கணவாயின் ஷைத்தான் !
பராஉ இப்னு மஃரூர் (ரலி) நபி ஸல் அவர்கள் கையைப் பற்றி , “சத்திய மார்க்கத்தைக் கொண்டு உங்களை நபியாக அனுப்பிய அல்லாஹ்வின் மீது ஆணையாக!
எங்களை நாங்கள் பாதுகாப்பது போன்றே உங்களையும் நிச்சயம் பாதுகாப்போம்
அல்லாஹ்வின் தூதரே !
எங்களிடம் வாக்குறுதியும் ஒப்பந்தமும் பெற்றுக்கொள்ளுங்கள் …
அல்லாஹ்வின் மீது ஆணையாக !
நாங்கள் போரின் மைந்தர்கள்!
கவச ஆடை அணிந்தவர்கள் !
பரம்பரை பரம்பரையாக போர் செய்து பழக்கப் பட்டவர்கள் !! “
பராஃ (ரலி) யின் வார்த்தைகள் முரசாய் முழங்கின ..
அவரது வீர உரைக்கு நடுவே திடீரென ஒருவர் குறுக்கிடுகிறார்,
“அல்லாஹ்வின் தூதரே !”
அவர் அபுல் ஹைசம் (ரலி).
தன் மனதுக்குள் உறுத்திக்கொண்டிருந்த ஒரு விசயத்தை கேட்டே விட்டார் ,
“எங்களுக்கும் யூதர்களுக்கும் இடையே சில உடன்படிக்கை உறவுகள் இருக்கின்றன. நாங்கள் அதை துண்டித்து உங்களுடன் சேர்ந்து கொள்கிறோம்.
பிறகொரு காலத்தில் அல்லாஹ் உங்களுக்கு வெற்றியைக் கொடுத்துவிட்டால் , நீங்கள் எங்களை விட்டுவிட்டு உங்கள் கூட்டத்திடம் சென்று விடுவீர்களா?”
அவரது ஏக்கமும் நபி ஸல் அவர்கள் மீது இருந்த பாசமும் அவரது வார்த்தைகளில் வெளிப்பட்டன .
நபி ( ஸல்) அவர்கள் முகத்தில் புன்னகை அரும்பியது.
“அப்படியல்ல ..
உங்கள் உயிர் என் உயிர் ..
உங்கள் அழிவு என் அழிவு ..
நான் உங்களைச் சேர்ந்தவன் , நீங்கள் என்னைச் சேர்ந்தவர்கள்;
நீங்கள் யாருடன் போர் செய்கிறீர்களோ அவர்களுடன் நானும் போர் செய்வேன்;
நீங்கள் யாருடன் சமாதான உடன்படிக்கை செய்கிறீர்களோ அவர்களுடன் நானும் சமாதான உடன்படிக்கை செய்வேன்;” என்றார்கள்.
நபி(ஸல்) அவர்களின் வார்த்தைகளில் உறுதியும் பொறுப்பும் தெரிந்தன.
“அல்லாஹ்வின் தூதரே ! எந்த விஷயங்களுக்காக நாங்கள் உங்களிடம் ஒப்பந்தம் செய்ய வேண்டும் ?” என்று கேட்கப்பட்டது .
அதற்கு நபி ( ஸல்) அவர்கள் ,
“இன்பத்திலும் துன்பத்திலும் (கட்டளைக்கு) செவிசாய்த்து கட்டுப்பட வேண்டும் .
வசதியிலும் வறுமையிலும் (அல்லாஹ்வின் பாதையில்) செலவு செய்ய வேண்டும் .
நன்மையை ஏவி தீமையைத் தடுக்க வேண்டும்.
அல்லாஹ்வுக்காக தியாகம் செய்ய வேண்டும் .
அல்லாஹ்வின் விசயத்தில் பழிப்போரின் பழிச்சொல் உங்களை பாதிக்கக் கூடாது .
ஆட்சி அதிகாரத்தைப் பெறுவதற்காக சண்டையிடக்கூடாது.
நான் உங்களிடம் வந்து விட்டால் , எனக்கு உதவி செய்ய வேண்டும்.
உங்களையும் உங்கள் மனைவியர் பிள்ளைகளைப் பாதுகாப்பது போல் பாதுகாக்க வேண்டும்.”
இதனை எனக்கு ஒப்பந்தம் செய்து கொடுங்கள் ..
