ஸலஃப் என தங்களை அடையாளப் படுத்துபவர்களால், ஸலஃபிக் கொள்கைதான் சரியான கொள்கை, இந்தக் கொள்கை அல்லாத வேறு கொள்கை யாவும் வழிகேடே என தற்போது தமிழ் பேசும் முஸ்லிம்களுக்கு மத்தியில் சிலரால் பரப்பப்படுகிறது. ஆனால், உண்மையில் இந்த நவீன வாதிகள் கூறும் நவீன ஸலஃப் என்ற கொள்கை இஸ்லாத்தின் அடிப்படையை தகர்க்கக் கூடிய கொள்கையாகவே அமைந்திருக்கிறது. நபித்தோழர்களையும் மார்க்கமாக ஏற்று, அவர்களையும் பின்பற்ற வேண்டும் என்பதுதான் இந்த நவீன ஸலஃபிகளின் அடி நாதமான கொள்கையாகும்.
இந்த ஸலஃபி கொள்கையைப் பேசுபவர்கள் தங்களுக்கு மத்தியிலேயே கொள்கைத் தெளிவு இல்லாமலும், ஆதாரம் அற்ற கொள்கையையுமே தங்களின் (அகீதாவாக) கொள்கையாகப் பின்பற்றுகிறார்கள் என்பதையும் இவர்களின் பேச்சிலிருந்தே நாம் அறிய முடிகிறது. எனவே அது தொடர்பான செய்திகளை இவ்வாக்கத்தில் நாம் பார்க்கவிருக்கிறோம்.
இதைப் பார்ப்பதற்கு முன்பாக இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையைப் பற்றி முதலில் தெரிந்து கொள்ள நாம் கடமைப்பட்டிருக்கிறோம்.
நாம் கடைப்பிடிக்கும் மார்க்கமான இஸ்லாம் எனும் மார்க்கத்தைப் பற்றி இறைவன் அல்குர்ஆனில் பின்வருமாறு கூறுகிறான்.
தூய மார்க்கம் அல்லாஹ்வுக்கே உரியது என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
அல்குர்ஆன் (39:9)
நமக்கு வழிகாட்டியாக வழங்கப்பட்ட இந்தத் தூய இஸ்லாம் என்னும் மார்க்கத்தைப் பற்றி இறைவன் கூறுகையில் இது தனக்குச் சொந்தமான மார்க்கம் என்கிறான். இறைவனுக்குச் சொந்தமான மார்க்கம் என்றால் என்ன? அதன் அர்த்தம் என்ன? இந்த மார்க்கத்தில் எது கூடும்! எது கூடாது! எது சரியானது! எது தவறானது! என்று அனைத்து சட்டம் இயற்றும் அதிகாரமும் அல்லாஹ்விற்கு மட்டுமே உண்டு. அவன் சொல்வது மட்டுமே இந்த இஸ்லாத்தில் சட்டமாகும். அவன் சொல்லாத எதுவுமே இம்மார்க்கதில் சட்டமாகவோ, ஒரு அங்கமாகவோ ஒருபோதும் ஆகாவே ஆகாது என்பதுதான். எனவேதான் இறைவன் இது எனக்குரிய மார்க்கம் என்கிறான். இதிலிருந்து மார்க்கத்தில் சட்டமேற்றும் அதிகாரம், பொறுப்பு அல்லாஹ் ஒருவனுக்கு மட்டும்தான் உள்ளது. அவனையன்றி வேறு யாருக்கும் அதிகாரம் ஒருபோதும் இல்லை என்பதை தெள்ளத் தெளிவாக அறியலாம்.
இதைத்தான் இறைவன், ஆதம் (அலை), அவர்களை உலகத்திற்கு அனுப்பும்போது முதல் கட்டளையாகக் கூறுகிறான்.
ஆதம் (அலை) அவர்கள் மிகப் பெரிய அறிவாளியாகவும், மகத்தான ஞானம் வழங்கப்பட்டவராகவும் இருந்தார்கள். இவ்வாறு ஞானம் உள்ளவராக இருந்தாலும் கூட மார்க்க விஷயம் என்று வருகின்ற போது மனித அறிவு அதற்கு ஒரு கட்டத்திலும் பயன்படாது. மார்க்கத்தில் ஒன்று சட்டமாகக் கடைப்பிடிக்கவும், அதைப் பின்பற்றவும் தகுந்ததாக இருப்பது அல்லாஹ்விடமிருந்து வரக்கூடிய வஹீ மட்டுமே! இதைத்தான் ஆதம் (அலை) அவர்களுக்கு அல்லாஹ் ஆணையிடுகிறான்.
“என்னிடமிருந்து உங்களுக்கு நேர்வழி வரும். அப்போது யார் எனது நேர்வழியைப் பின்பற்றுகிறாரோ அவர் வழிதவற மாட்டார்; பாக்கியமிழந்தவராகவும் மாட்டார்” என்று (இறைவன்) கூறினான்.
அல்குர்ஆன் 20:123
மார்க்கச் சட்டமாக ஒன்றைக் கடைப்பிடிப்பதாக இருந்தால் அது வஹீயின் அடிப்படையில் இருக்கவேண்டும். எந்த மனிதராக இருந்தாலும், அவர் எவ்வளவு பெரிய அறிவாளியாக, அறிஞராக இருந்தாலும், இன்னும் அவர் நல்லவராக இருந்தாலும் அவருக்கு எவ்வளவு பெரிய சிறப்பு இருந்தாலும், ஏன் சொர்க்கமே நற்செய்தியாக சொல்லப்பட்டிருந்தாலும் அந்த மனிதருடைய அறிவினாலும், சிறப்பினாலும் அவருடைய வார்த்தை, அவருடைய கருத்து மார்க்கத்திற்கு ஆதாரமாக ஆகாது. மார்க்கம் என்றால் அது இறைவன் புறத்திலிருந்துதான் வர வேண்டும் என்பதை இந்த வசனம் நேரடியாகவும், மிக அழகாகவும் விளக்குகிறது. இன்னும் ஆழமாக இந்த கருத்தை உறுதிப்படுத்தும் வகையில் இன்னும் ஏராளமான வசனங்களில் இறைவன் பேசுகிறான்.
