மறையும், மாற்றமும்

முந்தைய தொடர்களில் மாமறையின் ஆற்றுமையையும், அதனோடு நாம் பாராட்ட வேண்டிய ஒற்றுமையையும் தெரிந்து கொண்டோம். அவைகளை எவ்வித மறுமொழியுமின்றி மனமுவந்து ஏற்றுக்கொண்டே இருக்கின்றோம். எனினும் அந்த மாண்புகளும், மதுரம் செறிந்த மதிப்புகளும் எதற்கு என்பதை நாம் உணரத் தவறிவிட்டோம்.
இவ்வேதத்திற்கு ஏன் இன்ன விசேஷங்கள்? ஏன் இவ்வளவு விதரணைகள்? ஏன் அல்லாஹ் ஒரு தூதரை நியமித்து, அவருக்கு ஓர் வேதத்தை நிச்சயித்து அதற்கு அவ்வளவு முக்கியத்துவத்தை வழங்க வேண்டும்? ஒரு சராசரி மனிதனின் ஒட்டுமொத்த வாழ்விலும் ஏன் இம்மறை ஒட்டி உறவாடவேண்டும்? ஓதுவதாலும், மனனமிடுவதாலும் ஏன் இத்தனை பெரிய நன்மைகளை இறைவன் நமக்குத் தரவேண்டும்?

மனிதன் மாற வேண்டும்

மனிதர்களை, அவர்களுடைய இறைவனின் ஆணைப்படி, இருள்களிலிருந்து ஒளியின் பக்கமும், புகழுக்குரிய மிகைத்தவனான அல்லாஹ்வின் பாதைக்கும் நீர் கொண்டு வருவதற்காக இதனை உமக்கு அருளினோம். வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அவனுக்கே உரியன. கடும் வேதனையால் இறைமறுப்பாளர்களுக்குக் கேடுதான்.
(அல்குர்ஆன் 14:2)
(நபியே!) உமக்கு முன்னர் ஆண்களுக்கே நாம் வேத அறிவிப்பை வழங்கி, தெளிவான சான்றுகளுடனும் ஏடுகளுடனும் அவர்களைத் தூதர்களாக அனுப்பினோம். நீங்கள் அறியாதவர்களாக இருந்தால் (வேத) அறிவுடையோரிடம் கேளுங்கள்! மனிதர்களுக்காக அருளப்பட்டதை நீர் அவர்களுக்குத் தெளிவுபடுத்துவதற்காகவும், அவர்கள் சிந்திப்பதற்காகவும் உமக்கு இவ்வேதத்தை அருளினோம்.
(அல்குர்ஆன் 16:44)
மாற்றாராக இருந்தாலும் சரி, மார்க்க அறிவுடையோராக இருந்தாலும் சரி இம்மறை அவர்களின் உள்ளத்தில் துளையிட்டு தூய்மைப் படுத்திட வேண்டும், துப்புரவுப்படுத்திட வேண்டும். அதன் விளைவால் மனிதனின் மனது மாற்றம் கண்டிட வேண்டும்.
நம் வாழ்வின் பல கட்டங்களில் குர்ஆனோடு தொடர்பில் இருக்கின்றோம். அன்றாடம் அருள்மறையின் அழகிய வசனங்கள் நம் செவிகளில் ஒலித்துக்கொண்டே இருக்கின்றன. செவிப்பறையை கிழித்துக் கொண்டேயிருக்கின்றன. அவ்வசனங்கள் அனைத்தும் நம் வாழ்வில் எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்திய பாடில்லை.
நன்னடத்தை பற்றிப் பேசுகின்ற வசனங்கள் நல்லொழுக்கத்தோடு நம்மை வாழ வைத்ததா? இறையச்சம் பற்றிப் பேசுகின்ற வசனங்கள் நமது இறையச்சத்தை மெருகூட்டியதா? வணக்கம் குறித்துப் பேசுகின்ற வசனங்கள் வணக்கத்தில் சரியாக முறையாக நம்மை இருக்க வைத்ததா? எனும் வினாக்களுக்கு விடையைத் தேடியே நமது வாழ்க்கைப் பயணம் அமையவேண்டும்.
ஈமானின் பட்டியலில் வேதங்களை நம்புவதும் உள்ளடங்கும். வேதத்தை நம்புவதென்றால் அதன் பொருள் என்ன? அதன் அர்த்தத்தை அறிந்து, ஆழத்தை உணர்ந்து அதில் உள்ள கருத்துக்கள் நம்மை ஏதோ ஒரு வகையில் திருத்திட வேண்டும்.
ஒவ்வொரு வசனத்தை ஓதுவதற்கு முன்பும் “இவ்வசனம் நம்மைச் செதுக்கிட வேண்டும், செம்மையாக்கிட வேண்டும், சீர்படுத்திட வேண்டும்” என்றே நமது சிந்தனை இருக்கவேண்டும்.

