மரணத்தின் பிடியில் மனிதன்

மனிதர்களின் சிந்தனைகளிலும் கருத்துகளிலும் நிறைய கருத்து வேறுபாடுகள் அவர்கள் மத்தியில் காணப்படுகின்றன. அரிதாக ஓரிரு விஷயங்களில் தான் கருத்து வேறுபாடு இல்லாமல் இருக்கின்றது. அப்படியான ஒன்று தான், மரணம். உலகில் பிறந்த உயிர்கள் அனைத்தும் ஒருநாள் இறந்தே தீரும் என்பதை அனைவரும் ஏற்றுக் கொள்கிறார்கள். இத்தகைய மரணம் தொடர்பாக இஸ்லாமிய மார்க்கம் அச்சமூட்டி எச்சரிக்கை செய்திருக்கிறது. அவற்றுள் சிலவற்றை இக்கட்டுரையில் காண்போம்.

விதிக்கப்பட்ட மரணம்

பிறப்புக்கும் இறப்புக்கும் இடையே தான் நமது வாழ்வு இருக்கிறது. மனித வாழ்வுக்குப் பிறப்பு எனும் நிகழ்வை முதலாக்கிய இறைவன், இறப்பு எனும் நிகழ்வை முடிவாக்கி உள்ளான். இவ்வகையில் மரணம் என்பது விதிக்கப்பட்ட விஷயமாக இருக்கிறது. இதோ இறைவன் கூறுவதைப் பாருங்கள்.
உங்களில் அழகிய செயலைச் செய்பவர் யார் என உங்களைச் சோதிப்பதற்காகவே மரணத்தையும், வாழ்வையும் (பிறப்பையும்) படைத்துள்ளான். அவன் மிகைத்தவன்; மன்னிப்புமிக்கவன்.
(அல்குர்ஆன் 67:2)
மனிதனைக் களிமண்ணின் மூலப் பொருளிலிருந்து படைத்தோம். பின்னர் அவனை ஒரு பாதுகாப்புமிக்க இடத்தில் விந்துத் துளியாக ஆக்கி வைத்தோம். பின்னர் அந்த விந்துத்துளியைச் சூல்கொண்ட கருமுட்டை யாக்கினோம். அதன்பின் அந்தச் சூல்கொண்ட கருமுட்டையைச் சதைத்துண்டாக ஆக்கினோம். பிறகு அச்சதைத்துண்டை எலும்புகளாக உருவாக்கினோம். அவ்வெலும்புகளுக்கு இறைச்சியைப் போர்த்தினோம். பின்னர் அதை வேறொரு படைப்பாகத் தோற்றுவித்தோம். படைப்பாளர்களில் சிறந்தவனான அல்லாஹ் பாக்கியமிக்கவன். இதன் பின்னர் நீங்கள் மரணிக்கக் கூடியவர்கள் தான். பிறகு நீங்கள் மறுமை நாளில் (உயிர்ப்பித்து) எழுப்பப்படுவீர்கள்
(அல்குர்ஆன் 23:12-16)
இவ்வசனத்தில், மனிதப் பிறப்பின் படிநிலைகளை விளக்கும்போது அவனது வாழ்வின் முடிவு நிலையாக மரணத்தை இறைவன் குறிப்பிட்டிருப்பது கவனிக்கத்தக்க விஷயமாகும். மரணம் தொடர்பாக இறைவன் விதி வகுத்திருப்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் தெளிவுபடுத்தி இருக்கிறார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: என்னிடம் அல்லாஹ், “நீர் (பிறருக்கு) ஈந்திடுக. நான் உமக்கு ஈவேன்” என்று சொன்னான். மேலும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் வலக்கரம் நிரம்பியுள்ளது. அது இரவிலும் பகலிலும் வாரி வழங்கிக் கொண்டேயிருக்கிறது. எதுவும் அதைக் குறைத்துவிடவில்லை. வானத்தையும் பூமியையும் அவன் படைத்தது முதல் வழங்கியது எதுவும் அவனது வலக்கரத்திலுள்ள (செல்வத்)தை குறைத்துவிடவில்லை பார்த்தீர்களா? (வானங்களையும் பூமியையும் படைப்பதற்கு முன்னர்) அவனது அரியாசனம் நீரின் மீ(து அமைந்)திருந்தது. அவனது மற்றொரு கரத்தில் மரணம் (உள்ளிட்ட தலைவிதியின் தராசு) உள்ளது. அவனே உயர்த்துகிறான்; தாழ்த்துகிறான்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் (1816)

