அல்குர்ஆன் நெடுகிலும் பெரும்பான்மையான பக்கங்களை ஆக்கரமித்திருப்பது வரலாறுகள்தான். பல கட்டங்களில் நபிகளாரும் கூடத் தமது தோழர்களுக்கு, முன்னர் வாழ்ந்த நபிமார்கள் மற்றும் சமுதாயங்களின் வரலாறுகளை எடுத்துரைக்கும் வழக்கம் கொண்டவர்களாக இருந்துள்ளார்கள்.
இதற்குக் காரணம், முன்னர் வாழ்ந்த நல்லோர் மற்றும் தீயோரின் வாழ்க்கைப் பக்கங்களைப் புரட்டும்போது அவற்றில் நமக்குப் பெரும் படிப்பினைகள் இருக்கும். ஆகவே தான் அல்குர்ஆன் எங்கும் சரித்திர பக்கங்கள் படர்ந்துள்ளன.
திருமறையில் கூறப்படும் இந்த வரலாறுகளில் நல்லடியார்களைப் பற்றிய செய்திகளின் மூலம் நாம் எவ்வாறு இறைவனுக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்ற படிப்பினையும், தீயவர்களின் வரலாறுகளைப் படிக்கும்போது எவற்றை விட்டு நாம் விலகி வாழ வேண்டும் என்ற படிப்பினையும் பெற முடியும்.
மறை கூறும் இந்த வரலாற்றுச் செய்திகளைப் படித்து நம்மிடம் மாற்றம் ஏற்பட வேண்டும் என்பதே இதன் நோக்கம்.
தூதர்களின் செய்திகளில் எதன் மூலம் உமது உள்ளத்தை உறுதிப்படுத்துவோமோ அத்தகைய ஒவ்வொன்றையும் உமக்கு நாம் எடுத்துரைக்கிறோம். இதில் உண்மையும், இறைநம்பிக்கையாளர்களுக்கு அறிவுரையும், நினைவூட்டலும் உம்மிடம் வந்துவிட்டது.
அல் குர்ஆன் – 11:120
(இறைத் தூதர்களான) அவர்களின் வரலாறுகளில் அறிவுடையோருக்குப் படிப்பினை உள்ளது. இது புனைந்து கூறப்பட்ட செய்தி அல்ல! மாறாக, தனக்கு முன்புள்ளவற்றை உண்மைப்படுத்தக் கூடியது. அனைத்து விஷயங்களையும் தெளிவுபடுத்தக் கூடியது. மேலும் இறைநம்பிக்கை கொள்ளும் சமுதாயத்திற்கு நேர்வழியாகவும், அருளாகவும் உள்ளது.
அல் குர்ஆன் – 12:111
வான்மறையில் வியாபித்திருக்கும் வரலாறுகள் மூலம் இறைத்தூதரின் இருதயத்தை உறுதிப்படுத்தி, உண்மைச் சம்பவங்களையும் உன்னத உபதேசங்களையும் மனித குலத்திற்கு வல்லோன் உரைக்கிறான். வாழ்வியல் போதனைகளை வரலாறுகள் மூலம் பெறச்செய்கிறான்.
யதார்த்தத்திலேயும், ஒருவனை சாதாரணமாக எச்சரிப்பதற்கும் சரித்திரத்தைச் சொல்லி எச்சரிப்பதற்கும் வித்தியாசம் உண்டு. உதாரணமாக, இரு சக்கர வாகனத்தில் பறக்கும் இளைஞனிடம் “பொறுமையாய் செல்” என ஒருவர் எச்சரித்தால் “உங்கள் வேலையைப் பாருங்கள்” என்பான். “நேற்று இதே ரோட்டில் தான் ஒருத்தன் வேகமாகப் போய் அடிபட்டு செத்தான், உனக்கும் அவ்வாறு ஆகிவிடப்போகிறது” என நடந்து முடிந்த நிகழ்வைச் சொல்லி எச்சரிக்கும் பொழுது பைக்கில் தானாக வேகம் குறைந்துவிடும்.
