திருமறைக் குர்ஆனை அலசி ஆராய்ந்து, மக்களுக்கு மார்க்கத்தை அறிவுரைக்கும் ஆலிம்கள், முதலில் தங்களின் வாழ்வை வான்மறை அடிப்படையில் வடிவமைத்துக் கொள்ளவேண்டும் என்பதைச் சென்ற இதழில் கண்டோம். அதனைத் தொடர்ந்து, அந்த ஆலிம்களால் நிகழ்த்தப்படும் மார்க்க உரைகள் மனிதர்கள் வாழ்வில் எத்தகைய திருத்தத்தைத் தரவேண்டும் என்பதை இத்தொடரில் பார்ப்போம்.
எழுத்துக்கள் மூலம் ஏற்ப்படுத்திட முடியாத எழுச்சியைக் கூட பேச்சின் மூலம் பாய்ச்சிட முடியும். அரியனையைப் பிடிக்க அரசியல் பேசுபவர்களும், மதபோதகர்களும், தனிச் சித்தாந்தவாதிகளும் தன் சீடனைச் செதுக்கிட எடுக்கும் செழுமை ஆயுதம் பேச்சு தான். பேச்சுக்கலை மூலம் ஒருவனை வழிநடத்திடவும் வழிகெடுத்திடவும் முடியும்.
இவைகளைக் கருத்தில் கொண்டு தான் ‘பேச்சில் சூனியம் உள்ளது’ என்றார்கள் நபிகளார். (பார்க்க: புகாரி 5146)
மார்க்க உரைகள் நிகழ்த்தப்படுவதன் மூலம் மக்களின் இறைநம்பிக்கையும் இறைபயமும் அதிகரிக்கப்படுவதை வலியுறுத்துகின்றது இஸ்லாம்.
தமது மார்க்கத்தை விளையாட்டாகவும் வீணாகவும் எடுத்துக் கொண்டோரை விட்டு விடுவீராக! இவ்வுலக வாழ்வு அவர்களை ஏமாற்றி விட்டது. தான் செய்தவற்றுக்காக எவரும் அழிவுக்குள்ளாக்கப்படாமலிருக்க இதன் மூலம் அறிவுரை கூறுவீராக! அவனுக்கு அல்லாஹ்வையன்றி பொறுப்பாளனோ, பரிந்துரையாளனோ இல்லை. அவன் அனைத்தையும் ஈடாகக் கொடுத்தாலும் அது அவனிடமிருந்து ஏற்கப்பட மாட்டாது. இவர்களே தாங்கள் செய்தவற்றின் காரணமாக அழிவுக்குள்ளாக்கப்பட்டவர்கள். அவர்கள் மறுத்துக் கொண்டிருந்ததால் அவர்களுக்குக் கொதிநீர் பானமும், துன்புறுத்தும் வேதனையும் உள்ளது.
அல் குர்ஆன் – 6:70
அறிவுரை கூறுவீராக! இறை நம்பிக்கையாளர்களுக்கு அறிவுரை பயனளிக்கும்.
அல் குர்ஆன் – 51:55
(நபியே!) அறிவுரை கூறுவீராக! உமது இறைவனின் அருளால் நீர் குறி சொல்பவர் அல்ல; பைத்தியக்காரரும் அல்ல!
அல் குர்ஆன் – 52:29
அறிவுரை பயனளிக்குமாயின் நீர் அறிவுரை கூறுவீராக!
அல் குர்ஆன் – 87:9
(நபியே!) அறிவுரை கூறுவீராக! நீர் அறிவுரை கூறுபவர்தான்.
அல் குர்ஆன் – 88:21
இப்படிப் பல இடங்ககளில் அறிவுரை கூறுமாறு தன் தூதருக்கு வல்லோன் கட்டளையிடுகின்றான்.
அந்தக் கட்டளையின் வெளிப்பாடு தான் ஜுமுஆ, பெருநாள் உள்ளிட்ட பல கட்டங்களில் அமல்களோடு குத்பாவையும் (உரை நிகழ்த்தப்படுவதையும்) நபியவர்கள் சேர்த்து, அதையும் வணக்கமாக்கியுள்ளார்கள்.
