புனிதம் நிறைந்த பூமியில் அமைந்திருக்கின்ற மஸ்ஜிதுல் அக்ஸா பள்ளிவாசலின் சிறப்புகள் குறித்து பல்வேறு செய்திகளைக் கடந்த (நவம்பர் 2023) இதழில் அறிந்து கொண்டோம்.
விசாலமான சிரியா – ஜெருசலம் பகுதியில் அமைந்திருக்கின்ற பகுதிகளுக்கும், அங்கு அமையப் பெற்றிருக்கின்ற புனிதம் பொருந்திய மஸ்ஜிதுல் அக்ஸா பள்ளிவாசல் குறித்தும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஏராளமான செய்திகளை நமக்குப் பாடமாகவும் – படிப்பினையாகவும் கற்றுத் தருகின்றார்கள்.
புனிதம் நிறைந்த பூமியின் சிறப்புக்கள் குறித்து தொடர்ச்சியாக அறிந்து கொள்வோம்.
நேர்ச்சையை நிறைவேற்ற சொன்ன நபிகளார்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு மக்காவை அல்லாஹ் வெற்றியளித்தால் மஸ்ஜிதுல் அக்ஸா பள்ளிவாசலில் இரண்டு ரக்அத்கள் தொழுவதாக ஒரு மனிதர் நேர்ச்சை செய்திருந்தார்.
மக்கா வெற்றிக்குப் பிறகு, தன்னுடைய நேர்ச்சையை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அந்த மனிதர் கூறினார். அதை உடனே நிறைவேற்றுமாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அந்த மனிதரை ஆர்வப்படுத்தினார்கள்.
ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:
ஒரு மனிதர் மக்கா வெற்றி கொள்ளப்பட்ட நாளில், அல்லாஹ்வின் தூதரே! அதாவது, அல்லாஹ் உங்களுக்கு மக்காவை வெற்றியாகக் கொடுத்தால் “பைத்துல் முகத்தஸ்” பள்ளிவாசலில் நான் இரண்டு ரக்அத்கள் தொழுவதாக அல்லாஹ்விடத்தில் நான் நேர்ச்சை செய்துள்ளேன். என்று கூறினார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (அப்படியானால்) அங்கு போய் தொழுது அதை நிறைவேற்று! அங்கு போய் தொழுது அதை நிறைவேற்று! அங்கு போய் தொழுது அதை நிறைவேற்று! என்று திரும்பத் திரும்ப கூறிக் கொண்டே இருந்தார்கள்.
ஆதாரம்: அபூதாவூத் 3305
ஒரு மனிதர் புனிதம் நிறைந்த மஸ்ஜிதுல் அக்ஸா பள்ளிவாசலில் இரண்டு ரக்அத்கள் தொழுகையை நிறைவேற்ற வேண்டும் என்று தான் விரும்பிச் செய்த நேர்ச்சையை, அங்கு போய் தொழுது நிறைவேற்றுமாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அந்த மனிதரிடத்திலே திரும்பத் திரும்பக் கூறினார்கள்.
பைத்துல் முகத்தஸ் பள்ளிவாசலில் மக்களைத் திரட்டி உபதேசம் செய்த யஹ்யா (அலை):
இறைத்தூதர் யஹ்யா (அலை) அவர்களுக்கு ஐந்து கட்டளைகளை நிறைவேற்றுமாறும், அவற்றை இஸ்ரவேல் சமூகத்தாரிடம் செயல்படுத்தத் தூண்டும்படியும் அல்லாஹ் கட்டளையிட்டான்.
உடனே, இறைத்தூதர் யஹ்யா (அலை) ஜெரூசலத்தில் இருக்கின்ற “பைத்துல் முகத்தஸ்” பள்ளிவாசல் நிரம்ப மக்களைத் திரட்டி, அல்லாஹ்விடமிருந்து வந்த கட்டளைகளை நிறைவேற்றும்படி உபதேசம் செய்ய ஆரம்பித்தார்கள்.