உங்கள் இறைவனிடமிருந்து எது உங்களுக்கு அருளப்பட்டதோ அதையே பின்பற்றுங்கள்! அவனையன்றி பொறுப்பாளர்களைப் பின்பற்றாதீர்கள்!
அல்குர்ஆன் 7:3
இந்த மார்க்கத்திற்கு உரிமையாளன், இந்த மார்க்கத்திற்குப் பொறுப்பாளன், சட்டம் இயற்றும் அதிகாரமுடையவன் அல்லாஹ் மட்டும்தான். அவ்வாறு அவன் இயற்றிய சட்டங்களையே நீங்கள் பின்பற்ற வேண்டும். அவனிடமிருந்து வந்ததுதான் பின்பற்றத் தகுதியானது. அவனைத் தவிர வேறு யாரையும் சட்டம் இயற்றும் பொறுப்பாளராக எடுத்துக் கொள்ளக் கூடாது என இந்த வசனத்தின் மூலம் அல்லாஹ் தெளிவுபடுத்துகின்றான்.
அல்லாஹ்வை மட்டும் பின்பற்றுங்கள், அவனை அன்றி வேறு யாரையும் பின்பற்றாதீர்கள் என்று உடன்பாடாகவும், எதிர்மறையாகவும் இறைவன் தெள்ளத் தெளிவாக, உறுதியாக மக்களுக்கு விவரிக்கிறான்.
எனவே இஸ்லாத்தின் அடிப்படை குர்ஆனும் அதற்கு விளக்கமாக இருக்கக்கூடிய நபியவர்களின் சொல், செயல், அங்கீகாரம் ஆகியவைகளை உள்ளடங்கிய நபிமொழிகளும் மட்டும்தான். இதுவே இஸ்லாத்தின் அடிப்படை ஆதாரமாகும். இது அல்லாதவை இஸ்லாமாக ஆகாது என்பதை சந்தேகத்திற்கு இடமின்றி தெரிந்து கொள்ள வேண்டும்.
மேலும் அல்லாஹ்விடமிருந்து வந்த இறைச் செய்திகளை மட்டும்தான் பின்பற்ற வேண்டும் என்பதுடன் அல்லாஹ் நிறுத்திக்கொள்ளாமல் இறைச் செய்திக்கு மாற்றமானவற்றை யாரேனும் பின்பற்றினால் அதைக் கண்டிக்கும் வகையிலும் இறைவன் நமக்கு எச்சரிக்கையும் விடுகிறான்.
அல்லாஹ் அனுமதிக்காததை மார்க்கத்தில் சட்டமாக்கும் இணைக் கடவுள்கள் அவர்களுக்கு உள்ளனரா?
அல்குர்ஆன் 42:21
மார்க்கம் இல்லாததை, சொல்லப்படாததை மார்க்கத்தில் சட்டமாக ஆக்குகின்ற ஒருவரை நீங்கள் ஏற்படுத்தினால் அது அல்லாஹ்விற்கு இணையாக இணை கடவுளை ஏற்படுத்தியதாக ஆகும். அப்படிப்பட்ட இணை கடவுள்கள் உங்களுக்கு உண்டா? என இறைவன் கேள்வி எழுப்புகிறான்.
அல்லாஹ் ஒன்றைச் சொல்லவில்லை எனும்போது, நபியவர்களும் அதைக் காட்டித் தரவில்லை என்னும்போது இந்த மனிதர் சொல்லுகிறார், இவருடைய கருத்து இவ்வாறு இருக்கிறது, இவருடைய சரியாகத்தான் இருக்கும் என்று மார்க்கச் சட்டமாக மனிதனுடைய கருத்துக்களை நீங்கள் எடுத்துக் கொண்டால் அந்த மனிதரை நீங்கள் மனிதராகப் பார்க்கவில்லை. அல்லாஹ்வுடைய அதிகாரத்தை ஆற்றலை, உரிமையை அந்த மனிதருக்குக் கொடுத்ததாகவே அமையும். இது அல்லாஹ்வுக்கு இணையாக மற்றொரு கடவுளைக் கற்பனை செய்ததாக ஆகிவிடும் என்பதை உணர்த்தும் வகையில் இந்த வசனத்தில் இறைவன் கோபத்துடன் கேட்கிறான்.
அல்லாஹ் வஹீயின் மூலம் (குர்ஆன், ஹதீஸில்) சொல்லித் தராத, அவற்றில் இல்லாததை ஒரு மனிதர் பின்பற்றினால் அது இஸ்லாத்தின் அடிப்படையே தகர்க்கக் கூடியதாகும். மறுமை வாழ்க்கையை கேள்விக்குறியாக ஆக்கக்கூடியதாகும். இது முழுக்க முழுக்க மார்க்கத்திற்கு முரணானதாகும் என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். இதுதான் இஸ்லாத்தில் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய முதல் அடிப்படையாகும்.
இவ்வாறு மார்க்கத்திற்கு முரணான, அசத்தியக் கொள்கையில் செல்லக்கூடியவர்கள் தங்களுடைய கொள்கை தவறான அசத்தியக் கொள்கை என்பதை ஒப்புக் கொள்ளாமல் அதற்குக் குர்ஆன், ஹதீஸை கொண்டு சாக்கு போக்கு காரணம் சொல்லக்கூடியவராகவும், குர்ஆன், ஹதீஸை தங்களுக்கு சாதகமாக வளைக்கக் கூடியவர்களாகவும் இருப்பதை நாம் பார்க்கிறோம்.
இதற்குக் காரணம் அவர்களுடைய உள்ளத்தில் ஷைத்தான் தங்களுடைய கொள்கையே நல்ல கொள்கை, இதுவே சரியான கொள்கை என்பதைப் போன்று பாவித்து வழிகெடுக்கிறான் என்பதை நாம் பார்க்க முடிகிறது.
உதாரணமாக மக்கத்து முஷ்ரிக்கீன்களும் அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டிருந்தார்கள் என்றும், அவர்களின் நம்பிக்கை எவ்வாறு இருந்தது என்றும் அல்லாஹ் குர்ஆனில் சொல்லிக் காட்டுகிறான்.
“வானங்களையும், பூமியையும் படைத்தவன் யார்?” என்று அவர்களிடம் கேட்பீராயின், ‘அல்லாஹ்’ என்றே கூறுவார்கள். “எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே!” என்று கூறுவீராக! எனினும், அவர்களில் பெரும்பாலோர் அறிந்து கொள்ள மாட்டார்கள்.