அல்லாஹ் சொர்க்கத்தைத் தருவான் “
என்றார்கள்.
அங்கு அமர்ந்திருந்தவர்களில் ஒருவர் எழுந்தார்,
“மக்களே! இவரிடம் நீங்கள் எதற்கு வாக்கு கொடுக்கிறீர்கள் என்பது உங்களுக்கு தெரியுமா?”
இப்படிக் கேட்ட மதீனாவாசிகளின் முக்கிய பிரமுகரான அப்பாஸ் இப்னு உபாதா (ரலி)யின் கவலை என்னவென்றால், கொடுக்கும் வாக்குறுதியின் விளைவு எப்படி இருக்கும் என்பதை மக்கள் உணர்ந்து தான் உள்ளார்களா? என்பது தான் .
“நன்றாகத் தெரியும் “
அமர்ந்திருந்த மக்களின் குரல்கள் தெறித்தன..
“மக்களே! நீங்கள் இவரிடம் வெள்ளையர், கறுப்பர் என அனைத்து மக்களுக்கும் எதிராக போர் செய்யவும் தயார் என்று வாக்கு கொடுக்கின்றீர்கள்.
உங்கள் செல்வங்கள் அழிந்து ,
உங்களில் சிறப்பிற்குரியவர்கள் கொலை செய்யப்பட்டும் போது நீங்கள் இவரை எதிரிகளிடம் ஒப்படைத்து விடுவீர்களா?
அப்படியானால், இவரை இங்கேயே விட்டு விடுங்கள் .
அல்லாஹ்வின் மீதாணையாக !
அந்த தவறை நீங்கள் செய்வது இம்மையிலும் மறுமையிலும் மிகப் பெரிய இழிவைப் பெற்றுத் தரும் ……….”
அவர் இன்னும் கொஞ்சம் இதை விளக்கிச் சொன்னார் .
அதற்கு அங்கு கூடியிருந்தவர்கள் ,
“ எங்கள் செல்வங்கள் அழிந்தாலும் , எங்கள் சிறப்பிற்குரியவர்கள் கொல்லப் பட்டாலும் இவரை அரவணைப்போம் ; கைவிட மாட்டோம் ; இதே நிபந்தனைகளின் பேரில் தான் இவரை அழைத்துச் செல்கிறோம் . இந்த நிபந்தனைகளை நிறைவேற்றினால் எங்களுக்கு என்ன கிடைக்கும் ?”
என்றார்கள்.
நபி ( ஸல்) அவர்கள் ,”சொர்க்கம் கிடைக்கும் “ என்றார்கள்.
உடனே , மக்கள் உங்கள் “”கையை நீட்டுங்கள் “ என்று கூறி ஒப்பந்தம் செய்ய தயாராகினர் .
முதலில் ஒரு இளைஞர் எழுந்தார் .
அங்கு வந்தவர்களிலேயே அவருக்கு தான் குறைந்த வயது .
அவரது பெயர் , அஸ்அது பின் ஜுராரா .
எழுந்தவர் நபி ( ஸல்) அவர்களின் கையைப் பிடித்துக் கொண்டு , இதற்கு முன் பேசிய தலைவரான அப்பாஸ் பின் உபாதா அவர்களின் கருத்தை நினைவூட்டினார்.
மக்கள் , “அஸ்அதே ! கையை எடு..
அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நபி (ஸல்) அவர்களிடம் ஒப்பந்தம் செய்வதில் இருந்து நாங்கள் பின்வாங்கவும் மாட்டோம் , ஒருகாலும் அதை முறிக்கவும் மாட்டோம் “ என்று கூறினார்கள் .
மதீனாவாசிகளின் உறுதியை நபி (ஸல்) அவர்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத் தான் இவ்வாறு கேட்டோம் என்பதை அறிந்திருந்த அஸ்அது (ரலி) அவர்கள் முதலில் ஒப்பந்தம் செய்து ஆரம்பித்து வைத்தார்கள்.
மக்கள் அனைவரும் நபி (ஸல்) கையைப் பிடித்து ஒப்பந்தம் செய்தனர்.
பெண்கள் இருவருக்கும் கையைப் பிடிக்காமல் சொல்லால் ஒப்பந்தம் செய்தனர்.
பிறகு , முஸ்லிம்களுக்கு பன்னிரண்டு தலைவர்களை நபி ஸல் அவர்கள் நியமனம் செய்தார்கள் .
