முன்னோர்களின் வழி நேர்வழியா?

இப்ராஹீம் (அலை) அவர்கள் தமது தந்தையிடமும், தமது சமூகத்தாரிடமும் சத்தியப் பிரச்சாரம் செய்த செய்திகளைக் கடந்த இதழில் கண்டோம். அதற்கு அந்த மக்களின் பதில், “எங்கள் முன்னோர்கள் எதைச் செய்தார்களோ அதையே நாங்களும் செய்கிறோம்” என்பதாகவே இருந்தது.
இப்ராஹீம் நபியின் சமூகம் மட்டுமின்றி பல நபிமார்கள் தமது சமூகத்திற்கு தூதுத்துவத்தை எடுத்துச்சொல்ல வந்த போதெல்லாம் அம்மக்களின் வாதம் எங்கள் முன்னோர்களின் வழியைவிட்டு எங்களைத் தடுக்கின்றீர்களா? என்பதும், இது போன்றவற்றை எங்கள் முன்னோர்களிடம் நாங்கள் காணவில்லையே! என்பதுமாகத்தான் இருந்தது.
அவர்களுக்கு நமது வசனங்கள் தெளிவாக எடுத்துரைக்கப்பட்டால், “இவர் உங்கள் முன்னோர் வணங்கிக் கொண்டிருந்தவற்றை விட்டும் உங்களைத் தடுக்க விரும்பும் ஒரு மனிதரைத் தவிர வேறில்லை” என அவர்கள் கூறுகின்றனர்.
அல்குர்ஆன் (34:43)
“முன்சென்ற நமது முன்னோரிடமிருந்து நாம் இதைக் கேள்விப்பட்டதும் இல்லை” என்று அவர்கள் கூறினர்.
அல்குர்ஆன் (28:36)
“ஷுஐபே! எங்கள் முன்னோர் வணங்கியவற்றையும், எங்கள் செல்வங்களை நாங்கள் விரும்பிவாறு பயன்படுத்திக் கொள்வதையும் விட்டுவிட வேண்டுமென உமது தொழுகைதான் உமக்கு ஏவுகிறதா?
அல்குர்ஆன் (11:87)
(நபியே!) இவ்வாறே உமக்கு முன்னர் நாம் எந்த ஊருக்கு எச்சரிக்கையாளரை அனுப்பினாலும், அங்குள்ள சுகவாசிகள் “நாங்கள் எங்கள் முன்னோரை ஒரு வழிமுறையில் கண்டோம். அவர்களின் அடிச்சுவடுகளில் நாங்கள் பின்பற்றிச் செல்வோர்” என்றே கூறினார்கள்.
அல்குர்ஆன் (43:23)
எல்லா கூட்டமும் நபிமார்களை மறுப்பதற்குக் காரணமாக, இது முன்னோர்களின் வழியில்லையே? என்பதைத் தான் கூறினார்கள். ஆனால், அவர்களின் முன்னோர்களின் வழி எப்படிபட்டது, இந்தத் தூதரின் வழி எப்படிப்பட்டது? இதில் எது சரியானது என்பதையெல்லாம் அவர்கள் சிந்திக்கவில்லை. இவ்வாறே இப்ராஹீம் நபியின் கூட்டமும் இருந்தது. அந்தக் கூட்டத்திற்குத்தான் இப்ராஹீம் நபி சத்தியப் பிரச்சாரத்தை எத்தி வைத்தார்கள். இன்றும் இதுபோன்ற முன்னோர்களின் வழி என்று கூறும் கூட்டம் இருக்கவே செய்கிறார்கள். இவர்களுக்கு இப்ராஹீம் நபியின் வழியில், ‘மார்க்கத்தில் இல்லாத முன்னோர்களின் வழி வழிகேடே’ என விளக்க வேண்டும்.

முன்னோர்களின் வழியா? மூடத்தனமான வழியா?

முன்னோர்களின் வழி, முன்னோர்களின் வழி என்று மூச்சுக்கு முன்னூறு முறை முன்மொழிபவர்களிடம் முன்னோர்கள் வழி மூடத்தனமாக இருந்தாலும் அவற்றை பின்பற்றுவீர்களா? என்ற கேள்வியை அல்குர்ஆன் முன்வைக்கின்றது.
“உங்கள் முன்னோரை எதில் கண்டீர்களோ அதைவிடச் சிறந்த வழியை நான் உங்களிடம் கொண்டு வந்தாலுமா?” என்று (அத்தூதர்) கேட்டார். “நீங்கள் எதைக் கொண்டு அனுப்பப்பட்டீர்களோ அதை நாங்கள் மறுக்கக் கூடியவர்கள்” என்று அவர்கள் கூறினர்.
அல்குர்ஆன் (43:24)
“நீங்கள் அல்லாஹ் அருளியதைப் பின்பற்றுங்கள்” என்று அவர்களுக்குக் கூறப்படும்போது, “அவ்வாறல்ல! எதன்மீது எங்கள் முன்னோரைக் கண்டோமோ அதையே நாங்கள் பின்பற்றுவோம்” என்று கூறுகின்றனர். அவர்களுடைய முன்னோர் எதையும் சிந்திக்காதவர்களாகவும், நேர்வழி பெறாதவர்களாகவும் இருந்தாலுமா?
அல்குர்ஆன் (2:170)
முன்னோர்கள் சரியான பாதையில் இருந்தால் அவை வரவேற்கத்தக்கதே! ஆனால், முன்னோர்கள் மூடத்தனமான, மார்க்கத்திற்கு முரணான ஒன்றைச் செய்தார்கள் என்றால் அதை விட்டு நாம் விலகவேண்டும். இல்லையென்றால் இதுவே நம்மை நரகத்தில் தள்ளிவிடும்.

