இஸ்லாமிய மார்க்கம் பரிசுத்தமானது. இந்த மார்க்கத்தில் எந்தவிதமான கோணல்களும், குறைகளும் இல்லாத வகையில் மிகச் சிறப்பான முறையில் இந்த மார்க்கத்தை இறைவன் மனித குலத்துக்கு வழங்கியிருக்கின்றான்.
இந்தப் பரிசுத்தமான இஸ்லாத்தைக் களங்கப்படுத்தும் வகையில் பல்லாண்டு காலமாக இஸ்லாத்தின் பெயரால் பல்வேறு அவதூறுப் பிரச்சாரங்கள், கட்டுக்கதைகள், இட்டுக்கட்டப்பட்ட செய்திகள் என்று மார்க்கத்தைக் கற்றறிந்த நபர்களால் மக்களுக்கு மத்தியில் பரப்பப்பட்டுக் கொண்டிருக்கின்றது.
இஸ்லாத்தின் பெயரால் புனையப்பட்ட கட்டுக்கதைகள் மற்றும் இட்டுக்கட்டப்பட்ட செய்திகள் சமகாலத்தில் சமூக வலைத்தளங்களின் மூலமாக நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருப்பதைப் பார்க்கின்றோம்.
உலக முஸ்லிம்கள் அனைவராலும் உயிரிலும் மேலாக மதிக்கப்பட வேண்டியவர்கள் முஹம்மத் (ஸல்) அவர்கள்! அத்தகைய பரிசுத்தமான இறைத்தூதரை கண்ணியப்படுத்த வேண்டிய விதத்தில் மிகச் சரியாக கண்ணியப்படுத்தி புகழ்வதற்குக் கடமைப்பட்டுள்ளோம்.
முஹம்மத் நபியின் புகழை இறைவன் மேலோங்கச் செய்து விட்டதாக திருக்குர்ஆனில் இறைவன் புகழாரம் சூட்டுகின்றான். மேலும், பல்வேறு காரியங்களின் மூலமாக முஹம்மத் நபியின் புகழை உலக மாந்தர்களுக்கு மத்தியில் இறைவன் மேலோங்கச் செய்து கொண்டிருக்கின்றான்.
ஆனால், இன்றைய இஸ்லாமியர்களில் சிலர் முஹம்மது (ஸல்) அவர்களைப் புகழ்கின்றோம் என்கிற பெயரால் நபியவர்களின் கூற்றுக்கு மாற்றமாகத் தங்களுடைய செயல்பாடுகளை அமைத்துக் கொண்டு இஸ்லாமிய மார்க்கத்திற்குக் களங்கம் ஏற்படுத்துகின்ற காரியங்களை மிக வீரியமாகச் செய்து கொண்டிருப்பதைப் பார்க்கின்றோம்.
நபியவர்களை எவ்வாறு நேசிப்பது? என்கிற அடிப்படைப் புரிதல் இல்லாத காரணத்தினால் இஸ்லாத்தையும், நபி (ஸல்) அவர்களையும் அவமானப்படுத்துகின்ற வகையில் பல்வேறு விதமான கட்டுக்கதைகளை இஸ்லாமிய சமூக மக்களிடத்தில் கட்டவிழ்த்து விடுவதைப் பார்க்கின்றோம்.
நபி (ஸல்) அவர்களை தங்களின் உயிரினும் மேலாக நேசித்த நபித்தோழர்கள் தங்களுடைய வாழ்விலும், செயல்பாடுகளிலும் நபி (ஸல்) அவர்களை எவ்வாறு புகழ்ந்தார்கள்? எவ்வாறு நேசித்தார்கள்? என்பதை மிகத் தெளிவாக நம்மால் அறிந்து கொள்ள முடிகின்றது.
நபி (ஸல்) அவர்களைப் புகழ்கின்றோம் என்கிற பெயரால் வரம்பு மீறி நபியின் பெயரால் எழுதி வைக்கப்பட்டுள்ள இட்டுக்கட்டப்பட்ட செய்திகளையும், கட்டுக் கதைகளையும் ஆலிம்கள் போர்வையில் இருப்பவர்கள், மார்க்க மாமேதைகள் என்று தங்களை அடையாளப்படுத்திக் கொண்டு மக்களுக்கு மத்தியில் கட்டுக்கதைகளை எடுத்துரைத்து குழப்பத்தை ஏற்படுத்துவதைப் பார்க்கின்றோம்.
நபியின் பெயரால் பொய்யை இட்டுக்கட்டுபவன் தன்னுடைய தங்குமிடத்தை நரகத்தில் அமைத்துக் கொள்வான் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மிக வன்மையாக எச்சரிக்கை செய்த பிறகும் கூட நபியின் பெயரால் பல்வேறு விதமான பச்சைப் பொய்களைக் கட்டவிழ்த்து விடுவதைப் பார்க்கின்றோம்.
நபியின் மீது பொய்யை இட்டுக்கட்டுபவனின் மறுமை நிலை அதல பாதாளமானது! ஆபத்தானது! மீள முடியாதது! நரகப் படுகுழியில் தள்ளி விடக்கூடியது என்பதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மிகக் கடுமையாக எச்சரிக்கை விடுக்கின்றார்கள்.
‘என் மீது இட்டுக்கட்டிச் சொல்லாதீர்கள். ஏனெனில், என் மீது எவன் இட்டுக்கட்டிச் சொல்வானோ அவன் நரகத்தில் நுழைவான்’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்என அலீ(ரலி) அறிவித்தார்.
ஆதாரம்: ஸஹீஹ் புகாரி 106
‘தந்தையே! உங்களைப் போன்று நபி (ஸல்) அவர்களுடன் நட்பு கொண்ட இன்னின்னாரெல்லாம் நபி (ஸல்) அவர்கள் பற்றி (அதிகமாக) அறிவிப்பது போல், தாங்கள் அவர்களைப் பற்றி அறிவிப்பதை நான் கேள்விப்பட்டதேயில்லையே! ஏன்?’ என்று என்னுடைய தந்தை ஸுபைர்(ரலி) அவர்களிடம் நான் கேட்டதற்கு, ‘இதோ பார்! நான் (பெரும்பாலும்) நபி (ஸல்) அவர்களைப் பிரிந்திருந்ததே இல்லை. ஆயினும் ‘என் மீது இட்டுக் கட்டிச் செல்பவர் தன்னுடைய இருப்பிடத்தை நரகத்தில் அமைத்துக் கொள்ளட்டும்‘ என்று நபி (ஸல்) அவர்கள் கூறக்கேட்டிருக்கிறேன்’ (எனவேதான் நான் அதிகமாக அறிவிக்கவில்லை)’ என்றார்கள்’ என அப்துல்லாஹ் இப்னு ஸுபைர்(ரலி) கூறினார்.
