முஹம்மது(ஸல்) அவர்களின் அழகிய வரலாறு – பகுதி 6

வழி பிறந்தது

நபியவர்கள் தன் தோழர்களுக்காக கவலைப்பட்டார்கள்..

மக்காவாசிகளின் இந்த அராஜகங்கள் தொடர்வது நபியவர்களுக்கு கவலையளித்தது..

தன் தோழர்களின் காயங்களுக்கு நபியவர்கள் ஆறுதலளித்தார்கள்..

இந்த குரைஷிகளை எவ்வாறு தான் நிறுத்துவது..??

தன்னை தாக்குவதை நபியவர்கள் சகித்தார்கள்..

ஒரு முறை கஃபா பகுதியில் இறைவனை வணங்கும் போது நபியின் கழுத்தில் ஒட்டகத்தின் மலக்குடலை கொண்டு வந்து போட்டான் உக்பா என்ற அறிவிலி…

தன் மகள் பாத்திமா (ரலி ) வந்து அதை  அப்புறப்படுத்தும் வரை நபியவர்களால் எழ முடியவில்லை…

பகைவர்களை பார்த்துக்கொள்ளும் படி இறைவனிடம் கேட்டுவிட்டு நகர்ந்தார்கள்…

ஆனால் தன் சகாக்கள் ..??

இஸ்லாத்தை ஏற்ற ஏனையவர்களை இந்த குரைஷிகள் படுத்தும் பாடு……??

நபியவர்கள் இறைவனிடம் கையேந்தி பிரார்த்தனை செய்தார்கள்..

இறைவன் ஹிஜ்ரத் (நாடு துறந்து செல்தல்) செய்ய வழிகாட்டினான்..

“அல்லாஹ்வின் பூமி விசாலமானதாக இல்லையா??”(4:97) இறைவன்  கேள்வி எழுப்பினான்…

நபியவர்கள் தன் சகாக்களை இந்த மக்கா நகரை விட்டு பாதுகாப்பான வேறு பிரதேசங்களுக்கு அனுப்ப தீர்மானித்தார்கள்..

எங்கே அனுப்பலாம்??

பல வித ஆலோசனைகளுக்கு பிறகு..

அரபு கண்டத்தின் மேற்கு பகுதியில் கடல் கடந்தால் வரும் அபீசீனிய நாடு(இன்றைய எத்தியோப்பியா) தெரிவு செய்யப்பட்டது..

மன்னர் நஜ்ஜாஷி ஆண்டு கொண்டிருந்தார் ..

அவர் ஒரு கிறிஸ்தவர்…

நல்லவர்..

நீதமானவர்…

அங்கே சென்றால் நிம்மதியாய் வாழலாம் என்று முதலில் ஒரு சிலபேர் கொண்ட குழு மக்காவை விட்டு தப்பி கடல் கடந்து ஹிஜ்ரத் செய்தது..

அவர்களை தொடர்ந்து நபி(ஸல்) அவர்களின் மகள் ,மருமகன் உஸ்மான் (ரலி), ஜஅஃபர் பின் அபீதாலிப்(ரலி), உட்பட சிலர் அபீசினாவிற்கு கப்பலேறினர்..

கொஞ்சம் நிம்மதியாக வாழலாம் என்று எண்ணியவர்களாக தரையிரங்கி பெருமூச்சு விட்டனர்…

 குரைஷிகள் சும்மா விடுவார்களா என்ன??

 கடும் ஆத்திரப்பட்டனர்..

இங்கிருந்து இவர்கள் தப்புவதா??

ஒருக்காலும் கூடாது…

பின்னாலேயே சில தூதுவர்களை பல வித பரிசுகளோடு அபீசீனியா அனுப்பினர் குரைஷிகள்..

அவர்களும் துரத்திக்கொண்டு அபீசினியா வந்திறங்கினர்…

அவர்கள் வேலை தொடங்கியது..