மறுமையில் பயனளிக்காத முன்னோர்களின் வழி

அல்லாஹ்வையும், அவனது தூதரையும் விடுத்து முன்னோர்கள், பெரியவர்ககள், தலைவர்கள் என்று நாம் யாரையெல்லாம் பின்பற்றினோமோ அவர்கள் அனைவரும் மறுமையில் நம்மை கைவிட்டுவிடுவார்கள்.
பின்பற்றப்பட்டவர்கள், பின்பற்றியவர்களை விட்டும் விலகி, அவர்கள் வேதனையையும் கண்டு, அவர்களுக்கிடையே இருந்த தொடர்புகள் முறிந்துவிடும்போது (அல்லாஹ்வின் ஆற்றலை அறிந்து கொள்வர்.) “(மீண்டும் உலகிற்குத்) திரும்பும் வாய்ப்பு எங்களுக்குக் கிடைக்குமானால் அவர்கள் எங்களை விட்டு விலகியதைப் போன்று நாங்களும் அவர்களை விட்டு விலகிக் கொள்வோமே!” என்று பின்பற்றியோர் கூறுவார்கள். இவ்வாறுதான் அவர்களின் செயல்களை அவர்களுக்குத் துக்கமளிப்பவையாக அல்லாஹ் காட்டுவான். அவர்கள் நரகத்திலிருந்து வெளியேறுபவர்களும் அல்லர்.
அல்குர்ஆன் (2:166,167)
அவர்களின் முகங்கள் நரகத்தில் புரட்டப்படும் அந்நாளில் “நாங்கள் அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டிருக்க வேண்டுமே! இத்தூதருக்கும் கட்டுப்பட்டிருக்க வேண்டுமே!” என்று கூறுவார்கள். “எங்கள் இறைவனே! எங்களின் தலைவர்களுக்கும், எங்களின் பெரியோர்களுக்கும் கட்டுப்பட்டோம். எங்களை அவர்கள் வழிகெடுத்து விட்டார்கள். எங்கள் இறைவனே! அவர்களுக்கு இருமடங்கு வேதனையைக் கொடுப்பாயாக! மேலும் அவர்களை மிகக் கடுமையாகச் சபிப்பாயாக!” என்று கூறுவார்கள்.
அல்குர்ஆன் (33:66,67,68)
முன்னோர்கள், முன்னோர்கள் என்ற முழக்கத்துடன் நாம் சென்றால் நமது நிலையும் இவ்வசனங்களில் உள்ளவர்களைப் போன்றுதான் இருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.
ஆனால், இவற்றையெல்லாம் மறந்து பல மக்கள் மார்க்கத்தில் இல்லாத பல புதுமையான காரியங்களை, இணைவைப்பான செயல்களை, தங்களின் முன்னோர்களின் வழி என்று இப்ராஹீம் நபியின் சமூகத்தைப் போன்று கூறி, அவற்றைத் தங்களின் வாழ்க்கையிலும் செய்து வருகின்றார்கள். இவர்களிடம் இதன் தீமையை தீவிரமாக இப்ராஹீம் நபியைப் போன்று நாமும் எடுத்துச் சொல்லக் கடமைப்பட்டுள்ளோம். பின்பற்ற தகுதியான வழி எது? நாம் யாரை வணங்க வேண்டும், யாரைப் பின்பற்ற வேண்டும் என்பதையெல்லாம் அழகான முறையிலும், அன்பான முறையிலும் எடுத்துரைக்க வேண்டும்.
இணைவைப்பிலிருந்து தமது சமூகத்தைக் காப்பாற்ற வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் தனி மனிதராக இருந்தும் களப் பணியாற்றிய இப்ராஹீம் நபியைப் போன்று நாமும் தமது மக்களிடம் தனி நபர் தஃவா களத்தில் செயலாற்ற வேண்டும். இணைவைப்பின் விபரீதத்தை விபரமாகவும், வீரியமாகவும் விவரிக்க வேண்டும்.

இப்ராஹீம் நபியின் ஏகத்துவ எத்திவைப்பு

இப்ராஹீம், (அலை) அவர்கள் தமது சமூகத்திற்கு சிறப்பாகச் செய்த சீர்த்திருத்தப் பணியின் பாணியை இறைவன் எடுத்துரைக்கிறான். அவைகளை இங்கே இனம் கண்டு கொள்வோம்.

அல்லாஹ்வை மட்டும் வணங்குங்கள்

இப்ராஹீம் நபி உட்பட எல்லா இறைத்தூதர்களும் ஆரம்பமாக மக்களுக்கு எடுத்துரைத்த செய்தி அல்லாஹ்வை மட்டும் வணங்க வேண்டும் என்ற ஓரிறை கொள்கைதான்.
இப்ராஹீமையும் (தூதராக அனுப்பினோம்.) அவர் தமது சமுதாயத்தினரை நோக்கி “அல்லாஹ்வை வணங்குங்கள்! அவனை அஞ்சுங்கள்! நீங்கள் அறிந்தோராக இருந்தால் இதுவே உங்களுக்குச் சிறந்ததாகும்” என்று கூறியதை நினைவூட்டுவீராக!
அல்குர்ஆன் (29:16)
அல்லாஹ்வை மட்டுமே வணங்க வேண்டும் அவனை விடுத்து வேறு யாரையும், எதையும் ஒருபோதும் வணங்கக்கூடாது என்பதை அடுக்கடுக்கான ஆதாரங்களுடன் இப்ராஹீம் நபி, தம் மக்களிடம் அடுக்குகிறார்கள்.

