வீடு என்பது மனிதனின் அடிப்படைக் கனவுகளில் ஒன்று.
தனக்கான சொந்த வீட்டை, தான் விரும்புவது போல வடிவமைத்துக் கட்டி வாழ்வதே இறைவன் தனக்கு அருள் புரிந்துள்ளான் என்பதற்கு அடையாளம் என எண்ணுகிறான் மனிதன்.
ஆனால், அவனுக்குத் தங்குவதற்கு இப்பூமிப் பந்தில் ஓர் இடம் கிடைத்திருப்பதே இறையருள் காரணமாகத்தான் என்கிறது குர்ஆன்.
உங்களுக்குப் பூமியில் தங்குமிடமும், குறிப்பிட்ட காலம்வரை வாழ்க்கை வசதியும் உண்டு.
அல்குர்ஆன் 2:36
எனவே, நமது வீடு நமக்குச் சொந்தமானதோ இல்லையோ, ஆனால் ஒரு முஸ்லிம் வாழும் வீடு எவ்வாறு அமைய வேண்டும் என்பதை மார்க்கம் நமக்கு வழிகாட்டுகிறது.
நிம்மதிக்கான இடம்
அல்லாஹ், உங்கள் வீடுகளை உங்களுக்கு நிம்மதியளிப்பதாக ஆக்கியுள்ளான்.
அல்குர்ஆன் 16:80
இன்றைய காலத்தில் ஒவ்வொரு மனிதனும் நிம்மதியைத்தான் தேடித் திரிகிறான்.
குடும்பக் கஷ்டம், பொருளாதார நெருக்கடி, பிள்ளைகளின் எதிர்காலம், நோய் நொடி என பல்வேறு கஷ்டங்கள் மனதிற்குப் பாரமாக அழுத்தம் தரும்போது அதற்கான அருமருந்தொன்று கிடைக்காதா எனவும் மனிதன் ஏங்குகிறான்.
தனது மன அழுத்தம் நீங்க வேண்டுமென்று பல சுற்றுலாத் தலங்களை தேடிச் செல்கிறான்.
ஆனால், மனிதன் எங்கெங்கோ தேடித் திரியும் நிம்மதி அவனது வீட்டிலேயே இருக்கிறது என்கிறது குர்ஆன்.
இதைக் கேட்கும் பலருக்கு ஆச்சரியமாக இருக்கும்.
வீட்டில் நிம்மதியுள்ளதா? வியாபாரம் மற்றும் வேலைகளை முடித்து அதன் அழுத்தத்தைக் குறைக்க வீட்டிற்குச் சென்றால் அங்கே இன்னும் அதிகமான அழுத்தம் தான் ஏற்படுகிறது என்று குமுறுகின்ற பலர் உண்டு.
கொரோனா காலத்தில் வெளியில் செல்ல இயலாமல் வீட்டிற்குள் அடைந்து விழி பிதுங்கியவர்கள் பலர்.
சூழல் எவ்வாறாயினும் இறைவாக்கு பொய்யாகாது. நிம்மதியை ஒரு முஸ்லிம் தனது வீட்டிலேயே பெற்றுக் கொள்ள முடியும். மன அமைதி அடைய இயலும்.
அதைப் பெறுவதற்கு மார்க்கம் கற்றுத் தரும் சில வழிமுறைகளைப் பேண வேண்டும்.
அருள் நிறை இல்லம்
முதலில் நிம்மதி என்பது பொருளாதாரத்தால் கிடைக்கும் ஒன்றல்ல. அவ்வாறு நமக்குச் சிந்தனை இருக்குமாயின் அதைத் தூக்கி, தூர எறிந்துவிட வேண்டும்.
நிம்மதி என்பது இறைவனின் அருளால் வாழ்வை அலங்கரிக்கும் விஷயமாகும்.
தன் தூதர்மீதும், இறைநம்பிக்கையாளர்கள் மீதும் அல்லாஹ் தனது அமைதியை இறக்கினான்.
