ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்ற வாசகத்தைக் கேள்விப்படாத மனிதர்கள் யாரும் இருக்க முடியாது. என்னதான் இப்படியொரு வாசகத்தைக் காது கொடுத்துக் கேட்டாலும் இஸ்லாமியர்களைத் தவிர மற்றவர்களில் பெரும்பாலானவர்களின் உள்ளம் இதனை ஏற்றுக் கொள்வதில்லை. ஏனெனில் இஸ்லாமிய மார்க்கம் மட்டுமே இறைவன் ஒருவன் என்பதை ஆணித்தரமாகவும் ஆழமாகவும் போதிக்கின்றது. படைப்பாளன், பரிபாலிப்பவன் அனைத்தும் ஒரே இறைவன் மட்டும்தான் என்ற கருத்தில் எள்முனையளவும் பிரளாமல் இருக்கின்றது.
இறைவன் ஒருவன்தானா?
இவ்வுலகில் எத்தனையோ மதங்கள் உள்ளன. அம்மதங்கள் அனைத்தும் இறைவன் ஒருவன் என்றுதான் போதிக்கின்றனவா என்று பார்த்தால், இன்று உலகில் பரவலாகப் பின்பற்றப்படும் மதங்களின் கோட்பாடுகள் ஓரிறைக் கொள்கையையே போதிக்கின்றன. ஆனால் அது காலப்போக்கில் மாற்றப்பட்டு, மறைக்கப்பட்டு விட்டது. உதாரணமாக, பிரபலான சில மதங்களின் கோட்பாடுகளைப் பற்றிப் பார்ப்போம்.
இந்து மதத்தின் கடவுள் கொள்கை
இந்து மக்களைப் பொறுத்த வரையில் ஆக்க ஒரு கடவுள், அழிக்க ஒரு கடவுள், பரிபாலிக்க ஒரு கடவுள் எனவும், இவை தவிர அய்யனார், கருப்பசாமி, மாரியம்மன், பேச்சியம்மன் என்ற பெயர்களில் குலதெய்வங்களாகவும் எண்ணற்ற கடவுள்களை வணங்கி வருகின்றனர்.
இந்து மதத்தில் சிலரிடம் முக்கடவுள் நம்பிக்கையும், சிலரிடம் ஆயிரக்கணக்கான கடவுள் நம்பிக்கையும், சிலரிடம் கோடிக்கணக்கான கடவுள் நம்பிக்கையும் இருக்கின்றது. ஆனால் இந்து மதத்தில் ஞானம் பெற்ற பண்டிதர்கள் பலர் ஒரே இறைவன் தான் இருக்கின்றான், அவனைத்தான் வணங்க வேண்டும் என்று நம்புகிறார்கள். அதை வலியுறுத்தவும் செய்கிறார்கள். ஏன்?
பண்டிதர்கள் மட்டும் ஒரு கடவுள் கொள்கையில் உள்ளவர்கள் என்றால் அவர்கள் தங்கள் வேத நூற்களைப் படித்து முழுமையாகப் புரிந்து கொண்டவர்களாக இருப்பார்கள்.
ஏக தெய்வக் கொள்கையைப் பறைசாற்றும் இந்து மத வேத சுலோகங்கள் சிலவற்றைப் பார்ப்போம்.
அந்நத்த ஆசைகளால் அறிவிழந்தவர்கள் அந்நத்த நியமத்தைக் கொண்டு தம்முடைய இயல்புகளுக்குக் கட்டுண்டு, கவரப்பட்டவர்களாய் வேறு தெய்வங்களை வழிபடுகின்றனர்.
(பகவத்கீதை 7:20)
பகவத் கீதையில் உள்ள இந்த சுலோகம் எதைக் கூறுகிறது? என்ன கருத்து இதில் பொதிந்துள்ளது என்று பார்த்தோமானால் உலக ஆசைகளால் கவரப்பட்டு அவரவர் விருப்பப்படி போலி தெய்வங்களை ஏற்படுத்திக் கொண்டு உண்மையான தெய்வத்தை விட்டுவிட்டனர் என்பதைக் கூறுகின்றது.
இந்துக்களின் புனிதக் கிரந்தங்களாகக் கருதப்படுபவைகளில் உபநிஷத்துகள் முக்கியமானவை. அவையும் இறைவன் ஒருவன் தான் என்று பறைசாற்றுகின்றன.
ஏகம் ஏவம் அத்வியதம்
அவன் ஒருவனே! வேறு எவரும் இல்லை.
(சந்தக்யோ உபநிஷத் 6:21)
நா கஸ்ய கஸ்சிச் ஜனித நா கதிபத்
அவனுக்குப் பெற்றோரும் இல்லை. பாதுகாவலரும் இல்லை.
(ஸ்வதேஸ்வதரா உபநிஷத் 6:9)
இந்த சுலோகங்கள் திருக்குர்ஆனை ஆணித்தரமாக மெய்ப்பிக்கின்றன.
