இஸ்லாம், உலகில் விஜயமாகி யுகங்கள் ஓடிவிட்டன. எனினும் அண்ணலாரின் அறிவுரைகளும், அறவுரைகளும் அச்சுப்பிசகாமல் நம் கரங்களில் சிறைப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கு அளப்பெரும் காரணியாய் அமைந்தவர்கள் “இமாம்கள்” ஆவர். இறுதித்தூதரின் அறுதிமொழிகளை எழுத்தாக்கிட அவர்கள் கொண்ட முனைப்பும், கண்ட களைப்பும் சொல்லி மாளாதது. எந்த நாடாயினும், வெகுதூர ஊராயினும் அங்கு ஒருவரிடம் நபிமொழிகள் இருக்கிறதென தகவல் செவிப்பறையைத் தட்டுகிற மாத்திரத்தில், சற்றும் சலிப்படையாமல் சிட்டாய் பறந்து அவைகளைச் சேர்த்திடுவர்.
அத்தகைய இமாம்களின் பட்டியலில் நீங்கா தடம் பதித்தவரே “இமாம் முஸ்லிம் பின் அல்ஹஜ்ஜாஜ் அந்நைஸாபூரி (ரஹ்)” என்பவர்கள். அன்னவர் இயற்றிய “ஸஹீஹ் முஸ்லிம்” எனும் பொன்மொழிக் கிரந்தம் குறித்த ஒருசில நுணுக்கத் தரவுகளை இவ்வாக்கத்தில் தருகிறோம்.
இமாம் முஸ்லிம் அவர்களின் வாழ்க்கை குறிப்பு
ஈரான் நாட்டின் நைஸாபூர் எனும் நகரில் ஹிஜ்ரி 204ஆம் ஆண்டு (கி.பி. 819)பிறந்தவர்கள் இமாம் முஸ்லிம் (ரஹ்) அவர்கள். “புலி வார்த்தது பூனையாகுமா?” என்பார்களே, அதுபோன்றே தனது ஆசான் “இமாம் முஹம்மது பின் இஸ்மாயீல் அல்புகாரி (ரஹ்)” என்பாரைப் போல் சிறப்புக்குரியவராக விளங்கினார்கள். முஸ்லிம்களிடம் குர்ஆனுக்கு அடுத்தபடியாக இமாம் புகாரியின் “ஸஹீஹ் புகாரியும்”, இமாம் முஸ்லிமின் “ஸஹீஹ் முஸ்லிமும்” தான் மிகப் பிரசித்தி பெற்றவை என்று கூறினால் அது மிகையாகாது. ஒரே ஹதீஸ், அது ஸஹீஹ் புகாரியிலும், ஸஹீஹ் முஸ்லிமிலும் இடம் பெற்றிருக்குமெனில் அதை “முத்தஃபகுன் அலைஹி” என ஹதீஸ் துறையில் குறிப்பிடுவர்.
ஸியானத்து ஸஹீஹ் முஸ்லிம், அல்மின்ஹாஜ் ஃபீ ஷரஹி முஸ்லிம், அல்முஃப்ஹமு லிமா அஷ்கள மின் தல்கீஸி கிதாபி முஸ்லிம், ஷரஹுந் நவவி என்பன போன்றவை ஸஹீஹ் முஸ்லிமின் விரிவுரைகளாகும்.
இளமைப் பருவம் முதலே துருவம் பயணித்து மார்க்கம் பயின்றவர்கள் இமாம் முஸ்லிம்(ரஹ்) அவர்கள். மார்க்கக் கல்விமீது இணைபிரியா இணக்கம் கொண்டவர்கள்.
“ஸஹீஹ் முஸ்லிம்” எனும் பெருந்தொகுப்பை நிறுவிட அன்னார் எடுத்துக்கொண்ட காலவகாசம் 15 வருடங்களாகும். இதுவல்லாது இன்னும் ஏனைய நூற்களையும் எழுதியுள்ளார்கள். இமாம் புகாரி (ரஹ்) அவர்கள் இறப்பெய்து, ஐந்தாண்டுகள் கழிந்த பின் ஹிஜ்ரி 261ஆம் ஆண்டு ரஜப் மாதம் (கி.பி. 875) இமாம் முஸ்லிம் (ரஹ்) அவர்களும் மரணித்தார்கள்.