உயர்ந்தவனே உணவளிப்பவன்

உலகில் வாழும் மனிதனுக்கு உணவு என்பது மிக முக்கியத் தேவையாகும். உணவு இல்லையென்றால் உலகில் மனிதனால் வாழவே முடியாது. இவ்வாறு அவசியத் தேவையாக இருக்கும் உணவை நமக்கு வழங்கியது யார், எங்கிருந்து நமக்கு உணவு வருகிறது என்ற சிந்தனையைத் தூண்டி அல்லாஹ்வைப் பற்றிய ஓர் அறிமுகத்தை வழங்குகிறார்கள்.
அல்லாஹ்வையன்றி நீங்கள் சிலைகளையே வணங்குகிறீர்கள். பொய்யையே கற்பனை செய்கிறீர்கள். அல்லாஹ்வையன்றி நீங்கள் வணங்குபவை உங்களுக்கு உணவளிப்பதற்குச் சக்தி பெறாது. எனவே, அல்லாஹ்விடமே உணவைத் தேடுங்கள்! அவனை வணங்கி, அவனுக்கே நன்றி செலுத்துங்கள்! அவனிடமே நீங்கள் மீண்டும் கொண்டு வரப்படுவீர்கள்.
அல்குர்ஆன் (29:17)
இப்ராஹீம் நபியவர்கள் கூறியதைப் போன்றே இறைவனும், மனிதர்கள் உட்பட அனைத்து உயிரினங்களும் உண்ணும் உணவைப் பற்றி அல்குர்ஆனில் அதிகமான இடங்களில் பேசுகிறான்.
அல்லாஹ்தான் உங்களைப் படைத்தான். பின்னர் அவனே உங்களுக்கு உணவளித்தான். பிறகு உங்களை மரணிக்க வைப்பான். பின்னர் உங்களை உயிர்ப்பிப்பான். இவற்றில் எதையேனும் செய்பவர்கள் உங்களுடைய இணைக்கடவுள்களில் உள்ளனரா? அவன் தூயவன். அவர்கள் இணைவைப்பதை விட்டும் உயர்ந்தவன்.
அல்குர்ஆன் (30:40)
அவன்தான் உங்களுக்குப் பூமியை விரிப்பாகவும், வானத்தைக் கூரையாகவும் ஆக்கினான். வானிலிருந்து தண்ணீரை இறக்கி, அதன் மூலம் விளைச்சல்களிலிருந்து உங்களுக்கு உணவை வெளிப்படுத்தினான். எனவே, நீங்கள் அறிந்து கொண்டே அல்லாஹ்வுக்கு இணைகளை ஏற்படுத்தாதீர்கள்.
அல்குர்ஆன் (2:22)
அல்லது, தான் அளிக்கும் உணவை அவன் நிறுத்தி விட்டால் உங்களுக்கு உணவளிப்பவர் யார்? அவ்வாறல்ல! அவர்கள் பெருமையடிப்பதிலும், வெறுப்பிலுமே நீடிக்கின்றனர்.
அல்குர்ஆன் (67:21)
உணவளிப்பது அல்லாஹ்வின் அதிகாரம். அவன்தான் பூமியைப் பிளந்து அதிலிருந்து அறுசுவையுடைய அதிகமான உணவை நமக்கு வழங்குகிறான்.
நாமாக செதுக்கிக்கொண்ட சிலைகளோ, மற்ற மனிதர்களோ, பொருட்களோ உணவளிக்கும் ஆற்றலைப் பெறவில்லை. நமக்கு உணவளிப்பவன் இறைவன்தான் என்பதை இப்ராஹீம் நபியவர்கள் விவரிக்கிறார்கள். இன்னும் உணவை வேண்டி அவனிடமே உதவி தேடவும் சொன்னார்கள்.
இன்று முஸ்லிம்கள் என்று தங்களைத் தாங்களே சொல்லிக்கொள்ளும் நபர்கள் தங்களுக்கு உள்ள ஏழ்மையையும், வறுமையையும் அல்லாஹ்விடம் முறையிடாமல் மகான்களிடம் முறையிடுகிறார்கள். மவ்லிது என்ற பெயரில் இவர்கள் ஓதும் பாடல் வரிகளில், நபியவர்கள் ரிஸ்கை வழங்குவார்கள் என்றும் கூறுகிறார்கள்,
சிலர் தர்ஹாக்களுக்குச் சென்று அவ்லியாக்களிடம் தமது தேவைகளைக் கேட்பதையும் பார்க்கின்றோம். அவ்லியாக்கள் என்று இவர்கள் யாரைச் சொல்கிறார்களோ அவர்கள் உண்மையிலேயே உணவளிக்க சக்தி பெற்றவர்களா? நாம் அவர்களிடம் கேட்பதை அவர்கள் செவியுறுவார்களா? அப்படி செவியுற்றாலும் நமக்குப் பதிலளிப்பார்களா? என்பதையெல்லாம் சிந்திக்க மறந்துவிட்டார்கள்.
நமக்கு ஒருவர் பதிலளிக்க வேண்டுமென்றால் அவர் நாம் அழைப்பதை முதலில் செவியேற்க வேண்டும். ஏனெனில், செவியற்பவரே பதிலளிப்பார்கள் என இறைவன் கூறுகிறான்.
யார் செவியேற்கிறார்களோ அவர்களே பதிலளிப்பார்கள்.
அல்குர்ஆன் (6:36)
உயிருள்ளவர்களும், இறந்தவர்களும் சமமாக மாட்டார்கள். தான் நாடியவர்களை அல்லாஹ் செவியேற்குமாறு செய்கிறான். மண்ணறைகளில் இருப்பவர்களை நீர் செவியேற்கச் செய்ய முடியாது.
அல்குர்ஆன் (35:22)
மரணித்த நிலையில் இருக்கும் ஒரு மனிதன் எப்படி நமது கோரிக்கையை செவியேற்பார்?, எப்படி நமது கோரிக்கைக்கு பதிலளிப்பார்? இவ்வாறு அல்லாஹ்வை விடுத்து மரணித்த மற்றவர்களிடம் கேட்பவர்கள் வழிகெட்டவர்கள் என இறைவன் கூறுகிறான்.
அல்லாஹ்வை விடுத்து, மறுமை நாள்வரை தனக்குப் பதிலளிக்காதவர்களிடம் பிரார்த்திப்பவனைவிட மிக வழிகெட்டவன் யார்? அவர்களோ இவர்கள் பிரார்த்திப்பதைப் பற்றி அறியாதோராக உள்ளனர்.
அல்குர்ஆன் (46:5)
நீங்கள் அவர்களைப் பிரார்த்தித்தால் உங்கள் பிரார்த்தனையை அவர்கள் செவியுற மாட்டார்கள். (ஒரு வாதத்திற்கு) அவர்கள் செவியுறுவதாக இருந்தாலும் உங்களுக்குப் பதிலளிக்க மாட்டார்கள். நீங்கள் இணை வைத்ததை மறுமை நாளில் அவர்கள் மறுத்து விடுவார்கள். நன்கறிந்தவனைப் போன்று உமக்கு யாரும் அறிவிக்க மாட்டார்கள்.
அல்குர்ஆன் (35:14)
அல்லாஹ்தான் உங்களைப் படைத்தான். பின்னர் அவனே உங்களுக்கு உணவளித்தான். பிறகு உங்களை மரணிக்க வைப்பான். பின்னர் உங்களை உயிர்ப்பிப்பான். இவற்றில் எதையேனும் செய்பவர்கள் உங்களுடைய இணைக்கடவுள்களில் உள்ளனரா? அவன் தூயவன். அவர்கள் இணைவைப்பதை விட்டும் உயர்ந்தவன்.
அல்குர்ஆன் (30:40)
இறைவனுக்கு இணைவைக்கும் இதுபோன்ற தீமைகளிலிருந்து நாமும் விலகி, மற்றவர்களையும் விலகச் செய்யும் வகையில் நமது அழைப்புப் பணியை நாம் அமைத்துக் கொள்ள வேண்டும். சிலைகள் மட்டுமின்றி சமாதி வழிபாடும் சபிக்கப்பட்டதே என்று அவர்களுக்கு அழகிய முறையில் சமர்ப்பிக்க வேண்டும்.
இருப்பினும், இவ்வாறு ஏகத்துவத்தை அவர்களுக்கு எடுத்துச் சொல்லும்போது அவர்களிடமிருந்து ஏராளமான எதிர்புகள் நமக்கு ஏற்படும். பலவித கேள்விகள் முன்வைக்கப்படும். இத்தருணத்தில் இப்ராஹீம் நபியின் அழகிய பதிலையே நாமும் அவர்களுக்குக் கூறி நமது பயணத்தைத் தொடரவேண்டும்.
நீங்கள் பொய்யெனக் கூறினால், (அதேபோல்) உங்களுக்கு முன்சென்ற சமுதாயத்தினரும் பொய்யெனக் கூறியுள்ளனர். தெளிவாக எடுத்துச் சொல்வதைத் தவிர தூதர்மீது வேறெதுவும் இல்லை.
அல்குர்ஆன் (29:18)
மார்க்கத்தை எடுத்துச் சொல்லும் போது நியாயமான கேள்விகளை நம்மை நோக்கி முன்வைப்பதைவிட அநியாயமான, அபத்தமான பல கேள்விகளையே முன்வைப்பார்கள். ஏற்கத்தக்க ஏதேனும் கேள்விகள் இருந்தால் அதை நாம் எடுத்துக்கொண்டு அதற்கான பதிலை அழகிய முறையில் கூற வேண்டும். அவ்வாறு இல்லாமல் நியாயமற்ற, அநியாயமான கேள்விகள் நம்மிடம் கேட்கப்பட்டால் அவர்களுக்கு இப்ராஹீம் நபி கூறிய இந்த பதிலையே நாமும் கூறிவிடுவோமாக!

