பயனற்ற நோட்டுகளும் மார்க்க போதனைகளும்

மக்கள் விரோத பாஜக அரசு, மத்திய ஆட்சியில் அமர்ந்த நாள் முதல் தொடர்ந்து விதவிதமான பிரச்சனைகளை, தொல்லைகளை மக்களுக்குக் கொடுத்து வருகிறது. குறிப்பாக, சில நாட்களுக்கு முன்னால் ஐநூறு, ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்ததன் விளைவு, ஒட்டுமொத்த நாடே கொந்தளித்து உள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை சீர்குலைந்து இருக்கிறது. உயிரிழப்புகள், பொருட்சேதங்கள், தொழில்கள் நலிவு என்றெல்லாம் சமூகமே பாழ்பட்டு கிடக்கிறது. இச்சூழலில் நிகழும் நாட்டு நடப்புகள் மூலம் முஃமின்கள் பெறவேண்டிய மார்க்க போதனைகள் ஏராளம் உள்ளன. அவற்றை அறிவதே இக்கட்டுரையின் நோக்கம்.

பரிதவிக்கும் மக்கள் கூட்டம்

மத்திய அரசின் முட்டாள்தனமான அறிவிப்பு வெளியானவுடன் எங்கும் பரபரப்பு தொற்றிக் கொண்டது.  நாடெங்கும் பதறும் மக்கள் கூட்டம். தினசரி வாழ்வியல் தேவையை தீர்த்துக் கொள்ள யாரிடம் உதவி கேட்பது என்று திக்குமுக்காடும் சூழ்நிலை.

இதையெல்லாம் காட்டிலும் மிகவும் பயங்கரமானது மறுமை நாள் என்பதை இந்நேரம் நினைவில் கொள்வோம்.  என்ன ஆகுமோ என்று எல்லோரும் மஹ்ஷர் மைதானத்தில் திசையெங்கும் அலைமோதுவார்கள்; பரிதவிப்பார்கள். இத்தகைய கடுமையான மரணமில்லா மறுமை வாழ்வை ஞாபகப்படுத்திக் கொள்வதற்கான தருணம் இது.

மனிதர்களே! உங்கள் இறைவனை அஞ்சுங்கள்! அந்த நேரத்தின் திடுக்கம் கடுமையான விஷயமாகும். நீங்கள் அதைக் காணும் நாளில் பாலூட்டும் ஒவ்வொருத்தியும்தான் பாலூட்டியதை (குழந்தையை) மறந்து விடுவாள். ஒவ்வொரு கர்ப்பிணியும்தன் கருவில் சுமந்ததை ஈன்று விடுவாள். போதை வயப்பட்டோராக மனிதர்களைக் காண்பீர்! அவர்கள் போதை வயப்பட்டோர் அல்லர். மாறாக அல்லாஹ்வின் வேதனை கடுமையானது.

(திருக்குர்ஆன் 22:1,2)

சீக்கிரம் வரவிருக்கும் நாளைப் பற்றி அவர்களுக்கு எச்சரிப்பீராக! அப்போது இதயங்கள் தொண்டைக் குழிகளுக்கு வந்து அதை மென்று விழுங்குவோராக அவர்கள் இருப்பார்கள். அநீதி இழைத்தோருக்கு எந்த நண்பனும்அங்கீகரிக்கப்படும் பரிந்துரையாளனும் இல்லை.

(திருக்குர்ஆன்  40:18)

பயனளிக்க யாரும் இல்லை

சட்டைப் பையில் இருந்தும் பணம் பயன்தராத அவல நிலை இன்று. இருப்பினும், இங்கு எவரேனும் நமக்குப் பொருளாதாரம் கொடுத்து உதவி செய்ய இயலும். ஆனால், மறுமையிலோ யாரும் யாருக்கும் எந்த வகையிலும் உதவி செய்ய முடியாது; பயனளிக்க முடியாது.

இன்னும் ஏன்? மற்றவர்களை மறந்து, தங்களை எப்படியாவது காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்பதில்தான் எல்லோரும் முனைப்புடன் இருப்பார்கள். எனவே, இங்கிருக்கும் போதே ஒவ்வொருவரும் தமது மறுமை வெற்றிக்குரிய சுயமான போதுமான தாயாரிப்புகளைச் செய்து கொள்ள வேண்டும்.

