكا وأبا حنيفة والشافعي فإذا أنكر ذلك عليهم احتجوا بأشياء يرومون بها إيجاب تقليد الصحابة وهم يخالفون الصحابة خلافا عظيما فهل يكون أعجب من هذا ونعوذ بالله من الخذلان وليس من هؤلاء الفقهاء المذكورين أحد إلا وهو يخالف كل واحد من الصحابة في مئين من القضايا

நபித்தோழர்கள் வஹி (இறக்கப்படும் காலத்தில் இருந்து அதை) நேரடியாகக் கண்டவர்கள். எனவே அவர்களே அதை நன்கறிந்தவர்கள் என்று அவர்கள் கூறும் கருத்து, தாபியீன்கள் (வஹியை நேரடியாக கண்ட) நபித்தோழர்களை நேரடியாகக் கண்டவர்கள். எனவே, அவர்களைக் குறித்து தாபியீன்களே நன்கறிந்தவர்கள். எனவே அவர்களைக் கண்மூடிப் பின்பற்றுவதும் அவசியமாகும் என்று கூறி, இவ்வாறே ஒவ்வொரு தலைமுறை தலைமுறையாக நம் காலம் வரை அவர்கள் அடைந்து நம்மை கண்மூடி பின்பற்றுவதும் அவசியம் என்று கூறுவதையே பிரதிபலிக்கிறது.
இது கிறித்தவர்கள் தங்களின் மதகுருமார்களைப் பின்பற்றுவதில் அவர்களின் கொள்கைத் தன்மையாகும். நம் மார்க்கத்திற்கான தன்மையல்ல.

அகிலத்தின் இரட்சகனான அல்லாஹ்விற்கே எல்லாப் புகழும்!

நாம் குறிப்பிட்டவற்றில் எவற்றைத் தங்களுக்கான ஆதாரமாக அவர்கள் எடுத்துக் கொள்கிறார்களோ அவை அனைத்தும் – சரியானதாக இருந்தால் கூட அவை – அவர்களுக்கு எதிரான ஆதாரம்தான். அவர்களுக்கு ஆதரவான ஆதாரமில்லை என்று (அப்போதும்) சொன்னோம். (இப்போதும்) சொல்கிறோம்.
நபித்தோழர்களை கண்மூடிப் பின்பற்றுவ(தற்குக் குறிப்பிடும் ஆதாரத்)தில் மாலிக், ஷாஃபி, அபூஹனீஃபா ஆகியோரைக் கண்மூடிப் பின்பற்றுவதைக் கட்டாயமாக்கும் எந்த ஆதாரமுமில்லை. ஆனால், அவர்கள் அந்த இமாம்களையும் கண்மூடிப் பின்பற்றுவது தான் ஆச்சரியமாகும்.
இதை அவர்களிடத்தில் மறுத்தால் நபித்தோழர்களைக் கண்மூடிப் பின்பற்றுவதை எதன் மூலம் அவர்கள் உறுதி செய்வார்களோ அந்த ஆதாரத்தையே இந்த இமாம்களைப் பின்பற்றுவதற்கும் ஆதாரமாக வைப்பார்கள். அவர்களோ நபித்தோழர்களுக்குக் கடுமையாக முரண்படுகிறார்கள்.
இதைவிட ஆச்சரியம் ஏதும் உண்டா? இந்த மோசடியிலிருந்து அல்லாஹ்விடம் நாம் பாதுகாப்பு தேடுகிறோம்.
மேற்கூறப்பட்ட மார்க்கச் சட்ட வல்லுநர்களான அந்த இமாம்கள் நபித்தோழர்களின் ஒவ்வொருவருக்கும் அவர்களின் நூற்றுக்கணக்கான முடிவுகளுக்கு மாறுபட்டுள்ளார்கள். (இவ்வாறிருக்க நபித்தோழர்களைப் பின்பற்றுவதற்கான ஆதாரமே அவர்களுக்கு முரண்படும் இமாம்களைப் பின்பற்றுவதற்கும் என்பது எவ்வாறு சரியாக இருக்கும்?)
இஹ்காம், பாகம் 6, பக்கம் 83
நபித்தோழர்கள் மார்க்க ஆதாரம் கிடையாது என்பதைத் தெளிவாகவும் ஆதாரப்பூர்வமாகவும் இமாம் இப்னு ஹஸ்ம் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.
மேலும், நபித்தோழர்களைப் பின்பற்றுவதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை என்பதையும் இது கிறித்தவர்களின் வழிமுறை என்றும் கூறி, கடுமையாகத் தனது வாதங்களை முன்வைக்கிறார்.
நபித்தோழர்களும் தவறுக்கு அப்பாற்பட்டவர்கள் இல்லை என்பதற்காக அவர்களிடம் இருந்த சில தவறுகளை எடுத்துக்கூறும் போது நபித்தோழர்களை நாம் இழிவுப்படுத்தியதாகக் கூறுபவர்கள் இமாம் இப்னு ஹஸ்மிற்கு எதிராகவும் அதே விமர்சனத்தை முன்வைப்பார்களா?
ஸஹாபாக்களைப் பின்பற்றுவது இஸ்லாத்தின் அடிப்படைக்கு மாற்றமான கொள்கை என்று தவ்ஹீத் ஜமாஅத் கூறும்போது, இது ஏதோ தவ்ஹீத் ஜமாஅத் புதிதாக மக்களுக்கு எடுத்துக் கூறும் கொள்கை என்பது போல பிம்பத்தை ஏற்படுத்தும் நீங்கள் இமாம் இப்னு ஹஸ்ம் குறித்து என்ன சொல்லப் போகிறீர்கள்?