முதலில் அரசவை பாதிரிகளுக்கு விலை உயர்ந்த பரிசுகள் கொடுத்து மடக்கினர்…

பின் அவர்களது பரிந்துரையின் பேரில் அரசவையில் சென்று தாங்கள் கொண்டு வந்திருந்த விலை உயர்ந்த பரிசில்களை மன்னரிடம் சமர்ப்பித்து..

குரைஷிகளின் சார்பாக அம்ர் பின் ஆஸ் பேசினார்…

“”

அரசே!

எங்கள் ஊரிலிருந்து சில வாலிபர்கள் உங்கள் ஊருக்கு வந்துள்ளனர்..

அவர்கள் தங்கள் இனத்தவர்களின் மார்க்கத்தை விட்டு வெளியேறி விட்டனர்..

உங்கள் மார்க்கத்தையும் ஏற்றுக்கொள்ளாமல் உங்களுக்கும் நமக்கும் தெரியாத ஒரு புதிய மார்க்கத்தை பின்பற்றுகின்றனர்..

இவர்களின் பெற்றோர் மற்றும் உறவினர் அனைவரும் இவர்களை அழைத்து வருவதற்காக எங்களை இங்கு அனுப்பியுள்ளார்கள்..

இவர்களை. எங்களுடன் திருப்பி அனுப்புங்கள் அரசே!!      “”

என்றனர்..

உடனே மதகுருக்கள், “ஆம் அரசே இவர்கள் உண்மையை தான் கூறுகிறார்கள். அவர்களை இவர்களிடம் ஒப்படைத்து விடுங்கள்..அவர்கள் இனத்தவர்களை அவர்களே அழைத்து செல்லட்டும்”

மன்னர் என்ன சொல்லப் போகிறார்..?.

அனைவரும் எதிர்நோக்கினர்…

மன்னரின் முடிவு

மன்னர் என்ன சொல்லப்போகிறார்??

அனைவரும் நோக்கினர்..

அவர்களை தங்களோடு மன்னர் அனுப்ப போகிறார்..குரைஷிகள் எதிர்பார்த்தனர்..

அவர் தான் நீதமான மன்னராயிற்றே!!??

விசாரணை செய்ய முடிவெடுத்தார்..

முஸ்லிம்கள் அழைத்துவரப்பட்டனர்..

சபை நிசப்தமாக இருந்தது..

” உங்கள் இனத்தை விட்டுப்பிரிந்து என் மார்க்கத்தையும் மற்றவர்களின் மார்க்கத்தையும் ஏற்றுக்கொள்ளாமல் புதுமையான மார்க்கத்தை ஏற்றிருக்கிறீர்களே!! அது என்ன மார்க்கம்????” – மன்னர் நஜ்ஜாஷி

முஸ்லிம்களுக்கு தலைமை ஏற்ற ஜஅஃபர் இப்னு அபுதாலிப்(ரலி)

பதிலளிக்க ஆரம்பித்தார்..

“அரசே!

நாங்கள் அறியாமைக் காலத்தில் இருந்தோம்..

சிலைகளை வணங்கினோம்..

இறந்த பிராணிகளை உண்டோம்..

மானக்கேடானவைகளை செய்தோம்..

உறவுகளைத் துண்டித்தோம்..

அண்டை வீட்டாரை துன்புறுத்தினோம்..

எங்களில் எளியோரை வலியோர் விழுங்கி வந்தனர்..

அந்த சமயத்தில் தான் எங்களிலிருந்தே ஒருவரை அல்லாஹ் எங்களுக்கு தூதராக அனுப்பினான்.

அவரின் வம்சத்தையும் அறிவோம்..

அவர் உண்மையாளர், நம்பகத்தன்மை மிக்கவர், மிக ஒழுக்தசீலர் என்பதையும் நாங்கள் அறிவோம்…

நாங்கள் அல்லாஹ் ஒருவனையே வணங்க வேண்டும்..