அல்குர்ஆன் (31:25)
வானம், பூமி இவைகள் யாவற்றையும் படைத்தவன் யார்? என்று அந்த மக்கா காஃபிர்களிடத்தில் கேட்டால், ‘அல்லாஹ்’ என்றுதான் அவர்கள் சொல்வார்கள் என அல்லாஹ் கூறுகிறான். அந்த மக்கா முஷ்ரிக்குகள் அல்லாஹ்வை மறுக்கவில்லை, அல்லாஹ்வை ஏற்றுக் கொண்டுதான் இருந்தார்கள் என்பது இறைவன் இந்த வசனத்தின் மூலமாகத் தெளிவுபடுத்துகிறான்.
இருப்பினும் அல்லாஹ் அல்லாதவைகளை, சிலைகளைக் கடவுளாக எடுத்துக் கொண்டார்கள். இவ்வாறு நீங்கள் ஏன் சிலைகளைக் கடவுளாக எடுத்துக் கொள்கிறீர்கள் என்று அவர்களிடத்தில் கேட்டால் அதற்கு அவர்கள் சொல்லக்கூடிய காரணம் என்ன என்பதையும் அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்.
அல்லாஹ்வை விட்டுவிட்டு, தமக்குத் தீமையோ, நன்மையோ செய்யாதவற்றை அவர்கள் வணங்குகின்றனர். ‘இவர்கள் எங்களுக்காக அல்லாஹ்விடம் பரிந்துரைப்பவர்கள்’ என்றும் கூறுகின்றனர். “வானங்களிலோ, பூமியிலோ அல்லாஹ்வுக்குத் தெரியாதவற்றை அவனுக்கு நீங்கள் அறிவிக்கிறீர்களா? அவன் தூயவன். அவர்கள் இணைவைப்பவற்றை விட்டும் அவன் உயர்ந்தவன்” என்று கூறுவீராக!
அல்குர்ஆன் (10:18)
சிலைகளை, அல்லாஹ் அல்லாதவர்களை ஏன் வணங்குகிறீர்கள் என்று அவர்களிடம் கேட்கப்பட்டால் அவர்கள் சொல்லும் பதில் எங்களுக்காக அல்லாஹ்விடம் இவர்கள் பரிந்துரை செய்வார்கள் என்பதுதான். இவர்களை நாங்கள் கடவுளாக எடுத்துக் கொள்ளவில்லை அல்லாஹ்விற்குப் பதிலாக இவர்கள் கடவுள் என்று நாங்கள் சொல்லவில்லை, இவர்கள் அல்லாஹ்வைப் போன்றவர்கள் என்றும் நாங்கள் சொல்லவில்லை. மாறாக இவர்கள் எங்களுடைய பரிந்துரையாளர்கள், எங்களை காப்பாற்றுவதற்காக அல்லாஹ்விடம் பேசுவார்களாகவே இவர்களை நாங்கள் பார்க்கிறோம். படைப்பாளனாகப் பார்க்கவில்லை என மக்கா காஃபிர்கள் கூறினார்கள்.
இன்றைக்கு தர்காவிற்குச் செல்லக் கூடியவர்கள் எப்படி அவுலியாக்கள் தங்களுடைய பரிந்துரையாளர்கள், இவர்களை நாங்கள் அல்லாஹ்வாக வணங்கவில்லை, அல்லாஹ்விடத்தில் வாங்கித் தருவார்கள் என்றுதான் நம்புகிறோம், எனவேதான் அவர்களிடம் கேட்கிறோம் என்று சொல்கிறார்களோ இதே பதிலைத்தான் அன்றைக்கு மக்கா காஃபிர்களும் சொன்னார்கள்.
இதுபோன்று தங்களுடைய தவறான கொள்கையை மக்களிடத்தில் வெளிப்படையாகப் பேசாமல், அந்த தவறான கொள்கைக்கு சாக்குப் போக்கு சொல்பவர்களாகவும் அதற்கு சப்பைக்கட்டு கட்டுபவர்களாகவும்தான் அசத்தியவாதிகள் இருந்து வந்தார்கள். இவர்கள், ஷைத்தான் தங்களுக்கு அலங்கரித்துக் காட்டக்கூடிய அலங்கார வார்த்தைகளைக் கொண்டு தாங்களும் வழிகெட்டு, மக்களையும் வழிகெடுத்தார்கள். ஒவ்வொரு அசத்தியவாதிகளும் இப்படித்தான் தங்களுடைய அசத்தியக் கொள்கையை நிலை நாட்டுவார்கள் என்பதை வரலாறு நமக்கு உணர்த்துகிறது.
இதேபோன்றுதான் இன்றைக்கு தற்பொழுது தங்களை ஸலஃப் என்று சொல்லக்கூடியவர்கள் ஸஹாபாக்களைப் பின்பற்ற வேண்டும், அவர்களுடைய கூற்றையும் மார்க்கமாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று சொல்பவர்கள். குர்ஆனில் அசத்தியவாதிகள் தங்களுடைய கொள்கையை நிலைநாட்டுவதற்காக எப்படி அலங்கார வார்த்தைகளைக் கொண்டு அசத்தியக் கொள்கையை நிலைநாட்ட முயற்சித்தார்களோ அவ்வாறே ஸலஃபிகள் என்று தங்களை சொல்லிக் கொள்பவர்களும் செய்கின்றார்கள்.
தங்களின் தவறான கொள்கையை நிலைநாட்டுவதற்காக ‘நாங்கள் சஹாபாக்களை மூல ஆதாரம் என்றா கூறுகிறோம்! குர்ஆன், ஹதீஸ் அதற்கு அடுத்து ஸஹாபாக்கள் என்றா நாங்கள் கூறுகிறோம், ஸஹாபாக்கள் விளங்கியதைப் போன்று விளங்க வேண்டும் என்றுதானே கூறுகிறோம். அவர்கள் குர்ஆன், ஹதீஸைப் புரிந்து கொண்டதைப் போன்று புரிய வேண்டும் என்றுதானே சொல்லுகிறோம். இதில் என்ன தவறு இருக்கிறது?’ என அலங்கார வார்த்தைகளைக் கொண்டு தங்களுடைய தவறான கொள்கையை மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்கின்றனர். இவர்கள் இவ்வாறான அலங்கார வார்த்தைகளைக் கொண்டு தங்களுடைய கொள்கையை சரி என்பதைப் போன்று மக்களிடத்தில் காண்பிக்க அதை நியாயப்படுத்த முயற்சிக்கின்றனர்.