விடியும் நேரம் ஆகிவிட்டிருந்தது ..
அனைவரும் கலைந்து செல்ல ஆரம்பித்தனர்…
திடீரென்று அங்கிருந்த உயரமான இடத்தில் இருந்து ஒருவனின் கூச்சல் கேட்டது ,
“ஓ கூடாரத்தில் தங்கியிருப்பவர்களே !
இதோ .. இந்த இழிவுக்குரியவரையும் , மதம்மாரிகளையும் நீங்கள் பார்க்கவில்லையா?
உங்களோடு போர்த் தொடுக்க ஒன்றுகூடி இருக்கிறார்கள் …”
அவனது அலறல் அந்த அமைதியை சலசலப்பாக்கியது ..
நபி ( ஸல்) அவர்களும் கேட்டார்கள் ..
“இவன் இந்த கணவாயின் ஷைத்தான் ..
என்றார்கள்.
“என்னது? எனக்குத் தெரியாமலா?”
அவனது அலறலைக் கேட்டதும் நபி ஸல் அவர்கள் ,
“அல்லாஹ்வின் எதிரியே ! விரைவில் உனது கணக்கை முடிக்கிறேன்!” என்று கூறிவிட்டு அங்கு வந்திருந்தவர்களைக் கலைந்து செல்ல உத்தரவிட்டார்கள் .
அப்போது ,அப்பாஸ் இப்னு உபாதா அவர்கள் ,
“உண்மையைக் கொண்டு உங்களை அனுப்பியவன் மீது ஆணையாக ! நாளை நீங்கள் விரும்பினால் இங்கு மினாவில் தங்கியிருப்பவர்கள் மீது வாளேந்தி போர்த் தொடுக்கிறோம் “ என்று கூறினார் .
நபியவர்கள் , “ நமக்கு அவ்வாறு கட்டளையிடப்படவில்லை . இப்போது நீங்கள் உங்கள் கூடாரங்களுக்குத் திரும்பிச் செல்லுங்கள் “ என்று கூறினார்கள் .
ஒருவாறாக அகபாவின் மாபெரும் உடன்படிக்கை பெரும் உணர்ச்சிவசத்துடன் வீரத்துடனும் உற்சாகத்துடனும் ஒப்பந்தம் ஆனது .
கத்தினவனைக் கண்டுகொள்ளாமல் அனைவரும் வந்தது போலவே மெதுவாக திரும்பச் சென்று அவரவர் கூடாரத்தில் அமைதியாகப் படுத்துக்கொண்டார்கள்.
பொழுது விடிந்தது ..
செய்தி குறைஷிகள் காதுகளை எட்டியது..
அவர்களுக்குள் ஒரே சலசலப்பு ..
அவர்களது மனதை கவலை ஆட்கொண்டது ..
பயம் வராதா பின்னே ?? சஞ்சலத்தில் என்ன செய்வது என்றே புரியவில்லை ..
யாரை அவர்கள் ஒழித்துவிட வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு திரிந்தார்களோ .., எந்த கொள்கையை அழிக்க அரும்பாடு பட்டார்களோ, அந்த விசயத்திற்கு பக்கத்து பிரதேச மனிதர்கள் ஆதரவு கொடுப்பதாக ஒப்பந்தம் நடந்தது என்று கேள்விப்பட்டால் ?
இத்துணை நாட்கள் கட்டிக்காத்த கொள்கை என்னாவது?
ஊருக்குள் காட்டிக்கொண்டிருந்த பெருமை என்னாவது ?
எல்லாம் மண்ணாய்ப் போய் விடாதா என்ன?
கிளம்பி விட்டார்கள் மினாவை நோக்கி ;
ஆதரவு நிலைப்பாட்டை எப்படியேனும் எதிர்த்து தடுத்து விட வேண்டும்.
மக்கா நகர தலைவர்கள் ஒன்றுகூடி வருவதை மதீனாவாசிகள் கண்டார்கள் .
“கஸ்ரஜ் கூட்டத்தினரே!
எங்கள் ஆளை எங்களிடம் இருந்து வெளியேற்றப் பார்க்கிறீர்களா?
அவரோடு உடன்படிக்கை செய்து கொண்டு எங்களுடனேயே போர் செய்யப் போகிறீர்களா?”