மரணத்தைச் சுவைக்கும் உயிர்கள்

இறைவன் மரணத்தை விதியாக்கி விட்டான். அதன்படி அனைத்து உயிர்களும் ஒருநாள் மரணத்தைச் சந்தித்தே தீரும்; சுவைத்தே தீரும். இதோ இறைமறை கூறும் செய்தியைப் பாருங்கள்.
ஒவ்வொரு உயிரும் மரணத்தைச் சுவைக்கக் கூடியதே! (உங்களை) பரிசோதித்துப் பார்ப்பதற்காக நன்மை, தீமை மூலம் உங்களைச் சோதிக்கிறோம். நீங்கள் நம்மிடமே திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்.
(அல்குர்ஆன் 21:35)
இவ்வசனத்தில் மரணம் தொடர்பாகக் கூறப்பட்டிருக்கும் கருத்து அல்குர்ஆனின் 3:185, 29:57 ஆகிய வசனங்களிலும் அப்படியே இடம்பெற்றுள்ளது.

மகான்களும் மரணிப்பவர்களே!

அனைத்து விஷயத்திலும் இறைவனது அன்பையும் அருளையும் பெறும் வகையில் வாழ்கிற மகான்கள், நல்லடியார்கள், நபிமார்கள் போன்றோருக்கு மரணம் நிகழாது என்று எவரும் எண்ணிவிடக் கூடாது. இதை நபிகள் நாயகம் தொடர்பான இறைமறை வசனங்கள் வாயிலாக விளங்கலாம்.
(நபியே!) நீர் மரணிக்கக் கூடியவர்தான். அவர்களும் மரணிக்கக் கூடியவர்களே!
(அல்குர்ஆன் 39:30)
முஹம்மத் இறைத்தூதர் தவிர வேறில்லை. அவருக்கு முன்னர் பல தூதர்கள் சென்று விட்டனர். அவர் மரணித்துவிட்டால் அல்லது கொல்லப்பட்டு விட்டால் நீங்கள் பழைய பாதைக்கே திரும்பிச் சென்று விடுவீர்களா? யார் பழைய பாதைக்குத் திரும்பிச் செல்கிறாரோ அவர் அல்லாஹ்வுக்கு எந்தத் தீங்கும் செய்யவே முடியாது. நன்றி செலுத்துவோருக்கு அல்லாஹ் கூலி வழங்குவான்.
(அல்குர்ஆன் 3:144)
இறைத்தூதர்களில் இறுதியானவராகத் திகழும் முஹம்மது நபி (ஸல்) அவர்களாக இருந்தாலும் ஒரு நாள் மரணித்து விடுவார் என்பதை மேற்காணும் வசனம் வாயிலாக இறைவன் முன்கூட்டியே கூறிவிட்டான். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்த நேரத்தில் நபித்தோழர்களிடம் கருத்து வேறுபாடு எழுந்த போது நபிகளார் மரணித்து விட்டதைத் தெளிவுபடுத்தவும் உறுதிப்படுத்தவும் அபூபக்கர் (ரலி) அவர்கள் இந்த வசனங்களை மக்கள் மன்றத்தில் எடுத்துரைத்தார்கள் என்பதை நபிமொழிகளில் காண முடிகிறது.