உபதேசங்களை உதாசீனப்படுத்தும் சமூகம்
உலகின் பல்வேறு விஷயங்களுக்கு நித்தம் நித்தம் நேரம் ஒதுக்கும் சமூகம் மார்க்க சொற்பொழிவுகளைச் செவிமடுக்க நேரம் ஒதுக்க மறுக்கிறது. அவைகளை ஓரங்கட்டிவிடுகிறது. ஜுமுஆ நாளில் கூட பயான்களில் பங்குபெறாமல் தொழுகையில் சேருபவர்களே அதிகம். வருடத்திற்கு இருமுறையே ஆற்றப்படுகிற பெருநாள் உரையிலும் கூட தொழுகையை முடித்தவுடன் சபை கலையும் கணிசமான கூட்டம் இன்றைக்கும் இருக்கின்றது.
எனினும் இந்நிலைக்கு நேர்முரணாக நபித்தோழர்களும் தோழியர்களும் இருந்துள்ளனர். மார்க்கச் செய்திகளை செவிசாய்த்து செய்முறைப்படுத்திட அலாதி ஆர்வம் காட்டியுள்ளனர்.
அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) கூறுகிறார்,
இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் ஒரு பெண்மணி வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! (பெண்கள்) உங்கள் உரைகளை(க் கேட்க முடியாதவாறு) ஆண்களே தட்டிச் சென்றுவிடுகின்றனர். எனவே, நாங்கள் தங்களிடம் வந்து, அல்லாஹ் தங்களுக்குக் கற்றுக் கொடுத்தவற்றிலிருந்து எங்களுக்கு நீங்கள் போதித்திட எங்களுக்கென ஒரு நாளை நீங்களே நிர்ணயித்துவிடுங்கள்’ என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள், ‘இன்ன நாளில் இன்ன இடத்தில் நீங்கள் ஒன்று கூடுங்கள்’ என்றார்கள். அவ்வாறே (அந்த நாளில் அந்த இடத்தில்) பெண்கள் ஒன்று திரண்டனர். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அப்பெண்களிடம் சென்று, அல்லாஹ் தமக்குக் கற்றுக் கொடுத்தவற்றிலிருந்து அவர்களுக்குப் போதித்தார்கள். பிறகு, ‘உங்களில், தனக்கு (மரணம் வருவதற்கு) முன்பாக, தன் குழந்தைகளில் மூன்று பேரை இழந்து விடுகிற பெண்ணுக்கு அக்குழந்தைகள் நரகத்திலிருந்து காக்கும் திரையாக மாறிவிடுவார்கள்’ என்றார்கள். அப்போது அப்பெண்களில் ஒருவர், ‘இறைத்தூதர் அவர்களே! இரண்டு குழந்தைகளை இழந்துவிட்டாலுமா?’ என்று கேட்டார். இதை அந்தப் பெண் இரண்டு முறை திரும்பத் திரும்பக் கேட்க, ‘ஆம்; இரண்டு குழந்தைகளை இழந்துவிட்டாலும் தான்’ என்று நபி(ஸல்) அவர்கள் மும்முறை பதிலளித்தார்கள்.
ஸஹீஹ் புகாரி : 7310
ஆண்களைப் போன்று மது குடிப்போம், புகை பிடிப்போம், உடையணிவோம் என்று போட்டிப்போடும் இக்கால பெண்களுக்கு மத்தியில் ஆண்கள் குர்ஆன் ஹதீஸின் போதனைகளைப் பெற்றுச் செல்வதைப் போன்று நாங்களும் கற்றுச் செல்லவேண்டும் என போட்டியிட்டவர்கள் நபித்தோழியர்கள்.
இன்றைக்கு சொற்பொழிவுகள் செல்லாக் காசாகி விட்டது. சில மணி நிமிடங்கள் கூட உரைகளை செவிசாய்க்க மக்கள் மெனக்கெடுவதில்லை.
இறைவாக்குகளை முழங்கும் உபதேசங்களைக் கேட்கவே இஷ்டமில்லையெனில் நம் மனம் எப்படி மாற்றம் பெறும்?
உரைகள் உறைக்கட்டும்!