ஆதாரம்: ஸஹீஹ் புகாரி 107
‘என் மீது, எவன் வேண்டுமென்றே இட்டுக்கட்டுகிறவன் நரகத்தில் தன்னுடைய இருப்பிடத்தை அமைத்துக் கொள்ளட்டும்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதால்தான், உங்களுக்கு நான் அதிகமான நபிமொழிகளை எடுத்துரைக்காமல் என்னைத் தடுத்துக் கொள்கிறேன்’ என அனஸ் (ரலி) அறிவித்தார்.
ஆதாரம்: ஸஹீஹ் புகாரி 108
‘நான் கூறாத ஒன்றைக் கூறினார்கள் என்று கூறியவர் தன்னுடைய இருப்பிடத்தை நரகத்தில் அமைத்துக் கொள்ளட்டும்’ இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஸலமா (ரலி) அறிவித்தார்.
ஆதாரம்: ஸஹீஹ் புகாரி 109
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
என் மீது கூறும் பொய் (உங்களில்) ஒருவரின் மீது கூறும் பொய்யைப் போன்றதன்று. யார் என் மீது வேண்டுமென்றே பொய்யுரைக்கின்றானோ அவன் தன் இருப்பிடத்தை நரகத்தில் ஆக்கிக் கொள்ளட்டும்.
ஆதாரம்: ஸஹீஹ் புகாரி 1291
* என் மீது இட்டுக்கட்டாதே! இட்டுக் கட்டினால் நரகம் தான்.
* என்மீது இட்டுக்கட்டினால் இருப்பிடம் நரகம் தான்.
* என்மீது வேண்டுமென்றே இட்டுக்கட்டுபவன் தன்னுடைய இடத்தை நரகத்தில் அமைத்துக் கொள்வான்.
* நான் கூறாத ஒன்றை கூறுபவன் தன்னுடைய இடத்தை நரகத்தில் அமைத்துக் கொள்வான்.
* என்மீது பொய் கூறுபவன் தன்னுடைய இடத்தை நரகத்தில் அமைத்துக் கொள்ளட்டும்.
நபி மீது பொய்யை இட்டுக்கட்டினால் கண்டிப்பாக நரகமே தங்குமிடம் என்று இவ்வளவு கடுமையான கண்டனங்களை எடுத்துரைத்த பிறகும் கூட நபியவர்களின் மீது பொய்களையும், புரட்டுக்களையும் அள்ளி வீசுகின்ற வகையில் பல்வேறு விதமான இட்டுக்கட்டப்பட்ட செய்திகளை அவிழ்த்து விடுவதைப் பார்க்கின்றோம்.
ஆலிம்கள் என்கிற பெயரில் உள்ளவர்கள் அப்பாவி மக்களை ஏமாற்றும் வகையில் பல்வேறு கட்டுக்கதைகளை கட்டவித்து விடுகின்றார்கள். அவைகளில் ஒரு சிலவற்றை மட்டும் காண்போம்.
அல்லாஹ், நபியின் மீது ஸலவாத் சொல்லிக் கொண்டே இருக்கின்றானா?
அல்லாஹ் நபியின் மீது ஸலவாத் சொல்லிக் கொண்டே இருப்பதாக இறைவனின் மீது அப்பட்டமாக இட்டுக்கட்டி, நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தராத கருத்தை மக்களுக்கு மத்தியில் விதைக்கின்ற ஒரு அவல நிலையைப் பார்க்கின்றோம். மார்க்க மாமேதைகள் என்று கூறிக்கொண்டு வலம் வருபவர்கள் அறிவற்ற கருத்தைக் கூறி அறியாமையை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்த நபியின்மீது அல்லாஹ் அருள் புரிகிறான். அவனது வானவர்களும் (அவருக்காகப்) பிரார்த்திக்கின்றனர். இறைநம்பிக்கையாளர்களே! அவர்மீது ஸலவாத் சொல்லுங்கள்! ஸலாமும் கூறுங்கள்!
அல்குர்ஆன் 33:56
மேற்கண்ட இந்த வசனத்தை மேற்கோள் காட்டி, அல்லாஹ் நபியின் மீது ஸலவாத் சொல்லிக் கொண்டே இருப்பதாக இறைக்கருத்தை சிதைத்து மக்களுக்கு மத்தியில் குழப்பத்தை விதைக்கின்றார்கள்.
நபியின் மீது அல்லாஹ் அருள் புரிகின்றான். என்பதற்குப் பதிலாக அல்லாஹ் நபியின் மீது ஸலவாத் கூறிக்கொண்டே இருப்பதாக அப்பாவி மக்களிடத்தில் பொய்யை விதைக்கின்றார்கள்.
அதாவது, அல்லாஹ் நபி (ஸல்) அவர்களின் மீது ஸலவாத் சொல்லிக் கொண்டே இருக்கின்றானாம். மனிதர்களுக்கு அல்லாஹ் தன்னுடைய புறத்திலிருந்து பல்வேறு விதமான அமல்களை நிறைவேற்றுமாறு கட்டளையிடுகின்றான். மனிதர்களுக்கு கட்டளையிட்ட எந்த ஒரு அமலையும் அல்லாஹ் நிறைவேற்றுவதில்லை. மாறாக, எந்த ஒரு அமலையும் இறைவனாகிய நான் சொல்கின்றேன். நீங்கள் செய்யுங்கள் என்று தான் கட்டளையிடுவான்.
உதாரணமாக, தொழுகையை நிறைவேற்றுமாறு அல்லாஹ் கட்டளையிடுகிறான். நோன்பை நிறைவேற்றுமாறு அல்லாஹ் கட்டளையிடுகின்றான். ஜகாத் வழங்குமாறும், ஹஜ்ஜை நிறைவேற்றுமாறும் அல்லாஹ் கட்டளையிடுகின்றான். கட்டளையிட்ட எந்த ஒரு அமலையும் அல்லாஹ் செய்வதில்லை.