தங்களுடைய கொள்கையை நிலைநாட்டுவதற்காக ஸஹாபாக்களை நாங்கள் மூன்றாவது ஆதாரம் என்று சொல்லவில்லை, அவர்களுக்கு வஹீ வருகிறது என்று நாம் சொல்லவில்லை என மடைமாற்றம் செய்து மக்களை ஏமாற்றுகின்றனர்.
ஆனால், இவர்கள் உண்மையில் சஹாபாக்களை மூன்றாவது ஆதாரமாகத்தான் காட்டுகிறார்கள் என்பதையும், இவர்களுடைய கொள்கை என்ன என்பதை இவர்களுடைய பேச்சிலிருந்தே நாம் தெளிவாகப் பார்க்கலாம்.
யூசுப் பைஜி என்ற ஸலஃப் கொள்கையை சார்ந்த ஒரு ஆலிம் கூறும் கருத்தை எழுத்தாக்கமாக உங்களுக்குத் தருகிறோம்.
ஸஹாபாக்களுக்கு வஹீ வருகிறது என்று நாம் என்றாவது சொல்லி இருக்கிறோமா? ஸஹாபாக்கள் மார்க்கத்தின் மூன்றாவது ஆதாரங்கள் என்று எப்போதாவது சொல்லியிருக்கிறோமா, குர்ஆன் ஒன்று, ஹதீஸ் இரண்டு, ஸஹாபாக்கள் மூன்று என்று நாம் சொல்லி இருக்கிறோமா? எங்கே இப்படி நாம் சொல்லி இருக்கிறோம்?
இதுதான் இந்த ஆலிம் கூறுகின்றவையாகும்.
இவ்வாறு கேட்க கூடியவர் நாங்கள் நபிதோழர்களைப் பற்றி இவ்வாறு சொல்லவில்லை என்று சொல்வதில் உண்மையாளராக இருந்தால், இவர்களைச் சார்ந்தவர்கள் அனைவரும் இந்த அடிப்படையில்தான் இருக்க வேண்டும். ஆனால், இவருடைய கூற்றிற்கு மாற்றமாக மற்றொரு ஸலஃப் கொள்கையுடைய ஆலிம் பேசுவதைப் பாருங்கள்.
ஸலஃப் கொள்கையை சார்ந்த ஹசன் அலி உமரி என்ற ஆலிமின் பேச்சை எழுத்தாகத் தருகிறோம்.
சிலர், ஸலஃப் மன்ஹஜ்தான் சரி என்று சொல்வார்கள், சஹாபாக்களைப் பின்பற்ற வேண்டும் என்றும் சொல்வார்கள். ஆனால், அதைச் சொல்வதில் அவர்கள் செய்யக்கூடிய தவறு என்னவென்றால் சிலர் சஹாபாக்களைப் பின்பற்றுவது என்றால் சஹாபாக்கள், குர்ஆனையும், சுன்னாவையும் பின்பற்றினார்கள், எனவே நாமும் குர்ஆன், சுன்னாவைப் பின்பற்றுவோம். இதுதான் சஹாபாக்களை பின்பற்றுவதாகும் என்கிறார்கள்.
இன்னும் சிலர், எதில் தெளிவான ஆதாரம் இருக்குமோ அதில் சஹாபாக்களை பின்பற்றுவது தேவையற்றது, எதில் தெளிவான முறையில் ஆதாரம் இல்லாமல் இருக்கிறதோ அதில்தான் சஹாபாக்களுடைய விளக்கம் தேவை என்பார்கள்.
இன்னும் சிலர் அகீதாவில் மட்டும் சஹாபாக்களின் விளக்கம் வேண்டும், மற்றதில் சஹாபாக்களின் விளக்கம் தேவையில்லை என்பார்கள்.
இன்னும் சிலர் ஸஹாபாக்களின் விளக்கத்தை விரும்பினால் எடுத்துக் கொள்ளலாம், விரும்பினால் அதை விட்டு விடலாம். இமாம் ஷாஃபி அதை எடுக்கலாம் என்கிறார்கள். அகமது பின் ஹம்பல் அதை எடுக்க வேண்டாம் என்கிறார்கள். எனவே, விரும்பியவாறு செய்து கொள்ளலாம். இவ்வாறு சொல்பவர்கள்தான் ஸலஃப் மன்ஹஜ் சரி என்று சொல்லக்கூடிய ஆலிம்களின் கூற்றாகும்.
இதிலிருந்து ஸலஃப் மன்ஹஜை சரி காணும் ஆலிம்களுக்கே ஸலஃப் மன்ஹஜ் விளங்கவில்லை என்று சொன்னால் பாமரர்களின் மக்கள் என்ன?
இது அந்த ஆலிமுடைய பேச்சின் எழுத்தாக்கமாகும்.
இவரும் ஸலஃப் கொள்கை சார்ந்த ஒரு ஆலிம்தான். இவர் என்ன சொல்கிறார் ஸலஃப் கொள்கை சார்ந்த பெரும்பான்மையானவர்கள் ஸலஃப் கொள்கை பற்றி அறியாமல் இருக்கிறார்கள், ஒரு தெளிவில்லாமல் இருக்கிறார்கள் என்கிறார். ஸலஃப் மன்ஹஜ்ஜை பின்பற்றுபவர்களில் சிலர், ‘ஸஹாபாக்கள் குர்ஆன், ஹதீஸைப் பின்பற்றினார்கள். எனவே நாமும் குர்ஆன், ஹதீஸைப் பின்பற்ற வேண்டும்’ என்று கூறுகிறார்கள். இவ்வாறு கூறுவது தவறு என்பதைப் போன்று இவர் கூறுகிறார்.