(ஆதாரம்: பிதாயா வந்நிஹாயா, புஹூஸூ ஃபீ தாரீகி ஸனத்தில் முஷ்தரீஃபதி)
ஹதீஸ்களின் எண்ணிக்கைகளும், எழிலாய் அமைந்த வரிசைகளும்!
மூன்று லட்ச நபிமொழிகளைத் தனது ஆசிரியர்களிடம் செவிமடுத்து, அவைகளுள் மிக நேர்த்தியான முற்றிலும் கீர்த்தியான 5770 ஹதீஸ்களை மட்டுமே பதிவு செய்துள்ளார்கள். அதில் மீண்டும் மீண்டும் இடம்பெற்றிருக்கும் ஹதீஸ்களைக் கழித்து விட்டால் 3032 பொன்மொழிகளே எஞ்சும்.
இரத்தத்தை வியர்வையாக இரைத்து, கொளுத்தும் வெயில் பாராமல், கொட்டும் பணியைப் பொருட்படுத்தாமல், பல தேசங்கள் பிரவேசித்து செவியுற்ற நபிமொழிகள் அனைத்தையும் சகட்டுமேனிக்குக் கொட்டித் தீர்த்திடவில்லை இமாம் முஸ்லிம்(ரஹ்) அவர்கள். லட்சம் செய்திகளுள் மிகுதித் தகுதி படைத்த மிக சொற்ப ஹதீஸ்களையே ஆவணப்படுத்தியுள்ளார்கள். நபிமொழிகளுக்குக் கீழ் “நூல் முஸ்லிம்” எனக் குறிப்பிடப்பட்டிருந்தாலே ஒரு நம்பகத்தன்மை மிக்க பிம்பம் பதியப்படுவதற்கு இதுவே காரணமாகும்.
இன்னும் இத்தொகுப்பில் ஹதீஸ்கள் வரிசைப்படுத்தப்பட்டுள்ள விதமும், வகையும் குறிப்பிடத்தக்கதாகும். நபித்தோழர்களின் சுய கருத்துக்களையும், ஏனைய இமாம்களது சொந்தச் சரக்குகளையும் சேர்த்திடாமல், உத்தமத் தூதரின் உன்னத மொழிகளை மட்டுமே தொடர்ச்சியாகக் கொண்டு வந்துள்ளார்கள். முதலில் ஈமான், பிறகு தூய்மை, அடுத்தது தொழுகை என ஃபிக்ஹூ அடிப்படையில் வரிசைப்படுத்தியுள்ளார்கள்.
எனினும், இந்நபிமொழிப் பிரிவில் ஒவ்வொரு ஹதீஸுக்கும் இமாம் முஸ்லிம் (ரஹ்) அவர்கள் தலைப்பிடவில்லை என்பதும் பதிவிடத்தக்கதாகும். அவர்களுக்குப் பின்தோன்றிய இமாம் நவவி மற்றும் குர்துபி (ரஹ்) என்பவர்களே ஹதீஸ்களின் கருத்துகளுக்கேற்ப தலைப்பிட்டுள்ளார்கள். அதில் இமாம் நவவி அவர்கள் இட்ட தலைப்புகளே தற்பொழுது நம் கரங்களைத் தழுவியுள்ளது.
(ஆதாரம்: மின்ஹாஜூல் முஹத்திஸீன், அல்வஸீத் ஃபீ உலூமின் வ முஸ்தலஹல் ஹதீஸ்)
ஸஹீஹானவைகள் அனைத்தையும் உள்ளடக்கி விட்டார்களா?
‘ஹதீஸ் துறையின் மிகப் பெரும் தலைவர்களான புகாரி மற்றும் முஸ்லிம் (ரஹ்) ஆகியோர் தங்களின் கிரந்தத்தில் ஆதாரப்பூர்வமான செய்திகள் அனைத்தையும் அடக்கிவிட்டார்கள், அதுவல்லாது வேறு நம்பகமான செய்திகள் ஏதுமில்லை’ என்பது சிலரின் நிலைபாடு. இமாம் அபூஸர்ஆவும் அந்த “சிலர்” எனும் பட்டியலில் உள்ளவர்களே. எனினும் இக்கருத்து சரியானதன்று. புத்தகம் இயற்றிய ஆசிரியர்களே அவ்வாறு குறிப்பிடவில்லை.