மகத்தான படைப்பாளன்

இப்ராஹீம் (அலை) அவர்கள் அடுத்ததாக அல்லாஹ்வை அறிமுகப்படுத்ததும் விதமாக அவனது படைப்பை அவர்களுக்கு விவரிக்கிறார்கள். ‘மகத்தானப் படைப்பாளனின் பிரம்மாண்ட படைப்பைப் பார்க்க பயணத்திற்கு புறப்படுங்கள்’ என இப்ராஹீம் நபி வலியுறுத்துகிறார்கள்.
அல்லாஹ் எவ்வாறு படைப்பைத் தோற்றுவித்துப் பின்னர் அதனை மீண்டும் படைக்கிறான் என்பதை அவர்கள் சிந்திக்கவில்லையா? அல்லாஹ்வுக்கு இது மிக எளிதானது. “பூமியில் பயணம் செய்து அல்லாஹ் எவ்வாறு படைப்பைத் தோற்றுவித்துப் பின்னர் மற்றொரு தடவை உருவாக்குகிறான் என்பதைக் கவனியுங்கள்!” என்று கூறுவீராக! ஒவ்வொரு பொருளின்மீதும் அல்லாஹ் ஆற்றலுடையவன்.
அல்குர்ஆன் (29:19,20)
“நீங்கள் செதுக்கிக் கொண்டவற்றையே நீங்கள் வணங்குகிறீர்களா? உங்களையும், நீங்கள் உருவாக்கியவற்றையும் அல்லாஹ்வே படைத்தான்” என்று அவர் கூறினார்.
அல்குர்ஆன் (37:95,96)
வானங்கள், பூமி, அவ்விரண்டுக்கு இடைப் பட்டவற்றை நியாயமான காரணத்துடனும், நிர்ணயிக்கப்பட்ட தவணையுடனுமே படைத்துள்ளோம். இறைமறுப்பாளர்கள், தமக்கு எச்சரிக்கப்பட்டதைப் புறக்கணிக்கின்றனர்.
“அல்லாஹ்வையன்றி நீங்கள் பிரார்த்திப்பவற்றைப் பற்றிச் சிந்தித்தீர்களா? அவர்கள் பூமியில் எதைப் படைத்தார்கள் என்பதை எனக்குக் காட்டுங்கள். அல்லது வானங்களில் அவர்களுக்கு ஏதேனும் பங்கு உள்ளதா? நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் இதற்கு முன்பிருந்த வேதத்தையோ, அல்லது அறிவார்ந்த தடயத்தையோ என்னிடம் கொண்டு வாருங்கள்!” என்று (நபியே!) கூறுவீராக!
அல்குர்ஆன் (46:3,4)
அல்லாஹ்தான் படைப்பாளன், நாம் படைப்பினங்கள். எனவே, அனைத்தையும் படைத்த அல்லாஹ்வையே அனைவரும் வணங்க வேண்டும், அல்லாஹ்வை விடுத்து வேறு யாரையும், எக்காரணத்தைக் கொண்டும் வணங்கிவிடக்கூடாது என்பதைப் பாடம் நடத்தி விட்டு, அவ்வாறு அல்லாஹ் அல்லாதவர்களை வணங்கினால் நாளை மறுமையில் அவனது தண்டனையிலிருந்து நாம் தப்பிக்க முடியாது. ஏனெனில் அவனிடமே நாம் கொண்டு செல்லப்படுவோம் என்ற எச்சரிக்கையை இப்ராஹீம், (அலை) அவர்களுக்கு முன்னறிவிப்பு செய்கிறார்கள்.
அவன், தான் நாடியவர்களை வேதனைப்படுத்துகிறான். தான் நாடியவர்களுக்கு அருள் புரிகிறான். அவனிடமே நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள். பூமியிலும், வானத்திலும் நீங்கள் (அவனிடமிருந்து) தப்பிப்போர் அல்ல! அல்லாஹ்வையன்றி உங்களுக்கு எந்தப் பாதுகாவலரும், உதவியாளரும் இல்லை. “யார் அல்லாஹ்வின் வசனங்களையும், அவனைச் சந்திப்பதையும் மறுக்கிறார்களோ அவர்கள் எனது அருளில் நம்பிக்கையிழந்து விட்டனர். அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உள்ளது” (என இறைவன் கூறுவதாக இப்ராஹீம் கூறினார்.)
அல்குர்ஆன் (29:21-23)

படைப்பினங்களை வைத்துப் பாடம் நடத்துதல்

இப்ராஹீம், (அலை) அவர்கள் தம் மக்களுக்கு மார்க்கத்தைச் சொல்வதற்கு பல நுணுக்கமான வழிமுறைகளைக் கடைபிடிக்கிறார்கள். மார்க்கத்தை மக்களுக்கு எவ்வாறு சொன்னால் அவர்களுக்கு விளங்குமோ அதனடிப்படையில் நாம் சொல்லவேண்டும். இப்ராஹீம் நபியவர்கள் இவற்றில் ஞானமிக்கவர்களாக இருந்தார்கள். ஒரு கட்டத்தில் இப்ராஹீம், (அலை) பகுத்தறிவைத் தூண்டும் வகையில் மக்களுக்கு படைப்பினங்களைக் கொண்டும் பாடம் நடத்தினார்கள்.
அவரை இரவு சூழ்ந்தபோது நட்சத்திரத்தைக் கண்டு, “இதுதான் எனது இறைவன்” என்று கூறினார். அது மறைந்தபோது “மறையக்கூடியவற்றை நான் விரும்ப மாட்டேன்” என்றார். சந்திரன் உதயமாவதை அவர் கண்டபோது “இதுதான் எனது இறைவன்” என்று கூறினார். அது மறைந்தபோது, “எனது இறைவன் எனக்கு நேர்வழி காட்டவில்லை என்றால் நானும் வழிதவறிய கூட்டத்தில் ஒருவனாகி விடுவேன்” என்று கூறினார். சூரியன் உதயமாவதை அவர் கண்டபோது “இதுதான் எனது இறைவன். இது மிகப் பெரியது” என்று கூறினார். அது மறைந்தபோது “என் சமுதாயமே! நீங்கள் இணையாக்குபவற்றை விட்டும் நான் விலகிக் கொண்டேன். வானங்களையும், பூமியையும் முன்மாதிரியின்றிப் படைத்தவனை நோக்கி, சத்திய நெறியில் நின்றவனாக எனது முகத்தைத் திருப்பி விட்டேன். நான் இணை வைப்போரில் உள்ளவன் அல்ல” என்று கூறினார்.
அல்குர்ஆன் (6:76,79)
மக்களிடம், நீங்கள் வணங்கும் அனைத்தும் ஏதேனும் பலவீனமுடையதாகவே உள்ளது. எந்த பலவீனமும் இல்லாதவனே வணங்குவதற்குத் தகுதியானவன். அவனே இறைவன்! அவனிடம் எந்தப் பலவீனமுமில்லை. அவன் என்றென்றும் நிலையாக, நிரந்தரமாக, நீடித்து இருப்பவன் என்பதைப் பச்சிளம் பிள்ளைக்கும் புரிவதைப் போன்று உதாரணத்தையும், சான்றுகளையும் கூறி விவரிக்கிறார்கள்.
ஆனாலும்கூட, அவர்களின் சமூகம் அதை செவிக்கொடுத்துக் கேட்கவில்லை. அவர்கள் விளங்காத மடமைக் கூட்டமாகவே இருந்தார்கள். இப்ராஹீம் நபியிடம் அர்த்தமற்ற, அனர்த்தமான எதிர் வாதங்களையே முன்வைத்தார்கள். இருப்பினும் அவர்களின் எதிர்ப்புக்கு இப்ராஹீம் நபி இம்மியளவும் அசைந்து கொடுக்கவில்லை.
அவரது சமுதாயத்தினர் அவருடன் வாதம் செய்தனர். “அல்லாஹ்வைப் பற்றியா என்னிடம் வாதம் செய்கிறீர்கள்? அவனே எனக்கு நேர்வழி காட்டினான். நீங்கள் அவனுக்கு இணையாக்குபவற்றைப் பற்றி நான் அஞ்ச மாட்டேன். எனது இறைவன் ஏதேனும் நாடினாலே தவிர (எந்தத் தீங்கும் ஏற்படாது.) எனது இறைவன் ஒவ்வொரு பொருளையும் ஞானத்தால் சூழ்ந்திருக்கிறான். நீங்கள் சிந்திக்க மாட்டீர்களா?” என்று கேட்டார். “உங்களுக்கு அல்லாஹ் எந்த ஆதாரத்தையும் இறக்கி வைக்காதவற்றை அவனுக்கு நீங்கள் இணையாக்க அஞ்சாதபோது, நீங்கள் இணையாக்குபவற்றுக்கு நான் எப்படி அஞ்சுவேன்? நீங்கள் அறிந்தோராக இருந்தால், இரு பிரிவினரில் அச்சமின்றி இருக்க அதிகத் தகுதியுடையோர் யார்?” (என்று கேட்டார்.)
அல்குர்ஆன் (6:80,81)
இப்ராஹீம் நபியவர்கள் எதிர்ப்பவர்களின் எதிர்ப்புக்கு அஞ்சா நெஞ்சராக இருப்பதுடன், உண்மையில் அஞ்சுவதற்குத் தகுதியானவர் யார் என ஏற்புடைய எதிர் வாதத்தை எவ்வித அச்சமுமின்றி அவர்களிடம் எடுத்துரைத்தார்கள்.
இவையாவும் இறைவன் இப்ராஹீம் நபியவர்களுக்கு எடுத்துக்காட்டி அம்மக்களுக்கு விவரிக்குமாறு கூறியவையாகும்.
இது நமது ஆதாரமாகும். இப்ராஹீமின் சமுதாயத்திற்கு எதிராக அவருக்கு இதை வழங்கினோம். நாம் நாடியோருக்கு அந்தஸ்துகளை உயர்த்துகிறோம். உமது இறைவனே நுண்ணறிவாளன். நன்கறிந்தவன்.
அல்குர்ஆன் (6:83)

