உணவில் நிறைவில்லாமல் வாழ்ந்த ஒரு தலைவர், ஒருவேளை உணவு போக அடுத்த வேளை உணவுக்குப் போதிய இருப்பில்லாத ஒரு தலைவர், உடையிலாவது ஏகபோகமாகப் பெற்றிருந்தார்களா? என்றால் இல்லை என்பதைத் தான் அன்னாரது ஏழ்மை வாழ்வு எடுத்துரைக்கின்றது.
ஒட்டுப் போட்ட ஆடையணிந்த உலகத்தலைவர்
ஆயிஷா (ரலி) எங்களிடம் ஒட்டுப் போட்ட (கம்பளி) ஆடை ஒன்றை எடுத்துக் காட்டி, “இதை உடுத்திக் கொண்டிருக்கும்போது தான் நபி(ஸல்) அவர்கள் மரணமடைந்தார்கள்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூபுர்தா (ரஹ்)
நூல்: புகாரி 3108
இந்தச் செய்தி அவர்கள் உடையில் எந்த அளவு ஏழ்மையாக, எளிமையாக இருந்துள்ளார்கள் என்பதைத் தெளிவாக எடுத்துரைக்கின்றது. அரசியல், ஆன்மீகத் தலைவர்கள் அபரிமிதமான ஆடைகளில் வலம் வருகின்ற அந்தக் காலக்கட்டத்தில், பட்டாடை அணிந்து பகட்டாக பவனி வந்த காலக்கட்டத்தில், ஒட்டாடை அணிந்து உலகை ஓட்டியிருக்கின்றார்கள் இந்த மாமனிதர் முஹம்மது (ஸல்) அவர்கள்.
இவர்களிடத்தில் ஒட்டாடையைத் தாண்டி உருப்படியான பலப் பல ரகங்களில் மாற்று ஆடைகள் இல்லை என்பதையே இந்தச் செய்தி நமக்குக் கூறுகின்றது.
உடைகளில் மட்டுமல்ல! பாத்திரத்திலும் ஒட்டு!
நபி(ஸல்) அவர்களின் (மரத்தாலான) குவளை உடைந்துவிட்டது. (உடைந்து போய்) ஓட்டை (ஏற்பட்ட) பகுதியை நபி(ஸல்) அவர்கள் ஒரு வெள்ளிச் சங்கிலியால் அடைத்துவிட்டார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி), நூல்: புகாரி 3109
உடுத்தும் உடையில் மட்டும் ஒட்டுப் போடவில்லை; உபயோகிக்கும் பாத்திரத்திலும் ஒட்டுப் போட்டுக் கழித்திருக்கின்றார்கள் என்பதையே இந்தச் செய்தி நமக்குத் தெரிவிக்கின்றது.
படுப்பதற்குப் பஞ்சு மெத்தை இல்லை
பேரீச்சம் நாரினால் நிரப்பப்பட்ட பதனிடப்பட்ட தோலே இறைத்தூதர் (ஸல்) அவர்களின் படுக்கை விரிப்பாக இருந்தது
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: புகாரி 6456
ஆட்சித் தலைவர்கள் சொகுசான பஞ்சு மெத்தைகளிலும் பட்டுத் தலையணைகளிலும் படுத்து உறங்கிய போது இந்த மாபெரும் மக்கள் தலைவர் பேரீச்சம் பழ நாரினால் ஆன விரிப்பைத் தவிர வேறெந்த விரிப்பையும் கண்டிருக்கவில்லை. கொண்டிருக்கவில்லை.
இரு தலையணைகள் இல்லை
நபி (ஸல்) அவர்களின் மனைவியும் என்னுடைய சிறிய தாயாருமான மைமூனாவின் வீட்டில் நான் தலையணையின் பக்க வாட்டில் சாய்ந்து தூங்கினேன். நபி (ஸல்) அவர்களும் அவர்களின் மனைவியும் அதன் மற்ற பகுதியில் தூங்கினார்கள். இரவின் பாதிவரை – கொஞ்சம் முன் பின்னாக இருக்கலாம் – நபி(ஸல்) தூங்கினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: புகாரி 183
பகலில் படுக்கும் பாய்; இரவில் மறைக்கும் சுவர்
நபி(ஸல்) அவர்களிடம் பாய் ஒன்று இருந்தது. பகலில் அதை விரித்துக் கொள்வார்கள். இரவில் அதையே அறை போன்று அமைத்துக் கொண்டு தொழுவார்கள். மக்கள் அவர்களருகே விரைந்து வந்து அவர்களைப் பின்பற்றித் தொழுவார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: புகாரி 730
பஞ்சு மெத்தை இல்லை; பட்டுத் தலையணை இல்லை
நான் நபி(ஸல்) அவர்களின் அறைக்குள் நுழைந்தேன். அப்போது அவர்கள் ஓர் ஈச்சம் பாயில் படுத்துக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கம் அந்தப் பாய்க்குமிடையே மெத்தை எதுவும் இருக்கவில்லை. எனவே, அவர்களின் விலாவில் அந்த ஈச்சம் பாய் அடையாளம் பதித்திருந்தது. அவர்கள் ஈச்ச நார்கள் அடைத்த தோல் தலையணை ஒன்றின் மீது சாய்ந்து அமர்ந்து கொண்டிருந்தார்கள்.
