ஒரு சராசரி முஸ்லிமின் வாழ்வில் அளப்பெரும் அளவில் அங்கம் வகித்துள்ளது திருமறைக் குர்ஆன். சூரியன் உதித்தது முதல் இரவு உறக்கம் வரை பல்வேறு நிலைகளில் அவனது வாழ்வு திருமறையோடு பின்னிப்பிணைந்தும், இணைந்தும் உள்ளது. இஸ்லாமிய மார்க்கத்திலும் திருமறையின் பங்கெடுப்பு, அதன் முக்கியத்துவங்கள் மற்றும் முதன்மைத்துவங்கள் அளவற்றதும், அலாதியானதுமாகும்.
தொழுகையில் தோள்கொடுக்கும் திருமறை
தொழுகைகளில் பலவகைகள் உள்ளன. ஐநேர கடமையான தொழுகைகள், அதற்குரிய முன் பின் சுன்னத்தான தொழுகைகள், இரவுத் தொழுகை, வித்ரு தொழுகை, பெருநாள் தொழுகை, ஜனாஸா தொழுகை, மழைத்தொழுகை, கிரகணத் தொழுகை, ஜுமுஆத் தொழுகை, லுஹா தொழுகை, இஸ்திகாரா தொழுகை என்பன போன்றவைகள் அவைகளுள் அடங்கும். இப்படி அத்துணை தொழுகைகளிலும் திருமறை ஓதப்படாமல் இருப்பதில்லை. ஜனாஸா தொழுகை உட்பட அனைத்திலும் அல்ஃபாதிஹா அத்தியாயம் ஓதப்படவேண்டும்.
“சூரத்துல் ஃபாத்திஹா ஓதாதவருக்குத் தொழுகையில்லை” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: உபாதா (ரலி)
நூல்: புகாரி 756
உங்களில் நோயாளிகளும், அல்லாஹ்வின் அருளைத் தேடி பூமியில் பயணம் செய்யும் சிலரும், அல்லாஹ்வின் பாதையில் போரிடும் சிலரும் இருப்பார்கள் என்பதையும் அறிந்துள்ளான். எனவே அதிலிருந்து இயன்றதை ஓதுங்கள்! தொழுகையை நிலைநிறுத்துங்கள்!
(அல்குர்ஆன் 73:20)
“(தொழுகையில்) மாண்பும் மகத்துவமும் நிறைந்த அல்லாஹ்வை தக்பீர் சொல்லி அவனைப் புகழ வேண்டும். பிறகு குர்ஆனிலிருந்து அல்லாஹ் ஆகுமாக்கியதை, அதில் லேசானதை ஓத வேண்டும்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ரிஃபாஆ பின் ராஃபி
நூல்: அபுதாவூத் 858
ஐந்து கடமைகளில் மிக முக்கியக் கடமை தொழுகை தான் என்பது யாரும் மறுக்க முடியாத உண்மை. நின்று தொழ இயலாதவர் அமர்ந்து தொழவேண்டும், அமர்ந்தும் தொழ இயலாதவர் ஒருக்களித்துத் தொழ வேண்டும், உளூ செய்ய இயலாதவர் மண்ணை தொட்டு தயம்மம் செய்ய வேண்டும், பயணத்திலும் தொழுகையை சுருக்கித் தொழவேண்டும் என்று தொழுகைகளில் பல சலுகைகள் இருந்தாலும் அதனை விட்டு விடுமாறு இறைவனும், இறைத்தூதரும் எங்கும் சொன்னதில்லை. (மாதவிடாய் பெண்கள் விதிவிலக்கு)
இப்படி இஸ்லாத்தினுடைய தூண்களில் மிக முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது தொழுகை. அப்படிபட்ட தொழுகையில் குர்ஆனை ஓதுவது மிகப்பெரும் அம்சமாக வழிகாட்டப்பட்டுள்ளது.
மஹருக்குப் பகரம்
ஒரு காலம் இருந்தது. வரதட்சணை கொடுமையினால் பெண்களின் தற்கொலை விகிதாச்சாரம் விண்ணைத் தொட்டிருந்தது. பல அபலைப் பெண்களின் வாழ்க்கை கேள்விக் குறியாகவும், கேலிக்கூத்தாகவும் ஆனது. அதன் பிறகு தமிழகத்தில் இஸ்லாமிய பிரச்சாரத்தின் விளைவு மாபெரும் மாற்றத்தைத் தந்தது.
மணமுடிக்க விரும்பும் ஆண்மகன், தான் மணக்கவிருக்கும் பெண்ணுக்கு மஹர் எனும் நன்கொடையைக் கொடுக்க வேண்டும் என்பது இஸ்லாத்தின் சாசனமாகும்.
பெண்களுக்கு அவர்களின் திருமணக் கொடைகளை மனப்பூர்வமாகக் கொடுங்கள்! அதிலிருந்து அவர்கள் மனமுவந்து எதையேனும் உங்களுக்குத் தந்தால் அதைத் திருப்தியுடனும் மகிழ்வுடனும் உண்ணுங்கள்!
(அல்குர்ஆன் 4:4)
ஒரு ஆண்மகனுக்கு மணக்கொடை கொடுத்து திருமணம் முடிப்பது கட்டாயக் கடமையாக இருந்தாலும், அதற்குச் சக்திபெறாதவர்கள், இரும்பு மோதிரத்தைக் கூட கொடுக்க இயலாதவர்கள், அந்தப் பெண்ணின் சம்மதத்தோடு அவளுக்கு திருமறைக் குர்ஆனை கற்றுக் கொடுத்து மணமுடித்துக் கொள்ளலாம்.