உங்களோடு போர் செய்யவெல்லாம் எங்களுக்கு விருப்பம் இல்லை “
தலைவர்கள் வந்தவுடன் பொரிந்து தள்ளிவிட்டார்கள் ..
அங்கே இருந்தவர்கள் ஒன்றும் புரியாமல் குழம்பிப் போய் விழித்தார்கள் ..
இரவில் நடந்த விஷயங்கள் இரகசியமாக நடந்தது அல்லவா?
அது இவர்களுக்குத் தெரியவில்லை ..
“ அப்படியெல்லாம் ஒன்றும் இல்லையே !!”
பதில் அளித்தார்கள் .
மக்காவாசிகளுக்குத் திருப்தி இல்லை .
அப்துல்லாஹ் இப்னு உபை இப்னு சலூல் ..
மதினாவாசிகளுக்குத் தலைவனாக தன்னை தானே நினைத்துக்கொண்டிருந்த ஒருவன்,
இவனைப் பிடித்தார்கள் மக்கா தலைவர்கள் .
எப்போதும் எல்லா கூட்டத்திலும் தன்னைப் பற்றி உயர்வாக எண்ணிக்கொள்ளும் நபர்கள் சிலர் இருப்பார்கள் தானே ..
அடாடா , நம்மிடமும் மதித்து வந்து கேட்கிரார்களே என்று நினைத்தானோ என்னவோ , உடனே எந்த விசாரணையும் இல்லாமல் பேச ஆரம்பித்து விட்டான் ..
“ என்னது ? எனக்குத் தெரியாமலா?
வாய்ப்பே இல்லை ..
அப்படிஎல்லாம் ஒன்றும் நடக்கவே இல்லை!
முற்றிலும் பொய்யான செய்தி..
நான் மதினாவில் இருந்தாலே என்னிடம் கேட்டுவிட்டுத் தான் எதையும் செய்வார்கள் .
அதுவும் நான் இங்கே இருக்கிறேன் என் ஆலோசனை இல்லாமல் இது போன்ற செயல்களில் இறங்க மாட்டார்கள் .
எனக்குத் தெரியாமல் ஒருக்காலும் இது போல செய்திருக்க மாட்டார்கள் “ என்றான் .
முஸ்லிம்கள் தாங்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு அமைதியாக இருந்து விட்டார்கள் .
இவன் பேச்சை நம்பிய குறைஷிகள் அங்கிருந்து திரும்பி விட்டனர் .
அப்படியும் விஷயம் ஒருவாராகக் கசிந்தது .
அதற்குள் அனைவரும் மதினா கிளம்பி சென்று விட்டனர் .
தாருன் நத்வா – சதியாலோசனை .
மேற்கண்ட ஒப்பந்தங்கள் ஆச்சரிய மூட்டுபவை . வரலாற்றில் எத்தனையோ ஒப்பந்தங்கள் பெரும் மாற்றங்களை ஏற்ப்படுத்தியுள்ளன என்பதை அறிந்திருப்பீர்கள். அவைகள் அனைத்தும் ஆட்சியாளர்களுக்கு மத்தியில் செய்துகொள்ளப்பட்ட அரசியல் ஒப்பந்தங்களாகும்.
ஆனால், மக்கள் மத்தியில் சாதாரண மனிதனாக ,எந்த பதவியும் பொறுப்பும் அற்று இருந்த ஒரு மனிதருக்கும் , விவசாய பூர்வகுடி மக்களுக்கும் இடையே நடைபெற்ற இந்த ஒப்பந்தம் பின்னாளில் ஒரு பெரும் வல்லரசிற்கான விதை என்பது நினைவில் கொள்ள வேண்டும்.
ஒப்பந்த அம்சங்களும் ஆச்சரியதிற்குரியவையே!
முதலாம் ஒப்பந்தம் ஒவ்வொரு தனி மனிதனும் தான் வாழ்வில் மேற்கொள்ளும் ஒழுக்கத்தை வலியுறுத்தியும் ,
இரண்டாம் ஒப்பந்தம் இறைவனை முன்னிறுத்தி , ஒரு சமூக கூட்டமைப்பின் தியாகத்தையும் , சமூக அரசியல் ஒழுக்கத்தையும் வலியுறுத்துவதாகவும் அமைந்தது.
எந்த பொருளாதார, அரசியல் பின்புலமும் இல்லாத ஓர் எளிய மனிதனின் தலைமை பேரரசுகளை வெற்றிகொள்ளுமா என்ன?