ஒருவர் இன்னொருவருக்கு எந்தப் பயனும் அளிக்க முடியாத நாளை அஞ்சுங்கள்! (அந்நாளில்) எவரிடமிருந்தும் எந்தப் பரிந்துரையும் ஏற்கப்படாது. எவரிடமிருந்தும் எந்த ஈடும் பெற்றுக் கொள்ளப்படாது. அவர்கள் உதவி செய்யப்படவும் மாட்டார்கள்.

(திருக்குர்ஆன் 2:48)

நம்பிக்கை கொண்டோரே! பேரமோநட்போபரிந்துரையோ இல்லாத நாள் வருவதற்கு முன் நாம் உங்களுக்கு வழங்கியவற்றிலிருந்து (நல்வழியில்) செலவிடுங்கள்! (ஏகஇறைவனை) மறுப்போரே அநீதி இழைத்தவர்கள்.

(திருக்குர்ஆன் 2:254)

தப்பிக்க முடியாத விசாரணை

குறிப்பிட்ட அளவுக்கு மேலாக பணத்தை வங்கியில் செலுத்தினால், வெளியே எடுத்துச் சென்றால் அல்லது பரிவர்த்தனை செய்தால் அதற்குரிய ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்; அவை வருவாய்த் துறை, இலஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகளால் சோதிக்கப்படவும் வாய்ப்புண்டு என்றெல்லாம் அறிவிப்பு வெளியானது.

இதனால் பலரும் விழிபிதுங்கி இருக்கிறார்கள். ஏற்கனவே வங்கியில் இருக்கும் பணத்திற்குக்கூட கணக்கு கேட்டால் என்ன செய்வதென்று பயந்து கிடக்கிறார்கள்.

இங்காவது பணம் நமக்கு வந்தவிதம் மட்டுமே விசாரிப்பதாகச் சொல்கிறார்கள். மறுமை நாளிலோ நாம் செல்வத்தைச் சேர்த்த விதம், செலவழித்த விதம் என்று அனைத்தையும் அல்லாஹ் விசாரிப்பான். எனவே, பொருளாதார விஷயத்தில் மார்க்கச் செய்திகளைக் கவனத்தில் கொண்டு நல்முறையில் செயல்பட வேண்டும்.

மண்ணறைகளைச் சந்திக்கும் வரை அதிகமாக (செல்வத்தை)த் தேடுவது உங்கள் கவனத்தைத் திருப்பி விட்டது. அவ்வாறில்லை! அறிவீர்கள். பின்னரும் அவ்வாறில்லை! மீண்டும் அறிவீர்கள். அவ்வாறில்லை! நீங்கள் உறுதியாக அறிவீர்களாயின் நரகத்தைக் காண்பீர்கள். பின்னர் மிக உறுதியாக அதை அறிவீர்கள். பின்னர் அந்நாளில் அருட்கொடை பற்றி விசாரிக்கப்படுவீர்கள்.

(திருக்குர்ஆன் 102:1-8)

நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் சம்பாதித்ததில் தூய்மையானவற்றிலிருந்தும்பூமியிலிருந்து உங்களுக்கு நாம் வெளிப்படுத்தியதிலிருந்தும் (நல்வழியில்) செலவிடுங்கள்! கண்ணை மூடிக் கொண்டே தவிர எதை வாங்கிக் கொள்ள மாட்டீர்களோ அத்தகைய மட்டமான பொருளைச் செலவிட நினைக்காதீர்கள்! அல்லாஹ் தேவைகளற்றவன்புகழுக்குரியவன் என்பதை அறிந்து கொள்ளுங்கள்!

(திருக்குர்ஆன் 2:267)

மறுக்கப்படும் அமல்கள்

தீடீரென நள்ளிரவு முதல் நோட்டுகள் மறுக்கப்படுகின்றன. மக்களின் இயல்பு வாழ்வு தடைபடுகிறது. இந்தப் பணத்தைச் சம்பாதிக்கவும் சேர்த்து வைக்கவும் கொடுத்த உழைப்பு, முயற்சி எல்லாம் வீணாகிவிடுமோ என்கிற விரக்தி மக்களிடம் வியாபித்து விட்டது.

சிறிது யோசித்துப் பாருங்கள்! இன்று இப்படி இருப்பினும், நாளைக்கு நமக்கு வேண்டியதை இனிமேலாவது சம்பாதித்துக் கொள்ள முடியும். அல்லது மாற்று ஏற்பாடு செய்து கொள்ள இயலும். ஆனால், இம்மை எனும் அவகாச வாழ்க்கை முடிந்து மறுமையில் நிற்கும் போது நமது அமல்கள் மறுக்கப்பட்டால் ஏதும் செய்ய முடியாது; எந்த வாய்ப்பும் கிடைக்காது. இதை மனதில் கொண்டு பித்அத்தான காரியங்களை தூக்கி எறியுங்கள்.

நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுங்கள்! இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! உங்கள் செயல்களைப் பாழாக்கி விடாதீர்கள்!

(திருக்குர்ஆன் 47:33)

பயன் தராத நற்காரியங்கள்

தங்களின் தேவைகளை தீர்த்துக் கொள்ளும் வகையில் சிலர் போதுமான பணத்தை வைத்து இருக்கிறார்கள். சிலரோ எந்தவொரு சேமிப்போ பணமோ இல்லாமல் இருக்கிறார்கள். ஆனால், சிலரிடம் பணம் இருந்தும் அதன் பயனை அனுபவிக்க முடியாத நிலையில் அவர்கள் இருக்கிறார்கள்.

இந்த மூன்றாவது நிலையில் இருக்கும் மக்கள், கைக்கு எட்டியும் வாய்க்கு எட்டவில்லையே என்று குமுறல்களைக் கொட்டுகிறார்கள்; உள்ளம் வெதும்புகிறார்கள். இதேபோன்ற நிலை மறுமையில் சிலருக்கு இருக்கும். அதிகளவு நன்மைகளைச் செய்திருந்தும் பிறருக்குத் தீமைகள் செய்ததன் விளைவாக, இருந்தும் இல்லாத நிலையில் சிக்கிக் கொள்வார்கள். இந்நிலையில் மாட்டிக் கொள்ளாத வண்ணம் யாருக்கும் தீங்கிழைக்காமல் விழிப்போடு வாழ வேண்டும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “திவாலாகிப்போனவன் என்றால் யார் என்று உங்களுக்குத் தெரியுமா?’’ என்று கேட்டார்கள். மக்கள், “யாரிடம் வெள்ளிக் காசோ (திர்ஹம்) பொருட்களோ இல்லையோ அவர்தான் எங்களைப் பொறுத்தவரை திவாலானவர்’’ என்று பதிலளித்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “என் சமுதாயத்தாரில் திவாலாகிப் போனவர் ஒருவராவார். அவர் மறுமை நாளில் தொழுகைநோன்புஸகாத் ஆகியவற்றுடன் வருவார். (அதே நேரத்தில்) அவர் ஒருவரைத் திட்டியிருப்பார். ஒருவர்மீது அவதூறு சொல்லியிருப்பார். ஒருவரது பொருளை (முறைகேடாகப்) புசித்திருப்பார். ஒருவரது இரத்தத்தைச் சிந்தியிருப்பார். ஒருவரை அடித்திருப்பார். ஆகவேஅவருடைய நன்மைகளிலிருந்து சில இவருக்குக் கொடுக்கப்படும்இன்னும் சில அவருக்குக் கொடுக்கப்படும். அவருடைய நன்மைகளிலிருந்து எடுத்துக் கொடுப்பதற்குமுன் நன்மைகள் தீர்ந்துவிட்டால், (அவரால் பாதிக்கப்பட்ட) மக்களின் பாவங்களிலிருந்து சில எடுக்கப்பட்டுஇவர்மீது போடப்படும். பிறகு அவர் நரக நெருப்பில் தூக்கியெறியப்படுவார் (அவரே திவாலாகிப் போனவர்)’’ என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம் (5037)

நபிகளாரின் முன்னெச்சரிக்கை

பழைய நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பை ஆதரிப்பவர்கள், எதிர்ப்பவர்கள் என்று எல்லா தரப்பு மக்களின் ஏகோபித்த கருத்து, இதுபற்றி முன்கூட்டியே அறிவித்திருக்கலாம் என்பதாகும். சிலவாரங்களுக்கு முன்பாகவோ அல்லது சில நாட்களுக்கு முன்பாகவோ இவ்வாறு சட்டம் வரப்போவதைத் தெரிந்திருந்தால் சுதாரித்து இருக்கலாம் என பலரும் வருத்தப்படுகிறார்கள்.

எந்தத் துன்பத்திலும் இப்படித்தான் மனிதர்களின் மனநிலை இருக்கும் என்பது படைத்தவனுக்குத் தெரியாமல் இருக்குமா? அதனால் தான், மறுமையில் எந்தெந்த அமல்கள் ஏற்றுக் கொள்ளப்படாது என்று ஏக இறைவன் தமது தூதர் மூலம் ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன்பாகவே நமக்குத் தெளிவுபடுத்திவிட்டான். ஆனாலும் அநேக மக்கள் அவற்றைக் கவனிக்காமல் அலட்சியமாக இருக்கிறார்கள்; மார்க்கத்தில் இல்லாத பொல்லாத காரியங்களைச் செய்து கொண்டிருக்கிறார்கள்.