ஒரு பெண்மணி நபி(ஸல்) அவர்களிடம் வந்து, அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் தம்மை (அர்ப்பணித்து) அன்பளிப்புச் செய்துவிட்டதாகக் கூறினார். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘(இனி) எனக்கு எந்தப் பெண்ணும் தேவையில்லை’ என்று கூறினார்கள். அப்போது அங்கிருந்த ஒருவர் ‘இந்தப் பெண்ணை எனக்கு மணமுடித்து வையுங்கள்’ என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள், ‘ஏதேனும் ஆடையொன்றை அவளுக்கு (‘மஹ்ர்’ எனும் விவாகக் கொடையாக)க் கொடு!’ என்று கூறினார்கள். அவர், ‘என்னிடம் இல்லை’ என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள், ‘அவளுக்கு (எதையேனும் மஹ்ராகக்) கொடு! அது இரும்பாலான மோதிரமாக இருந்தாலும் சரியே’ என்று கூறினார்கள். இதைக்கேட்டு அந்த மனிதர் கலங்கினார். எனவே, நபி(ஸல்) அவர்கள், ‘குர்ஆனிலிருந்து உன்னிடம் என்ன (மனனமாக) இருக்கிறது?’ என்று கேட்டார்கள். அவர், ‘இன்ன இன்ன அத்தியாயங்கள் (எனக்கு மனப்பாடமாக) உள்ளன’ என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள், ‘உம்முடன் இருக்கும் (குர்ஆன் அத்தியாயங்களுக்காக இவளை உமக்கு மணமுடித்து வைத்தேன்’ என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஸஹ்ல் இப்னு ஸஅத் (ரலி)
நூல்: புகாரி 5029
தூங்கும் முன் திருமறை
ஓடி, உழைத்து, ஊதியம் ஈட்டி சோர்வோடு வரும் மனிதனை மார்போடு அணைத்துக்கொள்வது தூக்கமே! இத்தகைய தூக்கத்திற்கு முன் குர்ஆன் ஓதுவதை வழக்கப்படுத்தச் சொல்கிறது இஸ்லாம்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “எவர் அல்பகரா அத்தியாயத்தின் இறுதி வசனங்களை இரவில் ஓதுகிறாரோ அவருக்கு அந்த இரண்டுமே போதும்” எனக் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூமஸ்ஊத் (ரலி)
நூல்: புகாரி 5009
அபுஹுரைரா(ரலி), ‘இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ரமளானின் (ஃபித்ரா) ஸகாத்தைப் பாதுகாக்கும் பொறுப்பை என்னிடம் ஒப்படைத்தார்கள். அப்போது யாரோ ஒருவன் என்னிடம் வந்து அந்த (ஸகாத்) உணவுப் பொருளை அள்ளலானான். உடனே அவனை நான் பிடித்து, ‘உன்னை இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் கொண்டு செல்லப் போகிறேன்’ என்று சொன்னேன்’ என்று கூறிவிட்டு, – அந்த நிகழ்ச்சியை முழுமையாகக் குறிப்பிட்டார்கள். – (இறுதியில், திருட வந்த) அவன், ‘நீங்கள் படுக்கைக்குச் செல்லும்போது ஆயத்துல் குர்ஸீயை ஓதுங்கள்! (அவ்வாறு செய்தால்,) விடியும்வரை அல்லாஹ்வின் தரப்பிலிருந்து (உங்களைப் பாதுகாக்கின்ற) காவலர் (வானவர்) ஒருவர் இருந்து கொண்டேயிருப்பார்; எந்த ஷைத்தானும் உங்களை நெருங்கமாட்டான்’ என்று கூறினான். (இதை நான் நபி(ஸல்) அவர்களிடம் தெரிவித்தேன்). அப்போது நபியவர்கள், ‘அவன் பெரும் பொய்யானாயிருப்பினும அவன் உம்மிடம் உண்மையாகத்தான் சொல்லியிருக்கிறான்; (உம்மிடம் வந்த) அவன்தான் ஷைத்தான்’ என்று கூறினார்கள் என்றும் கூறினார்கள்.
(நூல்: புகாரி 5010)
நபி(ஸல்) அவர்கள் தங்களின் படுக்கைக்கு (உறங்கச்) சென்றால் ஒவ்வோர் இரவிலும் தம் உள்ளங்கைகளை இணைத்து, அதில் ‘குல் ஹுவல்லாஹு அஹத்’, ‘குல் அஊது பிரப்பில் ஃபலக்’, ‘குல் அஊது பிரப்பின்னாஸ்’ ஆகிய (112, 113, 114) அத்தியாயங்களை ஓதி ஊதிக் கொள்வார்கள். பிறகு தம் இரண்டு கைகளால் (அவை எட்டும் அளவிற்குத்) தம் உடலில் இயன்ற வரையில் தடவிக் கொள்வார்கள். முதலில் தலையில் ஆரம்பித்து, பிறகு முகம், பிறகு தம் உடலின் முற்பகுதியில் கைகளால் தடவிக் கொள்வார்கள். இவ்வாறு மூன்று முறை செய்வார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி 5017
நோய்க்கு நிவாரணம்
இறைவனின் அருட்கொடைகளில் ஈடுஇணையில்லாதது ஆரோக்கியமான வாழ்வுதான். பெயரும், பொருளும் உள்ளவர்கள் கூட ஆரோக்கியம் இல்லையெனில், எண்ணும் உணவை உண்ண இயலாது, நினைக்கும் இடத்திற்குச் செல்ல முடியாது. நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பார்கள். அத்தகைய ஆரோக்கியமும், நிவாரணமும் திருமறையைக் கொண்டு பிரார்த்திப்பதன் மூலம் கிட்டுகிறது என்றுரைக்கின்றது இஸ்லாம்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் நோய்வாய்ப் பட்டால், ‘அல்முஅவ்விஃதாத்’ (பாதுகாப்புக் கோரும் கடைசி மூன்று) அத்தியாயங்களை ஓதித் தம் மீது ஊதிக் கொள்வார்கள். அவர்களின் (இறப்பிற்கு முன்) நோய் கடுமையானபோது, நான் அவற்றை ஓதி அவர்களின் (கையில் ஊதி அந்தக்) கையாலேயே (அவர்களின் உடல் மீது) தடவிக் கொண்டிருந்தேன். நபியவர்களின் கரத்திற்குள் சுபிட்சத்தை (பரக்கத்தை) நாடியே அவ்வாறு செய்தேன்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி 5016
நாங்கள் ஒரு பயணத்தில் சென்று கொண்டிருந்தபோது, (ஓய்வெடுப்பதற்காக) ஓரிடத்தில் இறங்கித் தங்கினோம். அப்போது ஓர் இளம் பெண் வந்து ‘எங்கள் கூட்டத் தலைவரை தேள் கொட்டிவிட்டது. எங்கள் ஆட்கள் வெளியே சென்றுள்ளார்கள். அவருக்கு ஓதிப்பார்ப்பவர் உங்களில் எவரேனும் உண்டா?’ என்று கேட்டாள். அவளுடன் எங்களில் ஒருவர் சென்றார். அவருக்கு ஓதிப்பார்க்கத் தெரியும் என்று நாங்கள் நினைத்தது கூட இல்லை. அவர் சென்று ஓதிப்பார்த்தார். உடனே, அந்தத் தலைவர் குணமடைந்துவிட்டார். எனவே, எங்களுக்கு முப்பது ஆடுகள் (அன்பளிப்பாக) வழங்குமாறு அவர்களின் தலைவர் உத்தரவிட்டதுடன் எங்களுக்குப் பாலும் கொடுத்தனுப்பினார். (ஓதிப்பார்க்கச் சென்ற) அந்த மனிதர் திரும்பி வந்தபோது, அவரிடம் ‘உமக்கு நன்றாக ஓதிப்பார்க்கத் தெரியுமா?’ அல்லது ‘ஏற்கனவே, நீர் ஓதிப்பார்பவராக இருந்தீரா?’ என்று கேட்டோம். அவர், ‘இல்லை; குர்ஆனின் அன்னை’ என்றழைக்கப்படும் (‘அல்ஃபாத்திஹா’) அத்தியாயத்தைத் தான் ஓதிப்பார்த்தேன்’ என்று கூறினார். (இந்த முப்பது ஆடுகளையும்) நாம் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் ‘செல்லும் வரையில்’ அல்லது ‘சென்று (விளக்கம்) கேட்கும் வரையில்’ ஒன்றும் செய்துவிடாதீர்கள்’ என்று (எங்களுக்கிடையே) பேசிக்கொண்டோம். நாங்கள் மதீனா வந்து சேர்ந்தபோது, இது குறித்து நபி(ஸல்) அவர்களிடம் கூறினோம். ‘இது (‘அல்ஃபாத்திஹா’) ஓதிப்பார்த்து நிவாரணம் பெறத்தக்கது என்று அவருக்கு எப்படித் தெரியும்? அந்த ஆடுகளைப் பங்கிட்டு அதில் ஒரு பங்கை எனக்கும் தாருங்கள்!’ என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபுஸயீத் அல் குத்ரீ(ரலி)
நூல்: புகாரி 5007
முன்னுரையில் மாமறை
நபி(ஸல்) அவர்கள் பலமுறை நபித்தோழர்களுக்கும், தோழியர்களுக்கும் உரையாற்றுவது வழக்கம். அந்த உரைகளின் துவக்கத்தில் ஒருசில குர்ஆன் வசனங்களை மொழிந்தே தமது எழுச்சியுரைக்குள் செல்வார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுது விட்டு மக்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். அப்போது, “மக்களே! ஒரே ஒரு மனிதரிலிருந்து உங்களைப் படைத்த உங்கள் இறைவனைப் பயந்து கொள்ளுங்கள்” எனும் (4:1) இறை வசனத்தை முழுமையாக ஓதிக் காட்டினார்கள். மேலும் அல்ஹஷ்ர் என்ற அத்தியாயத்திலுள்ள “இறைநம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! ஒவ்வொருவரும் நாளை(ய மறுமை)க்காகத் தாம் எதை முற்படுத்தியுள்ளோம் என்பதை (எண்ணிப்) பார்க்கட்டும். அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! ” எனும் (59:18)வது வசனத்தையும் ஓதிக்காட்டி (முளர் கூட்டத்தாருக்கு தர்மம் செய்யுமாறு கூறி)னார்கள்.
