நவீன ஸலஃபிகள் கூறும் ஸலஃபிக் கொள்கை பற்றியும் அதில் அவர்களுக்கிடையே உள்ள முரண்பாடுகளைப் பற்றியும் நாம் பார்த்துவருகின்றோம்.
கடந்த இதழில் ஸஹாபாக்களை நாங்கள் மார்க்கத்தின் மூன்றாவது ஆதாரமாகச் சொல்லவில்லை என்று சிலரும், இல்லை, இல்லை நாங்கள் ஸஹாபாக்களை (மூன்றாவது) ஆதாரமாகத்தான் ஏற்று பின்பற்றுகிறோம் என்று சிலரும் ஒருவருக்கொருவர் எவ்வாறு இடத்திற்குத் தக்க முரண்பட்டுப் பேசுகிறார்கள் என்பதைப் பார்த்தோம்.
இவர்களின் இந்த முரண்பாடுகளுக்கு எல்லை இல்லை என்னுமளவிற்கு ஒவ்வொருவரும் மாறுபட்ட கருத்தையே கூறுகின்றனர். எனவே, இன்னும் அவர்கள் எப்படியெல்லாம் முரண்படுகிறார்கள் என்பதன் தொடர்ச்சியை இங்கே பார்ப்போம்.
ஸஹாபாக்களையும் பின்பற்ற வேண்டும் – ஸலஃபி கொள்கையுடைய அப்பாஸ் அலி பேச்சு
குர்ஆன், ஹதீஸை பின்பற்றுவேன். ஸஹாபாக்களின் வழியில்போக மாட்டேன் என்று ஒருவன் சொன்னால் அவன் குர்ஆன், ஹதீஸைப் பின்பற்றவில்லை. ஏனெனில், குர்ஆன், ஹதீஸ்தான் சொல்கிறது சஹாபாக்களைப் பின்பற்ற வேண்டும் என்று…
இதுவே அவரது வார்த்தைகளாகும்.
இதிலிருந்து இவர் சொல்ல வருவது, குர்ஆன், ஹதீஸை ஒருவர் பின்பற்றினால் அவர் நபித்தோழர்களையும் கட்டாயம் பின்பற்ற வேண்டும். ஏனெனில் நபித்தோழர்களைப் பின்பற்றுவதுதான் குர்ஆன், ஹதீஸை பின்பற்றுவதாகும். குர்ஆன், ஹதீஸைப் பின்பற்றுவதுதான் நபித்தோழர்களைப் பின்பற்றுவதாகும் எனக் கூறி, நபித்தோழர்களைப் பின்பற்றுவது மார்க்கத்தின் ஒரு அடிப்படை மூல ஆதாரமாகச் சொல்வதைப் பார்க்கிறோம்.
உதாரணத்திற்கு நாம் முஹம்மது நபியைப் பின்பற்றுகிறோம். இவ்வாறு நாம், முஹம்மது நபியைப் பின்பற்றுவது என்பது அல்லாஹ்வின் சட்டத்தை, கட்டளையைப் பின்பற்றுவதாகும்.
இதேபோன்ற ஒரு வாசகத்தை இவர்கள் நபித்தோழர்களுக்கும் கூறுகிறார்கள். அதாவது நபித்தோழர்களைப் பின்பற்றுவது என்பது, அது அல்லாஹ்வின் கட்டளையைப் பின்பற்றுவது என கூறி நபியின் அந்தஸ்திற்கு, சட்டம் இயற்றும் அதிகாரத்திற்கு, நபித்தோழர்களைக் கொண்டு செல்கிறார்கள்.
கடந்த இதழில் நாம் எடுத்துக்காட்டிய ஒருவரின் கூற்றில், “நாங்கள், நபித்தோழர்களை மூல ஆதாரமாகச் சொன்னோமா? ஸஹாபாக்களைப் பின்பற்ற வேண்டும் என்று சொன்னோமா?” என்று கேட்டார்.