அதேபோன்று அகீதாவில் மட்டும் நபித்தோழர்களை எடுத்துக் கொள்ளவேண்டும் மற்றதில் தேவை இல்லை, இபாதத், கொடுக்கல், வாங்கல் போன்ற விஷயங்களில் சஹாபாக்களின் விளக்கம் தேவை இல்லை. நேரடி ஆதாரங்களில் இருக்கும்போது அப்போதும் ஸஹாபாக்கள் விளக்கம் தேவையில்லை என்ற கருத்தில் சிலர் இருக்கிறார்கள். மேலும் விரும்பினால் ஸஹாபாக்களின் விளக்கங்களை எடுக்கலாம், விரும்பினால் எடுக்க வேண்டியது இல்லை என்று ஸலஃபுகளுக்கு மத்தியிலேயே ஸலஃப் மன்ஹஜ்ஜை பற்றி அறியாமல் சலசலப்புகளில் இருக்கிறார்கள் என்று விமர்சனம் செய்கிறார்.
ஸலஃப் கொள்கையில் இருக்கும் இவர்களுக்கு மத்தியிலேயே ஒரு கொள்கைத் தெளிவு இல்லாமல், தங்களின் கொள்கையில் எப்படி எல்லாம் முரண்பட்டு இருக்கிறார்கள் என்பதை ஸலஃப் கொள்கை சார்ந்த ஒரு ஆலிமே தெளிவுபடுத்துகிறார்.
இதிலிருந்து இவர்கள் ஏற்கத்தக்க எந்த ஆதாரத்தின் அடிப்படையிலும் தங்களின் கொள்கையை அஸ்திவாரமிடவில்லை என்பது அம்பலப்படுகிறது. இன்னும் இந்த ஆலிம் தமது பேச்சில் மார்க்கத்தில் சிலது தெளிவானதாகவும், சிலது தெளிவற்றதாகவும் இருக்கிறது என்கிறார். தெளிவானது மக்களுக்குத் தெரிந்தாலும், தெளிவற்றதை சஹாபாக்களின் விளக்கத்தைக் கொண்டுதான் தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் கூறுகிறார் என்பதை நாம் பார்க்கலாம்.
இவ்வாறு மார்க்கம் முழுமை பெறவில்லை சஹாபாக்களின் விளக்கத்தைக் கொண்டே அது முழுமை பெறுகிறது என்றும் சலசலப்புக்கு பெயர்போன ஸலஃபிகள் கூறுகின்றனர்.
இதிலிருந்து சஹாபாக்களை எந்த அளவிற்குப் பின்பற்ற வேண்டும் என்று இவர் சொல்லுகிறார் என்பதை நாம் அறியலாம்.
முதலில் பேசிய ஒரு ஸலஃபி இமாம் ஸஹாபாக்களை நாங்கள் மூன்றாவது ஆதாரமாகச் சொல்லுகிறோமா? சஹாபாக்களைப் பின்பற்ற வேண்டும் என்று நாங்கள் சொன்னோமா? என்று கேட்கிறார். ஆனால், இந்த ஸலஃபி இமாம் சஹாபாக்களைப் பின்பற்றக் கூடாது என்று பலர் தெளிவற்ற நிலையில் இருக்கிறார்கள் என்று சொல்கிறார்கள். இவ்வாறு இவர்கள் ஒருவருக்கொருவர் முரண்பட்டு இருக்கிறார்கள்.
அடுத்ததாக ஹஸன் அலி உமரி என்ற ஸலஃப் கொள்கையுடைய ஆலிமின் கருத்தைப் பாருங்கள்.
யாரெல்லாம் குர்ஆன், ஹதீஸ், ஸஹாபாக்களின் விளக்கம் என இதை ஆதாரமாகச் சொல்கிறாரோ, (இவ்வாறு சொல்பவர்களை நோக்கி) இதெல்லாம் வழிகேடு என்றும் சிலர் கூறுகின்றனர். இதுவும் ஒரு பக்கம் அறியாமை ஆகும்.
ஸலஃப் கொள்கையுடைய ஆலிம் இந்த இடத்தில் சொல்லக்கூடியதை நன்றாகக் கவனியுங்கள்! யாரெனும் குர்ஆன், ஹதீஸ், சஹாபாக்களின் விளக்கங்கள் ஆகியவை ஆதாரம் இல்லை என்றுச் சொன்னால் அது அறியாமை என்று சொல்கிறார்கள்.
இதிலிருந்த அவர் என்ன சொல்ல வருகிறார் என்பது தெரிகிறதா? குர்ஆன் மார்க்கம், ஹதீஸ் மார்க்கம், சஹாபாக்களின் விளக்கமும் மார்க்கம். இவ்வாறு சொல்லுவதுதான் ஸலஃப் மன்ஹஜ். இதுதான் ஸலஃப் கொள்கை என்று ஸலஃப் கொள்கையைச் சார்ந்த இந்த ஆலிம் சொல்கிறார்.
ஆனால், இதற்கு முன்பாக நாம் முதலில் கூறிய ஸலஃப் கொள்கை சார்ந்த ஒருவர் சஹாபாக்களை நாங்கள் மூல ஆதாரம் என்கிறோமா என்று கேட்டார். ஆனால், இப்போது எடுத்துக்காட்டிய இவர் ஆம் ஸஹாபாக்களின் விளக்கம் மூல ஆதாரம்தான் என்று சொல்கிறார். இவ்வாறு இவர்கள் ஒருவருக்கொருவர் முரண்பட்டு கூறுகின்றனர். இரண்டாம் நபரின் பார்வையில் முதலாம் நபர் வழிகேட்டில் இருக்கிறார்.
ஹஸன் அலி உமரி என்ற ஸலஃப் கொள்கையுடையவரின் பேச்சை மேலும் பார்ப்போம்.
ஸஹாபாக்களின் விளக்கத்தை எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதற்குச் சொல்லப்படுகின்ற ஆதாரம் என்பது அது பொதுவாக உள்ள அனைத்தையும் குறிக்கிறதே தவிர, அகீதாவில் மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள், தெளிவாக இல்லாததில் மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள் என்றெல்லாம் சொல்லவில்லை. பொதுவாகத் தான் சொல்கிறது. எனவே சஹாபாக்களின் விளக்கத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அவர்களைப் பின்பற்றுங்கள்.