ஆனால் நபியின் மீது ஸலவாத் சொல்ல வேண்டும் அல்லாஹ் கட்டளையிட்டு விட்டு, அந்த ஸலவாத்தை நபியின் மீது அல்லாஹ்வும் சொல்லிக் கொண்டே இருக்கின்றான் என்கிற அபாண்டமான கருத்தைக் கூறி இறைவனின் மீது இட்டுக்கட்டுவதைப் பார்க்கின்றோம்.
“அல்லாஹ்வும் நபியின் மீது ஸலவாத் சொல்லிக் கொண்டே இருக்கின்றான். மலக்குமார்களும் நபியின் மீது ஸலவாத் சொல்லிக் கொண்டே இருக்கின்றார்கள். முஃமின்களே! நீங்களும் ஸலவாத் சொல்லிக் கொண்டே இருங்கள்! நானும் செய்கின்றேன்! நீங்களும் செய்யுங்கள்! என்று அல்லாஹ் கூறும் ஒரே அமல் நபியின் மீது சொல்லப்படும் ஸலவாத் ஆகும்!” என்று கூறி இறைவன் கூறிய கருத்தை மாற்றி சிதைத்து குழப்பத்தை விதைக்கின்றார்கள்.
நபியின் மீது கூறப்படும் ஸலவாத்திற்கு, ‘இறைவா! முஹம்மதின் மீது அருள் புரிவாயாக!’ என்பது தான் அதனுடைய கருப்பொருளாகும். இறைவனும் நபியின் மீது ஸலவாத் கூறுகின்றான் என்கிற வகையில் அபத்தமான பொருள் கொள்ளுதல் என்பது இறைவனின் கண்ணியத்தைக் குறைத்து, இறைக்கருத்தைச் சிதைக்கின்ற பொருளாகும்.
ஸலவாத்தின் ஆரம்ப வாசகத்தில், அல்லாஹும்ம – இறைவா! என்று அழைத்து நபியின் மீது அருள் புரியுமாறு அல்லாஹ்விடம் வேண்டுகின்றோம். நம்மைப் படைத்த இறைவனும் அதுபோல், ‘அல்லாஹ்வே!’ என்று அழைத்து ஸலவாத் சொல்வதாக இருந்தால், தனக்கு மேல் இருக்கிற ஒருவனிடத்தில் வேண்டுவதாய் அமைந்து விடும். அல்லாஹ் தனக்கு மேல் இருக்கின்ற ஒருவனை அழைத்து ‘அல்லாஹ்வே!’ என்று வேண்டுவானா? இது எவ்வளவு பெரிய அபத்தம்!
குறிப்பிட்ட வார்த்தைக்குப் பொருள் கொள்ளுதல் என்பது, ஒவ்வொரு இடத்திற்கு தகுந்தாற்போன்று மாறுதல் அடையக்கூடியதாகும். அனைத்து இடங்களிலும் ஒரே கருத்தில் பொருள் கொள்வது ஏற்புடையதாக ஆகாது.
ஸலவாத் என்கிற பதத்தை அல்லாஹ்வுடன் இணைக்கும் போது, அல்லாஹ் ரஹ்மத் செய்கின்றான், அருள் புரிகின்றான் என்று பொருள் கொள்ள வேண்டும். மனிதர்களுடனும் இணைக்கும் போது, மனிதர்கள் இறைவனிடத்தில் அருளை வேண்டுகின்றார்கள் என்று பொருள் கொள்ள வேண்டும்.
இந்த நபியின் மீது அல்லாஹ் புரிகின்றான். மலக்குமார்களாகிய நீங்களும், மனிதர்களும் இந்த நபிக்காக அருளை வேண்டுங்கள் என்கிற கருத்து தான் ஏற்புடையதும், ஏனைய மற்ற வசனங்களின் கருத்துக்கு ஒத்ததாகவும் அமைந்திருக்கும்.
هُوَ ٱلَّذِى يُصَلِّى عَلَيْكُمْ وَمَلَـٰئِكَتُهُۥ لِيُخْرِجَكُم مِّنَ ٱلظُّلُمَـٰتِ إِلَى ٱلنُّورِ وَكَانَ بِٱلْمُؤْمِنِينَ رَحِيمًا
உங்களை இருள்களிலிருந்து ஒளியின் பக்கம் அவன் கொண்டு செல்வதற்காக உங்கள்மீது அருள்புரிகிறான். அவனது வானவர்களும் உங்களுக்காகப் பிரார்த்திக்கின்றனர். அவன் இறைநம்பிக்கையாளர்கள்மீது நிகரிலா அன்பாளனாக இருக்கிறான்.
அல்குர்ஆன் 33:43
மேற்கண்ட வசனத்தில் நேர்வழி பெற்ற மனிதர்களைப் பார்த்து அல்லாஹ் பேசும்போது, “யுஸல்லி அலைக்கும்” என்று இறைவன் பேசுகின்றான். அதாவது “உங்கள் மீது அல்லாஹ் அருள் புரிகின்றான்” என்பதே அதனுடைய பொருளாகும்.
அல்லாஹ் உங்களுக்காக ஸலவாத்தை வேண்டிக் கொண்டிருக்கின்றான் என்று பொருள் கொண்டால், ஒட்டு மொத்த நேர்வழி பெற்ற மனிதகுலத்திற்காக அல்லாஹ் ஸலவாத்தை வேண்டிக் கொண்டிருக்கின்றான் என்று கூற வேண்டிய நிலை வரும். இவ்வாறு பொருள் கொள்வது அபத்தமான பொருளாகும்.
நபியைப் புகழ்கின்றோம் என்கிற பெயரில் நிதானமில்லாமல் வரம்பு மீறிய காரணத்தினால், இதுபோன்ற அவல நிலை ஏற்படுகின்றது என்பதை தெள்ளத் தெளிவாக உணர்ந்து கொள்ள முடிகின்றது.
கலீமா விரலால் மனைவியின் வயிற்றில் முஹம்மத் என்று எழுதினால் ஆண் குழந்தை பிறக்குமா?
மார்க்க அறிஞர்கள் என்று தங்களை அடையாளப்படுத்திக் கொள்பவர்கள் தங்களின் மார்க்க அடையாளங்களை பயன்படுத்திக் கொண்டு, மக்களை மிகப்பெரும் அளவில் வழிகெடுத்துக் கொண்டிருப்பதைப் பார்க்கின்றோம்.