ஆனால், இப்போது எடுத்துக் காட்டிய இந்த ஸலஃபியோ அதற்கு நேர் முரணாக, நபித்தோழர்களைப் பின்பற்றுவதுதான் குர்ஆனைப் பின்பற்றுவது என்று சொல்கிறார். மொத்தத்தில் இவருடைய கொள்கையின் அடிப்படையில் நபித்தோழர்களைப் பின்பற்றுவது வஹீயை பின்பற்றுவதைப் போன்றதாகும்.
இதன் மூலம் இவரின் பார்வையில் அவர் கொள்கைத் தெளிவற்றவர். அவருடைய கொள்கையின் அடிப்படையில் இவர் கொள்கைத் தெளிவற்றவர் என்பது தெளிவாகிறது.
ஸலஃபி கொள்கையுடைய அப்பாஸ் அலியின் மற்றொரு பேச்சு
குர்ஆன், ஹதீஸிற்கு முரணில்லாமல் ஸஹாபி சட்டம் சொன்னால் அது மார்க்கமாகத்தான் இருக்கும்!
ஸஹாபாக்களுடைய கூற்றுக்கள் அவங்க வந்து குர்ஆன், ஹதீசுக்கு முரணில்லாத வகையில் ஒரு சில சட்டங்கள சொல்றாங்கனா உடன அவங்க விசயத்துல நமக்கு எண்ணங்கள் எப்படி மேலோங்க வேண்டும் ஆட்டோமேட்டிக்கா, இது சரியான சட்டமாகத்தான் இருக்கும், இது சுன்னாவாகதான் இருக்கும். ஏனா சஹாபாக்கள் பித்அத் செய்யமாட்டாங்க, நபியோடு இருந்துருக்காங்க, அவங்க காலத்த பாத்துருக்காங்க.. நமக்கு தெரியாததுனா அவங்களுக்கு தெரியும் என்ற அடிப்படைல அதை நாம் எடுத்துக்கலாம், தப்பில்லை.
இதில், இவர் என்ன சொல்கிறார் என்றால், குர்ஆன், ஹதீஸிற்கு உட்பட்டு அல்லது அதற்கு விளக்கமாக, நெருக்கமாக நபித்தோழர்கள் சொல்லும் கூற்றைப் பற்றி இவர் சொல்லவில்லை.
மாறாக குர்ஆன், ஹதீஸிற்குச் சம்பந்தமில்லாமல் நபித்தோழர்கள் ஒரு விஷயத்தைச் சொன்னால்கூட அது குர்ஆன், ஹதீஸில் உள்ளதாகவோ அல்லது அதற்கு விளக்கமானதாகவோ இருக்கும் என்று அவர்களின் மீது நல்லெண்ணம் வைத்து அதை மார்க்கத்தின் ஆதாரமாகவே நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் இதுவும் மார்க்கத்தில் உள்ளதாக, மார்க்கச் சட்டமாகவே இருக்கும். ஏனென்றால் ஸஹாபாக்கள் தவறு செய்யமாட்டார்கள் என்று ஆதாரத்தை முன்வைக்காமல் யூகத்தை முன்வைத்து தமது கொள்கைக்கு சான்றாகக் கூறுகிறார்.
இஸ்லாமிய (அகீதா) அடிப்படை கொள்கையில் யூகத்தை ஒரு ஆதாரமாக ஏற்றுக் கொள்ள முடியுமா? மார்க்கத்திற்கு யூகம் ஒருபோதும் ஆதாரமாக ஆகாது. ஏனெனில் யூகத்தைப் பின்பற்றுவதினால்தான் அதிகமான மக்கள் வழிகெட்டுப் போனார்கள் என்று அல்லாஹ் அல்குர்ஆனில் பல இடங்களில் சொல்லிக் காட்டுகிறான்.