அறிவிப்பவர்: ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி)
நூல்: முஸ்லிம் 1691
நபி(ஸல்) அவர்கள் உரை நிகழ்த்துகையில் இன்னல் ஹம்த லில்லாஹ் என்று துவங்கும் துஆவையும், யா அய்யுஹல்லாதீன ஆமனூ இத்தகுல்லாஹ் என்று துவங்கும் (3:102)வது வசனத்தையும், யா அய்யுஹன்னாஸ் இத்தகூ ரப்பகும் என்று துவங்கும் (4:1)வது வசனத்தையும், யா அய்யுஹல்லாதீன ஆமனூ இத்தகுல்லாஹ் வ கூலூ கௌலன் என்று துவங்கும் (33:70,71)வது வசனத்தையும் ஓதுவார்கள். (ஹதீசின் கருத்து)
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத்(ரலி)
நூல்: அபூதாவூத் 2120
பிரார்த்தனையிலும், பாவமன்னிப்பிலும்
இறைவனிடம் இறைஞ்சுவதில் இரு வகைகள் உள்ளன. ஒன்று, தன் தேவையை இறைவனிடத்தில் கேட்பது. மற்றொன்று, தான் செய்த பாவத்திற்காக இறைவனிடம் பாவமன்னிப்பு கேட்பது.
இந்த இருவகை இறைவணக்கத்திலும் திருமறையின் பங்களிப்பு இடம்பெற்றுள்ளது.
திருமறையின் மூலம் பல பிரார்த்தனைகள் சொல்லித்தரப்பட்டுள்ளன. நாமாக ஒரு துஆவைச் செய்வதை விட, இறைவன் நமக்கு குர்ஆனின் வாயிலாக கற்றுத் தந்ததை ஓதுவதில் தனிச்சிறப்புண்டு.
“என் இறைவனே! எனக்குக் கல்வியை அதிகப்படுத்துவாயாக!” என்று கூறுவீராக!
(அல்குர்ஆன் 20:114)
எங்கள் இறைவனே! எங்களிடமிருந்து (இதை) ஏற்றுக் கொள்வாயாக! நீயே செவியேற்பவன்; நன்கறிந்தவன்
(அல்குர்ஆன் 2:127)
“எங்கள் இறைவனே! எங்களுக்கு இவ்வுலகிலும் நன்மையை(த் தருவாயாக!) மறுமையிலும் நன்மையைத் தருவாயாக! நரகத்தின் வேதனையிலிருந்து எங்களைப் பாதுகாப்பாயாக!” என்று கூறுவோரும் மனிதர்களில் உள்ளனர்.
(அல்குர்ஆன் 2:201)
பாவமன்னிப்புக் கோருவதிலும் இதையே நாம் கடைப்பிடிக்க முயற்சிக்கவேண்டும்.
மீன் வயிற்றிலிருந்து யூனுஸ் (அலை) அவர்கள் இறைவனிடம் பாவமன்னிப்பு கேட்ட வரலாற்றை திருமறையில் இறைவன் முன்மொழிகின்றான்.
“உன்னைத் தவிர எந்தக் கடவுளும் இல்லை; நீ தூயவன்; நான் அநியாயக்காரர்களில் ஆகிவிட்டேன்” என்று இருள்களிலிருந்து பிரார்த்தித்தார்.
(அல்குர்ஆன் 21:87)
ஆதம் (அலை) அவர்களுக்குப் பிறப்பிக்கப் பட்ட கட்டளை ஒன்று தான். சுவனத்தில் உண்டு புசித்து மகிழ்ந்து கொள்வீராக! அம்மரத்தை மட்டும் நெருங்காதீர் என்பதே அக்கட்டளை. ஆதம்(அலை) அவர்கள் ஷைத்தானின் சூழ்ச்சியால் அக்கட்டளையை மீறிவிட்டார்கள்.
அத்தவறை உளப்பூர்வமாக உணர்ந்து இறைவனிடம் மன்றாடி இறைஞ்சிய பாவமன்னிப்பு துஆவையும் திருமறையில் குறிப்பிடுகின்றான் இறைவன்.
“எங்கள் இறைவனே! எங்களுக்கு நாங்களே அநியாயம் செய்து விட்டோம். நீ எங்களை மன்னித்து, அருள் புரியாவிட்டால் நாங்கள் நஷ்டமடைந்தோரில் ஆகி விடுவோம்” என இருவரும் கூறினர்.
(அல்குர்ஆன் 7:23)
தொழுகை, நோன்பு, ஹஜ் எப்படி வணக்கமோ அது போன்றே பிரார்த்தனையும் வணக்கம் தான். அத்தகைய வணக்கத்திலும் பொதுமறையின் பங்களிப்பு படர்ந்துள்ளது.
ஓதுவோம்! உயர்வோம்!
நாம் நன்மை செய்வதற்கு இறைவனால் கொடுக்கப்பட்டுள்ள காலவகாசம் நமது பிறப்பிலிருந்து இறப்புவரையிலும் தான். அதற்குள் அந்த மீஸான் தராசில் நன்மையின் எடை தீமையை மிகைக்க வேண்டும். அதற்கொரு அடித்தளமாகவும், அச்சாரமாகவும் அல்குர்ஆன் ஓதுதல் அமைந்துள்ளது.
நம்வாழ்வில் பெருவாரியான நேரங்களை விரயமாகவே கழிக்கின்றோம். அந்நேரங்களில் குர்ஆனை ஓத முயற்சிக்கவேண்டும்.
