கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் கோழஞ்சேரி அருகே தடியூர் என்ற பகுதியைச் சேர்ந்த ஒரு வாலிபர் துபாயில் வேலை பார்த்து வருகிறார்.
இவருக்கும் கேரளா நாரங்கனம் என்ற ஊரைச் சார்ந்த ஒரு இளம்பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இவர்களது திருமணம் அங்குள்ள ஒரு தேவாலயத்தில் ஏப்ரல் 15ஆம் தேதி திங்களன்று நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
திருமணத்தன்று மணமகனின் கார் திருச்சபையின் வாசலில் வந்து நின்றது. மணமகன் இறங்கப் போகின்றார் சபையோர் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். ஆனால் அவர்களுக்கு ஓர் ஆச்சரியம் காத்திருந்தது. அது தான் மணமகன் காரிலிருந்து இறங்குவதற்கு நடத்திய போராட்டம் ஆகும். என்ன போராட்டம் அது?
மணமகன் குடிபோதையில் பிணமகனைப் போல் காட்சியளித்தார். மதுபோதையில் இறங்க முடியாமல் தத்தளித்துக் கொண்டிருந்தார். ஒருவாறாகக் காரிலிருந்து இறங்கி, தத்தித் தத்தி, தள்ளாடித் தள்ளாடி மணமேடை நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தார். போதை ஏறி விட்டால் போதம் மாறிப் போய் விடுமல்லவா? புத்தி தடுமாறி விடுமல்லவா? அதன் எதிரொலியாக மணமகள் வீட்டாருடன் சண்டை போட்டார். பாதிரியாருடனும் சண்டை. இதைப் பார்த்த பெண் வீட்டார் உள்பட அனைவரும் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
இதனை நேரில் பார்த்துக் கொண்டிருந்த மணமகள் அதிர்ச்சியடைந்தார். ஒரு கட்டத்தில் பொறுமையை இழந்த மணமகள் ‘எனக்கு இந்தத் திருமணமே வேண்டாம்’ என்று கூறி அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். இதனால் திருமணம் நின்றது.
இதுதொடர்பாக இரு வீட்டாருக்கும் இடையே சண்டை வளரவும் வலுக்கவும் ஆரம்பித்தது. இது குறித்து உடனே அங்கிருந்த சிலர் போலீசுக்குத் தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து இரு வீட்டாரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது மணமகளின் குடும்பத்தினர், தங்களுக்கு இந்தத் திருமணத்தில் விருப்பமில்லை என்றும், திருமணத்துக்காகப் பெரும் தொகை செலவு செய்ததால் மணமகனின் உறவினர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும். இல்லையெனில் திருமணத்துக்காகச் செலவு செய்த தொகையை நஷ்ட ஈடாகத் தரவேண்டும் என்றனர்.
இதைத் தொடர்ந்து நஷ்ட ஈடாக 6 லட்சம் ரூபாய் கொடுக்க மணமகன் வீட்டார் ஒப்புக்கொண்டனர். மணமகன் போலிஸையும் விட்டு வைக்கவில்லை. போலிஸாரிடமும் ஒரு சண்டை போட்டு விட்டுத் தான் தேவாலயத்தை விட்டுக் கிளம்பினார்.
பத்திரிக்கையில் வந்த இந்தப் பரபரப்பு செய்தி தெரிவிப்பது என்ன?
மணமகள் ஒரு புத்திசாலி என்பதால் திருமணத்திற்கு முந்தியே தெளிவான, புத்திசாலித்தனமான ஒரு முடிவை எடுத்து விட்டாள். அதனால் தன்னை ஒரு குடிகாரனிடமிருந்து காப்பாற்றிக் கொண்டாள். குடும்பமும் சரியான ஒரு முடிவை எடுத்து பெண்ணைக் காப்பாற்றி விட்டார்கள். சம்பந்தப்பட்ட பெண் மது போதையில் இல்லாததால் சரியான ஒரு முடிவை எடுக்க முடிந்தது.
இப்போது தேர்தல் களத்திற்கு வருவோம்.
நாளைய ஆட்சியாளரைத் தேர்வு செய்யும்போது மதுவின் போதையில் இருக்கக் கூடாது. புத்தி சுவாதீனத்துடன் இருக்க வேண்டும் என்பதற்காகத் தமிழகத்தில் வாக்குப்பதிவை முன்னிட்டு ஏப்ரல் 17 காலை 10 மணி முதல் ஏப்ரல் 19 இரவு 12 மணி வரை மற்றும் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு ஜூன் 4ஆம் தேதியும் டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்களை மூட வேண்டும் என்று டாஸ்மாக் மேலாண் இயக்குநர் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுக்கு மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், ஓட்டல்கள் உள்ளிட்ட இடங்களில் செயல்படும் அனைத்து வகையான மதுக்கூடங்களும் மூடப்பட வேண்டும். பீர் மற்றும் மது தயாரிப்பு நிறுவனங்கள் மது விற்பனை மற்றும் மாநிலத்தில் மது பாட்டில்களை வாகனத்தில் கொண்டு செல்வது என அனைத்தையும் தடை செய்வதற்கான உரிய உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டும் என்பன போன்ற பல்வேறு கட்டுப்பாடுகள் இந்த நாடாளுமன்றத் தேர்தலையொட்டி விதிக்கப்பட்டுள்ளன.
ஒரு மனிதன் தேர்தல் காலத்தில் மட்டும் சரியான முடிவெடுக்க வேண்டிய நிலையில் இல்லை. திருமண நேரத்திலும் முடிவெடுக்கும் நிலையில் உள்ளான்.
தினந்தோறும் வாழ்க்கை சார்ந்து வெவ்வேறு விஷயங்களில் முடிவுகளை எடுக்கும் நிலையில் உள்ளான்.
அவன் சுவாதீனமாக, சுதந்திரமாக, சுயமாக, சுத்தமாக முடிவெடுக்க 60 மணி நேரத்திற்கு மட்டும் மதுவைத் தடை செய்தால் போதாது. ஆண்டு முழுக்கத் தடை செய்தாலும் போதாது. ஆயுள் முழுக்கத் தடை செய்ய வேண்டும். மத்திய, மாநில அரசுகள் இதைக் கவனத்தில் கொள்ளுமா?
இறைநம்பிக்கை கொண்டோரே! மது, சூதாட்டம், சிலைகள், குறி கேட்பதற்கான அம்புகள் ஆகியவை ஷைத்தானின் அறுவெறுக்கத்தக்க செயல்களாகும். எனவே அவற்றை விட்டு விலகிக் கொள்ளுங்கள்! நீங்கள் வெற்றியடைவீர்கள்.
அல்குர்ஆன் 5:90
