மாணவர்களின் உயிரைப் பறிக்கும் ராகிங் மனநிலை வக்கிரத்தின் வெளிப்பாடு

இந்தியாவிலேயே அதிகமானவர்கள் படித்த மாநிலம் என்றும் முன்னேறிய மாநிலம் என்றும் கருதப்படும் கேரளத்தில் அண்மைக்காலமாக நடைபெறும் நிகழ்வுகள் அச்சம் ஏற்படுத்துகின்றன. மனிதாபிமானம் இல்லாமல் ஆதிவாசிகள் கும்பல் தாக்குதலுக்கு உள்ளாவது, மூட நம்பிக்கை காரணமாக நரபலி கொடுக்கப்படுவது உள்ளிட்டவை கேரளத்தில் நடைபெறுவது வியப்பாக இருக்கிறது. கடந்த 6 வாரங்களில் மட்டும் கேரளத்தில் ராகிங் தொடர்பாக 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கோட்டயம் அரசு செவிலியர் கல்லூரியில் படிக்கும் முதலாம் ஆண்டு மாணவர்கள் 5 பேரை மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் கடந்த 2024 நவம்பர் முதல் ராகிங் செய்து வந்துள்ளனர். அதில் ஒரு மாணவரின் ஆடையைக் களைந்து கட்டிலுடன் சேர்த்து கை – கால்களைக் கட்டி காம்பஸ் உபகரணத்தால் உடல் முழுவதும் குத்தி ரத்தக் காயம் ஏற்படுத்தினர்.
இதன் உச்சகட்டமாக, உடற்பயிற்சி செய்ய பயன்படுத்தும் “டம்புள்ஸ்’-ஐ பிறப்புறுப்பில் கட்டித் தொங்கவிட்டதுடன், காயம் ஏற்பட்ட இடங்களில் எரிச்சல் தரக்கூடிய மருந்தை (லோஷன்) தடவி உள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக 5 மாணவர்கள் கடந்த பிப். 12-ஆம் தேதி கைது செய்யப்பட்டனர்.
இந்தப் பரபரப்பு அடங்குவதற்குள், கேரளத்தில் மேலும் ஒரு மாணவர் ராகிங் கொடுமைக்கு உள்ளானது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
திருவனந்தபுரம் கார்யவட்டம் அரசுக் கல்லூரியில் முதலாம் ஆண்டு உயிரி தொழில்நுட்பம் படிக்கும் மாணவரை 7 மாணவர்கள் மூங்கில், பெல்ட்டால் அடித்து, சட்டையை அகற்றி மண்டியிட வைத்ததுடன் குடிக்கத் தண்ணீர் கேட்டபோது, அதில் எச்சில் உமிழ்ந்து குடிக்க நிர்ப்பந்தப்படுத்தி உள்ளனர்.
கோழிக்கோடு அருகே எரண்ணிபாலத்தில் உள்ள ஹோலிகிராஸ் மேலாண்மை மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் முதலாம் ஆண்டு மாணவர் அணிந்திருந்த கூலிங் கிளாஸை அகற்றச் சொல்லி மூன்றாம் ஆண்டு மாணவர்கள் 6 பேர் கடந்த பிப். 14-ஆம் தேதி கொடுமைப்படுத்தினர்.
கல்லூரிகளில் மட்டுமல்ல, பள்ளிகளிலும் ராகிங் குறித்த புகார்கள் எழத் தொடங்கி உள்ளன. கொச்சியைச் சேர்ந்த 9-ஆம் வகுப்பு மாணவர் மிஹிர் அகமது அடுக்குமாடிக் குடியிருப்பின் 26-ஆவது தளத்தில் இருந்து குதித்து கடந்த ஜன. 15-ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டார். பள்ளியில் ராகிங் கொடுமைக்கு ஆளானதால்தான் தனது மகன் தற்கொலை செய்து கொண்டார் என்று அவரது தாயார் குற்றஞ்சாட்டி உள்ளார்.
வயநாடு மாவட்டம், பூக்கோடில் உள்ள கால்நடை மருத்துவ அறிவியல் கல்லூரியில் மாணவர் ஜெ.எஸ்.சித்தார்த்தன் பொதுவெளியில் 19 மாணவர்களால் பெல்ட், கேபிள் வயர்களால் கடுமையாகத் தாக்கப்பட்டதில் மன உளைச்சலுக்கு ஆளாகி கடந்த 2024 பிப். 18-ஆம் தேதி விடுதி கழிப்பறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதுபோன்ற ராகிங் கொடுமைகள் கேரளத்தில் மட்டுமே நடைபெறுகின்றன என்று கருத வேண்டாம். கோவையில் படித்த திருப்பூர் மாணவர் தன்னை சக மாணவர் ஒருவர் தொடர்ந்து மிரட்டுவதாகவும், வெளியாள்களை அழைத்து வந்து ஏதாவது செய்து விடுவாரோ என்று பயமாக இருக்கிறது என்றும் வாட்ஸ்ஆப் ஆடியோ பதிவை உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் அனுப்பிவிட்டு கடந்த ஜன.3-ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டார்.
