நம்மைப் போல் நமது பிள்ளைகள், வருங்கால தலைமுறைகள் படிப்பறிவில்லாதவர்களாக ஆகி விடக்கூடாது என்பதற்காக, தங்கள் பிள்ளைகள் பட்டதாரிகளாக வேண்டும், பண்புள்ளவர்களாக ஆக வேண்டும் என்பதற்காக இன்று இஸ்லாமிய சமுதாயத்தில் உள்ள பெற்றோர்கள் பணக்காரர்களிலிருந்து பாட்டாளி வர்க்கம் வரை அத்தனை பேரும் தங்களது சக்திக்கு ஏற்ப தனியார் மற்றும் அரசு பள்ளிக்கூடங்களில் அவர்களைப் படிக்க அனுப்ப தவறுதில்லை.
ஆனால் கல்வி கற்பதற்காகவும், ஒழுக்க மாண்புகளை பெறுவதற்காகவும் பள்ளி செல்லும் மாணவர்கள் போதைக்கு அடிமையாகி விடுகின்றனர். துவக்கத்தில் புகை பழக்கம். அப்புறம் கஞ்சா, அபின், மது என பரிணாம வளர்ச்சிக் கண்டு பின்னால் ஒரு முழுநேர போதைப்பொருள் அடிமையாக மாறி விடுகின்றான்.
பிஞ்சிலே பழுத்த பழம் என்று சொல்வது போல் பதின்மவயது பருவத்தில் பள்ளிக் கூடத்திலேயே போதை பொருள் அடிமையாகி விடுகின்றான். அதனால் இத்தகைய இளஞ்சிறார்கள் போதையின் பாதையில் செல்லாமல் காப்பது நமது கடமையாகும்.
இதை அடிப்படையாகக் கொண்ட அழகிய முன்மாதிரி இப்ராஹீம் (அலை) என்ற செயல் திட்டத்தின் கீழ் வருகின்ற ஆகஸ்ட் மாதம் முழுமைக்கும் நமது ஜமாஅத் இப்ராஹீம் நபியின் இளமைப் பருவத்தை மக்களிடம் எடுத்துரைக்கவிருக்கின்றது. இந்தத் தலைப்பின் கீழ் போதையில் வீழ்ந்து கிடக்கும் நமது சமுதாய சிறுவர்களையும் இளைஞர்களையும் மீட்டெடுக்கும் பிரச்சாரத்தை இம்மாதம் மேற்கொண்டிருக்கின்றது. அதற்கான அவசியத்தை சமுதாயத்தில் நடந்த கீழ்காணும் நிகழ்வுகள் நமக்குத் தெளிவாக எடுத்துரைக்கின்றன. அவற்றை இப்போது பார்ப்போம்:
கீழக்கரையில் நடந்த ஒரு கொலைவெறித் தாக்குதல்
இன்று இந்தியாவில் எங்கும் மது, எதிலும் மது என்று மதுக்கடைகள் திறந்திருக்கும் இந்த காலக் கட்டத்தில் முஸ்லிம்கள் தங்களுடைய பண்டிகை நாட்களில் கூட மதுக்கடைகள் பக்கம் தலை காட்டுவது கிடையாது. ஆடம்பரமாகத் திருமணம் நடத்தினாலும் பந்தியிலோ தனியாகவோ மது விநியோகம் பரிமாற்றம் அறவே கிடையாது.
இது பிற சமுதாய மக்கள் மூக்கின் மீது விரலை வைத்து ஆச்சரியமாகப் பார்க்கின்றார்கள். சுப காரியங்களிலும் சோகக் காரியங்களிலும் மது ஆறாகப் பெருக்கெடுத்து ஓடும்போது இவர்கள் மட்டும் மதுக்கடைகள் வாசலுக்குக் காலடி எடுத்து வைப்பதில்லை.
வாசலுக்கு வருவது ஒரு புறமிருக்கட்டும். அதன் வாசனை, வாடை கூட அவர்களுக்கு அடிப்பதில்லையே; இது எப்படி? தங்களது வீடுகளில் விருந்து வைபவங்களுக்கும் நடத்தும் விழாக்களுக்கும் மது பாட்டில்களை வரவழைப்பதில்லை என்று சமுதாயத்தை ஆச்சரியமாக உற்று நோக்கிக் கொண்டிருக்கின்றார்கள்.
அவர்களுக்கு நாம் சொல்வது ஒன்றே ஒன்று தான். எங்களுக்கு இந்தக் கட்டுபாட்டையும் பத்தியத்தையும் எங்களிடத்தில் ஊட்டியது புனித ரமலான் மாதத்தில் இறங்கிய திருக்குர்ஆன் என்ற புனித வேதம்தான் என்று சொல்லிக் கொண்டிருக்கின்றோம்.