அப்படிப்பட்டவர்களை நம்பி பெருங் கொண்ட மக்கள் கூட்டம் இவர்கள் சொல்வதெல்லாம் மார்க்க அடிப்படையில் உண்மையாகத்தான் இருக்கும். இவர்கள் கூறுவதற்கு முன்னோர்களின் வழியில் ஆதாரங்கள் இருக்கும் என்றெல்லாம் நம்பி மார்க்க அறிஞர்களின் போலிப் பேச்சுக்களையும் – இட்டுக்கட்டப்பட்ட செய்திகளையும் அப்பாவி மக்கள் நம்பி வருகின்றார்கள் என்பது தான் வேதனையின் உச்சம்.
கூடி இருக்கின்ற மக்களுக்கு மத்தியில் மார்க்க மாமேதை என்று தன்னை அடையாளப்படுத்திக் கொள்பவர்கள் நபியின் பெயரால் சில செய்திகளைப் பதிய வைக்கின்றார்கள்.
கட்டுக்கதை:
தன்னை ஆலிம் என்று சொல்லிக் கொள்ளும் ஒருவர் பின்வருமாறு பேசுகிறார்.
ஆண்குழந்தை பிறக்க வேண்டும் என்று பெருந்தவம் கிடப்பவர்களுக்கு நபிகளாரின் பெயராகிய “முஹம்மத்” என்கிற வார்த்தையை எழுதிக் கொடுப்பதுண்டு. அதாவது, இந்தச் செய்தி புகாரியில் இருக்கின்றதா? என்று கேட்கக் கூடாது. நீண்டகால அனுபவப் பாடம். மார்க்க அறிஞர்கள் சில நபர்கள் எழுதித் தருகின்றார்கள். தாயின் வயிற்றில் இருக்கும் போதே முஹம்மத் என்கிற எழுத்துச் சுனையை வாங்கிய பாக்கியம் நமக்குக் கிடைத்து விட்டது.
இதுபோன்ற கட்டுக்கதைகளின் மூலமாக இஸ்லாத்தை எந்த அளவிற்குக் கொச்சைப்படுத்துகின்றார்கள். நபி (ஸல்) அவர்களின் பெயரைப் பயன்படுத்தி அறியாத இஸ்லாமிய மக்களிடத்தில் எவ்வளவு ஆழமான மூடநம்பிக்கையை விதைக்க முற்படுகின்றார்கள்.
கூடி இருக்கின்ற இஸ்லாமியர்களிடத்தில் மார்க்கத்தின் பெயரால் ஒரு செய்தியை எடுத்துரைத்து விட்டு, ‘இந்தச் செய்தி புகாரியில் இருக்கின்றதா? என்று கேட்காதீர்கள். இந்த செய்தி நீண்ட கால அனுபவப் பாடத்தில் இருக்கின்றது’ என்கிற அறிவற்ற பதிலை சொல்லி கடந்து செல்கின்றார்.
இதுபோன்ற இட்டுக்கட்டப்பட்ட கட்டுக் கதைகளின் மூலம் தான் நபியைப் புகழ வேண்டுமா? நபியின் மீது இட்டுக்கட்டி விட்டு நபியைப் புகழ்கின்றோம். என்று கூறுவது எவ்வளவு பெரிய அறியாமையின் உச்சம்.
என்மீது வேண்டுமென்றே பொய்யை புனைந்து இட்டுக்கட்டினால் தங்குமிடம் நரகம் தான் என்று நபிகளார் மிகக் கடுமையாக எச்சரிக்கை விடுத்த பிறகும் கூட கல்வியைக் கற்ற மார்க்க அறிஞர்கள் நபியின் பெயரால் இட்டுக்கட்டுவது மிகப்பெரும் அநியாயமாகும்.
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
என் மீது கூறும் பொய் (உங்களில்) ஒருவரின் மீது கூறும் பொய்யைப் போன்றதன்று. யார் என் மீது வேண்டுமென்றே பொய்யுரைக்கின்றானோ அவன் தன் இருப்பிடத்தை நரகத்தில் ஆக்கிக் கொள்ளட்டும்!
ஆதாரம்: ஸஹீஹ் புகாரி 1291
நபியின் பெயரால் பொய்யைப் புனைந்து கூறுவது மறுமை வாழ்வை நாசமாக்கும் காரியங்களில் உள்ள ஒன்றாகும். நபியை வரம்பு மீறி புகழ்ந்து நபியின் பெயரால் இட்டுக்கட்டப்பட்ட செய்திகளை மக்களிடத்தில் பரப்பி பாவம் செய்தவர்களின் பட்டியலில் சேர்ந்து விடக் கூடாது.
மூஸா (அலை) அவர்கள், முஹம்மத் நபியின் மீது கூறும் ஸலவாத்
முஹம்மத் (ஸல்) அவர்களைப் புகழ்கின்றோம் என்கிற பெயரால் வரம்பு மீறிப் புகழ்கின்ற காரணத்தினால் ஏனைய மற்ற இறைத்தூதர்கள் பெயரிலும் பொய்யை இட்டுக்கட்டக்கூடிய அவல நிலையைப் பார்க்கின்றோம்.