தூக்கம் ஒரு தற்காலிக மரணம்

மரணத்தைப் பற்றி நாம் புரிந்து கொள்வதற்குரிய முன்னோட்டமாக தூக்கத்தை இறைவன் அமைத்திருக்கிறான். மனிதன் தூங்கும் போது அவனது உயிரைக் கைப்பற்றுவதாக ஏக இறைவன் கூறுகிறான்.
அவனே உங்களை இரவில் கைப்பற்றுகிறான். பகலில் நீங்கள் செய்வதையும் அவன் அறிகிறான். குறிப்பிட்ட தவணை நிறைவு செய்யப்படுவதற்காக அதில் உங்களை எழுப்புகிறான். பின்னர், நீங்கள் அவனிடமே திரும்பிச் செல்லவேண்டியுள்ளது. பிறகு, நீங்கள் செய்து கொண்டிருந்ததை உங்களுக்கு அறிவிப்பான்.
(அல்குர்ஆன் 6:60)
உயிர்கள் மரணிக்கும்போதும், மரணிக்காமல் உறக்கத்தில் இருக்கும்போதும் அவற்றை அல்லாஹ்வே கைப்பற்றுகிறான். யாருக்கு மரணத்தை விதியாக்கி விட்டானோ அவற்றை அவன் பிடித்து வைத்துக் கொள்கிறான். மற்றவற்றை நிர்ணயிக்கப்பட்ட தவணைவரை அனுப்பி விடுகிறான். சிந்திக்கும் சமுதாயத்திற்கு இதில் சான்றுகள் உள்ளன.
(அல்குர்ஆன் 39:42)
மனிதன் தூக்கத்தில் இருக்கும் போது அவனது உயிர் பறிக்கப்படுகிறது. மரணம் நிச்சயிக்கப்பட்டவரின் உயிரை இறைவன் தம் கைவசம் வைத்துக் கொள்கிறான். மற்ற உயிர்களை திருப்பி அனுப்பி விடுகிறான். இவ்வகையில் தூக்கம் என்பது ஒரு தற்காலிக மரணமாகத் திகழ்கிறது. திருமறை கூறும் இச்செய்தியை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் ஒரு நிகழ்வில் நினைவூட்டி இருக்கிறார்கள்.
நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் ஓர் இரவில் (பயணம்) சென்று கொண்டிருந்தோம். அப்போது மக்களில் சிலர், “அல்லாஹ்வின் தூதரே! (பயணத்தைச் சற்று நிறுத்தி) எங்களை இளைப்பாறச் செய்யலாமே!” என்று கேட்டனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், நீங்கள் (ஃபஜ்ர்) தொழாமல் உறங்கி விடுவீர்களோ என நான் அஞ்சுகிறேன்” என்றார்கள். அப்போது பிலால் (ரலி) அவர்கள், “உங்களை நான் விழித்தெழச் செய்கிறேன்” என்று கூறினார்கள். எனவே அனைவரும் (பயனத்தை நிறுத்திப்) படுத்துக் கொண்டனர். பிலால் (ரலி) அவர்கள் தமது முதுகைத் தமது வாகனத்தின் மீது சாய்த்து கொண்டிருந்தபோது தம்மையும் மீறிக் கண்ணயர்ந்து உறங்கி விட்டார்கள். சூரிய வட்டத்தின் ஒரு பகுதி உதித்துவிட்ட நிலையில் நபி (ஸல்) அவர்கள் (முதன் முதலில்) உறக்கத்திலிருந்து விழித்தார்கள். உடனே, “பிலால்! நீங்கள் சொன்னது என்ன ஆயிற்று?” என்று கேட்டார்கள். “இது போன்று உறக்கம் எனக்கு எப்போதும் ஏற்பட்டதில்லை” என்று பிலால் (ரலி) அவர்கள் கூறினார்கள்.
அப்போது நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ், தான் நாடும்போது உங்களின் உயிர்களை கைப்பற்றிக் கொள்கிறான்; தான் நாடும்போது உங்களிடம் திருப்பித் தருகின்றான்” என்று கூறிவிட்டு, “பிலால்! எழுந்து, பாங்கு சொல்லி தொழுகைக்கு மக்களை அழைப்பீராக!” என்று கூறினார்கள். பின்னர் அங்கசுத்தி (உளூ) செய்து, சூரியன் உயர்ந்து தெளிவாகத் தென்பட்டபோது (ஃபஜ்ர்) தொழுதார்கள்.
அறிவிப்பவர்: அபூகதாதா (ரலி)
நூல்கள்: புகாரி (595), நஸாயீ (837), அபூதாவுத்(372)
இச்செய்திகளில் இருந்து தகுந்த பாடத்தை நாம் பெற வேண்டும். இவ்வுலகில் நாம் நிரந்தரமாக இருப்போம்; நமக்கு மரணமே வராது என்று எந்தவொரு மனிதனும் எண்ணி விடக் கூடாது. மரணம் எப்போது வேண்டுமானாலும் ஏற்படலாம் என்பதை நாள்தோறும் நினைவூட்டும் வகையில் தூக்கம் இருக்கிறது.

