லுக்மான் (அலை) அவர்களின் வரலாறு என்றவுடன் சற்றென்று நம் நினைவிற்கு வருவது அவர்கள் தம் பிள்ளைக்கு கூறிய அறிவுரையே! இவ்வாக்கத்தின் நோக்கமும் அதுவே! இருப்பினும் இத்தலைப்பில் கவனிக்கத் தவறிய ஒன்றுதான் இறைவன் லுக்மான் (அலை) அவர்களுக்குக் கூறிய அறிவுரையாகும். எனவேதான் இதுவரை நாம் லுக்மான் (அலை) அவர்களுக்கு இறைவன் கூறிய அறிவுரை என்ன என்பதனை அறிந்துகொண்டோம்.
இவ்விதழிலிருந்து லுக்மான் (அலை) அவர்கள் தம் மகனுக்குக் கூறிய அறிவுரைகள் என்ன என்பதையும், அதன் மூலம் நமக்குக் கிடைக்கும் பாடங்கள், படிப்பினைகள் என்ன என்பதையும் அறிந்துகொள்வோம், இன்ஷா அல்லாஹ்.
நமக்கு முன்பாக எத்தனையோ நபர்கள், நல்லவர்கள், நபிமார்கள் என ஏராளமானோர் வாழ்ந்து மறைந்தபோதிலும் அத்தனை நபர்களின் வரலாற்றுப் பக்கங்களையும் அல்குர்ஆனில் இடம்பெறச் செய்யவில்லை இறைவன். மாறாக, முத்தாய்ப்பாகச் சிலரின் வாழ்க்கை வரலாற்றை மட்டுமே இறுதி சமூகத்திற்கு அறிவுரையாக இறைவன் நினைவுபடுத்துகிறான். அவ்வாறு கூறப்பட்ட வரலாறுகளில் ஒன்றுதான் லுக்மான் (அலை) அவர்களின் வரலாறு.
நமக்கு முன்பாக வாழ்ந்த லுக்மான் (அலை) அவர்களின் வாழ்க்கை வரலாற்றை முஹம்மது நபி (ஸல்) அவர்கள் உட்பட, உலகம் அழியும் நாள்வரை உள்ள ஒவ்வொரு மக்களும் அறிந்து கொள்ளவேண்டும், அதற்குச் செயல் வடிவம் கொடுக்க வேண்டும் என்பதற்காகவே அவர்களின் வரலாற்றை முன்மாதிரியாக முன்னிறுத்துகின்றான் இறைவன்.
லுக்மான் (அலை) அவர்களின் வரலாற்றை இறைவன் நமக்கு எடுத்துரைப்பதற்கு மிக முக்கிய காரணியாக இருப்பது, அவர்கள் தம் மகனுக்குக் கூறிய அறிவுரை என்னும் அழைப்பு பணியே அடிப்படையாகும்.
பெற்றோர் தம் பிள்ளைகளிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதையும், அவர்களுக்கு எதையெல்லாம் அறிவுரை கூற வேண்டும் என்பதையும் இன்னும் நமது வாழ்வில் நாம் சீர்படுத்திக் கொள்ள வேண்டிய காரியங்கள் யாவை என்பதனையும் இவ்வரலாறு நமக்கு உணர்த்துகின்றது. லுக்மான் (அலை) அவர்களின் அறிவுரைகள் என்ன? இன்னும் அவர்கள் அறிவுரையில் கையாண்ட அணுகுமுறைகள் என்ன என்பதை நாம் ஆராய்வோம்.
இறைவன் நாடியோருக்குக் குழந்தை
முதலில் குழந்தை பாக்கியத்தைப் பற்றி பார்த்து விடுவோம்.
உலகில், மனிதர்களுக்கு மிகப்பெரிய அருட்கொடைகளில் ஒன்றாகப் பிள்ளை பாக்கியம் இருக்கிறது. மனிதர்கள் தமது வாழ்வின் அர்த்தமாகப் பிள்ளை பாக்கியத்தைத் தான் கருதுகின்றனர். நமது வாழ்க்கை நம்மோடு முடிவடையாமல் வாழையடி வாழையாகத் தொடர்ந்து கொண்டே இருப்பதற்கும், நமது வாழ்க்கைக்கு ஒரு திருப்புமுனையாக இருப்பதற்கும் முக்கியக் காரணம் பிள்ளை பாக்கியம் தான். இந்நிலையில் ஒருவருக்குப் பிள்ளை இல்லையெனில் அவர் தன் வாழ்வையே அர்த்தமற்றதாக நினைக்கிறார். இந்த அளவிற்கு ஏக்கத்துடன் பார்க்கப்படும் இவ்வருட்கொடையை அனைவருக்கும் வழங்குவதில்லை என்றே இறைவன் கூறுகிறான்.
