மாமறையை மெய்ப்படுத்தும் முன்னறிவிப்புகள்

அகிலத்தின் இறைவனாகிய அல்லாஹ்வால் தான் அல்குர்ஆன் வேதம் அருளப்பட்டது என்பதற்கு அதிலேயே நிறைய சான்றுகள் உள்ளன. அந்த வரிசையில், அல்குர்ஆனில் இடம்பெற்றுள்ள முன்னறிவுப்புகளும் அடங்கும். எதிர்காலத்தில் நடக்க இருப்பவையாக அல்குர்ஆனில் கூறப்பட்ட விசயங்கள் அப்படியே நடந்தேறியுள்ளன. அவற்றுள் சிலவற்றை இக்கட்டுரையில் காண்போம்.

அநியாயக்காரன் அபூலஹப் நரகவாசியே!

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் இறைத்தூதராகத் தேர்வு செய்யப்பட்ட போது, அதன் துவக்க காலத்தில் நெருங்கிய உறவினர்களிடம் மார்க்கத்தைச் சொல்லுமாறு அவருக்குக் கட்டளை விதிக்கப்பட்டது. அதன்படி அவர், தமது உறவினர்களை அழைத்து ஏகத்துவத்தை எடுத்துரைத்த சமயத்தில் அவரது பெரிய தந்தையான அபூலஹப் கடுமையாக எதிர்த்தான். இதைப் பின்வரும் செய்தி வாயிலாக அறியலாம்.

‘(நபியே!) உங்களுடைய நெருங்கிய உறவினர்களை நீங்கள் எச்சரியுங்கள்’ எனும் (திருக்குர்ஆன் 26:214 வது) இறைவசனம் அருளப் பெற்ற போது நபி (ஸல்) அவர்கள் ‘ஸஃபா’ மலைக் குன்றின் மீது ஏறிக்கொண்டு, ‘பனூ ஃபிஹ்ர் குலத்தாரே! பனூ அதீ குலத்தாரே!’ என்று குறைஷிக் குலங்களை (பெயர் சொல்லி) அழைக்கலானார்கள். அவர்கள் அனைவரும் ஒன்று கூடினார்கள். அங்கு வரமுடியாத நிலையில் இருந்த சிலர், அது என்ன என்று பார்த்து வர (தம் சார்பாக) ஒரு தூதரை அனுப்பினார்கள். இவ்வாறு அபூ லஹப் உள்ளிட்ட குறைஷியர் (அனைவரும்) வந்(து சேர்ந்)தனர்.

நபி(ஸல்) அவர்கள், ‘சொல்லுங்கள்: இந்தப் பள்ளத்தாக்கில் குதிரைப் படை ஒன்று உங்களின் மீது தாக்குதல் தொடுக்கப் போகிறது என்று நான் உங்களுக்குத் தெரிவித்தால், நான் உண்மை சொல்வதாக என்னை நீங்கள் நம்புவீர்களா?’ என்று கேட்க, மக்கள் ‘ஆம். (நம்புவோம்); உங்களிடம் நாங்கள் உண்மையைத் தவிர வேறெதையும் அனுபவித்ததில்லை’ என்று பதிலளித்தனர்.

நபி (ஸல்) அவர்கள், ‘அப்படியென்றால், நான் கடும் வேதனையொன்று எதிர் நோக்கியுள்ளது என்று உங்களை எச்சரிக்கிறேன்’ என்று (தம் மார்க்கக் கொள்கையைச்) கூறினார்கள். (இதைக் கேட்ட) அபூலஹப், ‘நாளெல்லாம் நீ நாசமாக! இதற்காகவா எங்களை ஒன்று கூட்டினாய்?’ என்று கூறினான். அப்போதுதான் ‘அபூலஹபின் இரு கைகளும் நாசமாகி விட்டன. அவனும் நாசமாகி விட்டான்…’என்று தொடங்கும் (111வது) அத்தியாயம் அருளப்பெற்றது.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: புகாரி 4770, 4971

அல்லாஹ்வை மட்டும் வணங்க வேண்டும் என்று ஓரிறைக் கொள்கையை நபிகள் நாயகம் விளக்கியதுமே அபூலஹப் கடும் ஆத்திரம் அடைந்தான். சத்தியத்தை ஏற்க மறுத்ததுடன் நபிகளாருக்கு எதிராக சாபமிட்டான். உடனே அவனைக் குறித்து அல்லாஹ் பின்வருமாறு வசனங்களை அருளினான்.