யஹ்யா (அலை) அவர்களுக்குக் கட்டளையிடப்பட்ட ஐந்து கட்டளைகள் என்னென்ன? என்பது குறித்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களுக்கு எடுத்துரைத்தார்கள். யஹ்யா (அலை) அவர்கள் இஸ்ரவேலர்களுக்கு எடுத்துரைத்த ஐந்து கட்டளைகள்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ் தன் தூதர் யஹ்யா பின் ஸகரிய்யா (அலை) அவர்களுக்கு ஐந்து கட்டளைகளை நிறைவேற்றுமாறும், அவற்றைச் செயல்படுத்தும்படி இஸ்ரவேலர்களைத் தூண்டுமாறும் உத்தரவிட்டான். ஆனால் அவற்றை இஸ்ரவேலர்களிடம் சொல்லாமல் யஹ்யா (அலை) அவர்கள் காலதாமதம் செய்ய முனைந்தார்கள்.
இந்நிலையில், இறைத்தூதர் ஈஸா (அலை) அவர்கள், யஹ்யா (அலை) அவர்களிடம் அல்லாஹ்வின் உத்தரவை நினைவுபடுத்தி, அதை நீங்கள் நிறைவேற்றுகிறீர்களா? அல்லது நான் நிறைவேற்றி விடட்டுமா? என்று கேட்டார்கள். அதற்கு ‘சகோதரரே! எனக்கு முன்னர் நீங்கள் அதைச் செயல்படுத்தி விட்டால் (காலம் தாழ்த்திய குற்றத்திற்காக நான் பூமியில் புதையுண்டு விடுவேனோ? அல்லது வேறு தண்டனை ஏதும் எனக்கு வழங்கப்படுமோ?) என அஞ்சுகிறேன் என்று யஹ்யா (அலை) அவர்கள் கூறினார்கள்.
பின்னர் யஹ்யா (அலை) அவர்கள். ஜெரூசலத்தில் உள்ள “பைத்துல் முகத்தஸ்” பள்ளிவாசல் நிரம்ப இஸ்ரவேலர்களைத் திரட்டி மேடையில் அமர்ந்து கொண்டு அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து விட்டுப் பேசத் தொடங்கினார்கள்.
ஐந்து கட்டளைகளை நான் நிறைவேற்ற வேண்டுமென்றும், அவற்றை உங்களுக்கு எடுத்துச் சொல்லி உங்களையும் செய்யத் தூண்ட வேண்டுமென்றும் எனக்கு அல்லாஹ் ஆணையிட்டுள்ளான், அவையாவன:
1. அல்லாஹ்வை மட்டுமே நீங்கள் வழிபடுங்கள்! அவனுக்கு வேறு யாரையும் இணையாக்காதீர்கள். அவ்வாறு இணை வைப்பதானது ஓர் அடிமையின் நிலைக்கு ஒத்திருக்கின்றது. அவ்வடிமையை ஒருவர் தனிப்பட்ட முறையில் தனக்குச் சொந்தமான பொன் அல்லது வெள்ளியைக் கொடுத்து விலைக்கு வாங்கினார். ஆனால், அந்த அடிமையோ வேலை செய்து அதில் கிடைத்த வருமானத்தை எஜமானனிடம் அளிக்காமல் வேறு யாரோ ஒருவரிடம் கொடுத்தான். தம்முடைய அடிமை இவ்வாறு செயல்படுவது உங்களில் யாருக்குத்தான் மகிழ்ச்சி அளிக்கும்? இதைப் போன்றே, அல்லாஹ் உங்களைப் படைத்து உங்களுக்கான வாழ்வாதாரங்களை வழங்கி இருக்கின்றான். எனவே (அவன் வழங்கியவற்றை அனுபவித்துக் கொண்டு) அவனுக்குச் செய்ய வேண்டிய வழிபாட்டை மற்றவருக்குச் செய்யலாமா? ஆகவே, அல்லாஹ்வையே வழிபடுங்கள்! அவனுக்கு வேறு யாரையும் இணையாக்காதீர்கள்!