அவர்கள் ஊகத்தையே பின்பற்றுகின்றனர். அந்த ஊகம், உண்மையை அறிவதற்கு ஒரு சிறிதும் உதவாது.
அல்குர்ஆன் (53:28)
அவர்களில் பெரும்பாலோர் ஊகத்தையே பின்பற்றுகின்றனர். உண்மையை அறிவதற்கு ஊகம் சிறிதும் பயன் தராது.
அல்குர்ஆன் (10:36)
இவ்வாறு யூகத்தைப் பற்றி இஸ்லாம் சொல்லியிருக்கும்போது நல்லெண்ணம் என்ற பெயரில் யூகத்தை அடிப்படையாக கொண்டு பின்பற்ற வேண்டும் என்று இவர் சொல்கிறார்.
நபியவர்கள் சொன்னார்கள் என நபித்தோழர்கள் சொல்லாமல் இருந்தபோதிலும் ஸஹாபாக்களின் மீது நல்லெண்ணம் வைத்து, யூகத்தின் அடிப்படையில் நபித்தோழர்கள் சொல்வது, செய்வது மார்க்கத்தில் உள்ளதாக, நபியவர்கள் சொன்னதாக இருக்கும் என கூறி அவர்களைப் பின்பற்ற வேண்டும் என்று இவர் சொல்கிறார்.
இதன் மூலம் மார்க்கத்தின் அடிப்படையைத் தகர்ப்பதோடு இவருக்கு இவரே முரண்படுகிறார் என்பதையும் நாம் பார்க்க முடிகிறது.
ஏனெனில், முதலில் குர்ஆனைப் பின்பற்றினால் நபித்தோழரை கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என்று சொல்லுகிறார். அடுத்து நல்லெண்ணத்தின் அடிப்படையில் நபித்தோழர்களைப் பின்பற்ற வேண்டும் என்று கொஞ்சம் இறங்கி வருகிறார். இவர்கள் ஏன் இவ்வாறு ஒவ்வொன்றிற்கும் மத்தியில் முரண்படுகிறார்கள் என்பதையும், கொள்கையில் தெளிவின்மையாக இருக்கிறார்கள் என்பதையும் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
இதற்கான காரணம் வஹீ எனும்அடிப்படையை விட்டு விலகிச் சென்றால் இப்படியான தெளிவின்மையும், முரண்பாடுகளும் இருக்கும் என்பதற்கு இவருடைய பேச்சே சான்றாக இருக்கிறது. இவர் சொல்லக்கூடிய நல்லெண்ணம் என்பது மார்க்கத்தின் அடிப்படையில் சரியான விஷயமா?
ஸஹாபாக்களின் மீது நாம் நல்லெண்ணம் வைக்கவேண்டும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால், அவர்களின் மீது நல்லெண்ணம் வைத்தால் அது எப்படி வைக்க வேண்டும். ஸஹாபாக்களும் சில தவறுகள் செய்வார்கள், அவர்களிடமும் தவறுகள் நிகழ்ந்திருக்கிறது. இருப்பினும் அந்த தவறுகளின் காரணமாக அல்லாஹ் அவர்களை தண்டிக்காமல் அவர்களுடைய தியாகத்தின் காரணமாக அவர்கள் செய்த தவறுகளை அல்லாஹ் மன்னிக்கலாம் என்று இப்படி அவர்கள் மீது நல்லெண்ணம் வைத்தால் அது மார்க்கத்தின் அடிப்படையில் சரி என்போம்.
ஆனால், இவ்வாறு இல்லாமல் நபித்தோழர்கள் செய்வதும் நபி (ஸல்) அவர்கள் சொன்னதாகத்தான் இருக்கும், அது மார்க்கமாகத்தான் இருக்கும் என்று எந்த ஆதாரமும் இல்லாமல் நல்லெண்ணத்தை மட்டும் காரணம் காட்டி அவைகளையும் மார்க்கமாக எடுத்துக் கொள்வோம் என்றால் இது எப்படி சரியான கொள்கையாகும். இவர்கள் இதன் மூலம் ஸஹாபாக்களின் சுய கருத்தையும் எவ்வித சான்றுகளுமின்றி யூகத்தின் அடிப்படையில் குர்ஆன், ஹதீஸாகவே அதாவது மார்க்க சட்டமாகவே முன்னிறுத்துகிறார்கள்.