இன்றைய இளைஞர்கள் இடருக்கு மருந்தை இசையில் தேடுகின்றனர். அதற்கு அடிமையாக உள்ளனர். இசைக்கலைஞர்களை தங்களின் ரசிகர்களாக எடுத்துக்கொள்கின்றனர். ஆனால், ரசனையாலும், ரம்மியத்தாலும் இசைப்பாடல்களை அசைத்துவிடுகின்ற அருள்மறையை விட்டும் அகன்றுவிடுகின்றனர்.
இளஞ்சிட்டுக்களுக்கு ஓர் அறிவுரை! ஒருமுறை இம்மாமறையை சுவைத்துப் பாருங்கள்! அதில் மதிமயங்கி, மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் அறிவீர்கள்.
குர்ஆன் நம்மை சீரமைக்க வேண்டுமென்றால், முதலில் அதோடு நம்மை இணைத்துக் கொள்ளவேண்டும்.
இஸ்லாத்தில் குர்ஆன் ஓதுபவர்களுக்குச் சொல்லப்பட்டுள்ள சிறப்புகள் சொல்லிலடங்காததாகும்.
நிமிடங்கள் சில! நன்மைகள் பல!
பிற மதத்தவர்கள் கொள்கையால் நமக்கு முரண்பட்டு இருந்தாலும், அவர்கள் இறைவனின் பொருத்தத்தைப் பெறுவதற்கும், நன்மையை அடைவதற்கும் பல தியாகங்கள் செய்கின்றனர். அலகு குத்துதல், தீ மிதித்தல், யாத்திரை பயணம் மேற்கொள்ளுதல். இவைகள் அனைத்தும் அவர்களையே வருத்திக்கொள்ளும் சட்டமாக இருந்தாலும், நன்மை என்று வரும் பட்சத்தில் அவர்கள் தன்னைக் கவனித்துக்கொள்வதில்லை.
ஆனால், இஸ்லாம் மார்க்கமோ மனித உடலுக்கும், உயிருக்கும், உணர்வுக்கும் மதிப்பளித்து தயவு தாட்சண்யமளிக்கிறது. மனித மனநிலைக்கு ஏற்ற சட்டங்களை இயற்றுகிறது. சிலமணி நிமிடங்களை செலவளிப்பதன் மூலம் இலாபகரமான நன்மைகளை குவித்துக்கொள்ள முடிகிறது. அவைகளுள் ஒன்று தான் குர்ஆனை அரபிமொழியில் ஓதுதல்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வின் வேதத்தில் ஓர் எழுத்தை ஓதியவருக்கு ஒரு நன்மை உண்டு. ஒரு நன்மைக்கு அதைப் போன்ற பத்து நன்மை உண்டு. “அலிஃப், லாம், மீம் என்பது ஒரு எழுத்து” என்று நான் கூறமாட்டேன். மாறாக, அலிஃப் என்பது ஒரு எழுத்து. லாம் என்பது ஒரு எழுத்து. மீம் என்பது ஒரு எழுத்து.
திர்மிதி: 2835, 2910
சரளமாக ஓத முடியவில்லையே என்று சஞ்சலப்படுபவர்களுக்கு ஒரு சுபச்செய்தியைச் சொல்கின்றது இஸ்லாம்.
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
குர்ஆனைச் சிரமப்பட்டு தொடர்ந்து ஓதுபவர்களுக்கு இருமடங்கு கூலி உண்டு.
நூல்: புகாரி 4937
நபி (ஸல்) அவர்கள் (மக்களை நோக்கி), “ஓர் இரவில் குர்ஆனின் மூன்றில் ஒரு பகுதியை உங்களில் ஒருவரால் ஓத முடியுமா?” என்று கேட்டார்கள். “(ஒரே இரவில்) எவ்வாறு குர்ஆனில் மூன்றிலொரு பகுதியை ஓத இயலும்?” மக்கள் கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள் “குல் ஹூவல்லாஹு அஹத் (என்று தொடங்கும் 112வது அத்தியாயம்) குர்ஆனில் மூன்றிலொரு பங்கிற்கு ஈடானதாகும்.
அறிவிப்பவர்: அபூ தர்தா (ரலி)
நூல்: முஸ்லிம் 1477
குர்ஆனின் மூன்றிலொரு பகுதி என்பது பத்து ஜுசுவாகும். ஒரு ஜுசுவை ஓதிமுடிக்கவே குறைந்தபட்சம் ஒரு மணிநேரம் தேவைப்படுகின்றது. ஆனால், ஒருசில நொடிகளில் பத்து ஜுசு ஓதிய நன்மை 112வது அத்தியாயத்தின் மூலம் நமக்குக் கிடைக்கின்றது.
ஓதுவதன் மதிப்பு! ஒட்டகத்தை விட சிறப்பு!
இன்றைக்கு செல்வந்தர்களுக்கென்று ஒருசில அடையாளங்கள் உள்ளன. மாட மாளிகைகள், ஏழடுக்குக் கட்டடங்கள், உயர்ரக வாகனங்கள் ஆகியன. அதுபோன்றே, அக்கால அரபியர்களில் ஒட்டகம் வைத்திருப்பவர் மிகப்பெரும் செல்வந்தராகக் கருதப்பட்டார். இக்காலத்தில் காருக்குச் சமமானது அக்கால ஒட்டகமாகும்.
அதன் பாலை உபயோகித்துக் கொள்வது, அதில் சுமைகளை ஏற்றுவது, அதன் மூலம் பயணம் செய்வது என்பன போன்ற பயன்களை அது தருகின்றது. அத்தைகைய ஒட்டகத்தை விட நம்மில் ஒருவர் குர்ஆன் ஓதுவது சிறப்பாகும்.
நாங்கள் பள்ளியின் திண்ணையில் இருக்கும் போது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்தார்கள். “உங்களில் ஒருவர் பாவத்திலும் உறவைத் துண்டிப்பதிலும் ஈடுபடா வண்ணம், புத்ஹான் அல்லது அகீக் என்ற இடத்திற்குச் சென்று கொழுத்த திமில் உடைய இரு பெண் ஒட்டகங்களைக் கொண்டு வர விரும்புவாரா?” என்று கேட்டார்கள். அதற்கு நாங்கள் “அல்லாஹ்வின் தூதரே! அதை நாங்கள் விரும்புகின்றோம்” என்று பதிலளித்தோம். “உங்களில் ஒருவர் அதிகாலையில் பள்ளிக்குச் சென்று மகத்துவமும் கண்ணியமும் நிறைந்த அல்லாஹ்வின் வேதத்திலிருந்து இரண்டு வசனங்களை விளங்கவோ அல்லது ஓதவோ கூடாதா? அவ்வாறு சென்று இரு வசனங்களை ஓதுவது இரு பெண் ஒட்டகங்களை விடவும் சிறந்தது. மூன்று வசனங்கள் மூன்று பெண் ஒட்டகங்களை விடச் சிறந்தது. நான்கு வசனங்கள் நான்கு ஒட்டகங்களை விடச் சிறந்தது. இந்த அளவுக்கு வசனங்கள் இதே அளவுக்கு ஆண் ஒட்டகங்களை விடச் சிறந்தது” என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர்
நூல்: முஸ்லிம் 1469
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“உங்களில் ஒருவர் தம் வீட்டாரிடம் செல்கையில் வீட்டில் மூன்று பெரிய கொழுத்த சினை ஒட்டகங்கள் காணப்படுவதை விரும்புவாரா?” என்று கேட்டார்கள். நாங்கள் “ஆம்” என்று பதிலளித்தோம். அப்போது அவர்கள், “உங்களுள் ஒருவர் தமது தொழுகையில் மூன்று வசனங்களை ஓதுவது மூன்று பெரிய கொழுத்த சினை ஒட்டகங்களைவிடச் சிறந்ததாகும்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆபூ ஹுரைரா
நூல்: முஸ்லிம் 1466
ஈடுஇணையில்லா ஈரொளிச்சுடர்கள்
மறுமை நாளில், மஹ்ஷர் எனும் மைதானத்தில், ஒட்டுமொத்த மனித குலமும் ஒன்றுதிரட்டப்பட்டிருக்கும் வேளையில், சூரியன் ஒரு மைல் தொலைவில் நிறுத்தப்படும். நிழலே இல்லா அத்தருணத்தில் மேகக் கூட்டமாய் நாம் ஓதிய அல்குர்ஆனின் அத்தியாயங்கள் நமக்காக நிழலளிக்கும்.