பிறகு, நான் அவர்களின் அறையை என் பார்வையை உயர்த்தி நோட்டமிட்டேன். அல்லாஹ்வின் மீதாணையாக! கண்ணைக் கவருகிற பொருள் எதையும் நான் அதில் காணவில்லை; மூன்றே மூன்று (பதனிடப்படாத) தோல்களைத் தவிர அப்போது நான், ‘தங்கள் சமுதாயத்தினருக்கு உலகச் செல்வங்களை தாராளமாக வழங்கும்படி தாங்கள் அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள். ஏனெனில், பாரசீகர்களுக்கும் ரோமர்களுக்கும் – அவர்கள் அல்லாஹ்வை வணங்காதவர்களாக இருந்தும் (உலகச் செல்வங்கள்) தாராளமாக வழங்கப்பட்டிருக்கின்றனவே” என்று கூறினேன். நபி(ஸல்) அவர்கள் (தலையணை மீது) சாய்ந்து உட்கார்ந்து, ‘கத்தாபின் மகனே! நீங்கள் சந்தேகத்தில் இருக்கிறீர்களா? அவர்கள், தம் (நற்செயல்களுக்கான) பிரதிபலன்கள் எல்லாம் இந்த உலக வாழ்விலேயே (மறுமை வாழ்வுக்கு) முன்னதாகக் கொடுக்கப்பட்டுவிட்டார்கள்” என்று கூறினார்கள். உடனே நான், “இறைத்தூதர் அவர்களே! (அவரசப்பட்டு இப்படிக் கேட்டதற்காக) எனக்காகப் பாவமன்னிப்புக் கோரிப் பிரார்த்தியுங்கள்” என்று கூறினேன்.
அறிவிப்பவர்: உமர் (ரலி)
நூல்: புகாரி 2468 (ஹதீஸ் சுருக்கம்)
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது மனைவியருடன் கோபித்துக் கொண்டிருந்த வேளையில் உமர் (ரலி) அவர்கள் சந்திக்க வருகின்றார்கள். அப்போது அவர்களது வீட்டின் முகட்டை ஏறிட்டுப் பார்க்கும் போது தான் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் வறுமையான வாழ்க்கை தெரியவருகின்றது. அது உமர் (ரலி) அவர்களின் உள்ளத்தை வெகுவாகப் பாதிக்கின்றது. காரணம் ஒரு சாம்ராஜ்ய சக்கரவர்த்தியின் வீட்டில் காணப்படுகின்ற அலங்கார விளக்குகள், கண்ணைப் பறிக்கும் காட்சிப் பொருட்கள், கவர்ச்சிப் பொருட்கள் ஏதுமில்லை. மாறாக உமர் (ரலி) குறிப்பிடும் சில பொருட்கள் மட்டுமே அவர்களது கண்களில் படுகின்றன. இது தான் உமர் (ரலி) அவர்களைக் கவலையுறச் செய்கின்றது. இப்படித் தான் அம்மாபெரும் தலைவரின் வாழ்க்கை அமைந்திருந்ததை நாம் பார்க்க முடிகின்றது. அன்னாரது வாழ்க்கையில் படுப்பதற்குப் பஞ்சு மெத்தையோ பட்டுத் தலையணையோ இருந்ததில்லை என்பதை உமர் (ரலி) அவர்களின் படப்பிடிப்பு நமக்கு விளக்குகின்றது.