இதுதான் இறைவனுடைய அதிகாரத்தில் தலையிடுவதாகும். இறைவன் மாத்திரம் சொல்லக்கூடியதை ஒரு மனிதன் சொன்னால் அதுவும் வஹீயாகத்தான் இருக்கும் என்று யூகத்தின் அடிப்படையில் இவர்கள் மார்க்கத்தினுடைய அடிப்படையை வரையறை செய்கிறார்கள். இவர்கள் தங்களுடைய வாதத்தை யூகத்தின் அடிப்படையில் வைப்பதே இவர்களுடைய கொள்கை தவறான கொள்கை என்பதற்குச் சான்றாக இருக்கிறது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
இவ்வாறு ஸஹாபாக்களைப் பின்பற்றுவது குர்ஆனைப் பின்பற்றுவதே என்றும், ஸஹாபாக்கள் ஒன்றை சொன்னால், செய்தால் அது நிச்சயம் நபியவர்கள் சொன்னதாகத்தான் இருக்கும், எனவே, அதுவும் மார்க்கம் என கூறும் அப்பாஸ் அலி அவர்கள் தனக்குத்தான முரண்பட்டுப் பேசும் சமீபத்திய பேச்சைப் பாருங்கள்.
ஸஹாபாக்களை, ஸலஃபுகளை நாங்கள் பின்பற்றவில்லை
…உண்மையிலேயே குர்ஆன், ஹதீஸை விட்டுட்டு முன்னோர்களைப் பின்பற்ற வேண்டும் என்றுச் சொன்னால் அதை சுட்டிக்காட்டுங்கள்…..
…வார்த்தைகளை வைத்து இவர்கள் ஸஹாபாக்களை பின்பற்றுராங்க, முன்னோர்களை பின்பற்றுராங்க, ஸலஃபுகள பின்பற்றுராங்க என்று சொல்லி ஒரு மாய பிம்பத்தை தயவு செய்து சகோதரர்களே உருவாக்காதீர்கள். வேண்டாம். அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள்! இது பொய்….
இது சமீபத்தில் அப்பாஸ் அலி பேசியதாகும்.
இந்த பேச்சில் இவர் என்ன சொல்ல வருகிறார் என பாருங்கள். இதற்கு முன்பாக எடுத்துக் காட்டியவைகளில் சஹாபாக்களைப் பின்பற்றுவது குர்ஆனைப் பின்பற்றுவதாகும் என்றும், நபி (ஸல்) சொன்னதாக எவ்வித ஆதராமும் இல்லாமல் இருந்தும் ஒன்றை ஸஹாபாக்கள் செய்தால் அது வஹீயாகதான் இருக்கும் என்றும் யூகத்தின் அடிப்படையில் சொல்லிவிட்டு, தற்போது ஸலஃப் தொடர்பாக நம்முடைய பிரச்சாரம் வீரியமெடுக்கும்போது மக்களிடம் ‘நாங்கள் முன்னோர்களையும், ஸஹாபாக்களையும், ஸலஃபுகளையும் பின்பற்றுகிறோம் என கூறாதீர்கள். இது பொய்! நாங்கள் அவ்வாறு கூறவில்லை’ என முன்னுக்குப்பின் முரணாகக் கூறுவது மட்டுமின்றி நாம் பொய் சொல்வதாகவும் கூறுகிறார்.