2. அல்லாஹ் தன்னைத் தொழுமாறு உங்களுக்குக் கட்டளையிட்டுள்ளான். தொழுது கொண்டிருக்கும் தன் அடியாரின் முகத்தை இறைவன் கூர்ந்து கவனிக்கிறான். எனவே, நீங்கள் தொழும்போது இங்கும் அங்கும் திரும்பாதீர்கள்.
3. நோன்பு நோற்குமாறும் அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிட்டுள்ளான். நோன்பு நோற்பவரின் நிலையானது; ஒரு கூட்டத்தில் தமது கைப்பை நிரம்ப கஸ்தூரியை வைத்துக் கொண்டிருக்கிற ஒருவரின் நிலைக்கு ஒத்திருக்கிருக்கிறது. அந்தக் கஸ்தூரியின் மணத்தை அந்தக் கூட்டத்தில் உள்ள ஒவ்வொருவரும் பெறுவார்கள். நோன்பு நோற்பவரின் வாயிலிருந்து வீசும் வாடையானது அல்லாஹ்விடம் கஸ்தூரியின் வாசனையைவிட அதிக மணம் கமழக்கூடியதாகும்.
4. தர்மம் செய்யுமாறும் அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிட்டுள்ளான். தர்மம் செய்பவரின் நிலையானது எதிரிகளால் கைது செய்யப்பட்டு இரு கைகளும் கழுத்தோடு இணைத்துக் கட்டப்பட்டு, சிறையில் அடைத்து கொடுமை செய்வதற்காகக் கொண்டு செல்லப்படுகிற கைதியின் நிலைக்கு ஒத்திருக்கிறது. அப்போது அந்தக் கைதி “நான் என் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஏதேனும் பிணைத்தொகை செலுத்துவதில் உங்களுக்கு உடன்பாடு உண்டுதானோ” என்று கேட்டுக் கொண்டே தமது உயிரை அவர்களிடமிருந்து காக்கத் தம்மிடமிருந்த எல்லாவற்றையும் பிணையாகச் செலுத்துவார். இறுதியில் அவர்களிடமிருந்து விடுதலையும் பெற்று விடுவார்.
5. அல்லாஹ் தன்னை அதிகமாக நினைவு கூர்ந்து துதிக்குமாறும் உங்களுக்குக் கட்டளையிட்டுள்ளான். அவ்வாறு இறைவனை நினைவு கூர்ந்து துதிப்பவரின் நிலையானது, எதிரியால் வேகமாகப் பின்தொடரப்பட்டுத் தேடப்படுகின்ற ஒரு மனிதரின் நிலைக்கு ஒத்திருக்கிறது. அவர் பாதுகாப்பான கோட்டை ஒன்றில் நுழைந்து தன்னைத் தற்காத்துக் கொண்டார். ஓர் அடியார் இறைதியானத்தில் திளைத்திருக்கும் போதுதான் ஷைத்தான் எனும் பகைவனின் தீங்கிலிருந்து பெரிதும் பாதுகாப்பைப் பெறுகிறார்.
ஆதாரம்: திர்மிதீ 2863
ஜெரூசலத்தில் அமைந்திருக்கின்ற புனிதம் நிறைந்த மஸ்ஜிதுல் அக்ஸா பள்ளிவாசலில் ஒட்டு மொத்த இஸ்ரவேலர்களையும் அழைத்து இறைத்தூதர் யஹ்யா (அலை) அவர்கள் ஆற்றிய உபதேசங்களையும், இறைவன் அவர்களுக்குச் சொன்ன கட்டளைகளையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மிகத் தெளிவாக விளக்குகின்றார்கள்.
உறுதியாக பைத்துல் முகத்தஸ் வெற்றி கொள்ளப்படும்:
புனிதம் நிறைந்த மஸ்ஜிதுல் அக்ஸா பள்ளிவாசல் நிச்சயமாக வெற்றி கொள்ளப்படும். என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முன்னறிவிப்புச் செய்த செய்திகள் மிகத் தெளிவாக இருக்கின்றது.