வானங்கள், பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அவன், தான் நாடியதைப் படைக்கிறான். தான் நாடியோருக்குப் பெண் (பிள்ளை)களைக் கொடுக்கிறான். தான் நாடியோருக்கு ஆண் (பிள்ளை)களைக் கொடுக்கிறான். அல்லது ஆண் (பிள்ளை)களையும், பெண் (பிள்ளை)களையும் சேர்த்தே கொடுக்கிறான். தான் நாடியோரை மலடாகவும் ஆக்கி விடுகிறான். அவன் நன்கறிந்தவன்; ஆற்றல் மிக்கவன்.
அல்குர்ஆன் – 42:49,50
இறைவன் தான் நாடியோருக்குப் பிள்ளைகளைக் கொடுத்து சோதிக்கிறான். இன்னும் சிலருக்குப் பிள்ளைகளைக் கொடுக்காமல் சோதிக்கிறான். இந்த சோதனைகளில் அதிகமானவர்கள் தோல்வியைத் தான் தழுவுகின்றனர். பலருக்குப் பிள்ளைகள் இருந்தும் அவர்களை மார்க்கம் காட்டித்தந்த அடிப்படையில் வளர்க்கத் தவறிவிடுகின்றனர். இதன் விளைவு பிள்ளைகள் இருந்தும் அந்தப் பிள்ளைகள் பெற்றோர்களுக்கு உதவியாகவோ, உறுதுணையாகவோ இன்னும் மார்க்கப் பற்றுள்ளவர்களாகவோ இல்லாமல் பொறுப்பற்ற பிள்ளைகளாக மாறிவிடுகின்றனர். மார்க்கப் பற்றற்றவர்களாகவும், பெற்றோர்களைப் பேணி, பாதுகாத்துப் பராமரிக்காமல் பொறுப்பற்றவர்களாகவும் தங்களின் பிள்ளைகள் இருப்பதை நினைத்து, இப்படிப்பட்ட பிள்ளையை நான் ஏன் பெற்றெடுத்தேன்? என்ற சிந்தனைக்கு வருமளவிற்கு சில பெற்றோர்களின் நிலையுள்ளது.
ஏனெனில் பிள்ளைகள் இருந்தும் அரவணைக்க ஆளில்லாமல் அனாதைகளாக இருக்கும் தாய், தந்தை ஏராளம். அதேபோன்று எத்தனையோ பெற்றோர்கள் நன்மக்களாக, நற்குணமுடையவர்களாக இருந்தபோதும் அவர்களின் பிள்ளைகள் நற்குணமுள்ளவர்களாகவோ, நல்லவர்களாகவோ இருப்பதில்லை. மாறாக, பெற்றோரின் பெயரையும் சேர்த்து இவர்கள் நாசம் செய்துவிடுகின்றனர். இதனால்தான் பல பெற்றோர்கள், இவர்தாம் தனது பிள்ளை என பிறரிடம் பகிர்வதற்கே வெட்கப்பட்டு, அவமானமாக நினைக்கும் அவலத்திற்கு ஆளாகிவிடுகின்றனர். பிள்ளைகள் என்றாலே தொல்லைகள் என்ற அளவிற்கு நமது சமூகத்தின் நிலைமை தலைகீழாக மாறியுள்ளது என்றால் அது மிகையாகாது.
இதுபோன்ற தீய பிள்ளைகளுக்குப் பெற்றோராக இருப்பதில் நபிமார்களும் விதிவிலக்கல்ல. உதாரணமாக நூஹ் நபியின் மகனை எடுத்துக் கொள்ளலாம்.
