மனிதர்கள் படைக்கப்பட்டதன் பிரதான நோக்கமே படைத்தவனை வழிபடுவதற்குதான். அந்தவகையில், தொழுகை, நோன்பு, ஸகாத், போன்ற வணக்கங்களின் பட்டியலில் ஒன்றே பக்ரித் பண்டிகை. உருது மொழியில் அடிப்படையில் நமது பேச்சு வழக்கில் ஹஜ் பெருநாள் என்பது பக்ரித் பெருநாள் என அழைக்கப்படுகிறது. நபி இப்ராஹீம் (அலை) அவர்களின் தியாகத்தையும், திண்ணிய சிந்தனையையும், திகைக்கவைத்தக் கட்டுப்பாட்டையும் அகில முஸ்லிம்கள் அனைவரும் சூளுரைக்க வேண்டும் என்பதே இப்பண்டிகையின் முக்கிய நோக்கம். அன்பையும், அனுபவத்தையும் அள்ளிக்கொடுத்து வளர்த்த பிள்ளையை, அல்லாஹ்வின் வாக்கிற்காக அறுக்கத் துணிந்தத் துணிச்சலை, துச்சமாக மதித்து தூர எறிந்திட முடியாது. இச்சிறப்பிற்கு சொந்தக்காரர் நபி இப்ராஹிம் (அலை) அவர்கள். அவர்களின் தியாகத்தை நினைவுபடுத்தும் விதமாகத்தான் உலகமெங்கும் ஆடு, மாடு, ஒட்டகங்கள் அறுக்கப்படுகின்றன.
எந்த வரலாற்றை சிறப்புப் படுத்த இந்த வழிபாடு வலியுறுத்தப்பட்டதோ அதில் சிதைவை ஏற்படுத்தும் வகையில் முஸ்லிம்களின் செயல்பாடுகள் அமைந்திருக்கின்றன. படைத்தவன் பெயரில் செய்ய வேண்டிய வணக்கத்தை பெயருக்கும், பகட்டிற்கும் செய்து வருகின்றனர்.
ஹஜ் எனும் புனித பயணத்திற்கு புறப்படும் முன்னே ஊருக்கும் உறவுக்கும் சொல்லி தம்பட்டமடிப்பது, இஹ்ராம் அணிந்து ஒரு புகைப்படம், முடியை மழித்து ஒரு புகைப்படம் என்று உலகத்திற்கே ஓங்காரமிட்டு ஒளிபரப்பு செய்வது, ஹஜ்ஜை முடித்துவிட்டால் ஹாஜிகள் எனும் பட்டத்தையும் பதக்கத்தையும் குத்தி மார்தட்டிக் கொள்வது, என்பன போன்ற வழக்கங்கள் இன்று வாடிக்கையாகிவிட்டது.
பலிப் பிராணிகளை குர்பானி கொடுக்கும் பொழுதும் இந்நிலையே கையாளப்படுகிறது. ராட்சச கொம்புகளை கொண்ட, கொழுத்த பருமனை கொண்ட கடாவை வாங்கி, வீதி நெடுக உலா வந்து, ஊரே மெச்சும் வகையில் அறுத்து பலிக்கொடுக்கின்றனர். வாங்குவதற்கு வழியே இல்லையானாலும், சென்ற வருடம் கொடுத்து இந்த வருடம் கொடுக்கவில்லையென்றால் பந்தா குறைந்துவிடுமோ என்றெண்ணி கடன்பெற்று குர்பானி கொடுக்கின்றனர். அனுதினமும் ஆட்டை ஊர்வலம் கூட்டிச் சென்று, கைத்தட்டி பிகிலடித்து இஸ்லாமிய நெறியையே மாசு படுத்துகின்றனர்; தூசுப்படியச் செய்கின்றனர்.
தக்வாவா? தலைக்கனமா?
தேவன் என்பவன் தேவைகளற்றவன் என்பதே திருக்குர்ஆனின் தத்துவம். பலிக் கொடுப்பதாலோ, வழிபடுவதாலோ வல்லோனின் மாண்பு அங்குலம் அளவிற்கு கூட உயர்ந்திடவும் செய்யாது, உலர்ந்திடவும் செய்யாது! அந்த வணக்கங்களில் எதிர்பார்க்கப்படுவது தக்வா எனும் இறையச்சம் மட்டும்தான்.