இப்ராஹீம் நபியின் இறுதிக்கட்ட எத்திவைப்பு

இப்ராஹீம் நபியின் அறிவுபூர்வமான அழைப்புப் பணி இறுதி கட்டத்தை எட்டிவிட்டது. தமது சமூகத்தின் இணைவைப்புக் கொள்கையைத் தவறு என எந்தெந்த முறைகளிலெல்லாம் எடுத்துச் சொல்ல முடியுமோ அவை அனைத்தையும் இப்ராஹீம், (அலை) அவர்கள் செய்துவிட்டார்கள். இருப்பினும் அவர்கள் அதைப் புரிந்துகொள்ள முன்வரவில்லை எனவே, இப்ராஹீம் நபியவர்கள் இறுதிகட்டமாக அவர்களின் தவறை அவர்களின் நாவிலிருந்தே ஒப்புக்கொள்ளும் வகையில் இணைவைப்பிற்கு எதிராக அவர்களின் உச்சக்கட்டப் போராட்டத்தை கையிலெடுக்கிறார்கள்.
அவர் தமது தந்தையிடமும் தமது கூட்டத்தாரிடமும், “நீங்கள் வணங்கிக் கொண்டிருக்கும் இந்தச் சிலைகள் என்ன?” என்று கேட்டபோது, “இவற்றை எங்கள் முன்னோர் வணங்குவதை நாங்கள் கண்டோம்” என அவர்கள் கூறினர். “நீங்களும் உங்கள் முன்னோரும் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருக்கிறீர்கள்!” என அவர் கூறினார். “நீர் எங்களிடம் உண்மையைக் கொண்டு வந்துள்ளீரா? அல்லது விளையாடுகிறீரா?” என அவர்கள் கேட்டனர். “அவ்வாறல்ல! வானங்களுக்கும் பூமிக்கும் இறைவனே உங்கள் இறைவன். அவனே அவற்றைப் படைத்தான். இதற்கு சாட்சி கூறுவோரில் நானும் ஒருவன். அல்லாஹ்வின்மீது சத்தியமாக! நீங்கள் திரும்பிச் சென்ற பிறகு உங்கள் சிலைகள் விஷயத்தில் நான் ஒரு தந்திரத்தைக் கையாள்வேன்” என அவர் கூறினார்.
அல்குர்ஆன் (21:52-57)
அவர் தமது தந்தையிடமும், சமுதாயத்திடமும் “நீங்கள் எதை வணங்குகிறீர்கள்?” என்று கேட்டதை நினைவு கூர்வீராக! “அல்லாஹ்வையன்றி பொய்யைக் கடவுள்கள் என எண்ணுகிறீர்களா? அவ்வாறாயின் அகிலங்களின் இறைவனைப் பற்றி உங்களுடைய எண்ணம் என்ன?” (என்று கேட்டார்.) பின்னர் அவர் நட்சத்திரங்களைக் கூர்ந்து கவனித்தார். மேலும் “நான் நோயாளியாவேன்” எனக் கூறினார்.
அல்குர்ஆன் (37:85-88)
தம் சமூக மக்களிடம், அவர்களின் கடவுள்களைப் பற்றிய விபரத்தைக் கேட்ட பின்னர், இவைகளை எவ்வாறு கடவுளாக எண்ணி நீங்கள் வணங்குகிறீர்கள்? வணங்குவதற்குத் தகுதியானவன் அல்லாஹ் மட்டுமே என்பதை அவர்களுக்குக் கூறுகிறார்கள். மேலும் இப்ராஹீம் நபியை அம்மக்கள் தீமைக்கு அழைக்கும்போது அவர்களின் தீய சபைகளைப் புறக்கணிக்கும் வகையில் நான் நோயாளியாவேன் என கூறியதுடன் சிலை வழிபாட்டாளர்களுக்கு சிலை வணக்கம் என்பது மூடத்தனம் என்பதை உணர்த்த அழகிய யுக்தியைப் பயன்படுத்துகிறார்கள்.
இப்ராஹீம் நபியின் சமூக மக்களெல்லாம் வெளியே சென்றவுடன் அவர்கள் கடவுளாக வணங்கிய சிலைகளிடம் இப்ராஹீம் நபி வருகிறார்கள்.
அவர், அவர்களின் கடவுள்களிடம் சென்றார். “நீங்கள் சாப்பிட மாட்டீர்களா? நீங்கள் பேசாமலிருக்க உங்களுக்கு என்ன நேர்ந்தது?” எனக் கேட்டார். பின்னர் அவற்றை நோக்கிச் சென்று, வலதுகையால் தாக்கினார்.
அல்குர்ஆன் (37:91-93)
அவர், அவற்றைத் துண்டு, துண்டாக ஆக்கினார். அவற்றில் பெரியதைத் தவிர! அதனிடம் அவர்கள் திரும்பி வரக்கூடும் என்பதற்காக (அதை விட்டுவைத்தார்.)
அல்குர்ஆன் (21:58)
மக்கள் அனைவரும் கடவுளாகக் கற்பனை செய்து வணங்கி வந்த சிலைகளிடம் இப்ராஹீம் நபியவர்கள் வந்து விரக்தியின் வெளிப்பாடாக அதனிடம் கேள்வியை முன்வைத்துவிட்டு அவற்றில் பெரிய சிலையை மட்டும் மீதம் வைத்துவிட்டு மற்ற எல்லாவற்றையும் சேதப்படுத்துகிறார்கள். இதன் மூலம் மக்களுக்கு மடமைத்தனத்தை விளக்க வேண்டும், இணைவைப்பு என்ற கொடிய பாவத்திலிருந்து அவர்களை மீட்டு, நிரந்தர நரகம் என்ற கோர வேதனையிலிருந்தும் அவர்களைப் பாதுகாத்து சொர்க்கத்தில் சேர்க்க வேண்டும் என்பதே இப்ராஹீம் நபியின் நோக்கமாக இருந்தது. அதன் வெளிப்பாடாகவே இவ்வாறு அவர்கள் செய்தார்கள்.
தவறை ஒப்புக் கொண்டும் திருந்த மறுத்தல்
வெளியே சென்றிருந்த அம்மக்கள் அங்கே திரும்பி வந்தவுடன் தங்களின் கடவுள் சிலைகளைக் கண்டு கடும் அதிர்ச்சியடைந்து, கோபத்தின் உச்சிக்குச் சென்றுவிட்டனர், நமது கடவுளை இவ்வாறு செய்தது யார் என்ற கேள்வியும் அவர்களுக்கு முன் வைக்கப்படுகிறது. அப்போது இளைஞரான இப்ராஹீம் என்ற பெயர் அங்கே முன்மொழியப்படுகிறது.
