நான் ஏன் காந்தியைக் கொன்றேன் எனும் திரைப்படத்திற்கு தடை வருமா?

நான் ஏன் காந்தியைக் கொன்றேன் எனும் திரைப்படத்திற்கு தடை வருமா?
-அபூ யூசுப், காரைக்கால்

இந்தியாவின் தேசத்தந்தை என்று அழைக்கப்படும் காந்தியை சங்பரிவார் கும்பலைச் சார்ந்த நாதுராம் கோட்சே என்பவன் சுட்டுக் கொன்றான்.

முஸ்லிம் தான் அவரை கொன்றதாக போலியாக சித்தரித்து கலவரத்தை உண்டாக்கினார்கள். இதை இந்திய தேசம் நன்கறியும்.

கோட்சே தான் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டது முதலே காந்தியை கொலை செய்ததை நியாயப்படுத்தும் செயலை துவங்கி விட்டனர்.

உச்சகட்டமாக நாதுராம் கோட்சேவின் சகோதரன் கோபால் கோட்சே என்பவன் நான் ஏன் காந்தியை கொன்றேன் எனும் தலைப்பில் புத்தகத்தையே எழுதியுள்ளான்.

அந்த புத்தகத்தை தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம் தான் தற்போது இணையத்தில் வெளிவர உள்ளது.

இந்த திரைப்படம் காந்தியை கொன்றதில் கோட்சேவின் பக்கம் உள்ள நியாயத்தை? எடுத்து சொல்வதாக அமைந்துள்ளதாம்.

இந்த திரைப்படத்தின் முன்னோட்ட வீடியோ வெளியானது முதலே பல்வேறு தரப்பினர் இப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதை இணையத்தில் வெளியிடக்கூடாது இப்படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோருகின்றனர். ஆனால் நடைமுறையில் அதற்கான சாத்தியம் இல்லை.

முதல் விஷயம் (இணையத்தில் வெளியிடப்படும் திரைப்படங்களுக்கு) ஓடிடி தளங்களுக்கென்று எந்த கட்டுப்பாடுகளும் கிடையாது.

திரைப்படங்களை தணிக்கை செய்யும் தணிக்கை குழுவின் அதிகாரம் திரையரங்குகளில் வெளியாகும் படங்களை மட்டுமே கட்டுப்படுத்தும். ஓடிடி தளங்களில் வெளியாகும் படங்களை கட்டுப்படுத்தாது.

அதனால் தான் மாறுபட்ட கருத்துக்களை கொண்ட பல்வேறு திரைப்படங்கள் எவ்வித கட்டுப்பாடும் இன்றி ஓடிடி தளங்களில் வெளியாகின்றன.

அரசுக்கு எதிரான கருத்துக்களை கொண்ட திரைப்படங்களும் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

எனவே இதில் வெளியாகும் திரைப்படத்தை கட்டுப்படுத்த இயலாது.

நான் ஏன் காந்தியை கொன்றேன் எனும் திரைப்படத்தின் நிலையும் இதுதான்.

திரைப்படம் எனும் அடிப்படையில் அது ஓடிடி தளத்தில் வெளியாவதை அதிகாரப்பூர்வமாக தடுக்க முடியாது.

அரசு நினைத்தால் எதையும் செய்யலாம் எனும் அடிப்படையில் இப்படத்தை ஒன்றிய அரசு நினைத்தால் தடுக்க முடியும் என்பது உண்மை. அது வெளியிடப்பட்ட இணையதளத்தை தொழில் நுட்பத்தை பயன்படுத்தி முடக்க முடியும். எனினும் ஒன்றிய அரசு அதை செய்ய விரும்பாது.

காந்தியை இந்திய தேசமே கொண்டாடினாலும் பாஜக கொண்டாட தயாராக இல்லை.

ஆட்சிக்கு வந்த புதிதில் ரூபாய் நோட்டிலிருந்து காந்தி படத்தை நீக்கி வெளியிட்டார்கள். கோட்சேவின் அடையாளமான மூக்கு கண்ணாடி மட்டுமே அதில் இருந்தது.

மக்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பவே அதன் பிறகு காந்தி படத்தை அச்சிட்டு ரூபாய் நோட்டுக்களை வெளியிட்டார்கள். காந்தி மீதான வெறுப்பே இதற்கு காரணம்.

இப்போது நேதாஜியை பாதர் ஆப் தி நேஷன் என்று பாஜக சொல்வதன் பின்னணியிலும் காந்தி மீதான எதிர்ப்பே உள்ளது.

இந்திய சுதந்திரத்திற்கு நேதாஜி செய்த பங்களிப்பை எவராலும் குறைத்து மதிப்பிட முடியாது.

எனினும் காந்தியை மக்களிடமிருந்து அப்புறப்படுத்த நேதாஜியை தூக்கி காண்பிக்கிறார்கள்.

ஆர்.எஸ்.எஸ்.ஸின் செயல் திட்டத்தை காந்தி ஏற்கவில்லை என்பதால் தானே காந்தியை சுட்டுக் கொன்றார்கள்.

ஆர்.எஸ்.எஸின் குரலைத்தான் இந்த சினிமா பேசுகிறது எனும் போது ஆர்.எஸ்.எஸ்.ஸின் கைப்பாவையான பாஜக அரசு அதை ஏன் தடை செய்ய வேண்டும்.

சீமான் பாணியில் சொல்வதாக இருந்தால்…
வாப்பில்லை ராஜா.