ஹதீஸ்களின் நீளத்தைக் கருத்தில் கொண்டு இமாம் புகாரி (ரஹ்) அவர்கள் பல செய்திகளைக் கழித்துவிட்டதாக அவர்களே ஒப்புக் கொண்டுள்ளார்கள். கணினிக் காலத்தில் நீண்ட தகவலை அச்சிடுவதற்கே தலைசுற்றுகிறது. ஏட்டையும், எழுதுகோலையும் எடுத்துச் செல்லும் காலநிலையில் அது மிகக் கடினமானதாகும். இதுமாத்திரமின்றி, அந்த நெடிய தகவலே வெகு பக்கத்தை ஆண்டுவிடும்.
இமாம் முஸ்லிம் (ரஹ்) அவர்களுமே அமுத மொழிகள் அனைத்தையும் உள்நுழைத்திடவில்லை.
அண்ணலாரிடமிருந்து அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கும் “இமாம் குர்ஆன் ஓத ஆரம்பித்துவிட்டால் நீங்கள் மௌனம் காத்துக் கொள்ளுங்கள்” எனும் இச்செய்தி பற்றி அபூபக்ர் என்பவர் இமாம் முஸ்லிம் (ரஹ்) அவர்களிடம் கேட்கும் பொழுது “அது நம்பகமானதே” எனக் கூறினார்கள். “பிறகு ஏன் அதை நீங்கள் பதிவிடவில்லை” என அவர் மறுவினா தொடுத்த வேளைவில், “நான் ஸஹீஹானவைகள் அனைத்தையும் ஒன்றுசேர்க்கவில்லை; மாறாக, மக்கள் எதன் மீது ஏகோபித்துள்ளார்களோ அவைகளையே திரட்டியுள்ளேன்” என விடையளித்துள்ளார்கள்.
பொதுவாக, ஒரு செய்தி நம்பகமானது என்பதை நிறுவிட அதனை அறிவிக்கும் அறிவிப்பாளரும் நம்பகமானவராக இருக்க வேண்டும் என்பது ஹதீஸ் துறையின் நியதி. ஒருவரின் பலம் நிரூபணமாவதற்கு குறைநிறை கூறக்கூடிய அறிஞர்கள் யாரேனும் ஒருவராவது அவரை ஊர்ஜிதப்படுத்தியிருக்க வேண்டும். ஆனால், இமாம் முஸ்லிம் (ரஹ்) அவர்கள் ஒட்டுமொத்த சமூகத்தாலும் ஒப்புக் கொள்ளப்பட்ட வாய்மைமிக்க அறிவிப்பாளர்கள் வழியாக வந்ததையே இத்தொகுப்பில் குறிப்பிட்டுள்ளார்கள்.
(ஆதாரம்: முகத்திமத்து இப்னு ஸலாஹ், ஸஹீஹ் முஸ்லிம்)
அபூஸுபைர் மீதான விமர்சனம்
ஒரு மாணவர் தனது ஆசிரியரிடமிருந்து ஏதேனும் செய்தியை அறிவித்துவிட்டு, அறிவிப்பாளர் தொடரைக் குறிப்பிடுகையில் அந்த ஆசிரியரின் ஆசிரியரிடமிருந்து தான் செவிமடுத்ததாகக் கூறிடுவார். அவர் யாரிடமிருந்து கேட்டாரோ அந்த ஆசிரியரின் பெயரை மறைத்திடுவார்.
ஆசிரியர் பலவீனமானவராக இருப்பதாலும், அவருக்கு அதிக மாணவர் கூட்டம் இருந்து, அவர்களோடு இவரும் கூட்டாவதை வெறுப்பதாலும், ஆசிரியரின் அகவையும் அனுபவமும் குன்றியிருப்பதாலும் தங்களது ஆசிரியரின் பெயரை இருட்டடிப்பு செய்து விடுவார்கள். இந்தச் செயலுக்கு “தத்லீஸ் – இருட்டடிப்பு” எனவும், இச்செயலைச் செய்பவருக்கு “முதல்லிஸ் – இருட்டடிப்பு செய்பவர்” எனவும் ஹதீஸ் வழக்கில் மொழியப்படும்.