மக்களில் சிலர், இவர் நன்கு பேசினார், இவர் சுமாராகப் பேசினார், இவர் தெரிந்த நபிமொழிகளையே கூறினார், இவரது தொனி சரியில்லை, பாணி பரவாயில்லை என்று பேச்சாளர்களின் பேச்சுக்களை விவரிக்கவும், விமர்சிக்கவுமே செய்கின்றனர். நன்கு பேசினாலும், பேசாவிட்டாலும், அறிந்த தகவல்களை ஆயிரம் முறை கூறினாலும், முழங்கப்படுபவைகள் மொத்தமும் வேதச்செய்திகள் தாமே! அந்த உபதேசங்கள் போதிக்கப்படுதன் நோக்கம் என்ன? அவை மனிதர்களின் உள்ளத்தைத் துளைத்து, தகவமைப்பைத் தரவேண்டும் என்பதுதானே! இவைகள் தெரிந்த தகவல்கள் என்று முகம் சுளிக்கும் நாம், அவை என்றாவது நம்மை அகம் வலிக்கச் செய்ததா என்று சிந்தித்துண்டா??!!
பேசப்படும் கருத்துக்களில் கவர்ச்சியைத் தேடுகின்றோமே ஒழிய உள்ளத்தில் உணர்ச்சியை எதிர்ப்பார்பதில்லை.
குகையில் சிக்கிக்கொண்ட மூவரின் வரலாற்றை நபிகளார் கூறுகையில்;
மற்றொருவர் இப்படிப் பிரார்த்தித்தார்: ‘இறைவா! என் தந்தையின் சகோதரர் மகள் ஒருத்தி எனக்கு இருந்தாள். அவள் மக்களிலேயே எனக்கு அதிகப் பிரியமானவளாக இருந்தாள். நான் அவளை எனக்கு இணங்குமாறு அழைத்தேன். நான் அவளிடம் நூறு தீனார்களைக் கொண்டு வந்தாலே தவிர எனக்கு இணங்க முடியாதென்று மறுத்துவிட்டாள். நான் அதனைத் தேடி அடைந்தபின் அவளிடம் எடுத்துக்கொண்டு சென்று அதைக் கொடுத்தேன். அவள் தன்னை என் வசம் ஒப்படைத்தாள். நான் அவளிடம் உடலுறவிற்காக அமர்ந்த பொழுது அவள், “அல்லாஹ்வுக்கு அஞ்சு. முத்திரையை அதற்குரிய (சட்டப்பூர்வமான) உரிமையின்றி (திருமணம் முடிக்காமல்) திறக்காதே” என்று சொன்னாள். உடனே நான் (உடலுறவு கொள்ளாமல்) எழுந்து விட்டேன். நூறு தீனார்களை (அவளிடமே)விட்டுவிட்டேன். நான் இதை உன் அச்சத்தின் காரணத்தால் செய்ததாக நீ கருதினால் (மீதிமிருக்கும் அடைப்பையும்) எங்களைவிட்டு நீக்குவாயாக!” எனவே, அல்லாஹ் அவர்களைவிட்டு (முழுமையாக) நீக்கிவிட்டான். அவர்களும் அதிலிருந்து வெளியேறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர்(ரலி)
நூல்: புகாரி 3465
“இறைவனுக்கு அஞ்சிக்கொள்!” எனும் ரத்தினச் சுருக்கமான உரை, எந்த நிலையில் ஓர் ஆணும் பெண்ணும் பிணைந்து பிரியமுடியாதோ அத்தருணத்திலேயே இறைபயத்தை உண்டுபண்ணி அவரை விலகச்செய்துவிட்டது.
அல்லாஹ் நம்மை அவதானிக்கிறான் என்று அம்மனிதருக்கு தெரிந்திருந்தாலும் அப்பெண் முழங்கிய வார்த்தை அவரின் உள்ளத்தைத் திடீரென்று திசைமாற்றிவிட்டது. பெருங்குற்றத்திலிருந்து அவரைக் காப்பாற்றிக் கரை சேர்த்துவிட்டது.
நமக்கும் பல தருணங்களில் வான்மறையின் வசனங்கள் வழிமொழியப்பட்டிருக்கும். வாசித்துக் காட்டப்பட்டிருக்கும். அந்த வீச்சுரைகள் நம் வாழ்வில் என்ன மாற்றங்களை ஏற்படுத்தியது? எவ்வளவோ அறிவுரைகள், போதனைகள் நமக்குச் சொல்லப்பட்டே வருகின்றன. அவைகள் அனைத்தும் பயனற்ற பேச்சாகவே போய்விடுகின்றது.