கருவறையில் நிர்ணயிக்கப்படும் மரணம்

தாயின் கருவறையில் மனிதன் இருக்கும் போது அவனது வாழ்வின் முக்கிய விஷயங்கள் தீர்மானிக்கப்படுகின்றன. அவற்றுள் ஒன்றாக, அவனது ஆயுளும் முடிவு செய்யப்படுகிறது. அதாவது இங்கு எத்தனை ஆண்டுகள் வாழ்வான்; எப்போது மரணிப்பான் என்பது நிர்ணயிக்கப்படுகிறது. இதைப் பின்வரும் நபிமொழி விளக்குகிறது.
உண்மையே பேசுபவரும், உண்மையே அறிவிக்கப்பட்டவருமான இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நீங்கள் உங்கள் தாயின் வயிற்றில் நாற்பது நாள்கள் (கருவாக) சேமிக்கப்படுகிறீர்கள். பிறகு அவ்வாறே அந்தக் கரு (அட்டை போன்று கருப்பையின் சுவரைப் பிடித்துத் தொங்கும்) ஒரு கருக்கட்டியாக மாறி விடுகிறது. பிறகு, அவ்வாறே ஒரு சதைப்பிண்டமாக மாறி விடுகிறது. பிறகு, அல்லாஹ் அதனிடம் ஒரு வானவரை நான்கு கட்டளைகளைத் தந்து அனுப்புகிறான். (அதன்படி) அதன் செயல்பாடு (எப்படியிருக்கும் என்று)ம் அதன் ஆயுளும், அதன் உணவும் (பிற வாழ்வாதாரங்களும் எவ்வளவு என்றும்) எழுதப்படுகின்றன. அக்குழந்தை துர்பாக்கியசாலியா நற்பாக்கியசாலியா என்பதும் எழுதப்படுகிறது. பிறகு அதனுள் உயிர் ஊதப்படுகிறது.
இதனால் தான், மனிதன் நரகவாசிகளின் செயலைச் செய்த வண்ணமிருப்பான். இறுதியில், அவனுக்கும் நரகத்திற்குமிடையே ஒரு முழம் மட்டும் தான் இடைவெளி இருக்கும். அப்போது (எதிர்பாராத விதமாக) விதி அவனை முந்திக் கொள்ள, அவன் சொர்க்கவாசிகளின் செயலைச் செய்து சொர்க்கத்தில் நுழைந்து விடுவான். ஒரு மனிதன் சொர்க்கவாசிகளின் செயலைச் செய்த வண்ணமிருப்பான். இறுதியில் அவனுக்கும் சொர்க்கத்திற்குமிடையே ஒரு முழம் தான் இருக்கும். அப்போது, (எதிர்பாராத விதமாக) விதி அவனை முந்திக் கொள்ள அவன் நரகவாசிகளின் செயலைச் செய்து நரகத்தில் புகுந்து விடுவான்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி)
நூல்: புகாரில் (3332)
எவருக்கும் விதிவிலக்கு அளிக்காமல் மரணத்தைப் பொதுவாக்கிய இறைவன் அனைவருக்கும் ஒரே மாதிரியான ஆயுளை அளிக்கவில்லை. ஆகவே தான் சிலர் குழந்தைப் பருவத்தில் இறந்து விடுகிறார்கள்; சிலர் இளமைப் பருவத்தில் இறந்து விடுகிறார்கள்; சிலர் முதுமையில் இறந்து விடுகிறார்கள். இவ்வாறாக மாறுபட்ட வயதில் மனிதர்கள் இறப்பது மூலம் ஒவ்வொரு நபருக்கும் வெவ்வேறான ஆயுள்காலம் வழங்கப்பட்டிருப்பதை விளங்கலாம். இது குறித்து இறைவன் தரும் விளக்கத்தைப் பார்ப்போம்.
அவனே, உங்களை (தொடக்கத்தில்) மண்ணிலிருந்தும், பின்னர் விந்துத் துளியிலிருந்தும், பின்னர் சூல்கொண்ட கருமுட்டையிலிருந்தும் படைத்தான். பின்னர் உங்களைக் குழந்தையாக வெளிப்படுத்துகிறான். அதன் பின்னர், நீங்கள் பருவ வயதை அடைவதற்காகவும், பிறகு வயோதிகர்கள் ஆவதற்காகவும் (உங்களை வாழ வைக்கிறான்). இதற்கு முன்பே உங்களில் கைப்பற்றப்படுவோரும் உள்ளனர். குறிப்பிட்ட தவணையை நீங்கள் அடைவதற்காக (விட்டுவைக்கப்படுவோரும் உள்ளனர்.) இதன்மூலம் நீங்கள் விளங்கிக் கொள்வோராக ஆகலாம்.
(அல்குர்ஆன் 40:67)
மனிதர்களே! (உயிர்ப்பித்து) எழுப்பப் படுவதைப் பற்றி நீங்கள் சந்தேகத்தில் இருந்தால் உங்களுக்கு நாம் தெளிவுபடுத்துவதற்காக (இதை விவரிக்கிறோம்.) உங்களை(த் தொடக்கத்தில்) மண்ணிலிருந்தும், பின்னர் விந்துத் துளியிலிருந்தும், பின்னர் சூல்கொண்ட கருமுட்டையிலிருந்தும், பின்னர் வடிவமைக்கப்பட்டதும், வடிவமைக்கப் படாததுமான சதைத் துண்டிலிருந்தும் படைத்தோம். நாம் நாடியவற்றை ஒரு குறிப்பிட்ட காலம் வரை கருவறைகளில் தங்கச் செய்கிறோம். பின்னர் உங்களைக் குழந்தையாக வெளிப்படுத்துகிறோம். நீங்கள் இளமைப் பருவத்தை அடைவதற்காக (உங்களை வளரச் செய்கிறோம்.) உங்களில் (குறைந்த ஆயுளில்) கைப்பற்றப்படுவோரும் உள்ளனர். உங்களில் தள்ளாத வயதுவரை கொண்டு செல்லப்படுவோரும் உள்ளனர். இதன் காரணமாக அவர்கள் விபரம் தெரிந்த பின்பு (நினைவு தடுமாறி) எதையும் அறியாதோராகி விடுகின்றனர். மேலும், பூமியை வறண்டதாகக் காண்கிறீர்! நாம், அதன்மீது மழையைப் பொழிவிக்கும்போது அது செழித்து வளர்கிறது; பசுமையான (தாவர) வகைகள் ஒவ்வொன்றையும் முளைக்கச் செய்கிறது.
(அல்குர்ஆன் 22:5)