சரித்திரத்தில் அங்கம் வகித்தவன் நல்லவனோ கெட்டவனோ, அவனது வரலாறு வளரும் வர்க்கத்திற்கு ஏதோ ஒரு வகையில் மாற்றத்தை உண்டு பண்ணும். பொதுவாகவே நல்லவனின் சரித்திரத்தில் எப்படி வாழ வேண்டும் எனும் முன்மாதிரியும் கேட்டவனின் சரித்திரத்தில் எப்படி வாழக் கூடாது எனும் படிப்பினையும் உள்ளது.
எப்படி வாழக்கூடாது என்பதற்கு உதாரணமாக முந்திச் சென்ற சமுதாயத்தின் அழிக்கப்பட்ட வரலாறுகள் குர்ஆனில் சொல்லப்படுகிறது. என்ன குற்றத்திற்காக அவர்கள் அழிக்கப்பட்டனர்? அக்கூட்டங்களிடமிருந்த ஒற்றுமை என்ன? என்பவைகளை நாம் தெரிந்து கொண்டால் மறையும் மாற்றமும் என்ற தலைப்பின் கீழ் இவ்வரலாறுகள் மூலம் நாம் பெற வேண்டிய படிப்பினைகளையும் பாடங்களையும் தெரிந்து கொள்ளலாம்.
வெளுத்து வாங்கிய வெள்ளப் பிரளயம்
ஆகப்பெரும் மழை வெள்ளத்தால் அழிக்கப்பட்ட நூஹ் நபியின் சமுதாயத்தை இறைவன் குர்ஆனில் குறிப்பிடுகிறான். ஆதம் (அலை) மற்றும் இத்ரிஸ் (அலை) எனும் இரு இறைத்தூதர்களுக்கடுத்து ஏனைய நபிமார்களை விட மூத்தவராக நூஹ் (அலை) அவர்கள் இருந்துள்ளார்கள். 950 வருட ஆயுட்காலம் வாழ்ந்து மறைந்தவர்கள். பல்லாண்டுகள் பிரச்சாரம் செய்தும் கணிசமான மக்கள் இவரை இறைத்தூதர் என ஏற்றுக்கொள்ளவில்லை. அவ்வளவு ஏன்? இவரது மனைவியும் மகனுமே ஓரிறைக் கொள்கையில் ஒன்றிணையவில்லை. அல்லாஹ்விடமிருந்து வந்த இறைச்செய்திக்கு இணங்க மறுத்த அச்சமூகத்தினரின் விளைவு என்னவென்பதைப் பாருங்கள்!
நூஹை அவரது சமுதாயத்திற்குத் தூதராக அனுப்பினோம். “என் சமுதாயமே! அல்லாஹ்வை வணங்குங்கள்! உங்களுக்கு அவனைத் தவிர எந்தக் கடவுளும் இல்லை. உங்களுக்கு மகத்தான நாளின் வேதனையை அஞ்சுகிறேன்” என்று அவர் கூறினார்.
(அல்குர்ஆன் 7:59)
உங்களை எச்சரிப்பதற்காகவும், நீங்கள் அஞ்சி நடப்பதற்காகவும், நீங்கள் அருள் செய்யப்படுவதற்காகவும் உங்களில் ஒருவர்மீது, உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு அறிவுரை வருவதுபற்றி நீங்கள் வியப்படைகிறீர்களா?” (என்று கேட்டார்.)
அல்குர்ஆன் – 7:63
உமது சமுதாயத்தில் (இதுவரை) இறைநம்பிக்கை கொண்டவர்களைத் தவிர இனி யாரும் இறைநம்பிக்கை கொள்ளவே மாட்டார்கள். எனவே அவர்கள் செய்து கொண்டிருந்ததைப் பற்றிக் கவலைப்படாதீர்! நமது கண்களுக்கு முன்பாகவும், நமது அறிவிப்பின்படியும் கப்பலைக் கட்டுவீராக! அநியாயக்காரர்கள் தொடர்பாக என்னிடம் பேசாதீர்! அவர்கள் மூழ்கடிக்கப்படுபவர்கள்!” என்று நூஹுக்கு அறிவிக்கப்பட்டது.