அல்குர்ஆன் 9:26
இறைவனின் அருள் என்றாலே பங்களா வீடுகளை எழுப்பி சொகுசு வாகனங்களில் வலம் வருவது என்று எண்ணுகின்ற எண்ணத்தை விட்டுவிட்டு இறையருள் என்பது நமது வாழ்வின் வளங்கள் அனைத்தையும் தருவதாகும் என்ற சிந்தனையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
மகிழ்ச்சியைத் தருவதும் இறைவனே! வாழ்வை சோதனைக்காகப் பாரமாக்குவதும் இறைவனே! இதை சரியாகப் புரிந்து கொண்டு வீட்டை நிம்மதியளிக்கும் இடமாக மாற்ற மார்க்கம் கூறும் வழியைக் காண்போம், வாருங்கள்.
நமது இல்லம் இறையருளால் நிறைந்தால் இறைவன் வாக்களித்ததைப் போல நிம்மதியை நமது வீட்டிலேயே பெற்றுக் கொள்ளலாம்.
இறையருளைப் பெற இறை நினைவு
அல்லாஹ் நினைவுகூரப்பட்டுப் போற்றப் படும் இல்லத்தின் நிலை உயிருள்ளவர்களின் நிலைக்கும், அல்லாஹ் நினைவுகூரப்பட்டுப் போற்றப்படாத இல்லத்தின் நிலை உயிரற்றவனின் நிலைக்கும் ஒத்திருக்கிறது என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல்: முஸ்லிம் 1429
இறைவன் நினைவு கூரப்படும் வீடு உயிரோட்டமாகவும் இறை நினைவு அற்ற வீடு இறந்த பிரேதத்திற்குச் சமமாகவும் இருக்கும் என்று மேற்படி ஹதீஸ் கூறுகிறது.
இறை நினைவு என்பது சுப்ஹானல்லாஹ், அல்ஹம்துலில்லாஹ், அல்லாஹு அக்பர் என்று திக்ரு செய்வது மட்டுமல்ல.
மனிதன் தனது ஒவ்வொரு செயலிலும் இறை நினைவைப் பேண வேண்டும்.
உண்ணும்போதும், உடுத்தும்போதும் பேசும்போதும், பார்க்கும்போதும் என தனது ஒவ்வொரு நிலையிலும் இறைவனது சட்டங்களைப் பேணி நடப்பதே முழுமையான இறை நினைவு.
நபி(ஸல்) அவர்கள் தமது வாழ்வை அவ்வாறு தான் அமைத்திருந்தார்கள்.
நபி(ஸல்) அவர்களின் குணம் குர்ஆனாகவே இருந்தது என்று அன்னை ஆயிஷா(ரலி) அறிவிக்கிறார்கள்.
இதனால்தான் உண்ண உணவில்லாமல் ஒட்டிய வயிறுடன் ஒவ்வொரு நாளையும் கழித்த போதிலும், படுக்க முறையான விரிப்பின்றி காய்ந்து கருத்துப் போன பாயில் படுத்துறங்கி எழுகையில் பாயின் தடமெல்லாம் பளிங்கு மேனியில் பதிந்து சிவந்த போதிலும் நபிகளாரால் நிம்மதியாக மன அமைதியுடன் வாழ முடிந்தது.
இன்று இல்லங்களில் இறை நினைவு தூரமாகி தொலைக்காட்சியிலும் தொலைபேசியிலும் தொலைந்து போனதுதான் நிம்மதி பறி போவதற்கான காரணமாக அமைகிறது.
அருளிழந்து செத்த பிணத்திற்குச் சமமாக நம் வீட்டை ஆக்குவது தான் நம் நோக்கமா?
காண்போரின் கண்களுக்கு விருந்தாக நம் வீடு மாற வேண்டும். அருகில் எத்தனை வீடுகள் இருந்தாலும் தனித்துவமாக என் வீடு இருக்க வேண்டும் என்று மங்கிப் போன நிறத்தை மாற்றியமைக்கிறோம். வீட்டிற்கு உள்ளும் வெளியும் அலங்கார விளக்குகளை ஒளிரச் செய்கிறோம்.
