பெருநாள் தொழுகை நேரம்

சூரியன் உதயமானது முதல் நடு உச்சிக்கு வரும் வரையுள்ள இடைப்பட்ட நேரத்தில் பெருநாள் தொழுகையைத் தொழுது கொள்ளலாம். இருப்பினும், சூரிய உதயமானவுடன்  தாமதிக்காகமல் தொழுவது தான் சிறந்தது ஆகும்.

பெருநாள் தொழுகையின் ஆரம்ப நேரம்

‘இன்றைய தினத்தில் நாம் முதலில் தொழுகையை ஆரம்பிப்போம். அதன் பின் அறுத்துப் பலியிடுவோம். யார் இவ்வாறு செய்கின்றாரோ அவர் நமது வழிமுறையைப் பேணியவராவார்’ என்று அவர்கள் தமது சொற்பொழிவில் குறிப்பிட்டதை நான் செவியுற்றேன்.

அறிவிப்பவர்: பரா (ரலி)

நூல்கள்: புகாரி (951), முஸ்லிம் (3695)

பெருநாள் தினத்தில் முதல் வேளையாக பெருநாள் தொழவேண்டும் என்று நபிகளார் வலியுறுத்தியுள்ளார்கள்.

பெருநாள் தொழுகையின் இறுதி நேரம்

பெருநாள் தினத்தில் ஆரம்ப நேரம் சூரியன் உதித்தவுடன் என்று நபிமொழி சொல்கிறது. கடைசி நேரம் எது என்பதை பின்வரும் நபிமொழியிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

ரமலானுடைய கடைசி நாள் தொடர்பாக மக்கள் கருத்து வேறுபாடு கொண்டார்கள். இரண்டு கிராமவாசிகள் வந்து ‘‘அல்லாஹ்வின் மீது ஆணையாக நேற்று மாலை நாங்கள் இருவரும் பிறை பார்த்தோம்’’ என்று நபி (ஸல்) அவர்களிடம் சாட்சி சொன்னார்கள். நபி (ஸல்) அவர்கள் மக்களை நோன்பை விடுமாறும் காலையில் அவர்களுடைய தொழும் திடலிற்குச் செல்லுமாறும் உத்தரவிட்டார்கள்.

அறிவிப்பவர்: சில நபித்தோழர்களிடமிருந்து

ரிப்யீ பின் ஹிராஷ்

நூல்: அபூதாவுத் (2341)

ஒரு வாகனக் கூட்டம் நபி (ஸல்) அவர்களிடம் வந்து தாங்கள் நேற்று பிறை பார்த்ததாக சாட்சி சொன்றார்கள். நபியவர்கள் அவர்களை நோன்பு விடுமாறும் விடிந்ததும் காலையில் அவர்கள் தங்களின் தொழும் திடலுக்குச் செல்ல வேண்டும் என்றும் உத்தரவிட்டார்கள் என்று ஒரு நபித்தோழர்களில் ஒருவர் கூறினார்.

அறிப்பவர்: உமைர் பின் அனஸ்

நூல்: அபூதாவுத் (977)

மேலே நாம் குறிப்பிட்டுள்ள ஹதீஸ்களில் நபி (ஸல்) அவர்கள் பெருநாள் தொழுகையை காலையில் தொழுமாறு மக்களுக்குக் கட்டளையிட்டார்கள் என்று இடம் பெற்றுள்ளது.

காலை என்று நாம் மொழி பெயர்த்துள்ள வார்த்தைக்கு அரபி மூலத்தில்

يغدو

(யக்தூ) என்ற வார்த்தை இடம் பெற்றுள்ளது. இது

غدا

(கதா) என்ற வார்த்தையின் எதிர்காலச் சொல் ஆகும். இதன் மூலச் சொல்

غدو

(குதுவ்வுன்) என்பதாகும்.

இந்த அரபிச் சொல்லுக்கு என்ன பொருள்? இந்தச் சொல்லை அன்றைய மக்கள் எப்படி விளங்கி வைத்திருந்தார்கள் என்பதை அரபி மொழி அறிஞர்களின் விளக்கத்தில் இருந்துதான் விளங்கிக் கொள்ளமுடியும்.