அல்குர்ஆன் – 11:36, 37
அவர் கப்பலைக் கட்டிக் கொண்டிருந்தார். அவரது சமுதாயப் பிரமுகர்கள் அவரைக் கடந்து செல்லும் போதெல்லாம் அவரைக் கேலி செய்தனர். “நீங்கள் எங்களைக் கேலி செய்தால், (இப்போது) நீங்கள் கேலி செய்வதைப் போன்று (விரைவில்) நாங்களும் உங்களைக் கேலி செய்வோம். இழிவுபடுத்தும் தண்டனை யாருக்கு வரும் என்பதையும், நிலையான தண்டனை யார்மீது இறங்கும் என்பதையும் அப்போது நீங்கள் அறிந்து கொள்வீர்கள்” என்று அவர் கூறினார்.
அல் குர்ஆன் – 11:38, 39
அவர்கள் அவரைப் பொய்யரெனக் கூறினர். அவரையும் அவருடன் இருந்தோரையும் கப்பலில் காப்பாற்றினோம். யார் நமது வசனங்களைப் பொய்யெனக் கூறினார்களோ அவர்களை மூழ்கடித்தோம். அவர்கள் (சிந்திக்காத) குருட்டுக் கூட்டத்தாராகவே இருந்தனர்.
(அல்குர்ஆன் 7:64)
கொட்டித் தீர்க்கும் மழையைக் கொண்டு வானத்தின் வாயில்களைத் திறந்து விட்டோம். பூமியில் நீரூற்றுகளைப் பாய்ந்தோடச் செய்தோம். நிர்ணயிக்கப்பட்ட செயலுக்காக (வானம், பூமியின்) தண்ணீர் ஒன்று சேர்ந்தது. பலகைகளையும், ஆணிகளையும் கொண்ட (மரக்கலத்)தில் அவரைச் சுமந்து சென்றோம். அது நமது கண்முன்னே ஓடியது. (தீயவர்களால்) புறக்கணிக்கப்பட்டவருக்கு வெகுமதியாக (இதைச் செய்தோம்.) அதை ஒரு சான்றாக விட்டுவைத்துள்ளோம். சிந்திப்போர் உண்டா?
அல் குர்ஆன் – 54:11-15
பலம் கொண்ட கூட்டத்தைச் சிதறடித்த சூறாவளி
ஆது எனும் கூட்டத்திற்கு ஹூது(அலை) அவர்கள் இறைத்தூதாராக நியமனம் செய்யப்படுகிறார்கள். அக்கூட்டம் மிக்க வலிமையுடையதாக இருந்தது. அவர்களைப் போன்று இவ்வுலகில் எவர்களும் படைக்கப்படவில்லை. இறைக்கட்டளைகளைப் புறக்கணித்து இறுமாப்புடன் இருந்ததன் விளைவால் அந்தச் சக்தி கொண்ட படையினர் புயல் காற்று மூலம் சிதறடிக்கப்பட்டனர்.
ஆது சமுதாயத்திடம் அவர்களின் சகோதரர் ஹூதை (அனுப்பினோம்.) “என் சமுதாயத்தினரே! அல்லாஹ்வை வணங்குங்கள்! அவனைத் தவிர உங்களுக்கு வேறு எந்தக் கடவுளும் இல்லை. நீங்கள் கற்பனை செய்வோர் தவிர வேறில்லை” என்று அவர் கூறினார்.
(அல்குர்ஆன்11:50)
ஆது சமுதாயத்தினர், நியாயமின்றிப் பூமியில் கர்வம் கொண்டனர். “வலிமையில் எங்களைவிட மிகைத்தவர் யார்?” என்று கேட்டனர். அவர்களைப் படைத்த அல்லாஹ்வே அவர்களைவிட வலிமையில் மிகைத்தவன் என்பதை அவர்கள் சிந்திக்கவில்லையா? அவர்கள் நமது சான்றுகளை மறுப்போராக இருந்தனர்.