இந்த விமர்சனம் ஸஹீஹ் முஸ்லிமின் அறிவிப்பாளரான “அபூ ஸுபைர் முஹம்மத் பின் முஸ்லிம் பின் தத்ருஸ்” என்பவர் மீதுள்ளது. ஜாபிர் (ரலி) வழியாக அவர் அறிவிக்கும் கணிசமான செய்திகள் தத்லீஸ் எனும் தரத்தில் அமைந்தவையே. இமாம் நசாயி, இப்னு ஹஜர், தஹபி போன்ற ஹதீஸ்கலையின் மாமேதைகள் இவரது செயலை விமர்சித்துள்ளனர்.
லைஸ் பின் ஸஅத் அவர்கள் அபூ ஸுபைரிடம் ஹதீஸ்கள் சிலதைப் பெற்றுக்கொண்ட பிறகு “நீங்கள் அறிவிக்கும் அனைத்து செய்திகளும் ஜாபிர் (ரலி) அவர்களிடம் நேரடியாகச் செவியுற்றதுதானா?” என கேட்ட வேளையில், “சிலவைகள் நான் நேரடியாகக் கேட்டது, சிலவைகள் நான் இருட்டடிப்பு செய்தது” என ஒப்புக்கொண்டார்கள்.
எனினும், இருட்டடிப்பு செய்பவரின் அத்தனை செய்திகளும் மறுக்கத்தக்கதல்ல. எந்த செய்தியில் “ஸிமாஃ – செவியேற்றல்” தெளிவாகி விட்டதோ அவைகளை ஏற்றுக் கொள்ளலாம். அதாவது, “ஹத்தஸனா, அக்பரனா, ஸமிஃது” போன்ற வாக்கியத்தை தத்லீஸ் செய்பவர் குறிப்பிட்டிருந்தால் அவைகள் ஆமோதிக்கப்படும். அவர், “அன் – அவர் வழியாக, கால – அவர் கூறினார்” என்பன போன்ற வாசகத்தைப் பிரயோகித்தால் அவைகள் தவிர்க்கப்படும். இத்தகைய தரவுகளும் ஸஹீஹ் முஸ்லிமில் சங்கமித்துள்ளது.
(ஆதாரம்: தத்கிரதுல் ஹுஃபால், தஹ்தீபுல் கமால், தஹ்தீபுத் தஹ்தீப், தைஸீரு முஸ்தலஹல் ஹதீஸ்)
புகாரியா? முஸ்லிமா?
ஒற்றை உரையில் இரட்டை வாட்கள் செருகப்படுவது மரபிற்கு மாற்றமானதாகும். அந்த வகையில் புகாரியா? முஸ்லிமா? எனும் விவாதத்தில் ஒரு கத்தியே அவ்வுறைவிடத்தில் உறவு கொண்டாடமுடியும். புகாரி – முஸ்லிம் இருவருக்குமே தனித்தனி ஆதரவுப் பட்டாளங்கள் இருந்தாலும், துலாத்தட்டில் ஒன்றின் பாரம் தானே மிகுதியாய் மிகைக்கும்!
ஸஹீஹ் முஸ்லிம் தான் மிகுந்த தரம் என உரைப்பவர்களின் வாதங்கள் இதோ…
- இமாம் முஸ்லிம் (ரஹ்) அவர்கள், தனது பொன்மொழித் தொகுப்பில் நபிமொழிகளை மாத்திரம் தொடர்ச்சியாய் உள்ளடக்கியுள்ளார்கள். எனினும், இமாம் புகாரி (ரஹ்) அவர்கள் நபிமொழிகளோடு நபித்தோழர்களின் கருத்துக்களையும், ஏனைய இமாம்களது கூற்றுக்களையும் உள்நுழைத்துள்ளார்கள்.
- இமாம் முஸ்லிம் (ரஹ்) அவர்கள், பெரும்பான்மையான தகவல்களைச் சொந்த ஊரிலேயே சேகரித்தார்கள். அந்த தகவல்களிலோ அல்லது அறிவிப்பாளர் தொடரிலோ எழும் ஐயங்களைத் தனது ஆசிரியர்கள் மூலம் எளிதில் தீர்த்துக் கொள்ள இயலும். புகாரி (ரஹ்) அவர்களோ தொலைதூர ஊர்களில் ஹதீஸ்களைத் திரட்டியதால், அவைகளுள் எழும் வினாக்களுக்கான விடைகளைத் தெளிவுப்படுத்திக் கொள்வது அசாத்தியமானதாகும்.