வென்றது …
எப்படி என்பதை, வரும் அத்தியாயங்கள் உங்களுக்கு விளக்கும் . இன்ஷா அல்லாஹ் .
சரி , மக்கா நகரத்திற்கு வந்து விடுவோம் ,,
அங்கே , தம்முடைய கழுகுக் கண்களில் மண் தூவி விட்டு முஹம்மத் (ஸல்) அவர்கள் தன்னுடைய இலக்கை அடைய ஒரு பெரும் கூட்டத்துடன் ஒப்பந்தம் செய்த விஷயம் குரைஷிகளின் மன அமைதியைக் குலைத்தது .
இரண்டாம் ஒப்பந்தம் நடந்து முடிந்ததுமே ஒரு கூட்டம் மதீனாவுக்கு சென்று விட்டது . முஸ்அப் பின் உமைர் கடந்த ஆண்டு சென்றார் என்று கண்டோம் அல்லவா, அவருடன் போய் அழைப்புப் பணியில் இணைந்து கொண்டனர்.
பிறகு உமர் ( ரலி ) தலைமையில் இருபது பேர் கொண்ட குழு .
மதினா தான் ஹிஜ்ரத் செய்யப் போகும் இடம் என்று நபி ஸல் கண்ட கனவு அவர்களை உற்சாகப் படுத்தியது .
அப்படியே சிறுக சிறுக மக்கள் இந்த கொடுங்கோலர்களிடம் இருந்து வெளியேறி மதினாவை நோக்கிச் செல்லத் தொடங்கினார்கள் .
எப்படியும் நபி ( ஸல்) அவர்களும் இங்கிருந்து கிளம்பி விடுவார் என்று எதிரிகள் எண்ணினர்.
அவசரமாகக் கூடினார்கள் தாருன் நத்வாவில்;
குறைஷி பெருந்தலைவர்கள் கூடி பேசும் இடம் .
பேசுபொருள் எப்போதும் நபி (ஸல்) அவர்கள் தான் . பெரும் தலைவலியாக அல்லவா இருக்கிறார் !! சாதாரண ஆடு மேய்த்தவர் , நல்லவர் ,எதோ சாதுவானவர் என்றல்லவா நினைத்துக்கொண்டிருந்தார்கள் .
இப்போது பார்த்தால் பெரும் தலைவர்களின் கண்களில் விரல் விட்டு ஆட்டுகிறார் .
அவரது ஆளுமை இவர்களை பயமுறுத்தியது .
குறைஷிகளின் மனதில் இருந்த எரிச்சல் ஆலோசனையில் வெளிப்பட்டது.
பலரது குரல்கள் ஓங்கின ..
“கைது செய்து கட்டிப் போட்டு விடலாம் “
“இல்லை .. நாடு கடத்தி விடலாம் “
“அதெல்லாம் இல்லை ..கொன்று விடலாம் “
கொன்று விடுவது என்று ஒரு மனதாகத் தீர்மானிக்கப்பட்டது .
இனி இவரை விட்டு வைப்பதில் சிக்கல் இவர்களுக்கு தான் . இப்போதே அடிமைகள் கூட இவர்களை மதிப்பதில்லை . இனியும் போனால் அவரகளது அதிகாரக் கட்டில் அவர்கள் கண் முன்னே அழிந்து விழுவதை அவர்களால் ஜீரணிக்க முடியாது .
அங்கே போய் அவர் புதுக் குழப்பம் உண்டு பண்ணுவதற்க்குள் ஆளை முடித்துவிடுவோம் என்று கணக்குப் போட்டனர் .
ஆலோசனை முடிந்ததும் , லாத் உஸ்ஸா சிலைகள் முன்பு கூடி சபதம் எடுத்தார்கள் ..
“ முஹம்மதை எங்கே கண்டாலும் கொல்வோம் “
வேடிக்கை கூட பார்க்க இயலாத கற்சிலைகள் முன்பு சத்தியப் பிரமாணம் எடுத்துக் கொண்டார்கள் . வேறென்ன செய்வது? படைத்தவனை விட்டு விட்டால் கற்களைத் தானே நம்பியாக வேண்டும் ?
விஷயம் அருமை மகள் பாத்திமா ( ரலி) அவர்கள் வழியாக நபி ( ஸல்) அவர்களை வந்து அடைந்தது .
