போதையிலிருந்து இளைஞர்களை மீட்போம் இந்தியாவைக் காப்போம்

ஆப்ரஹாம் என்றழைக்கப்படும் இப்ராஹீம் அவர்கள், மூன்று பென்னம் பெரும் சமுதாயங்கள் இன்னமும் மாண்புடனும் மகிமையுடனும் மதிக்கின்ற மாபெரும் தலைவராவர். தீர்க்கத்தரிசி என்றழைக்கப்படும் ஓர் இறைத்தூதர் ஆவார்கள். கால இடைவெளி ஐயாயிரம் ஆண்டுகளைத் தாண்டியிருந்தாலும் அவர்களுக்கும் இன்றைய உலகில் வாழும் 200 கோடி முஸ்லிம்களுக்கும் மத்தியில் திரைகளோ, தடைகளோ இல்லாமல் நீங்காத இடம் பிடித்தவர். மங்காத, மறையாத தடம் பதித்தவர்.
ஓரிறைக் கொள்கையை நிலை நாட்டுவதற்காக அவர் ஒலித்தக் குரலை திருக்குர்ஆன் இன்றும் ரீங்காரமாக ஓங்கி எதிரொலித்துக் கொண்டிருக்கின்றது. மக்களை அறியாமை இருளிலிருந்து மீட்டு பகுத்தறிவுச் சிந்தனை ஒளி வெள்ளத்தில் பாய விட்ட ஒரு சமூகப் போராளி. ஒரு சமுதாயக் காவலாளி. இளைஞன் என்றால் அபார உடல் வலிமை மட்டுமல்லாமல் அசாத்திய துணிச்சல் மட்டுமல்லாமல், அலாதியான அறிவாற்றல் உடையவன். இன்றைக்கு இந்திய சமுதாய மக்கள் மூடப்பழக்கங்களில் மூழ்கிக் கிடக்கின்றனர்.
அதிலும் குறிப்பாக சிறுவர்கள், வளர் இளம்பருவத்தினர், வாலிபர்கள், வயோதிகர்கள் என்று வயது வித்தியாசமில்லாமல், பாலின பாகுபாடில்லாமல் அதிகமான பேர்கள் போதைப் பொருட்களில் விழுந்து கிடக்கின்றனர். அவர்களை மீட்கும் பொறுப்பும் காக்கும் கடமையும் இளைய சமுதாயத்திற்கு இருக்கின்றது. ஆனால் அவனே போதையில் மூழ்கிக் கிடக்கலாமா?
அதனால் அந்த இளைய சமுதாயத்திற்கு முன்னால் இப்ராஹீம் என்ற ஒரு இளைஞரை முன்னுறுத்தி, அவரிடம் சமூக உணர்வு எப்படி குடி கொண்டது? மூடப்பழக்கங்களை ஒழிப்பதில் அவர் எப்படி மும்முரமாக ஈடுபட்டார்? அந்த அறப்பணிக்காகத் தன்னை எப்படி அர்ப்பணித்துக் கொண்டார் என்று அவரது வாழ்க்கை வரலாற்றை எடுத்துக் கூறி, மது போன்ற போதைப் பழக்கங்களிலிருந்து இளைஞர்களை விடுபட வைக்கின்ற விடுதலை அடைய வைக்கின்ற ஒரு பணியை தமிழ்நாடு தவ்ஹீது ஜமாஅத், ‘இப்ராஹீம் நபியின் இளைமைப் பருவம்’ என்ற தலைப்பின் கீழ் புகை மற்றும் போதைப் பொருட்களுக்கு எதிரான பிரச்சாரத்தை ஆகஸ்ட் மாதம் முழுமைக்கும் மேற்கொள்ளவிருக்கின்றது.