- அடுத்தது இமாம் முஸ்லிம் (ரஹ்) அவர்கள், தனது ஆசிரியர்களிடம் செவிமடுத்த ஹதீஸ்களை வார்த்தை பிசகாமல் பதிவிட்டுள்ளார்கள். எனினும், புகாரி (ரஹ்) அவர்கள் அயலூர்களிலும், அண்டை நாடுகளிலும் செய்திகளைக் கேட்டு மனனம் செய்து, ஊருக்குத் திரும்பிய பின் அதன் கருத்தை மட்டுமே எழுத்தாக்குவார்கள்.
- இமாம் முஸ்லிம் (ரஹ்) அவர்கள், ஹதீஸ்களை வரிசை செய்த தோரணையும், தோற்றமும் தனித்து விளங்கக்கூடியதாகும். நம்பகத்தன்மையில் தரம் வாய்ந்ததை முதலிலும், அதற்கடுத்த தரத்தை இரண்டாவதாகவும் ஒழுங்குபடுத்தியுள்ளார்கள். மாற்றப்பப்பட்ட செய்தியாக இருக்குமெனில், அதனை ஆரம்பமாகவும், மாற்றிய தகவலை இறுதியிலும் கொண்டுவருவார்கள்.
- இமாம் முஸ்லிம் (ரஹ்) அவர்கள், ஹதீஸ்களைத் துண்டு துண்டாகப் போட்டிடவில்லை. ஒரு தலைப்பின் கீழ் கொண்டு வந்த தகவலை மற்றொரு இடத்தில் அரிதாகவே அறிமுகப்படுதியுள்ளார்கள். புகாரி (ரஹ்) அவர்களோ இதற்கு நேர் புறம்பாக ஹதீஸ்களை துண்டு துண்டாகவும், ஒரே ஹதீஸை வெவ்வேறு இடங்களிலும் பலமுறை பதித்துள்ளார்கள்.
- இமாம் முஸ்லிம் (ரஹ்) அவர்கள், ஆசிரியர் – மாணவர் மத்தியில் சந்திப்பை உறுதிப்படுத்தும் “ஹத்தஸனா, அக்பரனா” போன்ற வார்த்தைக்கிடையில் வெவ்வேறு துறைவழக்கை கையாண்டுள்ளார்கள். இமாம் புகாரி (ரஹ்) அவர்கள், ஒற்றைப் பொருளுடனே அவ்விரண்டையும் அணுகியுள்ளார்கள்.
- ஸஹீஹ் முஸ்லிமில் “முஅல்லக் – அறிவிப்பாளர் தொடர் முறிந்த” செய்திகளின் எண்ணிக்கை 14 மட்டுமே. ஸஹீஹ் புகாரியில் முஅல்லக்கான செய்திகளின் எண்ணிக்கை 159 ஆகும்.
இவைகளே ஸஹீஹ் புகாரியை விட, ஸஹீஹ் முஸ்லிமை முன்னிலைப்படுத்துவதன் காரணங்களாகும். அபூ அலி அந்நைஸாபூரி, அபூ ஸர்ஆ, அபூ ஹாதிம் இன்னும் மேற்க்கத்தியவர்களில் சிலர் இத்தொகுப்பையே தாங்கிப் பிடிக்கின்றனர்.
ஸஹீஹ் புகாரி தான் மிகுந்த தரம் என உரைப்பவர்களின் வாதங்கள் இதோ…
- புகாரி – முஸ்லிம் இரண்டிலும் அறிவிப்பாளர்கள் சிலர் ஒத்திருப்பார்கள். அந்த வகையில் ஸஹீஹ் முஸ்லிம் அல்லாது, ஸஹீஹ் புகாரியில் மட்டும் தனித்து வரும் அறிவிப்பாளர்களின் எண்ணிக்கை 430 ஆகும். அதில் விமர்சிக்கபட்டவர்கள் 80 பேர் ஆவர். ஸஹீஹ் புகாரி அல்லாது, ஸஹீஹ் முஸ்லிமில் மட்டும் தனித்து வரும் அறிவிப்பாளர்களின் 620 ஆகும். அதில் விமர்சிக்கப்பட்டவர்கள் 160 பேர் ஆவர்.