அவைகளின் இறைச்சியோ, இரத்தமோ அல்லாஹ்வை அடையாது. மாறாக உங்கள் இறையச்சமே அவனை அடையும். அல்லாஹ், உங்களை நேர்வழியில் செலுத்தியதற்காக நீங்கள் அவனைப் பெருமைப்படுத்த வேண்டும் என்பதற்காகவே இவ்வாறு அவைகளை உங்களுக்கு வசப்படுத்தினான். நன்மை செய்வோருக்கு நற்செய்தி கூறுவீராக!
அல்குர்ஆன் (22:37)
அறுக்கப்படும் ஆடுகள் கொம்புகள் கொண்டதா, கொழுப்புகள் கொண்டதா என்பது மட்டும் முக்கியமல்ல. கவள உணவு தானமாக வழங்கப்பட்டாலும் அதில் இறை பொருத்தம் செறிந்து இருக்கிறதா என்பதே கவனிக்கப்படும்.
அவர்கள் தமது இறைவனின் பொருத்தத்தை நாடி பொறுமையைக் கடைப்பிடிப்பார்கள்; தொழுகையை நிலைநிறுத்துவார்கள். நாம் அவர்களுக்கு வழங்கியதிலிருந்து இரகசியமாகவும், பகிரங்கமாகவும் செலவிடுவார்கள். நன்மையைக் கொண்டு தீமையைத் தடுப்பார்கள். அவர்களுக்கே மறுமையில் நல்முடிவு உண்டு.
அல்குர்ஆன் (43:22)
எண்ணமா? எண்ணிக்கையா?
புகழை நாடி கொடுக்கப்படும் கோடி ரூபாய்க்கு இணையாகாது இறைப்பாதையில் வழங்கப்படும் ஒரு ரூபாய். இங்கு எண்ணிக்கையை விட எண்ணத்திற்கே அதிக கூலி வழங்கப்படும்.
‘செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொருத்தே அமைகின்றன. ஒவ்வொருவருக்கும் அவர் எண்ணியதே கிடைக்கிறது. ஒருவரின் ஹிஜ்ரத் (துறத்தல்) உலகத்தைக் குறிக்கோளாகக் கொண்டிருந்தால் அதையே அவர் அடைவார். ஒரு பெண்ணை நோக்கமாகக் கொண்டால் அவளை மணப்பார். எனவே, ஒருவரின் ஹிஜ்ரத் எதை நோக்கமாகக் கொண்டதோ அதுவாகவே அமையும்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல்: ஸஹீஹுல் புகாரி (1)
ஊரையும் உறவையும் துறந்துச் செல்லும் ஹிஜ்ரத் எனும் புனித பயணத்திற்கே எண்ணம் தான் முக்கியமானது.
நயவஞ்சகர்கள் அல்லாஹ்வை ஏமாற்ற நினைக்கின்றனர். ஆனால் அவன் அவர்களை ஏமாற்றக் கூடியவன். அவர்கள் தொழுகையில் நின்றால் சோம்பேறிகளாகவும், மக்களுக்குக் காட்டுவதற்காகவும் நிற்கின்றனர். அவர்கள் மிகக் குறைவாகவே தவிர அல்லாஹ்வை நினைப்பதில்லை.
அல்குர்ஆன் (4:142)
மக்கள் மெச்ச வேண்டும், புகழின் உச்சத்தை எட்ட வேண்டும் என்று அமல்கள் செய்பவர்களை நரகத்தின் அடித்தட்டில் கருகப்படும் நயவஞ்சகர்கள் என உரைக்கிறது இவ்வசனம்.
வணங்குவதற்கு தகுதியானவன் ஓர் இறைவன் மட்டும்தான் என ஏற்றுக் கொண்டால் மட்டுமே இஸ்லாமிய எல்லையை தொட முடியும். அப்படி படைத்தவனின் முகத்தை நாடி செய்யப்பட வேண்டிய வணக்கத்தை படைப்பினங்களின் முகத்தை நாடி செய்தால், அதை சிறிய இணைவைத்தல் என்று சொல்லுகிறது இஸ்லாம்.
“நான் உங்கள் மீது மிகவும் பயப்படுவது சிறிய இணை வைத்தலாகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது நபித்தோழர்கள், “அல்லாஹ்வின் தூதரே! சிறிய இணை வைத்தல் என்றால் என்ன?” என்று கேட்டனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “ரியா (முகஸ்துதி)” என்று பதிலளித்தார்கள். “நீங்கள் உங்கள் அமல்களை உலகத்தில் யாருக்குக் காட்டுவதற்காகச் செய்தீர்களோ அவர்களிடம் செல்லுங்கள். அவர்களிடம் கூலி கிடைக்குமா என்று பாருங்கள்” என்று அடியார்களின் அமல்களுக்குக் கூலி கொடுக்கும் நாளில் அல்லாஹ் கூறி விடுவான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல்: அஹ்மத் (23630)
எவருடைய திருப்தியை நாடி நாம் அமல்கள் செய்தோமோ அவரிடமிருந்தே நாம் கூலியை பெற்றுக் கொள்ள முடியும். அது மறுமையில் எந்த பயனையும் பயக்காது.