மறுமை நாளின் நெருக்கத்தில் ஏற்படும் பல்வேறு அடையாளங்களில் ஒன்றான பைத்துல் முகத்தஸ் பள்ளிவாசல் உறுதியாக வெற்றி கொள்ளப்படும் என்பதை இறைவனின் புறத்திலிருந்து உள்ள முன்னறிவிப்பாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) எடுத்துரைத்துள்ளார்கள்.
அவ்ஃப் பின் மாலிக் அல்அஷ்ஜஈ (ரலி) அவர்கள் கூறியதாவது:
தபூக் போரின் போது நபி அவர்களிடம் நான் சென்றேன். அவர்கள் ஒரு தோல் கூடாரத்தில் இருந்தார்கள். நான் அந்தக் கூடாரத்தின் முற்றத்தில் அமர்ந்துகொண்டேன். அப்போது அவர்கள், “அவ்ஃபே! உள்ளே வாரீர்!” என்று கூறினார்கள். அதற்கு நான், “அல்லாஹ்வின் தூதரே! முழுவதுமாக (உள்ளே வந்துவிட)வா?” என்று (நகைச்சுவையாகக்) கேட்டேன்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள், “ஆம்! முழுவதுமாகத்தான் (உள்ளே வா!)” என்று பதில் கூறினார்கள். பிறகு நபி அவர்கள் கூறினார்கள்.
அவ்ஃபே, இறுதிநாள் வருவதற்கு முன்பு நிகழக்கூடிய ஆறு அடையாளங்களை மனனம் செய்துகொள்வீராக!
1) ‘அவற்றில் ஒன்று எனது மரணம்’ என்று கூறினார்கள்.
அதைக்கேட்டு நான் மிகுந்த கவலையும் துக்கமும் கொண்டு அமைதியானேன்.
அப்போது நபி அவர்கள் (அவற்றில்) ‘ஒன்று’ என்று கூறிவிட்டுத் தொடர்ந்தார்கள்: பின்னர்;
2. பைத்துல் மக்திஸ் வெற்றி கொள்ளப்படுதல்.
3. உங்களிடையே (ஒருவகை) நோய் தோன்றும். அதன்மூலம் அல்லாஹ் உங்களையும் உங்கள் சந்ததிகளையும் ஷஹீத் (உயிர்த்தியாகிகள்) ஆக்குவான். அதன்மூலம் உங்களுடைய செயல்களைத் தூய்மையாக்குவான்.
4. பிறகு உங்களிடையே செல்வம் பெருகும். எந்த அளவிற்கென்றால் ஒருவருக்கு நூறு தீனார்கள் கொடுக்கப்பட்டாலும் அவர் மனநிறைவு அடையமாட்டார்.
5. பிறகு உங்களிடையே பெருந் தீமையொன்று தோன்றும். அது எந்த ஒரு முஸ்லிம் இல்லத்திலும் நுழையாமல் இருக்காது.
6. பிறகு உங்களுக்கும் (கிழக்கு ரோமானியரான) மஞ்சள் நிறத்தாருக்கும் இடையே சமாதான ஒப்பந்தம் ஒன்று ஏற்படும் (ஆனால் அதை மதிக்காமல்) அவர்கள் (உங்களை) மோசடி செய்து விடுவார்கள். பிறகு உங்களை எதிர்த்துப் போரிடுவதற்காக எண்பது கொடிகளின் கீழே (அணி வகுத்து) அவர்கள் வருவார்கள். ஒவ்வொரு கொடிக்கும் கீழே பன்னிரண்டாயிரம் போர் வீரர்கள் இருப்பார்கள்.
ஆதாரம்: இப்னுமாஜா 4032
மறுமை நாளின் நெருக்கத்தில் நடைபெறும் மிக முக்கியமான ஆறு அடையாளங்களில் ஒன்றான பைத்துல் முகத்தஸ் வெற்றி பெரும் என்பது குறித்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆணித்தரமாக முன்னறிவிப்பு செய்கின்றார்கள்.