அபூலஹபின் இரு கைகளும் நாசமாகி விட்டன. அவனும் நாசமாகி விட்டான். அவனுடைய செல்வமும், அவன் சம்பாதித்தவையும் அவனுக்குப் பயனளிக்கவில்லை. அவனும், விறகு சுமக்கும் அவனது மனைவியும் கொழுந்து விட்டெரியும் நரக நெருப்பில் நுழைவார்கள். அவளுடைய கழுத்தில் முறுக்கேறிய ஈச்சங்கயிறு உள்ளது.

அல்குர்ஆன் 111:1-5

இஸ்லாத்தை எதிர்ப்பதிலே அபூலஹபும் அவனுக்கு உடந்தையாக இருந்த அவனது மனைவியும் நரகத்தில் வீழ்வார்கள் என்று அல்லாஹ் அறிவித்தான். அதற்கேற்ப அவர்கள் அசத்தியத்தில் வீழ்ந்து அழிந்துபோனார்கள். ஒருவேளை அந்த இருவரும் முஸ்லிம்களாகி விட்டதாக நடித்திருந்தாலும் கூட இவ்வசனங்கள் பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகியிருக்கும். நபிகள் நாயகத்தின் மீது சந்தேகத்தைக் கிளப்பியிருக்கும். அப்படி நடக்கவில்லை. அவர்கள் குறித்து குர்ஆன் கூறிய விசயம் அப்படியே நடந்தது.

மனிதர்களால் கொல்ல முடியாது!

ஏகத்துவத்தைப் போதித்த காரணத்தினால் நபிகள் நாயகத்திற்கு முன்பு பல நபிமார்கள் எதிரிகளால் கொல்லப்பட்டிருக்கிறார்கள். அவ்வாறான அச்சுறுத்தல் நபிகள் நாயகத்திற்கும் இருந்தது. அதைச் சுட்டிக்காட்டி அல்லாஹ் அன்றைய முஸ்லிம்களுக்கு கொள்கை உறுதியை வலியுறுத்தினான். இதோ பாருங்கள்.

முஹம்மத் இறைத்தூதர் தவிர வேறில்லை. அவருக்கு முன்னர் பல தூதர்கள் சென்று விட்டனர். அவர் மரணித்துவிட்டால் அல்லது கொல்லப்பட்டு விட்டால் நீங்கள் பழைய பாதைக்கே திரும்பிச் சென்று விடுவீர்களா? யார் பழைய பாதைக்குத் திரும்பிச் செல்கிறாரோ அவர் அல்லாஹ்வுக்கு எந்தத் தீங்கும் செய்யவே முடியாது. நன்றி செலுத்துவோருக்கு அல்லாஹ் கூலி வழங்குவான்.

(அல்குர்ஆன் 3 : 144)

மக்காவில் இருக்கும் போது மட்டுமல்ல, மதீனாவிற்கு வந்த பிறகும் கூட எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம் எனும் அச்சப்படும் அளவுக்கு நபிகள் நாயகத்தின் உயிருக்கு மிகப் பெரும் ஆபத்து இருந்தது. இதனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செய்த ஏற்பாட்டினைப் பின்வரும் நபிமொழி விளக்குகிறது.

நபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்த பின், முதலில் இரவில் கண் விழித்திருந்தார்கள். மதீனாவுக்கு வந்து சிறிது காலம் கழித்து, ‘என் தோழர்களிடையே எனக்கு இரவில் காவல் காப்பதற்கு ஏற்ற மனிதர் ஒருவர் இருந்தால் நன்றாயிருக்குமே’ என்று கூறினார்கள். அப்போது நாங்கள் ஆயுதத்தின் ஓசையைக் கேட்டோம். நபி(ஸல்) அவர்கள், ‘யாரது?’ என்று கேட்டார்கள். வந்தவர், ‘நானே ஸஅத் இப்னு அபீ வக்காஸ். தங்களுக்குக் காவல் இருப்பதற்காக வந்துள்ளேன்’ என்று கூறினார். பிறகு நபி (ஸல்) அவர்கள் (நிம்மதியாக) உறங்கினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புகாரி 2885, 7231

இந்தளவிற்கு   நபிகள் நாயகத்தின் உயிருக்கும் ஆபத்து இருக்கும் சூழலில் அல்லாஹ் ஒரு நற்செய்தியை அறிவித்தான். அவரை எவராலும் கொல்ல முடியாது என்று முன்னறிவிப்பு செய்தான்.

தூதரே! உமது இறைவனிடமிருந்து உமக்கு அருளப்பட்டதை எடுத்துரைப்பீராக! (அவ்வாறு) நீர் செய்யாவிட்டால் அவனது தூதுச் செய்தியை எடுத்துரைத்தவராக மாட்டீர். அல்லாஹ், மனிதர்களிடமிருந்து உம்மைக் காப்பாற்றுவான். இறைமறுப்பாளர்களின் கூட்டத்திற்கு அல்லாஹ் நேர்வழி காட்ட மாட்டான்.

அல்குர்ஆன் 5:67

இஸ்லாத்தின் வளர்ச்சியைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் நாளுக்கு நாள் எதிரிகள் அதிகரித்த போதிலும், தங்களுக்குள் கூட்டுச் சேர்ந்து எவ்வளவோ முயற்சித்தும் நபிகள் நாயகத்தைக் கொல்ல முடியவில்லை. நபிகள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இயற்கை மரணம் தான் அடைந்தார்கள்.

இஸ்லாமிய ஆட்சி அமையும்!

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் முஸ்லிம்களும் மக்காவில் இருக்கும் போது கடுமையான நெருக்கடியைச் சந்தித்தார்கள்.  ஒரு கட்டத்தில் அங்கு வாழவே முடியாது எனும் நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். அப்படியான மக்கா வாழ்க்கையின் போது பின்வரும் வசனம் அருளப்பட்டது.

(நபியே!) நீரும், உம்முடன் இருப்போரில் ஒரு கூட்டத்தினரும், இரவில் மூன்றில் இரு பகுதிக்குக் குறைவாகவும், அதில் பாதியளவும், அதில் மூன்றில் ஒரு பகுதியும் தொழுகையில் ஈடுபடுகிறீர்கள் என்பதை உமது இறைவன் அறிவான். அல்லாஹ்வே இரவையும், பகலையும் நிர்ணயிக்கிறான். நீங்கள் அதைத் துல்லியமாகக் கணக்கிட முடியாது என்பதை அறிந்துள்ளான். எனவே உங்களை அவன் மன்னித்து விட்டான்.

குர்ஆனிலிருந்து உங்களால் இயன்றதை ஓதுங்கள்! உங்களில் நோயாளிகளும், அல்லாஹ்வின் அருளைத் தேடி பூமியில் பயணம் செய்யும் சிலரும், அல்லாஹ்வின் பாதையில் போரிடும் சிலரும் இருப்பார்கள் என்பதையும் அறிந்துள்ளான்.

எனவே அதிலிருந்து இயன்றதை ஓதுங்கள்! தொழுகையை நிலைநிறுத்துங்கள்! ஸகாத்தையும் கொடுங்கள்! அல்லாஹ்வுக்கு அழகிய முறையில் கடன் கொடுங்கள்! உங்களுக்காக நன்மையிலிருந்து எதை நீங்கள் முற்படுத்துகிறீர்களோ அதை அல்லாஹ்விடம் மிகச் சிறந்ததாகவும், மகத்தான கூலியாகவும் பெற்றுக் கொள்வீர்கள். அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புக் கோருங்கள்! அல்லாஹ் மன்னிப்புமிக்கவன்; நிகரிலா அன்பாளன்.