மறுமைக்கா? பெருமைக்கா?
மறுமை நாளில் மக்களில் முதல் முதலில் தீர்ப்பு வழங்கப்படுபவர் யாரெனில், இறைவழியில் உயிர்த் தியாகம் செய்தவரே ஆவார். அவர் இறைவனிடம் கொண்டுவரப் படும்போது, அவருக்குத் தான் வழங்கியிருந்த அருட்கொடைகளை இறைவன் எடுத்துரைப்பான். அவற்றை அவர் அறிந்துகொள்வார். பிறகு, “அந்த அருட்கொடைகளில் நீ எவ்விதம் செயல்பட்டாய்?” என்று இறைவன் கேட்பான். அவர், “(இறைவா!) உனக்காக நான் அறப்போரில் ஈடுபட்டு என் உயிரையே தியாகம் செய்தேன்” என்று பதிலளிப்பார்.
இறைவன், “(இல்லை) நீ பொய் சொல்கிறாய். (நீ எனக்காக உயிர்த் தியாகம் செய்யவில்லை.) மாறாக, “மாவீரன்” என்று (மக்களிடையே) பேசப்படுவதற்காகவே நீ போரிட்டாய். அவ்வாறு சொல்லப்பட்டுவிட்டது. (உனது நோக்கம் நிறைவேறிவிட்டது)” என்று கூறுவான். பிறகு இறைவனின் கட்டளைப்படி முகம் குப்புற இழுத்துச் செல்லப்பட்டு, அவர் நரகத்தில் எறியப்படுவார்.
பிறகு கல்வியைத் தாமும் கற்று அதைப் பிறருக்கும் கற்பித்தவரும் குர்ஆனைக் கற்றுணர்ந்தவருமான (மார்க்க அறிஞர்) ஒருவர் (இறைவனிடம்) கொண்டுவரப்படுவார். அவருக்குத் தான் வழங்கியிருந்த அருட்கொடைகளை இறைவன் எடுத்துரைப்பான். அவற்றை அவர் அறிந்து கொள்வார். பிறகு “அந்த அருட்கொடைகளில் நீ எவ்விதம் செயல்பட்டாய்?” என்று இறைவன் கேட்பான். அவர், “(இறைவா!) கல்வியை நானும் கற்று, பிறருக்கும் அதை நான் கற்பித்தேன். உனக்காகவே குர்ஆனை ஓதினேன்” என்று பதிலளிப்பார்.
அதற்கு இறைவன், “(இல்லை) நீ பொய் சொல்கிறாய். (எனக்காக நீ கல்வியைக் கற்கவுமில்லை; கற்பிக்கவுமில்லை.)”அறிஞர்” என்று சொல்லப்பட வேண்டும் என்பதற்காகவே நீ கல்வி கற்றாய்; “குர்ஆன் அறிஞர்” என (மக்களிடையே) பேசப்படுவதற்காகவே நீ குர்ஆனை ஓதினாய். அவ்வாறு சொல்லப்பட்டுவிட்டது (உனது நோக்கம் நிறைவேறி விட்டது)” என்று கூறுவான். பிறகு இறைவனின் கட்டளைப்படி முகம் குப்புற இழுத்துச் செல்லப்பட்டு, அவர் நரகத்தில் எறியப்படுவார்.
பிறகு இறைவன் தாராளமான வாழ்க்கை வசதிகளும் அனைத்து விதமான செல்வங்களும் வழங்கியிருந்த பெரிய செல்வர் ஒருவர் இறைவனிடம் கொண்டுவரப்படுவார். அவருக்குத் தான் வழங்கியிருந்த அருட்கொடைகளை இறைவன் எடுத்துரைப்பான். அவற்றை அவர் அறிந்துகொள்வார். பிறகு, “அந்த அருட்கொடைகளில் நீ எவ்விதம் செயல்பட்டாய்?” என்று இறைவன் கேட்பான். அதற்கு அவர், “நீ எந்தெந்த வழிகளில் எல்லாம் பொருள் செலவழிக்கப்படுவதை விரும்புகிறாயோ, அந்த வழிகளில் எதையும் விட்டுவிடாமல் அனைத்திலும் நான் உனக்காக எனது பொருளைச் செலவிட்டேன்” என்று பதிலளிப்பார்.