இந்த ஆலிம் அடுத்து என்ன சொல்கிறார் என்று கவனித்தீர்களா? ஏதோ அகீதாவில் மட்டும்தான் சஹாபாக்களுடைய விளக்கத்தை எடுக்கவேண்டும், தெளிவற்றதில்தான் எடுக்கவேண்டும் என்று மார்க்கம் சொல்லவில்லை. சஹாபாக்களின் அனைத்து விஷயங்களையும் பின்பற்ற வேண்டும், மார்க்கத்தினுடைய எல்லா அம்சங்களிலும் ஸஹாபாக்களைப் பின்பற்ற வேண்டும். அவ்வாறுதான் கூறப்பட்டுள்ளது என இந்த சலப் ஆலிம் கூறுகிறார்.
இவர்கள் காட்டும் ஆதாரம் சரியா? அதற்கான விளக்கம் என்ன? என்பதை இன்ஷா அல்லாஹ் பின்னர் நாம் அறிந்து கொள்வோம்.
இங்கே இவர்கள் ஒருவருக்கொருவர் எப்படி முரண்படுகிறார்கள் என்பதை மட்டும் பார்ப்போம். இந்த ஆலிம் ஸஹாபாக்களை மூல ஆதாரமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்கிறார். மூல ஆதாரமாக எடுக்காதவர்கள் வழிகேட்டில் இருக்கிறார் என்கிறார். இதிலிருந்து எல்லா விஷயங்களிலும் ஸஹாபாக்களை மூல ஆதாரமாக எடுக்கவேண்டும் என்று இவர் கூறுகிறார் என்பதை நாம் அறிய முடிகிறது.
இதிலிருந்து முதலில் சொன்ன அவருடைய கருத்துப்படி இரண்டாம் நபர் தவறான கொள்கையில் இருக்கிறார். ஏனெனில் சஹாபாக்களை மூல ஆதாரம் என்று சொல்லக்கூடாது, அவர்களுடைய விளக்கத்தை மூல ஆதாரம் என்று சொல்லக்கூடாது.
ஆனால், இரண்டாம் நபரின் கருத்தின் படி முதலாம் நபர் வழிகேட்டில் இருக்கிறார். ஏனென்றால் சஹாபாக்களின் அனைத்து செய்திகளையும் விளக்கங்களையும் ஆதாரமாக நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். அனைத்திற்கும் சஹாபாக்கள் மூல ஆதாரமாக கொள்ள வேண்டும். வெறும் அகீதாவில் மட்டுமல்ல, தெளிவற்ற விஷயங்களில் மட்டுமல்ல. பொதுவாக உள்ள அனைத்திலும் அவர்களின் விளக்கங்களை எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற இரண்டாம் நபரின் கருத்தின் படி முதலாம் நபர் வழிகேட்டில் இருக்கிறார் என்பது தெளிவாகிறது.
ஒரே ஸலஃபிக் கொள்கை என்று சொல்பவர்களுக்கு மத்தியில் உள்ள கொள்கை முரண்பாட்டைப் பாருங்கள். இவர் பார்வையில் அவர் வழிகேடு, அவர் பார்வையில் இவர் வழிதவறியவர்.
இது ஒருவருக்கொருவர் முரண்பட்டு இருப்பதா? அல்லது இடத்திற்கு ஏற்ப தங்கள் கொள்கையை மாற்றும் சந்தர்ப்பவாதமா?
மக்களைச் சந்திக்கும்போது மட்டும் நாங்கள் சஹாபாக்களை மூன்றாவது ஆதரவாக சொல்கிறோமா? அவர்களுக்கு வஹீ வருகிறது என்று சொல்லுகிறோமா? எனக் கேட்டுவிட்டுத் தப்பித்து விடுகிறார்கள்.
தர்காவை ஆதரிப்பவர்கள், மௌலித் ஓதுபவர்கள் நாங்கள் இவர்களை புகழத்தான் செய்கிறோம், நபியை புகழத்தான் செய்கிறோம் அவர்களிடத்தில் பரிந்துரையைத்தான் வேண்டுகிறோம். நாங்கள் அவர்களை கடவுளாக்கவில்லை, இறைவனுடைய அந்தஸ்தை வழங்கவில்லை என்று சொல்லி ஏமாற்றுவதைப் போன்று இந்த நவீன ஸலஃபிகளும் மக்களை திசை திருப்பும் வேலையில் ஈடுபடுகிறார்கள் என்பதை மக்கள் விளங்கிக் கொள்ள வேண்டும்.
தங்களுக்குள் முரண்பட்டு நிற்கும் இவர்கள் மக்களிடத்தில் இந்தக் கேள்விகள் வைக்கப்படும்போது மட்டும் நாங்கள் ஸஹாபாக்களை மூல ஆதாரமாகச் சொல்லவில்லை என்று தங்களின் கொள்கையை பொய்யாக மறைத்துக் கூறினாலும் இவர்கள் சஹாபாக்களைதான் பின்பற்றுகிறார்கள், இதுதான் இவர்களுடைய கொள்கை என்பது இவர்களின் முரண்பட்ட பேச்சிலிருந்தே வெளிச்சத்திற்கு வந்துவிட்டது.
அடுத்ததாக உமர் ஷரீஃப் காசிமி என்ற ஸலஃப் கொள்கையை சார்ந்தவரின் பேச்சையும் எழுத்தாக தருகிறோம்.
ஸஹாபாக்களிடம் இருந்தோ அல்லது அதற்குப் பின்னால் உள்ளவர்களிடமிருந்தோ உனக்கு ஒரு (அஸர்) ஹதீஸ், ஒரு செய்தி கிடைத்தால் அதை நீ பிடித்துக் கொள்! அதை நீ வேறு எந்த ஒன்றுக்காகவும் விட்டு விடாதே! அதைக் கடந்து வேறு ஒன்றுக்குச் சென்று விடாதே! (அவ்வாறு) இருந்தால் நரகத்தில் விழுந்து விடுவாய்!
இவர் என்ன கருத்தை முன்வைக்கிறார் என்று பாருங்கள்.
ஒருவர் ஒன்றை உனக்குச் சொன்னால் அதை உடனே ஏற்றுக் கொள்ளக் கூடாது, அதை என்ன செய்ய வேண்டும் என்பதற்கான வழிமுறையை இவர் தமது உரையில் சொல்கிறார். அவ்வாறு வழிமுறையை சொல்லக்கூடிய இவர் குர்ஆன், ஹதீஸோடு அதனை நீ ஒப்பிட்டு பார் என்று சொல்லவில்லை. அந்தக் கருத்தை ஒரு ஸஹாபி, ஒரு தாபி ஆகியவர்களிடமிருந்து கிடைத்த செய்திகளுடன் ஒப்பிட்டு இது அந்த கருத்தில் இருக்கிறாரா? அந்தக் கருத்திற்கு அது ஒத்துப் போகிறதா என்று பார் என்கிறார்.