இந்த ஹதீஸில் கூறப்படும் பைத்துல் மக்திஸ் வெற்றி என்ற முன்னறிவிப்பு உமர் (ரலி) காலத்தில் வெற்றி கொள்ளப்பட்ட போதே நிறைவேறிவிட்டது என்ற கருத்தும் உண்டு.
இறைநம்பிக்கையாளர்களின் பாதுகாப்பு இடம் சிரியா:
மறுமை நாள் வருகின்ற வரை என்னுடைய சமுதாயத்தில் ஒரு குழுவினர் உண்மைக்காகப் போராடிக் கொண்டே இருப்பார்கள் என்றும், இறைநம்பிக்கையாளர்களின் பாதுகாப்பு இடம் பரந்து விரிந்த ஷாம் – சிரியா பகுதிகள் தான் என்றும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முன்னறிவிப்பு செய்துள்ளார்கள்.
ஸலமா பின் நுஃபைல் அல்கிந்தீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அமர்ந்திருந்தேன். அப்போது ஒரு மனிதர், “அல்லாஹ்வின் தூதரே! மக்கள் குதிரைகள்மீது ஆர்வம் இழந்து விட்டார்கள். ஆயுதங்களை (கீழே) வைத்துவிட்டார்கள். (இனி) எந்தப் போரும் நிகழாது. போர் தன் ஆயுதங்களைக் கீழே போட்டு விட்டது என்று கூறுகின்றார்கள்” எனச் சொன்னார்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களை முன்னோக்கி, “அவர்கள் பொய் சொல்லிவிட்டார்கள். இப்போதே போர் வந்துவிட்டது. என் சமுதாயத்தில் ஒரு குழுவினர் உண்மைக்காகப் போராடிக் கொண்டே இருப்பார்கள். அல்லாஹ் அவர்களுக்காகச் சில குழுக்களின் உள்ளங்களைத் (தவறிலிருந்து) திருப்புவான். மறுமை நாள் வரை அவர்களுக்குப் போரில் ஈடுபடுவோர் மூலம் அல்லாஹ் வாழ்வாதாரம் அளிப்பான்.
இறுதியில் அல்லாஹ்வின் வாக்குறுதி வருகின்ற வரை (இது தொடரும்). குதிரைகளின் முன் நெற்றி உரோமங்களில் மறுமை நாள் வரை நன்மை பிணைக்கப்பட்டுள்ளது. மேலும் நான் இறந்துவிடப் போகிறேன். நீண்டநாள் நான் தங்க மாட்டேன் என்று இறைச்செய்தி (வஹீ) எனக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
உங்களுள் யாரேனும் மற்றொருவரின் கழுத்தை வெட்டிக் கொண்டே (இருக்கும் நிலையில்) குழுக் குழுவாக (மரணத்தைத் தழுவி) என்னை நீங்கள் பின்பற்றி வருவீர்கள். அப்போது இறைநம்பிக்கையாளர்களின் பாதுகாப்பான இடம் ஷாம்(சிரியா)தான்” என்று கூறினார்கள்.
ஆதாரம்: நஸாயீ 3505
புனிதம் நிறைந்த பாலஸ்தீன் பகுதியின் மேன்மை குறித்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உச்சகட்ட சிறப்பாய் விளக்குகின்றார்கள்.
உங்களில் யாரும் மற்றொருவரின் கழுத்துக்களை வெட்டிக் கொண்ட நிலையில் மரணத்தைத் தழுவி பின்பற்றி வருவீர்கள்! என்று கூறிவிட்டு, இறைநம்பிக்கையாளர்களின் பாதுகாப்பான இடம் என்பது ஷாம் தேசப்பகுதியான சிரியா தான் என்றும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முன்னறிவிப்பு செய்துள்ளார்கள்.