(அல்குர்ஆன் 73:20)

உங்களில் அல்லாஹ்வின் பாதையில் போரிடும் சிலரும் இருப்பார்கள் என்று முஸ்லிம்களைக் குறித்து இவ்வசனம் பேசுகிறது. அதாவது, இஸ்லாமிய ஆட்சி அமைந்து, எதிரிகளுடன் போர் செய்யும் சூழ்நிலை ஏற்படும் என்பதே இதன் பொருள்.

எதிரிகளால் முஸ்லிம்களின் உயிருக்கும் உடமைக்கும் பாதுகாப்பு இல்லாத சூழலில் அருளப்பட்ட இந்த முன்னறிவிப்பு விரைவில் நடந்தேறியது. அவர்கள் நாடு துறந்து மதீனாவிற்குச் சென்றதுமே நபிகள் நாயகத்தின் தலைமையில் இஸ்லாமிய ஆட்சி நிறுவப்பட்டது.

பத்ரு போரில் வெற்றி கிடைக்கும்

மதீனாவைத் தலைமையிடமாகக் கொண்டு நபிகள் நாயகம் இஸ்லாமிய ஆட்சியைப் பிரகடனம் செய்துவிட்ட வேளையில் அங்கு வாழும் முஸ்லிம்களை அழித்தொழிக்க மக்கத்து மறுப்பாளர்கள் பெரும் சதிட்டம் தீட்டினார்கள். அதற்கு உதவும் நோக்கில் அவர்களது வாணிபக் கூட்டம் சிரியாவில் இருந்து மக்காவிற்குச் சென்று கொண்டிருந்தது. அதை தடுத்து நிறுத்தும் நோக்கில் முஸ்லிம்கள் காத்துக் கொண்டிருந்தார்கள். அதையறிந்த மக்கத்து மறுப்பாளர்கள் படைதிரண்டு மதீனாவை நெருங்கி விட்டார்கள். முஸ்லிம்கள் எதிர்கொண்ட இச்சூழல் குறித்து அல்லாஹ் பின்வரும் வசனத்தில் குறிப்பிடுகிறான்.

“(வாணிபக் கூட்டம் அல்லது எதிரிப்படை ஆகிய) இரண்டு கூட்டத்தில் ஒன்று உங்களுக்கு உண்டு” என அல்லாஹ் உங்களுக்கு வாக்களித்ததை நினைத்துப் பாருங்கள்! ஆயுதமேந்தாத (வாணிபக்) கூட்டத்தினர் உங்களுக்குக் கிடைக்க வேண்டும் என நீங்கள் விரும்பினீர்கள். அல்லாஹ்வோ தனது கட்டளைகளால் உண்மையை உறுதிப்படுத்தவும், இறைமறுப்பாளர்களை வேரறுக்கவும் நாடுகிறான்.

(அல்குர்ஆன் 8:7)

முஸ்லிம்களுக்கு எதிரான நோக்கத்தில் ஒரு பக்கம் வாணிபக் கூட்டம், இன்னொரு பக்கம் ஆயுதமேந்திய கூட்டம். இவ்விரண்டில் ஒரு கூட்டத்திடம் கண்டிப்பாக வெற்றி கிடைக்கும் என்று அல்லாஹ் தெரிவித்த போது முஸ்லிம்கள் வாணிபக் கூட்டத்தைச் சந்திக்கவே விரும்பினார்கள். ஆனால், அல்லாஹ் அவர்களை ஆயுதம் தரித்த ஆயிரம் பேர் அடங்கிய கூட்டத்தைச் சந்திக்க வைத்தான். அப்போது முஸ்லிம்களோ தோராயமாக முன்னூறு பேர் மட்டுமே இருந்தார்கள். அத்தகைய சூழலில் நபியவர்கள் அல்லாஹ்விடம் அதிகமதிகமாகப் பிரார்த்தனை செய்தார்கள்.