அவர்களை இவ்வுலக வாழ்வில் இழிவான வேதனையைச் சுவைக்கச் செய்வதற்காகத் துயரமான நாட்களில் கடும் புயல் காற்றை அவர்கள்மீது அனுப்பினோம். மறுமை வேதனையோ மிக இழிவானது. அவர்கள் உதவி செய்யப்படவும் மாட்டார்கள்.
(அல்குர்ஆன்41:15,16)
ஆது சமுதாயத்திடமும் (படிப்பினை உள்ளது). அவர்களுக்கு எதிராக மலட்டுக் காற்றை நாம் அனுப்பியபோது, அது எந்தவொரு பொருளின்மீது பட்டாலும் அதை மக்கியதைப் போல் ஆக்கி விடும்.
அல் குர்ஆன் – 51:41,42
அது, அடியோடு பிடுங்கப்பட்ட பேரீச்ச மரங்களைப் போன்று மனிதர்களைப் பிடுங்கியது.
அல் குர்ஆன் – 54:20
சருகுகளைப் போலான சமூது சமுதாயம்
ஆது கூட்டத்திற்குப் பின் வந்தவர்கள்தாம் சமூது மக்கள். இக்கூட்டத்திற்கு ஸாலிஹ் (அலை) அவர்கள் நபியாக நியமனம் செய்யப்படுகிறார்கள். மலைகளைக் குடைந்து குடில்களை அமைத்துக் கொண்டவர்கள். செல்வச் செழிப்பில் செழுமையாய் வாழ்ந்தவர்கள். இறைவன் புறத்திலிருந்து ஒரு பெட்டை ஒட்டகம் அவர்களுக்குச் சான்றாக வழங்கப்பட்டு, அதனைத் துன்புறுத்தக் கூடாது எனும் சாசனமும் இடப்பட்டவர்கள். அதனை அவர்கள் மீறியதால் பெரும் சப்தம் சீறியது.
ஸமூது சமுதாயத்திற்கு அவர்களின் சகோதரர் ஸாலிஹை அனுப்பினோம். “என் சமுதாயத்தினரே! அல்லாஹ்வை வணங்குங்கள்! உங்களுக்கு அவனைத் தவிர எந்தக் கடவுளும் இல்லை. உங்கள் இறைவனிடமிருந்து தெளிவான சான்று உங்களிடம் வந்துவிட்டது. இது உங்களுக்குச் சான்றாகவுள்ள அல்லாஹ்வின் ஒட்டகம். அதை விட்டு விடுங்கள்! அது அல்லாஹ்வின் பூமியில் மேயட்டும்! அதற்குத் தீங்கிழைத்து விடாதீர்கள்! அவ்வாறு செய்தால் துன்புறுத்தும் வேதனை உங்களைப் பிடித்துக் கொள்ளும்” என்று கூறினார்.
(அல்குர்ஆன்7:73)
அவர்கள் அந்த ஒட்டகத்தை அறுத்தனர். தமது இறைவனின் ஆணையை மீறினர். “ஸாலிஹே! நீர் தூதர்களில் உள்ளவர் என்றால் எங்களுக்கு நீர் எச்சரித்ததை எங்களிடம் கொண்டு வாரும்!” என்று கூறினர்.
எனவே அவர்களை பூகம்பம் பிடித்துக் கொண்டது. அவர்கள் தமது வீடுகளில் முகம் குப்புற வீழ்ந்து கிடந்தனர்.
(அல்குர்ஆன் 7:77,78)
ஸமூது சமுதாயத்தினருக்கு நேர்வழி காட்டினோம். ஆனால் அவர்களோ நேர்வழியை விட குருட்டுத்தனத்தையே நேசித்தனர். எனவே அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றின் காரணமாக இழிவான வேதனைக்குரிய இடிமுழக்கம் அவர்களைப் பிடித்தது.