ஹாஃபிழ் இப்னு ஹஜர் அவர்கள் புகாரியின் விரிவுரையான தம்முடைய ஃபத்ஹூல் பாரி என்ற நூலில் இந்த ‘‘அல்குதுவ்வு” என்ற வார்த்தையின் பொருளைத் தெளிவுபடுத்தியுள்ளார்கள்.

والأصل في الغدو المضى من بكرة النهار

அல்குதுவ்வு என்பதின் அசலாகிறது பகலின் ஆரம்பத்தில் செல்வதாகும்.

நூல்: ஃபத்ஹூல் பாரி, பாகம்: 2, பக்கம்: 148

والغدو من أوله إلى الزوال

அல்குதுவ்வு என்பது பகலின் ஆரம்பத்திலிருந்து சூரியன் உச்சி சாயும் வரையிலாகும்.

நூல்: ஃபத்ஹுல் பாரி, பாகம்: 2, பக்கம்: 369

والغدوة بالفتح المرة الواحدة من الغدو وهو الخروج في أي وقت كان من أول النهار إلى انتصافه

‘‘அல்கத்வத்து” என்றால் காலையில் ஒரு தடவை செல்லுதல் என்று பொருளாகும். இதன் மூலச் சொல் ‘‘அல்குதுவ்வு” என்பதாகும். பகலின் ஆரம்பத்திலிருந்து அதன் பாதி (அதாவது உச்சி நேரம்) வரை எந்த நேரத்தில் வெளியில் சென்றாலும் அது ‘‘அல்குதுவ்வு” என்பதின் பொருளாகும்.

நூல்: ஃபத்ஹூல் பாரி, பாகம்: 6, பக்கம்: 14

‘‘அல்குதுவ்வு” என்பது பகலின் ஆரம்பத்திலிருந்து, அதாவது ஃபஜ்ரிலிருந்து சூரியன் உச்சி அடையும் வரை உள்ள நேரத்தைக் குறிப்பதாகும் என்பதை மேற்கண்ட இப்னு ஹஜர் அவர்களின் விளக்கத்திலிருந்து தெளிவாக அறிந்து கொள்ளலாம். ஃபஜ்ரு தொழுத பிறகு சூரியன் உதிக்கும் வரை எந்தத் தொழுகையும் தொழக் கூடாதென நபியவர்கள் தடுத்துள்ளார்கள்.

எனவே பெருநாள் தொழுகையின் நேரம் சூரியன் உதித்த பிறகு சூரியன் நடு உச்சியை அடையும் வரையிலாகும் என்பதை அறிய முடிகிறது. சூரியன் நடு உச்சியை அடைவதற்கு முன்பு வரை பெருநாள் தொழுகையை நிறைவேற்றிக் கொள்ளலாம். என்றாலும் பகலின் ஆரம்ப நேரத்தில் தொழுவதுதான் சிறந்ததும் நபிவழியுமாகும்.

நபி (ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாளிலும், ஹஜ்ஜுப் பெருநாளிலும் (பள்ளிக்குச் செல்லாமல்) முஸல்லா என்ற திடலுக்குச் செல்பவர்களாக இருந்தனர். அவர்களது காரியங்களில் முதல் காரியமாகத் தொழுகையைத் துவக்குவார்கள்.

அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி)

நூல்கள்: புகாரி (956), முஸ்லிம் (1612)

எனினும் அரிதான, முடியாத சந்தர்ப்பங்களில் சூரியன் உச்சியை அடைவதற்கு முன்பு வரை தாமதித்துக் கொள்ளலாம். பெருநாள் தினத்தன்று சூரியன் உச்சியை அடைவதற்குள் தொழ முடியாத அளவுக்குத் தாமதமாக பிறைத் தகவல் கிடைத்தால் அன்று நோன்பை விட்டுவிட்டு, மறுநாள் காலையில் பெருநாள் தொழுகை தொழுது கொள்ளலாம் என்பதற்கு மேலுள்ள வாகனக் கூட்டம் தொடர்பான செய்தி ஆதாரமாக உள்ளது.