இஜ்மாஉஸ் ஸஹாபா எனும் ஏமாற்று வேலை

நவீன ஸலஃபிக் கொள்கையைப் பிரச்சாரம் செய்வோர் தங்கள் கொள்கை தொடர்பாக ஒன்றுபட்ட கருத்தில் இருந்து நாம் பார்த்ததே இல்லை.
அவர்களது கொள்கைக்கு ஆதாரத்தை நாம் கேட்கும் போது, அதற்கான ஆதாரம் இல்லை என்பதால் ஒவ்வொரு கருத்தாகத் தாவுவதும் தங்கள் கொள்கையைப் பல மாயாஜால வார்த்தைகளைக் கொண்டு சமாளிப்பதும் அவர்களின் வாடிக்கை.
அதில் ஒன்றுதான் இஜ்மாஉஸ் ஸஹாபா அல்லது ஃபஹ்முஸ் ஸஹாபா எனும் வார்த்தை.
அதாவது, ஸஹாபாக்களின் ஒன்றுபட்ட கருத்தை அல்லது ஒட்டுமொத்த நபித்தோழர்களின் புரிதலை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்கிறோம் என்பார்கள்.
இதைச் சொல்லிவிட்டு, நபித்தோழர்கள் அனைவரும் தவறில் ஒன்றுபடுவார்களா? அவர்கள் அனைவரும் சேர்ந்து சொன்ன புரிதல் எவ்வாறு தவறாக அமையும்? எனவே அதுவும் மார்க்க ஆதாரம் தான் என்பார்கள்.
இது ஆதாரத்தின் அடிப்படையில் அமைந்த வாதம் அல்ல. முழுக்க முழுக்க யூகத்தின் அடிப்படையில் அமைந்த வாதமாகும்.
ஏனெனில், நபித்தோழர்களின் ஒன்றுபட்ட கருத்து என்று கூறும் போது, அவ்வாறு எந்தக் கருத்து உள்ளது என்றும், ஒன்றுபடுதல் எனும் விஷயத்தில் பின்வரும் கேள்விகளும் எழுகிறது.
நபித்தோழர்கள் அனைவரும் குர்ஆன் ஹதீஸின்றி மார்க்க ரீதியான எந்தக் கருத்தில் மாற்றுக் கருத்தின்றி ஒன்றுபட்டார்கள்?
அதற்கான பட்டியல் ஏதும் உள்ளதா?
எங்கு ஒன்று கூடினார்கள்? அதில் எத்தனை நபித்தோழர்கள் இருந்தார்கள்?
அனைவரும் வந்துவிட்டார்களா?
மாற்றுக்கருத்து தெரிவிக்காமல் இருந்தவர்களும் அதே கருத்தில் தான் இருந்தார்கள் என்பதற்கு என்ன ஆதாரம்?
ஒரு பேச்சுக்கு ஒன்றுபட்டார்கள் என்று வைத்துக் கொண்டாலும் அவற்றைப் பின்பற்ற வேண்டும் என்பதற்கு மார்க்கம் ஒப்புதல் அளிக்கும் ஆதாரம் என்ன?
இந்த கேள்விக்குத் தக்க பதிலை ஆதாரத்துடன் அவர்கள் நிரூபிப்பதில்லை.
மாறாக, நபித்தோழர்களின் காலத்தில் ஏதேனும் காரியம் நடைபெற்றிருக்கும் அல்லது ஒருவரால் ஒரு கருத்து சொல்லப்பட்டிருக்கும் அதற்கு மற்ற நபித்தோழர்கள் மாற்றுக்கருத்து தெரிவிக்காமல் இருந்திருப்பார்கள்.
அவர்கள் மாற்றுக்கருத்து தெரிவிக்காமல் இருந்தாலும் அது ஒன்றுபட்ட கருத்துதான் என்பார்கள்.
இஜ்மா என்பது ஆதாரத்தை முன்னிறுத்தி எடுக்கப்பட்ட கொள்கை கிடையாது. இதை ஆதாரமாக எடுக்க வேண்டும் என்பது முழுக்க முழுக்க யூகத்தின் அடிப்படையில் அமைந்த ஒன்றாகத்தான் உள்ளது.
ஏனெனில் மேற்படி கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் இல்லாமல், ‘அவர்கள் நபிகளார் சொன்னதைத் தான் சொல்லியிருப்பார்கள். மார்க்கத்தில் இருப்பதைத் தான் செய்திருப்பார்கள்’ என்று யூகமாகவே பதில்கள் இருப்பதை நம்மால் பார்க்க முடிகிறது.
இதுபற்றி அவர்களுக்கு எந்த அறிவும் இல்லை.

அவர்கள் ஊகத்தையே பின்பற்றுகின்றனர். அந்த ஊகம், உண்மையை அறிவதற்கு ஒருசிறிதும் உதவாது.
அல்குர்ஆன் 53:28
இஜ்மா கூடுமா? என்பது குறித்து நமது சத்திய முழக்கம் 2024 ஜனவரி மற்றும் ஃபிப்ரவரி மாத இதழ்களில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது. தேவைப்படுவோர் அவற்றைப் பார்வையிடவும்.