ஈமானின் மறுமுகம்

நம்பிக்கை என்பது மனதைச் சார்ந்தது என்பதில் வேறு கருத்தில்லை. ஒருவர் இஸ்லாமிய வட்டத்திற்குள் வருவதற்கான நிபந்தனை, அவர் இறைவனையும், வானவர்களையும், இறைத்தூதர்களையும், இறைவேதங்களையும், விதியையும், மறுமையையும் மனமார ஏற்றிருக்க வேண்டும். இத்தகையவர்களின் நம்பிக்கையை வெளிப்படையில் கண்டு கணிக்க இயலாது.
நம்பிக்கைக்கு மறுமுகம் ஒன்றுள்ளது. அது மனதைச் சார்ந்தது மட்டுமன்று. அதற்குச் செயல்வடிவமும் உண்டு.
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஈமான் (செயல்முறையை சார்ந்த நம்பிக்கை) என்பது எழுபது சொச்சம் கிளைகளைக் கொண்டதாகும்.
(நூல்: முஸ்லிம் 161)
இப்படி, மனதளவிலும் செயல்வடிவிலும் சதமடித்தவரே உண்மையில் இறைநம்பிக்கை உடையோராக முடியும். அந்தச் செயல்வடிவின் பட்டியலில் ஒன்று தான் இறைவேதத்திற்கு இணங்க நம் வாழ்வை வடிவமைத்துக் கொள்வது.
யாருக்கு நாம் வேதத்தைக் கொடுத்து, அதைப் படிக்க வேண்டிய முறைப்படி படிக்கிறார்களோ அவர்களே அதை நம்புகிறார்கள். யார் அதை மறுக்கிறார்களோ அவர்களே நஷ்டமடைந்தோர்.
(அல்குர்ஆன் 2:121)
வேதத்தை மற்ற மதத்தினர்களும் படிக்கவே செய்கின்றனர். ஆனால், அவர்களுக்கும் நமக்கும் உள்ள வித்தியாசம் என்ன? வேறுபாடுதான் என்ன? அவ்வேதத்தைப் படிக்கும் பொழுது, அந்த இறைவாக்குகள் நம் உள்ளத்தை வருடவேண்டும். அதனை உளப்பூர்வமாக உணரவேண்டும். அதனை முறைப்படி மொழிய வேண்டும்.
இறைநம்பிக்கையாளர்கள் யாரென்றால், அல்லாஹ்வைப் பற்றிக் கூறப்பட்டால் அவர்களின் உள்ளங்கள் பயந்து நடுங்கி விடும். அவனது வசனங்கள் அவர்களிடம் எடுத்துரைக்கப்பட்டால் அது அவர்களுக்கு இறைநம்பிக்கையை அதிகப்படுத்தும். அவர்கள் தமது இறைவன்மீதே நம்பிக்கை வைப்பார்கள்.
அவர்கள் தொழுகையை நிலைநிறுத்துவார்கள். நாம் அவர்களுக்கு வழங்கியதிலிருந்து செலவிடுவார்கள்.
அவர்களே உண்மையான இறைநம்பிக்கையாளர்கள். அவர்களுக்குத் தமது இறைவனிடம் அந்தஸ்துகளும், மன்னிப்பும், கண்ணியமான உணவும் உண்டு.
(அல்குர்ஆன் 7:2-4)
உண்மையான முஃமின் என்பவர் தனது பெயரை அரபியில் வைத்திருப்பவரோ, நான் முஸ்லிம் என்று தம்பட்டமடிப்பவரோ அல்ல. எவருக்கு இவ்வான்மறை வாக்குகள் வாசிக்கப்படுகிறதோ அவ்வசனங்கள் அவரை வசப்படுத்த வேண்டும், அவரின் நம்பிக்கையை ஊர்ஜிதப்படுத்த வேண்டும், உறுதிப்படுத்த வேண்டும்.
ஏதேனும் ஓர் அத்தியாயம் அருளப்பட்டால் “இது, உங்களில் யாருக்கு இறைநம்பிக்கையை அதிகப்படுத்தியது?” என்று அவர்களில் சிலர் கேட்கின்றனர். யார் இறைநம்பிக்கை கொண்டிருக்கிறார்களோ அவர்களுக்கே அது இறைநம்பிக்கையை அதிகப்படுத்தியது. அவர்கள் மகிழ்ச்சியடைகின்றனர்.
(அல்குர்ஆன் 9:124)

இறையச்சமுடையோர் யார்?