அந்தப் பணியை இந்தியாவில் சாதி, மத, பேதமில்லாமல் ஒவ்வொருவரும் கையிலெடுத்து இந்திய இளைஞர் சமுதாயத்தைக் காப்பாற்றப் புறப்பட்டாக வேண்டும் என்பதைப் பின்வரும் புள்ளிவிவரங்கள், ஆய்வுகள் நமக்குத் தெரிவிக்கின்றன. அவற்றை நாம் இப்போது பார்ப்போம்:
உலகில் நிகழும் மரணங்களில், பிற காரணங்களைவிட மதுப் பழக்கம் காரணமாக ஏற்படும் மரணங்கள் 5% அதிகம் என்று உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டிருக்கும் அறிக்கை தெரிவிக்கிறது. ஒவ்வோர் ஆண்டும் 30 லட்சம் பேர் மதுப் பழக்கத்தின் பாதிப்புகளால் மரணமடைகிறார்கள். இந்தியாவில் மட்டும் ஆண்டுதோறும் ஆல்கஹாலுக்குப் பலியாகின்றவர்களின் எண்ணிக்கை 2.6 லட்சம். மேலும், 20 வயதுகளில் இருப்பவர்களில் 13.5% பேர் மதுப் பழக்கத்தின் காரணமாகவே மரணமடைகிறார்கள். “சமூகத்தில் ஆல்கஹாலின் பாதிப்புகளைக் குறைப்பதில் அரசுகள் அதிக முனைப்பு காட்ட வேண்டும். இல்லாவிடில் பெரும் கேடுதான்” என்கிறார் உலக சுகாதார நிறுவனத்தின் ஆல்கஹால் கட்டுப்பாட்டுப் பிரிவின் நிபுணர் விளாதிமிர் போஸ்ன்யாக் கூறுகிறார். (இந்து தமிழ் 24.9.2018)
இது 2018ல் வெளியான உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கையாகும். இதன் பிறகு உலகில் கடந்த 6 ஆண்டுகளில் மது அருந்துவோரின் எண்ணிக்கை குறைந்திருக்கின்றதா என்றால் அதே நிலை தான் தொடர்வதைப் பார்க்க முடிகின்றது.
ஆண்டுதோறும் மதுவினால் கிட்டத்தட்ட மூன்று மில்லியன் மக்கள் உயிரிழப்பதாக உலக சுகாதார நிறுவனம் கடந்த ஜூன் 25 அன்று அறிக்கை வெளியிட்டுள்ளது.
அண்மைய ஆண்டுகளில் இறப்பு விகிதம் சற்று குறைந்திருந்தாலும், இன்னும் அது “ஏற்றுக் கொள்ள முடியாத அளவுக்கு அதிகமாக” உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.
மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுதல், மதுவினால் தூண்டப்பட்ட வன்முறை, துன்புறுத்தல், பல நோய்கள் போன்றவை ஒவ்வோர் ஆண்டும் உலகளவில் ஏற்படும் இருபதில் ஒரு மரணத்துக்குக் காரணமாக உள்ளது என்று அறிக்கை தெரிவித்தது.
கடந்த 2019ஆம் ஆண்டில் மது அருந்துவதால் 2.6 மில்லியன் இறப்புகள் ஏற்பட்டதாக மதுபானமும் உடல்நலமும் பற்றிய ஐக்கிய நாடுகள் சபையின் சுகாதார நிறுவனத்தின் அறிக்கை குறிப்பிட்டது. அண்மைய புள்ளிவிவரங்களின்படி அந்த எண்ணிக்கை அந்த ஆண்டு உலகளவில் ஏற்பட்ட மொத்த இறப்புகளில் 4.7 விழுக்காடு.
அந்த இறப்புகளில் கிட்டத்தட்ட முக்கால்வாசி பேர் ஆண்கள்.
2019ஆம் ஆண்டில் மது காரணமாக ஏற்பட்ட இறப்புகளில் அதிகபட்ச விகிதமாக 13 விழுக்காட்டினர் 20 முதல் 39 வயதுக்கு உட்பட்டவர்கள்.
குடிப்பழக்கம் கல்லீரலின் பிரச்சினை, சில புற்றுநோய்கள் உட்பட பல உடல்நலக் கேடுகளை ஏற்படுத்துகிறது. இவ்வாறு கடந்த ஜூன் மாத இறுதியில் வெளியான தமிழ் முரசு நாளேடு தெரிவிக்கின்றது.
2018க்கும் இடையில் 2024க்கும் இடையில் மதுவினால் சாவோரின் எண்ணிக்கை குறையவில்லை என்பதையே இது காட்டுகின்றது.
உலகளவில், 400 மில்லியன் மக்கள், அல்லது 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட உலக மக்கள் தொகையில் 7% பேர், மது அருந்துவதின் மூலம் ஏற்பட்ட கோளாறுகளுடன் வாழ்கின்றனர், மேலும் 209 மில்லியன் (வயதான உலக மக்கள்தொகையில் 3.7%) மது சார்புடன் வாழ்கின்றனர் என்று அறிக்கை கூறுகிறது.