கர்நாடக மாநிலம், பிஜாபூரில் உள்ள அல் அமீன் மருத்துவக் கல்லூரியில் ஜம்மு – காஷ்மீர் மாணவரை ராகிங் செய்ததாக 5 மாணவர்கள் மீது கடந்த பிப். 19-ஆம் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கேரளத்தில் கடந்த 2020-ல் 16 ராகிங் சம்பவங்களும், நாடு முழுவதும் 226 சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன. இதுவே 2021-ல் கேரளத்தில் 14, நாடு முழுவதும் 546, 2022-ல் கேரளத்தில் 39, நாடு முழுவதும் 1,103, 2023-ல் கேரளத்தில் 30, நாடு முழுவதும் 964, 2024-ல் கேரளத்தில் 43, நாடு முழுவதும் 1,086 என பதிவாகி உள்ளன.
ராகிங் சம்பவங்கள் முன்பெல்லாம்கூட இருந்ததுண்டு. ஆனால், இப்போது கத்தி, காம்பஸால் குத்துவது, கழிப்பறையை நக்கவைப்பது, ஆடையைக் களைந்து நிர்வாணமாக்குவது, பெல்ட் – வயர் போன்றவற்றால் கடுமையாகத் தாக்குவது என ராகிங் செய்வதில் கொடூரத்தனம் மிகவும் அதிகரித்துள்ளது கவலை அளிக்கும் அம்சமாக உருவெடுத்துள்ளது.
மேலே நாம் குறிப்பிட்டுள்ள செய்திகள், மார்ச் 1, 25 தேதியன்று ‘அதிகரிக்கும் வக்கிரம்’ என்ற தலைப்பில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் நடக்கும் ராகிங் பற்றிய புள்ளி விவரத்துடன் கூடிய தினமணியின் கண்டனத் தலையங்கத்தின் ஒரு பகுதியாகும். இந்தத் தலையங்கம் கேரளக் கல்லூரிகள் மற்றும் பள்ளிகளில் நடக்கும் ராகிங் அவலத்தை மட்டும் எடுத்துக் கூறவில்லை. இந்தியா முழுவதிலும் நடைபெறுகின்ற ராகிங் அவலங்களை படம்பிடித்துக் காட்டுகின்றது.
ராகிங் ஏன் தீர்க்கமுடியாத பிரச்சனையாகத் தொடர்கின்றது என்பதற்குப் பின் வரும் காரணங்களை பட்டியலிட்டு விட்டு அதற்கு உரிய தீர்வுகளையும் தெரிவிக்கின்றது
“இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மாணவர்கள் என்பதால் பெரும்பாலும் சாட்சியம் இல்லை என்றுகூறி விடுவிக்கப்படுகின்றனர். கடும் தண்டனைகள் விதிக்கப்படுவதில்லை. கல்லூரிகளில் ராகிங் தடுப்புக் குழுக்கள் அமைத்தல், கட்டணமில்லா உதவி எண் அறிவித்தல், தான் நிரபராதி என்பதைக் குற்றஞ்சாட்டப்பட்டவர் நிரூபிக்கச் செய்தல், பாடத்திட்டத்தில் ராகிங் குறித்த விழிப்புணர்வு, மூத்த – இளம் மாணவர்களிடையே அடிக்கடி கலந்துரையாடல் உள்ளிட்ட பல பரிந்துரைகளை இதற்கென அமைக்கப்பட்ட ராகவன் கமிட்டி அளித்துள்ளது. அவற்றை நடைமுறைப்படுத்த வேண்டும் என கடந்த 2009-ஆம் ஆண்டிலேயே உச்சநீதிமன்றம் வலியுறுத்தி உள்ளது. எனினும், அது இன்னும் ஏட்டளவிலேயே உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஒரு சம்பவம் நடக்கும்போது சில நாள்கள் பேசிவிட்டு மறந்துவிடுவதால் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்கின்றன. இது மாணவர்களின் எதிர்காலம் தொடர்புடையது என்பதால் இந்தக் கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.