அதில் தவறேதுமில்லை. அதே சமயம், மனிதக் கண்களுக்கு வீட்டை அழகுற அமைப்பதில் அவதி கொள்ளும் நாம் அல்லாஹ்வின் அருளுக்குப் பாத்திரமான அழகிய இல்லமாக நம் வீட்டை மாற்ற இறை நினைவால் எப்போது அலங்கரிக்கப் போகிறோம்?
நுழையும் முன் நினைப்போம்
இறை நினைவால் வீடுகள் அலங்கரிப்பட வேண்டும் என்று பார்த்தோம்.
இறை நினைவை வீட்டிற்குள் நுழையும் போதிலிருந்து கற்றுத் தருகிறது இஸ்லாம்.
வீட்டிற்குள் நுழையும் முன் இரண்டு விஷயங்களை மார்க்கம் கற்றுத் தருகிறது.
அதில் ஒன்று ஸலாம்.
நீங்கள் வீடுகளுக்குள் நுழைந்தால், அல்லாஹ்வின் தூய, பாக்கியமிக்க ஸலாம் எனும் முகமனை உங்கள்மீது கூறிக் கொள்ளுங்கள். இவ்வாறே நீங்கள் சிந்திப்பதற்காக அல்லாஹ் உங்களுக்கு வசனங்களைத் தெளிவுபடுத்துகிறான்.
அல்குர்ஆன் 24:61
வீட்டிற்குள் நுழையும் போது ஸலாம் சொல்லி நுழைவதை மார்க்கம் வழிகாட்டுகிறது.
ஸலாம் என்றாலே அமைதி தான். அதை இறைவனிடம் வேண்டி வீட்டிற்கு எடுத்து வைக்கும் முதல் அடியை அமைத்துக் கொள்ள வேண்டும்.
மற்றொன்று பிஸ்மில்லாஹ்
ஒருவர் தமது இல்லத்திற்குள் நுழையும் போதும் உணவு உண்ணும்போதும் அல்லாஹ்வை நினைவுகூர்ந்தால், ஷைத்தான் (தன் கூட்டத்தாரிடம்), “இன்றைய இரவில் உங்களுக்கு (இங்கே) தங்குமிடமும் இல்லை; உண்ண உணவுமில்லை’’ என்று கூறுகிறான்.
ஒருவர் இல்லத்திற்குள் நுழையும் போது அல்லாஹ்வை நினைவுகூராவிட்டால் ஷைத்தான் (தன் கூட்டத்தாரிடம்), “இன்றைய இரவில் உங்களுக்குத் தங்குமிடம் கிடைத்துவிட்டது’’ என்று சொல்கிறான்.
அவர் உணவு உண்ணும்போது அல்லாஹ்வின் பெயர் கூறாவிட்டால் ஷைத்தான் “இன்றைய இரவில் நீங்கள் தங்கும் இடத் தையும் உணவையும் அடைந்துகொண்டீர்கள்’’ என்று சொல்கிறான் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல்: முஸ்லிம் 4106
விரோதத்தை வாக்களிக்கும் ஷைத்தானை விட்டு நம் வீட்டைப் பாதுகாத்திட வீட்டிற்குள் நுழையும் போது இறைவனை நினைவு கூரும் விதமாக பிஸ்மில்லாஹ் என்று சொல்லி நுழைய வேண்டும்.
மண்ணறைகளாக மாற்றாதீர்கள்
வீடுகள் இறையருள் நிறைந்ததாக இருக்க வேண்டும். மண்ணறைகளைப் போல மாறிவிடக்கூடாது என்று இஸ்லாம் கூறுகிறது.
மண்ணறைகளுக்குச் சமமாக வீடுகள் மாறுவதற்கு இரண்டு காரணங்களை மார்க்கம் சொல்கிறது.
ஒன்று, குர்ஆன் ஓதப்படாமல் இருப்பது.