மரணம் பற்றிய மறைவான ஞானம்

எதிர்கால வாழ்க்கை எவ்வாறு இருக்கும்; எப்போது மரணம் ஏற்படும் என்பதெல்லாம் மறைவான விஷயங்கள் ஆகும். அவைப் பற்றிய பரிபூரணமான ஞானம் இறைவனுக்கு மட்டுமே உள்ளதாக இஸ்லாம் கூறுகிறது.
அல்லாஹ்விடமே உலகம் அழியும் நேரத்தைப் பற்றிய அறிவு இருக்கிறது. அவனே மழையைப் பொழிவிக்கிறான். அவனே கருவறைகளில் உள்ளவற்றை அறிகிறான். நாளை எதைச் சம்பாதிக்கப் போகிறோம் என்பதை எவரும் அறிய மாட்டார். எந்த இடத்தில் மரணிப்போம் என்பதையும் எவரும் அறிய மாட்டார். அல்லாஹ்வே நன்கறிந்தவன்; நுட்பமாக அறிபவன்.
(அல்குர்ஆன் 31:34)
‘ஐந்து காரியங்களை அல்லாஹ்வைத் தவிர வேறு எவரும் அறிய முடியாது. நாளை என்ன நடக்கும் என்பதை எவரும் அறிய முடியாது. கருவறைகளிலுள்ள நிலைமைகளை எவரும் அறிய முடியாது. ஒருவர் நாளை எதைச் சம்பாதித்தார் என்று அறிய முடியாது. ஒருவர் தாம் எந்த இடத்தில் மரணிப்போம் என்பதை அறிய முடியாது. மழை எப்போது வருமென்பதையும் எவரும் அறிய முடியாது’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி)
நூல்: புகாரி (1039)
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மறைவானவற்றின் திறவுகோல்கள் ஐந்தாகும். (ஏனெனில், அல்லாஹ் கூறினான்:) ‘அல்லாஹ்விடமே உலகம் அழியும் நேரத்தைப் பற்றிய அறிவு இருக்கிறது. அவனே மழையைப் பொழிவிக்கிறான். அவனே கருவறைகளில் உள்ளவற்றை அறிகிறான். நாளை எதைச் சம்பாதிக்கப் போகிறோம் என்பதை எவரும் அறிய மாட்டார். எந்த இடத்தில் மரணிப்போம் என்பதையும் எவரும் அறிய மாட்டார். அல்லாஹ்வே நன்கறிந்தவன்; நுட்பமாக அறிபவன் – திருக்குர்ஆன் 31:34 (என்ற வசனத்தை ஓதிக் காட்டினார்கள்).
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி)
நூல்: புகாரி 4627
மரணிப்பது உட்பட தனது எதிர்கால வாழ்க்கை நிகழ்வுகள் எவ்வாறு இருக்கும் என்பதை எந்தவொரு மனிதனும் அறிய முடியாது; அவனைப் பற்றி அடுத்தவர்களாலும் அறிய முடியாது. இந்தப் புரிதல் இல்லாமல் பலர் மூட நம்பிக்கையில் வீழ்ந்து கிடப்பதைப் பார்க்கிறோம். ஜாதகம், ஜோசியம் என்ற போர்வையில் ஊகத்தின் அடிப்படையில் உளறுவதைப் பலர் உண்மையென நம்பிக் கொண்டு ஏமாறுவதையும் ஏமாற்றப்படுவதையும் பார்க்கிறோம். இதனால், மன நிம்மதியையும் பொருளையும் இழந்து தவிக்கிறார்கள். இவற்றில் இருந்து மீள்வதற்கு இஸ்லாம் கூறும் நம்பிக்கையே தீர்வாகத் திகழ்கிறது.