மேலும் அந்த நபித்தோழர் சொன்ன, தாபி சொன்ன கருத்தை நீ பற்றி பிடி, அதைத் தாண்டி எந்த விளக்கத்திற்கும் நீ போய்விடாதே! உனக்கு தேவை சஹாபி, உனக்கு தேவை தாபி அவர்களுடைய விளக்கத்தை எடுத்துக் கொள்! அப்படி அவருடைய விளக்கத்தை எடுத்துக் கொள்ளாமல் நீ போனால் நீ நரகத்தில் போய் விழுந்து விடுவாய் என்கிறார்.
இவர்கள் இதிலிருந்து என்ன சொல்ல வருகிறார்கள் என்பது புரிகிறதா? இவர்கள் வார்த்தைக்கு, வார்த்தை நாங்கள் சஹாபாக்களை மூன்றாவது ஆதாரம் என்று சொல்லவில்லையே என்பார்கள். மூன்றாவது ஆதாரம் என்று சொல்லவில்லை என்று சொன்னால் எதற்காக ஸஹாபியின் கூற்றையும் தாபியீன்களின் கூற்றையும் விட்டுவிட்டவர் நரகத்தில் போய் விழுவார் என்று கூற வேண்டும்?
குர்ஆனைப் பின்பற்றவில்லை, ஹதீஸைப் பின்பற்றவில்லை என்றால் நரகத்திற்குச் செல்வார்கள் என்றால் அது சரி! ஏனெனில் வஹீயைத்தான் நாம் பின்பற்ற வேண்டும். அவ்வாறு வஹீயை பின்பற்றாதவர்கள் நரகத்திற்குச் செல்வார்கள் என்று மார்க்கம் கூறுகிறது.
அப்படி இல்லாமல் சஹாபாக்களின் கருத்தையும், தாபியீன்களின் கருத்தையும் ஒருவர் எடுத்துக் கொள்ளவில்லை என்றால் எப்படி அவர் நரகத்தில் விழுவார்? இவ்வாறு ஒருவர் எப்படி சொல்ல முடியும்? இப்படி சொல்வதற்கான அதிகாரத்தை யார் கொடுத்தது? ஒரு தனி மனிதருடைய கூற்றை எடுத்துக் கொள்ளவில்லை என்றால் அது நரகத்தில் கொண்டு போய் சேர்க்கும் என்று எங்கே சொல்லப்பட்டுள்ளது? சஹாபாக்களின் சொல்லை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று அல்லாஹ் எங்கேயும் சொல்லியிருக்கிறானா? நபியவர்கள் சொல்லியிருக்கிறார்களா? அவர்களைப் பின்பற்றாவிட்டால் நரகம், நீங்கள் நரகத்திற்கு சென்று விடுவீர்கள் என்று சொல்லப்பட்டு இருக்கிறதா?
மக்கள் இவர்களிடம் கேள்வி கேட்கும்போது மட்டும் அவர்களை மடைமாற்றம் செய்வதற்காக, ‘நாங்கள் சஹாபாக்களைப் பின்பற்ற வேண்டும் என்று சொல்லவில்லை. அவர்களை நாங்கள் மூன்றாவது ஆதாரமாகக் கொள்ளவில்லை’ என்று சொல்கிறார்களே தவிர இவர்கள் உண்மையில் சஹாபாக்களையே பின்பற்றுகிறார்கள். அவர்களைப் பின்பற்ற வேண்டும் என்ற கொள்கையில்தான் இருக்கிறார்கள் என்பது இவருடைய பேச்சிலிருந்து தெளிவாகிறது.
சஹாபாக்களும், தாபியீன்களும் மூல ஆதாரங்கள் தான். அவர்களைப் பின்பற்றாமல் விடுவது நரகத்தில் கொண்டு போய் சேர்க்கும் என்று அவ்வளவு துணிச்சலாக இவர்கள் சொல்கிறார்கள் என்று சொன்னால் இவருடைய கொள்கை சஹாபாக்களை பின்பற்றுவது இல்லையா? இறைவனுடைய அதிகாரத்தை எப்படி இவர்கள் பங்கு போடுகிறார்கள் என்று பாருங்கள்.
இதெல்லாம் எப்படி மார்க்கத்திற்கு முரணானது என்பதை நாம் பிறகு பார்ப்போம்.இருப்பினும் இவர்கள் எப்படி ஒருவருக்கொருவர் முரண்பட்டு இருக்கிறார்கள் என்பதையும் மக்கள் இவர்களிடத்தில் கேள்விகளை முன்வைக்கும்போது ஒருவருக்கொருவர் மாற்றி மாற்றிப் பேசுகிறார்கள் என்பதையும் மட்டுமே இங்கே பார்ப்போம்.
முதலாவது நபர், நாங்கள் ஸஹாபாக்களை மூன்றாவது ஆதாரமாக எங்கே சொல்கிறோம் என்று கேட்டார். அதற்கெல்லாம் அடுத்தடுத்து பேசியவர்களின் பேச்சிலிருந்தே பதில் கிடைத்து விட்டதா?
ஹஸன் அலி உமரியின் பேச்சு
சஹாபாக்களை ஏன் பின்பற்ற வேண்டும், ஏன் அவர்களின் மார்க்கக் கருத்துக்களை அவசியம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று நீங்கள் பார்ப்பீர்கள் என்றால்…
இதுவும் ஸலஃப் ஆலிமான ஹஸன் அலி என்பவர் பேசியதுதான்.
இதில் இவர் நபித்தோழர்களை அவசியம் ஏன் பின்பற்ற வேண்டும் என்பதற்கான காரணத்தைச் சொல்ல வருகிறார். இவ்வாறு இவர் சொல்வதிலிருந்து இவர்கள் சஹாபாக்களை தான் பின்பற்றுகிறார்கள் என்பது தெள்ளத்தெளிவாக நிரூபிக்கப்பட்டுவிட்டது.