பிள்ளைகள் இருப்பதினாலேயே பெற்றோர் பல சிரமத்திற்கு உள்ளாகும் நிகழ்வுகளையும் கண்கூடாகவே பார்க்கின்றோம். அந்த அளவிற்கு சமூகத்தின் நிலமையுள்ளது. இதற்கு முக்கியக் காரணம் நமது பிள்ளைகளுக்கு மார்க்கப் போதனைகளை சொல்லிக் கொடுத்து வளர்க்கத் தவறியதே! மார்க்கம் என்ற பாதுகாப்பு அரணில் பிள்ளைகள் வளர்க்கப் படாததால் இன்று அவர்களின் வாழ்க்கை முறை கேள்விக்குறியாகி விட்டது என்பதை ஒவ்வொருவரும் பெற்றோரும் உணர்ந்து கொள்ளவேண்டும்.
ஒவ்வொருவரும் பொறுப்பாளியே!
இந்நிலையில் நமது பிள்ளைகளை நல்ல முறையில், மார்க்க சிந்தனையில் வார்த்தெடுப்பதும், வளர்த்தெடுப்பதும் நம்மீது கடமையாகும். இந்தக் கடமையை மறந்த பெற்றோர்கள்தான் அதிகமாவர். இருப்பினும் நாம் இவர்களில் ஒருவராக இல்லாமல் நமது பிள்ளைகளை நல்ல முறையில் சிறந்தவர்களாக, சிந்தனையாளராக இன்னும் சுவர்க்கத்திற்குரியவர்களாக உருவாக்க கடமைப்பட்டுள்ளோம்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளியே! நீங்கள் ஒவ்வொருவரும் அவரவர் பொறுப்பு குறித்து (மறுமையில்) விசாரிக்கப்படுவீர்கள். (ஆட்சித்) தலைவரும் பொறுப்பாளரே! ஆண்மக(னான குடும்பத் தலைவ)னும் தன் மனைவி மக்களின் பொறுப்பாளன் ஆவான். பெண் (மனைவி), தன் கணவனின் வீட்டுக்கும் அவனுடைய குழந்தைகளுக்கும் பொறுப்பாளியாவாள். ஆக, நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளரே! நீங்கள் ஒவ்வொருவரும் தத்தமது பொறுப்பு குறித்து விசாரிக்கப்படுவீர்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: புகாரி (5200)
இறைநம்பிக்கை கொண்டோரே! உங்களையும், உங்கள் குடும்பத்தாரையும் நரகத்தை விட்டும் பாதுகாத்துக் கொள்ளுங்கள்!
அல்குர்ஆன் – 66:6
எனவேதான் தமது பிள்ளை நல்ல பிள்ளையாக வளரவேண்டும், மறுமையில் நரக நெருப்பிலிருந்து அவர்களைக் காக்க வேண்டும் என்ற நற்சிந்தனையில் லுக்மான் (அலை) அவர்கள் தம் பிள்ளைக்கு அற்புதமான பல அறிவுரைகளை வழங்குகிறார்கள்.
அன்பெனும் ஆயுதம்
பிள்ளைகளை நல்ல முறையில் வளர்த்தெடுப்பதற்கு அடி என்னும் ஆயுதத்தைவிட அன்பு என்னும் ஆயுதமே மிக வலிமையானதாகும். ஆனால் நம்மில் அதிகமானவர்கள் அன்பைவிட அடியைத் தான் தேர்வு செய்கின்றனர். உண்மையில் பிள்ளைகளை நாம் அடிப்பதால் நம்மீது அவர்களுக்கு ஒருவித பயம் ஏற்பட்டு, அந்நேரத்தில் நாம் சொல்லும் காரியத்தை அவர்கள் செய்யலாம். ஆனால் இது வெறும் தற்காலிகத் தீர்வே; நிரந்தரத் தீர்வல்ல. நாம் இல்லாத நேரத்திலோ அல்லது அவர்கள் வளர்ந்து பெரியவர்களான பின்போ அடி என்னும் ஆயுதம் அவர்களுக்கு அறவே மாற்றத்தை ஏற்படுத்தவில்லை என்பதை அறியமுடியும்.