“நமது கடவுள்களை இவ்வாறு செய்தவர் யார்? அவர் அநியாயக்காரர்களில் உள்ளவரே!” என அவர்கள் கூறினர். “இப்ராஹீம் என அழைக்கப்படும் ஓர் இளைஞர் அவற்றைப் பற்றிக் (குறை) கூறுவதைச் செவியுற்று இருக்கிறோம்” என்று சிலர் கூறினர். “மக்களின் கண்ணெதிரிரே அவரைக் கொண்டு வாருங்கள்! அவர்கள் சாட்சி கூறக் கூடும்” என அவர்கள் கூறினர்.
அல்குர்ஆன் (21:59-61)
இதன் பிறகு அங்கே இப்ராஹீம் நபியவர்கள் வந்தபோது அவர்களிடம் மக்கள் அனைவரும் விரைந்து வந்து, அவர்களை சூழ்ந்து இதுபற்றி அவர்களிடம் விசாரணை செய்தார்கள்.
அவரிடம் அவர்கள் விரைந்து வந்தனர்.
அல்குர்ஆன் (37:94)
“இப்ராஹீமே! எங்கள் கடவுள்களை இவ்வாறு செய்தது நீர் தானா?” எனக் கேட்டனர்.
அல்குர்ஆன் (21:62)
அனைவரும் ஒன்றிணைந்து இப்ராஹீம் நபிக்கு எதிராகக் கடும் கோபத்தை வெளிப்படுத்தும் இத்தருணத்திலும் தனிமனிதராக இருந்த இப்ராஹீம் நபி துணிவுடன் தனது கொள்கை முழக்கப் பிரச்சாரத்தை அங்கே அவர்களுக்கு முன்னிலையில் மீண்டும் ஒருமுறை இறுதியாகத் துவங்குகிறார்கள். அவர்களின் தவறை அறிவுப்பூர்வமாக அவர்களுக்கு உணர்த்துகிறார்கள்.
“மக்களின் கண்ணெதிரிரே அவரைக் கொண்டு வாருங்கள்! அவர்கள் சாட்சி கூறக் கூடும்” என அவர்கள் கூறினர். “இப்ராஹீமே! எங்கள் கடவுள்களை இவ்வாறு செய்தது நீர்தானா?” எனக் கேட்டனர். “இல்லை! இதைச் செய்தது இவற்றிலுள்ள இந்தப் பெரிய சிலைதான். அவை பேசக் கூடியவையாக இருந்தால் அவற்றிடமே கேளுங்கள்!” என அவர் கூறினார். அவர்கள் தங்கள் பக்கமே திரும்பி, “நீங்களே அநியாயக்காரர்கள்” என்று கூறிக் கொண்டனர். பின்னர் அவர்கள் தலைக்குனிவுக்கு உள்ளாக்கப்பட்டு, “இவை பேசாது என்பதுதான் உமக்குத் தெரியுமே!” (என்று கூறினர்.) “அல்லாஹ்வையன்றி உங்களுக்குச் சிறிதும் நன்மையோ, தீமையோ செய்யாதவற்றை வணங்குகிறீர்களா? உங்களுக்கும், அல்லாஹ்வையன்றி நீங்கள் வணங்குபவற்றுக்கும் அசிங்கம்தான்! நீங்கள் சிந்திக்க மாட்டீர்களா?” என்று அவர் கூறினார்.
அல்குர்ஆன் (21:63-67)
இப்ராஹீம் நபியின் இறுதிக் கட்ட ஏகத்துவ முழக்கத்தை எதிரிகளால் ஏற்றுக்கொள்ளவும் முடியாமல் அதை எதிர்கொள்ளவும் முடியாமல் தடுமாறி தங்களின் நாவுகளினாலேயே தங்களின் தவறையும், அறியாமையையும் தங்களை அறியாமல் ஒப்புக்கொண்டனர். இதுதான் சந்தரப்பம் என சீறிப்பாயும் வகையில் இப்ராஹீம் நபியும் அந்நேரத்தில் சிறப்பாக, தமக்குக் கிடைத்த தருணத்தை செதுக்கிக் கொண்டார்கள்.
“நீங்கள் செதுக்கிக் கொண்டவற்றையே நீங்கள் வணங்குகிறீர்களா? உங்களையும், நீங்கள் உருவாக்கியவற்றையும் அல்லாஹ்வே படைத்தான்” என்று அவர் கூறினார்.
அல்குர்ஆன் (37:95,96)
சிலைகள் ஒருபோதும் பேசாது என்பதை அவர்களின் நாவினாலேயே நவின்றார்கள்; தலைகுனிந்து நின்றார்கள். உடனே இப்ராஹீம் நபி, ‘உங்களுக்குக் கேவலம்தான்; இதைத்தான் நானும் சொல்கின்றேன்’ என்ற தோரணையில் அவை பேசாது, கேட்காது, எந்த நன்மையும், தீமையும் செய்யாது; அவற்றையா நீங்கள் வணங்குகிறீர்கள்? என்ற கேள்வியை முன்வைக்கிறார்கள். அல்லாஹ்தான் வணங்கப்பட வேண்டியவன் என்பதையும் கூறுகிறார்கள்.
ஆனால், அவர்கள் இப்போதும் தங்களது தவறைத் திருத்திக் கொள்ளவில்லை இதற்கு அறிவுப்பூர்வமாக எந்தப் பதிலும் கூறவில்லை. மாறாக அவர்களின் அவமானத்தைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் இப்ராஹீம் நபிக்கு எதிராகச் சூழ்ச்சி செய்யவே அவர்கள் முனைந்தார்கள்.
இப்ராஹீம் நபியின் இவ்வளவு பிரச்சாரப் பின்னணியிலும் யாருமே அவர்களை ஏற்றுக் கொள்ளவில்லை. அவர்களை எதிர்த்துதான் நின்றார்கள்.
இப்ராஹீம் நபியின் பிரச்சாரத்தையே ஏற்றுக் கொள்ளாத மக்கள் நாம் இன்று பிரச்சாரம் செய்தவுடனே ஏற்றுக்கொள்வார்களா? இன்று பலர் நாம் எவ்வளவு பிரச்சாரம் செய்கிறோம்; யாருமே ஏற்றுக்கொள்ளவில்லையே என ஏங்கி நிற்கின்றனர். இதனால் எரிச்சலடைகின்றனர்.ஒரு கட்டத்தில் விரக்தியடைந்து இதிலிருந்து விலகிச்செல்கின்றனர். ஆனால் இது எதார்த்த நிலைதான் என்பதை இப்ராஹீம் நபியின் பிரச்சாரப் பயணம் பாடம் புகட்டுகிறது. இதை நாம் புரிந்துகொள்ளாவிட்டால் பாதிப்பு நமக்குதான்.
நமக்கு மட்டுமின்றி இறைத்தூதர்களுக்கும் இறைவன் சொன்ன கட்டளை மார்க்கத்தை எடுத்துச் சொல்வது மட்டுமே! அதை அவர்கள் ஏற்றுச் செயல்படவைக்க வேண்டும் என்பதல்ல.
தெளிவாக எடுத்துச் சொல்வதைத் தவிர தூதர்மீது வேறு எதுவும் இல்லை.
அல்குர்ஆன் (24:54)