2019ஆம் ஆண்டில், 15 வயதுக்கு மேற்பட்டவர்களில் 17% பேரும், தற்போது குடிப்பவர்களில் 38% பேரும் “அதிக குடிப்பழக்கம்” உள்ளவர்களாக அல்லது மொடா குடிகாரர்களாக இருக்கின்றார்கள். இவர்கள், கடந்த மாதத்தில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட சந்தர்ப்பங்களில் குறைந்தது 60 கிராம் தூய ஆல்கஹாலை உட்கொண்டுள்ளனர். அதிக குடிப்பழக்கம் ஆண்களிடையே (6.7%) அதிகமாக இருந்தது. (தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் 26.6.24)

உயிர் பறிக்கும் உயிர்க் கொல்லி

இவை அனைத்தும் மனதை பதைபதைக்க வைக்கும் செய்தியாகும். இவற்றைப் படித்து விட்டு யாரும் எளிதில் கடந்து செல்ல முடியாது. மனம் கனக்காமல், கவலை கொள்ளாமல் இருக்க முடியாது. ஆனால் உலக ஆட்சியாளர்கள் இவற்றைக் கண்டு கொள்ளாமல் இருக்கின்றனர்.
மக்கள் நல்வாழ்வு, முன்னேற்றம், வளர்ச்சி என்று உலக நாடுகளின் ஆட்சியாளர் பேசுவது வெற்று பேச்சும் வீண் பிதற்றலுமாகும். இந்திய ஆட்சியாளர்களும் இந்த இலட்சணத்தில் உள்ளவர்கள் தான்.
இந்தியாவில் மட்டும் ஆண்டுதோறும் ஆல்கஹாலுக்குப் பலியாகின்றவர்களின் எண்ணிக்கை 2.6 லட்சம் என்று நாம் மேலே பார்த்தோம். இந்தியாவில் ஒன்றிய அரசும் மாநில அரசுகளும் மக்கள் உயிர்களைக் காக்க என்ன நடவடிக்கை எடுத்திருக்கின்றன? என்று பார்த்தால் மதுவிலக்கை அமுல்படுத்துவதற்காக ஒரு துரும்பைக் கூட அசைக்கவில்லை. அண்மையில் கள்ளக்குறிச்சியில் நடந்த கள்ளச்சாராய சாவு இதன் விளைவு தான்.

மும்பையில் நடந்த இரு கொலைகள்

15 வயதுக்கு மேற்பட்டவர்கள் மதுவுக்கு அடிமையாகியுள்ளனர் என்ற ஆய்வு மேலெழுந்த வாரியாக இல்லை. நுனிப்புல் மேய்ந்ததாக இல்லை. நிதர்சனமான நடப்பைப் பிரதிபலிக்கும் யதார்த்தமானதாக அமைந்திருக்கின்றது. அதற்கு அண்மையில் மும்பையில் நடந்த இரு எடுத்துக்காட்டுகள் போதிய சான்றுகளாகும்.
கடந்த மே மாதம் 19ஆம் தேதி அன்று மஹாராஷ்டிரா மாநிலம் புனேவைச் சார்ந்த பிரபல கட்டுமானத் தொழில் நிறுவன அதிபரின் 17 வயது மகன் ஒரு பார்ட்டியில் கலந்து மதுவை அருந்தி விட்டு போதையில் கல்யாணி நகரில் போர்ஷே ஸ்போர்ட்ஸ் காரை வேகமாக ஓட்டி வந்திருக்கின்றான். கண், மூக்கு தெரியாமல், நிதானமில்லாமல் முன்னே பைக்கில் சென்ற தம்பதியர் மீது மோதி இருவரும் தூக்கி வீசப்ப்பட்டு சம்பவ இடத்திலேயே மரணித்து விட்டனர். பையன் கைது செய்யப்படுகின்றான்.
அவனது இரத்தம் பரிசோதனைக்குப் போனால் மது அருந்தியதை காட்டி கொடுத்து விடும் என்று தெரிந்து அவனது தாயார் மகனது இரத்தத்திற்குப் பதிலாக தனது இரத்தத்தை மாற்றி வைத்து விடுகின்றார். அது வெளிச்சத்திற்கு வந்து மருத்துவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்படுகின்றனர்.