ஓர் இட்டுக்கட்டப்பட்ட நீண்ட செய்தியிலே, இறைத்தூதர் மூஸா (அலை) அவர்களிடம் அல்லாஹ் உரையாடுவதாக பதிவு செய்யப்பட்டிருக்கின்றது. “மூஸாவே! மறுமையில் உனக்கு தாகம் ஏற்படாமல் இருக்க, முஹம்மதின் மீது அதிகமாக ஸலவாத் கூறுங்கள்!” என்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
1703- أخبرنا أبو الفتح الصحاف، ثنا أبو عبد الله الرازي، ثنا علي بن أحمد بن صالح، ثنا محمد بن عبد بن عامر، ثنا محمد بن حفص ثنا الحكم بن سنان، عن الفرج بن عبد الرحمن، عن كعب العجلي، عن كعب الأحبار قال:
((أوحى الله -عز وجل- إلى موسى -عليه السلام- في بعض ما أوحى إليه: يا موسى: لولا من يحمدني ما أنزلت من السماء قطرة ولا أنبت من الأرض ورقة، يا موسى: لولا من يعبدني ما أمهلت من يعصيني طرفة عين، يا موسى لولا من يشهد أن لا إله إلا الله لسيلت جهنم على الدنيا، يا موسى: إذا لقيت المساكين فعاملهم كما تعامل [ص:333] الأغنياء فإن لم تفعل ذلك، فاجعل كل شيء علمت -أو قال: عملت- تحت التراب، يا موسى: -أتحب ألا يأتيك من عطش يوم القيامة؟ قال: إلهي نعم، قال: فأكثر الصلاة على محمد صلى الله عليه وسلم))
இறைத்தூதர் மூஸா (அலை) அவர்களிடம், “மூஸாவே! மறுமை நாளில் உனக்கு தாகம் ஏற்படாமல் இருப்பதற்கு நீ விரும்புகின்றாயா?” என்று இறைவன் கேட்டான். அதற்கு மூஸா (அலை) அவர்கள் “என்னுடைய் இறைவா! ஆம்!” என்று கூறினார். அதற்கு அல்லாஹ்; “முஹம்மத் (ஸல்) அவர்கள் மீது ஸலவாத்தை அதிகமதிகம் கூறுவாயாக! (அவ்வாறு கூறும் போது, மறுமையில் தாகம் ஏற்படுவதை விட்டு நீ தப்பித்துக் கொள்வாய்!)” என்று அல்லாஹ் இறைத்தூதர் மூஸா (அலை) அவர்களிடம் கூறினான்.
ஆதாரம்: தர்கீப், தர்ஹீப் லிகவாமிஸ்ஸூன்னா
மேற்கண்ட இந்தச் செய்தி கஅபுல் அஹ்பார் வழியாகப் பதிவு செய்யப்பட்ட தொடர்பு அறுந்த செய்தியாகும். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சம்பந்தப்பட்ட ஒரு செய்தியை யூதராக இருந்த கஅபுல் அஹ்பார் எவ்வாறு அறிவிக்க முடியும்? கஅபுல் அஹ்பார் என்பவருக்கு இந்தச் செய்தியை அறிவித்த நபித்தோழர் யார்? யாரிடமிருந்து இவர் கேட்டார் என்பன போன்ற பல்வேறு சந்தேகங்களை எழுப்புகின்ற இட்டுக்கட்டப்பட்ட செய்தியாகும்.
மிக பலவீனமான தொடர்பு அறுந்த செய்தியை வைத்துக் கொண்டு நபியைப் புகழ்கின்றோம் என்கிற பெயரால் நபியின் மீது இட்டுக்கட்டுவது நியாயமாகுமா? மூஸா (அலை) அவர்கள் முஹம்மத் நபியின் மீது ஸலவாத் கூறித்தான் மறுமை நாளின் தாகத்திலிருந்து தப்பிப்பார்கள் என்று கட்டுக்கதைகளை அள்ளி வீசுவதிலிருந்து மக்களிடத்தில் எதைப் பதிய வைக்க நினைக்கின்றார்கள்?
நபிமார்களுக்கு மத்தியில் ஏற்றத்தாழ்வுகளை கற்பித்து, நபிமார்கள் மறுமையில் சிரமப்படுகின்ற போது முஹம்மத் நபியின் மீது ஸலவாத் கூறித்தான் தப்பித்தாக வேண்டும் என்கிற மாய பிம்பத்தை ஏற்படுத்தி இஸ்லாத்தைக் கொச்சைப்படுத்துகின்றார்கள்.
உலகத்தில் முதன் முதலில் நிறைவேற்றிய அமல் ஸலவாத்
உலகத்தை அல்லாஹ் படைத்து மனித குலத்தின் தந்தை ஆதம் (அலை) அவர்களைப் படைத்த பிறகு, உலகத்தில் நிறைவேற்றப்பட்ட முதல் அமல் ஸலவாத் என்று நபியின் மீது புனைந்து பொய்யுரைக்க கூடிய அவல நிலையைப் பார்க்கின்றோம்.
ஆதம் (அலை) அவர்கள் தன்னுடைய துணைவியார் ஹவ்வா (அலை) அவர்களை திருமணம் செய்வதற்கு முன்பு மஹராக முஹம்மத் நபியின் மீது ஸலவாத் கூறிய பிறகு தான் ஹவ்வா (அலை) அவர்களைத் திருமணம் முடித்ததாக இட்டுக்கட்டப்பட்ட கட்டுக்கதைகளை மக்களிடத்தில் பரப்பி வருகின்றார்கள்.
حاشية الصاوي على تفسير الجلالين
امون ابو ال محمد بن محمد الخلوتي، الشهير بالصاوي المالكي (المتوفى: 1241هـ)
وقد خلقت بعد دخوله الجنة نام فلما استيقظ وجدها فأراد أن يمديده إليها فقالت له الملائكة مه يا آدم حتى تؤدي مهرها ، فقال وما مهرها فقالو اثلاث صلوات أو عشرون صلاة على سيدنا محمد صلي الله عليه سلم
ஆதம் (அலை) அவர்கள் படைக்கப்பட்டு, ஜன்னத்தில் நுழைவிக்கப்பட்ட பிறகு, தன்னுடைய துணைவியிடம் செல்வதற்கு நாடினார். அப்போது, மலக்குமார்கள் “ஆதமே! நில்லுங்கள்! அவருக்கான மஹரை வழங்கும் வரை (அவரை உம்மால்) நெருங்க இயலாது” என்று கூறினார்கள். உடனே, ஆதம் (அலை) “அவர்கள் அவருக்கான மஹர் என்றால் என்ன?” என்று கேட்டார். அதற்கு மலக்குமார்கள், “முஹம்மத் (ஸல்) என்ற நம்முடைய தலைவரின் மீது மூன்று தடவை ஸலவாத்தோ அல்லது பத்து தடவை ஸலாமோ சொல்வதாகும்!” என்று பதிலளித்தார்கள்.
ஆதாரம்: தஃப்ஸீருஸ் ஸாவி
மேற்கண்ட செய்தி தஃப்ஸீருஸ் ஸாவி என்கிற நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறுகின்றது. மேற்கண்ட செய்திக்கு அறிவிப்பாளர் தொடர் வரிசையோ, நபிகளாரிடமிருந்து கேட்டதாகவோ எவ்வித சான்றுகளுமோ இல்லை.