நபி (ஸல்) அவர்கள் (பத்ருப் போரின் போது) ஒரு கூடாரத்தில் இருந்தபடி, ‘இறைவா! நான் உன் உறுதிமொழியையும் வாக்குறுதியையும் உன்னிடமிருந்து கோருகிறேன். இறைவா! உன்னுடைய நாட்டம் (முஸ்லிம்களாகிய) நாங்கள் தோற்றுப் போக வேண்டும் என்று) இருக்குமானால் இன்றைக்குப் பிறகு உன்னை வணங்குவது நின்று போய் விடும். (மக்கள் கற்பனையான பொய்க் கடவுள்களையே வணங்கிக் கொண்டிருப்பார்கள்)’ என்று (முஸ்லிம்களுக்கு வெற்றியைத் தரும்படி) மன்றாடிப் பிரார்த்தித்துக் கொண்டிருந்தார்கள். அபூ பக்ர் (ரலி), நபி (ஸல்) அவர்களின் கையைப் பிடித்துக் கொண்டு, ‘போதும், இறைத்தூதர் அவர்களே! தங்கள் இறைவனிடம் தாங்கள் நிறையவே மன்றாடி விட்டீர்கள்’ என்று கூறினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் கவச உடை அணிந்திருந்தார்கள். பிறகு ‘இந்த (இறைமறுப்பாளர்) படை விரைவில் தோற்கடிக்கப்படும்; மேலும், இவர்கள் புறமுதுகிட்டு ஓடுவார்கள். ஆயினும், இவர்களின் (கணக்கைத் தீர்த்திட) வாக்களிக்கப்பட்ட நேரம் மறுமை நாளாகும். மறுமை நாளோ மிகக் கடுமையானதும், மிகக் கசப்பானதும் ஆகும்’ என்னும் திருக்குர்ஆன் வசனத்தை (திருக்குர்ஆன் 54:45, 46) ஓதியபடி அங்கிருந்து நபியவர்கள் வெளியேறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: புகாரி 2915, 3953, 4877 4878

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், பத்ருப் போர் நாளில் (எதிரிகளான) இணை வைப்பாளர்கள் (எண்ணிக்கை) ஆயிரம் பேராக இருப்பதையும், (முஸ்லிம்களான) தம் தோழர்கள் முன்னூற்றுப் பத்தொன்பது பேராக இருப்பதையும் கண்டார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (தொழுகையின் திசையான) கிப்லாவை முன்னோக்கித் தம் கரங்களை நீட்டித் தம் இறைவனிடம் உரத்த குரலில் இறைஞ்சினார்கள். “இறைவா! நீ எனக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவாயாக. இறைவா! எனக்கு அளித்த வாக்குறுதியை வழங்குவாயாக! இறைவா! இஸ்லாமியரில் இக்குழுவினரை நீ அழித்து விட்டால், இந்தப் பூமியில் உன்னை (மட்டுமே) வழிபட (இனி) யாரும் இருக்க மாட்டார்கள்” என்று தம் கரங்களை நீட்டி, கிப்லாவை முன்னோக்கி இறைவனிடம் இறைஞ்சிக் கொண்டேயிருந்தார்கள்.

எந்த அளவுக்கென்றால், (கைகளை உயர்த்தியதால்) அவர்களுடைய தோள்களிலிருந்து அவர்களின் மேல்துண்டு நழுவி கீழே விழுந்து விட்டது. அப்போது அவர்களிடம் அபூபக்ர் (ரலி) அவர்கள் வந்து, அத்துண்டை எடுத்து அவர்களின் தோள்கள் மீது போட்டுவிட்டு, பின்னாலிருந்து அவர்களைக் கட்டியணைத்துக் கொண்டு, “அல்லாஹ்வின் தூதரே! உங்கள் இறைவனிடம் வேண்டியது போதும். அவன் உங்களுக்கு அளித்த வாக்குறுதியை நிச்சயம் நிறைவேற்றுவான்” என்று கூறினார்கள். அப்போது அல்லாஹ், “உங்கள் இறைவனிடம் நீங்கள் உதவி தேடியபோது ‘அணிவகுக்கும் வானவர்களில் ஆயிரம் பேரைக் கொண்டு உங்களுக்கு உதவுவேன்’ என அவன் உங்களுக்குப் பதிலளித்தான்” எனும் (8:9) வசனத்தை அருளினான்.