விலைமதிப்பற்ற இரு உயிர்களைப் போதையின் பிடியில் கொலை செய்த 17 வயது சிறுவனுக்கு (இஸ்லாத்தின் பார்வையில் அவன் வாலிபன்) தண்டனை ஏதும் உண்டா? என்றால் அது தான் இல்லை. 15 மணி நேரத்தில் அவனுக்கு உயர்நீதிமன்றம் நிபந்தனையின் பேரில் ஜாமீன் அளிக்கின்றது. போக்குவரத்து காவலர்களுடன் 15 நாட்கள் பணியாற்ற வேண்டும், மனநல சிகிச்சை பெற வேண்டும், சாலை விபத்தின் விளைவு மற்றும் அதற்கான தீர்வு என்ற தலைப்பில் 300 வார்த்தைகளில் கட்டுரை எழுத வேண்டும், போதை ஒழிப்பு மையத்தில் கவுன்சிலிங் பெற வேண்டும், எதிர்காலத்தில் சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ வேண்டும். இவை தான் அந்த நிபந்தனைகள்!
இந்தியாவில் மனித உயிர் மலிவுச் சரக்காய் போனதை நாம் பார்க்க முடிகின்றது என்பது தனி விஷயம். ஆனால் நாம் கவனிக்க வேண்டிய விஷயம் ஆய்வறிக்கை கூறுவது போன்று 15 வயது வாலிபர்கள் மதுவுக்கு அடிமையாகக் கிடப்பதையும் அத்துடன் சாலையில் செல்பவர்கள் ஓரஞ்சாரத்தில் படுத்து உறங்குபவர்கள், நடைப்பயிற்சி செய்யும் பாதசாரிகள் மீது தங்கள் கார்களைப் பாய விட்டு அவர்களைப் பிணமாக சாய வைக்கின்றனரே! அந்த அபாயத்தையும் ஆபத்தையும் தான்.
அதே சம்பவம் – ஆனால் ஊர் வேறு! கார் வேறு!
கல்யாணி நகரில் காரேற்றிக் கொல்லப்பட்ட இருவரின் இரத்தம் சாலையில் வழிந்தோடி அதன் ஈரம் கூடக் காயவில்லை. அதற்குள்ளாக, அதே மகாராஷ்டிரா மாநிலத்தில் அதேபோன்ற ஒரு கோரச் சம்பவம் நடக்கின்றது. ஆனால் ஊர் வேறு…. கார் வேறு.
ஊர் – மும்பையின் ஓர்லி. கார் – பிஎம்டபிள்யூ. அதை சற்று விரிவாகப் பார்ப்போம்:
மும்பை சிவசேனை ஷிண்டே அணியைச் சார்ந்த தலைவர் ராஜேஷ் ஷாவின் மகன் 23 வயது மிஹிர் ஷா கடந்த ஜூலை 7 அன்று இரவு 11 மணி அளவில் தனது தந்தைக்குச் சொந்தமான பென்ஸ் காரில் அருகில் உள்ள மதுபான விடுதிக்கு, பார்ட்டிக்குச் சென்றார். மதுவை வாயில் ஊற்றி விட்டுப் பின்னர் நள்ளிரவு 1 மணி அளவில் வீடு திரும்புகின்றார். மீண்டும் வீட்டிலிருந்து இரண்டாவது தடவை மதுவைக் குடித்து விட்டு, இல்லை! மதுவில் குளித்து விட்டு காரை டிரைவரிடமிருந்து வலுக்கட்டாயமாக வாங்கிக் கொண்டு தானே ஓட்டுகின்றார்.
ஓர்லியில் அட்ரியா மால் அருகே ஜூலை 7ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5.30 மணியளவில் பிஎம்டபுள்யூ கார் தலைதெறிக்க தறிகெட்டுப் பறக்கின்றது. முன்னால் அது போல் ஒரு பைக்! அதுபோல் ஒரு தம்பதியர். முந்தைய சம்பவத்தில் இருவருமே தூக்கியெறியப்பட்டனர். சம்பவ இடத்தில் கொல்லப்பட்டனர் ஆனால் இந்தச் சம்பவத்தில் கணவன் மட்டும் தூக்கியெறியப்படுகின்றார். மனைவி பென்ஸ் காரின் பம்பருக்கும் முன் சக்கரத்திற்கும் இடையே மாட்டி 100 மீட்டர் வரை இழுத்துச் செல்லப்பட்டார் என்று இந்து நாளேடும், 2 கிலோ மீட்டர் வரை இழுத்துச் செல்லப்பட்டார் என்று தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸும் குறிப்பிடுகின்றது.