தஃப்ஸீருஸ் ஸாவியில் பதிவு செய்யப்பட்டுள்ள மேற்கண்ட செய்தி நூலாசிரியருக்கு எப்படி கிடைத்தது. அவர் நபியின் காலத்தில் வாழ்ந்தாரா? நபித்தோழர்களிடமிருந்து நபி (ஸல்) அவர்கள் கூறியதாகக் கேட்டாரா? நபி (ஸல்) அவர்கள் மரணித்து பலநூறு வருடங்களுக்குப் பிறகு தஃப்ஸீர் புத்தகத்தை எழுதிய ஒருவரால் நபியின் பெயரால் எப்படி ஒரு செய்தியைப் பதிவு செய்ய இயலும்?
மேலும், இந்தச் செய்தி முற்றிலும் பலவீனமானது. மேலும், இந்த செய்தியின் கருத்து ஏனைய ஸஹீஹான ஹதீஸ்களுக்கு மாற்றமாகவும், பொருத்தமற்றதாகவும் இருப்பதை மிகத் தெளிவாக உணர்ந்து கொள்ள முடிகின்றது.
அதாவது, ஆதம் (அலை) அவர்கள் தன்னுடைய துணைவியார் ஹவ்வா (அலை) அவர்களை நெருங்குவதற்கு முன்பு வானவர்கள் மஹர் கேட்டார்களாம். உடனே ஆதம் (அலை) அவர்கள் மஹர் என்றால் என்ன? என்று மலக்குமார்களிடம் கேட்ட பிறகு, முஹம்மத் நபியின் மீது ஸலவாத்தும் – ஸலாமும் சொல்லுங்கள் என்று பதில் அளித்ததாக அப்பட்டமான கட்டுக்கதை ஒன்றைப் புனைந்து பச்சையாய் பரப்புகின்றார்கள்.
ஆதம் (அலை) அவர்களுக்கு மஹர் என்பது இறைவனால் கடமையாக்கப்பட்டதா?
ஆதம் (அலை) அவர்களுக்கு ஸலவாத் கூறுதல் என்றால் என்னவென்று இறைவனால் கற்றுத் தரப்பட்டதா? ஸலவாத் கூறுதல் என்பது ஆதம் (அலை) அவர்களுக்குப் பொருந்துமா?
முஹம்மத் (ஸல்) அவர்களைப் புகழ்கின்றோம் என்கிற பெயரில் உச்சகட்டமாய் வரம்பு மீறியதன் விளைவாக இதுபோன்ற கட்டுக்கதைகள் ஆலிம்களின் போர்வையில் உள்ளவர்களால் மக்களுக்கு மத்தியில் பரப்பப்படுகின்றது.
இதுபோன்று பல்வேறு விதமான கட்டுக்கதைகள் ஆலிம்களின் பெயரால் வலம் வருபவர்களின் பேச்சுக்களிலிருந்து பரவலாக பரவிக் கொண்டிருப்பதைப் பார்க்க முடிகின்றது.
முற்றிலுமாக இதுபோன்ற இட்டுக் கட்டப்பட்ட கட்டுக்கதைகளை ஒழித்துக்கட்டி பரிசுத்தமான இஸ்லாத்தை மக்களுக்கு மத்தியில் எடுத்துரைக்க வேண்டுமானால், நபிகளாரை எவ்வாறு புகழ்வது? நபிகளார் தன்னைப் புகழ்வதற்கு வழிகாட்டித் தந்த வழிமுறைகள் என்ன? நபியவர்களை வரம்பு மீறி புகழ்வதின் மோசமான விளைவுகள் என்ன? என்பன போன்ற பல்வேறு செய்திகளை அறியாமையில் இருப்பவர்கள் தெளிவாக அறிந்து கொள்வதற்குக் கடமைப்பட்டுள்ளார்கள்.
நபிகளாரை நேசிப்பது எப்படி?
வருடத்தில் ஒரு குறிப்பிட்ட மாதத்தின் சில நாட்களில் நபியை புகழ்கின்றோம், நபியை நேசிக்கின்றோம் என்ற பெயரால், நபிகளார் காட்டித் தராத போலி நேசத்தையும், புகழையும் வெளிப்படுத்தி நபியின் வார்த்தைகளை இழிவுபடுத்துகின்ற அவல நிலையைப் பார்க்கின்றோம்.
ஒரு உண்மையான முஸ்லிம் நபியை அளவு கடந்து நேசிக்கின்றார். தனது உயிரை விடவும் மேலானவர்களாக நபியை நேசிக்கின்றார். இப்போது, நபி (ஸல்) அவர்களை புகழ வேண்டும் என்று விரும்புவாரானால், நபி (ஸல்) அவர்கள் எவ்வாறு தன்னை புகழ வேண்டும் என்று பாடம் நடத்தினார்களோ, அந்த அடிப்படையில் மட்டும் தான் புகழ வேண்டுமே தவிர தம்முடைய மனோஇச்சைகளின் அடிப்படையில் நபியைப் புகழ்ந்து வரம்பு மீறியவர்களின் பட்டியல்களில் சேர்ந்து விடக் கூடாது.
நபிகளாரை புகழ்வதற்கான வழிமுறைகளை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) மிகத் தெளிவாக நமக்கு எடுத்துரைக்கின்றார்கள்.
அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
உங்களில் ஒருவருக்கு அவருடைய தந்தை, அவருடைய பிள்ளை, ஏனைய மக்கள் அனைவரையும் விட நான் நேசத்திற்குரியவனாக ஆகாதவரை அவர் (உண்மையான) இறை நம்பிக்கை (ஈமான்) கொண்டவர் ஆகமாட்டார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ஆதாரம்: புகாரி 15
உர்வா (ரலி) அவர்கள் கூறினார்கள்;
என் சமுதாயத்தாரே! நான் பல அரசர்களிடம் தூதுக் குழுவில் ஒருவனாகச் சென்றுள்ளேன். (ரோமாபுரி மன்னன்) சீசரிடமும், (பாரசீக மன்னன்) கிஸ்ராவிடமும், (அபிசீனிய மன்னன்) நஜாஷியிடமும் தூதுக் குழுவில் சென்றுள்ளேன். அல்லாஹ்வின் மீதாணையாக! முஹம்மதின் தோழர்கள் முஹம்மதுக்கு அளிக்கின்ற கண்ணியத்தைப் போல் எந்த அரசருக்கும் அவரது தோழர்கள் கண்ணியம் அளிப்பதை நான் பார்த்ததேயில்லை. (ஹதீஸ்)
ஆதாரம்: புகாரி 2732
நபித்தோழர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை கண்ணியப்படுத்தும் விதமாகவே தங்களின் வாழ்க்கையை அமைத்திருக்கின்றார்கள். நபி (ஸல்) அவர்கள் வழிகாட்டித் தந்த அடிப்படையில் நபியின் மீது தங்களுடைய கண்ணியத்தை வெளிப்படுத்தி இருக்கின்றார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நான் எதை (செய்யுங்கள் என்றோ, செய்ய வேண்டாமென்றோ ஒன்றும் கூறாமல்) உங்களு(டைய முடிவு)க்கு விட்டு விட்டேனோ அதை(ப் பற்றி எதுவும் கேட்காமல்) நீங்களும் விட்டுவிடுங்கள். உங்களுக்கு முன் வாழ்ந்தவர்களை அழித்ததெல்லாம் அவர்கள் தங்கள் இறைத்தூதர்களிடம் (அதிகமாகக்) கேள்வி கேட்டதும் அவர்களுடன் கருத்து வேறுபாடு கொண்டதும் தான். ஒன்றைச் செய்ய வேண்டாமென உங்களுக்கு நான் தடை விதித்தால் அதிலிருந்து நீங்கள் தவிர்ந்து கொள்ளுங்கள். ஒன்றைச் செய்யுமாறு உங்களுக்கு நான் கட்டளையிட்டால் அதை உங்களால் முடிந்த அளவிற்குச் செய்யுங்கள்.
ஆதாரம்: புகாரி 7288
நபி (ஸல்) அவர்கள் எதை செய்யுங்கள்! என்று நமக்கு கட்டளையிட்டார்களோ, அதை மட்டும் செய்தால் தான் மறுமையில் ஈடேற்றம் பெற முடியும். இல்லையென்றால் நஷ்டவாளிகளாக மாறி, இழிவைச் சந்திக்கின்ற அவல நிலை ஏற்பட்டு விடும்.
மேலும் திருக்குர்ஆனிலும், நபி (ஸல்) அவர்களின் வாழ்வியல் வழிகாட்டுதல்களிலும் ஓங்கி ஒலிக்கும் நபியின் புகழ் குறித்து மிக முக்கியத்துவம் வாய்ந்த சில விஷயங்கள் நமக்கு கற்றுத் தரப்படுகின்றது.
ஒரு சமயத்தில் முந்தைய வேதமாக இருக்கின்ற தவ்ராத்தில் நபி (ஸல்) அவர்கள் குறித்து என்ன தகவல் சொல்லப்பட்டுள்ளது. என்பதை தேடிக் கண்டறிந்து அதில் நபி (ஸல்) அவர்களின் குணநலன்கள் குறித்தும் எடுத்துரைக்கப்படுகின்றது.
நான் அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்களைச் சந்தித்து, “தவ்ராத்தில் நபி (ஸல்) அவர்களைப் பற்றிக் கூறப்பட்டிருக்கும் வர்ணனையை எனக்குச் சொல்லுங்கள்!” என்றேன். அவர்கள், “இதோ சொல்கிறேன்! அல்லாஹ்வின் மீதாணையாக! குர்ஆனில் கூறப்படும் அவர்களுடைய சில பண்புகள் தவ்ராத்திலும் கூறப்பட்டுள்ளன.
“நபியே! நிச்சயமாக உம்மை சாட்சியம் அளிப்பவராகவும், நற்செய்தி கூறுபவராகவும், எச்சரிப்பவராகவும், எழுதப் படிக்கத் தெரியா பாமரர்களின் பாதுகாவலராகவும் நாம் அனுப்பியிருக்கிறோம். நீர் எனது அடிமையும் எனது தூதருமாவீர். தம் எல்லாக் காரியங்களிலும் இறைவனையே நம்பியிருப்பவரென்று உமக்கு நான் பெயரிட்டுள்ளேன்”
(இவ்வாறெல்லாம் கூறிவிட்டு, நபி (ஸல்) அவர்களின் அடையாளங்களைக் கூறும் விதத்தில்) “அவர் கடின சித்தம் கொண்டவராகவோ, முரட்டுத்தனமுடையவராகவோ, கடைவீதிகளில் கத்திப் பேசி சச்சரவு செய்பவராகவோ இருக்க மாட்டார். தீமைக்குப் பதிலாகத் தீமையைச் செய்யமாட்டார்; மாறாக, மன்னித்து, கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவார்.
வளைந்த மார்க்கத்தை அவர் மூலம் நிமிர்த்தாதவரை அல்லாஹ் அவ(ரது உயி)ரைக் கைப்பற்ற மாட்டான். மக்கள் “லாயிலாஹ இல்லல்லாஹ்’ (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை) என்று கூறுவார்கள்; அதன் மூலம் குருட்டுக் கண்களும், செவிட்டுக் காதுகளும், மூடப்பட்ட உள்ளங்களும் திறக்கப்படும்” என்று அதில் அவர்களைக் குறித்து வர்ணிக்கப்பட்டுள்ளது” என பதிலளித்தார்கள்.
ஆதாரம்: புகாரி 2125
மேற்கண்ட இந்தச் செய்தியை நன்றாகப் படித்துப் பாருங்கள். நபிகளாரின் அப்பழுக்கற்ற குணநலன்கள் குறித்து மேற்கண்ட செய்தி தெளிவாக எடுத்துரைக்கின்றது.
முந்தைய வேதமான தவ்ராத்தில் கூட நபியவர்கள் கலிமாவின் மூலம் பாடம் நடத்தி குருட்டுக் கண்களையும், செவிட்டுக் காதுகளையும், மூடப்பட்ட உள்ளங்களையும் திறப்பார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் இன்றைக்கு கலிமாவை சொன்ன முஸ்லிம்களிடத்தில் கூட பெயரளவில் கலிமா பிரதிபலிக்கிறதே தவிர, அவர்களின் உள்ளங்களில் ஆழமாக தைத்து விடவில்லை என்பதை சில பெயர்தாங்கி முஸ்லிம்களின் மூலமும், மார்க்கம் படித்த ஆலிம்கள் போர்வையில் வலம் வருபவர்களின் மூலமும் வெட்ட வெளிச்சமாகின்றது.