இதன் மூலம் மக்களுக்கு மத்தியில் தம் கொள்கையைச் சரி காண்பதற்காகவும், நம்மைத் தவறாகச் சித்தரிக்கவுமே இந்தப் பாசாங்கு வார்த்தைகளைக் கொண்டு நாங்கள் யாரையும் பின்பற்றவில்லை என அப்பட்டமாக பொய்யுரைக்கிறார்.
இதிலிருந்தே இவர்களின் கொள்கைத் தெளிவையும், உண்மை முகத்தையும் மக்கள் அறிந்து உண்மையில் எது வழிகேடான, முரண்பாடான கொள்கை என்பதை இனம் கண்டு கொள்கின்றனர்.
ஸலஃபி கொள்கையே சரியான கொள்கை என கூறிக்கொண்டு இப்படி ஒருவருக்கொருவர் முரண்படுவது மட்டுமின்றி, தமக்குத்தாமே முரண்படுவதுதான் ஸலஃபி கொள்கையா? இதுதான் ஸலஃபி கொள்கை என்றால் இந்த முரண்பாடான ஸலஃபி கொள்கை எப்படி சரியான கொள்கையாக இருக்க முடியும்? தங்களின் கொள்கை என்ன என்பதை மக்களுக்கு மத்தியில் பகிரங்கமாகக் கூற முடியாமல் முரண்படுவதுதான் வழிகேடான கொள்கையாகும். அப்படிபட்ட வழிகேடான கொள்கையைத்தான் ஸலஃபி கொள்கை என இவர்கள் பிரச்சாரம் செய்கிறார்கள்.
அடுத்து இவர்கள் நபித்தோழர்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் இடத்தில்தான் வைக்கிறார்கள் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் ஸலஃப் ஆலிம் ஒருவர் உரையாற்றுகிறார். அது தொடர்பானவைகளைப் பார்ப்போம்.
பொதுவாக ஒரு முஃமினுக்கு நபி (ஸல்) அவர்களே உயிரை விட நேசிக்கத் தகுதியானவர்கள் என அல்லாஹ் கூறுகிறான்.
இறைநம்பிக்கையாளர்களுக்குத் தங்களின் உயிர்களைவிட இந்த நபியே மிக்க மேலானவர்.
அல்குர்ஆன் (33:6)
இதுதான் ஈமானுடைய அடிப்படை அம்சமாகும். நபி (ஸல்) அவர்களுடைய நேசம்தான் பெற்றோரைவிட, தன்னைவிட அனைத்தையும்விட முதன்மையாக இருக்க வேண்டும். இப்படிப்பட்ட நேசத்தின் அந்தஸ்தை வேறு யாருக்கும் நான் தரமாட்டேன் என்று ஒரு முஃமின் இருக்க வேண்டும்.
ஆனால், ஸலஃபி என தங்களை அடையாளப்படுத்துபவர்கள் நபியுடைய அந்தஸ்தில் நபித்தோழர்களை எப்படி இணைக்கிறார்கள் என்பதற்குச் சான்றாக ஸலஃபி ஆலிம் பேசுவதை பாருங்கள்.
அல்லாஹ்வின் தூதரிடத்தில் முன்மாதிரி உண்டு என்று அல்லாஹ் சொல்லுகிறான். ஆனால், அதே தூதரைப் பற்றிதான் ‘அபஸ வ தவல்லா – கண் தெரியாத ஒரு மனிதர் வந்தபோது இந்த நபி கடுகடுத்தார்’ என்று அல்லாஹ் சொல்லிக் காட்டுகிறான்.
நபியிடத்தில் முன்மாதிரி உள்ளது என்று சொல்லி இந்தச் செய்தியை முன்மாதிரியாக நாம் எடுத்துக் கொள்வோமா?