சட்டத்தின் பலவீனத்தை சாதகமாக்கிக் கொண்டு ராகிங் செய்யும் மாணவர்கள் சட்டத்தின் பிடியிலிருந்து எப்படித் தப்பிக்கின்றனர் என்பதை குறிப்பிட்டு விட்டு உச்சநீதிமன்றம் நடைமுறைப் படுத்த சொன்ன ராகவன் கமிட்டி பரிந்துரைகளை செயல்படுத்துமாறு தெரிவிக்கின்றது.
இறுதியில், முத்தாய்ப்பாக ராகிங் சம்பவங்கள் இளைஞர்களின் மன நிலையில் காணப்படும் வக்கிரத்தனத்தின் வெளிப்பாடு. அதை அகற்றுவதற்கு ஆன்மீகச் சிந்தனையும், உளவியல் ஆலோசனையும் உதவக்கூடும் என்று முடிக்கின்றது.
(நன்றி தினமணி)
கேரளாவில் நடக்கும் இதே ராகிங் பிரச்சனை குறித்து, கேரளாவில் வளர்ந்து வரும் ராகிங் பிரச்சனை என்று தலைப்பிட்டு கேரளாவின் மூத்த காங்கிரஸ் கட்சித் தலைவரும் முன்னாள் உள்துறை அமைச்சருமான திரு. ரமேஷ் சென்னிதலா, தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கையில் கடந்த மார்ச் 18 அன்று ஒரு கட்டுரை எழுதியிருந்தார்.
அதில் தினமணி தலையங்கம் குறிப்பிட்டிருந்த பூக்கோடே கால்நடை மருத்துவ அறிவியல் கல்லூரியில் ராகிங் காரணமாக சித்தார்த்தன் தற்கொலை சம்பவத்தை எடுத்துக் கூறி, ராகிங் நடப்பதைக் கண்ட பிறகும் அதைக் கண்டிக்காமல் கடந்த சென்ற 100 சக மாணவர்களும் கொலைக் குற்றவாளிகள் என்று வன்மையாகத் தனது கண்டனத்தைப் பதிவு செய்கின்றார். இந்தக் கோர ராகிங் எனும் சமூக அவலத்தை அரங்கேற்றியவர் கேரளா சி.பி.எம் கட்சியின் மாணவர் அணித் தலைவர்கள் என்பது அதிர்ச்சியளிக்கும் செய்தியாகும் என்றும் தெர்விக்கின்றார்.
தற்கொலையில் முடியும் கல்லூரி ராகிங் அவலம்
இந்த சித்தார்த்தனின் வழக்கில் ராகிங் தடுப்புப் பிரிவு மற்றும் சிபிஐயின் முழுமையான விசாரணைகள் நடந்த போதும் அது உயர் நீதிமன்றத்தில் எதிர்பாராத திருப்பத்தைச் சந்தித்தது.
கொடூரமான ராகிங் சம்பவத்தை வெறும் “ஒழுங்கு நடவடிக்கை” என்று ஒரு நீதிபதி அமர்வு நிராகரித்ததுடன் மட்டுமல்லாமல் குற்றம் சாட்டப்பட்டவருக்கு அது நிபந்தனை ஜாமீனும் வழங்கியது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து வழக்குத் தொடர அரசு தரப்பு எந்த தீவிர முயற்சியும் எடுக்கவில்லை. ஒரு வருடத்திற்குள், இடைநீக்கம் செய்யப்பட்ட அதிகாரிகள் மீண்டும் பணியில் அமர்த்தப்பட்டனர் குற்றம் சாட்டப்பட்ட மாணவர்கள் மீண்டும் படிப்பைத் தொடர அனுமதிக்கப்பட்டனர்.
வேறு வழியில்லாமல் சித்தார்த்தின் பெற்றோர் உயர் நீதிமன்றத்தின் டிவிஷன் பெஞ்சை அணுக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது, டிவிஷன் பெஞ்ச் மாணவர்களுக்கு படிப்பைத் தொடர தடை விதித்தது. ராகிங் கட்டுக்குள் அடங்காமல் தொடங்குவதற்கு குற்றவாளிக்கு அரசியல்வாதிகள் அளிக்கும் ஆதரவு ஒரு முக்கியக் காரணமாக அமைகின்றது என்றும் அவர் குறிப்பிடுகின்றார்.