- எந்த அறிவிப்பாளர்கள் விமர்சிக்கப் பட்டுள்ளார்களோ, அவர்களிடமிருந்து சிறுபான்மை செய்திகளையே அறிவித்துள்ளார்கள் இமாம் புகாரி (ரஹ்) அவர்கள். எனினும், முஸ்லிம் (ரஹ்) அவர்கள் விமர்சிக்கப்பட்டவர்களிடமிருந்து பெரும்பான்மையான செய்திகளைக் கேட்டறிவித்துள்ளார்கள்.
- ஸஹீஹ் புகாரியில் குறைப்படுத்தப்பட்ட அறிவிப்பாளர்கள் இமாம் புகாரியின் காலத்தவர்களே. அவர்களின் தரநிலையைத் தெரிந்துதான் தனது தொகுப்பில் அவர்களின் ஹதீஸ்களைப் பதிவுசெய்துள்ளார்கள். எனினும், ஸஹீஹ் முஸ்லிமில் குறைப்படுத்தப்பட்டவர்கள் அனைவரும் அவர்களுக்கு முந்தி வாழ்ந்தவர்கள் ஆவர். அவர்களை நேரில் கண்டு குறைகளைக் களைவது சாத்தியமற்றதாகும்.
- ஸஹீஹ் புகாரியில், ம(த்)தன் – செய்தியில் குறைபடுத்தப்பட்டதன் எண்ணிக்கை 80க்கும் குறைவானதாகும். ஸஹீஹ் முஸ்லிமில் 130 செய்திகளாகும்.
- புகாரியில் பெருவாரியாக பேசப்படும் பிழை, “இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக இக்ரிமா அறிவிக்கும் செய்திகள்” மட்டும் தான். அதனையும் ஹாஃபிழ் இப்னு ஹஜர் அவர்கள் தெளிவுபடுத்திவிட்டார்கள். எனினும், ஸஹீஹ் முஸ்லிமில் இதுபோன்று எண்ணற்றவைகள் உள்ளன. “ஜாபிர் (ரலி) அவர்கள் வழியாக அபூ ஸுபைர் அறிவிக்கும் செய்திகள், சுஹைல் அவர் தன் தந்தை வழியாக அறிவிக்கும் செய்திகள், அலாஃ பின் அப்திர்ரஹ்மான் அவர் தன் தந்தை வழியாக அறிவிக்கும் செய்திகள், ஸாபித் வழியாக ஹம்மாத் பின் ஸலமா அறிவிக்கும் செய்திகள் என பிழைப்படுத்தப்பட்டவைகள் கணிசமாக உள்ளன.
- இமாம் புகாரி (ரஹ்) அவர்கள் இரண்டாம் படித்தர அறிவிப்பாளர்களைத் தேர்வுசெய்துதான் கொண்டுவந்துள்ளார்கள். ஆனால் முஸ்லிம்(ரஹ்) அவர்களோ, அந்த அறிவிப்பாளர்களை முதல் பட்சமாக முன்னுரிமை வழங்கியுள்ளார்கள்.
- ஆசிரியர் – மாணவர் ஒத்த காலத்தில் வாழ்ந்திருந்தாலும், அவர்களுக்கிடையிலான சந்திப்பு கண்டிப்பாய் அமைந்திருக்க வேண்டும் என்பது இமாம் புகாரி(ரஹ்) அவர்களின் நிபந்தனை. ஆசிரியர் – மாணவர் ஒத்த காலத்தில் வாழ்ந்திருந்தாலே போதுமானது என்பது இமாம் முஸ்லிம் அவர்களின் விதி.
- இமாம் புகாரி (ரஹ்) அவர்கள், தனது மார்க்கச் சட்ட நிலைபாட்டை அவர்களது தலைப்புகளிலேயே தெரியப்படுத்திவிடுவார்கள். எனினும், இமாம் முஸ்லிம் (ரஹ்) அவர்கள் எந்தப் பாடத்திற்கும் தலைப்பிடவில்லை.
இவைகளே ஸஹீஹ் முஸ்லிமை விட ஸஹீஹ் புகாரியை முன்னிலைப்படுத்துவதன் காரணங்களாகும்.
(ஆதாரங்கள் : புஹூஸூ ஃபீ தாரீகி ஸனத்தில் முஷ்தரீஃபதி, ஹத்யுஸ் ஸாரி முகத்திமது ஃபத்ஹுல் பாரி, முகத்திமத்து இப்னு ஸலாஹ்)