அறிவிப்பவர்: உமர் (ரலி),

நூல்கள்: முஸ்லிம்(3621), திர்மிதீ (3006), அஹ்மத்(203)

இரண்டு கூட்டத்தில் ஒன்றான ஆயுதமேந்திய கூட்டத்தை முஸ்லிம்கள் எதிர்கொண்ட போது, வாக்குறுதி அளித்தபடி வெற்றியளிக்குமாறும் அவ்வாறு இல்லாவிட்டால் முஸ்லிம்கள் இல்லாது போய்விடுவார்கள் என்றும் நபியவர்கள் அல்லாஹ்விடம் மன்றாடினார்கள். அப்போது, முன்னறிவித்தவாறு நடக்கும் என்றும் அதற்காக வானவர்களை அனுப்பி உதவுவேன் என்றும் அல்லாஹ் அறிவித்தான். அவ்வாறே அந்தப் போரில் முஸ்லிம்களுக்கு பெரும் வெற்றி கிடைத்தது.

ரோமப் பேரரசு வெற்றி பெறும்

நபிகளார் காலத்தில் ரோமப் பேரரசு மற்றும் பாரசீகப் பேரரசு ஆகிய இரண்டு பேரரசுகள் இருந்தன. அவை இரண்டுக்கும் இடையே நடைபெற்ற போரில் பாரசீகப் பேரரசு வெற்றி பெற்றது. தங்களைப் போன்று இணைவைப்பு கொள்கை கொண்ட பாரசீகர்கள் வெற்றி பெற்றதால் மக்கத்து எதிரிகள் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது கீழிருக்கும் வசனம் அருளப்பட்டது.

பக்கத்து நாட்டில் ரோமாபுரி தோற்கடிக்கப்பட்டு விட்டது. அவர்கள் அத்தோல்விக்குப் பிறகு சில ஆண்டுகளில் வெற்றியடைவார்கள். இதற்கு முன்னரும் பின்னரும் அல்லாஹ்வுக்கே அதிகாரம் உரியது. அல்லாஹ்வின் உதவியைக் கொண்டு அந்நாளில் இறை நம்பிக்கையாளர்கள் மகிழ்ச்சியடைவார்கள். அவன், தான் நாடியோருக்கு உதவுகிறான். அவன் மிகைத்தவன்; நிகரிலா அன்பாளன்.

(அல்குர்ஆன் 30:2-5)

இப்னு மஸ்வூத் (ரலி) கூறினார்கள்:  “அலிஃப். லாம். மீம். பக்கத்து நாட்டில் ரோமாபுரி தோற்கடிக்கப்பட்டு விட்டது. அவர்கள் அத்தோல்விக்குப் பிறகு சில ஆண்டுகளில் வெற்றியடைவார்கள்” (30:1-3) என்று அல்லாஹ் கூறுகின்றான். இது முன்பே (நபிகளார் காலத்தில் நடந்து) முடிந்து விட்டது.

அறிவிப்பவர்: மஸ்ரூக்,

நூல்கள்: புகாரி (4774), முஸ்லிம் (5391)

திருக்குர்ஆனில் கூறப்பட்டவாறு பாரசீகப் பேரரசுக்கு எதிராக ரோமப் பேரரசு வெற்றி பெற்றது. இது அன்றைய அரசியல் களத்தில் மட்டுமல்ல! ஆன்மீகக் களத்திலும் மக்களுக்கு வியப்பை அளித்தது. அவர்கள் அல்குர்ஆனை அல்லாஹ்வின் வேதம் என்பதைப் புரிந்து கொள்வதற்கான வாய்ப்பு கிடைத்தது.