இதேபோன்றுதான் இந்த (நபித்தோழர்கள்) விஷயத்தில் நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
நபியவர்கள் விஷயத்தில் கண்டிக்கப்பட்ட இறை வசனங்களின் அடிப்படையில் அவைகளை விட்டு விட்டு ஏனையதை (முன்மாதிரியாக) எடுக்க வேண்டும். (என்பதைப் போன்றே நபித்தோழர்கள் விஷயத்திலும் எடுக்கவேண்டும்)
இதுதான் அந்த ஸலஃபி ஆலிமுடைய பேச்சின் கருத்தாக்கமாகும்.
இந்தப் பேச்சில் இவர் என்ன சொல்கிறார் என்பதைக் கவனித்தீர்களா? நபி (ஸல்) அவர்களைப் பின்பற்ற வேண்டும். ஏனெனில் அவர்களிடத்தில் அழகிய முன்மாதிரி இருக்கிறது என்று அல்லாஹ் சொல்கிறான். இறைவன் இப்படி சொன்னதினால் நபி (ஸல்) அவர்களை நாம் பின்பற்றுகிறோம். அப்படி பின்பற்றினாலும்கூட அல்லாஹ்வினுடைய தூதரிடத்திலும் மனிதன் என்ற அடிப்படையில் சில தவறுகள் ஏற்பட்டதே அந்தத் தவறுகளை நாம் எடுத்துக் கொள்ள மாட்டோம். உதாரணத்திற்கு: கண் தெரியாதவரிடத்தில் இந்த நபியவர்கள் கடுகடுத்தார்கள் என்று அல்லாஹ் கண்டிக்கிறான் அல்லவா?
எனவே, அல்லாஹ்வின் தூதர் செய்த இந்தத் தவறை விட்டு விட்டு எவ்வாறு அல்லாஹ்வின் தூதரை மற்ற விஷயங்களில் பின்பற்றுவோமோ அதுபோன்றே நபித்தோழர்கள் விஷயத்திலும் நாம் எடுத்துக்கொள்ள வேண்டும் அவர்களிடத்தில் சில தவறுகள் வரலாம். தவறுதலாகச் சிலவற்றைச் சொல்லி இருக்கலாம் அப்படி தவறுதலாகச் சொல்லியதை மாத்திரம் விட்டுவிட்டு மற்ற ஏனைய அனைத்தையும் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று இவர்கள் சொல்கிறார்கள்.
இதில் அவர்கள் சொல்ல வரும் விஷமக் கருத்தைப் பாருங்கள்.
நபி (ஸல்) அவர்கள் சில நேரங்களில் மனிதன் என்ற அடிப்படையில் தவறான முடிவுகள் எடுத்தார்கள். இவ்வாறு சில தவறுகள் அவர்களிடம் நிகழ்ந்த போது அது தவறுதான் என்று எவ்வாறு தெரிந்தது என்றால் வஹீயின் மூலமாகத்தான் தெரிந்தது. இதைப் பிரித்துக் காட்டுவதற்கு அடிப்படையாக வஹீதான் இருக்கிறது. வஹீ செய்தி மூலமாகத்தான் அது தவறு என்று அல்லாஹ் நமக்குத் தெளிவுபடுத்தினான். எனவே தான் வஹீயை மட்டும் பின்பற்ற வேண்டும் என்று நாம் சொல்கிறோம்.
ஆனால் உங்கள் கருத்துப்படி குர்ஆன், ஹதீஸில் இல்லாமல் நபித்தோழர்கள் செய்தாலும் அதுவும் மார்க்கம் தான் என்று கூறுகிறீர்கள். பிறகு எப்படி எது சரி? எது தவறு என்று பிரித்துப் பார்பீர்கள்.
இவ்வாறு கூறுவது நபியின் இடத்தில் நபித்தோழர்களை வைப்பது இல்லையா? அல்லாஹ்வின் தூதருடைய இடத்திற்கு எப்படி நபித்தோழர்களைக் கொண்டு போய் வைக்க முடியும்? நபியைப் போன்று எப்படி நபித்தோழர்களையும் எடுத்துக்கொள்ள முடியும்?