இப்ராஹீம் நபிக்கு எதிராக எதிரிகளின் சூழ்ச்சி

ஏகத்துவ எதிரிகள் இந்நிகழ்வுக்குப் பிறகு இப்ராஹீமை இனியும் விட்டுவைக்க கூடாது, அவரின் சகாப்தத்தை இன்றே முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என எண்ணினார்கள்.
“நீங்கள் (கடவுளுக்கு எதையேனும்) செய்வதாக இருந்தால் அவரைத் தீயில் எரித்து, உங்கள் கடவுள்களுக்கு உதவி செய்யுங்கள்!” என்று அவர்கள் கூறினர்.
அல்குர்ஆன் (21:68)
“இவரைக் கொன்று விடுங்கள்! அல்லது எரித்து விடுங்கள்!” என்று கூறியதே அவரது சமுதாயத்தினரின் பதிலாக இருந்தது.
அல்குர்ஆன் (29:24)
“அவருக்காக ஒரு கிடங்கை அமைத்து, அவரை நெருப்பில் போட்டு விடுங்கள்!” என அவர்கள் கூறினர். (அல்குர்ஆன் 37:97)
இப்ராஹீமைக் கொல்லுங்கள் அல்லது கொளுத்துங்கள் என்று அவர்கள் எண்ணியது மட்டுமின்றி அதற்குச் செயல்வடிவமும் கொடுத்தார்கள். இப்ராஹீம் நபிக்கு எதிராக மிகப்பெரும் கிடங்கையும் அங்கே அமைத்தார்கள். ஆனால், அவர்கள் என்னதான் இப்ராஹீம் நபியைத் தீர்த்துக் கட்டவேண்டும் என்பதற்காக இவ்வாறு பல செயல்திட்டம் தீட்டினாலும் அவை கை கொடுக்கவில்லை. ஏகத்துவத் தந்தை இப்ராஹீம், (அலை) அவர்களுக்கு எதிராகச் செய்த எதிரிகளின் சூழ்ச்சியை இறைவன் வீழ்ச்சியாக்கினான். அவனே சூழ்ச்சியாளர்களுக்கெல்லாம் மிகப்பெரும் சூழ்ச்சியாளன் என நிரூபித்தான்.
இதுபோன்ற இன்னல்கள் இப்ராஹீம் நபிக்கு மாத்திரமின்றி ஏகத்துவத்தை எத்திவைத்த அனைவருக்கும் அனேக வழிகளில் எதிர்ப்பலைகள் கிளம்பின. ஏகத்துவ எதிரிகள் பல புண்படும் சொற்களை ஏகத்துவவாதிகளின் மீது ஈட்டியைப் போன்று எறிவார்கள்.

உதாரணத்திற்கு:

  • அறியாமையில் உள்ளவர் என்பார்கள்.- அல்குர்ஆன் (7:66)
  • பொய்யர் என்பார்கள். – அல்குர்ஆன்(7:66)(51:52)
  • பைத்தியக்காரர் என்பார்கள். – அல்குர்ஆன் (15:6, 26:27, 51:52)
  • சூனியம் செய்யப்பட்டவர் என்பார்கள்.- அல்குர்ஆன் (17:47,101)
  • கவிஞர் என்பார்கள். – அல்குர்ஆன் (52:30)
  • கெட்ட சகுனம் என்பார்கள். – அல்குர்ஆன் (36:18)(27:47)
  • ஊரை விட்டே வெளியேற்றுவர். – அல்குர்ஆன் (22:40, 7:82,88, 8:30, 14:13,14, 17:76)
  • கல் எறிந்து கொல்லத் துணிவார்கள்.- அல்குர்ஆன் (11:91, 26:116, 36:18)
  • கொலை மிரட்டல் விடுவார்கள்.- அல்குர்ஆன் (26:49, 20:71, 7:124)
  • கொலை செய்யவே துணிவார்கள். – அல்குர்ஆன் (8:30, 2:87,91, 5:70)

நாம் அழைப்புப் பணி செய்யும்போது இதுபோன்ற எண்ணற்ற துன்புறும் சொற்களை செவியுறுவோம். இதுபோன்ற நிலையில் நாமும் இப்ராஹீம் நபியைப் போல் உறுதியாக இருக்க வேண்டும்.

குளிர்ந்த நெருப்பு

இப்ராஹீம் நபியை எரிப்பதற்காக ஏற்படுத்தப் பட்ட நெருப்பு இறையருளால் அவர்களுக்கு இதமாகவும், இனிமையாகவும் மாறியது.
“நெருப்பே! இப்ராஹீமுக்குக் குளிர்ச்சியாகவும், இதமாகவும் ஆகிவிடு!” என்று கூறினோம். அவருக்கு (எதிராக)ச் சதி செய்ய அவர்கள் நினைத்தனர். ஆனால் அவர்களை நாம் நஷ்டமடைந்தோராக ஆக்கினோம்.
அல்குர்ஆன் (21:69,70)
எனினும் நெருப்பிலிருந்து அல்லாஹ் அவரைக் காப்பாற்றினான். நம்புகின்ற சமுதாயத்திற்கு இதில் சான்றுகள் உள்ளன.
அல்குர்ஆன் (29:24)
அவருக்கு (எதிராக) அவர்கள் சதி செய்ய நாடினார்கள். அவர்களை நாம் இழிந்தோராக ஆக்கினோம்.
அல்குர்ஆன் (37:98)
இம்மாபெரும் நிகழ்வு அம்மக்களை மிகவும் ஆச்சரியமடைய வைத்த அல்லாஹ்வின் அற்புத நிகழ்வாகும். நிதர்சனத்திற்கு நேர்மாற்றமான நிகழ்வாகும். ஒரு கிடங்கை ஏற்படுத்தி அதில் அவர்கள் மூட்டிய நெருப்பை இறைவன் குளிரூட்டி, இப்ராஹீம் நபியவர்களுக்கு இனிமையானதாக ஆக்கினான். இதற்கான முக்கியக் காரணம் இப்ராஹீம் நபியின் இறை நம்பிக்கை, கொள்கை உறுதி, மன உறுதி, அழைப்புப் பணியில் அவர்களின் துணிச்சல் ஆகியவை தான்.
தனி மனிதனாக இருந்தாலும் ஈமானிய உறுதியின் காரணமாக அல்லாஹ்வின் உதவி அவர்களைத் தேடிவந்தது. படைத்தவனின் துணை இருக்க படைப்பினங்களின் மீது பயம் எதற்கு? என்ற அடிப்படையில் சத்தியப் பாதையில் சரித்திரம் படைத்தார்கள் இப்ராஹீம் நபியவர்கள். இப்ராஹீம் நபியின் இந்தத் துணிச்சலையும், இறைவனின் உதவியயும் இன்றைய ஏகத்துவவாதிகளுக்கு அல்குர்ஆனின் மூலமாக சமர்ப்பணம் செய்கிறான் இறைவன்.
இன்று, ஏகத்துவவாதிகள் என்று கூறும் பலருக்குக் குடும்பத்திலிருந்தோ, சமூகத்திலிருந்தோ, நண்பர்களிடமிருந்தோ ஏதேனும் எதிர்ப்புகள் ஏற்பட்டால், இல்லை, இல்லை! சாதாரண மறுப்பு வந்தால் கூட பிரச்சாரப் பணியை பாதியிலேயே முடக்கி விடுகின்றனர். கொள்கையில் ஆட்டம் கண்டு விடுகின்றனர். நமக்கு இப்ராஹீம் நபியின் வாழ்விலிருந்து கிடைக்கும் படிப்பினைகளில் மிக முக்கியமானது ஏகத்துவத்தை எடுத்துச் சொல்லும்போது அனைத்து மக்களிடமிருந்தும் எதிர்ப்புகள் கிளம்பத்தான் செய்யும்.
நாம் தனித்து விடப்படுவோம், நமக்கு முன்னால் வாழ்ந்த எத்தனையோ நபிமார்களும், நல்லடியார்களும் சந்தித்ததைப் போன்று பல துன்பங்களையும் தந்திப்போம். பைத்தியம் என்பார்கள், மூடன் என்பார்கள், உறவை முறிப்பவன் என்பார்கள், பிரிவினை வாதி என்பார்கள், குழப்பவாதி என்பார்கள். இதுபோன்ற எண்ணற்ற விமர்சனங்களைக் கொண்டு நம்மைத் துன்புறுத்துவார்கள். ஏன் நம்மை கொலை செய்யவும்கூட இந்த அயோக்கியர்கள் துணிவார்கள்.
இதுபோன்ற பல கஷ்டங்களைத் தாண்டித்தான் பலரும் இந்தப் பிரச்சாரத்தைச் செய்தார்கள் என்றபோது நமக்கு இவ்வாறு பிரச்சனைகள் வராதா என்ன? எனவே, எத்தனை அவதூறுப் பிரச்சாரங்கள் நம்மை நோக்கி வந்தாலும் நாம் நமது கொள்கையில் உறுதியாக இருந்து அழைப்புப் பணியை அழகிய முறையில் செய்துகொண்டே இருக்க வேண்டும். நமக்கு அல்லாஹ்வின் உதவி உள்ளது என்பதை மறந்து விடக்கூடாது.
உமக்கு ஏவப்பட்டதை ஒளிவு மறைவின்றி எடுத்துரைப்பீராக! இணைவைப்போரைப் புறக்கணிப்பீராக! கேலி செய்வோர் விஷயத்தில் உமக்கு நாமே போதுமானவர்கள்.
அல்குர்ஆன் (15:94,95)