அல்லாஹ்வே மரணிக்க வைப்பவன்

எந்த உயிரையும் மரணிக்க வைக்கும் ஆற்றல் அல்லாஹ்வுக்குத் தான் உள்ளது. இதையறியாமல் மரண பயத்தில் இணைவைப்பு தெய்வங்களிடம் படைப்பினங்களிடம் உதவி தேடும் மனிதர்கள் அதிகம் இருக்கிறார்கள். இன்னும் சிலரோ, மந்திர சக்தியால் சாமியார்களும் மந்திரவாதிகளும் மரணத்தைத் தடுத்திடுவார்கள்; மரணத்தைத் தாமதப்படுத்திடுவார்கள் என்று எண்ணிக் கொண்டு அவர்களிடம் சரணடைந்து கிடக்கிறார்கள். இத்தகைய ஆட்கள் பின்வரும் வசனங்களைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
அவன்தான் உங்களுக்கு உயிரளித்தான்; பின்பு உங்களை மரணிக்கச் செய்வான்; பின்னர் உங்களை உயிர்ப்பிப்பான். மனிதன் மிகவும் நன்றி கெட்டவன்.
(அல்குர்ஆன் 22:66)
அவன்தான் உயிர்ப்பிக்கிறான்; மரணிக்க வைக்கிறான். அவனிடத்தில்தான் இரவு, பகல் மாறிமாறி வருவதும் உள்ளது. நீங்கள் சிந்திக்க மாட்டீர்களா?
(அல்குர்ஆன் 23:80)
அல்லாஹ்வுக்கே வானங்கள், பூமியின் ஆட்சி உரியது. அவன் உயிர்ப்பிக்கிறான்; மரணிக்க வைக்கிறான். அல்லாஹ்வையன்றி உங்களுக்கு எந்தப் பாதுகாவலரோ, உதவி செய்பவரோ இல்லை.
(அல்குர்ஆன் 9:116)
அல்லாஹ்தான் உங்களைப் படைத்தான். பின்னர் அவனே உங்களுக்கு உணவளித்தான். பிறகு உங்களை மரணிக்க வைப்பான். பின்னர் உங்களை உயிர்ப்பிப்பான். இவற்றில் எதையேனும் செய்பவர்கள் உங்களுடைய இணைக்கடவுள்களில் உள்ளனரா? அவன் தூயவன். அவர்கள் இணைவைப்பதை விட்டும் உயர்ந்தவன்.
(அல் குர்ஆன் 30:40)
அவனையன்றி வேறு கடவுள்களை ஏற்படுத்திக் கொள்கின்றனர். அவர்களோ எந்தப் பொருளையும் படைக்க மாட்டார்கள். அவர்களே படைக்கப்படுகின்றனர். அவர்கள் தமக்கே எந்தத் தீமையையும், நன்மையையும் செய்வதற்குச் சக்தி பெற மாட்டார்கள். அவர்கள் மரணத்திற்கோ, வாழ்வுக்கோ, உயிர்ப்பித்து எழுப்பவோ அதிகாரம் பெற மாட்டார்கள்.
(அல்குர்ஆன் 25:3)