அல் குர்ஆன் – 41:17
நாம் அவர்கள்மீது ஒரேயொரு பெரும் சப்தத்தைத்தான் அனுப்பினோம். உடனே அவர்கள் வேலியமைப்பவனின் சருகுகளைப் போன்று ஆகிவிட்டனர்.
அல் குர்ஆன் – 54:31
தலைகீழாகப் புரட்டிப்போட்ட பூகம்பம்
அளவு நிறுவையில் மோசடி செய்யும் வாடிக்கையுடைய மத்யன் வாசிகளுக்கு இறைத்தூதராக அனுப்பப்பட்டவர் ஷுஐப் (அலை) அவர்கள். அச்சமூகம் மிகுந்த தொகையினராக இருந்தனர். அவர்கள் இறைவாக்குகளுக்கு இசையாததால் பூகம்பம் அவர்களை அசைத்துவிட்டது.
மத்யன்வாசிகளிடம் அவர்களின் சகோதரர் ஷுஐபை (அனுப்பினோம்.) “என் சமுதாயத்தினரே! அல்லாஹ்வை வணங்குங்கள்! உங்களுக்கு அவனைத் தவிர எந்தக் கடவுளும் இல்லை. உங்கள் இறைவனிடமிருந்து தெளிவான சான்று உங்களிடம் வந்துவிட்டது. அளவையும் நிறுவையையும் முழுமையாக்குங்கள்! மக்களுக்கு அவர்களுக்குரிய பொருட்களைக் குறைத்து விடாதீர்கள்! பூமியில் சீர்திருத்தம் ஏற்பட்ட பிறகு அதில் குழப்பம் செய்யாதீர்கள்! நீங்கள் இறைநம்பிக்கையாளர்களாக இருந்தால் இதுவே உங்களுக்குச் சிறந்தது” என்று அவர் கூறினார்.
(அல்குர்ஆன் 7:85)
அவரது சமுதாயத்தைச் சார்ந்த இறைமறுப்பாளர்களான தலைவர்கள், “ஷுஐபைப் பின்பற்றினால் அப்போது நீங்களே நஷ்டமடைந்தோர்!” என கூறினர்.
எனவே அவர்களைப் பூகம்பம் பிடித்துக் கொண்டது. அவர்கள் தமது வீடுகளில் முகம் குப்புற வீழ்ந்து கிடந்தனர்.
(அல்குர்ஆன் 7:90,91)
கல்மழையால் கரைந்த சமுதாயம்
ஓரினச்சேர்க்கையில் அமிழ்ந்து கிடந்த ஆண்களை நல்வழிப்படுத்த நபியாக நியமிக்கப்பட்டவர் லூத் (அலை) அவர்கள். ஓரினச்சேர்க்கையின் துவக்கப் புள்ளி இக்கூட்டத்திடமிருந்தே உருப்பெற்றது. அழிக்க வந்த வானவர்கள் அழகிய ஆண் தோற்றத்தில் இருந்ததால் அவர்களையும் தகாத உறவுக்கு அழைத்தனர். எனவே கல்மழையால் அழிக்கப்பட்டனர்.
லூத்தையும் (தூதராக அனுப்பினோம்.) அவர் தமது சமுதாயத்தை நோக்கி “அகிலத்தாரில் உங்களுக்கு முன் யாரும் செய்யாத, மானக்கேடான காரியத்தைச் செய்கிறீர்களா? நீங்கள் பெண்களை விட்டுவிட்டு ஆண்களிடம் இச்சைக்காகச் செல்கிறீர்கள். மேலும் நீங்கள் வரம்பு மீறும் கூட்டமாக இருக்கிறீர்கள்” என்று கூறியதை நினைவூட்டுவீராக!
“இவர்களை உங்கள் ஊரிலிருந்து வெளியேற்றுங்கள்! இவர்களோ பரிசுத்தமான மனிதர்கள்” என்று கூறியதைத் தவிர (வேறெதுவும்) அவரது சமுதாயத்தின் பதிலாக இருக்கவில்லை.
அவரையும் அவரது குடும்பத்தினைரையும் காப்பாற்றினோம். அவரது மனைவியைத் தவிர! அவள் (வேதனையில்) தங்கிவிடுவோரில் ஆகி விட்டாள்.