ஏகத்துவ எதிரியை இனம் காட்டிய இப்ராஹீம் நபி

இறைவன், இப்ராஹீம் நபியை நெருப்பிலிருந்து காப்பாற்றிய பின்னர் இப்ராஹீம் (அலை) அவர்கள் மக்களை நோக்கிப் பின்வருமாறு கூறுகிறார்கள்.
“நீங்கள் அல்லாஹ் ஒருவனை மட்டும் நம்பும்வரை, உங்களை விட்டும், அல்லாஹ்வையன்றி நீங்கள் வணங்குபவற்றை விட்டும் நாங்கள் விலகிக் கொண்டோம். உங்களை மறுத்து விட்டோம். உங்களுக்கும், எங்களுக்குமிடையே என்றென்றும் பகைமையும், வெறுப்பும் ஏற்பட்டு விட்டது” என்று தமது சமுதாயத்தினரிடம் கூறியதில் இப்ராஹீமிடத்திலும், அவருடன் இருந்தவர்களிடத்திலும் உங்களுக்கு அழகிய முன்மாதிரி உள்ளது.
அல்குர்ஆன் (60:4)
உறவுகளுடனும், ஊர் மக்களுடனும் நட்பு பாராட்ட வேண்டும் என்பதில் இஸ்லாம் மாற்றுக் கருத்துக் கொள்ளவில்லை என்றாலும், கொள்கை எதிரிகள் என உறுதியாகிவிட்ட பின் குருதி உறவாக இருந்தாலும், பகைமையும், வெறுப்பும்தான் என இப்ராஹீம் நபி கூறிவிட்டார்கள். அன்பு பாராட்டுவது என்பது வேறு, கொள்கை உறுதி என்பது வேறு. கொள்கை எதிரி என்றால் அவர் குடும்பத்தாராக இருந்தாலும் எதிரி, எதிரியே! அவர்களுடன் உலக விவகாரங்களில் உறவாடுவது வேறு என்பதை புரிந்துகொண்டு இப்ராஹீம் நபியின் இந்த வார்த்தைகளை நம் உள்ளத்தில் பதியவைத்துக் கொள்வோமாக! ஏனெனில், பலர் குடும்ப விவகாரங்களில்தான் கொள்கையில் தடுமாறிவிடுவர். எனவேதான், தடுமாற்றம் காண்பவர்களுக்கு இப்ராஹீம் நபியின் இந்தக் கொளகைப் பிடிமானச் செயலை இறைவன் முன்மாதிரியாகக் கூறுகிறான்.
அவர்களிடத்தில் தனது எதிர்ப்பை வெளிப்படுத்திய இப்ராஹீம் நபி, அம்மக்களிடம் இருக்கும் போலி ஒற்றுமையையும் போட்டுடைக்கிறார்கள்.
“அல்லாஹ்வையன்றி நீங்கள் சிலைகளை(க் கடவுளாக) எடுத்துக் கொண்டதெல்லாம், இவ்வுலக வாழ்க்கையில் உங்களுக்கிடையிலான பற்றின் காரணமாகத்தான். பிறகு மறுமை நாளில் உங்களில் சிலர், சிலரை மறுப்பார்கள். மேலும் உங்களில் சிலர், சிலரைச் சபிப்பார்கள். உங்களின் தங்குமிடம் நரகம். உங்களுக்கு உதவியாளர்கள் யாருமில்லை” என்று (இப்ராஹீம்) கூறினார்.
அல்குர்ஆன் (29:25)
நீங்கள் அனைவரும் உலகில் இதன் விஷயத்தில் அனைவரும் பாசமாகவும், பற்றுள்ளவர்களாக ஒன்றுபட்டிருந்தாலும் மறுமையில் சிலர், சிலரைச் சபிப்பீர்கள், நரக நெருப்பி‌ல் இருப்பீர்கள் என்று இப்ராஹீம் நபியவர்கள் எச்சரித்தார்கள்.
இன்றும்கூட சிலர் ஓரிறை முழக்கத்தை முழங்கியவர்களை எதிர்க்க ஓரணியில் ஒன்றிணைந்து கொண்டு ஏகத்துவத்தை எதிரணியாகப் பாவிக்கின்றானர். அதற்கு எதிர்பையும் தெரிவிக்கின்றனர். அதுமட்டுமின்றி போலி ஒற்றுமை கோசத்தையும் அவ்வப்போது எழுப்பிக் கொண்டே இருக்கின்றனர்.
இதுபோன்ற போலி ஒற்றுமைவாதிகளுக்கு இறைவன், உலக விஷயத்தில் ஒன்றிணைவது உண்மையான ஒற்றுமை இல்லை, ஓரிறைக் கொள்கைக்காக ஒன்றிணைவதே உண்மையான ஒற்றுமையாகும் என்பதை விளக்கும் விதமாக இப்ராஹீம் நபியின் இந்த வார்த்தைகள் மூலம் பதிலளித்துவிட்டான்.