நபியவர்கள் மனிதர் என்ற அடிப்படையில் தவறான முடிவை எடுத்தபோது, அதை அல்லாஹ் வஹீயின் மூலமாகத் திருத்துகிறான்.
நபித்தோழர்களின் செயல்களில் சரி தவறு என்பதை எப்படி பிரித்து அறிவதற்கு நபித்தோழர்களுக்கும் அல்லாஹ் வஹீ அறிவிப்பானா? அவர்கள் தங்களின் தவறை திருத்திக் கொள்வதை நாம் எப்படி அறிந்து கொள்ள முடியும்?
வஹீயுடைய ஆதாரத்தின் அடிப்படையில் மட்டும் கொள்கையைக் கட்டமைக்காமல் நபித்தோழர்களையும், நபி (ஸல்) அவர்களையும் ஒரே அடிப்படையில் பின்பற்ற வேண்டும் என இவர்கள் சொல்கிறார்கள் என்றால் நபித்தோழர்களை எந்த இடத்தில் இவர்கள் கொண்டுவந்து வைக்கிறார்கள் என்பது தெரிகிறதா? மார்க்கத்தினுடைய அடிப்படை ஆதாரமாகத்தானே இவர்கள் நபித்தோழர்களை கூறுகிறார்கள்.
நபித்தோழர்கள் மதிப்பு மிக்கவர்கள்தான், நபித்தோழருடைய தியாகம் போற்றப்பட வேண்டும்தான், நபித்தோழர்கள் சிறந்தவர்கள்தான், நபித்தோழர்களில் சொர்க்கவாசிகள் உள்ளனர். இருப்பினும் இதன் காரணமாக அவர்களை அல்லாஹ்வின் தூதருடைய இடத்திற்கு கொண்டு வந்து வைத்தால் அது இறைமறுப்பு இல்லையா? அல்லாஹ்வின் அதிகாரத்தில் தலையிடுவதாக ஆகாதா?
நபித்தோழர்களை நேசிக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், அந்த நேசத்திற்கு ஒரு வரையறையை மார்க்கம் சொல்லவில்லையா? அந்த வரையறையைத் தாண்டி நபியினுடைய நேசத்திற்கு, நபியினுடைய அந்தஸ்திற்கு அவர்களைக் கொண்டு வர வேண்டுமா? அப்படி ஒருவர் கொண்டு வருகிறார் என்று சொன்னால் அவர் நபித்தோழர்களை மார்க்கத்தின் மூல ஆதாரமாகத் தானே கூறுகிறார்.
இந்த விஷயத்தில் ஸலஃபி கொள்கையைச் சார்ந்தவர்கள் ஒரு முடிவிற்கு வர வேண்டும்.
ஸஹாபாக்களை மூல ஆதாரம் என்று நாங்கள் சொல்லி இருக்கிறோமா? குர்ஆன், ஹதீஸுக்கு அடுத்தபடி என்று சொல்லி இருக்கிறோமா? என ஒரு பக்கம் இவர்கள் கூறுகிறார்கள்.
இன்னொரு பக்கம், ஸஹாபாக்களை அனைத்து விஷயங்களிலும் பின்பற்ற வேண்டும், ஸஹாபாக்களின் வழியை விட்டால் நரகம் செல்வீர்கள், ஸஹாபாக்களைப் பின்பற்றாமல் வேறு யாரை பின்பற்றுவது? குர்ஆனைப் பின்பற்றுபவர்கள் ஸஹாபாக்களையும் பின்பற்ற வேண்டும், ஸஹாபாக்களை பின்பற்றுவதுதான் குர்ஆனைப் பின்பற்றுவது, நபியவர்களைப் போன்று ஸஹாபாக்களையும் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றெல்லாம் மார்க்கத்தின் அடிப்படையைத் தகர்க்கும் கருத்துக்களைக் கூறுகிறார்கள்.