இன்னும், நம்மைப் பெற்ற, நாம் பெற்ற, நம்முடன் பிறந்த, நமக்கு வாழ்க்கைப்பட்ட அத்துணை உறவுகளும் நம்மை உதறிவிட்டுப் போகும் அத்தருணத்தில் தோழனாய் வான்மறை அத்தியாயங்கள் நமக்காக வாதாடும்.
இரு ஒளிச்சுடர்களான “அல்பகரா” மற்றும் “ஆலுஇம்ரான்” ஆகிய இரு அத்தியாயங்களையும் ஓதிவாருங்கள். ஏனெனில், அவை மறுமை நானில் நிழல்தரும் மேகங்களைப் போன்றோ அல்லது அணி அணியாகப் பறக்கும் பறவைக் கூட்டங்களைப் போன்றோ வந்து தம்மோடு தொடர்புள்ளவர்களுக்காக (இறைவனிடம்) வாதாடும்.
அறிவிப்பவர்: அபூஉமாமா அல்பாஹிலி (ரலி)
நூல்: முஸ்லிம் 1470
வாகை சூடும்போதும் வான்மறை வாக்கு!
அண்ணலாரின் வாழ்வில் அகற்ற முடியா இடத்தைப் பிடித்திருப்பது மக்கா வெற்றியே! வையகமே வியந்து பார்த்த வெற்றி!
சொந்த நாட்டைத் துறந்து சென்ற பிறகும் நபியவர்களுக்கு அச்சுறுத்தல் தூரமாகவில்லை. இப்படியே நீண்ட ஆண்டுகள் பொறுமை காத்ததன் பரிசாக, பிரதிபலனாகக் கிடைத்தது தான் மக்கா வெற்றி. அந்த வெற்றி வாகையின் பொழுதும் தன் கொண்டாட்டத்தைத் திருமறையைக் கொண்டே துவங்கினார்கள் நபிகளார்.
நபி(ஸல்) அவர்கள் (மக்கா வெற்றி நாளில்) பயணித்துக் கொண்டிருந்த தம் ஒட்டகத்தின்மீது இருந்தவாறு ‘அல்ஃபத்ஹ் எனும் (48வது) அத்தியாயத்தை’ அல்லது ‘அந்த அத்தியாயத்திலிருந்து ஒரு பகுதியை’ மெல்லிய குரலில் ‘தர்ஜீஉ’ எனும் ஓசை நயத்துடன் ஓதிக்கொண்டிருந்ததை பார்த்தேன்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு முகஃப்பல்(ரலி), நூல்: புகாரி 4047
வான்மறையும்! வானவரின் வருகையும்!
நான் இரவு நேரத்தில் (என் வீட்டில்) ‘அல்பகரா’ எனும் (2வது) அத்தியாயத்தை ஓதிக் கொண்டிருந்தேன். என்னுடைய குதிரை எனக்குப் பக்கத்தில் கட்டப்பட்டிருந்தது. திடீரென அந்தக் குதிரை மிகக் கடுமையாக மிரண்டது. உடனே ஓதுவதை நிறுத்திக் கொண்டேன். குதிரை மிகக் கடுமையாக மிரண்டது. உடனே ஓதுவதை நிறுத்தினேன். குதிரை அமைதியாகிவிட்டது. பிறகு ஓதினேன். அப்போது குதிரை (முன் போன்றே) மிரண்டது. நான் ஓதுவதை நிறுத்தினேன். குதிரையும் அமைதியானது. மீண்டும் நான் ஓதியபோது குதிரை மிரண்டது. நான் திரும்பிப் பார்த்தேன். அப்போது என் மகன் யஹ்யா குதிரைக்குப் பக்கத்தில் இருந்தான். அவனை அது (மிதித்துக்) காயப்படுத்திவிடுமோ என்று அஞ்சினேன். எனவே, அவனை (அந்த இடத்திலிருந்து) இழுத்துவிட்டு வானை நோக்கித் தலையைத் தூக்கினேன். அங்கு (விளக்குகள் நிறைந்த மேகம் போன்றதொரு பொருள் வானில் மறைந்தது. அதனால்) அதைக் காணமுடியவில்லை.
காலை நேரமானதுபோது நான் நபி(ஸல்) அவர்களிடம் நடந்ததைத் தெரிவித்தேன். அவர்கள் என்னிடம் ‘இப்னு ஹளைரே! தொடர்ந்து ஓதியிருக்கலாமே! இப்னு ஹளைரே! தொடர்ந்து ஓதியிருக்கலாமே! (ஏன் ஓதுவதை நிறுத்தினீர்கள்?)’ என்று கேட்டார்கள். நான், என் மகன் யஹ்யாவைக் குதிரை மிதித்துவிடுமோ என்று அஞ்சினேன். இறைத்தூதர் அவர்களே! அவன் அதன் பக்கத்தில் இருந்தான். எனவே, நான் தலையைத் தூக்கிப் பார்த்துவிட்டு அவன் அருகில் சென்றேன். பிறகு, நான் வானை நெருங்கியபோது அங்கு மேகம் போன்றதொரு பொருளைக் கண்டேன். அதில் விளக்குகள் போன்ற (பிரகாசிக்கும்) பொருள்கள் இருந்தன. உடனே நான் வெளியே வந்(து பார்த்)தபோது அதைக் காணவில்லை’ என்று சொன்னேன். நபி(ஸல்) அவர்கள், ‘அது என்னவென்று நீ அறிவாயா?’ என்று கேட்டார்கள். நான், ‘இல்லை (தெரியாது)’ என்று சொன்னேன். நபி(ஸல்) அவர்கள் ‘உன் குரலைக் கேட்டு நெருங்கிவந்த வானவர்கள் தாம் அவர்கள். நீ தொடர்ந்து ஓதிக் கொண்டிருந்திருந்தால் காலையில் மக்களும் அதைப் பார்த்திருப்பார்கள்; மக்களைவிட்டும் அது மறைந்திருக்காது’ என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: உசைத் இப்னு ஹளைர்(ரலி)
நூல்: புகாரி 5018
பொறாமைப் படு!