அதற்கு இறைவன், “(இல்லை) நீ பொய் சொல்கிறாய் “இவர் ஒரு புரவலர்” என (மக்களிடையே) பேசப்படுவதற்காகவே நீ இவ்வாறு (செலவு) செய்தாய். (உன் எண்ணப்படி) அவ்வாறு சொல்லப்பட்டுவிட்டது. (உனது எண்ணம் நிறைவேறிவிட்டது)” என்று கூறிவிடுவான். பிறகு இறைவனின் கட்டளைப்படி முகம் குப்புற இழுத்துச் செல்லப்பட்டு, அவர் நரகத்தில் எறியப்படுவார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல்:ஸஹீஹ் முஸ்லிம் (3865)
உயிரைக் காட்டிலும் பெரியது இவ்வுலகில் ஏதுமில்லை. அத்தகைய உயிரை பெருமைக்காக இழந்தவரின் மறுமை நிலை வெறுமைதளமாய் ஆகிவிட்டது. பகட்டுக்காக இழக்கப்படும் உயிருக்கே மறுமையில் மதிப்பில்லாத பொழுது, இறையச்சம் இல்லாமல் கொடுக்கப்படும் குர்பானிகள் குப்பைக்கு இணையானது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
இறைநம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வின்மீதும், மறுமை நாள்மீதும் நம்பிக்கை கொள்ளாமல், மக்கள் பார்க்க வேண்டும் என்பதற்காகத் தன் செல்வத்தைச் செலவிடுபவனைப் போன்று, சொல்லிக் காட்டியும் நோவினை செய்தும் உங்கள் தர்மங்களை வீணாக்கி விடாதீர்கள். இத்தகையவனுக்கு எடுத்துக்காட்டு, மண் படிந்திருக்கும் ஒரு வழுக்குப் பாறையின் தன்மையைப் போன்றது. அதில் பெருமழை பொழிந்து அதை வெறும் பாறையாக ஆக்கிவிட்டது. அவர்கள், தாம் சம்பாதித்தவற்றிலிருந்து எந்தப் பலனையும் அடைய மாட்டார்கள். இறைமறுப்பாளர்களின் கூட்டத்திற்கு அல்லாஹ் நேர்வழி காட்ட மாட்டான்.
அல்லாஹ்வின் பொருத்தத்தைத் தேடுவதற்காகவும், தமது உள்ளங்களிலுள்ள உறுதிப்பாட்டின் காரணமாகவும் தமது செல்வங்களைச் செலவு செய்வோர்க்கு எடுத்துக்காட்டு, உயரமான இடத்திலுள்ள தோட்டத்தைப் போன்றது. அதில் பெருமழை பொழிந்ததும் அது இரு மடங்கு விளைச்சலைத் தந்த்து. பெருமழை பொழியாவிட்டாலும் சிறு தூறல் போதுமானது. நீங்கள் செய்வதை அல்லாஹ் பார்ப்பவன்.
அல்குர்ஆன் (2:264,265)
பெருமைக்கும் புகழுக்கும் நாம் செலவு செய்வது வழுக்குப் பாறைகளில் விழும் மழைத்துளிகளை போல் சருகிச் சென்று விடும். நன்மையை நாடி நாம் செய்யும் தர்மங்களே தோட்டத்துக் கனிகளாய் பயனளிக்கும்.
ஜுன்துப் இப்னு அப்தில்லாஹ் (ரலி) அறிவித்தார்.
நான் நபி (ஸல்) அவர்களுக்கு அருகில் சென்றேன். அப்போது அவர்கள் ‘விளம்பரத்திற்காக நற்செயல் புரிகிறவர் (உடைய நோக்கம்) பற்றி அல்லாஹ் (மறுமை நாளில்) விளம்பரப்படுத்துவான். முகஸ்துதிக்காக நற்செயல் புரிகிறவரை அல்லாஹ் (மறுமை நாளில்) அம்பலப்படுத்துவான்’ என்று கூறியதைக் கேட்டேன்.
நூல்: புகாரி (6499)
ஆக, விளம்பரங்கள் செய்து நம்முடைய வணக்கத்தை விரையமாக்கிவிடாமல் எந்த சரித்திரத்தை நினைவுபடுத்துவதற்காக இப்பண்டிகை நமக்கு வழிமொழியப்பட்டிருகிறதோ அதை அச்சு பிசுகாமல் அல்லாஹ்வின் பொருத்தத்தோடு செயல்படுத்தக் கூடிய வாய்ப்பினை வல்லோன் நம்மவர்களுக்கு வழங்க வேண்டும்!