மக்கா வெற்றி கொள்ளப்படும்

ஏகத்துவத்திற்கு எதிராகக் கடுமையான எதிர்ப்பு ஏற்பட்ட காரணமாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் முஸ்லிம்களும் மதீனாவிற்கு நாடு துறந்து சென்றுவிட்டார்கள். அங்கு அவர்கள் வாழ்ந்தாலும் தாய்நகரமான மக்கா நகரம் அவர்களுக்கு விருப்பமானதாக இருந்தது. அங்கு இஸ்லாம் தழைத்தோங்க வேண்டுமென விரும்பினார்கள். இந்நிலையில் மக்கா நகரம் குறித்து பின்வரும் வசனம் அருளினான்.

(நபியே!) உம்மீது இக்குர்ஆனை விதியாக்கியவன், உம்மை (நீர்) சென்றடைய வேண்டிய இடத்திற்கு (மக்காவுக்கு) மீண்டும் கொண்டு செல்வான். “நேர்வழியைக் கொண்டு வந்திருப்பவர் யார்? பகிரங்க வழிகேட்டில் இருப்பவர் யார்? என்பதை என்னிறைவன் நன்கறிந்தவன்” என்று கூறுவீராக!

(அல்குர்ஆன்  28:85)

நபிகள் நாயகத்தின் தலைமையிலான இஸ்லாமிய ஆட்சிக்குள் மக்கா நகரம் ஒருபோதும் சென்றுவிடக் கூடாது என்பதில் மக்கத்து இறைமறுப்பாளர்கள் உறுதியாய் இருந்தார்கள். ஆனால், அல்லாஹ் நபிகள் நாயகத்தை மக்காவிற்குக் கொண்டுபோய் சேர்ப்பதாக முன்னறிவிப்பு செய்து விட்டான். அதனால் அங்கு ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தைப் பின்வரும் நபிமொழி வாயிலாக அறியலாம்.

நாங்கள் மக்கள் கடந்து செல்லும் பாதையிலிருந்த ஒரு நீர் நிலையின் அருகே இருந்தோம். வாகனத்தில் பயணிப்பவர்கள் எங்களைக் கடந்து சென்று கொண்டிருந்தார்கள். நாங்கள் அவர்களிடம், ‘மக்களுக்கென்ன? மக்களுக்கென்ன? இந்த மனிதருக்கு (முஹம்மதுக்கு) என்ன?’ என்று கேட்டுக் கொண்டிருந்தோம். அதற்கு அவர்கள், ‘அந்த மனிதர் தன்னை அல்லாஹ் (இறைத்தூதராக) அனுப்பியிருப்பதாக… அல்லது அல்லாஹ் அவரை இன்ன (குர்ஆன்) போதனைகளைக் கொடுத்து அனுப்பியிருப்பதாகக்… கூறுகிறார்’ என்று (குர்ஆனின் சில வசனங்களை ஓதிக்காட்டி) கூறுவார்கள். உடனே நான் அந்த (இறை) வாக்கை மனப்பகுதி செய்து கொள்வேன். அது என் நெஞ்சில் பதிக்கப்பட்டது போன்று ஆகிவிட்டது.