இறைத்தூதரின் உடலில் ஈச்சம்பாயின் வரித்தடம்
நபியவர்கள் ஒரு ஈச்சம் பாயின் மீது தூங்கினார்கள். அதனுடைய வரிகள் அவர்களின் விலாப்புறத்தில் (நன்றாக) பதிந்திருந்தது. “அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் உங்களுக்கு ஒரு விரிப்பை ஏற்பாடு செய்யட்டுமா?” என்று கேட்டோம். அதற்கு நபியவர்கள், “எனக்கும் இந்த உலகிற்கும் என்ன இருக்கிறது? ஒரு மரத்தின் கீழ் நிழலிற்காக ஒதுங்கி ஓய்வெடுத்து, பிறகு அதை விட்டுச் செல்கிறானே அந்தப் பயணியைப் போன்று தான் இவ்வுலகத்தில் நான்” என்று கூறினார்கள்
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)
நூல்: திர்மிதி 2299
கோட்டைச் சுவர் இல்லை! குட்டிச்சுவர் மட்டுமே!
நபி (ஸல்) அவர்கள் இரவில் தம் அறையில் தொழுபவர்களாக இருந்தனர். அவர்களின் தலையை மக்கள் பார்க்கும் அளவுக்கு அந்த அறையின் சுவர் குட்டையாக இருந்தது. மக்கள் அவர்களைப் பின்பற்றித் தொழலானார்கள். மறுநாள் காலையில் மக்கள் இது பற்றிப் பேசிக் கொள்ள ஆரம்பித்தனர். இரண்டாம் நாளில் நபி(ஸல்) அவர்கள் தொழுதபோது மக்களும் அவர்களைப் பின்பற்றித் தொழலானார்கள். இவ்வாறு இரண்டு மூன்று இரவுகள் செய்யலானார்கள். அதன் பின்னர் நபி (ஸல்) அவர்கள் தொழ வராமல் உட்கார்ந்துவிட்டார்கள். காலையில் மக்கள் இது பற்றிப் பேசிக் கொள்ளலானார்கள். “இரவுத் தொழுகை உங்களின் மீது கடமையாக்கப்பட்டு விடுமோ என்று நான் அஞ்சினேன்; (அதனாலேயே வரவில்லை)” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: புகாரி 729
வாயிற்காப்பாளர்கள் இல்லை
கப்ருக்கருகே அழுது கொண்டிருந்த ஒரு பெண்ணை நபி (ஸல்) அவர்கள் கடந்து சென்றபோது, “அல்லாஹ்வை அஞ்சிக் கொள்! பொறுமையாக இரு!” என்றார்கள். அதற்கு அப்பெண், “என்னைவிட்டு அகன்று செல்வீராக! எனக்கேற்பட்ட இத்துன்பம் உமக்கேற்படவில்லை” என்று நபி(ஸல்) அவர்கள் யாரென அறியாமல் கூறினாள். அ(வளிடம் உரையாடிய)வர் நபியெனக் கூறப்பட்டதும் அப்பெண் நபி(ஸல்) அவர்கள் இருக்குமிடத்திற்கு வந்தாள். அங்கே காவலாளிகள் எவருமில்லை. “நான் உங்களை (யாரென) அறியவில்லை” என்று நபி (ஸல்) அவர்களிடம் கூறினாள். “பொறுமை என்பது, துன்பம் ஏற்பட்டவுடன் (கைக் கொள்வதே)” என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி), நூல்: புகாரி 1283
விசாலமான வீடில்லை! விரிவான அறையில்லை!
நபி(ஸல்) அவர்கள் என்னுடைய படுக்கை விரிப்பில் தொழுதபோது அவர்களுக்கும் கிப்லாவுக்குமிடையில் குறுக்கே ஜனாஸா கிடப்பது போல் நான் கிடப்பேன்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: புகாரி 382
வீட்டில் விளக்கில்லை
நான் நபி (ஸல்) அவர்களுக்கு முன்பாகத் தூங்கிக் கொண்டிருப்பேன். என்னுடைய இரண்டு கால்களும் அவர்களை முன்னோக்கியிருக்கும். அவர்கள் ஸுஜூது செய்யும்போது என்னை விரலால் குத்துவார்கள். அப்போது நான் என்னுடைய இரண்டு கால்களையும் மடக்கிக் கொள்வேன். அவர்கள் நிலைக்கு வந்துவிட்டால் இரண்டு கால்களையும் (மறுபடியும்) நீட்டிக் கொள்வேன். அந்த நாள்களில் (எங்களின்) வீடுகளில் விளக்குகள் கிடையாது.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: புகாரி 383
ஆட்சித் தலைவர்கள் வீடுகளில் பகலைப் போன்று பளிச்சிடச் செய்யும் வண்ண விளக்குகள் வெளிச்சம் பாய்ச்சிக் கொண்டிருக்கும். ஆனால் இந்தத் தலைவரின் வீட்டில் வெளிச்சம் தருவதற்கு மெழுகுவர்த்தியளவுக்குக் கூட விளக்கு இல்லை. இதுதான் இந்த மாமனிதரின் வீடு!