இத்தகையோர் பற்றி அல்லாஹ்வின் பார்வையைப் பாருங்கள்!
சான்றுகளும் எச்சரிக்கைகளும் இறைநம்பிக்கை கொள்ளாத கூட்டத்திற்குப் பயனளிக்காது.
அல்குர்ஆன் 10:101
அறிவுரை கூறுவீராக! இறை நம்பிக்கையாளர்களுக்கு அறிவுரை பயனளிக்கும்.
அல்குர்ஆன் 51:55
அறிவுரைகள் அனைத்தும் இறை நம்பிக்கையாளர்களுக்கே பயனளிக்கும், இறைவனை நம்பாதவர்களுக்குத் தான் போதனைகள் பயனளிக்காது என்று ஆணித்தரமாக அறிவிக்கின்றான் இறைவன்.
இவ்வளவு காலங்களாக இம்மறையின் உரை நமக்கு உறைக்கவில்லையானால் நாம் இறைவிசுவாசியா இல்லையா என்பதைப் பரிசீலிக்கவேண்டும்.
உணர்ச்சிமிகு உரையால் உருகிய உள்ளம்
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஏதேனும் முக்கிய விஷயம் குறித்து எச்சரிக்கை செய்து) உரை நிகழ்த்தும்போது, அவர்களின் கண்கள் சிவந்துவிடும்; குரல் உயர்ந்துவிடும்; கோபம் மிகுந்துவிடும். எந்த அளவிற்கென்றால், எதிரிப் படையினர் தாக்குதல் தொடுக்கப் போவது குறித்து “எதிரிகள் காலையில் உங்கள்மீது தாக்குதல் தொடுக்கப்போகின்றனர்; மாலையில் உங்கள்மீது தாக்குதல் தொடுக்கப்போகின்றனர்” என்று கூறி அவர்கள் எச்சரிக்கை விடுப்பவரைப் போன்றிருப்பார்கள். (ஹதீஸின் சுருக்கம்)
நூல்: ஸஹீஹ் முஸ்லிம் 1573
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ஓர் உரை நிகழ்த்தினார்கள். அதைப் போன்ற ஓர் உரையை நான் (என் வாழ்நாளில்) ஒருபோதும் கேட்டதில்லை. (அதில்) அவர்கள், ‘நான் அறிகின்றவற்றை நீங்கள் அறிந்தால், நீங்கள் குறைவாகச் சிரிப்பீர்கள்; அதிகமாக அழுவீர்கள்’ என்று குறிப்பிட்டார்கள்.
அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்களின் தோழர்கள் தம் முகங்களை மூடிக்கொண்டு சப்தமிட்டு அழுதார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி), நூல்: புகாரி 4621
அன்னவர்களின் உருக்கமான உபதேசத்தின் விளைவால் நபித்தோழர்களின் கண்கள் கண்ணீரைச் சொரிந்துள்ளன.
தூதரின் அறிவுரைகள்! தானமானது அணிகலன்கள்!
பெருநாளன்று நான் நபி (ஸல்) அவர்களைக் கவனித்தேன். அவர்கள் உரை நிகழ்த்துவதற்கு முன்னால் தொழுகை நடத்தினார்கள். பிறகு தம் உரை பெண்களின் செவிகளைச் சென்றடையவில்லை என அவர்கள் கருதியதால் பிலால்(ரலி) அவர்களுடன் பெண்கள் பகுதிக்கு வந்து அவர்களுக்கு உபதேசம் செய்துவிட்டு, தர்மம் செய்யுமாறும் கட்டளையிட்டார்கள். பிலால்(ரலி), ஓர் ஆடையை ஏந்தியவராக நின்றிருந்தார்கள். அப்போது பெண்கள் அதில் (தம் அணிகலன்களைப்) போடலானார்கள்.