அச்சத்தில் ஆரோக்கியமானது அல்லாஹ்வின் மீது வைக்க வேண்டிய அச்சமேயாகும். ஏனெனில், மனிதக் கண்களுக்கு பயப்படுபவன் தன்னந்தனியே விடப்படும் பொழுது, எண்ணம் மாறி தவறிழைத்துவிடுவான். நாட்கள் நகர நகர மனித அச்சமும் அற்றுப்போய் வழிகேடனாக மாறிவிடுவான்.
யார் ஒருவர் தன் பயத்தை படைத்தவன் மீது வைக்கின்றாரோ, அவர் எந்த நிலையிலும் பாவம் செய்வதற்கு ஒருகணம் சிந்திக்கவே செய்வார். இறைவன் நம்மை அவதானிக்கின்றான் எனும் அச்சம் என்றும் அற்றுப்போகாது.
நாம் நமது இறைபயத்தை சீராக்கிக் கொள்வதற்கும், கூராக்கிக் கொள்வதற்கும் ஓர் ஊன்றுகோலாக இவ்வேதத்தை அமைத்துக் கொள்ள வேண்டும். அதில் பேசப்படும் ஒவ்வொரு கருத்தும், கூற்றுக்களும் நம் இறையச்சத்தை மிகுதிப்படுத்திட வேண்டும். அத்தகைய அச்சத்தையே அல்லாஹ் நம்மிடம் எதிர்பார்க்கின்றான். அதுவே உண்மையில் இறையச்சவாதிகளுக்கான சான்றாகும்.
அல்லாஹ்வே மிக அழகிய செய்தியை வேதமாக அருளினான். (அது) ஒன்றுக்கொன்று ஒப்பானதாகவும், திரும்பத் திரும்பக் கூறப்படுவதாகவும் உள்ளது. தமது இறைவனை அஞ்சுவோரின் தோல்கள் இதனால் மெய்சிலிர்த்து விடுகின்றன, பின்னர் அவர்களின் தோல்களும், உள்ளங்களும் அல்லாஹ்வை நினைவுகூர்வதற்காக மிருதுவாகி விடுகின்றன. இதுவே அல்லாஹ்வின் நேர்வழி. இதன் மூலம், தான் நாடியோரை நேர்வழியில் செலுத்துகிறான். அல்லாஹ், யாரை வழிகேட்டில் விட்டு விடுகிறானோ அவனுக்கு நேர்வழி காட்டுபவர் யாருமில்லை.
(அல்குர்ஆன் 39:23)
மனிதர்கள் இறையச்சமுடையோர் ஆவதற்காக இவ்வாறே தனது வசனங்களை அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான்.
(அல்குர்ஆன் 2:187)
ஆதமுடைய மக்களே! எனது வசனங்களை உங்களுக்கு எடுத்துரைக்கும் தூதர்கள், உங்களிலிருந்தே உங்களிடம் வரும்போது, யார் இறையச்சம் கொண்டு தங்களை சீர்திருத்திக் கொள்கிறார்களோ அவர்களுக்கு எந்தப் பயமும் இல்லை; அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்.
(அல்குர்ஆன்7:35)

இறை நேசமா? வேஷமா?