இறைநாட்டப்படியே மரணம்

அல்லாஹ்வே மரணிக்க வைப்பவன். அவனது நாட்டப்படி அவன் விதித்துள்ள நேரத்தில் மரணம் ஏற்படும். அதுவரையிலும் அவரைப் பாதுகாப்பதற்கு வானவர் நியமிக்கப்பட்டிருப்பார். இதைப் பின்வரும் சான்றுகள் வழியாக விளங்கலாம்.
எந்த உயிரும் அல்லாஹ்வின் நாட்டமின்றி மரணிக்காது. இது நேரம் குறிக்கப்பட்ட விதியாகும். இவ்வுலகின் பலனை விரும்புபவருக்கு அதை வழங்குவோம். மறுமையின் பலனை விரும்புபவருக்கு அதை வழங்குவோம். நன்றி செலுத்துவோருக்குக் கூலி வழங்குவோம்.
(அல்குர்ஆன் 3:145)
அவனே உயிர்ப்பிக்கிறான்; மரணிக்க வைக்கிறான். அவன் ஒரு விஷயத்தைத் தீர்மானிக்கும்போது அதற்கு ‘ஆகு’ என்றுதான் கூறுவான். உடனே அது ஆகிவிடும்.
(அல்குர்ஆன் 40:68)
இறைவனது நாட்டப்படியே மரணம் ஏற்படும் என்பதால், உயிருக்கு ஊறுவிளைவிக்கும் செயல்கள் எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்று நினைத்துவிடக் கூடாது. எந்த நேரத்தில் மரணம் குறிக்கப்பட்டிருக்கிறது என்று எவருக்கும் தெரியாது. ஆகவே விழிப்புடன் நடந்து கொள்ள வேண்டும். அதேபோல, மரணம் ஏற்பட்டுவிடுமோ என்று எல்லா நேரத்திலும் பயந்து கொண்டு இருக்கக் கூடாது. மரணத்திற்குக் காரணம் கற்பித்துக் கொண்டிருக்கக் கூடாது. இத்தகைய கற்பனைவாதிகளைக் குர்ஆனில் அல்லாஹ் கண்டித்திருக்கிறான். இதோ பாருங்கள்.
இறைநம்பிக்கை கொண்டோரே! யார் (அல்லாஹ்வை) மறுத்து, இன்னும் பூமியில் பயணம் மேற்கொண்ட அல்லது போராளிகளான தம் சகோதரர்களைப் பற்றி, “அவர்கள் நம்முடன் இருந்திருந்தால் மரணித்திருக்க மாட்டார்கள், கொல்லப்பட்டிருக்கவும் மாட்டார்கள்” என்றும் கூறினார்களோ அவர்களைப் போன்று நீங்கள் ஆகிவிடாதீர்கள்! இதை அவர்களின் உள்ளங்களில் அல்லாஹ் கவலையாக ஆக்குவதற்காக (இவ்வாறு செய்தான்). அல்லாஹ்வே உயிர்ப்பிக்கிறான்; மரணிக்கச் செய்கிறான். நீங்கள் செய்வதை அல்லாஹ் பார்ப்பவன்.
(அல்குர்ஆன் 3:156)
போருக்குச் செல்லாமல்) தங்கிவிட்ட அவர்கள், (போரில் கொல்லப்பட்ட) தம் சகோதரர்கள் குறித்து “அவர்கள் நமக்குக் கட்டுப்பட்டிருந்தால் கொல்லப்பட்டிருக்க மாட்டார்கள்” என்று கூறினர். “நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் உங்களை விட்டும் மரணத்தைத் தடுத்துக் கொள்ளுங்கள்!” என்று கூறுவீராக!
(அல்குர்ஆன் 3:168)
நபிகளாரின் காலத்தில் எதிரிகளை எதிர்த்துப் போர் செய்து வீர மரணம் அடைந்த நபித்தோழர்கள் குறித்து நயவஞ்சகர் பேசியதைக் குறித்து இவ்வசனங்கள் பேசுகின்றன. போரில் நபித்தோழர்களுக்கு ஏற்பட்ட மரணத்திற்குக் காரணம் கற்பித்த கயவர்களை அல்லாஹ் கடுமையாகக் கண்டித்துள்ளான். மரணம் மீது ஏற்படும் இப்படியான பயமும் காரணம் கற்பிக்கும் குணமும் தான் சகுனம் பார்த்தல், குறிபார்த்தல் போன்ற இணைவைப்புச் செயல்களுக்கு அடிப்படையாக இருக்கின்றது என்பது இங்கு கவனிக்கத்தக்கது.

மரணத் தவணையில் மாற்றமில்லை!

ஒருவர் எந்த நாளில் எந்த நேரத்தில் மரணிக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளதோ அந்த நேரம் ஒருபோதும் மாற்றம் ஏற்படாது; எதற்காகவும் அவகாசம் அளிக்கப்படாது.
எவருக்கும் அவரது (மரணத்) தவணை வந்து விட்டால் அல்லாஹ் அவகாசம் அளிக்க மாட்டான். நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் நன்றிந்தவன்.
(அல்குர்ஆன் 63:11)