அத்துடன், ராகிங் வழக்குகளை கவனிக்க கேரள உயர்நீதிமன்றம் சிறப்பு அமர்வை அமைத்ததை அவர் பாராட்டுகின்றார். தான் உட்பட ஒரு நீதிபதி அமர்வு அளித்த தீர்ப்பை சமூக ஆர்வலர்கள் நடத்திய போராட்டங்கள் காரணம் உயர்நீதிமன்ற சரியான நடவடிக்கை எடுக்க முன்வந்தது என்றும் அவர் குறிப்பிடுகின்றார்.
ஒரு சில ராகிங்கள் தான் வெளிச்சத்திற்கும் வெளி உலக கவனத்திற்கும் வருகின்றன. கவனத்திற்கு வராமல் பல ராகிங் சம்பவங்கள் கடந்து செல்கின்றன.
பெங்களூரில் ராகிங் அராஜகக் கும்பல் ஒரு மலையாள மாணவரை சுத்தம் செய்யும் லோஷனை குடிக்க வைத்திருக்கின்றது. அதனால் அவரது உறுப்பு நிரந்தரமாக பாதிப்படைந்திருக்கின்றது. இன்னொரு ராகிங் கும்பல் இளம் விளையாட்டு வீரர் விளையாட்டில் பங்கெடுக்கக் கூடாது என்பதற்காக காலையே உடைத்திருக்கின்றனர். குற்றச் செயலில் ஈடுபடும் இத்தகைய மனப் பிறழ்வு கொண்ட ஒரு சிலரின் செயல்பாடுகள் பல அப்பாவிகளின் வாழ்க்கையை நிர்மூலமாக்கும் கொடூரத்துக்கும் கொடுமைக்கும் கொண்டு செல்கின்றது என்று தனது மனவேதனையை பதிவு செய்கின்றார்.
எர்ணாகுளம் குளோபல் பப்ளிக் பள்ளியில் 9 ஆம் வகுப்பு படிக்கும் மிஹிர் ராகிங் காரணமாக தற்கொலை செய்த நிகழ்வு, ராகிங் கொடுமை கல்லூரிகள் வட்டத்தை தாண்டி பள்ளிகளிலும் அரங்கேறி ஆட்டம் போடுகின்றது என்று தனது வருத்தத்தை தெரிவிக்கின்றார்.

ராகிங் இந்திய அளவிலான
ஒரு சமூகக் கொடுமை

மொத்தத்தில், ராகிங் கேரளாவை மட்டுமல்ல; இந்தியா முழுவதும் மாணவ சமூகத்தை மிருகத்தை விடவும் கீழான நிலையில் தள்ளியிருக்கின்றது என்பதை தினமணியும் கேரளா காங்கிரஸ் தலைவர் சென்னிதலா அவர்களின் விமர்சனக் கட்டுரையும் நமக்குத் தெளிவுபடுத்துகின்றது.
இது சட்டத்தின் மூலம் மட்டும் தீர்க்கப்படக் கூடிய பிரச்சனை அல்ல என்பதை உணர்த்தும் விதமாக தினமணி தனது தலையங்கத்தில் ராகிங் சம்பவங்கள் இளைஞர்களின் மன நிலையில் காணப்படும் வக்கிரத்தனத்தின் வெளிப்பாடு. அதை அகற்றுவதற்கு ஆன்மீக சிந்தனையும், உளவியல் ஆலோசனையும் உதவக்கூடும் என்று முடிக்கின்றது.
ஆன்மீகச் சிந்தனை என்றால் மனித சமுதாயத்தை உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்று சாதிய பிரிவுகளின் பிரித்து, தீண்டாமையை போதிக்கின்ற ஆன்மீகமாக இருக்கக் கூடாது. மனிதனுக்கு மத்தியில் உயர்ந்தவன் தாழ்ந்தவன். கிடையாது. அனைவரும் ஒரே ஆதமின் மக்கள் என்ற சகோதரவத்தை போதிக்கக் கூடிய ஆன்மீகமாக இருக்க வேண்டும். அது உண்மையில் இஸ்லாமிய ஆன்மீகத்தை தவிர வேறில்லை.
இறைநம்பிக்கையாளர்கள் அனைவரும் சகோதரர்களே! எனவே உங்கள் சகோதரர்களுக்கிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துங்கள்!
அல்குர்ஆன் 49:10
தன்னுடன் பிறந்த அண்ணன் தம்பிகளிடத்தில் இந்த மாணவர்கள் ராகிங் செய்வார்களா? என்றால் கிடையாது. பிறர் எனும்போது அவர்களிடத்தில் இந்த மிருகத்தன்மை ஏற்படுகின்றது. அதனால் இஸ்லாம் அவர்களிடத்தில் சகோதரத்துவ உணர்வை முதலில் ஊட்டுகின்றது.