அரபுகள், தாங்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ள மக்கா வெற்றியை (தக்க தருணமாகக் கருதி) எதிர்பார்த்திருந்தார்கள். எனவே, அவர்கள், ‘அவரை அவரின் குலத்தா(ரான குறைஷிய)ருடன் விட்டுவிடுங்கள். ஏனெனில், அவர்களை அவர் வென்று விட்டால் அவர் உண்மையான இறைத்தூதர் தாம் (என்று நிரூபணமாகி விடும்)’ என்று கூறினார்கள். மக்கா வெற்றியாளர்கள் சம்பவம் நிகழ்ந்தவுடன் ஒவ்வொரு குலத்தாரும் விரைந்து வந்து இஸ்லாத்தை ஏற்றனர். என் தந்தை என் குலத்தாருடன் விரைந்து இஸ்லாத்தை ஏற்றார். நபி (ஸல்) அவர்களிடமிருந்து என் தந்தை திரும்பி வந்தபோது, ‘அல்லாஹ்வின் மீதாணையாக! நான் உண்மையிலேயே நபி(ஸல்) அவர்களிடமிருந்து உங்களிடம் வந்துள்ளேன். ‘இன்ன தொழுகையை இன்ன வேளையில் தொழுங்கள். இன்ன வேளையில் இப்படித் தொழுங்கள். தொழுகை (வேளை) வந்துவிட்டால் உங்களில் குர்ஆனை அதிகம் அறிந்து வைத்துள்ளவர் உங்களுக்குத் தலைமை தாங்கித் தொழுகை நடத்தட்டும்’ என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதாகக் கூறினார்கள்.

எனவே, மக்கள் (குர்ஆனை அதிகம் அறிந்தவர் யார் எனத்) துருவிப் பார்த்தபோது நான் பயணிகளிடம் கேட்டு அறிந்துகொண்ட காரணத்தால் என்னை விட அதிகமாகக் குர்ஆனை அறிந்தவர்கள் எவரும், (எங்களிடையே) இருக்கவில்லை. எனவே, (தொழுகை நடத்துவதற்காக) என்னை அவர்கள் முன்னால் நிறுத்தினார்கள். நான் அப்போது ஆறு அல்லது ஏழு வயதுடைய (சிறு)வனாக இருந்தேன். நான் ஒரு சால்வையைப் போர்த்தியிருந்தேன். நான் சஜ்தா செய்யும்போது அது என் முதுகை (விட்டு நழுவிப் பின் புறத்தைக்) காட்டிவந்தது. எனவே, அந்தப் பகுதிப் பெண்மணியொருவர், ‘உங்கள் ஓதுவாரின் பின்புறத்தை எங்களிடமிருந்து மறைக்க மாட்டீர்களா?’ என்று கேட்டார். எனவே, அவர்கள் (துணியொன்றை) வாங்கி வந்து எனக்குச் சட்டையொன்றை வெட்டித் தந்தார்கள். நான் அந்தச் சட்டையின் காரணத்தால் அடைந்த மகிழ்ச்சியைப் போன்று வேறெதனாலும் மகிழ்ச்சியடைந்ததில்லை.

அறிவிப்பவர்: அம்ர் இப்னு சலிமா (ரலி)

நூல்: புகாரி 4302

நபிகள் நாயகம் உண்மையிலேயே இறைத்தூதாராக இருந்தால் மக்கா நகரை அவர் வெற்றி கொள்வார்; அப்போது இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளலாம் என்று பெருந்திரளான மக்கள் ஆவலாய் காத்திருந்தார்கள். அல்லாஹ்வின் முன்னறிவிப்பு நிறைவேறியது. நபிகள் நாயகம் இறைத்தூதர் தாம் என்பதை மக்கள் புரிந்து கொண்டு கூட்டம் கூட்டமாய் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்கள்.

இக்கட்டுரையிலே, திருக்குர்ஆனில் கூறப்பட்டு, நடந்தேறிய நிகழ்வுகளுள் சிலதைக் கண்டோம். இறைவன் ஒருவன் மட்டுமே எதிர்காலத்தில் நடக்கப்போவதை அறிந்தவன். அத்தகைய ஏக இறைவனால் இறைத்தூதராகத் தேர்வு செய்யப்பட்டு அவனால் அல்குர்ஆன் வேதம் அருளப்பட்டிருப்பதால் அதிலே கூறப்பட்ட முன்னறிவிப்புகள் அனைத்தும் அப்படியே நடந்து வருகின்றன என்பதைச் சத்தியத்தை ஆராய்வோர் எளிதாகப் புரிந்து கொள்ளலாம்.