உண்மையில், இது முஸ்லிம்களிடம் குர்ஆன் செலுத்தும் ஆளுமையும் அதிகாரமும் ஆகும். அப்படிப்பட்ட புனித ரமலான் மாத இரவில் தான் முஸ்லிம் இளைஞர் மீது ஒரு கொலை வெறி தாக்குதல் நடைபெறுகின்றது. அதை இப்போது பார்ப்போம்:
ராமநாதபுரம் மாவட்டத்தில் முஸ்லிம்கள் அதிகம் வாழுகின்ற ஓர் ஊர்தான் கீழக்கரை. முஸ்லிம் செல்வந்தர்கள் அதிக வாழும் ஊரும் அது தான். கீழக்கரை ஐநூறு பிளாட் என்ற இடத்தில் அமைந்திருக்கும் நமது கிளை பள்ளிவாசலில் ரமலான் மாதத்தில் இரவு நேரங்களில் இரவுத் தொழுகை நடந்து கொண்டிருக்கும்போது அருகில் கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு கட்டிடத்தில் இளைஞர்கள் கஞ்சா அடித்துக் கொண்டிருந்தனர். அதைப் பெண்கள் கண்டு ஜமாஅத் சகோதரர்களிடத்தில் தெரிவிக்கின்றனர்.
அத்தனை பேர்களும் புதுமுகங்கள்; அவர்கள் நடவடிக்கைகள் வித்தியாசமாக இருக்கின்றன என்று ஜமாஅத்தினரிடம் சொன்னதும் அவர்கள் யார்? என்று தொழுது விட்டு வெளியே வந்த மக்கள் கூட்டமாக புதிய கட்டிடத்தை நோக்கி செல்லவும் அவர்கள் கட்டிடத்தின் பின்புறமாக சுவர் ஏறிக் குதித்து ஓட்டமெடுக்கின்றனர். அவ்வாறு செல்லும் போது வாசலில் சாவியுடன் பூட்டாமலேயே ஒரு பைக்கை விட்டுச் சென்று விட்டனர். அந்த பைக்கின் சாவியை பெண்களே எடுத்து தங்கள் கைவசம் வைத்திருந்தனர். பின்னர் அந்த பைக்கை வீட்டுரிமையாளரின் மருமகன் பள்ளிக்கருகில் கொண்டு வந்து விட்டிருந்தார்.. பின்னர் இருவர் பைக்கைக் கேட்டு வரும் போது சம்பந்தப்பட்டவர்களை வரச் சொல் சொல்லி விட்டார்.
கஞ்சாக் கும்பல் நடத்திய கொலைவெறித் தாக்குதல்
வந்த இருவரும் அதை கஞ்சா கும்பலிடம் போய் தெரிவிக்கவே 20 அல்லது 25 பேர்கள் கம்பு, கத்திகளுடன் வந்து பைக்கை கேட்கின்றனர். வாய் தகராறு ஏற்படுகின்றது. அர்ஷத் என்ற சகோதரரை சரமாரியாகத் தாக்குகின்றனர்.
இதை ஐநூறு ஃபிளாட் கிளைச் செயலாளர் நஸீம் தடுக்கச் செல்லும் போது அவர் தலையில் கட்டையை வைத்து தாக்குகின்றனர். இந்தக் கும்பலில் ஒருவன் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கண்மூடித்தனமாகக் குத்துகின்றான். அது அவரது தொடையில் பட்டு இதயத்திற்கு செல்லும் நரம்பைத் துண்டித்து விடுகின்றது. இரத்தம் பீறிட்டு வழிகின்றது.
இந்த சமயத்தில் அவரது தம்பி ஜைனுல் ஆபிதீன் தடுக்க முற்படவே அவரது கை பாதிப்புக்குள்ளாகின்றது. அப்துஸ்லாம் என்ற சகோதரரும் கண் மூடித்தனமான தாக்குதலுக்கு உள்ளாகின்றார். இந்தக் கொலைவெறித் தாக்குதல் சம்பவம் நடந்த இரவு லைலத்துல் கத்ர் அடங்கியிருக்கும் இரவுகளில் ஒன்றான 27வது இரவாகும்.
இந்த இரவில் தான் ஒரு கூட்டம் லைலத்துல் கத்ரு இரவைத் தேடி வணக்க வழிபாடுகளில், அதிலும் புனிதமிக்க நேரமான பிந்திய வேளையில் ஈடுபடுகின்றனர். அந்த இரவில் முஸ்லிம் இளைஞர்கள் கஞ்சா அடித்துக் கொண்டிருந்தனர். அந்த விவகாரத்தைப் பெண்கள் தட்டிக் கேட்கப் போய் தகராறு ஏற்பட்டு கொலைவெறித் தாக்குதலில் முடிகின்றது.
