இன்று நம் கைகளில் தவழுக்கின்ற நபிமொழிகள், நபி (ஸல்) அவர்களிடமிருந்து ஏராளமான நபித்தோழர்கள், மற்றும் அவர்களைப் பின்தொடர்ந்த தாபியீன்கள், தபவு தாபியீன்கள் பலரின் வழியாக வந்துள்ளன.
ஆதலால், சிலர் அறிவித்த செய்திகள் சிலரின் செய்திகளுக்கு மாற்றமாகவும், முரணாகவும், கூடுதல் குறைவாகவும், புரிதலை விட்டு சற்று தூரமானவைகளாகவும் உள்ளன.
இதில் நாம் அனைவரும் அறிந்த, பிரபலமான ஹதீஸான, “நாய் வாய் வைத்த பாத்திரத்தை ஏழு முறை கழுவ வேண்டும்” என்ற செய்தியில் முரண் உள்ளதா? என்பது குறித்த ஆய்வை இங்கு காண்போம்.
நாய் வாய் வைத்த பாத்திரத்தின் சட்டம்
நாய் வாய் வைத்துவிட்டால் அப்பாத்திரத்தை ஏழு முறை கழுவ வேண்டும்.
صحيح البخاري حسب ترقيم فتح الباري (1/ 54
حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ يُوسُفَ ، عَنْ مَالِكٍ ، عَنْ أَبِي الزِّنَادِ ، عَنِ الأَعْرَجِ ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ إِنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم قَالَ : إِذَا شَرِبَ الْكَلْبُ فِي إِنَاءِ أَحَدِكُمْ فَلْيَغْسِلْهُ سَبْعًا.
“உங்களில் ஒருவரின் (தண்ணீர்) பாத்திரத்தில் நாய் குடித்தால் அவர் அ(ப்பாத்திரத்)தை ஏழு முறை கழுவட்டும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி (172)
எப்படிக் கழுவ வேண்டும்?
ஏழு முறை கழுவ வேண்டும் என மேற்கூறிய செய்தி சொல்லுகிறது. ஆனால் அதை எப்படிக் கழுவ வேண்டும் என்ற விபரம் இடம்பெறவில்லை. அந்த விபரத்தை மற்றொரு செய்தியில் நம்மால் அறிய முடிகிறது.
இப்படி ஏழு முறை கழுவுவதில் மண்ணைக் கொண்டும் கழுவ வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டுளார்கள். மண்ணால் கழுவ வேண்டும் என்பதில் சில மாறுபட்ட செய்திகள் உள்ளன. அதிலுள்ள சந்தேகத்தையும், தெளிவையும் காண்போம்.
முதல் தடவை மண்ணால் கழுவுதல்
و حَدَّثَنَا زُهَيْرُ بْنُ حَرْبٍ حَدَّثَنَا إِسْمَعِيلُ بْنُ إِبْرَاهِيمَ عَنْ هِشَامِ بْنِ حَسَّانَ عَنْ مُحَمَّدِ بْنِ سِيرِينَ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ طَهُورُ إِنَاءِ أَحَدِكُمْ إِذَا وَلَغَ فِيهِ الْكَلْبُ أَنْ يَغْسِلَهُ سَبْعَ مَرَّاتٍ أُولَاهُنَّ بِالتُّرَابِ رواه مسلم
‘உங்களில் ஒருவருடைய பாத்திரத்தில் நாய் வாய் வைத்து விட்டால் அதைத் தூய்மை செய்யும் முறையானது ஏழு முறை அதை அவர் கழுவுவதாகும். முதல் முறை மண்ணால் அதைக் கழுவ வேண்டும்’ என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் (471)
இந்தச் செய்தியின் அடிப்படையில் ஏழு முறைகளில் முதலாவது முறையில் மண்ணால் கழுவ வேண்டும் என்று நமக்குக் கட்டளையிடப்பட்டுள்ளது.
ஏழாவது தடவை மண்ணால் கழுவுதல்
سنن أبي داود محقق وبتعليق الألباني (1/ 27)
حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ حَدَّثَنَا أَبَانُ حَدَّثَنَا قَتَادَةُ أَنَّ مُحَمَّدَ بْنَ سِيرِينَ حَدَّثَهُ عَنْ أَبِى هُرَيْرَةَ أَنَّ نَبِىَّ اللَّهِ -صلى الله عليه وسلم- قَالَ « إِذَا وَلَغَ الْكَلْبُ فِى الإِنَاءِ فَاغْسِلُوهُ سَبْعَ مَرَّاتٍ السَّابِعَةُ بِالتُّرَابِ
‘(உங்களின்) பாத்திரத்தில் நாய் வாய் வைத்து விட்டால் அ(ப்பாத்திரத்)தை ஏழு முறை கழுவட்டும், எழாவது முறை மண்ணால் (அதை) கழுவட்டும்’ என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: அபூதாவூத் (73)
இந்தச் செய்தியில் ஏழு முறைகளில் ஏழாவது முறையில் மண்ணால் கழுவ வேண்டும் என நமக்குக் கட்டளையிடப்பட்டுள்ளது.
இப்படி இருவேறு செய்திகளில், ஒன்றில் முதலில் மண்ணால் கழுவ வேண்டும் என்றும், மற்றொன்றில் ஏழாவதில் மண்ணால் கழுவ வேண்டும் என்றும் முரணைப் போல் உள்ளது, ஆனால் இவற்றை எப்படிப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதைப் பற்றி காண்போம்.