ஹதீஸின் அறிவிப்பாளர்களில் ஒருவரான அய்யூப் என்பவர் இதை அறிவிக்கும்போது தம் காதையும் கழுத்தையும் சைகையால் காட்டினார்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: புகாரி 1449
எதற்கும் துணிந்த தோழர்கள்
இஸ்லாமிய சரித்திரத்தின் முதல் யுத்தம் பத்ருக் களமாகும். எதிரிகளின் பலத்தோடும் வளத்தோடும் நம்மை ஒப்பிடுகையில் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் இருந்தன. இப்போரில் களம் காணுவது தொடர்பாக நீண்ட ஆலோசனைக் கூட்டம் அல்லாஹ்வின் தூதரால் அமைக்கப்பட்டது. அக்கூட்டத்தில் நபியின் ஆலோசனைக்கு அன்சாரித் தோழர்கள் எப்படி இணங்கி, இசைந்து போனார்கள் என்பதை வரலாற்றுப் பக்கங்கள் தெரியப்படுத்துகின்றன.
அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்,
அபூசுஃப்யான் (தலைமையில் வணிகக் குழு) வரும் தகவல் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு எட்டியபோது (தம் தோழர்களிடம்) ஆலோசனை கேட்டார்கள்.
அபூபக்ர் (ரலி) அவர்கள் (தமது கருத்தைச்) சொன்னபோது, அதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கண்டுகொள்ளவில்லை. பின்னர் உமர் (ரலி) அவர்கள் (தமது கருத்தைச்) சொன்னபோதும் கண்டுகொள்ளவில்லை.
அப்போது (அன்சாரிகளில் கஸ்ரஜ் கூட்டத்தாரின்) தலைவர் சஅத் பின் உபாதா (ரலி) அவர்கள் எழுந்து, “எங்(கள் அன்சாரிகளின் கருத்து)களையா நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள், அல்லாஹ்வின் தூதரே? என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீதாணையாக! எங்கள் குதிரைகளைக் கடலுக்குள் செலுத்துமாறு நீங்கள் உத்தரவிட்டாலும் நிச்சயமாக நாங்கள் செலுத்துவோம். எங்கள் குதிரைகளின் பிடரிகளில் அடித்து (தொலைவில் உள்ள) “பர்குல் ஃகிமாத்” நோக்கி (விரட்டிச்) செல்லுமாறு நீங்கள் உத்தரவிட்டாலும் நாங்கள் அவ்வாறே செய்வோம்’’ என்று கூறினார்கள்.
நூல்: முஸ்லிம் 3646
நாமும் கூட பல எழுச்சி உரைகளைச் செவிமடுக்கும் பொழுது, அவைகளை செயல்படுத்திடவே எண்ணுகின்றோம். நாட்கள் நகர்ந்ததும் அந்தச் சிந்தனையும் தொய்ந்து போய் சிதைந்து விடுகின்றது.
பின்வரும் வழிமுறைகளை நமது வாழ்வோடு இணைத்து விட்டால் நமக்கு ஆற்றப்படும் உரைகள் நமக்கு மாற்றத்தை ஏற்படுத்தலாம்.
1. என்ன உபதேசங்கள் நமக்குப் போதிக்கப்படுகின்றாதோ அவை மாற்றத்தைத் தந்திட வேண்டும் என்று முதலில் இறைவனிடம் பிரார்த்திக்க வேண்டும்.
2. மொழியப்படும் கருத்துக்கள் யாருக்கோ என்றில்லாமல் நமக்கானது என்று உணரவேண்டும்.
3. திடீரென்று திருந்தினால் நம் சுற்றுவட்டாரம் என்ன நினைக்கும் என்ற சிந்தனைக்கு இடமளிக்கக் கூடாது.
4. மற்றவர்களால் முடிவது நம்மால் ஏன் முடியாது என்ற வெறியை நம்மில் விதைக்க வேண்டும்.
5. கேட்கும் செய்திகளைப் பிறருக்கும் பறைசாற்ற வேண்டும். அவ்வாறு செய்வதால், சொல்வதைச் செயல்படுத்தவேண்டும் என்ற குற்ற உணர்ச்சி நம்மை உறங்க விடாது.
இதுபோன்ற அம்சங்களைக் கையாண்டால் கட்டாயம் நம் மனது மாற்றம் காணும் இன்ஷா அல்லாஹ்!
நல்ல மாட்டிற்கு ஒரு சூடு, நல்ல மனிதனுக்கு ஒரு சொல் என்பார்கள். ஆக, மனிதப் பிறவியாகப் பிரவேசிக்கும் நமக்கு ஒற்றைச் சொல்லே நம்மை ஒத்திசைவு செய்திட வேண்டும்.
தொடரும் இன்ஷா அல்லாஹ்!