ஒரு முஸ்லிமுக்கு, தன்னை பத்து மாதம் கருவில் தாங்கி இடையில் ஏந்தி வளர்த்த தாயை விடவும், தன் அன்பையும், அனுபவத்தையும் அள்ளிக்கொடுத்த தந்தையை விடவும், உற்றாரை விடவும், சுற்றாரை விடவும், தன்னை விடவும் காதல் கொள்வதற்கு மிகத் தகுதியானவர்கள் இறைவனும், இறைத்தூதர் (ஸல்) அவர்களும் தான்.
‘எவரிடம் மூன்று தன்மைகள் அமைந்து விட்டனவோ அவர் ஈமான் எனும் இறைநம்பிக்கையின் சுவையை உணர்ந்தவராவார். (அவை) அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒருவருக்கு மற்றெதையும் விட அதிக நேசத்திற்குரியவராவது, ஒருவர் மற்றொருவரை அல்லாஹ்வுக்காகவே நேசிப்பது, நெருப்பில் வீசப்படுவதை வெறுப்பது போல் இறை நிராகரிப்புக்குத் திரும்பிச் செல்வதை வெறுப்பது’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: புகாரி 16
நீ இறைவனை நேசிக்கின்றாயா? எனும் வினாவை யாரிடத்தில் தொடுத்தாலும் “ஆம்! ஏனில்லை!” என்றே விடையளிப்பார்கள்.
இறைவனை நேசிப்பதென்றால் அதன் அர்த்தம் என்ன? நாம் ஒருவரை நேசிக்கிறோம், அளவு கடந்து காதலிக்கிறோம் என்றால் அதனை எவ்வாறு பிரதிபலிப்போம்? அந்த நபரின் ஒவ்வொரு வாக்கையும், வார்த்தையையும் வாழ்க்கை நெறியாக எடுத்து நடப்போம்.
இதே நிலை இறைவனுக்கென்று வரும் பொழுது, ஏன் இந்த பாரபட்சம்? ஏன் இந்த அதர்மம்? இது படைத்தவன் பாசமா? அல்லது பொய் வேஷமா?
இறைவனை நேசிப்பதன் அர்த்தம் என்னவெனில் அவனது வேத வாக்குகளை எவ்வித விருப்பு வெறுப்பின்றி, களைப்பு சலிப்பின்றி கடைப்பிடிக்க வேண்டும். அவனது இதயத்தில் இடம்பிடிக்க வேண்டும். இதுவே இறைவனை நேசிப்பது என்பதன் பொருள்.
உண்மையில் இறைநேசம் என்றால் என்னவென்பதை நபி இப்ராஹீம் (அலை) அவர்களின் வாழ்விலிருந்து நம்மால் அறியமுடிகிறது. தனக்கு பிறப்பிக்கப்பட்ட கட்டளைகள் அனைத்தையும் அச்சுப் பிசகாமல், பிசிறு தட்டாமல் பிரதிபலித்தார்கள். கட்டுப்படுவதன் முழுத் தோற்றமாகக் காட்சி தந்தார்கள்.
இப்ராஹீமை, அவருடைய இறைவன் சில கட்டளைகளைக் கொண்டு சோதித்தபோது அவர் அவற்றை முழுமையாக நிறைவு செய்தார். “மக்களுக்கு (வழிகாட்டும்) தலைவராக உம்மை ஆக்குகிறேன்” என்று (இறைவன்) கூறினான். “என் தலைமுறைகளிலிருந்தும் (அவ்வாறு ஆக்குவாயாக!)” என்று அவர் கூறினார். “(உமது தலைமுறையிலுள்ள) அநியாயக்காரர்களை எனது வாக்குறுதி சேராது” என்று அவன் கூறினான்.
(அல்குர்ஆன் 2:124)
தமது இறைவனால் நல்லுரைக்கப்பட்ட அனைத்துக் கட்டளைகளுக்கும் கட்டுப்பட்டே தன் காலத்தைக் கடத்திச் சென்றார்கள்.
அவருடன் சேர்ந்து உழைக்கும் பருவத்தை அவர் அடைந்தபோது “என் அருமை மகனே! நான் உன்னை அறுப்பதாகக் கனவில் கண்டேன். நீ என்ன நினைக்கிறாய் என்பதை யோசித்துக் கொள்!” என்று கூறினார். “என் தந்தையே! உமக்கு ஏவப்பட்டதைச் செய்யுங்கள்! அல்லாஹ் நாடினால் பொறுமையாளர்களில் உள்ளவனாக என்னைக் காண்பீர்கள்” என்று அவர் கூறினார்.
(அல்குர்ஆன் 37:102)