ஆனால் அன்பால் அவர்களை நாம் வார்த்தெடுக்கும்போது அவர்களின் உள்ளத்தில் அது ஆழமாய் பதிந்து, அவர்களைப் பக்குவப்படுத்தி அனைத்து நேரத்திலும் அவர்களை உறுதியாக வைத்திருக்கும். ஆனால் பலர் இதை ஏற்பதில்லை. அவர்கள் மறுத்தபோதிலும் இதுதான் உண்மையும் கூட என்பதை வரலாறும், வருங்காலமும் நிச்சயமாக நமக்கு உணர்த்தும் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை. மேலும் நபி (ஸல்) அவர்கள் தமது வாழ்நாளில் ஒரு தடவை கூட அவர்களின் மனைவி, மக்கள் என யாரையும் அடிக்காத நிலையில் அவர்கள் சிறந்தவர்களாக இருப்பதிலிருந்தும் இதனை நாம் புரிந்து கொள்ளலாம்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது பணியாளரையும், மனைவியையும், இன்னும் யாரையும் தமது கரத்தால் ஒருபோதும் அடித்ததில்லை. அல்லாஹ்வின் பாதையில் போரிடும் போதே தவிர.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: அஹ்மத் (25756)
அதேபோன்று அன்பு என்ற பெயரில் சிலர் அளவு கடந்து செல்வதையும் மறுப்பதற்கில்லை. ஏனெனில் சில பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகள் செய்யும் தவறுகளைச் சுட்டிக் காட்டுவதுமில்லை, மார்க்கத்தைக் கடைப்பிடிக்கக் கற்றுக் கொடுப்பதுமில்லை. இதுபோன்ற அணுகுமுறையும் தவறானது என்பதை நாம் ஒப்புக் கொண்டே ஆகவேண்டும். இருப்பினும் மார்க்கம் காட்டித்தந்த அடிப்படையில் நம் குழந்தைகளை அன்பால் வழிநடத்தக் கடமைப்பட்டுள்ளோம்.
எனவேதான் லுக்மான் (அலை) அவர்களும் தம் பிள்ளைக்கு அறிவுரை கூறும் முன் அன்பு என்னும் இந்த அழகிய வழிமுறையைக் கையாண்டு அறிவுரை வழங்கினார்கள். அந்த அன்பு என்ன என்பதைப் பார்ப்போம்.
என் அருமை மகனே!
லுக்மான் (அலை) அவர்கள் தன் மகனுக்கு அறிவுரை கூறும் முன் அவர்களை அழைக்கும் அழகான வார்த்தையிலிருந்து நம் அனைவருக்குமான அறிவுரையும் ஆரம்பமாகின்றது.
லுக்மான், தனது மகனுக்கு நற்போதனை செய்யும்போது, “என் அருமை மகனே! நீ அல்லாஹ்வுக்கு இணைவைக்காதே! இணை வைத்தல் மாபெரும் அநியாயமாகும்” என்று கூறியதை நினைவூட்டுவீராக! (அல்குர்ஆன் 31:13)
லுக்மான் (அலை) அவர்கள் தன் மகனுக்கு அறிவுரை கூற அழைக்கும் போது பயன்படுத்தும் வார்த்தை பிரயோகத்தை உற்று கவனியுங்கள்!
(يابُنَيَّ)
என் அருமை மகனே! மீண்டும் கவனியுங்கள்!
ஸுப்ஹானல்லாஹ்! என்ன மாதிரியான வார்த்தை.
(يابُنَيَّ)
என்பது என் அருமை மகனே! சின்ன மகனே! செல்ல மகனே! அன்பு மகனே! என பாசமாக அழைப்பதற்கு உபயோகிக்கும் வார்த்தையாகும். பிள்ளையின் மீது அவர்களுக்குண்டான பாசத்தை இவ்வார்த்தையைக் கொண்டே வர்ணிக்கிறார்கள். இவ்வாறு நாம் அவர்களை அழைப்பதால் இதுவே நமது அறிவுரை அவர்களிடம் எடுபட ஏதுவாக இருக்கும். இவ்வாறு இல்லாமல் மோசமான வார்த்தைகளால் அவர்களைக் கண்டித்தால், காயப்படுத்தினால் நாம் சொல்லும் அறிவுரை எதுவாயினும், அதை அவர்கள் ஏறெடுத்துப் பார்க்கவோ, செவி கொடுத்துக் கேட்கவோ மாட்டார்கள். இதனைத் தெளிவாக முதலில் நாம் புரிந்து கொள்ளவேண்டும்.