முதலாவதிலா? ஏழாவதிலா?
سنن الترمذي 1/ 151
حدثنا بن عبد الله العنبري حدثنا المعتمر بن سليمان قال سمعت أيوب [ يحدث ] عن محمد بن سيرين عن أبي هريرة : عن النبي صلى الله عليه و سلم أنه قال يغسل الإناء إذا ولغ فيه الكلب سبع مرات أولاهن أو أخراهن بالتراب
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “பாத்திரத்தில் நாய் வாய்வைத்து விடுமானால் அந்தப் பாத்திரம் ஏழுதடவை கழுவப்பட வேண்டும். முதல் தடவையோ அல்லது கடைசித் தடவையோ மண்ணைப் பயன்படுத்திக் கழுவ வேண்டும்”
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: திர்மிதி (84)
முதலாவதில் மண்ணால் கழுவ வேண்டுமா? அல்லது இறுதியில் மண்ணால் கழுவ வேண்டுமா? என்னும் முரணைத் தெளிவுபடுத்தும் வகையில் திர்மிதியின் செய்தி அமைந்துள்ளது. மொத்தம் ஏழு தடவை கழுவ வேண்டும். அதில் முதல் தடவையிலோ, அல்லது இறுதித் தடவையிலோ மண்ணால் கழுவ வேண்டும்.
மொத்தம் ஏழு தடவை தானா?
நாய் வாய் வைத்த பாத்திரத்தை ஏழு முறை கழுவ வேண்டும் என மேற்கூறிய அனைத்துச் செய்திகளும் கூறுகின்றன. ஆனால் எட்டாவது முறையில் மண்ணால் கழுவ வேண்டும் என முஸ்லிமில் ஒரு செய்தி இடம்பெறுகிறது
صحيح مسلم مشكول وموافق للمطبوع 1/ 162
وَحَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ حَدَّثَنَا أَبِى حَدَّثَنَا شُعْبَةُ عَنْ أَبِى التَّيَّاحِ سَمِعَ مُطَرِّفَ بْنَ عَبْدِ اللَّهِ يُحَدِّثُ عَنِ ابْنِ الْمُغَفَّلِ قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- « إِذَا وَلَغَ الْكَلْبُ فِى الإِنَاءِ فَاغْسِلُوهُ سَبْعَ مَرَّاتٍ وَعَفِّرُوهُ الثَّامِنَةَ فِى التُّرَابِ
பாத்திரத்தில் நாய் வாய் வைத்துவிட்டால் ஏழு தடவை (தண்ணீரால்) கழுவிக்கொள்ளுங்கள். எட்டாவது தடவை மண்ணிட்டுக் கழுவுங்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின்
அல்முகஃப்பல் (ரலி), நூல்: முஸ்லிம் 473
அனைத்துச் செய்திகளும் மொத்தம் ஏழு தடவை கழுவ வேண்டும், அதில் முதலிலோ அல்லது இறுதியிலோ மண்ணால் கழுவ வேண்டும் என இருக்கும் போது இந்தச் செய்தி அதற்கு மாற்றமாக ஏழு தடவை தண்ணீராலும் எட்டாவது தடவை மண்ணாலும் கழுவ வேண்டும் என உள்ளதே!
பொதுவாகவே இரண்டு செய்திகள் முரணாகத் தெரிந்தால் அவைகளை (جمع) ஜம்ஃஉ செய்ய (இணைத்துப் பொருள் காண) முடிகிறதா எனப் பார்க்க வேண்டும்.
ஏனென்றால் நாம் குறிப்பிட்டுள்ள இந்தச் செய்திகளில் இடம்பெறும் அனைத்து அறிவிப்பாளர்களும் நம்பகமானவர்களே.
ஏராளமான செய்திகள் ஏழு முறை கழுவ வேண்டும் என வந்துவிட்டதால், ஏழு முறை கழுவுவதே நபியின் கட்டளையை நிறைவேற்றியதாக ஆகிவிடும்.
என்றாலும் எட்டாவது முறை கழுவுவது என்பது கூடுதல் பேணுதலுக்காகவும், மேலதிக தூய்மைக்காகவும், ஏழு முறை கழுவிய போதும் அசுத்தம் நீங்காத பட்சத்தில் தேவையாக இருந்தால் எட்டாவது முறை கழுவ வேண்டும். என்பதே ஏற்றமானதாகும்.
இமாம் அல்பானி இதே கருத்தைத் தமது இர்வாஉல் ஃகலீல் என்ற புத்தகத்தில் கூறுகிறார்.
إرواء الغليل في تخريج أحاديث منار السبيل (1/ 62)
أن المعنى يشهد له لأن ترتيب الثامنة يقتضى الاحتياج إلى غسلة أخرى لتنظيفه , والله أعلم
(இருவேறு செய்திகளின்) கருத்து: எட்டாவது முறையை குறிப்பிடுவதற்குக் காரணம் அ(ப்பாத்திரத்)தை (நன்றாக) தூய்மை செய்ய வேண்டும் என்பதற்காக மற்றொரு தடவை கழுவுவது தேவையானால் (எட்டாவது முறை கழுவுவது) கூடும் என்பதே ஆகும். இறைவனே நன்கறிந்தவன்.
எனவே, இவ்வாறு அனைத்து ஹதீஸ்களையும் இணைத்துப் பொருள் கொள்வதே சரியானதாகும்.