மொத்தத்தில் நீண்ட தூரம் இழுத்துச் செல்லப்படுகின்றார். பலத்த காயத்துடன் உயிர் தப்பிய கணவர், நிறுத்து நிறுத்து என்று கத்துகின்றார், கதறுகின்றார். கத்தி பயன் என்ன? கதறி பயன் என்ன? போதையுண்டவனுக்கு புத்தி எப்படி வேலை செய்யும்? அவசரம் அவசரமாக மனைவி மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டார். ஆனால் அவர் சடலமாக வந்திருக்கின்றார் என்று மருத்துவமனை அறிவித்து விட்டது.
இரண்டுமே மஹாராஷ்டிர மாநிலத்தில் நடந்த சம்பவங்கள். குடித்தவர்கள் இருவரும் இளைஞர்கள். கொல்லப்பட்டவர்கள் பைக்கில் சென்ற தம்பதியர். மது குடியாட்சி செய்த இவ்விருவருமே இளைஞர்கள். உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கும் புள்ளி விவரம் வெறும் ஊகமான புள்ளிவிவரமாக இல்லை. யதார்த்தத்தைப் பிரதிபலிக்கும் துல்லியமான புள்ளி விவரமாக இருக்கின்றது. குடிப்பழக்கத்திற்கு இளைஞர்கள் கொத்துக் கொத்தாக அடிமைப்பட்டுக் கிடக்கின்றனர் என்பதை இது எடுத்துக் காட்டுகின்றது.

போதையின் பிடியில் சிக்குண்ட சிறார்கள்

கடந்த 12.1.22 அன்று இந்து தமிழ் நாளிதழில் போதையின் பிடியில் சிக்கும் சிறார் என்ற தலைப்பில் சிறுவர்கள் போதைக்குள்ளாகும் சமூக கொடுமையைப் பற்றி பொது நல மருத்துவர் கு. கணேசன் விவரிக்கையில்,
“அண்மையில், பன்னிரண்டாம் வகுப்பு மாணவன் வகுப்பறையில் மயக்கமாகிவிட்டதாக என்னிடம் அழைத்து வரப்பட்டான். விசாரணையில், அவன் ஒருவித போதைப் பாக்குக்கு அடிமையாகியிருப்பது தெரிந்தது. அடுத்ததாக, பத்தாம் வகுப்பு வரை படிப்பில் படுசுட்டியாக இருந்த மாணவி, பதினொன்றாம் வகுப்புத் தேர்வுகளில் பின்தங்கிவிட்டாள் என்ற புகாரோடு வந்தபோது, அவளுக்கும் போதைப் பழக்கம் இருப்பது தெரியவந்தது” என்று தெரிவிக்கின்றார். அத்துடன் அவர் மனதை உலுக்குகின்ற மற்றொரு புள்ளிவிவரத்தை தெரிவிக்கின்றார்.
இவ்விரு களநிலவரங்களையும் உறுதிசெய்கின்றன தேசிய ஆய்வுகள்.
‘தேசிய போதைப் பழக்க உளவியல் கழகம்’  புதுடெல்லியில் எய்ம்ஸ் மருத்துவமனையோடு இணைந்து, டிசம்பர் 10, 11 தேதிகளில், ‘போதைப் பழக்கம் – 2021’ எனும் தேசிய மாநாட்டை நடத்தியது. அப்போது விவாதிக்கப்பட்ட களநிலவரங்களில், 2020-ம் ஆண்டு பொதுமுடக்கக் காலத்தில் ஏற்பட்ட தனிமை, வறுமை, குடும்ப வன்முறை, பாலியல் தொந்தரவு போன்றவற்றால், போதைப்பொருள் நுகர்வோர் பதிவுகள் 2021ல் கூடுதலாகியுள்ளன என்பது முக்கியத்துவம் பெறுகிறது.
தேசிய அளவில் மேற்கொள்ளப்பட்ட மற்றோர் ஆய்வில், கடந்த 20 ஆண்டுகளில் போதைக்கு அடிமையாகும் இந்தியச் சிறாரின் எண்ணிக்கை 5 மடங்காக அதிகரித்துள்ளதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. நாட்டில் மதுவாலும் அது தொடர்பான பிரச்சினைகளாலும் ஆண்டுக்கு 30 லட்சம் பேரும் நிமிடத்துக்கு 6 பேரும் இறப்பைச் சந்திக்கின்றனர். தமிழ்நாட்டில் 2.2 கோடிப் பேர் மதுப்பழக்கம் உள்ளவர்கள். இவர்களில் 75% பேர் ஆண்கள்; 25% பேர் பெண்கள். சென்னை உள்ளிட்ட 3 மாவட்ட பள்ளி மாணவர்களிடம் நடத்தப்பட்ட மற்றொரு களஆய்வில் 9% பேருக்கு கஞ்சா, மது, போதைப் பாக்கு போன்றவற்றின் பழக்கம் இருப்பது தெரியவந்துள்ளது.