ஆனால், இன்றைய பெற்றோர்களோ தங்கள் பிள்ளைகளை அழைப்பதற்குப் பயன்படுத்தும் வார்த்தைகளை வாய்களால் கூற நா கூசுகின்றது. அவ்வாறுதான் பிள்ளைகள் பெற்றோரையும், பெற்றோர்கள் பிள்ளைகளையும் அழைக்கின்றனர். பிள்ளைகளிடம் எவ்வாறு பேசவேண்டும், பெற்றோர்களிடம் எவ்வாறு பேச வேண்டும் என்ற நாகரீகம் கூட நாளடைவில் நலிவடைந்து விட்டது.
எனவேதான் இறைவன் இவ்வரலாற்றின் மூலம் உன்னதமான உறவுகளை உயிரோட்டமாக்க பாசத்திற்கான வார்த்தை பயன்பாட்டை நமக்கு உபதேசிக்கிறான். எனவே இதுபோன்ற வழிமுறையை ஒரு முறைதான் கையாண்டு பாருங்களேன்! அதனால் ஏற்படும் மாற்றத்தை மனநிறைவோடு நம் கண்முன்னே காணக்கூடும். அதற்கு இந்த வழிமுறை நிச்சயம் வழிவகை செய்யும் இன்ஷா அல்லாஹ்.
என் அருமை மகனே! செல்ல மகனே! என்பது போன்ற வார்த்தைகளால் நாம் நம் பிள்ளைகளை அழைக்கும்போதே அவர்களுக்கும், நமக்கும் மத்தியில் ஓர் அற்புதமான பாசப்பிணைப்பு ஏற்பட்டுவிடும். உங்கள் அருகில் இருக்கும் பிள்ளைகளை இவ்வாறு ஒருமுறை அழைத்துப் பாருங்கள்!
ஆனால், வழமைக்கு மாற்றமாக முதல் முறையாக பிள்ளைகளை இவ்வாறு நாம் அழைக்கும்போது முதலில் நம்மீது வினோதப் பார்வை விழத்தான் செய்யும். இது யதார்த்தமே! இருப்பினும் இப்பழக்கம் வழக்கமாக மாறும்போது மாற்றத்திற்கான மனம் மலரும். இம்மாதிரியான வார்தைகள் நமது பாசத்தின் வெளிப்பாடேயாகும்.
பலர் பிள்ளைகள் மீது பாசம் வைத்திருந்தும் அவற்றை வெளிப்படுத்தாமல் தமது உள்ளத்திற்குள் பூட்டி வைத்துக் கொள்கின்றனர். இதனால் அவர்களுக்கு பாசமில்லை என்று பொருளல்ல! மாறாக அவற்றை வெளிப்படுத்தவில்லை என்பதே உண்மை. ஆனால் இதுபோன்ற வார்த்தைகளை நாம் பயன்படுத்தும்போது அது அவர்களின் உள்ளத்தில் ஊடுருவி நமது சொல்லுக்கு நிச்சயமாக ஓர் தாக்கத்தையும் இதனால் பல மாற்றத்தையும் ஏற்படுத்திவிடும். எனவே தான் நபிகளார் அவர்களும் தமது பிள்ளையிடம் கிடைக்கும் விதங்களிலெல்லாம் பாச மழையை பொழிந்தார்கள். அவர்கள் அன்பை வெளிப்படுத்த ஒருபோதும் தவறியதில்லை, தயங்கியதுமில்லை.
என் அன்பு மகளே!
ஆட்சித் தலைவர், ஆன்மீகத் தலைவர், மனிதகுல முன்னோடியான முஹம்மது நபி (ஸல்) அவர்கள் தமது பாச மகள் ஃபாத்திமா (ரலி) அவர்களை அழைக்கும் அழகைத்தான் கொஞ்சம் பாருங்கள்..
…ஃபாத்திமா (ரலி), நபி (ஸல்) அவர்களிடம் பேசினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “என் அன்பு மகளே! நான் நேசிப்பதை நீயும் நேசிக்கவில்லையா?” என்று கேட்டார்கள். (ஹதீஸின் ஒரு பகுதி)
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி (2581)
அல்லாஹ்வின் தூதரே இவ்வாறு இருக்கும் போது நாம் ஏன் நமது நிலையை மாற்றிக்கொள்ளக்கூடாது. நமது பிள்ளைகள் மீது அதிக அன்பு செலுத்த அருகதையானவர்களாக நம்மை விட வேறுயார் இருக்க முடியும்? நாம் நமது பிள்ளைகள் மீதே அன்பு காட்டவில்லையெனில் வேறு யார்மீது தான் அன்பு காட்டப் போகின்றோம் என்பதனை சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம். எனவே ஆசையோடும், அன்போடும் பெற்றெடுத்த நமது பாசப் பிள்ளைகளின் மீது அன்புகாட்ட இனியும் அலட்சியம் வேண்டவே வேண்டாம்.