முஸ்லிம்கள் பதுங்கும் சிறந்த நகரம் ஷாம் – சிரியா:
மறுமை நாளின் நெருக்கத்தில் முஸ்லிம்கள் பதுங்கும் சிறந்த நகரம் ஷாம் – சிரியா அருகில் இருக்கின்ற பகுதிகள் தான் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முன்னறிவிப்பு செய்துள்ளார்கள்.
அல்லாஹ்வின் தூதர் அவர்கள் கூறினார்கள்.
“(பிற்காலத்தில்) போர் (நடைபெறும்) நாளில் முஸ்லிம்கள் (பதுங்கும்) கோட்டை, சிரியா (ஷாம்) நாட்டின் நகரங்களில் சிறந்த நகரமான திமிஷ்க் – டமாஸ்கஸின் அருகில் உள்ள ஹுத்தா எனும் இடத்தில் இருக்கும்”
இதை அபுத்தர்தா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
ஆதாரம்: அபூதாவூத் 3746
மறுமை நாளின் நெருக்கத்தில் போர்கள் நடைபெறும் நாட்களில் முஸ்லிம்கள் பதுங்குகின்ற கோட்டை, சிரியா நகரத்தின் பகுதிகளான டமாஸ்கஸின் அருகில் உள்ள “ஹுத்தா” எனும் இடத்தில் இருக்கும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முன்னறிவிப்பு செய்துள்ளார்கள்.
பாலஸ்தீன் சிரியா பகுதிகள் முஸ்லிம்கள் பதுங்குகின்ற கோட்டையாக விளங்கும் என்று கூறி பாலஸ்தீன் பகுதிகளின் உச்சக்கட்ட சிறப்புகளை விளக்குகின்றார்கள்.
ஷாம்வாசிகள் சீர்கெட்டு விட்டால்…
சீர்கேடுகள் தலைதூக்கி ஷாம் பகுதிகளில் உள்ள மக்கள் சீர்கெட்டு போய்விட்டால், உங்களுக்கு எந்த நன்மையும் இருக்காது என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எச்சரிக்கை செய்துள்ளார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
‘ஷாம்வாசிகள் சீர்கெட்டு விடுகின்ற நேரத்திலும் கூட என்னுடைய சமுதாயத்தாரில் ஒரு குழுவினர் வெற்றி அளிக்கப்பட்டவர்களாகவே இருந்து கொண்டிருப்பார்கள் என்றும், அவர்களுக்கு எந்தத் தீங்கும் இடரளிக்காது என்றும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முன்னறிவிப்பு செய்துள்ளார்கள்.
இறைத்தூதர் ஈஸா (அலை) அவர்கள் இறங்கும் புனித இடம்:
மறுமை நாளின் மிகப்பெரும் அடையாளங்களில் ஒரு அடையாளமான இறைத்தூதர் ஈஸா (அலை) அவர்களை புனிதம் நிறைந்த சிரியாவின் தலைநகர் பகுதிகளில் தான் அல்லாஹ் இறக்குவான் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முன்னறிவிப்பு செய்துள்ளார்கள்.
மர்யமின் மைந்தர் ஈஸா (அலை) அவர்களை அல்லாஹ் (பூமிக்கு) அனுப்பி வைப்பான். அவர் (சிரியாவின் தலைநகர்) “திமிஷ்க்” (டமாஸ்கஸ்) நகரின் கிழக்குப் பகுதியிலுள்ள வெள்ளைக் கோபுரத்திற்கு அருகில் இரு வானவர்களின் இறக்கைகள் மீது தம் கைகளை வைத்தவாறு இறங்குவார். அப்போது அவர் குங்குமப்பூ நிறத்தில் இரு ஆடைகளை அணிந்திருப்பார். அவர் தமது தலையைத் தாழ்த்தினால் நீர்த்துளி சொட்டும்; தலையை உயர்த்தினாலோ வெண்முத்தைப் போன்று நீர்த்துளி வழியும். அவரது மூச்சுக் காற்றைச் சுவாசிக்கும் (அதாவது அவரை நெருங்கும்) எந்தவோர் இறைமறுப்பாளனும் சாகாமல் இருக்க மாட்டான்.