திருக்குர்ஆன் வழிதான், நபிவழி என்றும், திருக்குர்ஆன் அடிப்படையிலேயே நம்முடைய வாழ்க்கையை நாம் கட்டமைத்துக் கொள்ள வேண்டும் என்றும் பறைசாற்றும் விதமாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மனித குலத்திற்குக் கட்டளையிடுகின்றார்கள்.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது வீட்டில் மக்கள் பலரும் இருக்க, அவர்களுக்கு இறப்பு நெருங்கிவிட்டபோது நபி (ஸல்) அவர்கள், “வாருங்கள். நான் உங்களுக்கு ஒரு மடலை எழுதித் தருகிறேன். அதன் பிறகு நீங்கள் ஒருபோதும் வழிதவறமாட்டீர்கள்’’ என்று சொன்னார்கள்.
அப்போது மக்களில் சிலர், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களுக்கு (நோயின்) வேதனை மிகைத்து விட்டது. (அவர்களை எழுதித் தரச் சொல்லித் தொந்தரவு செய்யாதீர்கள்.) உங்களிடம் தான் குர்ஆன் இருக்கின்றதே. நமக்கு அல்லாஹ்வின் வேதமே போதும்” என்று சொன்னார்கள். உடனே அங்கு வீட்டிலிருந்தோர், கருத்து வேறுபாடு கொண்டு சச்சரவிட்டுக் கொண்டார்கள்.
அவர்களில் சிலர், “(நபியவர்கள் கேட்ட எழுது பொருளை அவர்களிடம்) கொண்டுபோய்க் கொடுங்கள். உங்களுக்கு ஒரு மடலை அவர்கள் எழுதுவார்கள். அதன் பிறகு நீங்கள் வழிதவறிச் செல்லமாட்டீர்கள்’’ என்று சொன்னார்கள். மற்ற சிலர் வேறு விதமாகச் சொன்னார்கள். அவர்களின் கூச்சலும் சச்சரவும் அதிகரித்தபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “எழுந்திருங்கள்’’ என்று சொன்னார்கள்.
ஆதாரம்: புகாரி 4432
நபிகளார் இறக்கும் தருவாயில் கூட, அங்கே குழுமி இருந்த மக்களின் மனநிலை என்னவென்றால், அல்லாஹ்வின் வேதம் கையில் இருக்கும் போது நமக்கு என்ன கவலை! நபி (ஸல்) அவர்களை யாரும் தொந்தரவு செய்யாதீர்கள்! என்று சொல்லி திருக்குர்ஆன் வழியே நபிவழி! நபிவழியே நம்வழி என்ற உறுதிமிக்க கருத்தை சக மனிதர்களின் உள்ளங்களில் ஆழமாக பதிய வைத்திருந்தார்கள்.
“உங்களிடையே நான் (மிக முக்கியமான) ஒன்றை விட்டுச் செல்கிறேன். அதை நீங்கள் பலமாகப் பற்றிக்கொண்டால் நீங்கள் ஒருபோதும் வழிதவறவேமாட்டீர்கள். அது அல்லாஹ்வின் வேதமாகும்!” என்று கூறிவிட்டு, “(மறுமை நாளில்) உங்களிடம் என்னைப் பற்றி விசாரிக்கப்படும்போது நீங்கள் என்ன சொல்வீர்கள்?”என்று கேட்டார்கள்.
அதற்கு மக்கள், “நீங்கள் (இறைச்செய்திகள் அனைத்தையும் எங்களிடம்) தெரிவித்துவிட்டீர்கள்; (உங்களது நபித்துவப் பொறுப்பை) நீங்கள் நிறைவேற்றி விட்டீர்கள்; (சமுதாயத்தார்மீது) அக்கறையுடன் நடந்துகொண்டீர்கள் என நாங்கள் சாட்சியமளிப் போம்” என்று கூறினர். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது சுட்டுவிரலை வானை நோக்கி உயர்த்தி சைகை செய்துவிட்டுப் பிறகு அதை மக்களை நோக்கித் தாழ்த்தி, “இறைவா! இதற்கு நீயே சாட்சி” என்று மூன்று முறை கூறினார்கள்.
ஆதாரம்: முஸ்லிம் 2334
அல்லாஹ்வின் வேதப்படி தங்களின் வாழ்க்கையை அமைத்துக் கொள்பவரே, உண்மையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை உளமார நேசிக்கின்றார் என்று உத்தரவாதம் கொடுக்க முடியும்.
நபிகளார் வழிகாட்டித் தராத வகையில் வரம்பு மீறி கட்டுக் கதைகளையும் இட்டுக்கட்டப்பட்ட செய்திகளையும் கொண்டு நபிகளாரைப் புகழ்வதில் எவ்வித பிரயோஜனமும் இல்லை என்பதை அறியாமையில் இருப்பவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.
மற்றொரு அறிவிப்பிலே;
“கவனியுங்கள். நான் உங்களிடையே கனமான இரண்டு பொருட்களை விட்டுச்செல்கிறேன். அவற்றில் ஒன்று வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ்வின் வேதமாகும். அது அல்லாஹ்வின் கயிறாகும். அதைப் பின்பற்றுபவர் நல்வழியில் இருப்பார். அதைக் கைவிடுபவர் தவறான வழியில் இருப்பார்’’ என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ஆதாரம்: முஸ்லிம் 4783
யார் அல்லாஹ்வின் வேதத்தை பலமாகப் பற்றி பிடித்துக் கொள்கின்றாரோ, அவர்தான் நல்வழியில் இருப்பார் என்றும், கைவிட்டு விடுபவர் வழிதவறி அதளபாதாளத்தில் வீழ்ந்து விடுவார். என்றும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கடுமையாக எச்சரிக்கை விடுக்கின்றார்கள்.
இறுதியாக;
இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களின் கூற்றுக்கு மாற்றமாகவும், செயல்பாடுகளுக்கு மாற்றமாகவும் வாழ்ந்து இறைத்தூதருக்கு மாறு செய்பவர்களுக்கு இறைவன் மிகக் கடுமையான எச்சரிக்கையை விடுக்கின்றான்.
யார் (அல்லாஹ்வை) மறுத்து, தூதருக்கு மாறு செய்தார்களோ அவர்கள் அந்நாளில் தங்களுடன் பூமி தரைமட்டமாக்கப்பட்டிருக்கக் கூடாதா? என விரும்புவார்கள். அவர்கள் அல்லாஹ்விடம் எந்தச் செய்தியையும் மறைத்துவிட முடியாது.
அல்குர்ஆன் 4:42