பிள்ளைகளின் மீது அண்ணலாரின் அன்பு
பெற்ற பிள்ளைகள் மீது அதிகமாக அன்பு மழையையும், பாச அலையையும் பரிமாறிக் கொள்ள வேண்டும் என்பதற்கேற்ப நபியவர்கள் வெறுமனே வார்த்தைகளால் மட்டும் தனது அன்பை வெளிப்படுத்தவில்லை. தமது சொல்லிற்கேற்ப செயலாற்றவும் செய்தார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹஸன் பின் அலீயை முத்தமிட்டார்கள். அப்போது அவர்களுக்கு அருகில் அமர்ந்து கொண்டிருந்த அக்ரஃ பின் ஹாபிஸ் அத்தமீமி (ரலி), “எனக்குப் பத்து குழந்தைகள் இருக்கின்றன. அவர்களில் ஒருவரைக் கூட நான் முத்தமிட்டதில்லை” என்றார். அவரை ஏறெடுத்துப் பார்த்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அன்பு காட்டாதவர் அன்பு காட்டப்பட மாட்டார்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 5997
நபி (ஸல்) அவர்கள் தங்களின் தோளின் மீது (சிறுமி) உமாமா பின்த் அபில் ஆஸை அமர்த்திய வண்ணம் எங்களிடையே வந்து அப்படியே (எங்களுக்க இமாமாக நின்று) தொழுகை நடத்தினார்கள். அவர்கள் ருகூஉ செய்யும்போது உமாமாவைக் கீழிறக்கி விட்டார்கள். (சஜ்தாலிருந்து நிலைக்கு) உயரும்போது அவரை மீண்டும் (தோளில்) ஏற்றினார்கள்.
அறிவிப்பவர்: அபூகத்தாதா (ரலி)
நூல்: புகாரி 5996
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் (சிறுவனாக இருந்த) என்னைப் பிடித்துத் தம் ஒரு தொடையின் மீதும் (தம் சொந்தப் பேரரான) ஹஸன் இப்னு அலீ (ரலி) அவர்களைப் பிடித்து தம் இன்னொரு தொடையின் மீதும் அமர்த்திக்கொண்டு பிறகு எங்கள் இருவரையும் கட்டியணைத்தவாறு, ‘இறைவா! இவர்கள் இருவர் மீதும் நான் அன்பு செலுத்துகிறேன். நீயும் இவர்களின் மீது அன்பு செலுத்துவாயாக!’ என்றார்கள்.
அறிவிப்பவர்: உஸாமா (ரலி), நூல்: புகாரி 6003
எனவே நாமும் இதுபோன்று நமது பிள்ளைகள் மீது அன்பு காட்ட முன்வரவேண்டும். இதன்முலம் கல் மனம்கூட கரைந்துபோய்விடும்.
பணியாளரின் மீதுள்ள பாசம்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது பிள்ளைகள் மீது மாத்திரமின்றி ஏனைய பிள்ளைகளின் மீதும் அன்பை வெளிப்படுத்தினார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “என் அருமை மகனே!” என்று (அனஸ் பின் மாலிக் ஆகிய) என்னை அழைத்தார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: முஸ்லிம் (4349)
நமக்கு கீழ் வேலை பார்க்கும் நமது பணியாட்களை நம்மில் பலர் மதிப்பதற்கே முன்வருவதில்லை என்னும்போது நம்மைவிட வயதில் குறைந்தவர்களின் நிலையைப்பற்றி சொல்லவேண்டியதே இல்லை. இவ்வாறு நமது நிலை இருக்க நமது முன்னோடி முஹம்மது நபி (ஸல்) அவர்களோ தமக்குக் கீழே வேலை பார்க்கும் அனஸ் (ரலி) அவர்களை “என் அருமை மகனே!” என்று ஆசையோடு அழைக்கிறார்கள் என்றால் இதுதான் உண்மையிலேயே அன்பின் வெளிப்பாடாக இருக்கமுடியும். இந்த வார்த்தைகளின் மூலம் அன்பை வெளிப்படுத்துவதால் நம்மீது அவர்களுக்கு ஒரு நன்மதிப்பு ஏற்படுவதோடு அவர்களை நெறிப்படுத்தவும் உதவியாக இவை இருக்கின்றது. இதுவே இவ்வார்த்தையின் வெற்றியாகும்.