நாங்களும் எங்கள் மூதாதையரும் வணங்கி வந்த கற்சிலைகள் , புனித ஸ்தலங்கள் போன்றவற்றிலிருந்து விலக வேண்டும்..

உண்மையே உரைக்க வேண்டும்..

அமானிதத்தை நிறைவேற்ற வேண்டும்..

உறவினரோடு சேர்ந்து வாழ வேண்டும்..

அண்டை வீட்டாருடன் அழகிய முறையில் நடந்து கொள்ள வேண்டும்..

அல்லாஹ் தடைசெய்தவற்றையும் கொலைக் குற்றங்களையும் விட்டு விலகிட வேண்டும் என்றும்

அத்தூதர் எங்களுக்கு கட்டளையிட்டார்.

மேலும்,

மானக்கேடானவை, பொய், அநாதை சொத்தை அபகரித்தல், அவதூறு  கூறுதல், போன்றவற்றிலிருந்து தடுத்தார்..

அல்லாஹ் வுக்கு இணைவைக்காமல் அவனை மட்டுமே வணங்கி, தொழுது, நோன்பு நோற்று, ஜகாத் கொடுக்கவும் கட்டளையிட்டார்…

நாங்கள் அவரை உண்மையாளராக நம்பினோம், அவரை விசுவாசித்தோம்,

அவர் சொல்லித்தந்த அல்லாஹ்வின் மார்க்கத்தை பின்பற்றினோம்… அல்லாஹ் ஒருவனையே வணங்க ஆரம்பித்தோம்..

இணைவைப்பை விட்டுவிட்டோம்..

அவன் விலக்கியவற்றிலிருந்து விலகிக் கொண்டோம்..

அவன் ஆகுமாக்கியதை ஏற்றுக்கொண்டோம்..

இதனால்..

எங்கள் இனத்தவர் எங்கள் மீது அத்துமீறினர்..எங்களை வேதனை செய்தர். மீண்டும் சிலைகளை வணங்க வேண்டும்.. முன்பு போல கெட்டவற்றை செய்ய வேண்டும் என்று முயற்சித்து எங்களை எங்கள் மார்க்கத்தை விட்டு திருப்ப நிர்பந்தித்தனர்..

அப்போது தான் உங்கள் நாட்டுக்கு வந்தோம் ..உங்களை தேர்ந்தெடுத்தோம்..

உங்களிடம் தங்குவதற்கு விரும்புகிறோம்..

இங்கு அநீதி இழைக்கப்படாது என்று நம்புகிறோம்….””

ஒரு உரையே நிகழ்த்தி விட்டார் ஜஅஃபர் …

“அல்லாஹ் வின் புறத்திலிருந்து அவர் கொண்டுவந்த ஏதாவது உம்மிடம் உள்ளதா??” – நஜ்ஜாஷி மன்னர்.

“ஆம்”

“காட்டு”

மர்யம் அத்தியாயத்தை ஓத தொடங்கினார்..

காஃப் ஹா யா ஐன் சாத்…….

………………………………………………….

மன்னரின் கண்களிலிருந்து வழிந்த

கண்ணீர் அவரது தாடியை நனைத்து தரையில் சொட்டியது..

அதைக்கண்ட அனைவருக்கும் வந்த கண்ணீர் நிற்கவில்லை..

ஏடுகள் நனைந்து விட்டன…

“இதுவும் ஈசாவின் மார்க்கமும் ஒரே மாடத்திலிருந்து வெளியானது…

நீங்கள் சென்று விடுங்கள்… இவர்களை உங்களுடன் அனுப்ப மாட்டேன்””  – மன்னரின் ஆவேசம் அம்ர் பின் ஆஸை தோற்க்கச்செய்தது..

அம்ர் யோசித்தார்..

சிந்தையில் உதித்தது புதிய திட்டம்…

மறுநாள் அரசவையில்…..