மற்றவர்களது அழகும், ஆடம்பரமும் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கலாம், பொறாமைப் பட வைத்திருக்கலாம். உண்மையில், நாம் எவர்களைக் கண்டு மனம் குமைய வேண்டும் என்பதை சொல்லித் தருகிறது இஸ்லாம்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’
இரண்டு விஷயங்களைத் தவிர வேறெதற்காகவும் பொறாமை கொள்ளக்கூடாது. 1. ஒரு மனிதருக்கு அல்லாஹ் குர்ஆனைக் கற்றுத் தந்தான். அவர் அதனை இரவு, பகல் எல்லா நேரங்களிலும் ஓதிவருகிறார். இதைக் கேள்விப்பட்டு அவரின் அண்டை வீட்டுக்காரர், ‘இன்னாருக்கு வழங்கப்பட்டது போல் எனக்கும் வழங்கப்பட்டிருந்தால் நானும் அவர் செயல்படுவது (ஓதுவது) போல் செயல்பட்டிருப்பேனே (ஓதியிருப்பேனே)!’ என்று கூறுகிறார்.
2. இன்னொரு மனிதருக்கு அல்லாஹ் செல்வத்தை வழங்கினான். அவர் அதனை நேர் வழியில் செலவிட்டு வருகிறார். (இதைக் காணும்) ஒருவர், ‘இன்னாருக்கு வழங்கப்பட்டது போல் எனக்கும் (செல்வம்) வழங்கப்பட்டிருக்குமானால் அவர் (தர்மம்) செய்தது போல் நானும் செய்திருப்பேனே’ என்று கூறுகிறார்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 5026
செவிமடுக்கும் இறைவன்
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’
அல்லாஹ், தன் தூதர் (முழு ஈடுபாட்டுடன்) இனிய குரலில் குர்ஆனை ஓதும்போது அதனைச் செவிகொடுத்துக் கேட்டது போல் வேறெதையும் அவன் செவி கொடுத்துக் கேட்டதில்லை.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 5023
தஹஜ்ஜத்தில் திருமறை
நபி(ஸல்) அவர்கள் இரவின் பாதிவரை அல்லது அதற்குச் சற்று முன்புவரை அல்லது அதற்குச் சற்றுப் பின்பு வரை தூங்கினார்கள். பிறகு அவர்கள் விழித்து அமர்ந்தார்கள். தம் கையால் தம் முகத்திலிருந்து தூக்க(க் கலக்க)த்தை விலக்கிவிட்டு ‘ஆல இம்ரான்’ அத்தியாயத்தின் கடைசிப் பத்து வசனங்களை ஓதினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: புகாரி 1198
இரவு நேரங்களை வீணிலும், விளையாட்டிலும் விரையமாக்குகின்றோம். அதன் விளைவு அதிகாலை தொழுகைக்கு எழுவதே அபூர்வமாக உள்ளது. நபிகளாரோ நள்ளிரவில் எழுந்து, நித்திரையைத் துறந்து நளின ஓசையில் குர்ஆனை ஓதியுள்ளார்கள் என்பது நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றது.
பெரும் நன்மையை பயக்கக்கூடிய, அகநிம்மதியை அளிக்கக்கூடிய குர்ஆனை, ஓதத்தெரியாமலும், தெரிந்து ஓதாமலும் நாம் மரணம் எய்திவிடக்கூடாது.
மனனமிடுவோம்! மகத்துவமடைவோம்!
இறைவன் மனித இனத்திற்கு வழங்கியுள்ள கொடைகளில் மனனத் திறனும் ஒன்றாகும். கண் பார்ப்பதையும், செவி கேட்பதையும், வாய் மொழிவதையும் மூளை மனனம் செய்கின்றது.
ஒருவர் மற்றொருவரை அடையாளம் கண்டு கொள்வதும், படித்த பாடத்தை பரீட்சையில் பிரதிபலிப்பதும், வீட்டில் சொன்ன மளிகைப் பொருட்களை கடையில் போய் பிசகாமல் வாங்கி வருவதும் இந்த மனனத் திறனில் உள்ளவை தான்.
ஒவ்வொரு முஸ்லிமும் வெவ்வேறு வகைகளில், முறைகளில் இத்திறனை மேம்படுத்திக் கொள்கின்றனர். அது வரவேற்புக்குரிய விஷயம் என்பதில் வேறு கருத்து இல்லை. இருப்பினும், இவ்வாற்றலை குர்ஆனை மனனிப்பதில் செலுத்தவேண்டும். ஏனெனில், குர்ஆனை நாம் மனனம் செய்துவிட்டால் வாகனத்தில் செல்லும் பொழுதோ, அலுவலகத்தில் இருக்கும் பொழுதோ, வீட்டு வேலையின் பொழுதோ ஓதிக் கொள்ளலாம். இல்லையேல், குர்ஆனைப் பார்த்து ஓத வேண்டிய நிலைதான் ஏற்படும். அது மேற்படி கூறிய தருணங்களில் ஓதுவது முடியாது.
நூற்றிப் பதினான்கு அத்தியாயங்கள், ஆறாயிரத்திற்கும் நெருக்கமான வசனங்களை மனித உள்ளத்தில் பதித்து, பாதுகாத்து வைத்திருக்கின்றான் இறைவன்.
உலகில் உள்ள குர்ஆன் அனைத்தையும் எரித்துவிட்டாலும், திரித்துவிட்டாலும் அதனை மீண்டும் உருவமைக்க, ஓங்கி உரைக்க பல லட்சக்கணக்கான அறிவுடையோரின் உன்னத உள்ளங்கள் உள்ளன என்றுரைக்கிறான் இறைவன்.
எனினும், இவை அறிவு வழங்கப் பட்டவர்களின் உள்ளங்களில் இருக்கும் தெளிவான வசனங்களாகும். அநியாயக்காரர்களைத் தவிர வேறெவரும் நமது வசனங்களை மறுக்க மாட்டார்கள்.
(அல்குர்ஆன் 29:49)
இறைவன் கூறும் அறிவுடையோரின் பட்டியலில் நாமும் சேர முயற்சிக்க வேண்டும். அதற்கென மார்க்கத்தில் சொல்லப்பட்டுள்ள சிறப்புகள் வார்த்தையில் உள்ளடக்கமுடியாததாகும்.
உஹுத் யுத்தமும்! உட்குழி அடக்கமும்!
“உஹதுப் போரில் (உயிர் தியாகிகளாகக்) கொல்லப்பட்டவர்களை இரண்டிரண்டு பேராக ஒரே துணியில் சேர்த்து வைத்து(க் கஃபனிட்டு) இவர்களில் குர்ஆனை அதிகம் அறிந்தவர் யார்?’ என்று நபி(ஸல்) அவர்கள் கேட்பார்கள். ஒருவர் சுட்டிக்காட்டப்பட்டதும் அவரின் உடலை உட்குழியில் முதலில் வைப்பார்கள். மேலும், “மறுமை நாளில் இவர்களுக்கு நானே சாட்சியாக்குவேன்” என்று கூறிவிட்டு, அவர்களின் இரத்தத்துடனேயே அவர்களை அடக்கம் செய்யும்படி உத்தரவிட்டார்கள். அவர்களுக்காக நபி(ஸல்) அவர்கள் (ஜனாஸா தொழுகை) தொழவுமில்லை; அவர்கள் நீராட்டப்படவுமில்லை.