நம்முடைய இந்த (மார்க்க) விவகாரத்தில் அதில் இல்லாததைப் புதிதாக எவன் உண்டாக்குகின்றானோ அவனுடைய அந்தப் புதுமை நிராகரிக்கப்பட்டதாகும் என நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புகாரி (2697)

நம்முடைய கட்டளையின்றி எவரேனும் அமலைச் செய்தால் அது மறுக்கப்பட்டதாகிவிடும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: முஸ்லிம் (3243)

கொடுத்து உதவுவோம்

பிறருக்கு உதவுவது குறித்து இஸ்லாத்தில் மிகவும் வலியுறுத்தப்பட்டு உள்ளது. அநீதிக்கு உள்ளானவர்கள், பலவீனமானவர்கள், தேவை யுடையவர்கள், பாதிக்கப்பட்டவர்கள் என்று உதவிக்குரிய மக்கள் பலவாறாக இருக்கிறார்கள். தற்போதைய நிலையில் ஒருவருக்கு பயன்படுத்தும் வகையில் பணத்தைக் கொடுத்து உதவுவது, கடனாக கொடுப்பது, மாற்றிக் கொடுப்பது என்பது முன்சென்ற அனைத்து வகையான உதவியையும் செய்த உயர்வைப் பெறும். இதன் மூலம் மறுமையில் அல்லாஹ்வின் அளப்பறிய அன்பும் அருளும் கிடைக்கும்.

ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமின் சகோதரன் ஆவான். அவனுக்கு அநீதியிழைக்கவுமாட்டார்; (பிறரது அநீதிக்கு அவன் ஆளாகும்படி) அவனைக் கைவிட்டுவிடவுமாட்டார். யார் தம் சகோதரனின் தேவையை நிறைவு செய்வதில் ஈடுபட்டிருக்கிறாரோ அவரது தேவையை நிறைவு செய்வதில் அல்லாஹ்வும் ஈடுபட்டிருக்கிறான். யார் ஒரு முஸ்லிமின் ஒரு துன்பத்தை நீக்குகிறாரோ அதற்குப் பகரமாக அவரைவிட்டு அல்லாஹ் மறுமை நாளில் அவருடைய துன்பங்களில் ஒன்றை நீக்குகிறான். யார் ஒரு முஸ்லிமின் குறைகளை மறைக்கிறாரோ அவருடைய குறைகளை மறுமை நாளில் அல்லாஹ்வும் மறைக்கிறான் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)

நூல்: முஸ்லிம் (5036)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஏழு விஷயங்களை(க் கடைப்பிடிக்கும்படி) எங்களுக்குக் கட்டளையிட்டுஏழு விஷயங்களை எங்களுக்குத் தடைசெய்தார்கள். நோயாளியிடம் நலம் விசாரிக்கும் படியும்ஜனாஸாவைப் பின்தொடர்ந்து செல்லும் படியும்தும்மியவ(ர் அல்ஹம்துலில்லாஹ் என்று கூறுகையில் அவ)ருக்கு (யர்ஹமுகல்லாஹ் என) பதில் சொல்லும்படியும், (உன்னை நம்பிச்) சத்தியம் செய்தவர் (அதை) நிறைவேற்ற உதவும்படியும்அநீதியிழைக்கப் பட்டவருக்கு உதவும்படியும், ‘சலாம்’ எனும் முகமனைப் பரப்பும்படியும்விருந்து அழைப்பை ஏற்கும்படியும் எங்களுக்குக் கட்டளையிட்டார்கள். மேலும் (ஆண்கள்) தங்க மோதிரங்களை அணிய வேண்டாமென்றும்வெள்ளிப் பாத்திரங்களைப் பயன்படுத்த வேண்டாமென்றும் மைஸரா’ எனும் பட்டுமெத்தைபட்டு கலந்த (எகிப்திய) பஞ்சாடைதடித்த பட்டு, (கலப்படமில்லாத) சுத்தப்பட்டு ஆகியவற்றைப் பயன்படுத்த வேண்டாமென்றும் எங்களுக்குத் தடை விதித்தார்கள்.

அறிவிப்பவர்: பராஉ பின் ஆஸிப் (ரலி)

நூல்: புஹாரி (5175)

காற்றுள்ள போதே தூற்றிக் கொள்

பழைய நோட்டுகள் செல்லுபடி ஆகாது என்றதும் சிலர் மிகவும் தர்மம் செய்வதாக நினைத்து, பழைய நோட்டுகளைப் பிறருக்கு அள்ளிக் கொடுக்கிறார்கள்; தாராளத் தன்மையோடு வாரி வழங்குகிறார்கள்.