இறைநம்பிக்கை கொண்டோரே! ஒரு சமுதாயம், மற்றொரு சமுதாயத்தை ஏளனம் செய்ய வேண்டாம். அவர்கள், இவர்களைவிடச் சிறந்தவர்களாக இருக்கலாம். எந்தப் பெண்களும், மற்றப் பெண்களை ஏளனம் செய்ய வேண்டாம். அவர்கள் இவர்களைவிடச் சிறந்தோராக இருக்கலாம். உங்களுக்குள் (ஒருவரையொருவர்) குறை கூறிக் கொள்ளாதீர்கள். (தீய) பட்டப் பெயர்களால் அழைக்காதீர்கள். இறைநம்பிக்கைக்குப்பின் தீய பெயர்களைச் சூட்டுவது மிகக் கெட்டது. யார் பாவ மன்னிப்புத் தேடவில்லையோ அவர்களே அநியாயக்கார்கள்
அல்குர்ஆன் 49:11
என்ற வசனத்தின் அடிப்படையில் கேலி, கிண்டல், ஏளனம் செய்வதைத் தடுக்கின்றது. எல்லாவற்றிற்கு மேலாக சக மனிதனின் அத்துமீறினால் நாளை மறுமை மன்றத்தில் சம்பந்தப்பட்டவர் மன்னிக்காத வரை அவரது பாவத்தை இறைவன் மன்னிக்க மாட்டான், அவ்வாறு மன்னிக்காதவரை சொர்க்கம் செல்ல முடியாது என்ற மறு உலக நம்பிக்கையை ஊட்டுகின்றது.
ஒருவர், தன் சகோதரனுக்கு அவனது மானத்திலோ, வேறு (பணம், சொத்து போன்ற) விஷயத்திலோ இழைத்த அநீதி (ஏதும் பரிகாரம் காணப்படாமல்) இருக்குமாயின், அவர் அவனிடமிருந்து அதற்கு இன்றே மன்னிப்புப் பெற்றுக் கொள்ளட்டும். தீனாரோ, திர்ஹமோ (பொற்காசுகளோ வெள்ளிக் காசுகளோ) பயன் தரும் வாய்ப்பில்லாத நிலை (ஏற்படும் மறுமை நாள்) வருவதற்கு முன்னால் (மன்னிப்புப் பெற்றுக் கொள்ளட்டும். ஏனெனில், மறுமை நாளில்) அவரிடம் நற்செயல் ஏதும் இருக்குமாயின் அவனது அநீதியின் அளவுக்கு அவரிடமிருந்து எடுத்துக் கொள்ளப்பட்டு (அநீதிக்குள்ளானவரின் கணக்கில் வரவு வைக்கப்பட்டு) விடும். அநீதியிழைத்தவரிடம் நற்செயல்கள் எதுவும் இல்லையென்றால் அவரது தோழரின் (அநீதிக்குள்ளானவரின்) தீய செயல்கள் (அவர் கணக்கிலிருந்து) எடுக்கப்பட்டு அநீதியிழைத்தவரின் மீது சுமத்தப்பட்டு விடும். என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 3449
இந்த ஹதீஸ் தெரிவிப்பது என்ன?
ஒரு மனிதன் சக மனிதனுக்கு உளவியல் ரீதியாகவோ அல்லது உடல் ரீதியாகக் காயப்படுத்தியிருந்தால் சம்பந்தப்பட்டவர் மன்னிக்காத வரை அல்லாஹ் மன்னிக்க மாட்டான். அவ்வாறு மன்னிக்காதவரை அவர் சொர்க்கம் செல்லமுடியாது என்ற மறுமை நம்பிக்கை தான் இப்படிப்பட்ட ராகிங் கொடுமைகளைத் தடுக்க முடியும். மற்ற எந்தச் சித்தாந்தமோ, சட்டமோ இதைத் தடுக்க முடியாது.
இங்கு இன்னொன்றையும் கவனிக்க வேண்டும். கல்வி கிடைத்து விட்டால் மனிதன் மனிதன் ஆகி விடுவான் என்பதும் ஒரு வறட்டுத் தத்துவமாக உள்ளது. கல்வி கற்பவர்களுக்கு மத்தியில் தான் ராகிங் அவர்களை மிருக நிலைக்குக் கொண்டு சென்றிருக்கின்றது. உண்மையான கல்வி மறுமை நம்பிக்கையுடன் கூடிய கல்வி தான் என்பதை இங்கு நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.