அறிவிப்பவர்: ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் (ரலி)
நூல்: புகாரி4079
உஹுத் களத்தில் பல இஸ்லாமியர்கள் வீர மரணம் எய்தினார்கள். அவர்களின் உடல்கள் இரண்டிரண்டாக அடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில் குர்ஆனை அதிகம் மனனம் செய்தவர்களை உட்குழியிலும், மற்றவரை அவருக்கு மேலேயும் வைத்து அடக்கம் செய்யுமாறு கூறினார்கள் நபிகளார்.
குர்ஆனை அதிகம் மனனம் செய்தவர்களின் உடலில் நேரடியாக மண்ணைப் போடுவதை நபி(ஸல்) அவர்கள் தவிர்த்துள்ளார்கள் என்றும் கூட விளங்கிக் கொள்ளலாம்.
காரிகளின் மரணம்! கண்மணியாரின் ரௌத்திரம்!
நபி(ஸல்) அவர்களிடம் ரிஅல், தக்வான், உஸய்யா, பனூ லிஹ்யான் ஆகிய குலத்தார் (சிலர்) வந்து, தாங்கள் இஸ்லாத்தை ஏற்றதாகக் கூறினர். மேலும், தம் சமுதாயத்தினரை நோக்கி ஒரு படையனுப்பு உத்தரவிடும்படியும் நபி(ஸல்) அவர்களிடம் அவர்கள் கேட்டுக் கொண்டனர். நபி(ஸல்) அவர்கள், அன்சாரிகளிலிருந்து எழுபது பேரை அனுப்பி அவர்களுக்கு உதவினார்கள். அவர்களை நாங்கள் ‘காரீகள்’ (குர்ஆனை மனனம் செய்து முறைப்படி ஓதுவோர்) என்று அழைத்து வந்தோம். அவர்கள் பகல் நேரத்தில் விறகு சேகரிப்பார்கள்; இரவு நேரத்தில் தொழுவார்கள். அவர்களை அழைத்துக் கொண்டு அந்தக் குலத்தார் சென்றனர். இறுதியில், ‘பீரு மஊனா’ என்னுமிடத்தை அவர்கள் அடைந்தவுடன் முஸ்லிம்களை ஏமாற்றிக் கொன்றுவிட்டனர். உடனே, நபி(ஸல்) அவர்கள் ஒரு மாதம் (முழுவதும்) ரிஅல், தக்வான், பனூ லிஹ்யான் ஆகிய குலங்களுக்குத் தீங்கு நேரப் பிரார்த்தனை செய்தார்கள். (கொல்லப்பட்ட) அந்த எழுபது பேரைக் குறித்து (அவர்கள் சொல்வதாக அருளப்பட்ட) ஓர் இறைவசனத்தை குர்ஆனில் நாங்கள் ஓதி வந்தோம்.
“நாங்கள் எங்கள் இறைவனைச் சந்திக்கச் சென்று விட்டோம் என்றும், அவன் எங்களைக் குறித்துத் திருப்தியடைந்தான்; நாங்களும் அவனைக் குறித்துத் திருப்தியடைந்தோம் என்றும் எங்கள் சமுதாயத்திற்கு எங்களைப் பற்றித் தெரிவித்து விடுங்கள்” என்பதே அந்த வசனம்.
பின்னர், இந்த வசனத்தை ஓதுவது (இறைவனாலேயே) ரத்து செய்யப்பட்டுவிட்டது.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: புகாரி 3064
எத்தனையோ போர்களில் ஏராளமான நபித்தோழர்கள் வீர மரணம் எய்தியுள்ளார்கள். அதற்கெல்லாம் சாபப் பிரார்த்தனை கேட்காத, கோபத்தின் உச்சத்தை அடையாத நபிகளார், குர்ஆனை தோளில் தூக்கி, நெஞ்சில் சுமந்தவர்கள் துரோகிகளால் கொல்லப்பட்டார்கள் என்று அறிந்ததும் ஒரு மாத காலம் தொழுகையில் குனூதுன் நாஸிலா (எனும் சாபப் பிரார்த்தனை) கேட்டுள்ளார்கள் என்றால் குர்ஆனை கடம் போட்ட காரிகளின் கண்ணியத்தை நம்மால் உணர முடிகின்றது.
மாமறை மனனம்! மலக்குகளுக்கு சமானம்!
இஸ்லாத்தில் வானவர்களின் மகத்துவத்தை அறிவோம். அவர்களின் தோற்றம், அவர்களின் அரும்பணிகள், அவர்களின் கட்டுப்பாடுகள் அனைத்தும் மெய்சிலிர்க்க வைக்கும். அத்தகையவர்களுக்கு இணையானவர்கள் இம்மறையை மனனம் செய்தவர்கள்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்
குர்ஆனை மனனமிட்டு(ச் சிரமமின்றி) ஓதிவருபவர் கண்ணியம் நிறைந்த தூதர்க(ளான வானவர்க)ளைப் போன்றவராவார். குர்ஆனை (மனனம் செய்திராவிட்டாலும் அதனைச்) சிரமத்துடன் தொடர்ந்து ஓதி வருகிறவருக்கு இரண்டு மடங்கு நன்மைகள் உண்டு.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி 4937
தஜ்ஜாலிடமிருந்து தற்காப்பு
மறுமை நாளின் அடையாளங்களில் தஜ்ஜாலின் வருகையும் ஒன்றாகும். அவனைப் பற்றி முன் சென்ற எல்லா நபிமார்களும் தத்தமது சமுதாயத்திற்கு அறிவுறுத்தியுள்ளார்கள்.
அவனோ, முஸ்லிம்களின் இறைநம்பிக்கையைப் பரிசோதிக்கும் விதத்தில் பல்வேறு குழப்பங்களை விளைவிப்பான். அக்குழப்பங்களிலிருந்து நம்மைத் தற்காத்துக் கொள்ள ஒரு வழியினை கற்றுக் கொடுத்துள்ளார்கள் நபிகளார்.
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்
“அல்கஹ்ஃப்” எனும் (18வது) அத்தியாயத்தின் ஆரம்பப் பத்து வசனங்களை மனனம் செய்திருப்பவர் தஜ்ஜாலிடமிருந்து பாதுகாக்கப்படுவார்.
நூல்: முஸ்லிம் 1462
இமாமுக்கு தகுதி! மனனம் வேண்டும் மிகுதி!
நம் அனைவருக்கும் மக்களுக்குத் தலைமை தாங்கி இமாமாக நின்று தொழுகை நடத்த வேண்டும் எனும் ஆசைகள் இருக்கும். ஏனெனில், நமக்குப் பின்னால் நின்று தொழுபவர்கள் அனைவர்களின் நன்மையும் நமக்குக் கிட்டுகின்றது. இன்னும் அது நபிகளார் செய்த அழகிய பணியாகவும் உள்ளது.