அளவிலா அருளாளன், நிகரிலா அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்…
1. (நபியே!) நீர் கூறுவீராக: அல்லாஹ் ஒருவனே!666
2. அல்லாஹ், தேவைகள் அற்றவன்.
3. அவன் (யாரையும்) பெறவில்லை. (யாராலும்) பெற்றெடுக்கப்படவும் இல்லை.
4. அவனுக்கு நிகராக எவருமே இல்லை.
(அல்குர்ஆன் 112:1-4)
உங்கள் கடவுள் ஒரே கடவுள்தான். அளவிலா அருளாளனும் நிகரிலா அன்பாளனுமாகிய அவனைத் தவிர எந்தக் கடவுளும் இல்லை.
(அல்குர்ஆன் 2:163)
இந்துக்களின் கடவுள் கொள்கையைப் பொறுத்த வரையில் அவர்களில் ஒவ்வொரு பிரிவினரும் தத்தமனது விருப்பத்திற்கேற்ப தங்கள் கடவுளைப் போலியாக ஏற்படுத்திக் கொண்டுள்ளனர் என்று அவர்களின் வேதமே கூறுகின்றது.
இதுதான் தம்முடைய மதம், தம் மதத்தின் வழிமுறைகள் இதுதான் என பின்வந்தவர்கள் தங்கள் சமுதாயத்தின் மனதில் பதித்து விட்டனர். அந்த நம்பிக்கையும் கோட்பாடுகளுமே இன்றளவும் உண்மை என நம்பப்பட்டு பலரால் பின்பற்றப்பட்டும் வருகின்றது.
இந்து மதக் கிரந்தங்களில் உயர்ந்ததாகக் கருதப்படுபவை வேதங்கள். அந்த வேதங்கள் மொத்தம் நான்கு. அவை, ரிக் வேதம், யசூர் வேதம், சாம வேதம், அதர்வன வேதம் ஆகியவையாகும்.
இந்த நான்கு வேதங்களும் கூட இறைவன் ஒருவன் மட்டும்தான் என்றே போதிக்கின்றன.
அன் தாதம ப்ரவிஸண்தி ஏ அசம்பூதி முபாசதே
எவர்கள் இயற்கை வஸ்துகளை வணங்குகின்றார்களோ அவர்கள் இருளில் பிரவேசிக்கின்றார்கள். இன்னும் எவர்கள் மனிதனால் படைக்கப்பட்ட பொருட்களை வணங்குகிறார்களோ அவர்களும் இருளில் ஆழமாக மூழ்குகின்றனர்.
(யசூர் வேதம் 40:9)
இயற்கை வஸ்துகள் என்பவை காற்று, நீர், நெருப்பு, மலைகள், மரங்கள் போன்றவையாகும்.
சம்பூதி – மனிதனால் படைக்கப்பட்டவை. அதாவது, மேசை, நாற்காலி, கற்சிலைகள் போன்றவையாகும்.
இவை போன்றவற்றை யாரெல்லாம் வணங்குகின்றார்களோ அவர்களை, இருளில் மூழ்கியவர்கள், அறிவீனர்கள் என்று இந்துக்களின் புனித நூலான யசூர் வேதம் கூறுகின்றது.
தேல் மஹா ஓசி
நிச்சயமாகக் கடவுள் மிகப் பெரியவன் ஆவான்.
(அதர்வன வேதம் 20:58:3)
இன்னும் இதுபோன்ற பல சுலோகங்கள் கடவுள் என்பவன் ஒருவன் மட்டும்தான் என்பதைப் போதிக்கின்றன. ஆனால் இந்த வேதங்கள் பாமர இந்து மக்களுக்கு முழுமையாகவும், தெளிவாகவும் விளக்கப்பட்டு போதிக்கப்படுவதில்லை. இந்து வேதங்களைக் கையாளும் பண்டிதர்கள், இந்து மக்களிடம் ஏக தெய்வக் கொள்கையை மறைத்து, இருட்டடிப்புச் செய்து அவர்களின் வாழ்வியல் வழிமுறைகளையும் தேவ தத்துவங்களையும் மாற்றி விட்டார்கள்.
உங்கள் இறைவன் ஒருவனே என்பது போன்ற திருக்குர்ஆன் வசனங்களை மென்மேலும் மெய்ப்பிக்கின்றன பகவத் கீதை, ரிக், யசூர், சாம, அதர்வன வேதங்கள்.
இவ்வாறாக விருப்பு வெறுப்பு இல்லாமல் இந்து மதக் கிரந்தங்களைப் படிக்கும்போது அவை ஏக தெய்வக் கொள்கையைத் தான் போதிக்கின்றன என்பதை நாம் சந்தேகத்துக்கிடமின்றி அறிந்து கொள்ளலாம்.
ஏகன் ஒருவன் மட்டுமே என்ற இறைவனையும், இறைவேதத்தின் வார்த்தைகளையும் மெய்ப்பிக்கும் மற்ற மதங்களின் மறைக்கப்பட்ட கொள்கை, கோட்பாடுகளை வரும் இதழில் அறிந்து கொள்வோம்,
இன்ஷா அல்லாஹ்…..