ஓர் அன்னையின் அன்பை வெளிப்படையில் அறிந்து கொள்ள இயலும். தந்தையின் அன்போ மறைமுகமானது, அப்பட்டமாக அறிய முடியாதது. எனினும், தன் பிள்ளைகளின்மீது அளவு கடந்த பாசத்தையும், பரிவையும் வைத்திருப்பவர் தந்தையே! ஆனால், இத்தகைய பரிவையெல்லாம் ஒரு பொருட்டாகப் பார்க்காமல் இறைவார்த்தைக்காகத் தன் அன்புமகனையே இரையாக்க முனைந்தார்கள் நபி இப்ராஹீம் (அலை) அவர்கள்.
பெண்கள் முதன் முதலாக இடுப்புக் கச்சை அணிந்தது இஸ்மாயீல் (அலை) அவர்களின் தாயார் ஹாஜர் (அலை) அவர்களின் தரப்பிலிருந்துதான். ஸாரா (அலை) அவர்கள் மீது ஏற்பட்ட தனது பாதிப்பை நீக்குவதற்காக அவர்கள் ஓர் இடுப்புக் கச்சையை அணிந்து கொண்டார்கள். பிறகு இப்ராஹீம் (அலை) அவர்கள் ஹாஜர் (தம் மகன்) இஸ்மாயீலுக்குப் பாலூட்டிக் கொண்டிருக்கும் காலக் கட்டத்தில் இருவரையும் கொண்டு வந்து அவர்களை கஅபாவின் மேல்பகுதியில் (இப்போதுள்ள) ஸம்ஸம் கிணற்றிற்கு மேல் பெரிய மரம் ஒன்றின் அருகே வைத்துவிட்டார்கள். அந்த நாளில் மக்காவில் எவரும் இருக்கவில்லை. அஙகு தண்ணீர் கூட கிடையாது. இருந்தும் அவ்விருவரையும் அங்கு இருக்கச் செய்தார்கள். அவர்களுக்கு அருகே பேரீச்சம்பழம் கொண்ட தோல்பை ஒன்றையும் தண்ணீருடன் கூடிய தண்ணீர்ப் பை ஒன்றையும் வைத்தார்கள். பிறகு இப்ராஹீம் (அலை) அவர்கள் (அவர்களை அங்கேயே விட்டு விட்டு தமது ஷாம் நாட்டிற்கு) திரும்பிச் சென்றார்கள். அப்போது அவர்களை இஸ்மாயீலின் அன்னை ஹாஜர் (அலை) அவர்கள் பின்தொடர்ந்து வந்து, “இப்ராஹீமே! மனிதரோ, வேறெந்த பொருளுமோ இல்லாத இந்தப் பள்ளத்தாக்கில் எங்களை விட்டு விட்டு நீங்கள் எங்கே போகிறீர்கள்?” என்று கேட்டார்கள். இப்படிப் பல முறை அவர்களிடம் கேட்டார்கள். இப்ராஹீம் (அலை) அவர்கள் அவரை திரும்பி பார்க்காமல் நடக்கலானார்கள். ஆகவே அவர்களிடம் ஹாஜர் (அலை) அவர்கள், “அல்லாஹ் தான் உங்களுக்கு இப்படி கட்டளையிட்டனா?” என்று கேட்க, அவர்கள் ஆம் என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: புகாரி 3364
ஓர் ஆண்மகன் உழைத்து, களைத்து, இரத்தத்தை வியர்வையாக இறைத்துப் பொருளீட்டுவதெல்லாம் தன் குடும்பம் நன்னிலைக்கு வரவேண்டும் என்பதற்காகத் தான்.
இன்னும் சிலர், தன் வீட்டார்கள் வீதிக்கு வந்திடக் கூடாது என்று அயல்நாடுகளில் தனிமையை அனுபவித்து, ரண கொடுமையை சுவைத்துக் கொண்டிருக்கின்றனர்.
இப்படி ஒவ்வொரு ஆணும் தன் குடும்பத்தையே அலாதியாய் நேசிக்கின்றான். இதே நேசம் இப்ராஹீம் (அலை) அவர்களுக்கும் இருக்கவே செய்திருக்கும். இருப்பினும், இறைவாக்கிற்கு இணங்கி தன் குடும்பத்தை ஊர்பெயரறியா தளத்தில் தன்னந்தனியே தங்க வைத்துவிட்டு வந்தார்கள்.
உயர்ந்தோனை உண்மையாக நேசித்ததன் விளைவுதான் இத்தகைய தியாகத்தை அவர்களால் செய்யமுடிந்தது. நாமும் இந்த நிலைக்கு மாற வேண்டும். எத்தனையோ கட்டளைகளை திருமறை நமக்குப் போதிக்கின்றது. அவைகளை நாம் நடைமுறைக்குக் கொண்டு வரவேண்டும். நம் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். இதுவே இறைநேசர்களின் பண்பாகும்.