அனுமதி கிடைத்தது
பாத்திமா(ரலி) கண்களில் நீர் வழிய விசயத்தை சொன்னார் .
நபியவர்கள் அலட்டிக் கொள்ளவில்லை .
வழக்கம் போல் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொண்டு வரச்செய்து உளு செய்து விட்டு பள்ளிக்கு சென்றார்கள் .
(“உளு “என்பது இறைவனைத் தொழும் முன்பு, கை கால் முகத்தை ஒரு வரிசை முறையில் கழுவி சுத்தம் செய்து கொள்வது ஆகும் )
தொழுக ஆரம்பித்தார்கள் .
எந்த எதிரிகள் தன்னைக் கொல்லச் சதி செய்கிறார்களோ அவர்கள் கண் முன்பு தான் தொழுது கொண்டிருந்தார்கள்.
எப்போதும் பயம் கொண்டவர்களே சதி செய்கின்றனர் . நேர்மையாளர்களுக்கு சதிகள் அவசியப்படுவதில்லை . சதிகாரர்களின் முன்பு பயம் வருவதுமில்லை
எனவே தம் திட்டத்தைத் தொடர்ந்தார்கள் .
இதற்கிடையே நபியவர்களின் உற்ற தோழரான அபூபக்கர் ( ரலி) அவர்கள் மதினாவிற்கு செல்ல அனுமதி வேண்டிய போது, “கொஞ்சம் பொறுங்களேன் , எனக்கான அனுமதியை எதிர்பார்த்துக்கொண்டு இருக்கிறேன் “ என்று நபி ( ஸல் ) அவர்கள் கூறியிருந்தார்கள் .
ஒரு நாள் நண்பகல் சூரியன் உச்சியில் பிரகாசித்துக் கொண்டிருந்தது ,
அபுபக்கர்(ரலி) தன் வீட்டில் தன்னுடைய மகள்கள் அஸ்மாவும் ஆயிஷாவும் உடனிருக்க அமர்ந்திருந்தார்.
அப்போது ஒருவர் ஓடி வந்து “ அல்லாஹ்வின் தூதர் வந்து கொண்டிருக்கிறார்கள் ,
வழக்கமாக வருகிற நேரத்தில் வராமல் இப்போது பகலில் வருகிறார்கள் ! “ என்றார் ,
என்ன இந்த நேரத்தில் வருகிறாரே ?
விஷயம் என்னவாய் இருக்கும் ?
மனதில் அச்சம் கலவரத்தைக் கிளப்பியது .
ஆய்வர் மனதிலும் பதற்றம் தொற்றியது .
என்ன பிரச்சனையோ ??
வந்தவர் விசயத்தை சொல்வதற்குள் வாசலில் இருந்து ஒரு அனுமதிக் குரல் கேட்டது..
வந்து விட்டார்கள் .
நபி ( ஸல்) அவர்கள் தான்
உள்ளே வரச்சொன்னதும் , நபியவர்கள் ,
“ முக்கியமான விஷயம் பேச வேண்டும் . உங்களுடன் இருப்பவர்களை வெளியே போகச் சொல்லுங்கள் “ என்றார்கள் .
“அல்லாஹ்வின் தூதரே ! என் தாயும் தந்தையும் உங்களுக்கு அர்ப்பணம் .
உங்கள் குடும்பத்தினர் தான் இங்கே இருக்கிறார்கள் . ஆயிஷாவும் அஸ்மாவும் தான் ..” என்றார் .
(அந்த சமயத்தில் நபி ஸல் அவர்கள் ஆயிஷா (ரலி ) அவர்களை திருமணம் செய்திருந்தார்கள் . அதனால் தான் அபூபக்கர் அவ்வாறு கூறினார் .)
அங்கு அந்நியர்கள் யாரும் இல்லை என்பதை அறிந்து நபி (ஸல்) அவர்கள் விசயத்தை இரகசியமாக சொன்னார்கள் ..
“ அனுமதி கிடைத்து விட்டது ஹிஜ்ரத் செய்வதற்கு “_ நபி(ஸல்)
“ நானும் உங்களுடன் வருகிறேன் “_அபூபக்கர் (ரலி)
“ நீங்கள் என்னுடன் வருவதற்கு தான் நானும் விரும்புகிறேன் “என்றார்கள் .
ஏற்பாடுகள் அவசரமாய் தொடங்கின ..