ஆதாரம்: முஸ்லிம் 5629
புனிதம் நிறைந்த சிரியா பகுதிகளின் தலைநகரமான “டமாஸ்கஸ்” நகரின் கிழக்குப் பகுதிகளில் இறைத்தூதர் ஈஸா (அலை) அவர்களை இரண்டு வானவர்களின் இறக்கைகளின் மீது கைகளை வைத்தவாறு அல்லாஹ் இறக்குவான்.
இத்தகைய மிக அற்புதமான நிகழ்வுகள் புனிதம் நிறைந்த சிரியா – பாலஸ்தீன் பகுதிகளில் நிகழும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
தஜ்ஜால் எனும் கொடூரன் கொல்லப்படும் இடம்:
புனிதம் நிறைந்த பாலஸ்தீன் பகுதியில் வைத்துத்தான் மறுமை நாளின் மிகப்பெரும் அடையாளமான “தஜ்ஜால்” எனும் அரக்கனை, ஈஸா (அலை) அவர்கள் மூலம் வேரறுப்பதற்கான நிகழ்வுகளை அல்லாஹ் நிகழ்த்திக் காட்டுகின்றான்.
பின்னர் ஈஸா (அலை) அவர்கள் தஜ்ஜாலைத் தேடிச் செல்வார்கள். இறுதியில், (பாலஸ்தீனத்திலுள்ள) “லுத்து” எனும் நகரத்தின் தலைவாயிலருகே அவனைக் கண்டு, அவனைக் கொன்றொழிப்பார்கள்.
ஆதாரம்: முஸ்லிம் 5629
ஈஸா (அலை) அவர்கள் “தஜ்ஜால்” எனும் அரக்கனை, புனிதம் நிறைந்த பாலஸ்தீன் பகுதியில் “லுத்து” நகரத்தின் தலைவாயில் அருகே கொள்வார்கள்.
இந்த மகத்தான நிகழ்வு புனிதம் நிறைந்த “பாலஸ்தீன்” பகுதியில் தான் நிகழும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முனறிவிப்பு செய்துள்ளார்கள்.
இறுதியாக;
இவ்வாறு ஏராளமான பாக்கியங்களும், புனிதங்களும், அற்புதங்களும் நிறைந்திருக்கின்ற புனிதம் நிறைந்த பூமி தான் அல்லாஹ்வினால் புனிதப்படுத்தப்பட்டுள்ள பாலஸ்தீன் பூமியாகும்.
உலகில் மிகப்பெரும் மனித சக்திகள் அனைவரும் ஒன்று சேர்ந்து கொண்டு, இறைவனால் புனிதப்படுத்தப்பட்டுள்ள பாலஸ்தீன் பூமியையும் – புனித பூமியில் அமைந்திருக்கின்ற பைத்துல் முகத்தஸ் பள்ளிவாசலையும் சேதப்படுத்தி, அபகரிக்க நினைத்தாலும் கயவர்களின் சூழ்ச்சிகளை இறைவன் தவிடுபொடியாக்குவான்.
புனிதம் நிறைந்த பாலஸ்தீன் பகுதியையும் – மஸ்ஜிதுல் அக்ஸா பள்ளிவாசலையும் இறைவன் நிச்சயமாகப் பாதுகாப்பான். அட்டூழியம் செய்கின்ற யூதப் பயங்கரவாதிகளை நிச்சயமாக அல்லாஹ் வேரறுப்பான்.
அவர்கள் கடுமையாகத் தமது சூழ்ச்சிகளைச் செய்தனர். மலைகள் பெயர்ந்து விடும் அளவுக்கு அவர்களின் சூழ்ச்சி இருந்தாலும், அவர்களின் சூழ்ச்சி(யின் முடிவு) அல்லாஹ்விடமே இருக்கிறது.
அல்குர்ஆன் 14:46