ரமலான் மாத செய்தி சொன்னால் நரகத்திலிருந்து விடுதலையா? – விளக்கம்

ரமலான் மாதம் வந்துவிட்டால் பல பொய்யான செய்திகள் மக்களிடம் உலா வரத் தொடங்கின்றன. உண்மையான செய்திகளை விட பொய்யான செய்திகள் மிக விரைவாக மக்களிடம் போய் சேர்ந்துவிடுகின்றன. அவற்றில் ஒன்றுதான் பின்வரும் செய்தி.

من بلغ الناس بشهر رمضان حرمه على النار

யார் ரமலான் பற்றிய செய்தியை பிறருக்கு அறிவிக்கிறாரோ அவர் மீது நரகம் ஹராமாக்கப்படும்.

இந்த செய்தி எந்த ஆதாரப்பூர்வமான நூல்களிலும் இடம்பெறவில்லை. பலவீனமான, இட்டுகட்டப்பட்ட செய்திகளை அடையாளம் காட்டும் நூல்களிலும் இது இடம்பெறவில்லை.

இது சில ஆர்வகோளறு உள்ளவர்களின் வாயிலிருந்து வந்த பொய்யான செய்தியாகும்.

இதை ஏற்று பரப்புவது பாவமாகும். அல்லாஹ்வின் தூதர் சொல்லாத ஒரு செய்தியை அவர்களின் பெயரால் பரப்புவது நரகத்தை பெற்றுதரும் பாவமான காரியமாகும்.

صحيح البخاري ـ حسب ترقيم فتح الباري (1/ 38)

106- حَدَّثَنَا عَلِيُّ بْنُ الْجَعْدِ قَالَ : أَخْبَرَنَا شُعْبَةُ قَالَ : أَخْبَرَنِي مَنْصُورٌ قَالَ : سَمِعْتُ رِبْعِيَّ بْنَ حِرَاشٍ يَقُولُ : سَمِعْتُ عَلِيًّا يَقُولُ : قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم : لاَ تَكْذِبُوا عَلَيَّ ، فَإِنَّهُ مَنْ كَذَبَ عَلَيَّ فَلْيَلِجِ النَّار

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(நான் சொல்லாததை நான் சொன்னதாக) என் மீது பொய் சொல்லாதீர்கள். ஏனெனில், என் மீது பொய்யுரைப்பவன் நிச்சயம் நரகத்தில் நுழைவான்.

அறிவிப்பவர் : அலீ (ரலி), நூல் புகாரி (106)

நபி (ஸல்) அவர்கள் மீது பொய் சொல்வது மற்றவர்கள் மீது பொய் சொல்வதைப் போன்று அல்ல. அதைவிடவும் பெரிய பாவமாகும், நபிகளாரின் சொல் மார்க்க சட்டமாகும். அதை செயல்படுத்துவது கடமையாகும். நபிகளார் சொல்லாத ஒன்றை சொல்லி இந்த சமுதாயம் அதை செயல்படுத்தினால் அதனால் ஏற்படும் பாவத்திற்கு பொய்யுரைத்தவர் காரணமாவார்.

صحيح البخاري ـ حسب ترقيم فتح الباري (2/ 102)

1291- حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ ، حَدَّثَنَا سَعِيدُ بْنُ عُبَيْدٍ عَنْ عَلِيِّ بْنِ رَبِيعَةَ ، عَنِ الْمُغِيرَةِ ، رَضِيَ اللَّهُ عَنْهُ ، قَالَ : سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ : إِنَّ كَذِبًا عَلَيَّ لَيْسَ كَكَذِبٍ عَلَى أَحَدٍ مَنْ كَذَبَ عَلَيَّ مُتَعَمِّدًا فَلْيَتَبَوَّأْ مَقْعَدَهُ مِنَ النَّارِ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

என் மீது கூறும் பொய் (உங்களில்) ஒருவர் மீது கூறும் பொய்யைப் போன்றதன்று. யார் என் மீது வேண்டுமென்றே பொய்யுரைக்கின்றானோ அவன் தன் இருப்பிடத்தை நரகத்தில் ஆக்கிக்கொள்ளட்டும்:

அறிவிப்பவர் : முஃகீரா (ரலி), நூல் புகாரி (106)

எனவே இது போன்ற பொய்யான செய்திகளை அடையாளம் கண்டு அவற்றை புறக்கணித்து உண்மையான செய்திகளை பின்பற்ற அல்லாஹ் அருள்புரிவானாக!