(அல்குர்ஆன் 7:80-83)
லூத்திடம் நமது தூதர்கள் வந்தபோது, அவர்களைப் பற்றி அவர் கவலைக்குள்ளானார். அவர்களுக்காக மன வேதனையடைந்து, “இது மிகவும் கடுமையான நாள்” என்று கூறினார்.
அவரது சமுதாயத்தினர் விரைந்து அவரிடம் வந்தனர். இதற்கு முன்பும் அவர்கள் கெட்ட செயல்களைச் செய்வோராக இருந்தனர். “என் சமுதாயத்தினரே! இவர்கள் எனது புதல்வியர். இவர்கள் உங்களுக்கு (மணமுடிக்கத்) தூய்மையானவர்கள். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்! எனது விருந்தினர்கள் விஷயத்தில் என்னை இழிவுபடுத்தி விடாதீர்கள். உங்களில் ஒரு நல்ல மனிதர் கூட இல்லையா?” என்று கேட்டார்.
எங்களுக்கு உம்முடைய புதல்வியரிடம் எந்தத் தேவையும் இல்லை என்பதை நீர் நன்கறிவீர். நாங்கள் எதை விரும்புகிறோம் என்பதையும் நீர் அறிந்தே இருக்கிறீர்!” என அவர்கள் கூறினர்.
அல் குர்ஆன் – 11:77-79
நாம் அவர்கள்மீது கல்மழையைப் பொழிவித்தோம். லூத்தின் குடும்பத்தாரைத் தவிர! அவர்களை அதிகாலை நேரத்தில் காப்பாற்றினோம்.
அல் குர்ஆன் – 54:34
நமது கட்டளை வந்தபோது, அவ்வூரின் மேற்புறத்தைக் கீழ்ப்புறமாக ஆக்கினோம். உமது இறைவனிடம் அடையாளமிடப்பட்ட, அடுக்கடுக்கான, சுடப்பட்ட கற்களை அவர்கள்மீது பொழிந்தோம். அது இந்த அநியாயக்காரர்களுக்குத் தூரத்தில் இல்லை.
அல் குர்ஆன் – 11:82,83
இழி குரங்குகளாக மாற்றப்பட்ட இஸ்ரவேலர்கள்
இஸ்ஹாக் (அலை) அவர்களின் வழித்தோன்றல்களிலிருந்து வந்தவர்களே பனூ இஸ்ரவேலர்கள் ஆவர். அவர்களில் ஒரு பிரிவினருக்கு சனிக்கிழமை மீன் பிடிப்பதை இறைவன் தடுத்திருந்தான். அதனை அவர்கள் மீறியதால் குரங்குகளாக மாற்றப்பட்ட சம்பவத்தை இறைவன் குர்ஆனில் குறிப்பிடுகின்றான்.
கடலுக்கு அருகிலிருந்த ஓர் ஊரைப் பற்றி அவர்களிடம் கேட்பீராக! அவர்கள் சனிக்கிழமையன்று வரம்பு மீறியதை நினைவூட்டுவீராக! ஏனெனில், அவர்களிடம் சனிக்கிழமையன்றுதான் அவர்களுக்குரிய மீன்கள் நீரின் மேற்பரப்பில் அதிகமாக வந்தன. சனிக்கிழமையல்லாத நாட்களில் அவர்களிடம் அவை வருவதில்லை. அவர்கள் பாவம் செய்து கொண்டிருந்ததால் இவ்வாறு அவர்களைச் சோதித்தோம்.
“அல்லாஹ் அழிக்கவிருக்கின்ற அல்லது கடுமையான வேதனையால் தண்டிக்கவிருக்கின்ற ஒரு கூட்டத்திற்கு நீங்கள் எதற்காக அறிவுரை கூறுகிறீர்கள்?” என்று அவர்களில் ஒருசாரார் (மற்றொரு சாராரிடம்) கேட்டபோது “உங்கள் இறைவனிடம் (மறுமையில் நாங்கள்) தகுந்த காரணம் கூறுவதற்காகவும், அவர்கள் இறையச்சமுடையோர் ஆவதற்காகவும் (இவ்வாறு அறிவுரை கூறுகிறோம்)” என்று பதிலளித்தனர்.