“உங்கள் இல்லங்களை மண்ணறைகளாக ஆக்கிவிடாதீர்கள். ‘அல்பகரா’ எனும் அத்தியாயம் ஓதப்படும் இல்லத்திலிருந்து ஷைத்தான் வெருண்டோடிவிடுகிறான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல்: முஸ்லிம் 1430
வீடுகளில் குர்ஆன் ஓதப்பட வேண்டும். குறிப்பாக சூரத்துல் பகரா அத்தியாயம் ஓதப்பட வேண்டும்.
அதன் மூலம் நமது வீடு, மண்ணறைக்கு சமமாக இறையருளை விட்டுத் தூரமாவதைத் தவிர்க்கலாம். ஷைத்தானிய காரியங்களையும் நம் வீடுகளிலிருந்து அப்புறப்படுத்தலாம்.
ஏனெனில், குர்ஆனை அதிகம் ஓதும் போது அது இறையச்சத்தைத் தரும். அவ்வாறு இறையச்சம் நிரம்பும் போது ஷைத்தானிய காரியங்களை நோக்கி நமது கவனம் செல்லாமல் நம்மால் பாதுகாக்க உதவும்.
அல்லாஹ்வே மிக அழகிய செய்தியை வேதமாக அருளினான். (அது) ஒன்றுக்கொன்று ஒப்பானதாகவும், திரும்பத் திரும்பக் கூறப்படுவதாகவும் உள்ளது. தமது இறைவனை அஞ்சுவோரின் தோல்கள் இதனால் மெய்சிலிர்த்து விடுகின்றன, பின்னர் அவர்களின் தோல்களும், உள்ளங்களும் அல்லாஹ்வை நினைவுகூர்வதற்காக மிருதுவாகி விடுகின்றன. இதுவே அல்லாஹ்வின் நேர்வழி. இதன் மூலம், தான் நாடியோரை நேர்வழியில் செலுத்துகிறான். அல்லாஹ், யாரை வழிகேட்டில் விட்டு விடுகிறானோ அவனுக்கு நேர்வழி காட்டுபவர் யாருமில்லை.
அல்குர்ஆன் 39:23
இறையச்சமுடையோருக்கு ஷைத்தானிட மிருந்து தீய எண்ணம் ஏற்பட்டால் (அல்லாஹ்வை) நினைவுகூர்வார்கள். உடனே அவர்கள் விழிப்படைவார்கள்.
அல்குர்ஆன் 7:201
இன்றைக்கு வீடுகளில் குர்ஆன் ஓதுகிற பழக்கம் என்பது ரமலான் காலங்களில் மட்டுமே இருக்கிறது. மற்ற நேரங்களில் சினிமா பாடல்களும் சீரியல் வசனங்களுமே ஒலிக்கிறது.
இவ்வாறிருந்தால் நம் வீடு எவ்வாறு இறையருளைப் பெறும்?
வீடுகள், மண்ணறைகளுக்குச் சமமாக மாறுவதற்கான காரணங்களில் மற்றொன்று தொழுகை நிறைவேற்றப்படாமல் இருப்பதாகும்.
“உங்களது தொழுகைகளில் சிலவற்றை உங்களுடைய இல்லங்களிலும் நிறைவேற்றுங்கள் உங்களுடைய இல்லங்களை மண்ணறைகளாக ஆக்கிவிடாதீர்கள்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல்: புகாரி 432
கடமையான தொழுகைகளை ஆண்கள் பள்ளிவாசலில் தான் நிறைவேற்ற வேண்டும்.
பெண்கள் பள்ளிவாசல்களுக்கு வருவதற்கு அனுமதியிருந்தாலும் வீட்டிலேயே நிறைவேற்றிக் கொள்ளலாம்.
அதே சமயம் கடமையல்லாத தொழுகைகளை ஆண்களும் வீடுகளில் தொழுவதே சிறந்தது.
“மக்களே! (உபரியானத் தொழுகைகளை) உங்கள் வீடுகளிலேயே தொழுதுகொள்ளுங்கள். ஒரு மனிதர் தம் வீட்டில் தொழும் தொழுகையே தொழுகையில் சிறந்ததாகும். ஆனால் கடமையாக்கப்ட்ட தொழுகையைத் தவிர!’’ என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல்: புகாரி 731
உங்களில் ஒருவர் பள்ளிவாசலில் (ஃபர்ள்) தொழுது முடித்ததும் தமது தொழுகையில் சிலவற்றை (கூடுதல் தொழுகையை) தமது வீட்டிலும் தொழட்டும். ஏனெனில், அவ்வாறு அவர் தொழுவதால் அவரது வீட்டில் அல்லாஹ் நன்மையை உருவாக்குகிறான்.