தர்மம் செய்யுங்கள்! ஏனெனில் உங்களிடையே ஒரு காலம் வரும். அப்போது ஒருவர் தமது தர்மப் பொருளை எடுத்துக்கொண்டு அலைவார்அதைப் பெறுவதற்கு யாரும் இருக்க மாட்டார். அப்போது ஒருவன், ‘‘நேற்றே இதை நீ கொண்டு வந்திருந்தாலாவது நான் வாங்கியிருப்பேன்இன்றோ அது எனக்குத் தேவையில்லையே!’’  என்று கூறுவான் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஹாரிஸா பின் வஹ்ப் (ரலி)

நூல்: புகாரி (1411)

பொறுப்பறிந்து நடப்போம்

ஆட்சியாளர்கள், அதிகாரிகள் தங்களது பொறுப்பினை உணர்ந்து நடக்க வேண்டும். மக்கள் நலனுக்கு பாதிப்பு இல்லாதவாறு திட்டம் வகுத்துச் செயல்பட வேண்டும். ஆள்பவர்கள் மட்டுமல்ல, குடிமக்களும் தங்களின் பொறுப்பறிந்து கொள்வது அவசியம்.

‘ஆட்சிக்கு யார் வந்தாலென்ன; நமக்கென்ன செய்யப் போகிறார்கள்’ என்று வெறுமனே கடமைக்காக எவருக்கேனும் ஓட்டுப் போடும் பழக்கத்தை இனியேனும் மாற்றிக் கொள்ள வேண்டும். நன்கு ஆராய்ந்து சிந்தித்து தகுதியானவர்களை ஆட்சியில் அமர வைக்க வேண்டுமே ஒழிய, தகுதியற்றவர்களுக்கு ஒருபோதும் அரசியல் அங்கீகாரம் கொடுத்து விடக் கூடாது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளியே. அவரவர் தத்தமது பொறுப்பிலுள்ளவை பற்றி விசாரிக்கப்படுவார். ஆட்சித் தலைவரும் பொறுப்பாளி ஆவார். தமது குடிமக்கள் குறித்து அவர் விசாரிக்கப்படுவார். ஆண்தன் வீட்டார் விஷயத்தில் பொறுப்பாளியாவான். தன் பொறுப்பிலுள்ள வீட்டாரைக் குறித்து அவன் விசாரிக்கப்படுவான். ஒரு பெண்தன் கணவனின் வீட்டிற்குப் பொறுப்பாளியாவாள். தன் பொறுப்பிலுள்ள (வீட்டு) விவகாரங்கள் குறித்து அவள் விசாரிக்கப்படுவாள். பணியாள் தன் எஜமானின்  செல்வத்திற்குப் பொறுப் பாளனாவான். தன் பொறுப்பிலுள்ள (எஜமானின்) செல்வத்தைக் குறித்து அவன் விசாரிக்கப்படுவான். மேலும், ‘‘ஓர் ஆண் மகன் தன் தந்தையின் செல்வத்திற்குப் பொறுப்பாளி ஆவான்’’ என்றும் நபி (ஸல்) அவர்கள் கூறியதாக நான் எண்ணுகிறேன்.

அறிவிப்பவர்: உமர் (ரலி)

நூல்: புகாரி (2751)

மறுமையை நம்பாதவர்கள் இம்மையை மட்டுமே கவனித்து முடிவெடுப்பார்கள். இங்குள்ள இடர்களில் இருந்து தப்பிக்கும் வழியையே தேடிக் கொண்டிருப்பார்கள். ஆனால், மறுமையை நம்பும் முஃமின்கள் எப்போதும் ஈருலகிலும் வெற்றி பெறுவதற்குரிய வழியிலே கவனத்தைச் செலுத்த வேண்டும். இந்த வகையில், பயனற்ற நோட்டுகளால் சமூகத்தில் ஏற்பட்டிருக்கும் மோசமான விளைவுகளிலும் மார்க்க போதனைகளை படிப்பினைகளை நினைவில் கொண்டு நமது வாழ்வை மெருகேற்றிக் கொள்வோமாக!

 

ஆக்கம் : ஏகத்துவம் இதழ் – டிசம்பர் 2016

முழு இதழையும் வாசிக்க…. https://onlinetntj.com/egathuvam/december-2016