இதில் கிளைச் செயலாளர் நஸீம் பிழைத்தது மறுபிழைப்பாகும். இதயத்திற்கு செல்லும் ஒரு நரம்பு தொடையில் அமைந்திருக்கின்றது. அந்த நரம்பு துண்டிக்கப்பட்டதால், இரத்தம் தாறுமாறாக வெளியேறி விட்டது. இதனால் நஸீம் சுயநினைவை இழந்து விட்டார். முதலில் ராமநாதபுரம், அதன் பிறகு மதுரையில் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று உயிர் திரும்பியிருக்கின்றார். சமுதாயத்து இளைஞர்கள் இன்று போதையில் ஊறிக் கிடப்பதை தான் கீழக்கரை சம்பவம் நமக்கு எடுத்துக் காட்டுகின்றது. இந்தத் தாக்குதலில் ஈடுபட்டிருக்கும் இம்ரான் என்பவன் கஞ்சா கடத்தல் பேர்வழி! அதனால் அவனது கஞ்சா காசு குற்றவாளிகளைக் காப்பாற்றுவதற்காக அதிகமான அளவில் காவல்துறைக்குக் கைமாறியிருக்கின்றது.
நாம் இங்கு கவனிக்க வேண்டிய விஷயம் முஸ்லிம் இளைஞர்களிடம் அதிலும் ரமலான் மாதம் என்று பாராமலும் பாரபட்சமில்லாமலும் கஞ்சா புகுந்து விளையாடுகின்றது என்பது தான்.
தற்கொலையில் தள்ளும் போதை
கீழக்கரை போன்றே முஸ்லிம்கள் நிறைந்த இன்னோர் ஊர். அங்கு ஓர் இளைஞருக்கு பெண் பேசப்படுகின்றது. அவர் எனக்குத் திருமணம் வேண்டாம் என்று எவ்வளவோ மறுத்தும், பெண்ணைப் பேசி திருமணத்தை நிச்சயிக்கின்றனர்.
ஆனால் மணநாள் காண்பதற்கு முன்னால் மணமகன் தற்கொலை செய்து பிணமகன் ஆகின்றான். காரணம் சதாவும் போதை பழக்கத்தில் மூழ்கி அதன் விளைவால் அவரது ஆண்மையே பறிபோயிருந்தது. அதை வெளியே சொல்ல வெட்கப்பட்டு வேதனைப்பட்டு தூக்கில் தொங்கி விடுகின்றார்.
இந்த நிகழ்வும், கீழக்கரையில் நடந்த இதற்கு முந்தைய நிகழ்வும் போதைக்கு எதிரான பயணத்தை நாம் வீரியமாக மேற்கொண்டாக என்ற அவசியத்தை உணர்த்துகின்றது.
அத்துடன், போதைக்கு எதிரான போருக்கு ஆகஸ்ட் மாதம் என்ற ஒரு மாத கால அளவு பற்றாது. ஆண்டு முழுக்க ஏன் ஆயுள் முழுக்க பிரச்சாரத்தை மேற்கொள்ள வேண்டும் என்று உணர்த்துகின்றது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘உங்களில் ஒருவர் ஒரு தீமையை (மார்க்கத்திற்கு முரணான ஒரு செயலை)க் கண்டால் அவர் அதைத் தமது கரத்தால் தடுக்கட்டும், முடியாவிட்டால் தமது நாவால் (சொல்லித் தடுக்கட்டும்), அதுவும் முடியாவிட்டால் தமது உள்ளத்தால் (அதை வெறுத்து ஒதுக்கட்டும்). இந்த (இறுதி) நிலையானது இறைநம்பிக்கையின் பலகீனமா(ன நிலையா)கும்’ என்று கூறுகின்றார்கள்.
அறிவிப்பவர்: அபூசயீத் அல்குத்ரீ (ரலி)
நூல்: முஸ்லிம் 78
இந்த ஹதீஸ் அடிப்படையில் போதைப் பொருட்களில் மூழ்கிக் கிடக்கும் சிறார்களை, வாலிபர்களை, மத்திய வயதினரை, வயோதிகர்களை நாம் காப்போமாக. அழகிய முன்மாதிரி இப்ராஹீம் (அலை) என்ற செயல்திட்டத்தின் கீழ் அவர்களை இப்ராஹீம் நபி அவர்களின் இளமைப்பருவத்தை உற்று நோக்க அழைத்து அவர்களை சமூக சிந்தனை கொண்ட இளைஞர்களாக மாற்றுவோம். இதற்கு எல்லாம் வல்ல அல்லாஹ்வின் உதவியைத் தேடிக் கொள்வோமாக!