இவ்வாறு மனதை உலுக்குகின்ற ஓர் ஆய்வை குறிப்பிடுகின்றார்.

வளர் இளம்பருவத்தினரை வ(ள)ருமுன் காப்போம்

கடந்த 2 ஜூலை, 2024 இந்து தமிழ் நாளிதழில் தமிழ்நாடு காவல்துறை பணியிலிருந்து ஓய்வு பெற்ற உயர் அதிகாரி திரு. பெ.கண்ணப்பன் அவர்கள் ‘போதைப் பொருள் மாஃபியா: மெக்சிகோ கடந்து வந்த பாதை’ என்ற தலைப்பில் மெக்ஸிக்கோ நாட்டில் போதை பொருள் மாஃபியாவின் தாக்கத்தைப் பற்றி அலசியிருந்தார். அதில் இந்தியாவில் குறிப்பாக சென்னையில் போதைப்பொருள் பயன்பாட்டைப் பற்றி குறிப்பிடுகையில், “மேலும், போதைப் பொருள்களைப் பயன்படுத்தும் பழக்கம் இந்தியாவில் அதிகரித்து வருகிறது. 10 முதல் 17 வயதுடைய 1.58 கோடி சிறார் இந்தியாவில் போதைப் பொருள்களைப் பயன்படுத்துகின்றனர். சென்னை உள்ளிட்ட பல பகுதிகளில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருள்கள் தொடர்ந்து பிடிபட்டுவருகின்றன” என்று தெரிவிக்கின்றார்.
மேற்கண்ட இந்தப் புள்ளி விவரங்கள், ஆய்வுகள் நமக்கு துளியளவும் சந்தேகமில்லாமல் தெரிவிப்பது என்னவெனில் போதைப் பொருள் பயன்பாடு வயது வித்தியாசமில்லாமல், பாலின பாகுபாடில்லாமல் வரையறையில்லாமல் ஊடுறுவியிருக்கின்றது என்பதை தான். அதில் குறிப்பாக சிறுவர்கள், வளரிளம் பருவத்தினர், வாலிபர்கள், மத்திய வயதினர், வயதானவர்கள், பெண்களில் இதே மாதிரியாக அனைத்துக் கட்ட வயதினர் போதையில் புதையுண்டு கிடக்கின்றனர்.

ஒயிட்னரை உறிஞ்சும் பதின்ம வயது மாணவர்கள்

கடந்த காலங்களில் பள்ளி, கல்லூரி மாணவர்களிடம் புகைப் பிடிக்கும் பழக்கமே பெரிய ஒரு சமூகக் கொடுமையாகப் பார்க்கப்பட்டது. அந்தக் காலத்து இளைஞர்கள் பீடி, சிகரெட் பிடிப்பதற்குப் பயந்தனர். ஆனால் இப்போது அந்த புகைப்பழக்கத்தைத் தாண்டி கஞ்சா, அபின் போன்ற போதைப் பொருட்களை பகிரங்கமாக, பயப்படாமல் உட்கொள்ளும் கொடுமையைக் காணமுடிகின்றது.
தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் பள்ளி மாணவர்களிடையே மது, கஞ்சா மட்டுமல்லாது, விநோதமான போதைப் பழக்கங்களும் ஏற்பட்டுள்ளன. ஒயிட்னர், இருமல் டானிக், பெட்ரோல், சைக்கிள் மற்றும் மோட்டார் சைக்கிள் டயர்களுக்கு பஞ்சர் ஒட்டும் பசை போன்றவற்றை பல்வேறு வகைகளில் போதைக்குப் பயன்படுத்தி வருகின்றனர்.
15 மில்லி ஒயிட்னருடன் அதே அளவில் டைல்யூட்டரையும் வாங்கி முகர்ந்து போதையைப் பெறுகின்றனர். மாணவர்களிடம் பரவிக் கிடக்கும் போதை பழக்கத்தைக் களைந்தெடுக்கும் பணி பள்ளி ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்கும் பெரும் சவாலாக உள்ளது.