அப்பணியைச் செய்வதற்கு முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும் என்பது நிபந்தனையன்று. மாறாக, திருக்குர்ஆனை மிகுதியாக மனனம் செய்திருந்தாலே போதுமானதாகும்.
அல்லாஹ்வின் வேதத்தை நன்கு ஓதத் தெரிந்தவரே மக்களுக்குத் தொழுவிப்பார். மக்கள் அனைவரும் சம அளவில் ஓதத் தெரிந்தவர்களாக இருந்தால் அவர்களில் நபி வழியை நன்கு அறிந்தவர் (தொழுவிப்பார்). (ஹதீஸின் சுருக்கம்)
அறிவிப்பவர்: அபூமஸ்வூத் அல்அன்ஸாரீ (ரலி)
நூல்: முஸ்லிம் 1192
குழந்தைப் பருவமும்! குர்ஆன் மனனமும்!
இக்கால பெற்றோர்கள் குழந்தை வளர்ப்பில் கோட்டை விட்டுவிடுகின்றார்கள். ஆரம்பம் முதல் அந்தம் வரை சினிமா பாடல்களே அக்குழந்தைகளின் செவிப்பறைகளில் ஒலித்துக் கொண்டிருக்கின்றது. “என் பிள்ளை நன்கு இசைப்பாடுவான், நடனமாடுவான்” என்று மார்தட்டிக் கொள்ளும் பெற்றோர்களின் அவலட்சணங்களைப் பார்க்கின்றோம்.
உலகக் கல்விக்குக் காட்டும் முக்கித்துவம் மார்க்க கல்விக்குக் காட்டப்படுவதில்லை. பள்ளிப் படிப்பிற்கும், பட்டப் படிபிற்கும் பல வருடங்களை இரைக்கும் பெற்றோர்கள் மார்க்கத்திற்காகச் சில நிமிடங்கள் செலவழிக்க மறுக்கின்றனர்.
“சீக்கரம் தூங்கு! நாளைக்குப் பள்ளிக்கூடம் போகணும்!” என்று சொல்லும் பெற்றோர்கள் பலர் இருப்பார்கள். “சீக்கரம் தூங்கு! பஜ்ர் தொழுகைக்குப் போகணும்” என்று சொல்லும் பெற்றோர்கள் எத்துணை பேர்?
சிறுமைப் பருவத்திலிருந்தே நமது பிள்ளைகளுக்கு மார்க்கத்தை ஊட்டி வளர்க்க வேண்டும். திருமறையைக் கற்பிக்க வேண்டும்.
நபிகளார் காலத்தில் நடந்த ஒரு நிகழ்வு நம்மை லயிக்க வைக்கின்றது.
நாங்கள் மக்கள் கடந்து செல்லும் பாதையிலிருந்த ஒரு நீர் நிலையின் அருகே இருந்தோம். வாகனத்தில் பயணிப்பவர்கள் எங்களைக் கடந்து சென்று கொண்டிருந்தார்கள். நாங்கள் அவர்களிடம், ‘மக்களுக்கென்ன? மக்களுக்கென்ன? இந்த மனிதருக்கு (முஹம்மதுக்கு) என்ன?’ என்று கேட்டுக் கொண்டிருந்தோம். அதற்கு அவர்கள், ‘அந்த மனிதர் தன்னை அல்லாஹ் (இறைத்தூதராக) அனுப்பியிருப்பதாக… அல்லது அல்லாஹ் அவரை இன்ன (குர்ஆன்) போதனைகளைக் கொடுத்து அனுப்பியிருப்பதாகக் கூறுகிறார்” என்று (குர்ஆனின் சில வசனங்களை ஓதிக்காட்டி) கூறுவார்கள். உடனே நான் அந்த (இறை) வாக்கை மனப்பகுதி செய்து கொள்வேன். அது என் நெஞ்சில் பதிக்கப்பட்டது போன்று ஆகிவிட்டது. அரபுகள், தாங்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ள மக்கா வெற்றியை (தக்க தருணமாகக் கருதி) எதிர்பார்த்திருந்தார்கள். எனவே, அவர்கள், ‘அவரை அவரின் குலத்தா(ரான குறைஷிய)ருடன்விட்டு விடுங்கள். ஏனெனில், அவர்களை அவர் வென்றுவிட்டால் அவர் உண்மையான இறைத்தூதர் தாம் (என்று நிரூபணமாகிவிடும்)” என்று கூறினார்கள். மக்கா வெற்றியாளர்கள் சம்பவம் நிகழ்ந்தவுடன் ஒவ்வொரு குலத்தாரும் விரைந்து வந்து இஸ்லாத்தை ஏற்றனர். என் தந்தை என் குலத்தாருடன் விரைந்து இஸ்லாத்தை ஏற்றார். நபி(ஸல்) அவர்களிடமிருந்து என் தந்தை திரும்பி வந்தபோது, ‘அல்லாஹ்வின் மீதாணையாக! நான் உண்மையிலேயே நபி(ஸல்) அவர்களிடமிருந்து உங்களிடம் வந்துள்ளேன். நபி(ஸல்) அவர்கள், ‘இன்ன தொழுகையை இன்ன வேளையில் தொழுங்கள். இன்ன வேளையில் இப்படித் தொழுங்கள். தொழுகை (வேளை) வந்துவிட்டால் உங்களில் குர்ஆனை அதிகம் அறிந்து வைத்துள்ளவர் உங்களுக்குத் தலைமை தாங்கித் தொழுகை நடத்தட்டும்‘ என்று கூறினார்கள்’ எனக் கூறினார்கள். எனவே, மக்கள் (குர்ஆனை அதிகம் அறிந்தவர் யார் எனத்) துருவிப் பார்த்தபோது நான் பயணிகளிடம் கேட்டு அறிந்துகொண்ட காரணத்தால் என்னை விட அதிகமாகக் குர்ஆனை அறிந்தவர்கள் எவரும், (எங்களிடையே) இருக்கவில்லை. எனவே, (தொழுகை நடத்துவதற்காக) என்னை அவர்கள் முன்னால் நிறுத்தினார்கள். நான் அப்போது ஆறு அல்லது ஏழு வயதுடைய (சிறு)வனாக இருந்தேன்.
அறிவிப்பவர்: அம்ர் இப்னு சலிமா (ரலி)
நூல்: புகாரி 4302
வான்மறை ஒரு மனிதனின் வாழ்வை எப்படி வருடுகின்றது என்பதை நாம் அறிந்துவிட்டோம். திருமறை மூலம் தகவமைப்பைத் தேடுவதற்கு முன் அதன் மகத்துவத்தையும், மகாத்மியத்தையும் உணரவேண்டும். ஆகவே தான் இந்தத் தொகுப்பு அல்குர்ஆனின் சிறப்புகளைப் பொதிந்துள்ளது.
இனி வரும் தொடர்களில் மறை தர வேண்டிய மாற்றங்கள் குறித்துக் காண்போம், இன்ஷா அல்லாஹ்!