தமக்குச் சொல்லப்பட்ட அறிவுரையை அவர்கள் மறந்தபோது, தீமையைத் தடுத்தோரை நாம் காப்பாற்றினோம். அநியாயம் செய்தோரை அவர்கள் பாவம் செய்து கொண்டிருந்ததன் காரணமாக கடுமையான வேதனையால் பிடித்தோம்.
அல்குர்ஆன்7:163-165
பாடமும் படிப்பினையும்
அல்குர்ஆன் மூலம் நமக்குப் பல கட்டளைகள் பிறப்பிக்கப்பட்டிருப்பதைப் போன்றுதான் முன்சென்றோருக்கும் பல கட்டளைகள் பிறப்பிக்கப்பட்டன. அவைகளை அச்சமூகம் புறக்கணித்ததன் விளைவு பல்வேறு தண்டனைகள் மூலம் அழிக்கப்பட்ட நிகழ்சிகளை மேற்படி குறிபிட்டுள்ள சம்பவங்கள் மூலம் அறிந்து கொண்டோம்.
முன்னர் அழிக்கப்பட்ட சமூகத்தவர்கள் அனைவரிடமும் இருந்த ஒரே ஒற்றுமை இறைச்செய்திகளுக்கு இணங்காத தன்மை. மறைகளின் உரைகள் அவர்களின் உள்ளத்தை துளைக்காததால், துப்புரவுப்படுத்தாததால் ஆகப்பெரும் அழிவுக்கு அவர்கள் ஆளானார்கள்.
அச்சமூகம் செய்த அதே செயல்களை சர்வசாதாரணமாக இன்று நாம் செய்து வருகின்றோம். திருமறையில் கூறப்பட்டுள்ள எத்தனையோ கட்டளைகளைப் புறந்தள்ளி வருகின்றோம்.
நமக்கு முன்சென்ற இனத்தவர்கள் இழிவேதனைக்கு உள்ளாக்கப்பட்டதெல்லாம், தங்களுக்குப் போதிக்கப்பட்ட நல்லுரைகளை நடைமுறைப்படுத்தாதது தானே எனும் அச்சம் அங்குலமளவும் நம்மிடம் வருவதில்லை.
அந்த அழிக்கப்பட்டவர்களின் வரலாறுகள் நமக்கு ஏதேனும் மாற்றத்தை நிகழ்த்திடாதா எனும் நோக்கில் தான் அந்த உண்மைச் சம்பவங்களை உயர்ந்தோன் உணர்த்திக் காட்டுகின்றான்.
தெளிவுபடுத்தும் வசனங்களையும், உங்களுக்கு முன் சென்று விட்டவர்களின் எடுத்துக்காட்டையும், இறையச்சமுடையோருக்கு அறிவுரையையும் உங்களிடம் அருளியுள்ளோம்.
(அல்குர்ஆன் 24:34)
இவர்களுக்கு முன்பு எத்தனையோ தலைமுறைகளை அழித்துள்ளோம் என்பது இவர்களை நேர்வழியில் செலுத்தவில்லையா? அவர்கள் வசித்த இடங்களில்தான் இவர்கள் நடமாடுகின்றனர். இதில் சான்றுகள் உள்ளன. இவர்கள் செவியுற வேண்டாமா?
(அல்குர்ஆன் 32:26)
இம்மறையில் பொறிக்கப்பட்டுள்ள சரித்திரப் பக்கங்கள் நம் உள்ளத்தைச் சரிசெய்யவேண்டும். அவர்களுக்கு நேரிட்ட வேதனைகளை நினைத்து அஞ்சி நம் வாழ்வை நல்வழிப்படுத்தவேண்டும். அத்தகைய தகவமைப்பை வல்லோன் நமக்கு வார்க்கவேண்டும்.