நூல்: முஸ்லிம் 1428
இதனால் தான் நபி(ஸல்) அவர்கள் கடமையல்லாத தொழுகைகளைத் தமது வீட்டில் தொழுவார்கள். தான் தொழுவது மட்டுமல்லாமல் தனது மனைவியரையும் தொழச் செய்வார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரவில் (தஹஜ்ஜுத்) தொழுவார்கள்; (அப்போது நான் உறங்கிக்கொண்டிருப்பேன்.) அவர்கள் வித்ருத் தொழ எண்ணும்போது, “ஆயிஷா! எழுந்து வித்ரு தொழு!’’ என்று கூறுவார்கள் என ஆயிஷா(ரலி) அறிவிக்கிறார்கள்.
நூல்: முஸ்லிம் 1352
இவ்வாறு தம்பதியர் இணைந்து வீடுகளில் தொழுவது அவர்களது வாழ்வில் இறையருளைப் பெற்றுத் தரும்.
ஒருவர் இரவில் எழுந்து தனது மனைவியை விழிக்கச் செய்து இருவரும் இணைந்து இரண்டு ரக்அத் தொழுதால் அவ்விருவரும் அல்லாஹ்வை அதிகளவு நினைவுகூரும் ஆண்கள் மற்றும் பெண்களில் (33:35 வசனத்தில் சொல்லப்படும் நல்லோர் பட்டியலில்) பதிவு செய்யப்படுவார்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல்: அபூதாவூத் 1451
வீட்டில் தொழப்படும் தொழுகையில் மற்றொரு நன்மையும் உள்ளது.
வீட்டில் அன்றாடம் தொழுகை நிறைவேற்றப்படும் போது அதைப் பார்த்து, வளர்கிற பிள்ளைகளின் மனதில் பசுமரத்தாணியாக அந்தக் காட்சி பதிவாகிவிடும்.
அதன் பின் அவர்களுக்குத் தொழுகை ஓர் அந்நியமான விஷயமாக தெரியாது. வாழ்வின் ஓர் அங்கமா,க அன்றாட பழக்கமாக மாறிவிடும்.
இன்று பிள்ளைகளிடத்தில் மார்க்கம் இல்லாமல் அவர்களின் ஒழுக்கத்தை எண்ணி கவலை கொள்கிற பெற்றோர், நாம் அவர்களை நெறிமுறைப்படுத்துவதில் சரியான வழியைத் தேர்ந்தெடுத்தோமா என்பதை யோசிக்க வேண்டும்.
வீட்டில் இதுபோன்ற இஸ்லாமியச் சூழலை இடம்பெறச் செய்வதன் மூலம் பிள்ளைகளுக்குப் பயிற்சியளிக்க வேண்டும்.
இதுபோன்று வீட்டை அருள் வளமிக்கதாக மாற்றி, நமக்கான நிம்மதி தரும் இடமாக வீட்டை மாற்றியமைக்க நமது இல்லத்தில் இஸ்லாமியச் சூழலை மேற்படி வழிகாட்டல்களைப் பேணி உருவாக்க வேண்டும்.
இதுவல்லாத மற்ற விஷயங்களிலும் மார்க்க வரையறைகளைப் பேணி நடக்க வேண்டும்.
அத்தகைய இறைநினைவே நம் வீட்டை இறையருளால் நிரம்பச் செய்யும்.
மனிதக் கண்களுக்கு வீட்டை அழகுறக் காட்சிப்படுத்துவதில் எடுக்கும் முயற்சியை விட அதிக முயற்சி அல்லாஹ்வின் பார்வையில் நம் வீடு அழகுற அமைவதில் இருக்க வேண்டும்.