ஸஹாபாக்களைப் பின்பற்ற வேண்டும் என்று ஓர் இடத்திலும், ஸஹாபாக்களை பின்பற்ற வேண்டும் என்று நாங்கள் சொல்லவே இல்லை என்று மற்றோர் இடத்திலும் பேசுகிறார்கள். இப்படி தங்களுக்குலேயே பல முரண்பாடுகளை வைத்துக் கொண்டு இதுதான் சரியான கொள்கையென கூறுவது நேர்மையான கொள்கையல்ல!
நபித்தோழர்கள் மார்க்கத்தின் மூல ஆதாரமல்ல என்றும் அவர்கள் மார்க்கத்தின் மூல ஆதாரம் என்றும் முரண்பட்டு இருப்பதே இவர்கள் தெளிவான கொள்கையில் இல்லை என்பதற்கான சான்றாக இருக்கிறது. இவர்களைப் போன்றவர்கள் இவ்வாறு தெளிவான கொள்கையில் இல்லாமல் இருப்பதற்கான காரணம் என்னவென்றால் வஹீ அல்லாததைப் பின்பற்றுவதுதான் என்பதை அல்லாஹ் மிகத் தெளிவாக அல்குர்ஆனிலே சொல்லிக் காட்டுகிறான்.
இதுவே எனது நேரான வழியாகும். எனவே இதனைப் பின்பற்றுங்கள்! (வேறு) வழிகளைப் பின்பற்றாதீர்கள்! அது அவனது வழியை விட்டும் உங்களைப் பிரித்துவிடும். நீங்கள் இறையச்சமுடையோர் ஆவதற்காக அவன் இதனை உங்களுக்கு ஆணையிடுகிறான்.
அல்குர்ஆன் (6:153)
கொள்கையை வஹீ எனும் குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் கட்டமைக்காமல் நபித்தோழருடைய கருத்துக்களும், தாபியீன்களுடைய கருத்துக்களும் அதற்கு பின் வந்த அறிஞர்களின் கருத்துக்களும், நல்லவர்களின் கருத்துக்களும் மார்க்கத்தின் அடிப்படையே என இவர்கள் பின்பற்றக்கூடிய காரணத்தினால்தான் நேர்வழியைத் தாண்டி தவறான வழிக்குச் சென்று இறைவனுடைய அதிகாரத்தை மற்ற மனிதர்களுக்கு இருப்பதாக ஒரு மாபாதக வழிகேட்டை, இவர்கள் நடைமுறைப்படுத்துகிறார்கள்.
இவர்களுடைய உண்மையான கொள்கை நபித்தோழர்களை மூல ஆதாரமாகப் பின்பற்ற வேண்டும் என்பதுதான். இதை மக்களிடத்தில் சொல்வதற்குத் துணிவின்றி நேரத்திற்கு தகுந்தாற்போல் பேசி, மக்களை மடையர்களாக ஆக்குகின்றார்கள்.
நபித்தோழர்களை விளக்கத்திற்கு எடுத்துக் கொள்ளலாம், அவர்களின் புரிதலை எடுத்துக் கொள்ளலாம், அவர்களின் ஏகோபித்த கருத்தை எடுத்துக் கொள்ளலாம் என்றெல்லாம் மக்களுடைய கவனத்தைத் திசை திருப்பி, தங்களுடைய தவறான கொள்கையை மக்கள் உணர்ந்துவிடக் கூடாது என்பதற்காக அலங்கார வார்த்தைகளைக் கொண்டு இவர்கள் மூடலாக விஷக் கருத்துக்களை உள்ளே நுழைக்கிறார்கள் என்பதை அவர்களின் பேச்சிலிருந்தே அறிய முடிகிறது.
இந்தப் போலியான ஸலஃபி கொள்கையிலிருந்து விடுபட்டு, வஹீ எனும் தூய கொள்கையில் நாம் பயணிப்போமாக!