அடைமானம் வைக்கப்பட்ட போர்க்கவசம்
தம் போர்க் கவசம் முப்பது ஸாவுகள் வாற்கோதுமைக்குப் பகரமாக ஒரு யூதரிடம் அடகு வைக்கப்பட்டிருந்த நிலையில் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இறந்தார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: புகாரி 2916
அகில உலக இறைத்தூதர், அகில உலகத் தலைவர் ஆட்காட்டி விரலசைவிற்குத் தங்களது இன்னுயிர்களை ஈவதற்கு ஒரு கூட்டம் போட்டி போட்டுக் கொண்டு காத்துக் கொண்டிருக்கும் வேளையில் இவர்களுக்காகத் தங்கள் கைவசமிருந்த அத்தனை பொருளாதாரத்தையும் அன்னாரது காலடியில் சமர்ப்பணம் செய்வதற்காக இருந்தார்கள். ஆனால் சல்லிக் காசு கூட அவர்களிடமிருந்து பெறாமல் சொல்லிக் கொள்ளாமல் யூதரிடம் தங்களது போர்க்கவசத்தை அடைமானம் வைத்து வாங்கியிருக்கின்றார்கள். தங்களது குடும்பத்திற்காக எந்த சொத்தையும் சேமித்து வைக்கவில்லை. சேகரித்து வைக்கவில்லை. அவர்கள் விட்டுச் சென்றது ஏதுமில்லை என்பது தான்.
இருக்கும் போதும் ஏதுமில்லை! இறக்கும் போதும் ஏதுமில்லை
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தங்களின் மரணத்தின்போது திர்ஹமையோ, தீனாரையோ (வெள்ளி நாணயத்தையோ, பொற்காசையோ), அடிமையையோ, அடிமைப் பெண்ணையோ, வேறு எதையுமோ விட்டுச் செல்லவில்லை. தம் வெள்ளைக் கோவேறுக் கழுதையையும், தம் ஆயுதங்களையும், தர்மமாக ஆக்கி விட்டிருந்த ஒரு நிலத்தையும் தவிர.
அறிவிப்பவர்: அன்னை ஜுவைரிய்யா (ரலி)
நூல்: புகாரி 2739
இறைத்தூதுச் செய்தியை உலகத்தில் சமர்ப்பித்ததன் மூலம் இந்த மாமனிதர் தனக்கும் தனது குடும்பத்திற்கும் பிரதிபலனாக சொத்து சேர்த்து விட்டார் என்று குறுகிய மனம் படைத்த எவரும் எந்த ஒரு குற்றச்சாட்டையும் சுமத்தி விடாத அளவுக்குத் தான் இந்த உலகத்தில் எதையும் சேர்த்து வைத்து விட்டுச் செல்லவில்லை, சேமித்து வைத்து விட்டுச் செல்லவில்லை. எஞ்சிய பொருட்களும் தனது குடும்பத்தாருக்குக் கிடையாது. அது பொதுச் சொத்து என்று பிரகடனப்படுத்திவிட்ட ஒரே ஒரு தலைவர் இந்த மாமனிதரைத் தவிர வேறு யாரும் இருக்கமுடியாது.
இந்த வகையில் இம்மாமனிதர் இருக்கும் போதும் இவருக்கென்று ஏதுமில்லை. இறக்கும் போதும் வேறு ஏதுமில்லை. இம்மாமனிதர் சேர்த்த, சேகரித்த ஒரே ஒரு சொத்து ‘ஏதுமில்லை’ என்பது தான். எனக்கு இவ்வுலகில் அடிப்படைத் தேவைகளைத் தவிர்த்து வேறு எதுவும் தேவையில்லை; எல்லாமே எனக்கு மறுமையில் கிடைக்கும் என்று கூறி, “உமக்கு இவ்வுலகைவிட மறுமைதான் சிறந்ததாகும். விரைவில் உமது இறைவன் உமக்கு வழங்குவான். அப்போது நீர் திருப்தியடைவீர்” (அல்குர்ஆன் 93:4-5) என்ற வசனத்திற்கு ஏற்ப வாழ்ந்து மறைந்து விட்டார்கள்.