ஆந்திரப் பிரதேச மாநிலம் சீனிவாசப்பட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் 12 வயது சிறுவன். அந்த பகுதியில் உள்ள அரசுப்பள்ளியில் 7ஆம் வகுப்பு படித்து வரும் இவர், வாகனங்களுக்குப் பஞ்சர் ஒட்டும் பசையை முகர்ந்து பார்த்து போதையேற்றி வந்துள்ளார்.
இதையே சிறுவன் வழக்கமாகச் செய்து வந்துள்ளதைக் கண்ட அவரது பெற்றோர், சிறுவனைக் கண்டித்துள்ளனர். இருப்பினும் அவர்களது பேச்சைக் கேட்காமல் இப்படியே செய்து தனக்குப் போதையேற்றி வந்துள்ளார். போதைக்கு அடிமையான இவர், யார் பேச்சையும் கேட்காமல் இருந்துள்ளார். இந்த நிலையில் சம்பவத்தன்று பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த சிறுவன், மாடிக்கு சென்றுள்ளார். பிறகு நீண்ட நேரமாகியும் வராததால் பெற்றோர் சென்று பார்த்துள்ளனர். அப்போது சிறுவன் பேச்சு மூச்சு இல்லாமல் மயங்கி கிடந்துள்ளார். மேலும் அவரது அருகில் பஞ்சர் ஒட்டும் பசையின் டியூப் இருந்துள்ளது.
இதையடுத்து சிறுவனை மீட்ட பெற்றோர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு சோதனை செய்த மருத்துவர்கள் சிறுவன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர். இதைக்கேட்டதும் அதிர்ந்த பெற்றோர் கதறி அழுதனர். 2022ஆம் ஆண்டு கலைஞர் டி.வி.யில் இந்தச் செய்தி வெளியானது.

மூளையின் மையத்தை பாதிக்கும் ஒயிட்னர்

ஒயிட்னரின் கடுமையான வாசனையால் காகிதத்தில் உள்ள அச்சுகளை மட்டும் அழிக்க முடியாது, மனித மூளையில் உள்ள நினைவகத்தையும் அழிக்க முடியும். டோலுயீன் மற்றும் ட்ரைக்ளோரோ எத்தேன் ஆகியவை போதைக்கு உதவுகின்றன, மேலும் போதைக்கு அடிமையானவர்கள் உள்ளிழுக்கும் தீவிரம் மற்றும் அளவைப் பொறுத்து, ஐந்து முதல் எட்டு மணி நேரம் வரை போதையில் மிதக்கின்றார்கள்.
நிபுணர்களின் கூற்றுப்படி, கொடிய கரைப்பான்களில் உள்ள ஹைட்ரோகார்பன்கள் இரத்தத்தில் எளிதில் ஊடுருவி ஒரு நபரின் மைய நரம்பு மண்டலத்தை பாதிப்படையச் செய்து விடும். மனநிலை மாற்றங்கள் மற்றும் தூக்கமின்மை போன்ற இயல்புக்கு மாறான செயல்பாடுகள் இந்தப் போதைக்கு அடிமையானவரிடம் வெளிப்படும். மேலும் இது சிறுநீரகம், கல்லீரல் மற்றும் நுரையீரல் பாதிக்கச் செய்து விடும். இப்படிப்பட்ட கொடிய விளைவுக் கொண்ட ஒயிட்னரைத் தான் சிறுவர்கள் உறிஞ்சி சீரழிகின்றார்கள்.
இதையெல்லாம் கவனத்தில் கொண்டு, சாதி, மத வேறுபாடின்றி ஏற்கனவே போதையில் விழுந்த விட்ட ஆண்கள், பெண்களை குறிப்பாக சிறுவர்களை, இளைஞர்களை, வளர் இளம்பருவத்தினரை மீட்கவும், புதிய தலைமுறையினர் போதையில் விழுந்துவிடாமல் தடுக்கவும், வருமுன் காக்கவும் தமிழ்நாடு தவ்ஹீது ஜமாஅத் சமூகப்புரட்சியாளர், மானுடகுலத்தை அறியாமை இருளிலிருந்து பகுத்தறிவு எனும் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்த சமூகக் காவலர் அழகிய முன்மாதிரி இப்ராஹீம் (அலை) பெயரில் களமிறங்கியிருக்கின்றது. அதற்காக ஆகஸ்ட் மாதம் முழுவதையும் இந்த அரிய பணியில் அர்ப்பணிக்கவிருக்கின்றது.
இந்தச் சூழ்நிலையில் அரசுக்கு ஒரு வேண்டுகோளை தவ்ஹீது ஜமாஅத் முன்வைக்கின்றது.