எங்கிருந்தாலும் மரணம் நிச்சயம்

தனக்கு என்றாவது ஒரு நாள் மரணம் நிச்சயமாக நிகழ்ந்தே தீரும் என்று மனிதன் நம்பினாலும் அந்த மரணத்தில் இருந்து தப்பித்து விட முடியாதா என்று ஏங்கவே செய்கிறான். ஏதேனும் மரணத்தைத் தள்ளிப்போட்டு விடாதா? தடுத்துவிடாதா? என்று எத்தனையோ ஆராய்ச்சிகளைச் செய்து கொண்டிருக்கிறான். ஆனால், அதற்கு வாய்ப்பே இல்லை. எத்தகைய பாதுகாப்பு அரண்களுக்குள் இருந்தாலும் விதிக்கப்பட்ட நேரத்தில் கண்டிப்பாக மரணம் வந்தடையும். இதோ அல்லாஹ் கூறுவதைப் பாருங்கள்.
“எதைவிட்டும் நீங்கள் வெருண்டோடு கிறீர்களோ அந்த மரணம் உங்களைச் சந்தித்தே தீரும். பிறகு, மறைவானதையும், வெளிப்படையானதையும் நன்கறிபவனிடம் நீங்கள் கொண்டு செல்லப்படுவீர்கள். நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றை அப்போது உங்களுக்கு அறிவிப்பான்” என்று கூறுவீராக!
(அல்குர்ஆன் 62:8)
(நபியே!) “மரணத்திலிருந்தோ அல்லது கொல்லப்படுவதிலிருந்தோ நீங்கள் வெருண்டோடினாலும், (அவ்வாறு) ஓடுவது உங்களுக்குப் பயனளிக்காது. அப்போதும் சிறிது காலமே நீங்கள் சுகபோகம் வழங்கப்படுவீர்கள்” என்று கூறுவீராக!
(அல்குர்ஆன் 33:16)
நீங்கள் எங்கிருந்தபோதிலும் மரணம் உங்களை அடைந்தே தீரும். நீங்கள் உறுதியான கோட்டைகளில் இருந்தபோதிலும் சரியே!
(அல்குர்ஆன் 4:78)
வாழ்க்கையில் இன்பங்களும் துன்பங்களும் மாறி மாறி வந்து கொண்டே இருக்கும். இப்படி பல விஷயங்களைக் கடந்து போகும் வாழ்க்கையின் முற்றுப்புள்ளியாக மரணம் இருக்கிறது. அதை மனிதன் கண்டிப்பாக அடைவான் என்பதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விளக்கப்படம் வரைந்து விளக்கி இருக்கிறார்கள்.
(ஒருமுறை) நபி (ஸல்) அவர்கள் (நிலத்தில்) ஒரு சதுரக் கட்டம் வரைந்தார்கள். பிறகு (பின்வருமாறு) கூறினார்கள்: (நடுவிலுள்ள மையப் புள்ளியான) இதுதான் மனிதன். இந்தச் சதுரம் தான் அவனைச் ‘சூழ்ந்துள்ள’ அல்லது ‘சூழ்ந்து கொண்டுவிட்ட’ வாழ்நாளாகும். (நடுவிலிருந்து) வெளியே செல்லும் கோடுதான் அவனுடைய எதிர்பார்ப்புகளாகும். இதோ இந்தச் சிறிய கோடுகள் (மனிதனை வந்தடையும்) சோதனைகளாகும். (சோதனைகளில்) ஒன்றிலிருந்து அவன் தப்பிவிட்டாலும் மற்றொன்று அவனைத் தீண்டவே செய்யும். (இடையில் ஏற்படும் சோதனைகளான) இவற்றிலிருந்து அவன் தப்பிவிட்டாலும் இ(யற்கை மரணமான)து அவனைத் தீண்டவே செய்யும்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி)
நூல்:புகாரி (6417)

மரணமும் வானவர்களும்

உயிர்களை உரிய நேரத்தில் கைப்பற்றுவதற்காக மனிதர்களில் ஒவ்வொரு நபருக்கும் வானவர்களில் ஒருவரோ இருவரோ அல்லது பலரோ நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். அவர்கள் அப்பணியைத் துல்லியமாகச் செய்து முடிப்பார்கள்.
அவனே தன் அடியார்களை அடக்கியாள்பவன். உங்களுக்குப் பாதுகாவலர்களையும் அனுப்புகின்றான். முடிவில், உங்களில் ஒருவருக்கு மரணம் வரும்போது, நமது தூதர்கள் அவனைக் கைப்பற்றுகின்றனர். அவர்கள் (அதில்) சிறிதும் குறை வைக்கமாட்டார்கள்.
(அல்குர்ஆன் 6:61)
“உங்களுக்காக நியமிக்கப்பட்டிருக்கும் மரணத்தின் வானவர் உங்களைக் கைப்பற்றுவார். பின்னர் உங்கள் இறைவனிடமே நீங்கள் மீண்டும் கொண்டு வரப்படுவீர்கள்” என்று கூறுவீராக!
(அல்குர்ஆன் 32:11)
மரணத்தைப் பற்றிச் சிந்திக்கவும் பேசவும் பல மனிதர்கள் மறுக்கும் நிலையில், பலரும் அது தொடர்பாகக் குழம்பிக் கொள்ளும் நிலையில், இஸ்லாமிய மார்க்கம் மட்டுமே மரணம் தொடர்பாக விரிவாக விளக்கி இருக்கிறது. அவற்றுள் சிலதைப் பற்றி மட்டுமே இக்கட்டுரையில் கண்டுள்ளோம். இன்ஷா அல்லாஹ், இன்னொரு தலைப்பில் மீதமுள்ள செய்திகளைக் காண்போம்.