இதிலிருந்து நபித்தோழர்களைப் பின்பற்றுவது இவர்களிடத்தில் ஒரு அவசியமான, கடமையான விஷயம். இவர்களுடைய நம்பிக்கை, இவர்களுடைய அக்கீதா தொடர்பான விஷயம் நபித்தோழர்களை, குர்ஆன், சுன்னாவின் இடத்தில்தான் வைத்திருக்கிறார்கள் என்பது இவருடைய பேச்சிலிருந்து தெரிகிறது.
சஹாபாக்களுடைய செய்திகளை, பேச்சுகளை எடுக்காமல் இருப்பது வழிகேடு! அப்படி எடுக்காமல் இருந்துவிட்டால் அது நரகத்தில் கொண்டு போய் சேர்க்கும் என்று இவர்கள் சொல்வதிலிருந்தே இது தெளிவாகவில்லையா? இதிலிருந்து இவர்கள் குர்ஆன், சுன்னாவிற்கு கொடுக்க வேண்டிய இடத்தை நபித்தோழர்களுக்கும், அதற்குப் பின்னால் வந்தவர்களுக்கும் கொடுக்கிறார்கள் என்பது மிகத் தெளிவாகிறது.
இன்னும் இவர்களின் அதிகாரப்பூர்வ மாத இதழான அல்ஜன்னத் என்ற மாத இதழில் 2016 ஜூன் மாதம் வெளிவந்த இதழில் அவர்கள் எழுதி இருப்பதை நீங்களே பாருங்கள்.
..இன்னும் ஸலஃபு சாலிஹின்களின் வழியைப் பின்பற்றுவதை மார்க்கம் நம் மீது கடமையாகவும் ஆக்கியுள்ளது…..
பேச்சிலாவது தெரியாமல் வார்த்தை வந்துவிட்டது என சமாளிப்பு வார்த்தைகளை கூறலாம். எழுத்தில் அவ்வாறு கூற முடியாது. இப்படி இருக்கையில் தங்களின் அதிகாரப்பூர்வ இதழிலேயே இவர்கள் குர்ஆனைப் பின்பற்றுவது எப்படி மார்க்கக் கடமையோ, ஹதீஸே பின்பற்றுவது எப்படி மார்க்கக் கடமையோ, அது போன்று ஒரு மூன்றாவது கடமை தான் ஸலஃபு ஸாலிஹீன்களின் வழியைப் பின்பற்றுவதாகும். இதையும் மார்க்கம் நம்மீது கடமையாக ஆக்கியுள்ளது என இவர்கள் தெள்ளத்தெளிவாக சொல்கிறார்கள்.
எனவேதான், இதன் அடிப்படையில் இவர்கள் ஸஹாபாக்களின் வழிமுறையை ஒருவர் விட்டுவிட்டால் நரகத்தில் போய் விழுவீர்கள் என்று சொல்கிறார்கள். இதன் அடிப்படையில் தான் அவர்கள் தங்களின் கொள்கையைக் கட்டமைத்து அதை நம்பி இருக்கிறார்கள் என்பதை அவர்கள் எழுத்தில் இருந்தும், அவருடைய பேச்சிலிருந்தும் நாம் விளங்கிக் கொள்ளலாம்.
முதலாவதாக நாம் எடுத்துக் காட்டிய நபர் நாங்கள் மார்க்க கடமையாக, மூன்றாம் ஆதாரமாக எங்கே சொல்கிறோம் என்று கேள்வி எழுப்பினார். ஆனால், அதற்கு அடுத்துச் சொன்ன ஒவ்வொருவரும் அது மார்க்க கடமைதான் என்று சொல்கிறார்கள். அதை எழுத்தின் மூலமாகவும் அவர்கள் நிரூபித்து விட்டார்கள். இதிலிருந்து முதலாமவர் திடீரென்று இந்தக் கொள்கையில் வந்தாரா அல்லது அவருக்கு இது பற்றி தெரியவில்லையா என்று நமக்கு தெரியவில்லை.
ஆனால், இவர்களுடய கொள்கை ஸஹாபாக்களைப் பின்பற்றுவதுதான் என்பதை இதிலிருந்து நாம் மிக தெளிவாக அறிந்து கொள்ள முடிகிறது.
அடுத்ததாக நபித்தோழரைப் பின்பற்றாமல் வேறு யாரைப் பின்பற்றுவது என்று இவர்களுடைய அமைப்பின் தலைவரே சொல்வதைப் பாருங்கள்.
…அல்லாஹ்வும் பொருந்திக் கொண்டான். இப்படி அல்லாஹ்வால் பொருந்திக் கொள்ளப்பட்டவர்கள் நபித்தோழர்கள். அப்படிப்பட்ட நபித்தோழர்களைப் பின்பற்றாமல் நேற்று வந்தவர்களையா பின்பற்ற வேண்டும்? யாரைப் பின்பற்ற வேண்டும்?….
இது ஜாக் அமைப்பின் தலைவர் கமாலுதீன் மதனி அவர்கள் பேசியதாகும்.
நபித்தோழர்களைப் பின்பற்றாமல் வேறு யாரை பின்பற்றுவது? அவர்கள்தான் அல்லாஹ்வால் பொருந்திக் கொள்ளபட்டவர்கள் என்று தன்னுடைய பேச்சில் கூடுதலாக ஒரு அழுத்தம் கொடுத்து, சஹாபாக்களைப் பின்பற்ற வேண்டும் என்று கூறுவதை பார்க்கிறோம்.
அல்லாஹ் நபித்தோழர்களை பொருந்திக் கொண்டான் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. இருப்பினும் இதனால் அவர்களைப் பின்பற்ற வேண்டுமா?
இதுபோன்று இவர்கள் தங்களுக்குள்ளேயே நாங்கள் சஹாபாக்களை பின்பற்றச் சொல்லவில்லை என்றும், சஹாபாக்களைப் பின்பற்றாமல் யாரைப் பின்பற்றுவது என்றும் முரண்பட்டு இருப்பதை பார்க்கலாம். இதுபோன்ற முரண்பாடுகள் இவர்களிடம் ஏராளமாக உள்ளன. இன்ஷா அல்லாஹ் அதை வரும் நாட்களில் அறிந்து கொள்வோம் இன்ஷா அல்லாஹ்…