1) எரிவதைப் பிடுங்கி விட்டால் கொதிப்பது அடங்கி விடும் என்ற சொலவடைக்கேற்ப அரசாங்கம் உடனே டாஸ்மாக் கடைகளை இழுத்து மூடி மது விற்பனையைத் தடை செய்யவேண்டும். விற்பனை வாசல் அடைக்கப்பட்டால் நுகர்வு வாசல் தானாக அடைபட்டு விடும்.
மதுக் கடைகளை மூடி விட்டால் கள்ளச்சாராயம் பெருக்கெடுத்து விடும் நொண்டி சாக்குப்போக்கு அரசு கூறக் கூடாது. விஷச் சாராயச் சாவுகள் நடக்கும். காலப் போக்கில் அரசு எடுக்கும் உறுதியான நடவடிக்கை மூலம் அது தானாக முடிவுக்கு வந்து விடும்.
மதுவினால் உலகில் 30 லட்சம் சாவுகள் நடக்கின்றது என்று ஒரு புள்ளி விவரமும், இந்தியாவிலேயே 30 லட்சம் சாவுகள் நடக்கின்றன என்று இன்னொரு புள்ளி விவரம் கூறுகின்றது. இந்தச் சாவுகளுடன் ஒப்பிடும்போது மதுவிலக்கு அமுலின் மூலம் நடைபெறும் சாவுகள் மிகக் குறைந்த எண்ணிக்கைதான். அதனால் அந்தச் சாவை நியாயப்படுத்தவில்லை. ஆனால் உறுதியான நடவடிக்கை மூலம் அந்தச் சாவு கட்டுக்குள் வந்து, 30 லட்சம் சாவுகள் நின்று போய் விடும்.
2) மதுபான உற்பத்தி சாலைகள் அத்தனையும் இழுத்து மூடப்படவேண்டும்.
3) போதைப் பொருட்கள் நடமாட்டத்தை அரசு இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்.
4) அண்மையில் கள்ளக்குறிச்சியில் நடந்த கள்ளச்சாராயச் சாவை அடுத்து தமிழ்நாட்டில் கள் இறக்குவதற்கு அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை பத்திரிக்கைகள் முன் வைக்கின்றன. இதைவிட வேதனைக்குரிய விஷயம் சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசை நோக்கி ஏன் கள் இறக்குவதற்கான தடையை நீக்கக் கூடாது என்று கேள்வி எழுப்பியிருப்பது தான். ஒரு போதைக்கு இன்னொரு போதை எப்படி தீர்வாகும்? இதன் மூலம் ஒருபோதும் போதையை ஒழிக்கவே முடியாது. எனவே கள் இறக்குவதற்கு இருக்கும் தடையை ஒருபோதும் அரசு நீக்கக் கூடாது.
5) புகைப் பழக்கத்தை திரைப்படங்கள் ஸ்டைலாகக் காண்பிக்கின்றன. அதுபோலவே மது அருந்தும் பழக்கத்தை ஒரு ஃபேஷனாகக் காட்டுகின்றன. அதனால் அவற்றை திரைப்படங்களில் காட்டுவதை மட்டுமல்லாமல் திரைப்படங்களையே தடை செய்யவேண்டும். அவை இவை வளர் இளம்பருவத்தினரிடையே வாலிபர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
6) மேற்கண்ட இந்த நடவடிக்கைகளை அரசு உறுதியாக கடைப்பிடிப்பதுடன் மக்களுக்கு போதைப் பொருட்களின் தீமைகளை மிகப் பெரிய அளவில் பிரச்சாரமாக முன்னெடுத்துச் செல்லவேண்டும்.
இந்த அடிப்படையில் தான், தவ்ஹீது ஜமாஅத் ஒரு மாத காலத்திற்கு, போதைப் பொருட்களுக்கு எதிராக அடர்த்தியான விழிப்புணர்வுப் பிரச்சாரத்தை மேற்கொள்ளவிருக்கின்றது. இந்தப் பிரச்சாரமும் சரி! சமூகத்தில் நீண்ட கால வெறெந்தப் பிரச்சாரமும் சரி! அது பலன் கொடுக்க வேண்டுமென்றால் மேலே நாம் கூறியுள்ள நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டாக வேண்டும். அந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் ஒருபோதும் போதை ஒழிப்பு நடவடிக்கை வெற்றிபெறாது என்று அழுத்தம் திருத்தமாகப் பதியவைத்துக் கொள்கின்றோம்.