பலிக்காத தந்திரம்

மறுநாள் அரசவையில்..

அம்ரு மன்னரிடம் வந்தார்..

” அரசே..இவர்கள் ஈசாவின் விஷயத்தில் அபாண்டமான வார்த்தை யை கூறுகிறார்கள்”

“அப்படியா?!

அவர்களை என்னிடம் அழைத்து வாருங்கள்..”

முஸ்லிம்கள் வந்தனர்..

விசாரணை நடந்தது..

முஸ்லிம்கள்,

“எங்கள் நபி ஸல் கூறியதைத்தான் அவர் விஷயத்தில் கூறுகிறோம் ..அவர்(இயேசு) அல்லாஹ் வின் அடிமை; அவனது தூதர்; அவனால் உயிர் ஊதப்பட்டவர்; கண்ணியமிக்க கன்னிப்பெண் மர்யமுக்கு அல்லாஹ்வின் சொல்லால் பிறந்தவர்” – ஜஅஃபர் (ரலி) கூறினார்..

மன்னர் ஒரு சிறிய குச்சியை கீழே இருந்து எடுத்தார்..

“அல்லாஹ்வின் மீது சத்தியமாக(- அரபுகள் அனைவரும் இறைவனுக்கு அல்லாஹ் என்றே கூறுவார்கள்-)

மர்யமின் மகன் ஈசா இந்த குச்சி அளவிற்கு கூட நீ கூறியதை விட அதிகமாக கூறியதில்லை””

முகம் சுழித்த மதகுருமார்களை நோக்கி..” நீங்கள் முகம் சுழித்தாலும் இதுவே உண்மை”

என்று சொன்னார் நஜ்ஜாஷி மன்னர்..

ஒவ்வொரு தலைவருக்கும் வாய்மையே அழகும் அணிகலனுமாகும்..

நேர்மை தவறாத அந்த மன்னர் முஸ்லிம்கள் அந்த நாட்டில் அச்சமின்றி வாழ உறுதியளித்தார்..

ஆக ஹபஷா சென்றவர்கள் இந்த குறைஷியர்களின் கொடுமைகளிலிருந்து கொஞ்சம் பாதுகாப்பு பெற்றனர்.

குரைஷிகள் நாடுதிரும்பினர்..

கடும் கோபத்தில் இருந்தார்கள் மக்கா நகர பிரமுகர்கள்..தங்கள் செல்வமும் செல்வாக்கும் இந்த முஹம்மது (ஸல்) ன் கொள்கையால் அழிந்து விடுமோ என்று அஞ்சினார்கள்.

எனவே எப்படியாவது தீர்த்து கட்டுவது என்று முடிவெடுத்து சந்தர்ப்பத்திற்காக காத்து கிடந்தார்கள்..

உமர் , ஹம்ஸா போன்ற அரேபிய சிங்கங்கள் இஸ்லாத்தை தழுவிய நேரமிது..

தங்களின் மதிப்புமிக்கவர்களும் இஸ்லாத்தை ஏற்றதை அவர்களால் ஜீரணிக்க இயலவில்லை..

குரைஷிகள் நபியவர்களிடம் வந்து பல விதமான விதண்டாவாதங்களை எழுப்பினர்..

நபியவர்கள் சொன்னார்கள்..

நான் உங்களைப் போன்ற சாதாரன மனிதனே..இறைவனிடமிருந்து எனக்கு செய்தி வருகிறது என்பதை தவிர வேறு ஒன்றும் இல்லை..

இவரின் இந்த போங்கு அவர்களை எரிச்சலூட்டியது..

என்ன உணர்ச்சிவயப்படுத்தினாலும் மென்மை.. மக்களிடம் கெட்ட பேர் இருந்தால்கூட அடித்து  துவைத்து விடலாம்..