நம் பிள்ளைகளிடம் மட்டுமின்றி அனைவர்களிடமும் அன்பாகவே நாம் பேசக் கடமைப்பட்டுள்ளோம். இந்த நாகரீகத்தைத் தான் நமது மார்க்கமும் நமக்குப் போதிக்கின்றது. லுக்மான் (அலை) அவர்கள், முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மாத்திரமின்றி மகத்தான பலரிடமும் இந்த அழகிய நடைமுறையை நாம் காணலாம்.
ஆதம் நபி
ஆகாயத்தில் அண்ணலாரிடம் அன்பைப் பரிமாரிய ஆதம் நபியவர்கள்.
அந்த முதல் வானத்தில் நபி (ஸல்) அவர்கள் (ஆதி மனிதர்) ஆதம் (அலை) அவர்களைக் கண்டார்கள். அப்போது ஜிப்ரீல் (அலை) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம், ‘இவர்தாம் உங்கள் தந்தை. இவருக்கு நீங்கள் சலாம் (முகமன்) கூறுங்கள்’ என்றார்கள். அவ்வாறே அவருக்கு நபி (ஸல்) அவர்கள் முகமன் கூற, அதற்கு ஆதம் (அலை) அவர்கள் பதில் (முகமன்) சொல்லிவிட்டு, ‘அருமை மகனே! வருக! வருக! நீரே நல்ல புதல்வர். (உங்கள் வரவிற்கு) வாழ்த்துக்கள்’ என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி), நூல்: புகாரி 7517
நூஹ் நபி
பொழியும் மழையில், பாதிக்கப்படும் மகனிடம் பாசமழையைப் பொழியும் நூஹ் நபி.
அக்கப்பல் மலைகளைப் போன்ற அலைகளில் அவர்களைக் கொண்டு சென்றது. ஒதுங்கிய இடத்திலிருந்த தனது மகனை நூஹ் அழைத்து, “என் அருமை மகனே! எங்களுடன் ஏறிக் கொள்! இறைமறுப்பாளர்களுடன் நீ ஆகிவிடாதே!” என்றார். (அல்குர்ஆன் 11:42)
இப்ராஹீம் நபி
இன்னலான நேரத்தில் இப்ராஹீம் நபியின் இனிய வார்த்தை.
அவருடன் சேர்ந்து உழைக்கும் பருவத்தை அவர் அடைந்தபோது “என் அருமை மகனே! நான் உன்னை அறுப்பதாகக் கனவில் கண்டேன். நீ என்ன நினைக்கிறாய் என்பதை யோசித்துக் கொள்!” என்று கூறினார். (அல்குர்ஆன் 37:102)
யஃகூப் நபி
மகன் ஒரு கனவு கண்டு கூறியபோது, தந்தையின் கனிவான வார்த்தை.
“என் அருமை மகனே! உன் கனவை உனது சகோதரர்களிடம் கூறி விடாதே! அப்போது அவர்கள் உனக்கு எதிராகப் பெரும் சதி செய்வார்கள். (அல்குர்ஆன் 12:5)
என் அருமை மகனே! என்ற அருமையான வார்த்தையை அதிகமான நன்மக்கள் பயன்படுத்தியுள்ளனர். எனவே நாமும் குழந்தை வளர்ப்பில் வெற்றி காண, அறிவுரைகளை அர்த்தமுள்ளதாக்க இதுபோன்ற அழகிய வார்த்தை பயன்பாட்டைக் கற்றுக் கொள்ள வேண்டும். இந்தப் பாடத்தைக் கற்றுத்தரும் லுக்மான் (அலை) அவர்களின் இந்த அணுகுமுறையை அனுதினமும் நாம் நமது வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டும்.
தொடரும் இன்ஷா அல்லாஹ்…