நபியவர்களின் பெரிய தந்தை நபியை காக்கும் கேடயமாக விளங்கினார். அவர் இருக்கும் வரை நபியை ஒன்றுமே செய்ய இயலவில்லை..

இஸ்லாம் அமைதியாக வளர்ந்தது.

நபியவர்களது நற்பண்புகளுக்கு முன் அவர்களது திட்டங்கள், வசை சொற்கள் செல்லாக்காசாகின .

கவலை ஆண்டு

ஹிஜ்ரி பத்தாம் ஆண்டு ஒரு நாள் அபுதாலிப் சுகவீனமாக படுக்கையில் வீழ்ந்தார்.

அவர் மரணத்தருவாயை நெருங்கியிருந்த நேரத்தில் நபியவர்கள் , “என் தந்தையின் சகோதரரே! லா இலாஹ இல்லல்லாஹ் என்று கூறிவிடுங்கள்.நான் அல்லாஹ்விடம் உங்களுக்காக வாதிடுவேன்” என்று கூறினார்கள்.

அங்கிருந்த அபுஜஹ்ல், “அபுதாலிபே! அப்துல் முத்தலிப்பின் மார்க்கத்தையா நீர் புறக்கணிக்கப்போகிறீர்?”என்று திரும்ப திரும்ப கூறினர்.

இறுதியில் அபுதாலிப் நான் அப்துல் முத்தலிப்பின் மார்க்கத்தில் தான் நான் இருக்கிறேன் என்று கூறி மரணித்தும் விட்டார்..

அபுதாலிபின் மரணம் நபியவர்களைத் துளைத்தது.

நபியவர்களைத்   தந்தை போல்  பாதுகாத்து , அரவணைத்து , உறுதுணையாய் இருந்த அடிமரம் வேரற்று சாய்ந்தது .

நபியவர்கள் கவலையுடன் பிரார்த்தனை செய்தார்கள்.

இறைவன் , இறைமறுப்பாளர்களுக்காக பாவமன்னிப்பு தேடுவதை தடுத்து விட்டான்..(பார்க்க: குர்ஆன்(9:113))

சில மாதங்கள உருண்டோடின .

ஒரு நாள் நபியவர்களின் மனைவி கதீஜா(ரலி) அவர்களும் மரணித்தார்கள்.

நபியவர்கள் கடும் கவலையில் ஆழ்ந்தார்கள்..

தாயின்றி குழந்தைகள் தவிப்பது போல் , தன் ஒவ்வொரு விசயத்திலும் பக்கபலமாய் இருந்த அன்பு மனைவியின் பிரிவு நபியவர்களை சோகத்தில் ஆழ்த்தியது .

நபியவர்கள் தனிமரமாய்த் தன்னை உணர்ந்தார்கள் .

தன் பாசத்துக்குரிய பெரியப்பாவும் தன் அன்பின் மனைவியையும் இழந்த அந்த ஆண்டு வரலாற்றில் கவலை ஆண்டென குறிப்பிடப்படுகிறது.

இந்த நிலையிலும் நபியவர்கள் கொண்ட கொள்கையிலிருந்து பின்வாங்கவில்லை.பிரச்சாரத்தை நிறுத்தவில்லை..

இந்த மக்கா நகர மக்கள் எவ்வளவு சொன்னாலும் புரிந்துகொள்ள மறுக்கின்றனர்.

நபியவர்கள் தாயிஃப் சென்றார்கள்.

தாயிஃப் ஒரு அழகான ஊர். மக்காவிலிருந்து சற்று தொலைவில் உள்ளது.

அங்கே கினானா இப்னு அப்து யாலில் என்பவன் தலைவராக இருந்தான்..

அவனிடம் நபியவர்கள் தங்கள் கொள்கையை எடுத்து சொன்னார்கள்.

நபியவர்கள் எதிர்பார்த்தது வேறு..

ஆனால் அங்கே நடந்ததோ வேறு..